அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஆளும் பொறுப்புக் கிடைத்தால்
2

தேசியம் என்றால் என்னய்யா பொருள்? நாட்டுப்பற்று என்று பொருள். நாட்டுப்பற்று என்றால் என்ன பொருள்? நாடு என்றால் இங்கிருக்கின்ற மலையும், மடுவும், மரமும், செடி, கொடிகளுமா நாடு என்பது? இவைகளுக்கு மத்தியிலே இருக்கின்ற மனிதன் தான் நாடு. இந்த மனிதனைச் சுட்டுக் கொல்லுகின்றார்கள் ஓர் மாபாதக ஆட்சியாளர், அந்த நாட்டு மக்கள் இதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள் என“று மனப்பால் குடித்துக்கொண்டு ஓட்டுக் கேட்கின்றது, “நீங்கள் ஆர அமர உட்கார்ந்து கொண்டு “யாருக்கு ஓட்டு? அழகேசனுக்கா? யார் அவர் அழகேசன்?” “ரயில்வே மந்திரி?” “ஓ கவிந்ததே அரியலூரில், அந்த ரயில்வே மந்திரியா?” “யார் போடச் சொல்லுகின்றார்கள்?” பெரிய தனக்காரர் சொல்லுகின்றார் இந்த நாட்டாண்மைக்காரர் சொல்லுகின்றார் என்று இப்படி இருக்கின்றீர்களே, இந்த நாட்டிலே ஜனநாயகம் எப்படி பிழைக்கும்? இந்த நாட்டிலே நல்லாட்சி எப்படி ஏற்படும்? இந்த நாட்டிலே மக்கள் மாண்பு எப்படி உயரும்?

ஐந்து பேரைச் சுட்டுக் கொன்ற அந்த ஒரு காரணத்துக்காக வாவது, கூட்டம் போட்டால், “அப்பா தேர்தலையாவது ஒரு ஆறுமாதம் ஒத்தி வை. ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, அந்த இரத்தத்தோடு எங்களிடத்திலே வந்து ஓட்டுக்கேட்கின்றாய். எவ்வளவு கேவலமாகக் கருதுகின்றாய்” என்றல்லவா சொல்ல வேண்டும்?

இன்றைய தினம் அழகேசன் ஓட்டு கேட்கிறார்? “ஓட்டுப் போடு, இல்லையானால் வால்பாறையிலே சுட்டதைப் போலச் சுட்டுத் தள்ளுவேன்” அதுதானே பொருள்? நீங்கள் எப்படி, இதைச் சகித்துக்கொள்ளுகின்றீர்கள்?

அண்ணாத்துரைக்கு ஓட்டுப் போடுவது இல்லையா-அது நாளை“ககுத் தீர்மானியுங்கள். இன்றைக்கு வேண்டாம்.

எப்படி நீங்கள் அதற்கு அனுமதி அளிக்கின்றீர்கள்? 5 பேரைச் சுட்டுக்கொன“றோமென்று அதற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டாரா? உங்களிடத்திலே ஒரு சொல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரா? ஒரு தடவை ‘ஐயோ பாவம்’ என்றாவது சொன்னாரா? “அதர்மம் என்ன செய்வது?” என்றாரா? அல்லது அந்த விஷயத்தையாவது சொன்னாரா உங்களிடத்தில்? நான் சொல்லுகின்றேனே இன்றைய தினம். இதற்காவது பதில் சொல்லுவாரா? என்ன சொல்லுவார். “தொழிலாளி கூச்சல் போட்டால் என்னய்யா சொல்வார்கள்? போலீஸ் ஸ்டேஷனைத் தாக்கப்போனார்கள். போலீஸ்காரர்கள் தற்பாதுகாப்புக்காகச் சுட்டார்கள். அதிலே சில பேர்கள் செத்தார்கள். அதற்கு நான் என்ன செய்ய? “இதைத்தானே வெள்ளைக்காரன் சொன்னான்.

வெட்கமில்லை உனக்கு! மானம் இல்லை? அன்றைய தினம் அந்த வெள்ளைக்காரனைப் பார்த்து நீ என்ன சொன்னாய்? “போலீஸ் நிலையத்தைத் தாக்கினால் என்ன? மக்கள் ஆயுதம் தாங்கிக் கொண்டு வந்தால் என்ன? வெள்ளைக்காரனே என்னுடைய மக்களைச்சுட்டா கொல்லுவது நீ” என்று கேட்ட அந்த நாக்கு, பேசிய அந்த தேசியம், எதிர்த்த அந்த ரோஷம், வால்பாறையிலே 5 பேர் செத்த நேரத்திலே எங்கே ஓடி ஒளிந்து கொண்டது? எங்கே போயிருக்கிறது?

காங்கிரஸ்காரர்களை நான் தான் வணங்கிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். நீங்கள் நாட்டுக்குப் பெரிய துரோகம் செய்கின்றீர்கள்; இந்த அக்ரமங்களை எல்லாம் தட்டிக் கேட்காத வரையிலே, நாட்லே இப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும்.

இட்லரை இப்படித்தான் செர்மன் நாட்டு மக்கள் தட்டிக் கேட்காமல் இருந்தார்கள். துவக்கத்தில், இட்லர் தன்னுடைய ஆட்களுக்கெல்லாம் சாயச் சட்டை மாட்டி “எதிர்ப்பவர்களை அடித்து விரட்டு, சுட்டுதள்ளு, இந்த நாட்லே ஒரே கட்சிதான் இருக்க வேண்டும். அதுதான் நாசிக்கட்சி. அந்தக் கட்சிக்கு நான் தான் தலைவன“. என்னுடைய சொற்படிதான் செர்மனி ஆட வேண்டும்” என்று கிளம்பிய நேரத்தில் செர்மன் நாட்டு மக்கள் அச்சப்பட்டுக் கொண்டு, அவனைத் தடுக்காமலிருந்தார்கள். அதனுடைய விளைவு என்ன ஆயிற்று? செர்மன் நாட்டு மக்கள் அடிமையானது மாத்திரமல்ல, இட்லர் உலகத்தின் மீதே பாய்ந்தான். எவ்வளவு பெரிய கேடு முறையிலே கிள்ளாததாலே ஏற்பட்டது!

அதைப்போல இந்தக் காங்கிரஸ் சர்வாதிகாரத்தை நீங்கள் இந்தத் தேர்தலிலே கிள்ளி எறியாவிட்டால், இனி அடுத்த 5 ஆண்டு ஆகிவிட்டால், பிறகு எப்படி இட்லரை செர்மனியிலே இருந்து நீக்க முடியவில்லையோ, அதைப்போல் காங்கிரஸ் நாசிசத்தை, பாசிசத்தை இந்த நாட்டிலே இருந்து உங்களாலே விரட்ட முடியாது. இந்த உண்மையைக் காங்கிரஸ் நண்பர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் பேசுகின்றபோது சொல்லுகின்றார்கள்! காங்கிரஸ் ஆட்சியில் சில குறைகள் இருக்கின்றன, என்ன செய்யலாம், நாங்கள் சின்னஞ்சிறு பாலகனைப் போல், பிறந்த 10 வருடம்தானே ஆயிற்று. போகப் போகச் சரியாகப் போகும். போகப் போகச் சரியாகப் போகட்டும். பத்து மாதத்துக்குப் பிறகுதான் குழந்தை பிறக்கும் என்கிறார்கள். நான் ஒன்றும் 4வது மாதத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் 4,5 மாதத்தில் மருத்துவரிடத்திலே காட்டி “இது உண்மையிலே பிள்ளைதானா? அல்லது பூச்சியா?” என்று கேட்டு விடுங்கள், இல்லையானால் அது 10 மாதம் ஆகி, 12 மாதம் ஆகி, 15 மாதம் ஆகி வயிறு மட்டும் பெருத்துக் கடைசியிலே அறுவைக்குப் போக வேண்டிய நிலைமை வந்து விட்டால் என்ன செய்வது? என்றுதான் ஒரு சித்த வைத்தியனிடத்திலேயோ காட்டி, “ஐயா என் மனைவிக்கு மாதம் 4 ஆகிறது-தலை முழுகவில்லை-கொஞ்சம் நாடிப்பரீட்சை பாருங்கள்’ என்று சொல்லி அவர் பரிசோதித்து, நம்மிடத்திலே வந்து ஒரு புன்சிரிப்புடன் “பரவாயில்லை, போங்கள்-பிள்ளையோ பெண்ணோதான்” என்றால் நமக்குத் திருப்தி. மாதங்கள் ஆகட்டும். 10வது மாதத்திலே பிள்ளை பிறக்கட்டும்.

அதை போல காங்கிரஸ்காரர்கள் நல்லாட்சி நடத்துகின்றார்கள் என்பதற்கு எனக்கு உறுதி கிடைத்தால் 10 அல்லது 25 ஆண்டுகள் கூட நான் பொறுத்துக் கொண்டிருப்பேன். ஒரு நாட்டினுடைய வாழ்க்கையில் 25 ஆண்டுகள் என்பது சிட்டிகை போடுவது போல், நீண்டகாலமல்ல.

ஆனால் அது கருவா, சூதக வாயுவா என்று எனக்குத் தெரிய வேண்டும். இந்த ஆட்சியிலே நன்மை கிடைக்குமா கிடைக்காதா என்பதற்கு எனக்கு அத்தாட்சி தேவை.

எனக்குத் தேவை, எனக்குத் தேவை என்று கேட்கிறேன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மகத்தான மக்கள் சக்தியின் சார்பிலே நான் கேட்கிறேன். ஆகையினாலே அந்த எனக்கு என்பதற்குப் பொருள் அண்ணாத்துரை சார்ந்திருக்கின்ற கழகத்திற்கு அந்த கழகத்தாலே உருவாக்கப்பட்டிருக்கின்ற எண்ணத்திற்கு அந்த எண்ணத்திற்கு ஆட்பட்டிருக்கின்ற பெருந்திரளான மக்களுக்கு அந்த மக்களுடைய நல்வாழ்வு அதிலே இருக்கிறது என்பதாலே நான் உரிமையுடன் கேட்கிறேன்; காங்கிரஸ் ஆட்சியில் நல்வாழ்வு கிடைக்கும் என்பதற்கு எனக்கு உத்திரவாதம் காட்டுங்கள் என்று.

இங்கே ‘காஸ்’ விளக்குக் கொளுத்துகின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்-கொளுத்தக் கொளுத்த அணைகிறது. “என்னய்யா இன்னும் எரியவில்லையே” என்று கேட்டால், “கொஞ்சம் இருங்கள், அந்தக் கரியெல்லாம் கீழே உதிரட்டும் எரியும்” என்கிறார். “சரி” என்று ஒப்புக்கொள்கின்றோம். ஆனால் அந்த (மாண்டில்) திரியே மாட்டாமல் அவர் சொன்னால் என்ன சொல்லுவோம்? “யாரை அப்பா, ஏமாற்றுகிறாய்? அதிலேதான் “மாண்டில் இல்லையே” என்று கேட்க மாட்டீர்களா?

அதைப்போலவே காங்கிரஸ் ‘காஸ்’ விளக்கில் ‘மாண்டில்’ இல்லை, அதனால்தான் “இந்த விளக்கு எரியாது. இது வேண்டாம்; வேறு ஒரு அகல் விளக்காவது வை” என்று நான் சொல்லுகின்றேனே தவிர, நான் ஒன்றும் அவசரக்காரன் அல்ல. நான் எதிலும் அவசரப்பட்டதில்லை. அவசரப்பட்டுப் பேசியதுமில்லை, அவசரப்பட்டு நடந்ததுமில்லை, பொறுத்துக் கொள்ளுவேன் தாங்கிக் கொள்ளுவேன்.

ஆனால் காங்கிரஸ்காரர்கள் மக்களை ஏமாற்றுவதற்குச் சொல்லுகின்றார்கள். அவர்கள் சொல்லுகின்ற உவமை, சின்னக்குழந்தை தானே நாங்கள், பத்து வயதுப் பாலகன், எழுந்து வேலை செய்தால் நன்றாகச் செய்வோம் என்கிறார்கள்.

நான் அதற்குத்தான் பாரதக் கதை உதாரணத்தைச் சொன்னேன், பகவான் கண்ணனாக அவதாரம் எடுத்தார். அவர் சின்ன வயதில் வெண்ணெய் மட்டும்தான் திருடினார். சின்ன வயதில் மட்டும், யசோதை கண்ணனைப் பிடித்து, “கண்ணா, மணிவண்ணா, நம்முடைய வீட்டிலே திருடுகிறாய்” என்று தடுத்திருந்தால், அந்த கோபாலகிருட்டினன், பெரியவனான பிறகு பெண்களுடைய சேலையைத் திருடி இருக்கவே மாட்டான். கண்ணனையே அப்படிச் செய்ய வேண்டும் என்று பாரதம் சொல்கிறது என்றால், இந்தக் காங்கிரஸ்காரர்களை நீங்கள் தட்டிக் கேட்காவிட்டால், பின்னாலே இவர்கள் என்னென்ன செய்வார்களோ?

பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தாயே! நான் பார்த்த பள்ளிக்கூடம் இப்படித்தான் இருக்கிறது? பத்து ஆண்டுகளில் ஒன்றுமே செய்யாதபோது, இருபதாவது ஆண்டில் செய்வாய் என்று எப்படிச் சொல்வது? கூரை ஏறி கோழி பிடிக்காதபோது, கோபுரம் ஏறி வைகுந்தத்துக்கு வழிகாட்டுகிறேன் வா என்றால் நான் எப்படி உன் பின்னே வருவது?

ஏழையினுடைய நிலையை உயர்த்து உயர்த்து என்று நாங்கள் சொல்லுகின்றோம். நீ அதற்கு என்ன சொல்லுகின்றாய்? “நாமாக உயர்த்தினால் உயராது. அவர்களை உழைக்கச் சொல்லு” என்கிறார் பண்டித நேரு. எவ்வளவு ஈவு இரக்கமற்று அதைப்பேசுகிறார்! அரசியல் அநுபவம் ஏற்படவில்லை மக்களுக்கு. ஆகவே எதை வேண்டுமானாலும் பேசலாம் என“று பேசுகிறார் போலும்! நம்மைப் பார்த்து “உழையுங்கள் உழையுங்கள்” என்கிறார்.

உழைத்து உழைத்து மேனி கறுத்துப் போனவர்கள், உழைப்பது தவிர வேறு ஒன்றும் தெரியாதவர்கள், உழைக்கின்ற நேரம் போக மிச்ச நேரமே இல்லாதவர்கள், தூங்குகின்ற நேரத்திலும் உழைப்புக்கனவே காணுகின்றவர்கள், அப்படிப்பட்ட உங்களைப் பார்த்து “உழையுங்கள் உழையுங்கள்” என்கிறார். நீங்கள் உழைக்காமலா மாடி வீடு கட்டப்பட்டது. பாதை போடப்பட்டது; ஆடை வகைகள் உற்பத்தி ஆயிற்று; காடெல்லாம் கழனியாயிற்று; கரும்பு கிடைத்தது; புகையிலை கிடைத்தது; சிமெண்ட் கிடைக்கிறது?

யார் உழைக்கவில்லை? ஏதோ நம்முடைய மக்கள் ஆலமரத்திலே உட்கார்ந்து கொண்டு நாலு பேர் ஐந்து பேர் சேர்ந்து, தருமர் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்ததைப் போல், சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்பதைப் போல், பக்கத்திலே நேரு பண்டிதர் வந்து பார்த்து, “பாரதமாதாவின் புத்திரர்களே, இப்படி நேரத்தைப் பாழாக்குகின்றீர்களே! தேசம் எப்படி முன்னேறும்? எழுந்திருங்கள், எழுந்திருங்கள், சொக்கட்டான் ஆடாதீர்கள், உழையுங்கள்-உழைத்தால்தான் செல்வம் கிடைக்கும்” என்று எடுத்துச் சொல்கிறார் என்றால் என்ன பொருள்?

வேகமாக ஓடாத மாட்டை, கட்டி ஓட்டிக்கொண்டு வருவான் வண்டியில். அந்த மாடு ஓடாது என்று தெரியும். ஓடி ஓடி அலுத்து விட்டது. உழைத்து உழைத்து அலுத்துவிட்டது. உள்ளே இருக்கிற நாம் சொல்லுவோம் “என்னய்ய இந்த வண்டி இப்படிப் போகிறதே. ஆமை போல், தட்டி ஓட்டு” என்போம். நாம் சொன்ன காரணத்தினாலே அவனும் நாலு அடி அடித்து ஓடு ஓடு என்பான். அது ஓடாது அடி மட்டும்தான் மிச்சமாகும்.

அதைப்போல் நம்மைப்பார்த்து ‘உழையுங்கள், உழையுங்கள்’ என்று நேருபண்டிதர் சொல்வதால், நாம் வேலை செய்கின்ற இடத்து முதலாளி இருக்கிறாரே அவர் மாட்டை அடிப்பது போலத் தொழிலாளியை அடிக்கிறார். “பாடுபடு பாடுபடு” சரியாக இருக்கட்டும், சரியாக இருக்கட்டும் என்று! ஓடாத மாட்டை ஓட்டை வண்டியிலே கட்டி ஓட்டுகின்ற வண்டிக்காரன், முதுகிலே தட்டித் தட்டி அடித்து, உள்ளே உட்கார்ந்திருப்பவரை மகிழ்ச்சிப்படுத்துவதைப்போல், ஆலையிலே வேலை செய்கிற தொழிலாளியை முதலாளி தாக்குகிறான். தோட்டத் தொழிலாளியைத் தோட்ட முதலாளி தாக்குகிறான். அவன் சரியாக வேலை செய்து “போதுமான கூலி கிடைக்கவில்லையே” என்றால் அவனைத் துப்பாக்கியாலே சுட்டுக்கொல்லுகின்ற ஒரு துரைத்தனம் இன்றைய தினம் நடக்கிறது. இதை நியாயம் என்கிறீர்களா?”

இது அநியாயம் என்று எடுத்துச் சொல்வதற்கு யாராவது அங்கே உள்ளே சட்டசபையில் உட்கார்“ந்தால்தான் முடியுமே தவிர, வேறு எப்படி இது அநியாயம் என்பது தெரியும்?

சாதாரணமாகத் தெருக்கூத்து ஆடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மீசை வைத்துக்கொண்டு வருகிறான் அர்ச்சுனன் வேடக்காரன். ஒரு பக்கத்து மீசை பெரியதாகவும், மறுபக்கத்து மீசை சின்னதாகவும் இருந்தால், உட்கார்ந்திருப்பவன் சொல்ல மாட்டான் மீசையின் அலங்கோலத்தை! உடனே அர்ச்சுன வேட்டைக்காரன் கோபப்பட்டு, கையிலே இருக்கிற வில்லை எடுத்து என்னையா இப்படி சொன்னாய் நான் யார் தெரியுமா? விட்டேனானால் அம்பு மார்பைத் துளைக்கும் என்றா சொல்லுவான். உள்ளே போய் மீசையைச் சரிப்படுத்திக் கொள்ளுவான். அதைப்போல் உனக்கிருக்கும் மீசை ஒரு பக்கம் சின்னது, ஒரு பக்கம் பெரியது என்கிறேன். நீ பாணத்தை எடுத்து என் பேரில் போடுவேன் என்கிறாயே! உள்ளே போய் மீசையைச் சரிப்படுத்திக் கொள்வதை விட்டு என் பேரிலே பாய்வதா? இவ்வளவு பேசுகிற அண்ணாத்துரை நீ வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டால், நான் வந்த பிறகு சொல்லு, நான் வந்த பிறகு எனக்கு மீசை எப்படி இருக்கிறது அல்லது தாடி வளர்ந்து விட்டது. அல்லது நடக்கத் தெரியவில்லை என்றால் வெளியிலே இருந்து நீ சொல்லு, ஜனநாயகம் என்றாலே அது தானே பொருள்?

எப்படி ஏற்றம் இறைப்பவர்கள் மேலே உள்ளவர் கீழே போய், கீழே உள்ளவர்கள் மேலே போனால்தான் கேணியிலே இருக்கிற தண்ணீர் வெளியிலே வருவதைப்போல், எதிர்க்கட்சி ஆளும் கட்சி ஆளும் கட்சி-எதிர்க்கட்சி என்று மாறி மாறி ஏற்றம் இறைத்தால்தான் தண்ணீர் வருமே தவிர, நான் ஒருவன்தான் இருப்பேன்; வேறு யாரும் கூடாது என்றால், எப்படி அப்பா ஏற்றம் நடக்கும்?

கவலை மாட்டைப்போய் பார். முன்னாலும் போகும் பின்னாலும் போகும். போனால்தான் தண்ணீர் வரும். இதற்கெல்லாம் நியாயம் தெரிகி பொழுது, ஆட்சியிலே ஒரு எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்றால், அது ஏன் என்று கேட்கிறீர்களே, உங்களுடைய அரசியல் ஜனநாயகம் ஏன் இந்த அளவுக்குப் பட்டுப் போகிறது?

அண்ணாத்துரை கேட்கிற காரணத்தாலா? அண்ணாத் துரைக்குப் பதில் வேறு யாராவது கேட்டால் அப்போது அரசியல் புரியுமா?

உங்களைக் கேட்கவேண்டுமென்ற ஆசையாக இருக்கிறது; ஏன் தான் ஜனநாயகத்தில் உங்களுக்கு அவ்வளவு ஐயம்?

அல்லது நாங்கள் போனால் அந்த ஜனநாயகம் நடக்காது என்றாவது கருதுகின்றீர்களா?

யார் வேண்டுமானாலும் வரலாம்; ஆனால் நாம் வரக்கூடாது! நாம் வரக்கூடாது என்பதற்கு என்ன பொருள்? நாம் வந்தால் பல செய்திகள் வெட்ட வெளிச்சமாகின்றன. ஆகியினாலே, எப்படி முக்காடு போட்டுக்கொண்டு போகிற ஒருவனைப் பார்த்துக் கூப்பிட்டால், அவன் நாணயமானவானால் நிற்பான், மடியிலே கன்னக்கோல் இருந்தால், வேகமாக ஓடுவான்-அதைப்போல நாம் ஜனநாயகத்திலே கை தட்டிக் கூப்பிடுகின்றோம்; மடியிலே கன்னக்கோல் உள்ளவன் எல்லாம் கலங்குகின்றானே தவிர, மடியிலே கனமில்லாவிட்டால் வழியிலே என்ன பயம்?

உன்னுடைய ஆட்சியிலே அலங்கோலங்கள் இல்லாவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் வந்தால் என்ன கெட்டுவிடும்? விட்டுப்பார். இதைத்தானே ஜனநாயக அரிச்சுவடியே சொல்லுகின்றது?

இதை எடுத்துச் சொல்வதற்கு இந்தத் தேர்தல் பயன்பட வேண்டும் என்றுதானே நாங்கள் எல்லாம் தேர்தலில் ஈடுபடுகின்றோம்.

ஆகையினாலே நாட்டு மக்கள் இவைகளை எல்லாம் நன்றாகச் சிந்தித்துப் பார்க்கட்டும்.

காங்கிரஸ்காரர்கள் தான் நாட்டை ஆளத்தக்கவர்கள், அவர்களுக்கு ஈடு இல்லை, இணை இல்லை என்றால் தேர்தலே வைக்க மாட்டார்கள். ஒரு கலெக்டரை நியமித்தால், அவர்தான் அந்த மாவட்டத்திற்கு ஏற்ற திறமை பெற்றவர், தகுதி பெற்றவர், பட்டம் பெற்றவர் என்றால் அவர் ஏதாவது அக்ரமக் காரியம் செய்தாலொழிய அவரை நீக்கிவிட்டு வேறு கலெக்டரை வைக்கமாட்டார்கள்.

ஆனால் நாட்டிலே ஜனநாயகம் என்று சொல்லுக்கு எவ்வளவு உத்தமரானாலும் சரி, எவ்வளவு அற்புதங்களைச் சாதித்த அமைச்சரானாலும் சரி, எவ்வளவு பெரிய நாட்டுக்கு உடைமையை கட்சியானாலும் சரி, 5 ஆண்டுக்கு ஒருமுறை மறுபடியும் மறுபடியும் மக்களிடையே போக வேண்டும். ‘ஐயா நான் இன்னின்ன செய்தேன், என்னாலே இன்னின்ன நன்மைகள் ஏற்பட்டன. இதோ நான் கட்டிவைத்த தொழிற்சாலை, அதோ பாருங்கள் நான் கட்டிக்கொடுத்த அணைக்கட்டு” என்று எடுத்துக்காட்டியாவது, மறுபடியும் என்னைச் சட்டசபை உறுப்பினர் ஆக்குங்கள் என்று கேட்கச் சொல்லுகிறதே தவிர, இவர்தான் நாட்டை ஆளத் தகுதி படைத்தவர், ஆகையினாலே இவரே இருக்கட்டும் என்று, கோயில் அர்ச்சகர் என்றைய தினம் அர்ச்சகர் ஆனாரோ, அவர் மகன் வந்து ஒப்புக்கொள்ளுகின்ற வரையில் அர்ச்சகராக இருப்பதைப் போல், ஜனநாயகம் சொல்லுவதில்லை. ஆகையினாலே தான் 5 ஆண்டுக்கு ஒருமுறை கட்சி மாறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம்.

உலகத்திலே பெரிய போர் நிகழ்ந்து இட்லரை அடக்குவதற்காக அகில உலகமும் ஒன்றாகத் திரண்ட காலத்தில் இங்கிலாந்தில் சர்ச்சில் முதல் மந்திரியாக இருந்தார். அவனுடைய வீர தீரத்தைப் புகழாத நாடில்லை-அவனுடைய ஆற்றலை அறியாத மக்கள் இல்லை-அவனாலே உலகம் பெறாத நன்மையில்லை-போரைப் பொறுத்தவரை அவ்வளவு ஆற்றல் படைத்த சர்ச்சிலானாலும், அடுத்த 5 ஆண்டிற்கு இங்கிலாந்து நாட்டின் தேர்தல் வந்தது. தேர்தலில் அவரும் ஈடுபட்டார். ஈடுபட்ட காலத்திலே, இந்தக் காங்கிரஸ்காரர்கள் பேசுகின்றார்களே, அதைப்போல அவர் பேசவில்லை. சர்ச்சில் ‘ஓட்டு’ கேட்டார்; சர்ச்சிலுக்கு மட்டும் ஓட்டளித்தார்கள். அவருடைய கட்சிக்கு ஓட்டளிக்கவில்லை. இங்கிலாந்து நாட்டையே காப்பாற்றியவன் என்றாலும் இங்கிலாந்து நாட்டிலே வந்து “ஐயா எனக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று கேட்கிறான்-எதிர்க்கட்சியிலே அட்லி இருந்து கொண்டு “அவர்களுக்குப் போடாதீர்கள் அவர்களாலே போரைத்தான் நடத்தத் தெரியுமே தவிர, அமைதியை ஏற்படுத்த தெரியாது” என்றார். நாட்டுமக்கள் அட்லியை ஆதரித்தார்கள். தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது.

வந்த தொழிற்கட்சியையாவது மக்கள் அப்படியே வைத்திருந்தார்களா என்றால், சமாதான காலத்திலே ஆட்சியிலே இருந்த அட்லி, மறுபடியும் உலகத்தில் போர்ச் சூழ்நிலை ஏற்பட்ட உடன் அதைச் சமாளிக்க அட்லிக்குத் திறமை இருக்குமா இருக்காதா என்று மறுபடியும் தேர்தல் நடத்திய உடன் அட்லி தேவை இல்லை, சர்ச்சிலே வரட்டும் என்றார்கள்.

இதை நான் உங்களுக்குச் சொல்லுவதற்குக் காரணம், அந்த நாட்டிலே ஜனநாயகம் எவ்வளவு விழிப்போடு இருக்கிறது-இந்த நாட்டிலே அரசியல் மந்தத் தனம் எவ்வளவு இருக்கிறது என்பதை உணர்த்தத்தான்!

காங்கிரஸ்காரர்கள் சொல்லுகின்றார்கள். சிலர் நம்புகின்றார்கள்-காங்கிரஸ் தவிர, வேறு எந்தக் கட்சிக்கும் நாட்டை ஆளுவதற்குச் சக்தி இல்லை, வசதி இல்லை, ஆற்றலில்லை என்று இதைத்தானே சர்ச்சில் சொன்னான்! சர்ச்சில் எப்படி ஆணவமாகச் சொன்னானோ இந்த நாட்டு மக்களுக்கு ஏதும் இல்லை என்று, அதே முறையில்தான் இன்றைய தினம் டெல்லியிலே உள்ள பாதுஷாக்கள் பேசுகின்றார்கள்.

ஒன்றுமட்டும் கல்மேல் எழுதுவதுபோல், உங்கள் நெஞ்சத்திலே பதித்துக் கொள்ளுங்கள் சர்ச்சில் எப்படி ஆணவத்தோடு பேசியவன், இந்தியாவுக்கு விடுதலையைத் தாந்தானோ, அதே முறையில் ஆணவத்தோடு பேசுகின்ற டெல்லி, தன்னுடைய ஆணவத்தைக் குறைத்துக் கொண்டு தமிழர்களிடத்தில் தனியாட்சியைத் தந்தே தீரும். அதைப்பெறாமல் நாங்கள் ஓயப்போவதில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, ‘ஓட்டு’ போடுவதா இல்லையா அழுத்தமான காங்கிரஸ்காரர்கள் பாரதமாதாவைக் கேட்டுத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்! அவர்களை நான் வற்புறுத்தவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்தஸ்து மார்ச்சு மாதத்தில் என்ன நடக்கிறதோ அதைப் பொறுத்து இல்லை. தெளிவாக அதை பொறுத்து இல்லை.

(காஞ்சீபுரம்-9.2.1957)