அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நாட்டின் நாயகர்கள்
4

இரண்டாண்டுக்கு மேலாகவே இந்த ‘இடி’ மாஜிகளிட
மிருந்து, தொடர்ந்து! அந்த ‘இடி’யின் அளவும் அதிகரித்தது, வேகமும் வளர்ந்தது! ஊர் சிரிக்கலாயிற்று!! உலகிலே உள்ள வேறு நாட்டுத்தலைவர்களின் செவியிலேயும் இந்த ‘ஜனகணமன’ விழலாயிற்று! காங்கிரஸ் ஆட்சி ஊழல்மயம்! மக்களுக்கு அந்த ஆட்சியிலே வெறுப்பு வளருகிறது! - இந்தச் செய்தியை, ஒலிபரப்பிய வண்ணம் இருந்தனர், கதருடையினர் - கதரைக்களைந்த படி!! நேருவுக்கு அதிர்ச்சி ஏற்படாமலிருக்க முடியுமா? இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி-அந்த ஆட்சியை நடத்து பவர், நேரு! -இது உலகிலே பேசப்படும் பேச்சு!

காங்கிரஸ் ஆட்சி ஊழலாகிவிட்டது - மக்கள் வெறுக்கிறார்கள் - என்று புகார் - கருப்பு, சிகப்பு, சட்டைகளிடமிருந்து அல்ல, கதர்ச்சட்டைகளிடமிருந்தே கிளம்பினால், உலகிலே யாரைக் குறித்து மதிப்பு குறையும்! நேருவின் மீதுதானே பாயும், கண்டனம், கேலி, கேள்வி!

இந்த ‘இடி’ உண்மை நிலையைத்தான் காட்டுகிறது என்பதை உலகு உணரும் அளவுக்கு, உணவுப் பிரச்னை சம்பந்தமாக, பிச்சைப் பாத்திரம் ஏந்திவரும் இந்தியத் தலைவர்களைக் கண்டனர், வெளிநாட்டார்! பவதி பிக்ஷாந்தேஹிகளை உலகிலே எல்லா நாடுகளுமா மதிக்கும்! பாரத்வர்ஷத்துக்கு மட்டுமே சொந்தமான பண்பல்லவா இது, பிச்சை எடுத்து மச்சுவீடு கட்டுபவனை மெச்சிடும் பண்பு!! கட்டைவிரல் நசுங்கி விட்டது!! பண்டிதருக்கு ஆட்சித்திறமை இல்லை -அவர் ஆட்சி ஊழல் மயமாகிவிட்டது - ஊரார் வெறுக் கிறார்கள் - உற்ற தோழர்களும், உடன் உழைத்த தலைவர்களும் காங்கிரஸ் ஸ்தாபனத்தை விட்டே விலகுகிறார்கள் என்று, உலகெங்கும் பேசலாயினர்! கட்டை விரல் நசுங்கி, இரத்தமும் கசிந்தது, கண்ணீரும் கொட்பளித்தது.
***
காங்கிரஸ் ஆட்சியினால் மக்கள் படும் அவதிக்கு யார் பொறுப்பு ஏற்கவேண்டும்? நிர்வாகக் கோளாறுகளினால் விளையும் விபரீதங்களுக்கு யார் பொறுப்பு என்று, மக்களாட்சியின் கொக்கையை மறவாதார் ஆண்டி கூறலாம்! வயித்தைக்கட்டு வாயைக்கட்டு - சொன்னபடி கேள் இல்லாவிட்டால் சுட்டுப்போடுவேன் - என்று கொடுங்கோலன் கூறலாம். ஆனால், மக்களாட்சி அல்லவா நடக்கிறது, சுதந்திர ஜனநாயகக் குடி அரசு ஆட்சி யாயிற்றே!! இதிலே ஊழல் கிளம்பி ஊரை அவதிக்கு ஆளாக்கினால், ஆட்சியின் தலைவராக அமர்ந்திருக்கும் பண்டிதர்தானே, பொறுப்பு! அவருடைய திறமைக் குறைவினாலோ, மக்களின் நலனில் அக்கரை காட்டும் பண்பு இல்லாததாலோ, எதைச் செய்தால் மக்களுக்கு இதம் கிடைக்கும் என்று ஆராயும் போக்கு இல்லாததாலோ, அல்லது யாராரைக் கொண்டு öந்தெந்தக் காரியத்தைச் செய்யவேண்டும் என்று கண்டறியாது, காய்ந்த மாடுகளைக் கம்பங்கொல்லையில் மேயவிட்டதாலோ, இப்படி ஏதேனும் ஒரு கரணத்தாலே தானே, ஆட்சியிலே ஊழல் உரும் உலகமும், சிரிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. உடன் இருந்து, பழியிலே பங்கு கொள்ள மாட்டேன் என்று, பலரும் ஓடும் அளவுக்கு, ஊழல் முற்றி நாள்ளமெடுத்து விட்டது. இவ்வளவுக்கும், பதில் சொல்ல வேண்டியவர்கள் யார்? கொடிபிடித்த கோவிந்தனும், கோட்டை அருகே சத்யாக்கிரகம் செய்த கோபாலனுமா!! அவர்கள்தான் கலெக்டர் ஆபீசுக்கு நடந்து நடந்து கால் கடுத்த நிலையில், மூடியிருக்கிற கதர்க்கடை மேடையிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களே, நஞ்சை கிடைக்குதோ புஞ்சை கிடைக்குதோ என்று! நாட்டை ஆள்பவர், நேருதானே! நாடு, நாசமாகிறது ஆட்சிப்பொக்கினால் என்றால், நேருதானே பதில் சொல்லித் தீரவேண்டியவர், சென்னை சர்க்கார் பஸ்களை ஒட்டுபவர்கள் அடிக்கொருதடவை பஸ் கெட்டுவிடுகிறது என்றால், அதற்கு நாங்களல்ல காரணம், மோட்டார் மந்திரியைக் கேளுங்கள், என்று சொல்லலாம். ஆட்சி ஊழலால் அவதியானால், என்னைக் கேட்காதீர்கள் என்று நேரு கூற முடியுமா? அவர்தான இப்போது ‘உற்சவர், மூலவர்’ எல்லாம்!! அவர் சொல்தானே சட்டம்! அவர் சுட்டுவிரலைத் தானே மத்ய, மாகாண மந்திரிமார்கள், இமை கொட்டாமல் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நேருவின் சர்க்கார் தீட்டியனுப்பும் திட்டம்தானே, எங்கும் அமுல்நடத்தப்படுகிறது! பல மந்திரிகள் கொண்ட கூட்டுச சர்க்கார் முறையிலே, முதல் மந்திரிதானே, சாதகபாதகம் அத்தனைக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்? எனவே, நாடுநலியும் விதமான ஆட்சி முறையை நடத்திவருகிறார் நேரு, என்பதுதான், ஜனநாயக ஆட்சி முறையின்படி, கவனிக்கும் போது, எவரும் கூறக்கூடிய குற்றச்சாட்டு.

ஏன் வளரவிட்டார் ஊழலை? ஊழல் வளருவதே அவருக்குத் தெரியவில்லையா! அவ்வப்போது பலர் இடித்துரைத்தனரே! புருவத்தையல்லவா நெரித்துப் பேசினார்! குறை கூறுபவர்கள் நாட்டின் விரோதிகள், வெளிநாட்டாரின் கைக்கூலிகள் என்று ஏசினார்! ஊழலை ஒழிக்க, எந்த ‘அதிர்ச்சி முறை’யைக் கையாண்டார்!!

ஓ! என் ஆட்சியா ஊழலாகிவிட்டது - சரி - நான் விலகிக் கொள்கிறேன் - காங்கிரஸ் ஸ்தாபனத்திலே இருந்து தேசசேவை செய்கிறேன் - சபர்மதியைப் புதுப்பிக்கிறேன் - சர்வோதயத் திட்டத்தை உலகுக்கே பரப்புகிறேன் - இந்தச் சள்ளை பிடித்த மந்திரி வேலையை வேண்டாம் - என்றா கூறினார்! அந்த அதிர்ச்சி வைத்யம் செய்யவில்லை! மாறாக, நாட்டின் நிர்வாகப் பொறுப்பø நான் விடமுடியாது - எங்கே வேறு ஆள்? - என்று தான் கேட்டார். சபாஷ்! என்றார் கர்ஜனையாளர்கள்! இப்போதும், அதிர்ச்சி வைத்திய செய்கிறாரே, இந்த நேரத்திலும், தெளிவாக, தீர்மானமாகக் கூறுகிறார், காங்கிரஸ் காரியக்கமிட்டியிலிருந்து நான் ராஜினாமாச் செய்கிறேன் என்றால், பிரதம மந்திரி என்ற நிலையை அல்ல, அது அப்படியே இருக்கிறது, அது வேறு விஷயம், காங்கிரஸ் கமிட்டி என்னை போகச் சொன்னால் பதவியிலிருந்து போய்விடுகிறேன், ஆனால் இப்போது, என் ராஜிநாமாவுக்கும், பிரதம மந்திரி என்ற பதவி சம்பந்தமான பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை - என்று கூறுகிறார்.
***

காங்கிரஸ் ஆட்சி ஊழலாகி, ஊரைக் கெடுக்கிறது, என்பதுதான் சோய், வளர்ந்து வளர்ந்து, நர்ச்சுகள் படுக்கையின் பக்கம் இருக்கவும் முடியாது என்று வெளியே போய்விடும் அளவுக்கு முற்றிவிட்ட நோய்! இந்த ஆட்சியின் பொறுப்பு பண்டிதரிடம்!! இந்த நோய் போக மருந்து, யார், யாருக்குத் தருவது?
***

காங்கிரஸ் ஆட்சியிலே என்னென்னமோ இன்ப நிலைகள் எய்துவோம் என்று கனவு கண்டோமே, கஞ்சிக்கே ஆலாய்ப் பறக்கிறோமே என்று மக்கள் கதற், மாற்றுக் கட்சியினர் கண்டிக்க, சொந்தக் கட்சியினரிலேயே சிலர் வெளிப்படையாக வேதனையுடன் குத்திக் காட்ட, நாடு ஆட்சியினால் அலங்கோல நிலை அடைய நேரிட்டது கண்டு நேரு செய்தது என்ன? உபதேசம்! உபதேசம்! மேலும் மேலும் உபதேசம்!! இதுதானே! உழையுங்கள், உழையுங்கள்! தியாக சிந்தனையை வளருங்கள்! என்று கூறுனார். உழைக்கிறோம் ஊராளும் தலைவரே! உழைப்பின் பலனை உலுத்தர் தட்டிப் பறித்துக் கொண்டு போய்விடுகிறார்களே, நாங்கள் உருக்குலைந்துதானே போகிறோம், என்று உழைப்பாளிகள் சொன்ன போதுதான், நேரு செய்தது என்ன? அந்தப் பேச்சிலே சிகப்பு தெரிகிறது! சட்டமே கொட்டு!! - என்று தானே சொன்னார். ஊழல் ஒழிப்புக்கு என்ன செய்தார்! நிர்வாக யந்திரத்தில் அமர்ந்திருப்போரின் குணத்தை ஆராய்ந்து, மாற்றினாரா? யந்திரமே பழுதாகிவிட்டது என்று கண்டறிந்து புதுப்பித்தாரா? யந்திரமும் சரியாகத்தான் இருக்கிறது, நிர்வாகிகளும் திறமையும் நேர்மையும் உள்ளவர்கள்தான், திட்டம் தான் தக்கதாக வேண்டும் என்று கண்டறிந்து அந்தப் பணியில் முனைந்தாரா? இல்லை! நாட்டு மக்களிடம் சேவா உணர்ச்சிமங்கிவிட்டது! எதிலும் குறைகாணும் மனோபாவம் தென்படுகிறது. இது பெருங்கேடு. நமது நாட்டுப் பண்பாடு இது அல்ல! - என்று உபநிஷத் பேசலானார். காங்கிரஸ் ஆட்சியினால் கலங்கும் மக்கள், கதரணிந்த எங்களைக் கண்டால் காய்கிறார்கள், ஒப்பற்ற தலைவரே! உடனிருக்கும் தலைவர்களே! மக்களுக்கு நலன் தரும்விதமாக ஆட்சியை நடத்துங்கள், திட்டம் தீட்டுங்கள், பஞ்சத்தை ஓட்டுங்கள், பட்டினியைவிரட்டுங்கள்! - அதிகார அகம்பாவம், எதேச்சாதிகாரமானோ பாவம், ஏதோ தானோ என்ற போக்கு, இவை குடிபுகுந்து கொண்டுவிட்டன நிர்வாக இடங்களிலே, அந்தக் குளவிகளைக் கொல்லுங்கள் - என்று காங்கிரஸ் ஊழியர்கள், பதவியில் இல்லாத காங்கிரசார், சொன்ன போதாவது நேரு சிந்தித்தாரா! இல்லை! சீறினார்! காங்கிரஸ்காரர்களிடையே, ஆர்வம் குறைந்து விட்டது! சோர்வு மேலிட்டு விட்டது! தியாகக பாவம் போய்விட்டது! பதவிப்பசி கண்டுவிட்டது! உழைப்பதில்லை! உரைச்சீர் செய்வதில்லை! சுயராஜ்யத்துக்கும் போரீடவேண்டும்! உரைச்சீர் செய்வதில்லை! சுயராஜ்யத்துக்குப் போரிட்டது போலவே சுபீட்சத்துக்கும் போரிடவேண்டும்! அதற்கு அந்தப் பழய, தேசபக்திக் கனல் இதயத்தில் கொழுந்து விட்டு எரியவேண்டும், ஜேஹிந்! வந்தே மாதரம்!! - என்று தான் நல்லுரை கூறினார் - நல்லுரையா? - இடித்துரைத்தார்! நிர்வாக ஊழல், நோய்! நிர்வாகப் பொறுப்பு இவருடையது! இதை யாரார் எடுத்துரைத்தாலும், அவர்களுக்கெல்லாம், வைத்யம் செய்தவண்ணம் இருந்துவந்தார் டாக்டர் நேரு. நோய் போகுமா - நாடு தான் வளமடையுமா!!
***

உழல், ஊராரின் அடிவயிற்றைக் கலக்கும் அளவுக்கு நாற்றமடிக்கலாயிற்று இரண்டாண்டுகளாக - ஆனால் நோயின் துவக்கநாளோ, அதற்கு முன்பே-நெடுநாட்களுக்கு முன்பே. காங்கிரஸ் ஆட்சி, தொட்டது துலங்கவில்லை - பட்ட மரம் தளிர்விடும் பாரீர் என்று பாடித்தான் ஓட்டு பெற்றார்கள். சட்டம் பல செய்து குவித்தனர்! திட்டங்களை ஏடுகளிலே தீட்டி, நாட்டினரிடம் நீட்டினர். வெட்டு, வெட்டு, வெட்டு என்று உணவுப்பங்கீட்டின் அளவை, எட்டு, ஏழு, ஆறு, என்று வெட்டித் தள்ளியபடி இருந்தனர்! பட்டினி ஊர்வலம் இங்கே! பவனிகள் வெளிநாடுகளில், இந்தியத் தூதுவர்களுக்கு!! பொதுமக்களின் கண்களில் கனலும் புனலும் கலந்து வெளிவந்த காட்சியைக்கண்டு கதிகலங்கிப் போன காங்கிரசார், இனி பொதுமக்களிடம் காங்கிரஸ் பெயர் கூறிக்கொண்டு சென்று தேர்தலில் தலைகாட்ட முடியாது, தேர்தல் இல்லா விட்டாலும், சாதாரணமாகக் கூட தலை காட்டுவது சிரமமாகத்தான் இருக்கிறது. எனவே, யூகமான செயல், காங்கிரசைவிட்டு ஓடி விடுவதுதான் என்று தீர்மானித்து அதன்படியே வெளியேறி, சிலர் சோஷிய
லிஸ்டுகளாகவும், சிலர் கிசான்களாகவும் மஜ்தூர்களாகவும், சிலர் பிரஜா கட்சியினராகவும், இப்படிப் பலப்பல கட்சிகளுக்குள் சென்று தங்களை மறைத்துக் கொண்டுவிட்டனர். நெஞ்சு உரம் கொண்ட சிலர் மட்டுமே, நேரு சர்க்கரைக் கண்டிக்க முடிந்தது. மற்றவர்கள், நேரு நல்லவர், காங்கிரஸ் தான் கெட்டுவிட்டது, என்று உபசாரம் பேசினார். நல்லவரான நேருவின் கீழ் ஆட்சி இருந்தும், ஊழல் ஏன் வளர்ந்தது, காங்கிரஸ் ஏன் கெட்டது என்று கேட்கும் அளவுக்கு, பொதுமக்களிடம் தெளிவு வளர வில்லை, திகைப்பு அதிகமாக இருப்பதால்.
***

காங்கிரஸ் கெட்டு விட்டது, காங்கிரஸ் கெட்டு விட்டது! என்ற பேச்சுக்கு, என்ன பொருள் கொள்கிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை. அதிலும், காங்கிரஸ் கெட்டு விட்டது என்று காங்கிரசாரே கூறும் போது, விசித்திரம் வளருகிறது! இவர்களெல்லாம் சேர்ந்துதானே காங்கிரஸ்! காங்கிரஸ் கெட்டுவிட்டது என்று இவர்களே கூறினார் என்ன பொருள்? திகைக்கிறேன் நண்பர்களே! உண்மையிலேயே! அவன் மிக நல்லவன், பொல்லாத சாராயம் அவனை அப்படிச்செய்கிறது, என்று பேசக் கேட்கிறோமே, அப்போது, சிரிப்பு வருமல்லவா! நல்லவர்கள், நாட்டுத்தலைவர்கள், தியாகிகள், காந்தியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்று பவர்கள், இருந்தும், காங்கிரஸ் எப்படிக் கெட்டு விட்டது! சுயநலம், பதவிப்பித்தம், எதேச்சாதிகாரம், சதி, இவைகள் எப்படிக் குடிபுக முடிந்தது! அலிகர் பூட்டு உடைத்து, தியாகத்தங்கக் கட்டிகளைக் காங்கிரஸ் இரும்புப் பெட்டியிலிருந்து கயவர்கள் களவாடிக் கொண்டு போய்விட்ட, மாயம் என்ன? யார் அந்த அரசியல் ஆல்க போன்கள்! யார் அந்த எத்தர்கள்? எத்தர்கள் நுழைய இடமளித்த ஏமாளித்தனம் எப்படி நாட்டின் நாயகர்களுக்கு ஏற்பட்டது? இவை, கேட்கப்படாத கேள்விகள் - ஆனால் பொதுமக்களை தங்களுக்குள் இவை பற்றிப் பேசிக் கொள்ளாமலில்லை. ஒரு அழகான அரண்மனையிலே, அம்சதூளிகா மஞ்சத்தை அமைத்து விட்டு தங்கத் தாம்பாளங்களில் அறுசுவை உண்டியைத் தயாரித்து வைத்துவிட்டு வீச ஒரு பணிப் பெண்ணும் வெற்றிலைதர ஒரு வேல் விழியாளும், பாட ஒரு பாவையும், ஆட ஓர் அழகியும் ஏற்பாடு செய்து விட்டு, பசியுடனுள்ள விருந்தாளியை அழைத்து வந்து, அந்த விருந்தாளிக்குக் கிடைக்க இருக்கும் இன்பத்தை அன்புடன் கூறிக்கொண்டே, அரண்மனையில் நுழைந்து பார்க்க, அம்சதூளிகா மஞ்சத்திலே ஒரு மனிதக் குரங்கு படுத்திருக்க, பாடவேண்டியவள் பாதம் பிடித்துக் கொண்டும், மற்ற ஆரணங்குகள் மனிதக் குரங்குக்கு எதிரே கைகட்டி வாய்பொத்தி நிற்கவும், தங்கத் தாம்பாளங்களை “காலியாகவும்’ இருக்கக் கண்டு, ஐயகோ! என்ன செய்வேன்! விருந்துதான் ஏற்பாடு செய்திருந்தேன் உமக்கு, விலங்கல்லவா புகுந்துவிட்டது! என்று விசாரத்துடன் கூறிவிடும் கதை கூடப் படித்ததில்லை, ஆனால், தைரியமாக இவர்கள் கூறுகிறார்கள், காங்கிரசின் மூலம் உங்களுக்கு நன்மை பல கிடைக்கத்தான் பணியாற்றிநோம், ஆனால் பாவிகள் சிலர் எப்படியோ காங்கிரசைக் கெடுத்து விட்டனர், என்று. இந்த அரசில்யல் புரட்டுரையைப் பேசத் தவறிடும் காங்கிரசார் இல்லை. காங்கிரஸ் கெட்டுவிட்டது, காங்கிரஸ் கெட்டுவிட்டது - இதே பல்லவி!! ஏன் - யாரால் - கெடவிட்ட காரணம் - இவைகளுக்குப் பதில் கிடையாது.
***

காங்கிரஸ் ஸ்தாபனம் என்பது வேறு - காங்கிரஸ் காரர் என்பது வேறு - எண்ணற்ற காங்கிரசாரின் கூட்டு உழைப்பு காங்சிரசில் இருக்கிறது, ஆனால் காங்கிரஸ் என்பது, இதற்கும் மேலான ஓர் சக்தி - இப்படி ஒரு தத்துவார்த்தத்தைப் பேசிப் பேசி மயக்கமட்டி வருகிறார்கள். அதனால்தான், முதலில், யார் போனால் என்ன, யார் இருந்தால் என்ன, காங்கிரஸ் புனிதஸ் தாபனம். கிருபவானி போகட்டும், கித்வாய் ஓடட்டும், ஓமாந்தூரார் ஒதுங்கட்டும். ஆதித்தன் விலகட்டும், ஆச்சாரியார் ஆஸ்ரமம் சேரட்டும், முத்துராமலிங்கத் தேவர் முடுக்கிக் கொள்ளட்டும், காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை அசைக்க முடியாது, அது ஆலவிருட்சம், இந்தத் தலைவர்களெல்லாம், அதிலே கூடுகட்டி வாழும் குருவிகள், குருவிகள் பறந்து சென்று விட்டால், ஆல்கெடாது! - என்று உவமைபேசி உள்ளம் பூர்த்தனர். அதே பேச்சாளர்களும் எழுத்தாளர்களும், இப்போது காங்கிரஸ் ஸ்தாபனம் பெரிதா, நேரு பெரியவரா- என்ற கேள்விக்குப்பதில் கூறவேண்டிய நெருக்கடியிலே தள்ளப்பட்டு, இராமன் இருக்குமிடம் அயோத்தி, நேரு இங்கு இருக்கிறாரோ, அதுதான் காங்கிரஸ், நேரு இல்லாக் காங்கிரஸ் ஒருஸ்தாபனமா - என்று பிரபந்தம் பாடுகிறார்கள். அதிலே சொக்கிக் கிடக்கும் பக்தி, ஜனநாயகப் பண்பாடு ஆகுமா என்பது கிடக்கட்டும், ஸ்தாபனத்தைவிட ஒரு தலைவர் - மிகப் பெரும் தலைவர், ஒப்பற்ற ஒரே தலைவர், அடைமொழியை என்ன வேண்டுமோ தருவோம், நஷ்டமென்ன - ஒருவரின் ஆற்றல், அல்லது தியாகம், தேவை, மதிக்கப்பட வேண்டும், என்ற கொள்கையைக் கூறுகிறார்களே அதைக் கவனியுங்கள். நேருவின் அளவுக்கு, மற்றத் தலைவர்களின் சக்தியும் தியாகமும் இல்லை என்பதை மறுக்கத் தேவையில்லை - எனினும் ஒவ்வொரு தலைவருக்கும், அவரவர்களின் நிலமைக்கு ஏற்ற விகிதாச்சார “சக்தி’ உண்டல்லவா? அவர்கள் போய்விட்டார்களே காங்கிரசைவிட்டு வெளியே - அதனால், காங்கிரஸ் குலையவில்லையா, என்று கேளுங்கள் - மழுப்புவார்கள்!!
***

இவ்வளவு நிர்வாக ஊழல் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஆட்சிப் பொறுப்பை வகித்து வந்தார் பண்டித நேரு - காங்கிரஸ் ஸ்தாபனமும் அவருடன் ஒத்துழைத்து வந்தது, அவருடைய அறிவாற்றலை மக்களிடம் எடுத்துக் கூறவும், ஆட்சியினால் பலன்கள் கிடைத்தன என்ற பட்டியல் தரவும், பயன்பட்டு வந்தது.

இந்த நிர்வாக காலத்தில், காங்கிரஸ் தலைவர்களாக, பாபு ராஜேந்திரர் இருந்திருக்கிறார், பட்டாபிசீதாராமய்யா இருக்கிறார், கிருபளானி இருந்திருக்கிறார், பாபு தாண்டன் இப்போது கொலுவில் இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியிலே ஊழல், காங்கிரஸ் ஸ்தாபனத்திலேயே ஊழல் இருக்கிறது என்றால், இவை, தாண்டன் தலையிலே கிரீடத்தை வைத்தபிறகு முளைத்தவை அல்ல. தலைவராகு முன்பு தாண்டனே ஒரு முறை, ஆட்சி ஊழலைப்பற்றியும் காங்கிரஸ் ஸ்தாபன ஊழல்பற்றியும் உருகிப் பேசினார். காங்கிரஸ் ஸ்தாபனத்துக்கும் காங்கிரஸ் சர்க்காருக்கும் தொடர்பு சரியான முறையில் இல்லை, என்று கூறி, முன்பு கிருபளானி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார் - எனினும் ஸ்தாபனத்துக்கும் சர்க்காருக்கும் பூசல் என்றே, காங்கிரஸ் ஸ்தாபனத் தலைவருக்கும் முதலமைச்சருக்கும் மோதுதல் என்றே, குழப்பம் விளைய வில்லை, ஒரே குடும்பமாகத்தான் இருந்தனர். தாண்டன் தேர்தலுக்கு நின்றபோது ஏற்பட்ட சல சலப்பைக் கூட, பிறசு சமரச கீதமாக்கி விட்டனர். இப்படி எல்லாம் “சுமுகமாக’த்தான் இருந்து வந்தது - இந்தநிலைøயில் பண்டிதர் அதிர்ச்சி வைத்யம் செய்யக் கிளம்பிய காரணமும் அவசியமும் என்ன!!
***

“நாவல் பழம் தின்றதற்கு அடித்தேனே, அதற்காகவா அழுகிறாய்” - என்று என் தாயார் என்னைக் கேட்டார்களே, அதுபோல பண்டிதரைக் கேட்கிறார்கள், “என்ன மன வருத்தம் உமக்கு? தாண்டன் தலைவராக இருப்பதால் தகறாருகிளம்புகிறதா? அது குறித்தா வருத்தம்” என்றும்; நான், ஆமாம் - ஆமாம் - என்று பதில் சொன்னேன் - நேர, இல்லை, இல்லை, என்ற முறையிலே பதிலை அமைத்துக் கொண்டிருக்கிறார். “இல்லை” - என்கிறார்.

“பெங்களூரில் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானப் படி நடைபெறததா இந்த கோபத்துக்குக் காரணம்” என்று கேட்கிறார்கள். இல்லை என்கிறார் நேரு. காங்கிரஸ் தலைவர் ஸ்தானம் என்று ஒன்று தனியாகவும் காங்கிரஸ் சர்க்கார் தலைவர் என்று மற்றொன்றும் இருப்பது பொருத்தமாக இல்லை என்று கருதுகிறீரா? என்று கேட்கிறார்கள்- இல்லை என்கிறார் பண்டிதர். “இரண்டு ஸ்தானங்களும் தாங்களே வகிக்க வேண்டும் என்கிறார்களே, அதை ஏற்றுக் கொள்கிறீரா என்று கேட்கிறார்கள். இல்லை என்கிறார். காரியக்கமிட்டியைத் திருத்தி அமைத்து விட்டால் நிலைமை முழுவதும் சரியாகிவிடுமா என்கிறார்கள், இல்லை என்கிறார்! உண்மையாக, அவர் உள்ளத்தை உறுத்துவது என்ன, என்பதைக் கூறவில்லை - நான் கூறினேனா, கட்டை விரல் நசுங்கியதை - எப்படிக் கூறுவேன், நானே அல்லவா, ரயில் கதவைச் சாத்தும்போது கட்டை விரலை நசுக்கிக் கொண்டேன்!!
***

பண்டிதரின் ஆட்சியினால் பொதுமக்களின் மனதிலே மூண்டுகிடக்கும் கசப்பு அவருக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது! ஆட்சியின் பொறுப்பு தம்முடையது என்பதையா அவர் அறியார் - அவருடைய பக்தர்களுக்குத் தெரியாமலிருக்கலாம், சிலர் தெரிந்தும் வெளியே சொல்லாமலிருக்கலாம் - உலக ஜனநாயக நாடுகளிலே உள்ள தலைவர்களுடன் உறவு கொண்டாடும் அவருக்கா இந்த அரசியல் தத்துவம் தெரியாது. நன்றாகத் தெரியும். எனவேதான், அவருடைய உள்ளம் குமுறுகிறது! வேதனை வெளிப்படுகிறது! ஆனால் வெளியே சொல்ல முடியாமா, கட்டைவிரல் நசுங்கியிருப்பதை? முடியாது! ஆனால் மலைபோலத் தேர்தல் நெருங்குகிறதே!! மக்கள் மன்றத்திலே சென்றாக வேண்டுமே! அவர்மட்டுமல்ல, அவருடைய ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு! போனால், ஆட்சியினால் நேரிட்ட அலங்கோலங்களுக்குச் சமாதானம் கூறத்தானே வேண்டும். அவருடைய நிர்வாகத்தின் விளைவாகக் காங்கிரசுக்கே, கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது, காங்கிரசாட்சி மீண்டும் ஏற்படுவது, குணமான டைபாயிட் மீண்டும் வருவதுபோல, என்று அரசியல் அறிந்தோர் கருதுகிறார்கள். எனவே, என்ன செய்வது! அதிர்ச்சி வைத்தியம் செய்கிறார்!! அதாவது விலகி, புதுக்கட்சிகள் அமைத்தவர்கள் எப்படி, நிர்வாக ஊழலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும். காங்கிரஸ் ஸ்தாபன ஊழலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறிக்கொண்டு, அவைகளை எதிர்த்து வெளி ஏறியவர்களல்லவா நாங்கள், புதியகட்சி அல்லவா அமைத்திருக்கிறோம், இது புரையோடிப்போன இடமல்ல, புத்தம் புதிது, காங்கிரசைவிட்டு வெளி ஏறிய புரட்சிக்காரர்களின் முகாம், ஆகவே “ஒட்டு’ எங்களுக்குத் தருக, என்று கேட்டுகிறார்களே, அதேபோல, பண்டிதருக்கு ஏதேனும் ஒருவழி வேண்டும்! மற்றவர்கள், ஆட்சியின் ¬முக்கிய பொறுப்பிலே இல்லாதது, புதிய கட்சி துவக்க அவர்களுக்கு வசதி அளித்துவிட்டது. நேருவோ, ஆட்சித்தலைவர்! என்ன செய்வார்? இந்தச் சமயத்திலே புதிய கட்சி துவங்குவது இங்குள்ள பக்தர்களுக்கு, அரசியல் ஆபாசமாகத் தெரியாது. ஆனால், வெளிநாடுகளிலே மிக மிக மோசமாகக் கருதுவார்கள்! பார்மோசாதீவிலே, மாசேதுங்கின் பிறந்தநாள் விழாவை சியாங்கேஷேக் கொண்டாடுவது போலிருக்கும். எனவே, வேறு வழி காண்கிறார். என்ன அந்த வழி! காங்கிரஸ் ஸ்தாபகம் கெட்டுவிட்டது என்று, அவரும் கூறுகிறார்!!

காங்கிரசைத் திருத்த நான் பலமுறை முயன்றேன். முடியவில்லை! என் யோசனைகள் வெற்றிகரமாக்கப்படவில்லை. காங்கிரஸ் ஸ்தாபனத்துக்குள், எனக்குச் சரியானபடி இல்லை - என் வேலை பலிக்கவில்லை -- என்றெல்லாம் பேசுகிறார்!
* * *

நாசிக்கிலும் பெங்களூரிலும் புயல் கிளம்பும் என்று பயந்தோம், தங்கள் திறமையால் தென்றலாக அல்லவா மாறிவிட்டது அந்தப் புயல்! தீர்மானங்கள் தாங்கள் தீட்டிய
படியே நிறைவேறினவே! தங்கள் வெளிநாட்டுக்கொள்கை விளக்கத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனரே, என்று நருபர்கள் கேட்கிறார்கள், “ஆமாம், ஆனால் மனப்பூர்வமாக, இருதய யுத்தியோடு அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கிறார் பண்டிதர்! காரியக்கமிட்டி தங்கள் விருப்பப்படி திருத்தி அமைத்து விட்டால், எல்லாம் சரியாய்விடுமா - என்று கேட்கிறார்கள் நிருபர்கள், அதுமட்டும் போதுமா, இதயம் யுத்தமாக வேண்டும், காங்கிரசில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு உயிரூட்டவேண்டும். மொத்தத்திலே மகத்தான மனமாறுதல் வேண்டும், மனமாறுதல் உண்டாகிறது என்பதற்கு ஒரு அறிகுறிதான், காரியக்கமிட்டியைத் திருத்தி அமைப்பது - அது மட்டும் போதாது - என்று கூறுகிறார் கட்டைவிரலை மட்டும் காட்டவில்லை!!
* * *

தாண்டனின் பிடிவாதம் முற்றி, நேரு, காட்டும் இடத்தில் கைஎழுத்திட மறுத்தால், காங்கிரசைவிட்டு விலகி, வேறு பெயர்கொண்ட ஸ்தாபனத்தின்மூலம், மக்களை அணுகலாம் என்று எண்ணுகிறார். தாண்டனை தாக்கித் தளரச் செய்து, நேரு வெற்றி பெற்றார் என்ற செய்தியை உலகுக்கு அறிவித்து, காரியக்கமிட்டி, தேர்தல்குழு இவைகளைத் தமது இஷ்டப்படி திருத்தி அமைத்துக்கொண்டால், பிறகு மக்களிடம் காங்கிரஸ் பெயர் கூறிக்கொண்டே செல்லலாம். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டம் இனி இராது - காங்கிரஸ் ஆட்சியிலே சில பல கஷ்டங்கள் ஏற்பட்டன - தெரியும் - வருந்துகிறேன் - ஆனால், காங்கிரஸ் ஸ்தாபனத்திலே புகுந்து கொண்டிருந்த கேடுதான் அதற்குக் காரணம் - அந்தக் கேட்டினைக் களைந்தாகிவிட்டது, புதிய மனோபாவம் பறந்துவிட்டது, இந்த பழைய காங்கிரஸ், புனிதமாக்கிவிட்ட காங்கிரஸ். எனவே பழைய காங்கிரசால் ஏற்பட்ட, பஞ்சம் பட்டினி, அடக்கு¬முறை, நிர்வாக ஊழல், இவைகளை மறந்துவிடுங்கள், புதிய காங்கிரஸுக்கு ஓட் போடுங்கள், புதிய காங்கிரஸுக்கு ஓட் போடுங்கள், என்று பிரசாரம் செய்யலாம் என்று எண்ணுகிறார். இதற்கு, டாண்டன் சரியான உதவியாகக் கிடைத்துவிட்டார் - அவரையுமறியால், தாண்டன், நேருவின் அரசியல் செல்வாக்கு வளர உதவியாளராகிறார்!! கட்டை விரல் நசுங்கியதை மறைக்கவும், காண்பவர் கேட்டால், இதோ இந்தத் தாண்டனால் நேரிட்டது என்று கூறிக்கொள்ளவும், பொன்னான வாய்ப்பு பண்டிதருக்கு.
* * *

அதிர்ச்சி வைத்தியம் நடைபெறுவதாகக் கூறுகிறார்கள் - வைத்தியம், காங்கிரஸுக்கு அல்ல! நிலைமையால், பண்டிதருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைச் சமாளித்துக் கொள்ள அவர் வைத்தியம் செய்து கொள்கிறார். அதற்கு இந்தத் தாண்டன் உபயோகிக்கப் படுகிறார். பண்டிதரின் அதிர்ச்சி இந்த வைத்திய முறையால் முழு குணமடையும் என்று தான் கூறவில்லை. முயற்சிக்கிறார்!! புதிய உடை! புதிய காட்சிகள்! டர்னிங் சீன்கள் புதிது! பழைய மானேஜ்மெண்ட் இல்லை! நிர்வாகம் புதிது! - என்று விளம்பரம் வெளியிட்டும், வ‘ல் காணா நாடகக் கம்பெனிகள் உண்டல்லவா! அதுபோல.
* * *

அதிர்ச்சியைப் போக்கிக்கொள்ள வைத்தியம் தேடிடும் பண்டிதரின் ஆட்சியிலே இருந்து அல்லலை அனுபவித்த மக்கள், கேட்பது, காங்கிரஸ் அமைப்பு முறையிலே மாறுதல் உண்டா, இல்லையா, என்பது அல்ல! வாழ வழி கேட்கிறார்கள். வேலை கேட்கிறார்கள் - உழைப்பை உறுஞ்சுபவர்களின் கொட்டத்தை ஒழிக்கச் சொல்கிறார்கள்!

நேரு ஆட்சியிலே, ஆலைகளிலே அமளியும் வயல்களிலே இரத்த¬ம் பெருகக் கண்டனர்! மாணவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் கண்டனர். தாய்மார்கள் தடியால் அடிக்கப்பட்டதைக் கண்டனர்! மொழி காக்கக் கிளம்பயவர்களின் கண்களிலே இரத்தக் கண்ணீர் வழிந்திடக் கண்டனர். புத்தகங்கள் பறிமுதலாகக் கண்டனர். பத்திரிகைக்கு ஜாமீன் கேட்டதைக் கண்டனர்! நாடகங்களைத் தடை செய்ததைக் கண்டனர்! பேச்சுச் சுதந்திர¬ம், எழுத்துச் சுதந்திர¬ம் பறிக்கப்படுவதைக் கண்டனர்! வெள்ளையன் ஆட்சியிலே கண்ட கொடுமைகள் தேசிய மினு மினுப்புடன் கூத்தாடக் கண்டனர். குன்றத்தூர், கண்டனர்! சேலம் சிறையில் செங்கதிரை நாடிச் சென்றவர்கள் பணமாக்கப்பட்டதைக் கண்டனர்! பாதை ஓரத்தில் பணம் கண்டனர்! பட்டினிச்சாவைக் கண்டனர்! பெற்ற குழந்தையை விற்றுவிடும் தாயைக் கண்டனர்! தூக்கிட்டுக் கொண்டு இறந்த நெசவாளியைக் கண்டனர்! பிச்சை எடுக்கும் நெசவாளக் குடும்பங்களைக் கண்டனர். கத்தாழை தின்பார், காட்டுச் சோளத்துக்குக் காத்திருந்து ஏமாறுவார், புளியங்கொட்டை தின்போர், புதிய நோய்களுக்குப் பலியாகி வதைவோர் ஆகியோரைக் கண்டனர்! இன்னும் அவர்கள் காணவேண்டிய காட்சி என்ன இருக்கிறது!!

கள்ளமார்க்கட் கழுகுகள் வட்டமிட்டபடி வந்தேமாதரம் பாடிடக் கேட்டனர்! பிரிட்டிஷ் ஆட்சியின் போது காங்கிரசின் பிடரியைப் பிடித்துத் தள்ளிய எதேச்சாதிகாரக் கூலிகளிடம் காங்கிரஸ் ஆளவந்தார்கள், மந்திரிகள் குதூகலமாகக் கொஞ்சிப் பேசிடுவதைக் கேட்டனர்.

அதோ பார், அவனுக்கு பஸ் பர்மிட், இதோ இவனுக்கு ஏற்றுமதி லைசென்யு, என்று அரசியல் இலாப வேட்டைக்காரர்களைப் பற்றிய சேதிகளை ஊரார் பேசிடக் கேட்டனர்.

முதல் இல்லாத கம்பெனி, ஓடாத ஜீப்மோட்டார், உபயோகப்பட முடியாத ரெடிமேட் வீடுகள், புழுத்துப் போன உணவுப் பண்டம், செல்லரித்துக் கிடக்கும் காகித பேல்கள் என்று இப்படி சர்க்காரின் பண்டம் வாங்கும் வகையிலே பொதுமக்களின் பணம் கோடி கோடியாகப் பாழாகக் கண்டனர்.

வெளிநாட்டுத் தூதுவர்களின் தர்பாருக்கு பணம் விரயமாக்கப்படுவதைக் கண்டனர்! ஆண்டு தோறும் புதிய புதிய வரிகள் கிளம்ப வாட்டிடக் கண்டனர்! புதிய போலீஸ் ஸ்டேஷன்களைத் திறந்து வைக்கும் மந்திரிமார்களைக் கண்டனர்! புதிய பள்ளிக்கூடம் கட்ட பணம் இல்லை என்று அந்த மந்திரிகள் பேசிடக் கேட்டனர்.

கூலி உயர்வு கேட்டவனிடம் குண்டாந்தடியும், இலாபவிகிதம் அதிகம் வேண்டும் என்று மிரட்டும் முதலாளியிடம் கொஞ்சு மொழியும் காட்டும் காந்தீயத் துரோகிகள் கதருடையில் உலவக்கண்டனர். கள்ளுக்கடைகளை சாவடியிலும் சந்துபொந்திலும், மலைச்சரிவிலும் கண்டு கலங்குகின்றனர்! ஒரு நாடு, நலிந்திடும் காட்சியைக் காண்கின்றனர்!

கொடி ஏற்றிக் கொண்டாடியவர்கள்தான், கோஷமிட்டு வரவேற்றவர்கள்தான், இன்று குமுறுகிறார்கள், இதற்காக இவ்வளவுபாடு என்று எண்ணி எண்ணி ஏங்குகிறார்கள்! நரியூரிலிருந்து புலியூருக்கல்லவா வந்து சேர்ந்தோம் என்று எண்ணிக் கலங்குகிறார்கள்!

ஒளிபடைத்த கண்ணினாய், வா; வா, வா! - என்ற கோகிலகானம் காற்றிலே மிதந்து வருகிறது, பஞ்சடைந்த கண்கள், பறட்டைத்தலை, பசியால் காது அடைத்துப் போன நிலை, பரிதாபத்துக்குரிய “பாரதமாதா”வின் புத்ரன் ஒரு கவளம் சோறு கேட்கிறான், உழைக்க சம்மதிக்கிறான், ஊரை ஆள்பவர் நேரு, அவர் பெயரை உலகு அறியும், அவர் ஆட்சியிலேதான் எனக்கு இந்த நிலை! என்று எண்ணுகிறான், ஏன் என்று தெரியவில்லை திகைக்கிறான்.

அந்த ஏக்கம், கலக்கம், திகைப்பு, இவைகளை போக்க அல்ல அதிர்ச்சி வைத்தியம்!!

மறுபடியும் எப்படி அவனை அணுகுவது, ஒருமுறை தான் தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாடி ஓட்டு வாங்கினோம், தத்தளிக்கும் என்னை இக்கதிக்கு ஆளாக்கியது யார்? என்றல்லவா, இம்முறை கேட்பான், என்று எண்ணி, மன அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது பண்டிதருக்கு, அந்த அதிர்ச்சிக்கு வைத்யம் செய்து கொள்கிறார்!