அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அதிகாரம் அவர்களிடம் அறைகூவல் நமக்கு!
1

’ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போடுவோம் – என்று, தி.மு.கழகத்தினர் பேசினார்களே, போட்டார்களா? என்று, மாநில முதலமைச்சர் காமராசர் அவர்கள்,கூட்டமொன்றில் பேசினாரல்லவா? அதற்கு அண்ணா அவர்கள் 12.4.1962 இல் தஞ்சையில், தஞ்சை மாவட்ட எம்.எல்.ஏ.ககளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாக் கூட்டத்தில், ‘அதனைச் செய்கின்ற அதிகாரம் காங்கிரசிடத்தில் இருக்கிறது, செய்யச் சொல்லுகின்ற அதிகாரம்தான் எங்களிடத்தில் இருக்கிறது‘ என்று குறிப்பிட்டு விட்டு, அதுபற்றி மேலும் கூறியதாவது.

“ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போடக்கூடிய இடத்தில் நாங்கள் இல்லை, எங்களை அந்த இடத்திலே அமர்த்திவிட்டு, ‘ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போட்டுக் காட்டு, பார்க்கலாம்‘ என்று கேட்டால், அதிலே அரசியல் நாணயம் இருக்கிறது – அதிலே அரசியல் நேர்மை இருக்கிறது –அதிலே அரசியல் அறிவு இருக்கிறது.

நிபந்தனைகளை ஒத்துக்கொள்வாரா?

‘ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போடு‘ என்ற அறைகூவலை ஏற்றுக் கொள்கிறேன். போடுகிறோம், ஆனால், நாங்கள் கேட்கிற சில நிபந்தனைகளை ஆட்சியாளர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

“எங்கெங்கு நெல்மூட்டைகளை பதுக்கி வைக்கப்படுகின்றன? எவ்வெப்போது? நெல்மூட்டைகள் கள்ளத்தோணி ஏறுகின்றன? யார், யார் நெல் மூட்டைகள் மீது பாங்கின் மூலம் வணிகச் சூது விளையாடுகிறார்கள்? என்பதைக் கண்டு பிடிக்க தி.மு.கழகத்திற்கு அதிகாரம் கொடுத்து, அதற்கென்றே ஒரு போலீசுப் படையை முழு அதிகாரத்தோடு ஏற்படுத்தினால், எந்தெந்த மாளிகைகளில் மாளிகைக் கடியிலுள்ள பாதாளச் சிறைகளில் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை எங்கள் சாதாரணத் தொண்டரே கண்டுபிடித்து விடுவார்.

நாங்கள் வந்தால்தான் குறையும்!

நெல் விளையாமலா இருக்கிறது – பத்திரிகையிலே இவர்ளே பெரிதாகப் போட்டுக் கொள்கிறார்கள் ‘உற்பத்தி பெருகி விட்டது‘ என்று!

உற்பத்தி பெருக பெருக விலை குறைய வேண்டுமே தவிர, உயரக்கூடாது. ஒரு பக்கத்தில் உற்பத்தி பெருகுகிறது, இன்னொபரு பக்கம் விலை ஏறுகிறது – என்றால், மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க ‘டிகிரி‘ ஏறிக் கொண்டே இருப்பது போனற்துதான்!

ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போடத் தகும் இடத்தில் இருந்து கொண்டு, எங்களைப் பார்த்துக் கேள்வி கேட்பது ஏன்?

‘இவர்கள் இருக்கிறது வரையில் விலை குறையாது, நாங்கள் வந்தால்தான் விலை குறையும், என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ளுகிறார்கள் என்றுதான் பொருள்.

“தேர்தல் நேரத்தில் அந்தந்தக் கட்சிகள், கொள்கைகளை நாட்டு மக்களிடத்திலே எடுத்து வைக்கின்றன. அந்தத் திட்டங்களையும் கொள்கைகளையும் ஆதரிக்கின்ற மக்கள் அவர்களுக்கு வெற்றி தேடிக் கொடுத்துச் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், சட்டமன்றத்திலே அமர்ந்த பிறகு அவர்கள் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தக்காரர்கள் என்றில்லாமல், அவர்கள் எந்தத் தொகுதியிலே தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அந்தக் தொகுதிக்குள்ள குறைவினை நீக்குகின்ற பெரும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்.

அரசியல் பெருந்தன்மை வேண்டும்!

என்னுடைய கழகத்தைச் சார்ந்தவர்கள், அப்படிப்பட்ட அரசியல் பெருந்தன்மையோடு, நடந்தகொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதற்காக நான் அரசியலில் பெருந்தன்மையைப் பேச நேரிட்டது என்றால், இன்று மாலையில் இந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான மு. கருணாநிதியை வரவேற்று தஞ்சை நகராட்சி மன்றத்திலே ஒரு வரவேற்பு அளித்தார்கள், நகராட்சி மன்றத்திலே வரவேற்பு அளிக்கப்பட்டதென்றால், பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த வரவேற்புத் தீர்மானத்திற்கு ஆதரவளித்ததால்தான் அந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிந்தது, 18 தோழர்கள் அத்தீர்மானத்தின் மீது வாக்களித்ததால் தான் வரவேற்புக்கு ஒப்பம் கிடைத்ததே தவிர, சிறுபான்மையாக உள்ளவர்கள் அந்த வரவேற்பைத் தந்திருக்க முடியாது, எனவே, பெரும்பான்மையானவர்கள் நகராட்சி மன்றத்தை நடத்துகிறவர்கள். நண்பர் கருணாநிதிக்கு வரவேற்பு கொடுப்பதென்று தீர்மானித்த பிறகு, அந்த வரவேற்பு வைப்வத்தில் நகராட்சி மன்றத் தலைவரும், துணைத் தலைவரும், கலந்து கொள்ளாதது அரசியல் பெருந்தன்மை ஆகாது.

சனநாயகத்தில் அர்த்தமில்லை!

என்றாலும், நம்முடைய கழகத்தோழர்கள் – தி.மு.க. தோழர்கள் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் – அவர்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடாது என்று எந்தெந்தக் கட்சிக்காரர்கள் விரோத மனப்பான்மையோடு விபரீதமான செயல்களில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும், அப்படிப்பட்ட பகையுணர்ச்சியை நம்முடைய கழக்த தோழர்கள் சட்டமன்ற நடவடிக்கைகளிலே கலக்காமல் தொகுதியினுடைய குறைபாடுகளை நீக்குகின்ற அரரசியல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வார்கள்.

ஏனென்றால், அரசியல் பெருந்தன்மை நாட்டிலே வளர வேண்டும், அது வளராமல் சனநாயகத்தை வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

காட்டு ராஜாக்கள் காலத்தில், நமக்கு அவன் விரோதி, அவன் இருக்கின்ற வீடுகளை நான் கொளுத்திக் கருக்கிவிட்டேன், தரைமட்டம் ஆக்கிவிட்டேன்‘ என்ற தர்பார் போச்சு எழலாம்.

வாக்காளர்களை அவமதித்துள்ளார்!

ஆனால், ஜனநாயகத்தில் மக்களுடைய ஆதரவைப் பெற்றவர்கள் சட்டமன்றத்திற்குச் செல்கிறார்கள். தஞ்சை நகரத்தில் உங்கள் பேரன்பிற்கும், பேராதவிற்கும் ஆளாகி இன்றைய தினம் சட்டமன்றத்திற்குச் செல்கிற தம்பி கருணாநிதி அளிக்கப்பட்ட நகராட்சி மன்ற வரவேற்பு வைபவத்திற்கு நகராட்சி மன்றத் தலைவர் வரவில்லை என்றால், ‘அவர் கருணாநிதியை அவமதித்தார்‘ என்று அர்த்தமல்ல, ‘இந்தத் தஞ்சை நகரத்திலே உள்ள வாக்காளர் அனைவரையும் அவமதித்திருக்கிறார்‘ என்றுதான் பொருள் கொள்கிறேன்.

‘நகராட்சி மன்றத்தில் கருணாநிதி வரவேற்பு இல்லை‘ என்று அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருப்பார்களானால், நான் பதறி இருக்கமாட்டேன். எங்களுடைய கழக அரசியலில் பெருந்தன்மை அதிகம் இல்லாத இடங்களில் வரவேற்பு கிடைக்க வேண்டுமென்று நாங்கள் விரும்பவில்லை. இன்னமும் சொல்ல வேண்டுமானால், நாங்கள் பெருவாரியாக இருக்கிற சென்னை மாநகராட்சியில் நாங்கள் விரும்பினால் வாரத்திற்கு ஒருவருக்கு வரவேற்பு வைபவத்தை வைத்தக்கொள்ள முடியும்.

காமராசருக்குச் சிலை வைத்தோம்!

ஆனால், எங்கள் கழகத் தோழர் மேயராக இருந்த அந்த நாளில்தான், சென்னை மாநகராட்சி மன்றத்தில் – மாநகராட்சி மன்றப் பணத்தில் முதலமைச்சர் காமராசருக்குச் சிலை செய்து, அதை மவுண்ட் ரோடிலே அமைத்து, ஜவகர்லால் நேருவைக் கொண்டு திறக்கச் செய்கின்ற காரியத்தை நடத்திக் காட்டினோம்.

அந்த அரசியல் பெருந்தன்மையோடு இன்றைய தினம் நகராட்சி மன்ற வரவேற்பிற்கு வராதிருந்த அரசியலை நீங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பீர்களேயானால், அரசியல் பெருந்தன்மை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம்.

மாநகராட்சி மன்றத்திலே பெருவாரியாக இருக்கிற நாங்கள் – மேயர் பதவியைக் கைப்பற்றி இருக்கிற நாங்கள் – ஒரு வரியிலே சொல்லிவிட்டிருக்கலாம் – ‘மநாகராட்சியின் பணத்திலே காமராசருக்கு சிலை இல்லை‘ என்று! நாடும் அந்த மாநகராட்சியைக் கலைத்து விட்டிருக்க முடியாது, உள்ளவர்களுடைய தலைகளை வாங்கி விட்டிருக்க்வும் முடியாது.

ஆனால், அந்தப் பிரச்சினை மாநகராட்சியில் வந்த நேரத்தில், எங்கள் கழகத் தோழர்கள் எழுந்து, ஏழைப் பங்காளர் என்று பெயர் பெற்றவரும், உழைப்பாளிச் சமுதாயத்தைச் சேர்ந்தவரும் நாடு வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவருமான காமராசருக்கு, நம்முடைய காலத்தில் – நாம் மாநகராட்சி நடத்துகின்ற நேரத்தில் சிலை அமைப்பது அவருக்கு மட்டுமல்ல – நமக்கும் அது பெருமைதான்‘ என்று கூறினார். அந்த அரசியல் பெருந்தன்மையோடு சிலை அமைக்கப்பட்டது.

அதற்கு விழா வைக்கின்ற நேரத்தில் என்னைக் கூப்பிட்டுச் சிலை திறக்கச் சொல்லியிருக்கலாம், கருணாநிதியைக் கூப்பிட்டிருக்கலாம், ஏனென்றால் பெரும்பான்மையோர், மாநகராட்சியில் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

சிலை திறக்க நேருவை அழைத்தோம்!

ஆனால், காமராசர் சிலையை ‘அனைத்து இந்தியாவிற்குத் தலைவரும் – காமராசருக்கு அரசியல் ஆசானும் – இந்தியத் துணைகண்டத்தின் முடிசூடா மன்னருமான நேருவே வந்து திறக்கட்டும்‘ என்று ஏற்பாடு செய்து காமராசர் சிலையைத் திறந்தார்கள்.

அந்த அரசியல் பெருந்தன்மையோடு – இன்று நடைபெற்ற அரரசியல் பெருந்தன்மையற்ற காரியத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒருவேளை ‘இனி நாம் எங்கே மறுபடியும் அந்தப் பீடத்தில் அமரப் போகிறோம்?‘ என்று எண்ணி அவர்கள் வராது விட்டு விட்டனரோ என்னவோ?“

“காமராசர் பேசிக் கொண்டிருக்கிறார் – என் உயிர் இருக்கிற வரையில் நான் திராவிட நாடு பெறும்படியாக விடமாட்டேன், முன்னேற்றக் கழகத்தை அழித்துவிட்டுத்தான் நான் கண் மூடுவேன்“ என்று!

இது யாருக்குத் தெரியாது, உங்கள் கண் திறந்திருக்கிறவரையில் ஆயுதம் எங்கள் மேல்தான் பாயும். அது தெரியாமலா அரசியலில் இருக்கிறோம்? ஆகையினால் இதை யாருக்கும் அவர் சொல்லத் தேவையில்லை.

சர்ச்சில் கூட இப்படித்தான் சொன்னார். “நானிருக்கிறவரையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் கலையாது“ என்று! ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்‘ என்றால் சாதாரணமா? சூரியனே மறையாத சாம்ராஜ்யம்‘ – என்று பெருமையாகப் பேசிக் கொண்டார்கள்! ஒரு புறத்திலே ஆஸ்திரேலியாவிலே இருந்து இன்னொரு பக்கத்தில் ஆப்பிரிக்கக் கோடி வரையிலே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விரிவாகப் பரந்து விளங்கிக் கொண்டிருந்தது.

சர்ச்சில் பேச்சு நிலைத்த?

சர்ச்சில் துரைமகன் அவ்வாறெல்லாம் பேசிய பின் எந்த நிலையைக் கண்டார்? பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக – தனியரசாகி – தனி நாடாகி – அவை அத்தனையும் இன்று விடுதலை பெற்ற நாடுகளாக விளங்குகின்றன.

சர்ச்சிலுக்கில்லாத வீர ஆவேசப் பேச்சு – சர்ச்சிலினிடத்திலே இல்லாதத படைபலம் இவர்களிடத்திலே இருப்பதைப் போல் எண்ணிக் கொண்டு, ‘நாங்கள் இருக்கிற வரையில் திராவிடநாடு கிடைக்காது‘ என்கிறார்கள்.

“நாங்கள் இருக்கிறவரையில் அதைப் பெறாமல் விடப் போவதில்லை“ என்று நான் பதிலுக்குச் சொன்னால், மக்கள் என்ன எண்ணுவார்கள்? என்ன, அண்ணாதுரை இப்படி ஆவேசமாகப் பேசுகிறார்?“ காமராசர் அப்படிக் கண்டிப்பாய் பேசுகிறார்! என்று திகைக்கவா அரசியல்?

காரணங்கள் காட்டட்டும்!

திராவிடநாடு வேண்டாம் என்பதற்குக் காரணம் காட்டட்டும்! திராவிடநாடு கூடாது என்பதற்கு ஆதாரங்கள் காட்டட்டும்! திராவிடநாடு வந்தால், என்னென்ன கெடுதல் வரும் என்று தங்களுக்குத் தெரிந்ததை அவர்கள் சொல்லட்டும் அதைவிட்டு விட்டு, நாங்கள்திராவிட நாடு கொடுக்க மாட்டோம் என்று காமராசர் பேசுகிறார், அவராவதுத முதலமைச்சர், ‘அப்படிப் பேசலாம்‘ என்ற எண்ணமாகிலும் வரும்.

என்னைப் போல சாதாரண மனிதரான சிவஞானக் கிராமணியார் கூடச் சொல்கிறார் ‘இந்தக் காமராசர் ஒத்துக் கொண்டாலும் கூட நான் ஒத்துக் கொள்ளமாட்டேன்‘ என்று!

இப்பொழுது தேர்தல் எல்லாம் முடிந்துவிட்டன, மக்கள் அனைவரும் மனநிம்மதியோடு இருக்கின்ற நேரம், இந்த நேரத்திலே எடுத்துப் பேசுங்கள் – ‘திராவிட நாடு ஏன் கூடாது?‘ என்று! எங்களுக்குக் காரணம் காட்டுங்கள் – ‘திராவிட நாடு தனியாகப் பிரிந்தால் வாழமுடியுமா?‘ என்று! எங்களைக் கேளுங்கள்? மக்களைக் கேளுங்கள் – நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

தனிநாடு வாழமுடியுமா?

ஒருநாடு தனியாக வாழுமா? என்று கேள்வி கேட்க வேண்டுமானால், ‘ஒருநாடு தனியாக வாழ என்னென்ன தேவை?‘ என்பதை, முதலிலே நீங்கள் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். அதைத் தீர்மானித்துக் கொண்டு தான் ‘திராவிட நாடு தனியாக வாழ வழியிருக்கிறதா? என்று ஆராய வேண்டும். ‘சர்க்கரை கொடுங்கள்‘ என்று கடையிலே போய்க் கேட்டால், ‘கையிலே கொடுக்கவா, காகிதத்திலே கொடுக்கவா?‘ என்று கேட்க மாட்டான், எத்தனை வீசை வேண்டும், அல்லது எத்தனை பலம் வேண்டும் என்று தான் கேட்பான்!

அதே விதத்திலே, ‘திராவிட நாடு தனியாக வாழுமா?‘எ ன்று எங்களைக் கேட்பதற்கு முன்னாலே, ‘ஒருநாடு தனியாக வாழ வேண்டுமானால் என்னென்னெ இருந்தால் வாழும்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

நாடென்றால் எப்படி இருக்கவேண்டும்?

ஒரு வீடு நல்ல வீடா அல்லது என்பதற்கு என்ன அடையாளம்? வீட்டிற்கு முதலிலே நல்ல வாசப்படி இருக்கவேண்டும்? கதவு இருக்க வேண்டும்? கதவுக்குத் தாழ்ப்பாள் இருக்க வேண்டும், நாலு பக்கத்திலே சுவர் இருக்க வண்டும், சுவர் இருந்தாலும் உள்ளே வெளிச்சம் வரத்தக்க வசதி இருக்க வேண்டும், காற்று உள்ளே வர வழி இருக்க வேண்டும், அந்தக் காற்றினாலே மேலே போய்விடாதபடி கூரை பாதுகாப்பாக இருக்கவேண்டும் இதற்குப் பெயர் வீடு.

வீடு என்று சொல்லி, வீட்டின் நான்கு மூலையிலும் நான்கு பேர் நின்று கொண்டு ஒரு மூங்கில் கழியைப் பிடித்துக் கொண்டு, அதற்கு மேலே ஒரு ஓலைக்கொத்தைப் போட்டு, ‘இது வீடு‘ என்று சொன்னால் அது வீடு அல்ல! அதைப்போல, ஒரு நாடு என்று சொன்னால், என்னென்ன இருக்க வேண்டும், ஒரு வீட்டிற்கு உள்ள இலக்கணங்களை மனதிலே எண்ணிக்கொண்டு,ஒருநாட்டிற்கு என்னென்ன தேவை என்பதை எண்ணிப் பாருங்களேன்!

இதற்கொன்றும் பல்கலைக் கழகம் போகத் தேவையில்லை, உலகத்தை 90 நாட்களில் சுற்றி விட்டுவரத் தேவையில்லை, இருக்கிற இடத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.

நான்கு வளம் உள்ள நாடு!

ஒரு நாட்டுக்கு என்ன தேவை? அந்த நாட்டிலே நிலவளம் இருக்க வேண்டும், நீர்வளம் குடிவளம் இருக்கவேண்டும், மனவளம் இருக்க வேண்டும், இந்த நான்கும் இருந்தால்தான் அது ஒரு நாடாக இருக்க முடியும். இந்த நான்கும் இங்கே இருக்கின்றனவா – இல்லையா என்று பாருங்களேன்!

ஆளுகிற திறமை நமக்கு உண்டா, இல்லையா என்று யாருக்காவது சந்தேகம் வந்தால், ஒரு தடவை காமராசரை எண்ணிக் கொள்ளுங்கள். ஆளுகிற திறமை இருக்கிறதா – இல்லையா அவருக்கு? எப்படி வந்தது? அவருககு வந்திருக்கிற திறமை, அவருடைய உடன் பிறந்தவர்களான மற்றவர்க்ளுக்கு வராதா என்ன? காமராசருடைய குடும்பம் கர்நாடக நவாப் காலத்திலே இருந்து அமைச்சர் வேலை பார்த்து வந்ததா என்ன?

‘திராவிட நாடு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே‘ என்ற அற்ப ஆசையாலா அரசியல் நடத்துகிறோம்? ‘திராவிடநாடு திராவிடருக்கே‘ அந்தத் திராவிடரில், மக்கள் பார்த்து, ‘கக்கன் இருக்கட்டும்‘ என்றால் கக்கன்தான்! ‘காமராசர் இருக்கட்டும், என்றால் காமராசர்தான் ஆள வேண்டும். ‘மன்னை நாராயண சாமி இருக்கட்டும்‘ என்று அழைத்தால் மன்னை நாராயணசாமி தான் அங்கே போகலாம்.

‘ஆள முடியுமா?‘ என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்! இதைத் தான் சர்ச்சிலும் சொன்னார் – ‘இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கேட்கிறீர்களே, எப்படி உங்களாலே இந்தியாவியை ஆள முடியும்? என்று.

திராவிட நாட்டை நீங்களே ஆளலாம்!

‘அதற்குக் காந்தியார் கேட்டார் – ‘நீங்கள் எப்படி ஆளுகிறீர்கள்‘ என்று. ‘நாங்கள் ஆளுகிறோம் என்றால், எங்களுக்கு அறிவாற்றல் இருக்கிறது, வல்லமை இருக்கிறது‘ என்று சர்ச்சில் சொன்னார்.

“என்னிடத்திலும் இருக்கிறது, கொடுத்துப் பார்த்தால்தான் தெரியும்?“ என்று காந்தியார் சொன்னார்.

‘இல்லை, நீங்கள் அரசாண்டால், நல்ல அரசு இருக்காது, நல்ல ஆட்சி நடக்காது‘ என்று சர்ச்சில் கூறியபொழுது, காந்தியார் சொன்ன வாசகம் !No Government is as good as my Government) ‘என்னுடைய அரசைப் போல் வேறு எந்த அரசும் இருக்க முடியாது‘ என்பதாகும்.

அவர் சொல்லிப் பெற்ற சுய ராஜ்யத்திலே மூன்றாவது தடவையாக அமைச்சராகி இருக்கின்றவர்கள். ‘திராவிடநாடு தனியாகப் பிரிந்தால், ஆளுவதற்கு ஆள் யார் இருக்கிறார்கள்?‘ என்று கேட்பார்களேயானால், நாம் சொல்லும் பதில் இதுதான் – ‘நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்? திராவிடநாடு கிடைத்தாலும் நீங்கள் இங்கே தான் இருக்கப்போகிறீர்கள், இருக்கப் போவது மட்டுமல்ல – அப்போது ஆட்சிப் பொறுப்பிலே நீங்கள் இருக்க வேண்டும் என்றால், மக்கள் ஆதரவு கொடுத்தால் நீங்களே ஆளலாம்.

முழுப் பொறுப்பு வேண்டும்!

“ஆளை மாற்றச் சொல்லவில்லை, கட்சியை மாற்றச் சொல்லவில்லை,அமைச்சர் பதவி எங்கிருக்கிறது என்று கேட்கவில்லை நம்முடைய அரசிற்கு ஒரு தனித்தன்மை வேண்டும் – நம்முடைய ஆடசிக்கு ஒரு முழுப் பொறுப்பு வேண்டும் –நம்முடைய அரசுக்கு ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும்“ என்று தான் கேட்கிறோமே தவிர எங்களை அமைச்சராக்குங்கள் என்பதா பேச்சு?

நாங்கள் அமைச்சராக வேண்டும் என்றால், ஒரு தனிக் கட்சி நடத்தியா அமைச்சராக வேண்டும்? ஆளுங் கட்சியிலே போய்ச் சேர்ந்து அமைச்சராக வேண்டுமென்றால் முடியாதா?

அரசியலிலே பகை உணர்ச்சி கொண்டவர்களைக்கூட, இரவு நன்றாகத் தூங்கும்பொழுது தட்டி எழுப்ிக் கேளுங்கள் – ‘அண்ணாதுரையை அமைச்சராக்கலாமா? என்று! ‘தங்கம் போல் ஆக்கலாம், இந்தப் பாவி அந்தக் கட்சியில் அல்லவா இருக்கிறார்? என்று சொல்லுவார்களே தவிர, ‘சேச்சே, அவனாவது மந்திரியாவதாவது?‘ என்றா பேசுவார்கள்?‘

யாருக்க நாங்கள் பொறுப்பு?

“பொறுப்புமிக்க காரியத்தைத் தி.மு.கழகம் இன்றைய தினம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. வெட்ட வெளியிலே நடமாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், கட்டு இல்லை காவலில்லை. தட்டித் தயங்கி நடக்கத் தேவையில்லை, ஆனால், சட்டமன்றத்தில் 50 இடங்களை – நான்கிலே ஒரு பாகத்தைப் பெற்றிருக்கின்ற இந்த நேரத்தில் – எதிர்க்கட்சித் தலைவராக இரா. நெடுஞ்செழியன் அமர்ந்திருக்கின்ற இந்த நாட்களில் – பொறுப்புணர்ச்சியோடு எங்கள் கழகத் தோழர்கள் நடந்து கொள்வார்கள், என்பதை நாட்டு மக்களுக்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், பொறுப்புணர்ச்சி என்பது பணிந்து போவது என்று பொருளல்ல! ஆளுங்கட்சி எது சொன்னாலும் தலையாட்டிக் கொண்டு இருப்பதற்குப் பெயர், பொறுப்புணர்ச்சி அல்ல!

யாருக்கு நாங்கள் பொறுப்பு என்றால் பொது மக்களுக்கு நாங்கள் பொறுப்பு! யாருக்கு நாங்கள் தலைவணங்க வேண்டும் என்று கேட்டால் பொது மக்களுக்குத் தலை வணங்க வேண்டும்!

அதுவே தவிர, ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்திருக்கின்றவர்கள் எதைச் சொன்னாலும் – அப்படியே தலையாட்டிக் கொண்டிருக்கின்ற, தலையாட்டித் தம்பிரான்களாக எங்கள் தோழர்கள், நிச்சயம் இருக்க மாட்டார்கள்.

தஞ்சைத்தரணியிலே தொழில் வளமில்லையா!

வளம் கொழிக்கின்ற மாவட்டம் தஞ்சை மாவட்டமாகும், அந்த வளத்துடன் இந்தத் தரணியிலே நல்ல தொழில் திட்டங்கள் இல்லாமல் – தொழிலாளர்கள் நல்வாழ்வு வாழமுடியாமல் – தஞ்சைத் தரணியிலே இருந்து இலட்சக்கணக்கான மக்கள் தேயிலைக் காட்டுக்க ஓடியிருக்கின்றார்கள்.

தஞ்சைத் தரணி கோயம்புத்தூர் மாவட்டத்தைப் போல் தொழில் வளமிகுந்த மாவட்டமாக விரைவிலே மாற்றப்பட வேண்டும்.

வாண்டையாரையும், வலிவலத்தாரையும், உக்கடையாரையும், நெடும்பலத்தையும் நெடுங்காலத்திற்கு நம்பிக் கொண்டிருந்தால், ‘தஞ்சை தரணியின் வளம் வளர்ந்து கொண்டு போகும்‘ என்று எண்ணாதீர்கள்.

பூமி தரக்கூடிய விளைச்சல் நாளா வட்டத்தில் கொஞ்சம் கொஞ்சம் வளரலாமே தவிர, நிலம் தானாக விரிவடைந்து விடாது! கடலெல்லாம் திடீரென்று நிலமாகி விடாது.

ஆகையினால், நிலத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கின்ற தஞ்சைத் தரணி உழைப்பையும் நம்பித் தொழிலையும் வளர்க்கத் தக்க நல்ல தொழில் திட்டத்தை எங்களுடைய கழகத் தோழர்கள் சட்டமன்றத்திலே வலியுறுத்துவார்கள் என்பதைத் தஞ்சைத் தரணியிலே உள்ளவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கேற்ற இயற்கைவளம் தஞ்சைத் தரணியிலே இருக்கின்றன.