அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஆளும் பொறுப்புக் கிடைத்தால்
1

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலே உள்ள மக்களுக்குள் ஒரு பகுதியார் முற்போக்கு அடைந்தவர்கள், வேறு ஒரு பகுதியார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இருக்கின்ற பேதத்தைப் போக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகப் பாடுபட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் இன்றைய தினம் நிலைமை எப்படி இருக்கிறது என்றால், யார் யார் அதிகமாகப் பாடுபடுகின்றார்களோ அவர்கள் எல்லாம் தாங்கள் படுகின்ற பாட்டின் பலனை அநுபவிக்க முடியாமல் சாதியிலே தாழ்ந்தவர்களாகவும் சமுதாயத்திலே பிற்படுத்தப் பட்டவர்களாகவும், கல்வியிலே பின்னோக்கிச் செல்பவர்களாகவும் இந்த வகையில் அவர்கள் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

நான் சென்று வருகின்ற ஊர்களில் எல்லாம், இந்த கோரமான சூழ்நிலையைத்தான் பார்க்கின்றேன். எந்த மக்கள் காடு கரம்புகளைக் கழனியாக்குகிறார்களோ, எந்த மக்கள் கள்ளி காளான்களை அகற்றி நல்ல நஞ்சை நிலங்களை உண்டாக்குகின்றார்களோ, எந்த மக்கள் பருக்கைக் கற்களையும் குழாங்கற்களையும் அகற்றி அந்த இடத்திலே விவசாயத்தை நடத்தி, நல்ல நெல் வகைகளைப் பயிரிட்டு தருகின்றார்களோ, அப்படிப்பட்ட உழைப்பாளி மக்கள் எல்லாம், பிய்ந்து போன கூரைக்குள்ளே உட்கார்ந்து குமுறிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகள் எல்லாம் மண் வெளியிலே விளையாடிக் கொண்டும், பள்ளிக் கூடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் 4 மைல் 5 மைல் தொலைவிலே ஏரிக்கரை மேலே நடந்து சென்றும், கால் அளவுக்குத் தண்ணீரிலே இறங்கிச் சென்றும், அல்லல் பட்டால்தான் அவர்களுக்குப் பள்ளிக் கூடம் இருக்கிறது. நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னாலேதான் இங்கே நம்முடைய முன்னாலே தான் இங்கே நம்முடைய தொகுதியில் உள்ள ஒரு சிற்றூருக்குப் போய் விட்டு வந்தேன்.

அங்கே இருக்கின்ற ஒரு பள்ளிக் கூடத்தை எனக்குக் காட்டினார்கள். “இதுதான் பள்ளிக்கூடம்” என்றார்கள். “நான் முதலிலே அந்த ஊருக்குள் நுழைகின்ற பொழுது இடிந்து போயிருக்கின்ற அந்த குடிசையைப் பார்த்து “இது என்ன இப்படி இருக்கிறது” என்று நானாக மனதிற்கு எண்ணிக்கொண்டேன். ஒரு சமயம் ஏதாவது வயல் வெளியில் மாடு கன்றுகள் மேய்ந்து விட்டு வந்தால் அவைகளைப் பிடித்துக் கட்டுகின்ற பட்டி போலும் என்று அவர்களிடத்திலே சொல்லவில்லை.

மாடு கன்றுகள் கட்டுவதற்கான ஒரு தொழுவம் அல்லது பட்டி என்று எண்ணிக்கொண்டிருந்த ஒரு இடத்தைக் காட்டி, இதுதான் பள்ளிக்கூடம் என்றார்கள். எனக்கு உடனே நகைச்சுவை மன்னர் கிருஷ்ணர் நடத்துவாரே முன்னாலே எல்லாம், கிந்தனார் கதை, அந்தக் கதை நினைவுக்கு வந்தது. அந்தக் கதையிலே அவர் கிராமத்துப் பள்ளிக் கூடத்தைப் பற்றிச் சொல்லியிருப்பார், “எங்களுடைய கிராமத்திலே ஒரு பள்ளிக்கூடம் இருக்கும். அதற்கு நான்கு பக்கத்திலே சுவர் கட்டி இருப்பார்கள். அதிலே ஒரு பக்கத்துச் சுவர் மழையிலே இடிந்து போயிருக்கும்; ஒரு பக்கத்துச் சுவர் இடிவதற்குத் தயாராக காத்துக் கொண்டிருக்கும்” என்று அதே நிலையில் அந்த இடத்திலே பள்ளிக்கூடம் இருந்தது. அதிலே தான் நீர்வளூரிலே இருக்கின்ற பிற்படுத்துப்பட்ட சமூகத்தின் மக்களும், பாடுபட்டுப் பிழைக்கின்ற விவசாயப் பெருங்குடியினரின் மக்களும், படிக்க வேண்டும். உங்களை நான் எண்ணிப்பார்க்கும் படி கேட்டுக் கொள்ளுகின்றேன்; அப்படிப்பட்ட அலங்கோலமான ஒரு கட்டிடத்துக்குள்ளே நுழைந்தால் எந்த பிள்ளைக்குப் படிப்பிலே ஆசை வரும்?

பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குப் படிப்பிலே ஆசை வரவேண்டுமானால், தாங்கள் போகின்ற பள்ளிக்கூடம் நாகரிகமாக இருக்க வேண்டும். தாங்கள் இருக்கின்ற வீடுகளில் இருக்கிற அழுக்கைவிட பள்ளிக்கூடத்திலே அழுக்கு நீக்கப்பட்டு நல்ல காற்றோட்டமும், நல்ல வெளிச்சமும் சுற்றி விளையாடுவதற்கு ஏற்ற இடமும் அமைந்திருந்தால், வீட்டிலே விளையாடுகின்ற பிள்ளை கூட, வீட்டிலே இல்லாமல், பள்ளிக் கூடத்திற்குப் போனால் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று ஆனந்தத்துடன் பள்ளிக் கூடத்திற்குப் போவான்.

ஆனால் நான் பார்த்தேனே, பள்ளிக்கூடம் என்று காட்டினார்களே, ஒரு இடிந்து போன கட்டிடம், அந்த இடிந்து போன கட்டிடம் தான் பள்ளிக்கூடம் என்றால், அங்கே சிறு பிள்ளைகளை அனுப்பினால், எப்படி அவர்களுக்குப் பள்ளிக்கூடத்திலே ஆசை பிறக்கும்? எப்படி அவர்களுக்குப் படிப்பிலே அக்கரை பிறக்கும்? அங்கே படிக்கின்ற படிப்பு எத்தனை காலத்திற்கு வரும்?

நான் நினைக்கின்றேன், அங்கே சிறுபிள்ளைகளை உட்காரவைத்து, ஆசிரியர் கரும்பலகையைக் கொடுத்து எழுதச் சொன்னால் அவர்கள் எழுதிக்கொண்டே இருக்கின்ற நேரத்தில், அந்தச் சுவரிலே இருக்கிற ஏதாவது ஒரு பொந்திலே இருந்து பாம்பு தலை நீட்டக் கூடும். பாம்பு தலை நீட்டுகின்ற நேரத்தில் இந்தப் பையன் ‘அ’ எழுதுவான், அல்லது ‘க’ எழுதுவான். அந்த எழுத்திலே பாதி எழுதிக் கொண்டு ‘பாம்பு, பாம்பு’ என்று கத்துவானே தவிர, எழுத்தைச் சரியாக எழுத மாட்டான். இன்னொரு எழுத்து எழுதுவதற்குள் ஒரு பக்கத்திலே அரணை வரக்கூடும். வேறு ஒரு எழுத்தை எழுதுவதற்குள் அங்கே இருக்கிற வெறிநாய் கதவு இல்லாக் காரணத்தினாலே, உள்ளே நுழையக்கூடும். இப்படிப்பட்ட அலங்கோலமான நிலையிலே தான் நம்முடைய பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலே அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தப் பிள்ளைகளுக்கெல்லாலம் நாகரிகமான பள்ளிக்கூடம் கிடைக்க வேண்டும் என்றுதான், ஆறாயிரம் மையிலுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரனை நாம் நிக்கினோமே தவிர, அந்த ஆட்சியை அதனாலேதான் விரட்டினோமே தவிர, அழகேசனை மந்திரி ஆக்குவதற்கு அல்ல; பக்தவத்சலத்திடலே பட்டத்தைக் கொடுப்பதற்கில்லை காமராசரை முதல் அமைச்சர் ஆக்குவதற்கு அல்ல. இவர்களுடைய பெயரெல்லாம் நமக்கு அப்போது கவனம் கூடக்கிடையாது. இந்தப் பிள்ளைகளுடைய முகம் தெரியும். இவர் படிக்கின்ற பள்ளிக் கூடத்துடைய அலங்கோலம் தெரியும். இந்த அலங்கோல ஆட்சிக்கு யார் காரணம் என்று தேடிப்பார்த்தோம். வெள்ளைக்காரன் தான் காரணம் என்றால் மகாத்மா காந்தி அவர்கள். ஆகையினாலே இந்த வெள்ளைக்காரனை விரட்டினால், நம் பிள்ளைகளுக்கு நல்ல நாகரிக வாழ்க்கை கிடைக்கும் என்று நாம் நம்பினோம். 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன; பல கோடி ரூபாய்களை நாம் செலவு செய்தாகிவிட்டது; கொட்டிக் கொடுக்கிறோம். வாரிப்பணத்தை ஆண்டு ஒன்றுக்கு 400 கோடிக்கு மேல் டெல்லி தர்பாருக்கு. நாம் கட்டாத வரி இல்லை; நம் பேரிலே போடாத சட்டமில்லை; அடங்கி நடக்காத ஆள் இல்லை, இவ்வளுவ இருந்தும் நான் பார்த்தநீர்வளுர் பள்ளிக்கூடம் பன்றி நுழைவதற்குக் கூட கொஞ்சம் அதற்குப் பகுத்தறிவு இருந்தால் நுழைய மறுக்கும். நாம் பெற்றெடுத்த செல்வங்களை, நம்முடைய தாய்மார்களுடைய வயிற்றிலே தவழ்ந்திருந்த இந்தச் செல்வங்களை, எதிர்கால முதல் அமைச்சர்களை, எதிர்கால டாக்டர்களை, எதிர்கால என்ஜினியர்களை, அந்தக் குட்டிச் சுவருக்கு அனுப்புகின்றோம்; அங்கே நமக்குப் படிப்பு கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் போனால் என்ன செய்யும் என்று கேட்கின்ற காங்கிரஸ்காரருக்கு நான் சொல்லுகின்றேன். தி.மு.க போனால் அந்தப் பள்ளிக் கூடத்தினுடைய அலங்கோல நிலைமையை, அகில உலகத்துக்கும் விளம்பரப்படுத்தும். வேறு எதைச் செய்யாவிட்டாலும் செய்யமுடிகிறதோ இல்லையோ அது வேறு விஷயம்.

நம்முடைய நாட்டிலே இருக்கிற இந்தக் கேவல நிலைமையை, இது வரையிலே இந்த உலக்ததிலே இருக்கிற மக்கள் அறிந்து கொள்ளாமல் மூடி வைத்திருக்கிறார்கள்; கதர்த்துணி போட்டுப் போர்த்தி வைத்திருக்கின்றார்கள்.

எப்படித் தொழுநோய் பிடித்தவன் விரல் எல்லாம், அழுகிப் போய் இருந்தால், அது தெரியாமல் இருப்பதற்காக வைர மோதிரத்தை போட்டுக் கொள்கின்றானோ, எப்படி உடலிலே ஏதாவது தேமல் வந்து விட்டால் தேமல் தெரியாமல் இருப்பதற்குச் சந்தனத்தைப் பூசிக்கொள்ளுகின்றானோ, எப்படி ஏதாவது கள்ளச் சாராயம் சாப்பிட்டு விட்டால் அந்த வாடை வெளியே தெரிந்து விடப்போகிறதென்று செண்ட் புட்டியை உடைத்து மேலே ஊற்றிக் கொள்ளுகின்றார்களோ, அதைப்போல் இந்த அலங்ககோலம் தெரியாமல் இருப்பதற்காக கதர் துப்பட்டியைப் போட்டு மறைக்கின்றார்கள். எங்களை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால், அந்த கதர் துப்பட்டியை நீக்கி, உள்ளே இருக்கின்ற இந்தக் கண்றாவிக் காட்சிகளை உலகத்திற்குக் காட்டுவோம். நாங்கள், சென்றால் காட்ட முடியுமே தவிர காங்கிரஸ் சென்றால் காட்ட முடியாது. ஏன் காட்ட முடியாது என்றால், அவர்கள் கதர் துப்பட்டி போர்ப்பார்கள், ஆகையினால் அவர்கள் அதைக் காட்ட முடியாது. நாங்கள் எப்படிக் காட்ட முடியும் என்றால் நாங்கள் இந்தக் கோரக்காட்சிகளையும் பார்க்கின்றோம்; துப்பட்டி போர்த்தி இருப்பதையும் பார்க்கிறோம். அந்தக் கதர் துப்பட்டியை நீக்கினால் தான், இந்த அலங்கோலம் தெரியும், அகில உலகத்திற்கும் என்ற காரணத்தினாலே இவைகளைக் காட்ட முடியும்.

எத்தனை எத்தனை அலங்கோலங்களைப் பார்க்கிறோம் கிராமப்புறங்களில்! எத்தனை எத்தனை கேவலமான தன்மைகளைப் பார்க்கின்றோம்! இத்தனைக்கும் நம்முடைய நாட்டு மக்கள் வரிதராமல் இருக்கிறார்களா? வரி கொடுக்காமல் ஏமாற்றுகின்றார்கள் என்றால் யாரோ சில பெரிய பணக்காரர்கள் வருவான் வரி கொடுக்காமல் ஏமாற்றக் கூடும், ஆனால் ஏழை, நடுத்தரக் குடும்பத்தாராகிய நாம் எந்தக் காலத்தில் போட்ட வரியைக் கட்டாமல் இருக்கிறோம்? வீட்டுவரி கேட்கிறார்கள் நகராட்சியில், கட்டுகின்றோம், நிலவரி கேட்கின்றார்கள்; நிலம் வைத்திருந்தால் கட்டுகின்றோம். கடைக்குப் போய் சாமான் வாங்கினால் விற்பனை வரி கட்டுகின்றோம். காப்பி குடித்தால் காப்பிக்கொட்டைக்கு வரி இருக்கிறது. தேநீர் அருந்தினால் தேயிலைக்கு வரி இருக்கிறது. ஒரு பீடி பிடித்தால் பிடிக்கின்ற பீடிக்கும் வரி இருக்கின்றது. கொளுத்துகின்ற தீக்குச்சிக்கும் வரி இருக்கிறது. சிறு பிள்ளைகள் பள்ளிக்கூடத்தி“ல எழுதியதை அழிக்கின்ற ரப்பருக்கு வரி இருக்கிறது. இங்கே இருந்து சரக்குகளை ஏற்றினாலும் சரி, நம்முடை கைலி லுங்கி இவைகளை ஏற்றினால் ஏற்றுமதி வரி இருக்கிறது. வெளியிலே இருந்து ஏதாவது சாமானை இறக்கினால் இறக்குமதி வரி இருக்கிறது. கடல் ஓர வியாபாரம் நடத்தினால் கப்பல் வரி இருக்கிறது. இரயிலிலே ஏறிக்கொண்டு போகிறோம்; அதற்குத் தருகிற கட்டணத்திலே வரி இருக்கிறது. கார்டு கவர் வாங்குகின்றோம், அதிலே தபால் இலாகாவுக்கு இலாபம் இருக்கிறது. இத்தனை வரிகள் வாங்கிக் கொள்ளுகின்ற சர்க்கார் நீர்வள்ளூருலே இருக்கிற பள்ளிக்கூடத்தைக் கேவல நிலையிலே வைத்திருப்பானேன்?

பணமில்லையா சர்க்காரிடத்திலே என்றால், சென்னையிலே இருக்கிற மவுண்ட் ரோட்டில் மவுண்ட் ரோட்டில் உலவுகின்ற தோழர்கள் சிறுநீர் கழிக்கப் பாதாள கக்கூஸ் கட்டியிருக்கிறார்கள். யார் போவார்கள்? நம்மைப் போன்றவர்களும் போனால் அவசரத்தை அடக்கிக் கொள்ளுவோம், பதறமாட்டோம். பணக்காரர்கள் மோட்டரிலே போவார்கள் அவர்கள் ஒன்றும் மோட்டாரை நிறுத்தி விட்டு அங்கே வரமாட்டார்கள். என்றாலும் எங்கோ மேல் நாடுகளிலே அப்படிக் கட்டி இருக்கிறார்கள் என்பதைக் கண்டு, மேல்நாட்டுத் தலைவர்கள் வந்தால், ‘எங்களுடைய நாடு எவ்வளவு முன்னேறிவிட்டது பாருங்கள்’ பாதாள கக்கூஸ் கூட கட்டியிருக்கின்றோம்’ என்று அவர்களுக்குக் காட்டுவதற்காகச் சில இலட்ச ரூபாயில் பாதாள கக்கூஸ் கட்டியிருக்கிறார்கள், ‘தினத்தந்தி’ அந்தப் பாதாள கக்கூசின் பயனை வேறு விதமாகக் கூறுகின்றது.

இதற்குச் சில இலட்ச ரூபாயைச் செலவழித்து அங்கே கட்டியிருக்கிறார்கள் கட்டிடம், அது போதாதென்று பல இலட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டுப் பாதாள பஜார் கடை வீதி கட்டப் போகிறார்கள்.

மவுண்ட் ரோட்டில் ஏற்கனவே கடை வீதி இருக்கிறது. மவுண்ட் ரோட் என்றாலே கடை வீதிதான். பெரிய பெரிய கம்பெனிகள். இந்தக் கம்பெனிகள் போதாமல், அதற்குக் கீழே சுரங்கம் தோண்டி, படிக்கட்டுக்கள் அமைத்து, கீழே வரிசையாகக் கடை கட்டப் போகிறார்கள்; பாதாள பசார். ‘மாயா பசார்’ என்று சினிமாவிலே காட்டுவார்களே அதைப்போல! “பாதாள பசார்” இதற்கு இலட்சக் கணக்கிலே செலவழ‘க்கப் பணம் இருக்கிறது. நம்முடைய வரிப்பணம் அதற்குப் பயன்படுகின்றது; நீர்வளூரிலே இருக்கிற பள்ளிக்கூடம், அது அடிக்கின்ற நாற்றம் நான்கு காதம் வரையிலே வீசும் எந்தப் பையனும் உள்ளே நுழையமாட்டான். இந்த வகையிலே கிராமப் பகுதிகளிலே உள்ள அலங்கோலங்களை மாற்றுவதற்குக் காங்கிரஸ் சர்க்கார் என்ன முயற்சி எடுத்துக் கொண்டது?

என்னைக் கேட்கிறார் அழகேசன் அவர்கள், ‘அண்ணாத்துரை இதெல்லாம் பேசுகின்றானே, இவன் என்ன செய்தான்?’ என்று, அண்ணாத்துரையா அமைச்சன்? அண்ணாத்துரையா நாட்டை ஆண்டுகொண்டு இருக்கின்றான்? அண்ணாத்துரையிடத்திலா நீங்கள் எல்லாம் வரியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்? அண்ணாத்துரைக்கா கனம் என்ற பட்டம் இருக்கிறது?
இவைகள் எல்லாம் உனக்கு இருக்கிறது. சுடுகாட்டுக் காவலாளி நீ, ‘பிணத்தைச் சரியாகப் புதை’ என்று சொன்னால் “உனக்குத் தெரியுமா” என்கிறாய்.

சுடுகாட்டுக் காவலாளிக்குப் பிணத்தைப் புதைக்கத் தெரியாவிட்டால் சூட்டுக்கோலைக் கீழே போட்டு விட்டு வெளியேறுவான். வேறு காவலாளி வேலை தெரிந்தவன் உள்ளே போவான். அதை விட்டு விட்டுக் காவலாளி வேலையும் எனக்குத்தான் இருக்க வேண்டும், பிணம் புதைக்கத் தெரியாவிட்டால், ‘தெருவில் இருந்து அண்ணாத்துரை கேட்கக் கூடாது’ என்றால், பிணமே உயிர்பெற்று வந்தல்லவா, உன்னைக் கேட்கும் “நீ என்னைப் புதைக்காதே, வேறு ஆள் வரட்டும்” என்று! இந்த அளவுக்கு நாட்டிலே அலங்கோல ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் எங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள். ‘திராவிட முன்னேற்றக் கழகத்தார் இதுவரையில் என்ன சாதித்தார்கள்?’ என்று. திராவிட முன்னேற்றக் கழகத்தார் இதுவரையில், நீ சாதிக்காததை மக்களுக்குச் சொன்னார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தார் என்ன சாதிப்பார்கள் என்றால் சாதிக்கின்ற இடத்திலே உட்கார வைத்தால், சாதித்துக் காட்டுவார்கள்.

ஒரு உதாரணத்திற்குச் சொல்லுவேன்-இப்பொழுதெல்லாம் அந்த நாடகம் நடப்பதில்லை முன்னாலே எல்லாம் போட்டா போட்டி சதாரம் நாடகம் நடக்கும். அதிலே கள்ளபார்ட் ஆடுவார்கள். அவன் கள்ளபார்ட் ஆடுகின்றபோதே சொல்லுவான் “நான் போடுகின்ற இந்தக்கோடு, நான் ஆடுகின்ற இந்த ஆட்டம், நான் பாடுகின்ற இந்தப்பாட்டு, வேறு யாராலாவது முடியுமா? இதோ சவால் விடுகிறேன்’ என்பான். உடனே கொட்டகையிலே உட்கார்ந்து கொண்டிருப்பவரில் ஒருவர் ‘அப்படியானால் இந்தச் சவாலை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன்’ என்று சொல்லுவார். அடுத்த வாரத்தில் அந்தச் சதாரம் நாடகத்திலே போட்டா போட்டி சதாரம், இன்னார் கள்ளபார்ட் நடிப்பார், அவருக்கு இன்னார் போட்டியாக வருவார்” என்று போடுவார்கள்.

அதைப்போல நீ அமைச்சர் வேலையில் இருந்து கொண்டிருக்கிறாய், நீ என்னைப் பார்த்துக் கேட்கின்றாய் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்கின்றது? என்று. ‘சதாரம்’ நோட்டீஸ் ஒட்டலாம் வருகிறாயா?

நாட்டை ஆளுகின்ற பொறுப்பை எங்களிடம் ஒப்படை. ஒரு தாலுக்காவைக்கொடு உதாரணத்துக்கு. சென்னை மாநிலம் முழுவதையும் நீ வைத்துக்கொள். ஏதாவது ஒரு தாலுக்காவை திராவிட முன்னேற்றக் கழகத்திடம் பிரித்துக் கொடுத்து “ஐயா, பரந்தூர் பிரிக்காவை நீ பார்த்துக்கொள், அல்லது தாமல் பிர்க்காவை நீ பார்த்துக்கொள், இதிலே நீ என்னென்ன சீர்திருத்தம் செய்கிறாயோ நான் பார்க்கிறேன். அங்கே இருக்கிற வரி எல்லாம் நீயே வாங்கு, அங்கே தேவையான நன்மைகளை நீ செய்து காட்ட இதைப்பார்த்து நான் மற்றவைகளிலே தெரிந்து கொள்ளுகின்றேன் என்று, உன்னாலே சொல்ல முடியுமானால் சொல்லு, எங்களாலே செய்ய முடிகின்றதா இல்லையா என்பதை, நாட்டு மக்கள் பார்க்கட்டும்.

நாங்கள் எதிர்க்கட்சியிலே இருப்பவர்கள், நீ ஆளும் கட்சியிலே இருப்பவன், நீதான் நாட்டுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும். நாங்கள் அதைப் பார்த்து, அதிலே நன்மை இருந்தால் பாராட்டுவோம்; தவறுகள் இருந்தால் அதை எடுத்துக்காட்டு வோம். தவறுகளை எடுத்துக்காட்டுகின்ற நேரத்தில் மட்டும் உடம்பு எரிவானேன்? உள்ளத்தில் குடைச்சல் எடுப்பானேன்? தவறு இல்லை என்றால் எடுத்துச் சொல்லுவதுதானே? ‘நீர்வளூரிலே அப்படி இல்லை. ஆறு அடுக்கு மாளிகையிலே பள்ளிக்கூடம் இருக்கிறது என்று நாட்டுமக்களிடத்திலே சொல்லு, படம்பிடித்துக் காட்டு.

நான் இந்தக் கிராமப் பகுதிக்குப் போகிறபோதெல்லாம், ஒவ்வொருநாளும், எண்ணிக் கொள்ளுகின்றேன், என்னோடு கூட மட்டும் ஒரு காமிராக்காரர் வந்தால், அங்கே இருக்கிற அலங்கோலங்களை எல்லாம் படம் எடுக்கச் சொல்லுவேன். படம் எடுத்து அவைகளை எல்லாம் துண்டு அறிக்கையில் போட்டுக் கொடுத்து அடியில் “ஐந்தாண்டுத் திட்டம் அடைந்த பலன்” இரண்டாயிரம் கோடி செலவழிந்தது. அதற்குப் பிறகு இது, “பத்து வருட காங்கிரஸ் ஆட்சி, அதிலே இதுபலன்” என்று போட்டுப் போட்டுக் கொடுத்து உன்னுடைய மானத்தை சந்தி சிரிக்க வைப்பேன்.

எங்களுக்குப் போதுமான அளவுக்குப் பண பலம் இருக்குமானால், நானும் படிப்படியாகச் செய்திருப்பேன்; அந்த அளவுக்கு நாட்டு மக்களிடத்தில் நீ நடந்து கொண்டிருக்கிறாய்.

எவ்வளவு கொடுமைகளைச் செய்திருக்கின்றாய் உன்னுடைய ஆட்சியில்! ஒரு வாரமாகவில்லையே பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் உள்ள வால்பாறை மலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் என்றால் நீங்கள் அவர்களைப் பார்த்ததில்லை, அந்தத் தேயிலைத் தோட்டத்தையும் நீங்கள் பார்த்ததில்லை. நாம் எல்லாம் இங்கே பயிரிடுகின்றோமே நஞ்சை புஞ்சை நிலங்கள். அவைகள் எல்லாம் இங்கே சமவெளியிலே இருப்பவை. தேயிலைத் தோட்டம் என்றால் 3000 அடி 4000 அடி இதற்கு மேலே இருக்கிற மலைச்சரிவிலே தான் தேயிலையைப் பயிரிடுவார்கள்; அந்தத் தேயிலைத் தோட்டத்தில், அழகாக பச்சைப்பசேல் என்று தேயிலை வளரும். அது வளர்ந்திருப்பதைப் பார்த்தால் வெல்வெட்டு மெத்தை விரித்ததைப் போல் இருக்கும். ஆனால் வெல்வெட்டு மெத்தை விரித்ததைப் போல் இருக்கின்ற அந்தத் தேயிலைத் தோட்டத்திலே கால் வைத்தால், சேறு இருக்கும். தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்க வேண்டும். இருந்தால்தான் தேயிலைச் செடி கொழு கொழு என“று இருக்கும். சேறும் சகதியும் இருக்கின்ற காரணத்தினால் அதிலே எப்போதும் அட்டை இருக்கிறது என்றாலும், அதிலே தொழிலாளி கால் வைத்துத்தான் தேயிலையைப் பறிக்க வேண்டும். தேயிலைத் தொழிலாளி பறிக்கின்ற நேரத்தில் ஒரு அட்டை இவனுடைய காலிலே ஒட்டிக் கொண்டால், அது பிடித்த இடத்திலே இருந்து இரத்தத்தை ஒரு அவுன்சோ இரண்டு அவுன்சோ, குடித்துத் திகட்டிப் போய், வயிறு வெடித்துவிடும் என்று நிலை வந்தால்தான் அந்த அட்டை பிடியைத் தளர்த்திக் கீழே விழும். அந்த அளவுக்கு நாள் தவறாமல் அவுன்ஸ் கணக்கிலே இரத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான் தமிழ்த்தொழிலாளி. அப்படிப்பட்டவன் கூலி போதவில்லை என்று முதலாளியைக் கேட்கின்றான். சர்க்காரைக் கூடஅல்ல. அந்தத் தேயிலை தோட்ட முதலாளி வெள்ளைக்காரன் தான். காப்பித்தோட்டத்து முதலாளி வெள்ளைக்காரன்தான். அந்த முதலாளியைக் கேட்டால், என்ன பதில் சொல்லுவது? முடிந்தால் தருகிறேன் என்று சொல்லலாம். முடியாவிட்டால் ‘பிறகு பார்க்கிறேன்’ என்று சொல்லலாம். போலீஸ்காரனை விட்டு, இரண்டே நிமிஷத்திலே கலைந்து போ, என்று உத்தரவு போட்டார்கள். அந்தக் கூட்டம் கலைவதற்குள் போலீஸ் அதிகாரி கைக் கடிகாரத்தைப் பார்த்து “இரண்டு நிமிஷத்திலே கலையச் சொன்னேன். நான்கு நிமிஷமாகி விட்டது. போகிறீர்களா இல்லையா?” என்று துப்பாக்கியால் சுட்டு 5 பேரை பிணமாக்கினார்கள், சர்க்கார் கணக்குப்படி! பலபேருக்கு படுகாயம் ஏற்பட்டது. என்றைய தினம்? குடியரசு விழா நடத்தினார்களோ அன்றைய தினம்! எப்படி இருக்கிறது!

மாதவி வீட்டில் கண்ணகி வந்திருந்து மஞ்சள் அரைத்துக் கொடு“க்கிறாள். என்றைய தினம் என்றால், எந்த வெள்ளிக்கிழமை கண்ணகி வீட்டை விட்டு கோவலன் மாதவி வீட்டுக்குப் போனானோ அந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்ற அன்றைக்கு! இதற்கு எவ்வளவு பொருள் இருக்கும்? அந்த அர்த்தத்தில் நடத்தி இருக்கிறார்கள், உலகத்திற்கெல்லாம், நாங்கள் இந்தியாவுக்குக் குடியரசு தந்து விட்டோம், இந்தக் குடியரசில் ஜனநாயகம் தழைக்கும்படி மக்கள் எல்லாம் வாழ்வு பெறுவார்கள். உலகோரே கண்ணெடுத்துப் பாருங்கள். அமெரிக்காவே எங்களுக்கு லாலி பாடு. ரஷ்யாவே எங்களுக்கு உபசாரத்தை நடத்து. எகிப்தே எங்களோடு நட்பாக இரு, என்றெல்லாம் சொல்லுவதற்குக் கொண்டாடுகின்றார்களே குடியரசு விழா, சனவரி 26 அதே குடியரசுநாளில்தான் வால் பாறை மலையில் “கூலி போதவில்லை எங்களுக்கு” என்று கூறினால் குலை அறுந்து போகும்படியாக உயிர் போகும்படியாக ஐந்து பேரைச்சுட்டுக் கொன்றார்கள்.

இதைவிடவா அக்கரமம் வேறு வேண்டும்? ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றுவிட்டு நீதிக் கட்சிக்காரன், இம்மாதிரி வந்து ஓட்டுக்கேட்டிருக்க முடியுமா? ஐந்து பேரைச் சுட்டுக் கொன்று விட்டு வெள்ளைக்காரன் வரி வாங்கி இருக்க முடியுமா? எத்தனை எத்தனை வீரம் பேசி இருப்பீர்கள்? எவ்வளவு எவ்வளவு கூவி இருப்பீர்கள்? எத்தனை காங்கிரஸ் தொண்டர், தோளிலே காங்கிரஸ் கொடியை வைத்துக்கொண்டு, “5 பேரை கொன்ற மாபாவி ஒழிக, 5 பேரைச் சுட்டுக்கொன்ற அக்ரம ஆட்சி ஒழிக, 5 பேரைப் பிணமாக்கியவனை நாட்டிலே சேர்க்காதே, அவனுக்கு ஓட்டுப் போடாதே, அவனுடைய வாயிலே ஒருபிடி மண் போடு” என்று எவ்வளவு சொல்லி இருப்பீர்கள்!

இன்றைய தினம் அந்தக் காங்கிரஸ் பக்தி என்ன சொல்லுகின்றது? 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற உடன் “5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் அழகேசன் வாழ்க!” “5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டாலும், டாக்டர் சீனிவாசனுக்கு ஓட்டு” “5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் காங்கிரசுக்குத்தான் நாங்கள் பக்கபலம்” என்று சொல்லுவீர்களானால் என்னய்யா பொருள் இதற்கு?

துச்சாதனன் துரோபதையினுடைய துகிலை உரிந்தவுடன் இவ்வளவு அழகாக நீ துகில் உரிந்தாயே தருமனுக்குக் கூட இப்படித் துகில் உரியத் தெரியவில்லை; அர்ச்சுனனுக்குக் கூடத்தெரிய வில்லை; ஆகவே நீயே இந்தத் துகிலை கட்டிவிடு என்றா துரோபதை கேட்பாள்?
காங்கிரஸ் தோழர்கள் அப்படி அல்லவா கேட்கின்றார்கள்? துகில் உரிந்த துச்சாதனனைக் கூப்பிட்டு “எனக்கு ஆடையை மறுபடியும் சுற்றிக்கட்டு” என்று சொல்கின்றார்களே தவிர, இவ்வளவு பாதகம் செய்தவர்களுக்கு ஒரு தடவையாவது பாடம் கற்பிக்கலாம் என்று ஏன் அந்தத் தேசியம் உங்களுக்கு உதிக்கவில்லை?