அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஐந்தாண்டுத் திட்டம் தீட்டிப் புனிதப்போர் நடத்துக!
1

ஆதிதிராவிடச் சமுதாயத்திடம் கழகம் வைத்துள்ள மதிப்பு குறித்து அண்ணா சட்டமன்றத்தில் விளக்கம்

சேரிகளைத் திருத்திப் பாதைகளை அமைக்க, குடிதண்ணீர் கிணறுகளைத் தோண்ட, பள்ளிகளைக் கட்ட, புறம்போக்கு நிலங்களை விளைநிலமாக்க, நிதிநிலை அறிக்கையிலே நிதி ஒதுக்கி – ஆண்டுக்காண்டு இந்த நிலையில் போய்க்கொண்டிருந்தால், எத்தனை ஆண்டில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் பலனை அடைய முடியும் என்ற அறிய விரும்புகிறேன் – 25 ஆண்டு வேண்டுமா? 50 ஆண்டில் சாதிப்பீர்களா? அல்லது நூறாண்டு தேவையா? இப்படி நீங்கள் இந்த வேகத்தில் வெட்டிக்கொண்டு போய்க் கொண்டிருப்பீர்களானால் பூரா இடத்தையும் வெட்டுவதற்கு முன், வெட்டப்பட்ட இடத் தூர்ந்துவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உங்கள் பக்கம் நிற்போம்

“மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி எனது கருத்தை அமைச்சரவை கேட்ட நேரத்தில் நான் குறிப்பிட்ட ஒரு கருத்தை இங்கே குறி்ப்பிட விரும்புகிறேன். அதற்கென்று சேரிகளைத் திருத்தவும் சேரிகளில் கிணறுகளை அமைக்கவும் புதிய வீடுகளைக் கட்டுவதற்கும் பாதைகளைப் போடுவதற்கும், புறம்போக்கு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்கும் ஐந்து ஆண்டுக் காலத்துக்கு நாம் இராணுவத்தைப் பயன்படுத்தி இவைகளை வைத்துக் கொண்டு, ‘இந்தச் சீர்திருத்தத்தை ஐந்து ஆண்டிலே சாதிக்கிறோம்‘ என்று திட்டத்தை மாற்றிப் போட்டுக் கொண்டாலொழிய ஆண்டுக்காண்டு தொகை ஒதுக்குவதால் மட்டும் இந்த வேலை முடியாது. அப்படிப்பட் ஒரு புனிதப்போரை நீங்கள் நடத்துகிற நேரத்தில் –நாங்கள் சார்ந்திருக்கிற கழகம் வேறு – காங்கிரசு வேறு என்ற அளவில் இருந்தாலும் – முற்போக்கு வேலையை விரும்புகிறவர்கள் ஒரு பக்கத்திலும் மற்றொரு பக்கத்தில் இந்த முற்போக்குப் பணியை விரும்பாதவர்களும் பிரித்து நிற்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் கனம் கக்கன் அவர்கள் உறுதியாக நம்பலாம் – நான் அவர் பக்கத்தில் இருப்பேனே தவிர வைதீகர்கள் பக்கத்திலே, பிற்போக்காளர்கள் பக்கத்திலோ நானோ என்னைச் சேர்ந்தவர்களோ நிற்க மாட்டோம்.

தனித் திட்டம் வேண்டும்

“அவர்களிடத்தில் ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடியுமா முடியாதா என்று நான் கவலைப்பட மாட்டேன் – பேசுவது ஆங்கிலத்தினால் மட்டும்தான் என்று நான் கருதவில்லை. நல்ல தமிழில் பேசலாம் – கனிந்த நட்பு, பேசுவதால் மட்டுமல்ல – பக்கத்திலிருந்து பணியாற்றுவதில் அத்தகைய நட்பு ஏற்பட முடியும் என்ற காரணத்தால் இதைக் குறிப்பிட்டுக் கொண்டு, ‘இந்தத் துறைக்கு ஒதுக்கியிருக்கிற ரூ,355 லட்சம் போதாது‘ என்பதையும் கூறி அதிக வேலைகள் விரைவாக நடக்க, இதைக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாகக் கருதி, இந்தப் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்கத் தனித் திட்டம் வேண்டுமெனச் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணா அவர்கள் 14.3.61 அன்று சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கையின் மீது தொடுக்கப்பட்ட வெட்டுத் தீர்மானத்தையொட்டிப் பேசுகையில் குறிப்பிட்டார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு.

பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்வர்களும் நம்முடைய சமுதாயத்தில் சமநிலை அடைவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிற முயற்சியில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கிற தொகையையும், அத்தொகைகளைச் செலவழிக்கிற வகைகளையும் ஆராய்ந்து பார்ப்பதற்காக அமைந்திருக்கிற இந்த நேரத்தில், நான் இந்தப் பிரச்சனை பற்றிய பழங்குடி வகுப்பைச் சார்ந்த பல நண்பர்கள் மனவருத்தம் அடைந்ததைப் போல் இந்த மன்றத்தில் பேசியிருப்பதற்கு முதலில் எனது விளக்கத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

பழி போட்டுத் தலைவாங்க முடியுமா?

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இலாயக்கற்றவர்கள் என்ற முறையிலும் அவர்கள் அரசியல் ஞானமற்றவர்கள் என்ற விதத்திலும் நாட்டை ஆளுகின்ற அமைச்சர்கள் பேசிக்கொண்டு போவதற்குப் பதிலளிக்கிற வகையில் மற்றவர்களெல்லாம் அமைச்சர் பதவிக்கு வருகிற நேரத்தில் தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்கள் வந்தால் என்ன என்று கேட்கிற தன்மையில் சொல்லப்பட்டிருக்கும் நிலையில் ‘ஆதி திராவிட மக்களைத் தாழ்வாகக் கருதுகிறார்கள்‘ என்றும், ‘எங்கள் தலைவர் கக்கன்ஜியை நீங்கள் இழிவாகக் கருதுகிறீர்கள்‘ என்றும் அதுகூட அல்லாது ‘தமிழ்மொழியைத் தாழ்வாகக் கருதுகிறீர்கள்‘ என்று ஒரு சிலரும் எந்தப் பழியைப் போட்டால் அது உண்மையில் என்னைப் பாதிக்கும் என்று அவர்கள் தப்பாகக் கருதுகிறார்களோ – அப்பழிகளைப் போட்டுக் கொண்டு வருகிறார்கள். ‘பழிபோட்டுத் தலை வாங்குவது‘ என்ற விதத்தில் வெற்றிபெற்றுவிட முடியும் என்று அவர்கள் கருதுவது அவர்கள், அவர்களது ஏமாற்றத்தை வெகு விரைவில் காண இருக்கிறார்கள். ஆதிதிராவிட மக்களோடு தி.மு.கழகத்திற்கு நீண்டகாலமாக இருந்து வரும் நல்ல நேசத் தொடர்பு இந்த விவாதத்தினால் – கெட்டு விடுமென்று நான் கருதவில்லை.

முயற்சிகளையெல்லாம் வரவேற்பவர்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மன்றத்தில் பேசிய நேரத்தில் சொல்லியிருப்பது போல் இன்றும் நான் எடுத்துச் சொல்ல விரும்புவது ல்லாம் ஆதிதிராவிட சமுதாயத்தையும், பிற்பட்ட வகுப்பினரையும் கைதூக்கி விடுவதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிற எல்லா முயற்சிகளையும் நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். அதற்காக ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகத் தொகை ஒதுக்கி வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிகுந்த அக்கறையோடு கக்கன் அவர்கள் அதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை இந்த மன்றத்தில் நான் முன்பே எடுத்துக் கூறியிருக்கிறேன். ‘கக்கன் மந்திரியாக வருகிறபோது நான் ஏன் வருக்கூடாது?‘ என்று சொன்னதாகச் சொன்னதில் ஒரு வாசகத்தை விட்டுவிட்டுப் பேசியிருக்கிறார்கள். காமராசரும் கக்கனும் மந்திரியாக வந்திருக்கிறபோது நான் ஏன் வரக்கூடாது என்று கேட்டேனே தவி – கக்கன் அவர்களை மட்டும் தனியாகக் குறிப்பிடவில்லை. ஆகவே இதைத் தனிப்பட்ட சாதியாரைக் குறிப்பதாகவோ அல்லது கக்கன் அவர்களைத் தனிப்பட்ட முறையிலோ குறிப்பிடவில்லை.

தவறான எண்ணம் ஏனோ?

கக்கன் அவர்களிடம் எனக்குத் தனிப்பட்ட விதத்தில்நல்ல மதிப்புண்டு. அவர் இத்துறையில் ஈடுபட்டுப் பணியாற்றுவதில் வெற்றி பெறவேண்டுமென்று விரும்புகிறவர்களில் நானும் ஒருவன். ஆகவே அமைச்சர் அவர்கள் தவறான எண்ணத்தை விட்டுவிடும்படி அந்த எண்ணத்தை நீக்கிக் கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

அவர்கள் சமுதாயத்தைப் பொறுத்த விஷயத்தில் நாங்கள் எப்பொழுதுமே தரக்குறைவான அல்லது தாழ்வான கருத்துக்களைக் கொண்டதில்லை, கொள்ளவும் மாட்டோம். மற்றவர்களை அப்படிக் கொள்ளவும் விடப் போவதில்லை. ‘திராவிட முன்னேற்றக் கழகம்‘ என்று நாங்கள் பெயர் வைத்துக்கொண்டிருப்பதால் – திராவிடம் என்று வைத்துக் கொண்டிருப்பதால், ஆதிதிராவிட மக்கள் ‘நீங்கள்தான் எங்களைக் காப்பாற்றுவீர்கள்‘ என்று சொல்கிற ஆதிதிராவிட மக்களை நான் கக்கன் அவர்களுக்கு – அவர்கள் என்னுடன் ஒருநாள் வருவார்களேயானால் அறிமுகப்படுத்தி வைக்க ஆசைப்படுகிறேன். !சிரிப்பு) சிரிப்பு எதற்க என்பது எனக்கு விளங்கவில்லை. ‘கக்கன் அவர்களை‘ அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று சொன்னதற்காகவா சிரிக்கிறீர்கள்? சிரிப்பதற்கு வேறு நல்ல காரணங்களைத் தேடிக் கொள்ளலாம்.

கல்வித்தரம் பற்றி ஒன்றும் அறியாதவன் அல்ல நான்

ஒரு சமயம் ‘தமிழில் அவர்கள் படித்திருக்கிறார்கள், ஆகவே தமிழை இழிவுபடுத்துகிறேன்‘ என்று சொல்கிறார்கள். இந்த மன்றத்தில் அவர்கள் ஆங்கிலத்தில் பதில் அளிப்பிலிருந்தும் – அதிகாரிகள் தருகிற அறிக்கைகளை அவர்கள் விளக்கிப் பேசுவதிலிருந்தும் நாம் அறிகிறோம், அவர்கள் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்பதை. அதுமட்டுமல்ல, ‘ஆங்கிலத்தைப் படித்தான் அறிவாளி‘ என்று கருதுகிற அளவிற்கக் கல்வித்தரம் பற்றி ஒன்றும் அறியாதவன் அல்ல நான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். குருஷ்சேவிற்கு ஆங்கிலம் தெரியாமல் இருக்கலாம். அதனால் அவரை நாங்கள், தரக்குரைவானவர் என்று கருதவில்லை.

ஆங்கிலத்தில் படித்தால்தான் படிப்பு. தமிழில் படித்தால் அது படிப்பல்ல என்பதில்லை. அது மட்டுமல்ல, கக்கன் அவர்களும் காமராசர் அவர்களும் பல்கலைக் கழகத்தில் போய்தான் இவைகளைப் பெறவேண்டுமென்று நான் கருதக்கூட இல்லை. வெளியிலிருந்து நிர்வாக அனுபவங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் அமைச்சர்களாக வரவேண்டுமென்ற முறையில் அல்லாமல் எடுத்த எடுப்பிலேயே மந்திரியானவர்கள் என்பதற்காகக் குறிப்பிட்டேன். ‘எடுத்த எடுப்பிலேயே அவர்கள் மந்திரிகளாக இருக்கும்போது நான் ஏன் ஆகக்கூடாது என்றுதான் சொன்னேனே தவிர அது அவர்கள் சமூகத்தையோ அல்லது அவர்களைத் தனியாகவோ குறிப்பிடுவதல்ல. ஆகவே அவர்கள் அந்தத் தப்பெண்ணத்தை நீ்க்கிக் கொள்வார்களானால் அது அவரது மனத்திற்கு முதலில் ஆறுதலாக இருக்கும். அது தவறான எண்ணங்களை இந்த மன்றத்தில் வளர்க்காமலிருக்க உதவும்.

நான் அழைத்த ஒரே ஒரு அமைச்சர்

சமாதானம் சொல்லித் தீரவேண்டுமென்ற நிர்பந்தத்தினால் அல்ல நான் இதனைக் கூறுவது. யாரையும் நான் தரக்குறைவாகப் பேசியதில்லை என்பது அவர்களுக்கே தெரியும். இன்னும் சொல்லப் போனால் கக்கன் அவர்கள் காஞ்சிபுரத்திற்கப் பிரச்சாரத்திற்காக வந்திருந்த நேரத்தில் ‘என் வீட்டிற்கு வாருங்கள், தேநீர் அருந்திவிட்டுத்தான் போக வேண்டும்‘ என்று நான் அவர்களை அழைத்தேன். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆக இங்குள்ள எட்டு அமைச்சர்களில் நான் அழைத்த ஒரே ஓர் அமைச்சர் கக்கன் அவர்கள்தான் என்பதிலிருந்து நான் அவர்களைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறேன் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சராக இருப்பதால் ஒரு சமுதாயத்திற்க உயர்வு வருமா, வராதா என்பது விவாதத்திற்குரிய பிரச்சனையாக இருக்கிறது. இதே மன்றத்தில் சென்ற ஆண்டு பேசிய ஓர் அங்கத்தினர் – அவர் காங்கிரசு அங்கத்தின்ர் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். ‘எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த கக்கன் அவர்கள் அமைச்சராகி விட்டதால் எங்கள் சமுதாயம் உயர்ந்துவிட்டதாகக் கருத முடியாது“ என்று சொன்னார்கள். கக்கன் அவர்கள் அமைச்சர் என்பதற்காக அல்ல – நல்லவர் என்பதற்காக – இன்னும் சொல்லப் போனால் அவர்கள் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உயர்வாகக் கருதுகிறேன். ஆகவே அரசயில் காரணங்களுக்கு – அரசியல் விவாதங்களுக்காகத் தப்பர்த்ததை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

ஓர் அங்கத்தினர் கறுப்பு – சிவப்பு கொடி போட்ட தேநீர்க் கடைகளில் ஆதிதிராவிட மக்கள் அனுமதிககப்படுவதில்லையென்று ஆரம்பித்துக் கதர் போட்டுக்கொண்ட ஆதிதிராவிட மக்களை அனுமதிப்பதில்லை என்று ஒரு திருத்தம் கொடுத்தார்கள். கதர் போட்ட மக்கள் அனுமதிக்கப்படுவதில்லையென்றால் அதற்கு நான் பதிலளிக்கத் தேவையில்லை.

அவர்களை விட இழிவு தருவோர் வேறு எவருமில்லை

ஆனால் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மக்கள் என்பதற்காக எங்கள் கழகக் கொடி போட்டி தேநீர்க் கடைகளில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லையென்றால் அவர்களை விட எங்கள் கொடிக்கும் எங்கள் கழகத்திற்கும் இழிவு தேடிக் கொடுக்கக் கூடியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பதை நான் ஒளிவு மறைவின்றி இங்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் மூவர்ணக்கொடி போட்ட கடைகளில் ஆதிதிராவிட மக்களுக்குத் தரப்படுகின்ற குவளைகளும் மூங்கிலை இரண்டாக வெட்டி அதன்வழி தண்ணீர் ஊற்றி வெளியிலிருந்து குடிக்க செய்வதையும் நான் இங்குள்ள கனம் அங்கத்தினர்களுக்குக் காண்பிக்கிறேன் – அவர்கள் என்னோடு வருவதானால்!

கொடியல்ல காரணம் – கொடிய பழக்கமே!

ஆக, இது கொடியின் குற்றமல்ல, நெடுங்காலமாக இருந்துவரும் கொடிய பழக்கம்தான் காரணம். இந்தக் கொடிய பழக்கத்தைத் தீர்த்துக் கட்ட நாம் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கிறோமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுமே தவிர புள்ளி விவரக் கணக்கு போடுவதால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடாது?

‘ரூ.3 கோடியே 55 லட்சம் ஒதுக்கி இருக்கிறோம்‘ என்று குறிப்பிட்டு ‘இது பெருமைப்படத்தக்கது‘ என்றார்கள். அது பெருமைப்படத்தக்கதோ இல்லையோ வரவேற்கத் தக்கது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதில் சிறிது பொருளாதாரத் தத்துவத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். போன ஆண்டு இரண்டு கோடி ரூபாயில் நடைபெறக்கூடிய காரியங்களை இந்த ஆண்டு ரூ.2 கோடியில் நாம் நடத்துவதற்கில்லை.

கணக்கைப் பார்த்தபின் பெருமையைத் தேடுங்கள்

‘பிசிக்கல் டார்ஜட்‘ – நாம் எடுத்துக் கொண்டிருக்கக் கூடிய காரியத்தில் எந்தளவு வளர்ச்சியடைந்திருக்கிறோம் என்ற புள்ளி விவரக் கணக்குதான் முக்கியமே தவிர, பத்து ஆண்டுகளுக்கு முன் சாதித்ததை – இந்தப் பத்து ஆண்டுகளில் பணம் தேங்கிக் கிடக்கிற காரணத்தினால் – நோட்டுகளின் பெருக்கம் காரணத்தினால் – பண வீக்கம் ஏற்பட்டிருக்கிற காரணத்தினால், விலைவாசிகள் வளர்ந்திருக்கிற காரணத்தினால் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் லட்சம் ரூபாயில் முடிந்த காரரியங்கள் இன்று பத்து லட்சம் ரூபாய் வைத்தால்தான் ஆகும் என்ற பொருளாதாரக் கணக்குப்படி 1950-51இல் ரூ.65 லட்சம் செலவு செய்யப்பட்டது. இப்பொழுது ரூ.355 லட்சம் செலவு செய்கிறோம் – ஐந்து மடங்கு அதிகமாகச் செலவு செய்கிறோம் என்று பெருமைப்படுகிற அதே நேரத்தில் நம் ரூபாயின் மதிப்பு எந்த அளவிற்குத் தேய்ந்திருக்கிறது என்பதையும் விலைவாசிகள் எந்த அளவிற்கு உயர்ந்திருக்கின்றன என்பதையும் கணக்கெடுத்து, உங்கள் சாதனைகளையும் உங்கள் பெருமையையும் தேடிக் ்கொள்ள வேண்டுமென்று நான் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.