அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நாட்டின் நாயகர்கள்
2

அடவி தரப்பட்டு அதனை அழகு நகராக்கியது போலவும், வெட்டித் தள்ளப்பட்ட, பட்டுப்போன மரத்தை கனி குலுங்கச் செய்வது போலவும், ஒன்றுக்கும் உதவாத நாடு ஒப்படைக்கப்பட்டு, அதனை உருவும் எழிலும் உள்ளதாக ஆக்கப்படுவதற்கு இவர்கள் காலமெல்லாம் செலவிட்டுக் கஷ்டம் பல அடைவது போலவும் பேசுகிறார்களே, சரியா, நியாயமா? நாட்டின் நாயகர்கள் பேசும் போக்கைக் கூர்ந்து கவனித்து நேர்மையாளர்கள், பதிலளிக்க வேண்டுகிறோம்.
***

“ஐயன் சிங்காரங்களைப்பாரும்; வரதன் வரும் வைபோகம் தன்னைக் கண்ணால் பாரும்” - என்று பாடிப் பரவசமாகி, இடிபட்டு மிதிபட்டு, ‘ஐய்யய்யோ இதென்ன அக்கிரமம்’ என்று அருவருப்புடன் அலறும் ஆரணங்குகளும் “காதைப் பார்த்துக்கொள்ள; கழுத்து ஜாக்கிரதை’, என்று அவர்களுக்கு ஆறுதல் கூறிப் பாதுகாக்கும் ஆடவரும் ஏராளமாகக் கூடிவிடும், காஞ்சிபுரம் வரதராசுர் கருட உற்சவத்தின்போது, காங்கிரஸ் சர்க்காரின் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிப் பிரகாரம் செய்ய ஒரு கண்காட்சி அமைத்தார்களாம்!

மக்கள் திரண்டுசென்று, நாடாள்வோர் கூறும் நல்லுரை கேட்டு இன்புற்றிட ஆவலுடன் துடித்த காலம் மலை ஏறிவிட்டது; இப்போது மக்கள் எக்காரணத்துக்õகவோ, எங்கோ கூடுகிறார்கள் என்றால், எங்கு சென்று அவர்கள் காதிலே நமது விஷயத்தைத் திணித்துப் பார்ப்போம் என்று நாடாள்வோர் துடிக்கிறார்கள்; பாபம், பசி அவ்வளவு! என்செய்வர்!!

பட்டை நாமப் பாகவதர் பகவான் நாமாவளியைப் பாடி ஆடி ஒருபுறம் இருப்பார்; பால் பர்பி, பாதாம் ஹல்வா! - அசல் நெய், சுடச்சுட - என்று கூவிக் கூவி விற்கும் தள்ளு வண்டிக்காரன் ஒருபுறம் இருப்பான்; “தங்க நகை வாங்கிப் பணத்தைப் பாழாக்கிக் கொள்வானேன் - இதோ, மாயத்தங்கம் - விலை மலிவு - கருக்காது - கியாரண்டியுள்ளத’ என்று விளம்பர போர்டு போட்டுக்கொண்டு, நகை வியாபாரி வேறோர் புறம் இருப்பான்; பல் ஆட்டம். ஈர் அழுகல் இரத்தம் கசிதல் எல்லாம் போக்கி, பல்லை வெண்மையாக வைத்திருக்க உதவும் முத்து பற்பொடி; வெண்மையாக வைத்திருக்க உதவும் முத்து பற்பொடி; செந்தாமரையோ என்ன சித்தம் உருக உங்கள் கணவன் கூற÷ண்டுமா, இதோ ரோஸ்பவுடர்; அயக்காந்தச் செந்தூரம்; அம்பாலா அத்தர்; பம்பாய் பீடா; கல்கத்தா ரசகுல்லா - என்றெல்லாம் தத்தமது சரக்குகுளை காட்டி விலை கூறி விற்பர் திருவிழாவுக்காகக் கிளம்பும் அங்காடியில் - அந்த வரிசையிலே, “நேரு பண்டிதரின் நேர்த்தியான திட்டம் - அமெரிக்கா பார்த்து ஆச்சரியப்படும் திட்டம் - பொட்டல் காடைப் பூங்காவாக்கும் திட்டம் - பொன் விளையும் பூமியாக பாரதத்தைச் செய்யும் திட்டம் - அற்புதமான ஐந்தாண்டுத் திட்டம் - வாரீர், பாரீர்,” என்று சுவிக் காட்ட முணைந்துள்ளனர் ஆளவந்தார்கள்!

பக்தி வேண்டிச் சென்று பலவிதநோய் பெற்றுத் திரும்பும் சட்டம், இப்போது, இக்காட்சியையும் காணும்! அற்புதம்! அற்புதம்!! சர்க்காரின் திறமையே திறமை!!

ஐந்தாண்டுத் திட்டத்தின் மகிமையை - ஐயன் சிங்காரத்தைக் கண்டு ஆனந்தம்கொண்டு, காலோக சாமீபசாயுச்யப் பதவியைப் பெறக் கூடிடும் பக்தகோடிகளுக்கு எடுத்துக்காட்ட கண்காட்சி நடாத்துவது, சரிந்துபோயிருக்கும் செல்வாக்கைச் சரிப்படுத்த உதவும் - என்று, காங்கிரசார் கருதகிறார்கள் போலும்!

எதைச் செய்தாவது, எவ்வளவு சிரமப்பட்டாவது, தேய்ந்துவரும் செல்வாக்கை மீண்டும் வளர்த்துக்கொள்ள எண்ணுகிறார்கள்; எனவேதான், நகைக்கத்தக்க வகையிலே எல்லாம் முறைகளைத்தேடி அலைகிறார்கள்!

காலரா உண்டாகும் விதத்தையும், பிளேக் ஏற்படும் காரணத்தையும், மலேரியாவை மூடடிவிடும் கொசுவின் தொல்லையையும், படம்போட்டுக் காட்டுவதுபோல, ஐந்தாண்டுத் திட்டத்தையும் படம்போட்டுக் காட்டிப் பிரசாரம் செய்யப் போகிறார்களாம்!

ஐந்தாண்டுத் திட்டத்தின் மேன்மையையும் பலனையும் எடுத்துச் சொல்லத் தவறிவிட்டது போலவும், அதை மட்டும் தக்கவிதமாக எடுத்துரைத்தால், மக்கள் கண்களிலே ஆவலொளி வீசிடும்விதமாகி, ‘எங்கே தேசோத்தாரர்கள்! எங்கே நாட்டைக்காத்திடும் நல்லவர்கள்! எங்கே பாரத வீரர்கள்! அவர்களைக்கொண்டு, என் மகிழ்ச்சியை, வாழ்த்தை, வணக்கத்தை, பாராட்டுதலைத் தெரிவிக்கவேண்டும்’ என்று மக்கள் ஆர்வத்துடன் கூறி, அடுத்த ஐந்தாண்டு மட்டுமல்ல - ஐந்து ஐந்தாண்டுக் காலம் அவர்களே ஆள வேண்டும்’ என்று கூறுவார்கள் என்றும், ஓர் தறான கருத்து முறைத்திருக்கிறது ஆளவந்தார்களுக்கு!

சிலர், இதனாலேயே, ஐந்தாண்டுத் திட்டத்தைப்பற்றி மக்களிடம் பிரசாரம்செய்யவேண்டும்; அதற்கு ஒரு கமிட்டி அமைத்திடவேண்டும், என்று பேசுகிறார்கள்!

காஞ்சிபுரம் திருவிழாவின்போது ஐந்தாண்டுத் திட்டப் பிரசாரக் கண்காட்சி நடத்தலாம் என்று தீர்மானித்ததும் இதே நோக்குடன் தான்!

இவர்கள் அறியார்கள் போலும் - இந்த ஐந்தாண்டுத் திட்டத்தைக் காங்கிரஸ் ஆட்சியினர் தீட்டியதும், நடத்திச் செல்வதும், இவர்களுக்குக் கண்டனத்தைத்தான் பெற்றுத் தரும் வகையாக இருந்திருக்கிறது என்பதை!

புல்லராட்சியைப் பொசுக்கிக் கருக்கிடும் மாபெரும் புரட்சிக்குப் பிறகு புதுயுகம் காண சோவியத் ரஷியாவில் ஐந்தாண்டுத் திட்டம் என்ற ஏற்பாடு எழுந்தது; இந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் ரஷியாவின் வளத்தையும், எழிலையும் - புரட்டு நிரம்பிய புள்ளி விவரங்களால் அல்ல - உலகோர் கண்டு ஒப்பத்தக்க, மதிக்கத்தக்க, பாராட்டத்தக்க வகையிலே, உண்டாக்கித் தந்தது! உலக வரலாற்றுச் சுவடியிலே பொன்னேடு என்றாயிற்று - அத்திட்டங்களுகும், அவை வெற்றிகரமாக்கப்பட்டதால், மக்கள் பெற்றவாழ்வின் வளமும்!

புலியைப் பார்த்துப் பூனை ‘டு போட்டுக் கொண்ட தாம்! அதுபோலவே, “ரஷியா, ஐந்தாண்டுத் திட்டம் தீட்டினால், நாங்களும் தீட்டுகிறோம் என்று இந்திய சர்க்கார் நீட்டோலை காட்டுகிறார்கள்; ஆனால் நோக்கம், முறை, பலன் எனும் எதிலே நோக்கினாலும், ரஷிய ஐந்தாண்டுத் திட்டத்துக்கும் இந்திய ஐந்தாண்டுத் திட்டத்துக்கும் ஒப்பிட்டுக் காட்டவும் யோக்யதையற்ற முறையே இருக்கிறது.

தோகையை எடுத்துக் கோழிக்கு ஒட்டிவிட்டால், மயில் ஆகிவிடாது! மாம்பழக் கொத்து ஒன்றைக் கட்டி வைத்துவிட்டால், வேம்பு, மா ஆகிவிடாது!!

பெயரளவில் ஐந்தாண்டுத் திட்டம் என்று இருந்துவிடுவதாலேயே ரஷியாவில் ஏற்பட்ட வளமும், வாழ்வும், வசீகரமும், மேம்பாடும், நமக்குக் கிடைத்துவிட்டது!

ஆனால், ஊரை மயக்க அது உதவுவது என்று எண்ணினர் ஆளவந்தார்கள்! மக்கள் ஏமாளிகளல்ல! ஐந்தாண்டுத் திட்டத்தைக் குறித்து சர்க்கார்தான் வானளாவப் புகழ்கிறதே தவிர, குண்டூசி அளவுப்பலனும் நாமகாணவில்லையே! வறுமையும் வாட்டமும் நமக்கு வளருகிறது; அவர்களே, கோடி கோடியாக நமது சுகத்துக்காகப் பணம் கொட்டிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள், பஞ்சம்பசி போகக்காணோம்; அவர்கள் ஏதோ வளம் கொஞ்சும் என்று நல்வாக்குக் கொடுக்கிறார்கள்! -ஏன் இந்த வீணுரை” என்று தான் மக்கள் எண்ணி ஏங்குகிறார்கள்!

பெரும் பொருள் பாழாக்கப்பட்டிருக்கிறது; அதிலும் வடநாடு வளத்திலும், தொழில் துறை முன்னேற்றத்திலும் மேலும் மேலும் வளருவதற்கான வகையே செய்யப்பட்டிருக்கிறது.

திட்டத்திலே தெளிவும், அதை நிறைவேற்றுவதிலே நேர்மையும் காணோம், புள்ளி விவரங்கள், பொய்த்துப் போகின்றன! போட்ட திட்டம் நாளுக்கு நாள் மாறுதலடைந்து, பொருளற்றுப் போகிறது!

இந்திய சர்க்கார் நிர்வாகத் துறையிலே நடைபெறும் ஊழலோ, உலகு நகைக்கும் காதை யாகிவிட்டது.

இது, ஐந்தாண்டுத் திட்டத்தின் இலட்சணம்! இந்தத் திட்டம் தோற்றுவிட்டது என்று நேரு பண்டிதரின் உடன் பிறந்த அம்மையாரே, சென்னையில் பேசினார்கள்.

கோரிய பலன் கிட்டவில்லை; எதிர்பார்த்தது நடக்க வில்லை; என்னமோ எண்ணினோம், ஏமாந்து போனாம்; சீரான முறையிலே அமையவில்லை - என்று காங்கிரஸ் தலைவர்களே, திட்டத்தைப் பற்றி, அவ்வப்போது, குறைகூறி விட்டிருக்கிறார்கள்.

முதல் ஐந்தாண்டுத் திட்டம் சரியானதில்லை; சரியான பலன் தரவுமில்லை; மக்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை - என்று சர்க்காருக்கே தெரிந்ததால்தான் இப்போது, அவர்கள் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் தீட்ட முன்வந்து விட்டனர்.

இது, திட்டத்தின் இலட்சணம்! இதற்கு ஒரு பிரசாரமாம்! திருவிழாக் கூட்டம் கிடைக்கிறது, இதற்கு!!

“ஒரு மண்டலம் சாப்பிட்டால், உடலில் உள்ள ரோகம் அத்தனையையும் ஓட்டி விடும்; மேனி பொன்போலாகும் உடற் கட்டு இரும்புபோலாகும்; இமயமலை முனிவர் முறை; ஏதே பொட்டிலந்தான் இருக்கிறது; விலை சரசம்; ஒரு ரபா நாலணா” - என்று கூவி பிற்கும் குங்குமப் பொட்டுக்காரன், அதே நிற்கிறான் - சர்க்காரின் ஐந்தாண்டுத் திட்ட பிரசார விளம்பர அமைப்புக்கு அருகில் - அவனுக்கு இலேசாகக் கருமேகம்!!
***

மயக்க மருந்தைக் கலந்து மதுதந்து, காவலரை வீழ்த்தினான்!

இறைச்சித் துண்டு தந்து வேட்டைநாயின் வாயைக் கட்டிவிட்டான்!

நூலெனி வழியாக மாடி நுழைந்தான்!

மாறு சாவி போட்டுப் பேழையைத் திறந்தான்!

தங்கம் வெள்ளிச் சாமான்களைத் தீண்டாமல் நவரத்னங்களைப் பார்த்துக் களவாடிச் சென்றான்!
பிடிபட்ட கள்ளன்பற்றி, பெரும் பாடுபட்டு அவனைப் பிடித்த படைத்தலைவன், அரசனிடம் கூறுகிறான்.

கண்ஞூகள் கொவ்வையாகின்றன அரசனுக்கு; ஆனால் அவனுடைய அழகு மகளின் முகமோ செந்தாமரையாகிறது.

‘அவனை...!’ என்று கடுங்கோபத்துடன் மன்னன் பேசுகிறான்.

‘அவரை!...!’ என்று கொஞ்சுமொழியில் பேசுகிறாள் குமாரி!

“சிரச்சேதம் செய்வதா, சுண்ணாம்புக் களாவாயில் போட்டுச்சிந்ததிரவதை செய்வதா, காராக்கிரகத்தில் அடைப்பதா, கைகால்களைத் துண்டித்துவிடுவதா! கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மீதேற்றி ஊர்வலம் நடத்துவதா - என்ன செய்யலாம் வேந்தே’ என்று கேட்கிறான் படைத் தலைவன்!

“அவரைத் தங்கள் மருமகனாக்கிக்கொண்டு, இளவரசுப் பட்டம் சூட்டி, என் மனதை மகிழச் செய்யுங்களப்பா,” என்கிறாள் அரசிளங்குமரி!

களவாடிய கள்வனைத் தண்டித்துத் தீரவேண்டும் என்று படைத்தலைவன் கூறுவதையும், அவனை மணவாளனாக்கும்படி மகள் கோருவதையும் மன்னன் கேட்டு, என்ன செய்வது என்று அறியாமல், திகைக்கிறான்.

மதியூக மந்திரி, இச்சமயத்தில் குறுக்கிட்டு, “மன்னர் மன்னா! இவன் கள்வன் அல்லன்! தன்காதலின் மேம்பாட்டை அரசகுமாரி அறிந்திட வேண்டிய ‘களவு’ போன்ற செயலைச் செய்தான். நவரத்தினத்தைக் களவாடியது, குமாரிக்குக் காணிக்கை செலுத்தத்தான்! எனவே, அவன் கள்வன் அல்லன்; காதலன்!! கடிமணம் செய்வித்துக் களிப்படைவதே முறை என்றானாம்!
***

பித்தம் பிடித்தோரிடம் ஒரு நாடு இருந்தால்தானே, இதுபோல நடைபெறும்!

“இப்படி ஒரு அரசுமுறை இருந்தால், அதனைச் சான்றோர் ஏற்றுக் கொள்வாரோ; அது சரிந்தொழியாமல் இருக்குமோ,” என்று கேட்கத் தோன்றும் உங்களுக்கு!

உண்மை; இதுபோன்ற நிலை ஒரு அரசின் சீரழிவுக்கும், அதனை ஆள்வோரின் சிறுமதிக்குமே எடுத்துக் காட்டாகும்!

இதே முறையிலே அல்ல வென்றாலும், இதுபோன்ற முறையிலே நடைபெற்ற அரசுகள் பல, மக்கள் விழிப்புணர்ச்சியும், அக்கிரமத்தை எதிர்த்தொழிக்கும் ஆற்றலும் பெறாத நாட்களிலே இருந்து வந்தன; ஆனால், அப்போதே கூட அறிவுடையோர் அத்தகைய அரசுகளைக் கண்டித்தனர்; ஆள்வோரை இடித்துரைத்தனர்!

“மன்னனுடைய மனதை எவ்வகையாலேனும் கவர்ந்து விட்டால், எத்தகைய அதிகாரமும் செலுத்தலாம்; எவ்வளவு அக்கிரமும் செய்யலாம்; எவ்வளவு கொள்ளையும் அடிக்கலாம்; கொலையும் செய்துவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாம்,” என்ற நிலைமை முறை தவறிய முடியாட்சிக் காலத்திலே இருந்து வந்தது.

“குடியாட்சிக் காலமல்லவா இது; இது போது ஏன் அந்த முடியாட்சிக் காலத்து முறை கேடான செயல்பற்றிய பேச்சு,’ என்று கேட்பீர்கள்!

காரணமற்றல்ல, இதனைக் கூறுகூது!

முடியாட்சிக்காலத்துத் தவறுகளைக் கண்டு மனம் வெதும்பி, கடும் கஷ்ட நஷ்டங்களுக்குட்பட்டுப் போராடி உலகம் மக்களாட்சி கண்டது; அந்த மக்களாட்சியிலே முறைகேடான செயல் நேரிடுகிறது என்றால், பொறுப்பு முடிதாங்கியையோ, அவன் அடிவருடியையோ சேராது; மக்களைத்தான் சேரும். எனவே மக்கள் கண்விழிப்பாக இருக்க வேண்டும்!

“விடுதலைக்கு நாம் அளிக்கவேண்டிய காணிக்கை, எப்போதும் விழிப்பாக இருப்பதேதான்,” என்றார், ஓர் அரசியல் அறிஞர்.

இந்நிலை இல்லாததால், இன்று நடைபெறும் ஆட்சியிலே பலபல ஊழல்கள் மலிந்து விட்டன.

பிடிபட்ட கள்ளனுக்கு மகளை மனைவியாக்கிடும் மதிகெட்ட மன்னன் போல், கொள்ளை அடிக்கும் அதிகாரிகள் கோலாகலமாக வாழ அனுமதிக்கப்படுகிறார்கள்; அக்கிரமம் புரிவோர் அறங்கூறுவோரிடம் சிக்கித் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், அலங்கார வாழ்விலே உள்ளனர்; ஊழல் தலைவிரித்தாடுகிறது...!

டில்லி துரைத்தனத்தின் லட்சணத்தைத்தான் கூறுகிறோம் - ஒன்றல்ல இரண்டல்ல; தொடர்ந்து பலப்பல ஊழல்கள் அப்பலத்துக்கு வருகின்றன; கோடி கோடியாகப் பொருள் நஷ்டம் ஏற்படுகிறது; கேடு களையக்காணோம்; பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் நாணித் தலை குனியக் காணோம்; மாறாக வரிந்து கட்டிக்கொண்டு, ஊழலுக்குக் காரணமாக இருந்தவர்கள் மீது ஏறிக் கிடக்கும் அழுக்கைத் துடைத்திடக் கிளம்புகிறார்கள்.

ஓடாத ஜீப் மோட்டார், உபயோகமில்லாத இயந்திரக் கருவிகள், புழுத்துப்போன கோதுமை அரிசி, காற்றடித் தால் சிதறும் ‘ரெடிமெட்’ வீடுகள் - என்று அடுக்கடுக்காக ஊழல்கள் நடைபெற்று மக்கள் தரும் வரிப் பணம் பொறுப்பற்றவர்களால் எப்படி எப்படிப் பாழாக்கப்படுகிறது என்பது கண்டறியப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஊழலுக்கும் ஒரு விசாரனைக் குழு; அது தயாரிக்கும் அறிக்கை; அறிக்கையின் மீது விவாதம் - இவ்வளவும் நடைபெறுகிறது; ஆனால், ஊழல் நடைபெற ஒட்டாது தடுக்கப்பட்டதா என்றால். அதுதான் இல்லை!

பிணப்பரிசோதனை நடத்துவதுபோல, பெரும்பொருளைக் கோட்டைவிட்ட பிறகு ஆராய்ச்சியும் விசாரணையும் நடைபெறுகிறது; அறிக்கையம், கண்டனமும் வெளியிடப் படுகிறது; பிறகோ, மீண்டும் ஓர் ஊழல்நடைபெற காலமும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

நேரு பண்டிதரோ, புருவத்தை நெறிப்படுத்தபடி, ‘யார் மீது வசை பாடலாம்? உலகப் பிரச்சனையில் எதிலே பஞ்சாயத்து செய்து வைக்கக் கிளம்பலாம்’ என்றே சுறுசுறுப்பாகச் சுற்றுப்பயணம் செய்வதும், பாலைவனத்தை நஞ்சையாக்கும் திட்டம்; மலையைக் குடைந்து மந்தகாச ஏரி காணும் திட்டம்’ என்று ஏதேதோ ஏட்டுத் திட்டங்களைக் கண்டு கண்டு களிப்பதுமாகக் காலந்தள்ளுகிறார்!

ஊழலோ நாற்றமடிக்கிறது! ஊரார் ஊழைத்து, வாயைக் கட்டி, வயிற்றைக்கட்டி மிச்சப்படுத்தித் தரும் வரிப்பணமோ பாழாக்கப்படுகிறது!

இப்படியும் ஒரு ஊழலாட்சி இருக்கலாமா’ என்று கேட்டாலோ, நம்ம நேரு ஆட்சியையா கண்டிப்பது, என்று சொந்தம் பேசி, மக்களை அடக்கி விடுகிறார்கள், காங்கிரஸ் மகானுபாவர்கள்!

வேற்றான் ஆட்சியிலாகட்டும்; நீதிக் கட்சி ஆட்சியிலாகட்டும் - இன்று வெளியே வெடித்துக்கொண்டு வந்துள்ள ஊழலிலே ஆயிரத்திலொன்று நடைபெற்றிருந்தாலும், எத்தனை எத்தனை தேசீய வீரர்கள் எவ்வளவு இடி முழக்க மிட்டிருப்பர்! - கண்டனம் எவ்வளவு கிளம்பியிருந்திருக்கும் - என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வளவு ஊழல் நடைபெற்று வருகிறதே - எப்படி ஒழிப்பது, என்று கவலைப்படாமல், டில்லி அமைச்சர்கள், ஊழலைக் கண்டுபிடித்துக் கூறியவர்கள் மீது காய்கின்றனர்.

“நிங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அதிகமான ஊழல் ஏதும நடைபெறவிடவில்லை, என்று வாதாடுகிறார்கள்.

தெரியாமல் சில பிழைகள் நேரிட்டு விட்டிருக்கலாம், என்று சமாதானம் பேசுகிறார்கள்.

பொது மக்களுக்குக் கணக்களிக்கும் புனிதத்தன்மையைத் துச்சமென்று எண்ணி, ஊழலை அம்பலப்படுத்துபவர்களை ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று பேசுகிறார்கள்; ஏசுகிறார்கள்!

பொது மக்கள் பணத்தைச் சூறையாடும் போக்கு மக்களாட்சியிலே மலிந்து விட்டால் உலகம் இந்த நாட்டை மதிக்கவா செய்யும்?

முடிதரித்து கோலாகலமாக வாழ்ந்துவந்த பரூக் மன்னனை, எகிப்தை விட்டு விரட்டியடிதற்குக் காரணம் அவன் ஆட்சியிலே அதிகாரத்திலிருந்தோர் நடத்திய ஊழல் தானே!

புரட்சித் தீயிலே புடம் போட்டு எடுக்கப்பட்ட சிகப்புக் சீனாவில், சியாங் ஆட்சியிலே கிளம்பிய ஊழல் நாற்றம் தானே, உலகு கண்டு எள்ளி நகையாடச் செய்தது!

எதேச்சாதிகாரிகளின் வீழ்ச்சிக்கு, தத்துவ விளக்கத்தால் ஏற்படும் மக்கள் மன எழுச்சியை விட, அதிகாரவர்க்கம் நடத்தும் ஊழல்தானே முக்கியமானகாரணமாக அமைந்திருக்கிறது!

இந்த வரலாற்று உண்மைகளையும் மறந்து, டில்லி துரைத்தனம் தொடர்ந்து ஊழல்கள் கிளம்புவதற்கு இடமளித்து வருவது, தற்கொலையைத் தேடிக்கொள்வதாகும்!

இத்தகைய ஊழலைக் கண்டிக்க பொதுமக்கள் கிளர்ந்தெழவேண்டும்!

மக்களின் பணம் பாழாகிறது; மமதையாளர் கொழுக்கின்றனர்; மக்களாட்சியின் மாண்பு மண்ணாக்கப்படுகிறது ‘நமக்கென்ன’ என்று இருந்தால், மேலும் மேலும் ஊழல் பெருகும்!

எவ்வளவு துணிவு இருந்தால், பொது மக்களை எவ்வளவு துச்சமென்று கருதினால் - ஊழலை ஒழிக்கவும், அதை நடத்திய உலுத்தரைக் கண்டுபிடித்துத் தண்டிக்கவும் கடமைப்பட அமைச்சர்கள் - துளியும் வெட்கப்படாமல், வேதனையடையாமல், சமாதானம் பேசுவர்!

ஒன்றா, இரண்டா ஊழல்? ஓராயிரம் - ஈராயிரமா இதனால் பாழான பணம்? கோடிக்கக்கில் கொள்ளை போகிறது; “பார்ப்போம், கவனிப்போம்; பதறவேண்டாம், என்றா அமைச்சர்கள் பேசுவது?

உலகிலே ஒரு நாடு பாக்கியில்லாமல் - அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் - சென்று வந்தவண்ணமிருக்கிறார், நேரு பய்டிதரின் செல்வத் தம்பி, போன்றார், கிருஷ்ணமேனன்! அவருடைய நிர்வாகத் திறமைக் குறைவு எவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டிருக்கிறது?

மீசை அரும்பிய நாளிலிருந்து நரை கிளம்பும் நாள் வரையிலே இலண்டனில் வாசம் இவருக்கு; இப்படிப்பட்டவர், 27-ரூபாய் முலதனமளள ஒரு வெள்ளைக் கம்பெனிக்கு, 2,26,000-ரூபாயை முன்பணமாகக் கொட்டிக்

கொடுத்தார் -மாளிகை வாங்கித் தர-சர்க்காருக்காக!!

எவ்வளவு பொறுப்பற்றதனம் இது?

27-ரூபாய் மூலதனம்!

2,26,000 முன் பணம்!!

பொதுமக்கள் பணத்தை இப்படி அள்ளித்தரும் ஒரு அளிவாளி இருப்பது தெரிந்தால், மூடிச்சவிழ்ப்போனெல்லாம் மூலைக்குமூலை, கம்பெனிகளை வைத்துக் கொள்வானே!

இவ்வளவு பெரும் பணத்தை முன்பணமாகத் தருவது என்றால் அந்தக்கம்பெனியுடைய தராதரம் என்ன? நடத்து பவனுடைய வரலாறு யாது? நாயணம் இருக்குமா? நம்பிக்கை வைக்கலாமா? - என்று எவ்வளவு யோசித்திருக்க வேண்டும்!

இந்த மேனன் - இலண்டனிலே இத்தனை ஆண்டுகளாக இருப்பவர் - இந்தத் தகவல் கூடவா தெரிந்து கொள்ள முடியாது!

கொட்டிக் கொடுத்தார் பணத்தை - எவனோ எத்தன் ஏப்பம் விட்டான் - இளித்த வாயனாகிறது இந்திய சர்க்கார்!

பணம் யாருடையது? மேனன் பேழையிலா - அலகாபாத் சுரங்கத்திலா - மக்களுடைய வியர்வையில் இருந்தல்லவா இந்தப்பணம் எடுக்கப்பட்டது?

எவ்வளவு பொறுப்பற்ற காரியம் நடைபெற்றது? இதைச் செய்தவர் ஏதாவது வருத்தப்பட்டாரா? வெட்கப்பட்டாரா? இல்லையே!

“ஊழலைச் செய் பதவி உயரும்”, என்பது டில்லி துரைத்தனத்துக்கு இப்போது கிடைத்துள்ள “நல்வழி’ போலல்லவா தெரிகிறது!

உபயோகமற்ற டிராக்டர்வாங்கி ஒரு கோடி பாழாயிற்று! - எந்த அதிகாரி இதற்குக் காரணம் - என்ன தண்டனை தருவது - என்று கொதித்து எழவில்லையே டில்லி!

“புதிய துறையில் அனுபவம் பெற வேண்டுமானால் சிறிது கஷ்ட நஷ்டங்களை அடைந்துதானாக வேண்டும்,” என்றல்லவா மாதிரி பேசுகிறார்!

“ஆயிரம்பேரைக் கொன்றால் அரை வைத்தியன்,’ என்பார்கள்; அது போல, கோடிகோடியாகப் பணம் பாழானால்தான், நிர்வாகத் துறையிலே அனுபவம் கிடைக்குமாம்! எவ்வளவு ஆணவம் ததும்பும் பேச்சு!

காரணம் என்ன, இப்படி கனம்கள் பேசுவதற்கு?

பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி போதுமான அளவுக்கு, தக்க சமயத்தில், தகுந்த முறையில் எழவில்லை! எதனாலேயே, ‘கேட்பார் இல்லை,’ என்ற எண்ணம் பிறந்து விட்டது!

ஊழல்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும் - ஊழலை ஒழிக்கும் திறமையற்றவர்கள் பதவியைவிட்டு விரட்டப்பட வேண்டும்!

பொதுமக்கள் - கட்சி பேதமற்று - கூடித் தமது கண்டனத்தை, எச்சரிக்கையைத் தெரிவித்தாலொழிய, நாடு, கண்மூடி தர்பாரில் சிக்கிய கதியையே அடையும்!

ஊழல் நாற்றமடிக்கிறது; உலகு சிரிக்கிறது; பணம் பாழாகிறது; மக்களாட்சியின் தரம் குறைகிறது; பொது மக்கள் எழ வேண்டும் - பொறுப்பை உணர மறுக்கும் போக்கினரைப் பதவியிலிருந்து விரட்ட வேண்டும்.

நஜீப் கிளம்பா முன்பு பரூக் கொட்டமடிக்கத்தான் செய்வான்!

மாசே-துங் தோன்றா முன்பு சியாங் சீரழிவு இருக்கத் தான் செய்யும்!

மத்திய டிராக்டர் ஸ்தாபனத்தின் மீது சுமத்திய குற்றச் சாட்டுகளுக்கு மக்கள் சபையில் பதிலளித்துப் பேசிய விவசாய மந்திரி “புதிய துறையில் அனுபவம் பெறவேண்டுமானால் சிறிது கஷ்ட நஷ்டங்களை அடைந்து தானாகவேண்டும்” என்று சமாதானம் சொல்லுகிறார்.

“இந்தப் பதில் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறதேயல்லாமல் சர்க்கார் எனும் போதுச் சொத்தை நிர்வாகிக்கும் ஒரு பொறுப்புள்ள மந்திரியின் பேச்சாக இல்லை.” என்று “நவ இந்தியா’ எனும் இதழ் எழுதிற்று. வேறுபல இதழ்களும் நிர்வாக ஊழல்களைக் கண்டித்துள்ளன.

‘அமைச்சர் சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகிறார்’ என்று கூறுகூது சரியல்ல; அவரும், அவர் போன்ற காங்கிரஸ் தலைவர்களும், இன்னமும் மக்களைச் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்பவர்கள் என்று நம்பித்தான், இவ்விதம் நடந்து கொள்ளுகிறார்கள்.

ஊழல் நாற்றமடித்து மக்கள் கோபித்தால், “தேசீயத் தின்பண்டம்” கொடுத்து சமாதானப்படுத்தி விடலாம் என்ற தைரியம் இன்னமும் அவர்ளுக்கு இருக்கிறது!

மக்க மருந்து மது குடித்த காவலாளி மயங்கிக் கீழே வீழ்வதுபோல “தேசீயத் தின்பண்டம்’ உண்டமக்கள் சொக்கி விழுந்துவிடுவர் -என்ற தைரியம் இருக்கிறது, ஆளவந்தார்களுக்கு! அதனாலேயே தைரியம் இருக்கிறது, ஆளவந்தார்களுக்கு! அதனாலேயே அமைச்சரும் பொறுப்பற்றுப் பேசுகிறார்!
***

“அவருடைய கண்கள் அவ்வப்போது ஒளிவிடுகின்றன! எனினும், தூக்கத்தை இழக்கவேண்டிய அளவுக்கு வேலை செய்வதால் ஏற்படக்கூடய சோர்வும் முகத்திலே தெரிகிறது. வேலைசெய்கையிலே மிகுந்த சுறுசுறுப்பு உள்ளவராகக் காணப்படுகிறார். எனினும், வயது அறுபத்தி மூன்று ஆகிறது!”

“வயது அறுபத்து மூன்று என்றாலும், வேலைசெய்யும் ஆற்றல் குன்றாதிருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமோ! ஒவ்வொரு நாளும், காலையிலே கண்விழித்ததும், அவர் தலைகீழாக நிற்கிறார் - சிரசாசனம் என்று அதற்குப் பெயராம்! அததுõன் அவருடைய குன்றாத சக்திக்குக் காரணமாம்”

இவ்விதமாக, பண்டித நேருவைப் புகழ்ந்து, ‘நியூஸ் விக்’ என்ற அமெரிக்கப் பத்திரிகை, கட்டுரை தீட்டி இருக்கிறது.

அமெரிக்கப்பத்திரிகைகள் இதுபோல ஓவியங்கள் தீட்டுவதற்குக் காரணம், அமெரிக்க சர்க்கார் ஒவ்வோர் நாட்டுலேயும் தங்களுக்கு ஒரு “உறுதுணை’ தேடுகிறார்கள் - அந்த நாட்டிலேன மக்கள் மனதிலே இடம் பெற்றிருப்பவரும், வீரதீரச் செயலாற்றியவர் எனும் விருது பெற்றவருமான ஒருவர் கிடைத்தால், அமெரிக்க சர்க்கார் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் - பாராட்டுகிறார்கள் - நட்பு கோருகிறாக்õள் - உலக மன்றங்களிலே உலவ அன்பழைப்புத்தருகிறார்கள். அப்படி அவர்கள் “நண்பர்களை’ப் பெறுவதிலே பொருளும் பயனும் மிகுதியும் இருக்கிறது.

கண்ணழகை என்னென்பேன்! முல்லைச் சிரிப்பை எங்ஙனம் புகழ்வேன்! துடியிடை துவள்வது காணத்தக்க காட்சியன்றோ!! என்றெல்லாம் புகழ்பவன், காதலுக்காகவும் இருக்கலாம் - ஓவியந்தீட்ட ஒரு உயிரோவியத்தின் துணைதேடும் காரணமாகவும் இருக்கலாம், வெறும் நாடகமாகவும் இருக்கலாமல்லவா! அதுபோலவே, ஒரு நாட்டுத் தலைவரை மற்றோர் நாட்டார் புகழ்கிறார்கள், வரவேற்கிறார்கள், என்றால், காரணம் பல இருக்கக்கூடும் - காரணம் எது என்பதைப் பொறுத்தே அந்த நட்பின் பொருளும், தன்மையும் விளங்கும். இவ்வளவு பாராட்டுகிறார்களே, என்று பூரித்துப்போனால், உண்மை சில மறைந்துபோகும், பொய்மான் வேட்டையாடிய கதையாக முடியும்.