அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நாட்டின் நாயகர்கள்
3

அமெரிக்கா, வெளிநாட்டு நிலைமையைப்பற்றி அக்கரையற்று, இருந்த காலம் ஒன்றிருந்தது. போர் மூளட்டும், பகை நெளியட்டும், படுகொலை எழட்டும், வல்லருகளுக்குள் போட்டியும் பூசலும் கிளம்பட்டும், அமெரிக்கா நமக்கென்ன என்று இருந்துவந்ததுண்டு. ஆகியவைப் பற்றிய சிந்தனை அற்று மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள் பற்றிய அக்கரையுமற்று இருந்துவந்தது. அந்தப் போக்கே அமெரிக்காவின் நல்வாழ்வுக்கு ஏற்றது, என்ற கருத்து, செல்வாக்குப் பெற்றிருந்தது. ஐரோப்பிய நாடுகளிலே ஏற்படும் பிரச்னைகளிலே, தலையிட மறுத்து, அதனையே தனது தலையாய கொள்கையாகக் கொண்டிருந்தது. மன்றோகொள்கைத் திட்டம் - என்று இதனைக் கூறுவர்.

திடீரென, இந்தப் போக்கை அமெரிக்கா மாற்றிக் கொண்டது - நிலைமை மாறியதால். எங்கு எது நடந்தால் நமக்கென்ன, நாமுண்டு, நமது நாடு உண்டு, என்று இருந்து வந்த அமெரிக்கா, இன்று, கிரேக்க நாட்டுத் தேர்தலிலும், இத்தாலிய அரசியல் கட்சிப் பூசலிலும், பிலிப்பைன் தீவுப் பிரச்சனையிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நிலைமையிலும், அக்கரை காட்டுவதும், அன்புரை வழங்குவதும், உதவி அளிப்பதும், கடன் கொடுப்பதும், தொழில் வளத்தைப் பெருக்குவதற்கு நிபுணர்கள் அனுப்புவதும், நோய் போக மருந்தளிப்பதுமாக, இருக்கிறது. எந்த நாட்டிலும் இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கு முன்பு இருந்ததைவிட, மிக மிக அதிகமான அளவிலும், பலவகையான துறைகளிலும், அமெரிக்கர் இருப்பதைக் காணலாம்.

அமெரிக்க சர்க்காருக்கு இன்று, அமெரிக்காவைப் பற்றித் தெரிந்திருக்கும் தகவல்களைவிடத் தெளிவாகவும், அதிகமாகவும் பிற நாடுகளைப்பற்றித் தெரியும்.

உலகிலே, எந்தெந்த நாடுகளிலே துறைமுகங்கள் உள்ளன - அவைகளிலே தரம் என்ன? அமெரிக்கா நன்றாக அறியும். உலகிலே எங்கெங்கு என்னென்ன வகையான புதைபொருள் கிடைக்கும் - அவைகளைப் பெறத் திட்டம் யாது? அமெரிக்காவுக்குத் தெரியும். எங்கெங்கு எண்ணெய்க் கிணறுகள் உள்ளன! அமெரிக்காவிடம் புள்ளி விவரம் தெளிவாக இருக்கிறது.

இவ்வளவு அதிகமாகப் பிற நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியும், பிற நாட்டுப் பிரச்சினைகளிலே ஈடுபடும் திட்டமும், காரணமின்றி ஏற்பட்டதில் - ஆழ்ந்த பொருள் தொக்கித்தான் இருக்கறிது இந்தப் புதுப் போக்கிலே.

புதுப் போக்கிலே ஒரு பகுதிதான், புகழுரை வழங்கி, பிறாட்டுத் தலைவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதும்! எனவே, நேருவிடம் அமெரிக்கா காட்டும் பரிவுக்கும் சொரியும் புகழுரைக்கும், காரணம் இருக்கத்தான் செய்கிறது.

ஒதுங்கி வாழ்ந்துவந்த அமெரிக்கா, உலகிலேயே அதிக செல்வம் கொழிக்கும் நாடாக மலர்ந்தது - அதேபோது மாநிலத்தின் மகத்தான மற்றோர் சக்தியும் மலர்ந்தது - சோவியத் ரஷியா.
முதலாளித்துவக் கோட்டையாக அமெரிக்கா வளர்ந்தது - பாட்டாளிகளின் பாசறை, ரஷியாவிலே அமைக்கப்பட்டது.

அமெரிக்கவுக்கு அச்சம் பிறந்தது.ரஷியாவுக்குச் சந்தேகமும், சஞ்சலமும், அச்சமும் தோன்றிற்று
.
ஒன்றுக்கொன்று, நேர்மாறான முறைகள்; அமெரிக்காவில் தனிப்பட்ட முதலாளிகளிடமே எல்லாத் தொழில்களும்; எல்லாத் தொழில்களும் இலாபத்துக்கே; எல்லா இன்பமும் பணக்காரர் ஏழை என்ற பேதத்தை வளர்க்கவே - இம்முறையில் அமெரிக்கா வளர்ந்துவிட்டது.

எல்லாத் தொழில்களும் சர்க்காருக்கே - எல்லாத் தொழில்

களும் மக்களின் உபயோகத்துக்கான பண்ட உற்பத்திக்கே - எல்லா முறைகளும், இல்லாமையை ஒழித்து, மக்களை வாழ வைக்கவே - என்ற வகையிலே சோவியத் உருவெடுத்தது.
ஒன்றை ஒன்று பார்த்துப் பார்த்து, பகைத்துக்கொள்வதும், ஒன்றுக்கு எதிராக மற்றொன்று அரண் அமைப்பதும், ஆயுதம் குவிப்பதும், உத்தி சேர்ப்பதும், மிகுந்திடலாயிற்று, இடையே ஹிட்லர் நின்றான் - எனவே மோதுதல், இந்த இரு பெரும் முறைகளுக்கும் ஏற்படுவது, தவிர்க்கப்பட்டது.
தவிர்க்கப்பட்ட மோதுதல், அடியோடு தவிர்க்கப்பட்டு விடவில்லை. நாசீசம் கல்லறை சென்றதும், கல்லறைக்குப் பக்கதிலேயே, ஒரு புறம் சோவியத் பாசறையும், மற்றோர் புறம் அமெரிக்கப் பாசறையும் அமைந்துவிட்டது.

இந்த நிலையிலேதான், அமெரிக்கா நண்பர்களை நாடுகிறது, அவர்களுக்குப் புகழ் மாலை சூட்டுகிறது, “புண்யனேவா! புஜ்யரேவருக! புனிதாவருக! புதுயுகத் தலைவா, வருக! என்றுகூட அர்ச்சிக்கிறது.

\\\சோவித்தின் முறையிலே அடிப்படைத் திட்டமான, பணக்காரன் ஏழை எனும் பேதத்தை ஒழித்திடும் திட்டம், பரவி எங்கும் வரவேற்கப்பட்டு விட்டால், அமெரிக்க முறை “சடசடெனச் சரிந்தது பார்” என்று ஆகிவிடும்.

அமெரிக்காவின் இந்தப் போக்கினால், முதலாளித்துவ முகாமுக்குப் பலம் குவிந்து விட்டால், பொன்னே போல் போற்றிவளர்த்த, கண்ணீரையும், செந்நீரையும் கொட்டி வளர்த்த புதுமுறை பாழ்பட்டுவிடுமே, என்று ரஷியா அச்சம் கொள்கிறது.

இருநாடுகளும் ‘நண்பர்களை’ நாடுவது, என்று திட்டமிட்ட வேலை செய்கின்றன.

இதிலே, விடுதலைப் போர் நடத்திச் செல்லும், வாய்ப்புப் பெற்றுள்ள, நேரு அவருடைய முன்னாள் பேச்சு, மனப்போக்கு, அவர் பெற்ற பயிற்சி, பண்பு, இவைகளை நோக்கும்போது, சோவித்தின் தோழனாவார் என்றே அரசியர் வட்டாரம் நம்பிற்று. பெய்சீபூர் காங்கிரசிலே அவர் ஆற்றியதலைமை உரை, இளம் உள்ளவர்களை எழுச்சிக்கடலிலே ஆழ்த்திற்று. ரஷியாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவே பேரரசாக மலரும், என்று எண்ணினர் - நம்பினர்.

ஆனால், நேரு, நம்பினவர்களை ஏமாற்விட்டார்.

பெய்சிபூர் விட்டு நிண்டதூரம், விலகிவிட்டார் - உலகிலே மகத்தானதோர் சம்பவத்தை உண்டாக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார் - சீன நாட்டு மாசே - துங்குக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

பெய்சிபூர் நேருவாக இருந்தபோது, ஏறெடுத்துப் பார்க்கவில்லை, அமெரிக்கா - நினைவிலிருக்க வேண்டும்!

பெய்சிபூரிலிந்து நோக்கத்தை நீக்கிவிட்டு, பொது உடைமைத் திட்டத்தைக் கண்டிக்கவும் கேலி பேசவுமான நிலைக்கு உயர்ன்த (!!) பிறகே, அமெரிக்கா அவரைப் புகழலாயிற்று.
இதோ கிடைத்தார் ஒர தலைவர்! எண்ணற்ற உள்ளங்களிலே இவர் உருவம் பதிந்திருக்கிறது! எத்தனை கோடி டாலர் வேண்டுமானாலும் இவரை நம்பிப் போட்டுவைக்கலாம். சோவியத்துக்கு எதிராகத் தளம் கிடைக்கும் - அந்தத்தளத்துக்கு நாம் அமைத்துத் தரும் அரண்களைவிடப் பலமான அரணாக, நாட்டுவிடுதலைப் போõமூலம் அவரக்கிடைத்த புகழ் விளங்கும் - என்று அமெரிக்கா கணக்கிட்டுக் காரியத்தைச் செய்து வருகிறது.
கோடி கோடியான மக்களின் காவலன், குழந்தை அறியும், கிழவரும் அறிவர் அவரை. அவர் கூட்டம், திருவிழா பேச்சு பாசுரம்; எதிர்ப்பு, அவர் முன் தலைகாட்டாது; எங்கும் அவருக்குச் செல்வாக்கு என்று நம்புவதாலாயே அமெரிக்கா, அவருடைய உறவை இவ்வளவு அதிகமாகப் பெறமுனைந்தது.

உலகுக்கு காட்ட வேண்டும், சோவியத் உணரவேண்டும், எவ்வளவு பெரிய நாடு, இந்தியா; அதன் இணையில்லாத் தலைவர், எமது பக்கம் பாராய்!! - என்று கூறிக் கொள்ள விரும்புகிறது.
***

பண்டித நேரு, முதலாளித்துவத்தின் பாதுகாவலனாக விளங்கும் அமெரிக்காவுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதைற்காகவே “நீயூஸ்விக்’ போன்ற ஏடுகள் புகழுரை தீட்டுகின்றன. நேருவின் ஆட்சி, டால்மியாக்களையும், பஜாஜ், பிர்லாக்களையம் நிலத்திமிலங்களையும் அபயமளித்து ஆதரிக்கிறது. புரட்சிப்பாதையிலே செல்பவர் யாரும் இத்தகைய சமூக விரோதிகளை ஒழித்துக்கட்டுவதையே முதல் வேலையாக, முக்கிய பணியாகக் கொள்வர். புரட்சி, வார்த்தை அளவிலே பூத்துத் குலுங்கிய நேரத்திலே, நேர கூடச் சொன்னார்: கள்ளமார்க்கேட்காரார்களைப் பிடித்துக் கழுமரமேற்றுவேன் - கழுமரம் அமைக்க முடியாவிட்டால், விளக்குக் கம்பங்களிலே அவர்களைக் கட்டித் தொங்கவிடுவேன்” என்று பேசினார். இளைஞர்கள் முழக்கமிட்டனர் மகிழ்ந்து! பொது மக்கள் புன்னகை புரிந்தனர், புதுவாழ்வு கிடைக்கப் போகிறது என்ற இன்ப உணர்ச்சியால்! நேரு அரசாளவன்தார் - வணிகக் கோமான்கள், துவக்கத்திலே, தொலைவிலே நின்றனர், சிறிதளவு அச்சத்தோடு. நெறித்த புருவம்கீழே இறங்கிற்று - எள்ளும் கொள்ளும் வெடிக்குமோ என்றபடி இருந்த முகம், மலர்ந்தது - நேரு, அவர்களைப்பார்த்து அரும்பு நகைகாட்டினார் - அவர்கள், ஆடினர், பாடினர், ஆனந்தமாக! ஓடினர், நேரு முன்னம் மாலைகளைச் சுமந்துகொண்டு! சுதந்திரச் சுடரே வருக! தூயசுடரே வருக! காந்தியின் வழித்தோன்றலே வருக! என்று அர்ச்சித்தினர் - அவர் சொக்கினார். கழுமரமல்லை! கட்டுகாவல், கண்காணிப்பு இல்லை! கண்டனம் கிளம்பவில்லை! கனிவுரை தரலானார் நேரு!

அமெரிக்கா இந்தக் காட்சியைக் கண்டது - கண்டோம் இதோ ஒரு நண்பரை என்று கொண்டாடலாயிற்று.

ஏகாதிபத்யப் பிடியிலிருந்து விலகியதும், நாட்டுச் செல்வத்தைச் சுருண்டிடும் சுகபோகிகளின் கோட்டம் அடக்கப் பட்டுவிடும், பெரம்பொருள் இலாபமாகக் கிடைக்கத் தக்க, மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதவைகளான தொழில்களை, சாதனங்களை சர்க்கார் மேற்கொள்ளும் என்று மக்கள் கருதினர் - அங்கனம் தான் நேரு செய்வார், என்று அவருடைய பெய்சிபூர் பேச்சைப்படித்த அமெரிக்கர் எண்ணினர். ஆனால் அரியாசனம் ஏறியதும், புடை சூழ ‘முதலாளிகள்’ நிற்பதையும், அவர்கள் தந்த புதுமுகமன் கண்டு நேரு பூரித்துப்போனதையும் கண்டு, அமெரிக்கா கழிபேரு வகை கொண்டது. நேரு, தொழில்களை தேசிய மயமாக்கப் போவது இல்லை - சர்க்காரின் திட்டம் இப்போதைக்கு இது அல்ல - நோக்கம் இருப்பினும், நிறைவேற்ற இதுதக்க தருமும் அல்ல - அதற்குத் தேவையான, ஆட் கட்டும் பணவளமும் இல்லை - என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார் - அமெரிக்கா துள்ளிக்குதித்தது ஆனந்தங்கொண்டு!
புகழுரைகள் பிறகுதான் கிளம்பின!
யாரிடமிருந்து புரட்சிக்கனல் வீசும் என்று எதிர்பார்த்திருந்தார்களோ அவரிடமிருந்து, முதலாளித்துவத்துக்கு அபயமளிக்கும் பேச்சு கிளம்பியதும், “இதல்லவா பெரும் போக்கு! இவர் இப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், வீணாகத் திகிலடைந்தோமே, குழப்பமடைந்தோமே, எண்ணே மதியீனம்!” என்று எண்ணினார் - அமெரிக்கர்கள்; நேருவின் திருப்புகழ் பாடலாயினர்.

எனவே புகழுரையின் பொருள், நேரு எங்களுக்கு வேண்டியவராகிவிட்டார் என்பதுதான்.

ஆனால்...! ஆம், மீண்டும் மீண்டும், அந்த ஆனால் என்பதைக்குறித்துக் காங்கிரஸ் நண்பர்கள் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டும்.

அமெரிக்கா, இதுபோல, யாராரை ஆதரித்தது, புகழ் பாடிற்று - அதன் விளைவு என்ன?

இன்று நேருவைப் புகழ்வதைப்போல, வரவேற்று உபசரிப்பதைப்போலத்தானே, அன்று சியாங்-கை-ஷேக்கை வரவேற்றது, இதே அமேரிக்க சர்க்கார் - நினைவிருக்கிறதா!

சியாங்-புரட்சிப்பாதையை விட்டு விலக விலக, அமெரிக்கப் புகழுரையின் அளவு வளர்ந்தது. புரட்சிச் சக்தியை எதிர்க்க சியாங் துணிந்ததும், அமெரிக்கா அழையாமல் நுழைந்து, டாலர்மழை பொழிந்தது. ஏழை மக்களை ஏங்கச் செய்துவிட்டு, சீமான்களுடன் சியாங் குலவத் தொடங்கினார். அமெரிக்கா, சியாங்கின் தேசபக்தி பற்றிய சிந்து பாடிற்று. மாசேதுங்கையும் அவருடைய படை வீரர்களையும் சியாங் சித்ரவதைக்கு ஆளாக்கினார். அமெரிக்கா சியாங்கின் விரத்தை விருத்தமாக்கிற்று - கதையின் முடிவு காங்கிரசுக்குத் தொயும் - மன்னிக்க வேண்டும் நண்பர்கள் - கதையின் இறுதிக் கட்டம், பார்மோசா!

சியாங்கை மட்டுமா? சீறும் நரிக்குட்டி என்று, இன்று இகழப்படும் சிங்மன் ரீயே, அமெரிக்க இதழ்களில், சிங்கக் குட்டி என்று சித்தரிக்கப்பட வில்லையா!!

நேருவின் நிலைமையும் அதுபோலாகவேண்டும் என்ற கெடுமதிகொண்டு சுடுசொல் கூறுவதாகக் கருதவேண்டாம் - அமெரிக்காவின் புகழுரை, உள்ளத்திலே இருந்து விளைவதல்ல - நல்லதும் அந்தப் புகழுரையாலே விளைவதில்லை - குஷ்டரோகி தொட்ட வெண்ணெய் போன்றது, அமெரிக்கப் புகழுரை, என்பதை, விளக்கவே இதைக் கூறினோம்.

புகழுரை தரும் ‘நியூஸ் வீக்’ இதழும், “ஆனால்” என்ற ஆயாசம் தரும் பதத்தை உபயோகித்திருக்கிறத.

நேரு சுறுசுறுப்பானவர் -திடமான உடலமைப்பு, உடல்வளம் கெடாதிருக்கச் சிரசாசனமும் செய்கிõறர்; ஆனால் வயதோ அறுபத்திமூன்று; அவருக்கு அடுத்த தளத்திலேயும், தரத்திலேயும், உள்ள தலைவர் யார் என்பதற்கான குறியும் தென்படக் காணோம் என்று எழுதுகிறது.

என்ன பொருள் இதற்கு? நேரு உண்டாக்கி வைத்திருக்கும் நட்பு நீடித்திருக்க வேண்டுமே என்ற கவலை அமெரிக்காவைப் பிடித்தாட்டுகிறது. சீறிடும் சிங்கமென்று எண்ணினோம்; ஆனால், டாலர் தோட்டத்திலே துள்ளிவிளையாடும் புள்ளிமானானார் நேரு; அவருக்குப் பிறகு அரசோச் சுபவர்கள், எவ்வண்ணம் இருப்பரோ, போக்கு யாதாக இருக்குமோ, இவருக்கு இருப்பது போன்ற செல்வாக்கு அவர்களுக்கு இருக்குமோ, என்பது பற்றி எல்லாம் அமெரிக்கருக்கு இப்போதிருந்தே கவலையும், அச்சமும் பிறந்துவிட்டது. அதனால்தான் ‘நியூஸ் வீக்’ ‘ஆனால்’... என்று கூறி ஆயாசப்படுகிறது.

ஒன்று, யாரும் தயங்காமல் கூறுவர் - நேர, அமெரிக்கா தரும் புகழுரைகளையும், நேசத்தையும் தமது சொந்த இலாபத்துக்காகப் பயன்படத்தமாட்டார்.

ஆனால், அவருடைய ‘வாரிசு’ யார் என்று தெரியவில்லை. யாராக இருப்பினும் - காங்கிரஸ் வட்டாரத்திலே துருவித் துருவிப் பார்த்தாலும், அமெரிக்காவிலே, சொந்த இலாபம் தேடுபவர்
களாகவே கிளம்புவார்கள் என்று முன்கூட்டியே கூறிவிடலாம்.


மற்றும் ஒன்று; நேரு, மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை அறிந்திருக்கிறார் - எனவே, அமெரிக்காவிடம் சொக்கிப்போயுள்ள இந்த நிலையிலும், தலைகுனியாமல், நிமிர்ந்து நின்று பேசமுடிகிறது. ஆனால் “பிறகு வருபவர்’ யாராக இருப்
பினும், அமெரிக்க அடிமையாகிவிட போட்டி போட்டிக்கொண்டு, ஓடுவர்! ‘நீயுஸ் வீக்’ கிளப்பிய ஆயாசத்தின் பொருளை ஆராயும்போது, நமக்கு இந்த உண்மை புலனாகாமற் போகாது - நமக்குமட்டுமல்ல - காங்கிரசாருக்கும் விளங்கும்.


‘நியூஸ் விக்’ குறிப்பிடுவதுபோல், நேருவுக்கு வயது 63-ஓயாது இன்னமும் உழைக்கிறார் - மேலும் பல ஆண்டுகள் அவர் சேவை கிடைக்குமென்று நம்புவதுதான் முறைஎனினும், அவருக்குப் பிறகு என்ற தொடøரை, மறப்பது நல்லதல்ல!
அவர் இன்று மேற்கொள்ளும் காரியங்கள், ஏற்படுத்தி வைக்கும் தொடர்புகள், வகுத்துத் தரும் முறைகள், தீட்டிக் காட்டும் திட்டங்கள் எல்லாம் பிற்காலத்திலே என்ன விளைவுகளைத் தரக்கூடும். அவைகளைச் சமாளிக்கத்தக்க தலைவர்கள் இருக்கிறார்ளா என்பதை என்பதை எண்ணிப் பார்த்தேசெய்யப்பட வேண்டும். தலைகீழாக நடந்து செல்லும் சர்க்கஸ்காரன், கொட்டகைக்கு வெளியே காலால்தான் நடந்ததாக வேண்டும். அதுபோலவேதான், பரபரப்பு ஊட்டத்தக்க சூழ்நிலையின் காரணமாகப் பெருந் தலைவரான நேரு, இன்று செய்யும் செயல்களை, நாடு அமைதியான வாழ்விலே ஈடுபடும் நாட்களிலே, ஆளவருபவர்கள் செய்யமுடியாது!! எனவே, இதை மனதிலே கொண்டு, நேரு காரியமாற்ற வேண்டும். இந்த நோக்கம் அவருக்கு இருந்டீதால், மெள்ள மெள்ள, ஆனால் மிகச் சாமர்த்தியமாக, இந்திய பூபாகத்திலே இடம் பிடித்துக் கொள்ளும் அமெரிக்கவல்லரசுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது. பாம்புப்பிடாரன் கூடத் தன் மகனிடம், எச்சரிக்கையாக இருக்கும்படிச் சொல்வான் - நாட்டை ஆளும் வாய்ப்புப்பெற்ற நேரு, பாம்புப்பண்ணையையே இங்கு ஏற்படச் செய்துவிடுகிறார்! நேருக்கு புகழ்மாலை சூட்டி விட்டு, இந்தியாவின் பொருளாதாரக் குரல்வளையை டாலர் தேவதை அழுத்திப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இதை உணராமல், அமெரிகக உபசாரத்தைக் கண்டு உளம்பூரிப்பது நாட்டுக்குப் பெரியோர் கேட்டினைக் கூட்டிவருவதாக முடியும்.

அமெரிக்கப் புகழுரை நேருவையே, இப்போதே மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிõத்து வருகிறது. இப்போதே அவர், அமெரிக்கக் கோடீஸ்வரர்கள் போலவே குன்றேறிக் குதூகலிப்பதும், நாக நடனம் கண்டுகளிப்பதும் கூடச்சேர்ந்து ஆடுவதும், காட்டு மிருகங்களின் சேட்டைகளைக் காண்பதுமாக இருக்கத் தொடங்கி விட்டார். ஏழை அழுகிறான் - புதிய அணைக்கட்டுகளிலே பொங்கி வழியும் தண்ணீரைக் காட்டுகிறார்! தொழிலாளி தன் வேதனையைக் கூறுகிறான் - இவர் தன்னிடமுள்ள திட்டங்களை - மலிவான சர்க்கார் பிரசுரங்களை - படித்துப் பார்க்கச் சொல்லுகிறார்! புகழுரை, அவரை இப்போதே கெடுத்து வருகிறது.

அமெரிக்கப் புகழுரைக்குப் பிறகுதான் நேரு தன் முன் “எதிர்க்கட்சிகள்’ உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறார். புகழுரை வளர வளர, அவர் அதிலே மயங்க மயங்க, நாடு அவரை நம்பும் போக்கை மாற்றிக் கொள்ளும் - வரலாற்றிலே உள்ள எடுத்துக்காட்டுகளைக் கூறி காங்கிரஸ் நண்பர்களின் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை. புகழுரையின் பொருளை மட்டும் காங்கிரசார் சிந்தித்துப் பார்த்தால், நாம் கூறுவதைவிட அதிகத் தெளிவாக நிலைமை புரியும்.
***
ஆண்டு ஏழாகிவிட்டது; நாடு முன்னேற, பாதை எது என்பதும் கண்டுபிடிக்கப்பட வில்லை; வளம் காணும் முறையாது என்பது கண்டறியப்படவில்லை; வளம் எது என்று கூடப் பொருள் கண்டாரில்லை!

பொக்கைவாய்க் கிழவன், தனக்கு மீசை சுருள் சுருளாக இருந்தபோது, மயானகாண்டம், சுடலைகாத்து காட்சியில், ஊர் உருகப் பாடிய கூத்தினைப்பற்றி, கேட்போர் சலிக்குமளவு கூறிக்கொண்டிருப்பது போல, வாடும் மக்களிடம் சுயராஜ்யப் போர்பற்றிய பழங் கதையைப் பன்னிப் பன்னிப் பேசி, பஞ்சடைந்த கண்ணீனரை, புகழ்ப்பாயாசம் தரும்படி கேட்டவண்ணம் இருக்கிறார்கள்.

உலகிலே இவர்களைவிடக் குறைந்த அளவுக்கு பொது மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களெல்லாம், வியக்கத்தக்க மாறுதல்களை, வீரமும், தீரமும் கொண்ட முறையிலே செய்து காட்டி, மக்களை வாழ வைத்திருக்கிறார்கள்.

இவர்களோ, எம்மை நாட்டின் நாயகர்களாகப் பெற்றீர்களே, பெறற்கரிய பேறு பெற்றீர்! - என்று பேசுகிறார்கள்! பலன் என்ன - என்று கேட்பவர்களையோ ஏசுகிறார்கள்! நியாயந்தானா!

உண்மையான நாட்டின் நாயகர்கள், யார், என்பது புரிந்து கொள்ளப்பட்டால், விளக்கப்பபடுத்தப்பட்டு விட்டால், இப்போது நாட்டு நாயகர்களாக்கப்பட்டுள்ளவர்கள், இது போலாப்பேசி ஏசித் திரியமாட்டார்கள்.

மக்களே, உண்மையில் நாட்டின் நாயகர்கள்! இந்த அடிப்படை உண்மையை மக்கள் முழக்கமிட்டால் நான்நாட்டின் போலி நாயகர்கள் நல்லறிவு பெறுவர் - நல்லாட்சி கிடைக்கும்.
மக்கள் இன்று அதற்கான விழிப்புணர்ச்சி பெற்றுக் கொண்டுதான் வருகிறார்கள்; அந்த விழிப்புணர்ச்சி பெறச் செய்வதற்கு, நாமும் நமது அளவில், தொண்டாற்ற முடிகிறதே என்பதை எண்ணியே மகிழ்கிறோம் நாடு வாழ மக்கள் விழித்தெழ வேண்டும்!!
* * *

அதிர்ச்சிக்கு வைத்தியம் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது - மாணவனின் கண்களிலே நீர் குபுகுபுவெனக் கிளம்பிவழிகிறது - அவன் தாயார் அதைக் கவனிக்கவில்லை -- மாணவன் முகத்தை வேறு பக்கம் வைத்துக் கொண்டிருக்கிறான்.

கோவெனக் கதறவில்லை - ஆனால் விம்மலை அடியோடு அவனால்
அடக்க முடியவில்லை -- ரயில் ஓடும் சத்தத்தால் விம்மல் தாயாரின் செவியில் விழவில்லை.
வண்டியிலிருந்த வேறு சிலர், இந்தக் காட்சியைக் கண்டு விட்டார்கள் - ஏண்டா, தம்பீ! அழறே? - கேட்டும் விட்டார்கள்.

அலறலுடன் தாயார் கேட்கிறார்கள் - “ஏண்டா அழுகை?’!

விம்முகிறான் - பதில் இல்லை. கேள்வி, மறுபடி பதில், விம்மல்தான்.

“என்னடா நடந்தது? ஏன் அழுகிறே -- சொல்லித் தொலையேன்...” - கேள்வி, கடுமையாகிறது.

“ஒண்ணுமில்லே....” பதில், அழுகுரலில்.

கோபம் பிறந்துவிட்டது தாயாருக்கு -ஏண்டா! நாகப்பழம் தின்றதற்காக அடித்தேனே, அதற்காகவா அழறே? என்று ஆராய்ச்சித் திறத்துடன் கேட்கிறார்கள். ஆமாம் என்கிறான் மகன். அவன் பதில் கூறியதும், தாயாருக்கே தெரிகிறது, தான் கேட்ட கேள்வி அசட்டுத்தனமானது என்று. ஏனெனில், மகன், நாகப
பழம் தின்று அதற்காக அடிப்பட்டது, காலையில், 9 மணி சுமாருக்கு - அதற்காக பிற்பகல் 3 மணிக்கா, அழுவான் - ஓடும் ரயிலில்!

“டேய்! உண்மையைச் சொல், இன்னும் இரண்டு நாள் இங்கே இருக்கவேண்டும் என்று அழுகிறயா?”- கடுமையாகவே இருக்கிறது கேள்வி. ஆமாம் என்று அறிவிக்கிறான் தலை அசைப்பால்.

“மலைப் பிரதட்சணத்தின் போது, தலையிலே குட்டினேனே, அதை எண்ணிக்கொண்டா இப்ப, அழறே?” - வேறோர் கேள்வி பிறக்கிறது. ஆமாம் என்றே இதற்கும் பதில்!

வண்டியிலே உள்ளவர்கள் சிரிக்கிறார்கள் - கண்ணீர் நிற்கவில்லை.

“ஊருக்குப் போனாலும், நாளைக்கு, பள்ளிக்கூடம் போகவேணுமே, விளையாடுவதற்கு இல்லையே, என்று அழறியா?” - விபரீதமான கேள்வித்தான், ஆனால் இதற்கும், ‘ஆமாம்’ என்றே பதில் அளிக்கிறான் மகன்.

வேறு கேள்வி கேட்கும் பொறுமை, நீடிக்குமா, யாருக்கேனும்! எனவே கேள்விகள் நின்றுவிட்டன, மிரட்டல் பிறந்தது - கண்ணீர் மட்டும் நிற்கவில்லை!

வெள்ளி, சனி, ஞாயிறு - மூன்று நாட்கள், உல்õசப் பயணம் போய் வருகிறார்கள், தாயும் மகனும், திருக்கழுக்குன்றம் என்ற ஊருக்கு - உல்லாசப் பயணம் என்ற நினைப்பும் பெயரும் இப்போது தரப்படுவது. அப்போது? திருவிழழவுக்குப் போனார்கள்.

திருவிழாவிலே வேடிக்கை, மலைப் பிரதட்சணத்திலே மகிழ்ச்சி, புதிய விளையாட்டுச் சாமான்கள் வாங்கியதிலே திருப்தி-எல்லாம் குறைவற! எனினும், அவன் அழுகிறான், காரணம் கூறவுமில்லை.

எப்போதோ அடித்ததற்கும், இப்போது அழுவதா! - மாடுகள் அசை போடும் உண்வை - மாணவன் துக்கத்தை அசை போடுகிறனே!

வியப்பு, வண்டியிலிருந்தவர்களுக்கு - கோபம், தாயாருக்கு! மகனுடைய கையைப் பிடித்து இழுத்தபடி, “என்னடா நாலு நாழியா நான் கத்துக்கத்துன்னு கத்தறேன்...” என்று கூறி முடிப்பதற்குள், ‘ஐயயோ ...கையை விடு, விடுகையை, ஐயோ” என்று கையை உதறியபடி கதறுகிறான் மகன். விஷயயம் அப்போதுதான் தெரிகிறது - கை, கட்டை விரல், நசுங்கிப் போயிருக்கிறது - இரத்தமும் கசிகிறது, கோபம் பயற்துவிட்டது தாயாருக்கு- “அட கண்ணே! இதென்னடா?” என்று கேட்டு, கையைப் பதமாகப் பிடித்துப் பார்த்து பதறுகிறார்கள் - வண்டியிலே இருந்தவர்களும் சோகமாக “அடடே! அதான் பையன் அழுதுகிட்டு இருந்தான்” என்று கூறுகிறார்கள். “எப்படி விரல் நசுங்கி விட்டதடா அப்பா!” தாய் உள்ளம் பேசுகிறது! மகன், ரயில் வண்டிக் கதவைக் காட்டுகிறான் - விம்மலும் வெட்கமும் கலந்த நிலையில். “அட அசடா! கதவைச் சாத்தினபோது கை விரல் நசுங்கிவிட்டதா” தயார் கேட்கிறார்கள். “ஜாக்ரதை இருக்க வேணாமா, ஏண்டாப்பா, படிக்கிற பிள்ளைக்கு, ரயில் ரவண்டிக் கதவைச் சாத்தக் கூடவா தெரியாது” வண்டியிலே ஒருவர் கேலி செய்கிறார்.

“பையனுடைய பொறுமையை பார்த்தேளோ! மத்தை பையன்களா இருந்தா, இன்னேரம் “லபோதிபோ’ன்னு கூவிண்டன்னா இருக்கும்” ஒரு வைதீகர், வாத்சல்யமாகக் கூறுகிறார்.
“இப்படி ஒரு அசட்டுப் பிள்ளை இருக்குமா - சரி, சரி, காட்டுடடா விரலை” தாயார் கூறிவிட்டு, ஈரத்துணி கொண்டு விரலைத் துடைத்துக் காட்டுகிறார்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான் மாணவன்.

கட்டை விரல், ரயில் கதவின் இடுக்கிலே சிக்கிக் கொண்டது, தான் சாத்தும்போது என்பதை வெளியே சொல்ல வெட்கம் - அதேபோது கைவிரல் நசுங்கியதால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலை - எனவே கண்ணீர் - விம்மல்! என்ன காரணம் என்று கேட்டதற்கு, உண்மையைக் கூறினால் கேலி செய்வார்களே! என்ற கூச்சம்! எனவே ஏதேதோ நொண்டிச் சாக்குகளைக் காட்டினான் - நெடு நேரம் - கடைசியில் உண்மைக் காரணம் வெளிவந்து விட்டது.
கண்ணீர் நின்றது - ஆனால் முகத்திலேயோ அசடு வழிந்தது, அந்த மாணவனுக்கு.
***

அந்த மாணவன், வேறு யாருமல்ல, நானேதான்! ஆமாம்! நான் ஆறாவது வகுப்பு படிக்கும் மாணவனாக இருந்தபோது நேரிட்ட சம்பவம், மேலே குறித்திருப்பது. இந்தச் சம்பவம், ஒரு பெரிய அரசியல் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள சிக்கலை விளக்கமாக்க எனக்கு ஒதவும் என்று நான் எண்ணினதில்லை. ஆனால் இப்போது பண்டித. ஜவஹர்லால் நேருவுக்கும் காங்கிரஸ் நிர்வாகக் குழுவுக்கும் இடையே முளைத்துள்ள பிரச்சனையைக் கண்டு திகைப்பு ஏற்பட்டபோது, எனக்கு அந்தப் பழைய சம்பவம் நினைவுக்கு பேருதவியாக அமைந்தது. நேரு எங்கே, நான் எங்கே - நான் சமநிலை இருப்பதாக மனப்பால் குடிக்கிறேன் என்று எண்ணிக்கொண்டு, காங்கிரஸ் கர்ஜனையாளர்கள் கோபிக்க வேண்டாம் - அவர் பெரியவர், நாட்டின் முதலமைச்சர் - நான் சாமான்யன் - தெரியும் - ஆனால் என் மீது கோபிக்காதீர்கள், இப்போது அவருடைய நிலைமை இருக்கிறதே அது ஏறக்குறைய, கை கட்டைவிரல் நசுங்கும்படியாக நானே ரயில் வண்டிக் கதவைச் சாத்திக்கொய்டு, செளிவே சொல்லவும் முடியாமல், விம்மலை அடக்கவும் முடியாமல், வேதனை பட்டேனே, ரயிலில், அதே நிலைமைதான்! சற்றே பிரச்னையை அலசுங்கள். நான் கூறுவது சரியென்று ஏற்படும் - பொறுமையுடன் அலசிப் பாருங்கள்.
***

நேரு கோபமாக இருக்கிறார் என்கிறார்கள் சிலர் - சிலரோ தாங்க முடியாத சோகத்திலாழ்ந்திருக்கிறார் என்கிறார்கள் - மற்றும் சிலரோ, இது கோபமுல்ல சோகமுல்ல - இதுதான் நிஷ்காம கருமம்! என்கிறார்கள் - எது சரிபோ அது கிடக்கட்டும், ஒன்று தெளிவாகத் தெரிகிறது, பண்டித நேரு எப்போதும் போலில்லை - ஏதே ஓர் மாறுதல் தெரிகிறது, பேச்சில், போக்கில்! வெளிப்படையாகவே கூறுகிறார், அதிர்ப்தி என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது, என்று! அதற்காக, அதிர்ச்சி வைத்தியம் செய்வதாகக் கூறுகிறார் - காங்கிரஸ் நிர்வாகக் குழு, தேர்தல் காரியக் குழு இரண்டிலிருந்தும் விலகிக் கொள்வதாக அவர் அறிவித்திருக்கிறார் - அவர் குறிப்பிடும் அதிர்ச்சி வைத்தியம் அதுதான்! அதன் விளக்கம் பிறகு பார்த்துக் கொள்வோம்.

பண்டிதருக்கு ஏற்பட்டிருக்கும், மனநிலைக்கு, அது அதிர்ப்தி, குழப்பம், துக்கம், கோபம், வெறுப்பு, எனும் ஏதுவாகவேனும் இருக்கட்டும் - அதற்குப் பரிகாரம் தேட, வைத்யம் செய்துகொள்ள அவர் முனையவில்லை - அதைக் காரணமாகக் கொண்டு, காங்கிரசுக்கு வைத்தியம் செய்கிறார் - அதிர்ச்சி வைத்திய முறையாம்!!

அதிர்ச்சி வைத்திய முறை செய்ப்பட வேண்டிய அளவுக்குக் காங்கிரசின் உடலிலும் உள்ளத்திலும் நேர் முற்றிக் கிடப்பதும் இதனால் தெரிகிறது. சாதாரணமாக, நோப் போக்க, கையாளப்படும் மற்ற மருத்துவ முறைகளை எல்லாம் டாக்டர் நேரு செய்து பார்த்தும் பலன் தரவில்லை என்பதும் இதனால் விளக்கமாகிறது! நோயின் தன்மை அப்படிப்பட்டது போலும்! பரிதாபப்படுவோமாக!! ஆனால் பரிதாபப்படும் அதேபோது பயமுமல்லவா, ஏற்படுகிறது - முன்பு பல வைத்திய முறைகளை, நோய் போக்கக் கையாண்டு பார்த்துப் பலன் காணவில்லையே இந்த டாக்டர், இப்போது இந்த அதிர்ச்சி வைத்திய முறை மட்டும் வெற்றி தருமா - நோய் போகுமா - காங்கிரஸ் பிழைக்குமா? என்ற பயம் பிறக்கிறதல்லவா?
***
அதிர்ச்சி வைத்யம், என்பது ஒரு அபூர்வமான முறை - சந்தேகமில்லை - ஆனால் எனக்கு ஏற்படும் சந்தேகம் அந்த வைத்ய முறையிலே அல்ல, வைத்யர் அதிர்ச்சி அடைந்திருக்கிறாரோ என்று நான் சந்தேகப்படுகிறேன். பலவகையான மருந்துகளைக் கொடுத்துப் பார்த்துப் பார்த்து, வைத்திய முறைகளையும் மாற்றி மாற்றிப் பார்த்து, வைத்திய முறைகளையும் மாற்றி மாற்றிப் பார்த்து, எதனாலும் நோய் குணமாகாமல், நோயாளியின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாவதைக் கண்டால், திடமனது படைத்த டாக்டருக்கும், மன அதிர்ச்சி ஏற்படத்தானே செய்யும். நேருவே கூறுகிறார், பல மருத்துவ முறைகளைச் செய்து பார்த்தாகி விட்டது - பலன் கிடைக்கவில்லை - எனவே கடைசியாக அதிர்ச்சி முறைக்குச் செல்கிறேன், என்று - அதாவது நேருவின் மருத்துவமுறை இதுவரை தோல்வியே தந்திருக்கிறது! இப்போதுமட்டும் வெற்றி கிடைக்குமா என்பது, யோசிக்க வேண்டிய பிரச்சினைதானே! யோசிக்கும்போது, சந்தேகம்தானே பலப்படுகிறது!!
***

அதிர்ச்சி வைத்தியம் தேவை என்று டாக்டர் நேரு கூறுகிறாரே தவிர, நோயாளி, மருந்து தேடுவதாகக்காணோம் - மாறாக, டானிக் வேண்டும் என்று தான் நோயாளி அலைவது தெரிகிறது. நேருவின் வைத்திய முயற்சி, பலன் அளிக்குமா என்பதுமட்டுமல்ல கேள்வி, இந்த முயற்சியில் இவர் ஈடுபடவேண்டிய அவசியம் என் வந்தது என்பதும்தான் கேள்வி. நோயாளியிடம் அவருக்குள்ள விசேஷ அக்கரை காரணமாக, உரிமை காரணமாக, அன்பு காரணமாக, தாமாகவே வைத்தியம் செய்ய முன்வந்திருக்கிறார், என்று கூறுவர். சரி!
***

காங்கிரஸ் ஸ்தாபனத்திலே நோய் கண்டிருக்கிறது - அதுபோக, இந்த அதிர்ச்சிமுறை வைத்தியம் தேவை என்று கூறும் பண்டிதர், நோயின் மூலகாரணத்தை விளக்கவில்லை - மறைக்கிறாரோ, அல்லது புரிந்துகொள்ளாமலே இருக்கிறாரோ தெரியவில்லை - ஆனால் அதிர்ச்சி முறையைக் கையாள்பவர், நோயின் மூலத்தை நாடியாகத் தெரியக் காணோம்.
***

இரண்டாண்டுகளாகவே, காங்கிரசிலிருந்து பலர், பலப்பலர், தொடர்ந்து வெளியேறியபடி இருக்கிறார்கள் - மருத்துவ முறையிலே கூறுகூதானால், திடகாத்திரமாக இருந்து வந்தவரின், எடை, வாரத்துக்கு ஒர பவுண்டு இரண்டு பவுண்டு, என்று இப்படி, படிப்படியாக, ஆனால் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது! துவக்கத்திலே, வீணாக உள்ள சதை குறைவது நல்லதுதான், என்று பேசி, இதற்கு விளக்கம் தந்தார்கள். அதாவது, அவர் காங்கிரசைவிட்டு வெளியேறு கிறாரே, என்று சொன்னபோது, போகட்டுமே! போனால் என்ன! அவர்கள் போவதுதான் நல்லது! ஊளைச்சதை கரைவது, உண்மையில் நஷ்டமல்ல! - என்று கூறிவந்தார்கள் - கர்ஜனையாளர்கள்! எடை குறைவதோ தொடர்ந்து நடை பெற்ற வண்ணமிருந்தது. போகிறேன் - போகிறேன் - என்ற பேச்சு, ‘நித்யநாத’ மாகிவிட்டது. தேகம் இளைத்தது - இளைப்பு நாலு பேருக்குத் தெரியும் அளவுக்கு ஏற்பட்டது. போகிறவர்களும் சும்மாபோய்விடவில்லை - ஆளுக்கொரு சொல்லை வீசி விட்டுதான் போனார்கள் - அவர்கள் சொன்னவைகளை “ஜலித்து’ எடுத்துப்பார்த்தால் ஒரே ஒரு விஷயத்தைத் தான் அவர்கள், பல்வேறு வகையான பேச்சின்மூலம் சொன்னார்கள் என்பது விளக்கமாகத் தெரிகிறது. அதாவது, காங்கிரசை மக்கள் வெறுக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியால், நன்மை கிடைக்கவில்லை - தீமை தாண்டவமாடுகிறது. இதுதான் காங்கிரசை மக்கள் வெறுப்பதற்குள்ள காரணம்.

இதை ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக விவரித்தார்கள்.

நிர்வாகம் ஊழல்மயம் - என்றார் ஒரு மாஜி. சுய நலமிகள் நிர்வாகத்தில் இடம் பிடித்துக்கொண்டார்கள் - என்று மற்றோர் மாஜி கூறினார்.

நிர்வாகத் திறமை துளியும் இல்லை, காங்கிரஸ்சர்க்கார்களுக்கு! - என்று இடித்துரைத்தார் இன்னொருவர்.

பொதுமக்கள் எக்கேடு கெட்டாலும் சரி, எமது போக போக்கியம் குறைவற இருக்கவேண்டும் என்ற பேராசை பிடித்தாட்டுகிறது ஆளவந்தார்களை, என்று கொதித்துக் கூறினார் இன்னொருவர்.
முதலாளிகளிடம் சரண் புகுந்துவிட்டது காங்கிரஸ் ஆட்சி-என்று கோபமாக கூறினார் வேறொருவர்.

பாசீசம் வளருகிறது - டில்லி, பெர்லின் ஆகிறது என்றார் வேறொருவர்.

திட்டம் சரியில்லை, தெளிவு இல்லை நோக்கத்தில், கருத்துக்குழப்பம், கபடநாடகம் - சகிக்க முடியவில்லை இந்த சர்வாதிகார நிர்வாகத்தை - என்று சலித்துக் கொண்டார் ஒருவர்.

கள்ளமார்க்கட்காரரிடம் தஞ்சம் புகுந்துவிட்டது காங்கிரஸ் சர்க்கார் - அடக்குமுறையை அவிழ்த்து விட்டு ஆணவஆட்சி நடத்துகிறார்கள் - என்று பலர் கூறினர்.

சோறு கூடப் போடமுடியவில்லை, பேர்மட்டும் பெரிதாக இருக்கிறது - என்றார் கேலியாக வேறொருவர்.

வெளிநாட்டுக் கொள்கையைப் பார்! கோணங்கி சேட்டை போலிருக்கிறது! வியாபார சம்பந்தமான உத்தரவுகளைப் பார், விளக்கமே இல்லை! - என்று ஒவ்வொன்றாக அலசி அலசிக் கண்டிக்கலாயினர் சிலர்.

ஆடம்பரத்துக்குக் குறைவில்லை - மந்திரிகளின் பவனிக்கும் விளம்பரத்துக்கும் பத்தைப் பாழாக்குவதைப் பார்! டம்பாச்சாரி ஆட்சியப்பா இது, நல்ல வேளை உத்தமர் காந்தி இந்த ஊதாரிகளின் ஊழல் ஆட்சியைக் காணவில்லை - மறைந்துவிட்டார் - என்று மனம் நொந்து கூறினார் ஒருவர்.

காந்தீயம் காற்றிலே பறக்கிறது! கண்ணியம் மண்ணாகி விட்டது! என்று கண்டித்தார் வேறொருவர்.

எல்லாம், மாஜிகளான உடன், காங்கிரஸ் தலைவர்கள் திருவாய் மலர்ந்தருளியவை - நான் கூறுவது அல்ல! நாக்கல்லவா அறுபட்டுப்போயிருக்கும்!!