அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


டெல்லியில் அண்ணாவின் முதல் முழக்கம்
1

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? என்றும்
ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?
விண்ணி லிரவிதனை விற்றுவிட்டெவரும் போய்
மின்மினி கொள்வாரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கை கொட்டிச் சிரியாரோ?

சுதந்திரக் கனல் பீறிட்டுக் கிளம்புகிற மனிதனின் உள்ளத்தைக் கவிதைக் கண்ணாடியின் வாயிலாகப் பிரதிபலித்துக் காட்டுகிற சாகாக் கவிஞன் பாரதி பிறந்த தென்னகத்து மண்ணின்மீது விளைந்த வீர விடுதலைப் போர் முழக்கத்தின் எதிரொலி, எட்டாத செவிப்பறை இல்லை. முட்டாத எல்லையில்லை.

1962 ஆம் ஆண்டு மே முதல்நாள்.

திராவிடர்கள் மறக்கமுடியாத எழுச்சிமிகுநாள். ஏற்றங்கொள்நாள்.

கடல்குமுறியெழுந்து நிலமெங்கும் தாவினால் எரிமலையின் நெருப்புக் குழம்பு, எட்டுத் திசையும் வழிந்தோடினால் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பூமி அதிர்ந்து ஆடி நடுங்கினால் எத்தகைய பரபரப்பு மூளுமோ, அத்தகைய பரபரப்பு இந்தியத் துணைக் கண்டமெங்கும் உருவாயிற்று. துணைக் கண்டத்தின் விளிம்பில் உள்ள நாடுகளும், தொலைதூரத்திலுள்ள தேசங்களும் இந்திய உபகண்டத்தின் அரசியல் வானில் ஏற்பட்ட துடிதுடிப்பான மாறுதலைக் கூர்ந்து கவனித்தது.
அடாது என்றனர்

ஆகுமா இது? என ஆர்ப்பரித்தனர்
அக்கிரமம் என்றனர்
அழிக்கப்பட்ட வேண்டிய குரல்
அணைக்கப்பட வேண்டிய தீபம்
அடக்கப்பட வேண்டி எழுச்சி
பியந்தெறியப்பட வேண்டிய பிரச்சினை
பேய் பூதங்களின் கூச்சல்
வெறித்தனமான கேளிக்கை
விடமாட்டோம்
விரட்டுவோம்
அநுமதியோம்
நிர்மூலமாக்குவோம்
ஒன்றுசேருவோம்
உருத்தெரியாமல் ஆக்குவோம்
உயிர் கொடுத்துத் தடுப்போம்

இப்படிப்பட்ட வார்த்தை அலைகள் விண்ணுயர எழும்பிக் கொந்தளித்து விடுதலை வீரர்களை விழுங்கிவிடும் பயங்கரக் கூச்சலுடன் ஜனநாயகக் கரையை மோதி அரித்துக் கொண்டிருப்பதையும் உலகம் காணுகிறது.
பொன் கொழிக்கும் தென்னகத்தின் காவலராம் அறிஞர் அண்ணா, அன்னைத் திராவிடத்தின் அடிமை விலங்கொடிக்க டெல்லிப் பட்டணத்திலே எடுத்துக்கொண்ட முதல் முயற்சி கண்டுதான் இத்தனை அலறல் இந்தத் துணைக் கண்டமெங்கும் புறப்பட்டிருக்கிறது.

கருவிலே சிதையும்
முளையிலே அழுகும்
பூவிலே கருகும்
காயிலே வெதும்பும்

என்றெல்லாம் விடுதலை இயக்கத்தின் எதிர்காலம் பற்றி அதன் ஒவ்வொரு பருவத்திலும் ஆரூடம் கணித்துக் கொண்டிருந்த அருவெறுப்பாளர்கள் அந்த இயக்கம் கனி குலுங்கும் தருவாக வளர்ந்துவிட்டது. கண்டு பொறாமை கொள்வதிலே ஆச்சரியமில்லை.

திருவாரூர் மாநாட்டுத் தீர்மானமாக திராவிட நாடு இலட்சியம் முகிழ்த்துக் கிளம்பியபோது, இது திருச்சியோடு முடியும். மதுரையோடு முடியும். ஈரோட்டோடுடன் இறந்துபடும் என்றுதான் பலர் கருதினார்களே தவிர, அந்த லட்சியம் வடபுலத்து ஆதிக்க வேந்தர்களின் கோட்டைக் கதவைத் தட்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

இன்று அந்த லட்சிய மலர் எடுதுச்செல்லப்பட வேண்டியவரால் எடுத்துச் செல்லப்பட்டு தொடுத்துக் காட்ட வேண்டியமுறைப்படி தொடுத்துக் காட்டப்பட்டு, இந்தச் சுதந்திர மாலையை எங்கள் திராவிடத் தாயின் கழுத்தில் அணியும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம் என்று உறுதிமொழியைச் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லவேண்டியவரால் சொல்லப்பட்ட தாகிவிட்டது.

கடற்கரைகளில் வெட்ட வெளிகளில் நகர்ப்புறங்களில், பட்டி தொட்டிகளில், சந்து பொந்துகளில், ஒலித்துக்கொண்டிருக்கும் விடுதலைக் கீதம், டெல்லிப் பட்டணத்து ஆதிக்கக் காவலர்களின் மணி மண்டபத்திலே போர்ப்பரணியாக முழங்கப்பட்டு, தாயக விடுதலை அணிவகுப்பின் தரமும், உள்ள உரமும் விளக்கப்பட்டு ஒரு விடுதலை இயக்கம் பெறவேண்டிய அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ஒரு நாட்டின் விடுதலைக்குக் கடைப்பிடிக்கும் முறைகளில் வேட்டு முறையை வெறுத்துவிட்டு வோட்டுமுறையில் நம்பிக்கை வைத்து அவ்வழியில் இயக்கத்தை மக்கள் மத்தியில் நடத்திச் செல்கின்றவர்கள் நாம்.

அம்முறையே நன்முறையென எடுத்தோதி, அமைதியும் அறமும் காத்து அன்பு மார்க்கத்தில் நாட்டு விடுதலை பெற்றிட நமக்குத் தலைமையேற்று நிற்பவர்தான் அறிஞர் அண்ணா.

அவர் டெல்லி மாநிலங்கள் அவையில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் உரைமீது நடந்த விவாதத்திலே கலந்துகொண்டு பேசிய 35 நிமிடப் பேச்சு இந்தியத் துணைக் கண்டத்து வரலாற்றிலே முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டது.

இந்தியாலிருந்து பிரிந்து போகவேண்டும் என்ற குரல் முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றத்தில் இன்று ஒலித்தது. இந்த முழக்கத்தைத் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் அண்ணாதுரை இன்று மாநிலங்கள் அவையில் முழங்கினார். இந்திய யூனியனில் இருந்து தென்னகம் பிரிந்து போக வேண்டுமென்ற அண்ணாதுரையின் துணிவான வாதம், ஸ்தம்பிக்கச் செய்து விட்டது.

என்று பம்பாயிலிருந்து வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற ஏடு குறிப்பிடுகிறது.

தி.மு.கழகத் தலைவர் திரு.சி.என்.அண்ணாதுரை, தென்னகத்திற்குச் சுய நிர்ணய உரிமை வேண்டுமென்ற கோரிக்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார். மாநிலங்கள் அவை இன்று கூடியிருந்து திராவிட நாட்டின் கொள்கைகாகப் பாடுபடும் சொல்லாற்றல் மிக்க தலைவரின் பேச்சைக் கேட்டது. தேசியத்திற்கு அவர் ஒரு புதிய விதியைத் தந்தார்.

என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு கூறுகிறது.

இது புதுடெல்லியிலிருந்து வெளிவரும் பத்திரிகையாகும்.

கொள்கையிலே கொண்ட உண்மைப் பிடிப்பாலும், தனது சக்திவாய்ந்த பேச்சுத் திறமையாலும் அண்ணாதுரை, சந்தேகமின்றி ராஜ்ய சபாவைக் கவர்ந்துவிட்டார்.

என்பதாக இந்து பத்திரிகை தலையங்கத்தில் குறிப்பிடுகிறது.

ஆட்சி அமைப்பு முறையின் எதிரி என்ற அளவில் அறியப்பட்ட அண்ணாதுரையின் சொற்பொழிவு, என்ன இருந்தாலும் பலமுறை குறிப்பாக வட இந்தியாவிலிருந்து வந்திருந்த பல உறுப்பினர்களை வியப்பில் ஆழ்த்தாமல் இருக்கவில்லை. சிறந்த பேச்சாளர் என்றுள்ள நிலையில் நிறைந்த பெயர் பெற்றுள்ள அண்ணாதுரை அன்று மாநிலங்கள் அவையில் தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தினார்.

என்று மலையாள நாள் இதழ் மாத்துருபூமி எழுதுகிறது.

இந்த ஏடுகளும் இன்னும் பிற ஏடுகளும் அண்ணாவின் பேச்சைப் பற்றி நீண்ட விமர்சனங்களும் செய்திருக்கின்றன. அஃதேபோல் மாநிலங்கள் அவையில் அண்ணாவின் உரைகேட்ட மாற்றுக் கட்சியினர் எல்லாம், என்னே சொல்நயம்? என்னே பேச்சுவளம், என்று பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டியவர்கள் எல்லாம் அண்ணாவின் முழக்கத்திற்கு எதிர் முழக்கம் செய்துமிருக்கிறார்கள். முதலில் அண்ணாவின் முழக்கத்தை அவர் பேசிய ஆங்கில மொழி வடிவிலேயே கேட்போம். அதன் பின்னர், திராவிடத்து விடுதலைத் தலைவரின் கீர்த்திமிகு சொற்பொழிவு குறித்து மூலைக்கு மூலை முளைத்துள்ள கண்டனங்கள், கேலிகள், ஏசல்கள் பற்றி விபரங்களைப் பார்ப்போம்.

இதோ டெல்லி மாநிலங்கள் அவையில் திராவிடத்துக் கொற்றவன் தீட்டுகின்றார் விடுதலைக் காவியம்.

அறிஞர் அண்ணா
டில்லி மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா அவர்கள் குடியரசுத் தலைவர் உரைமீது ஆற்றிய சொற்பொழிவு வருமாறு:

பெருமதிப்பிற்குரிய மன்றத் தலைவர் அவர்களே, கம்பீரம் நிறைந்த இந்த அவையிலே பேசப்படும் கருத்துக்களோடு என் கருத்துக்களையும் உடன் எடுத்துச் சொல்ல வாய்ப்புத் தந்த உங்களுக்குப் பெரிதும் நன்றி செலுத்திக் கொள்கிறேன். இந்தத் தொடர்க் கூட்டத்தில் நடைபெறும் விவாதத்தில் கலந்துகொள்ள முதலில் கொஞ்சம் தயங்கினேன். ஏனெனில் என்னுடைய ஆசை, இந்த அவையைக் கவனித்துக் கற்றுக்கொள்வதுதான், பேசிப் பிரச்சினைகளைக் கிளறுவதல்ல.
ஆனால், கம்பீரம் மிக்க இந்த அவையில் இணக்கமான சூழ்நிலையைக் காண்கிறோம். இந்தப் பெருநாட்டின் குடியரசுத் தலைவரைப் புகழும் வளமிகு வாழ்த்துரையில் நானும் சேர்ந்துகொள்ளும்படி அது தூண்டிற்று. இப்போது உடல் நலமற்றிருந்தாலும் குடியரசுத் தலைவரின் சுயநலமற்ற பணிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்படி õரசேந்திரபிரசாத் அவர்களை வாழ்த்தும்போது, நான் அவரின் அடியொட்டிச் செல்லும் தொண்டனல்ல என்பதையும் கூறிக்கொள்கிறேன். அவர் நெஞ்சம் திறந்து ஏற்றுக்கொண்டுள்ள அரசியல் கட்சியின் தத்துவங்களுக்கும் எனக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை. வெகு தூரத்தில் நின்றுகொண்டு, குடியரசுத் தலைவரின் சிறந்த பணிகளைப் பாராட்டுகிறேன். இப்படிப் பாராட்டும் நிலை எனக்கு ஒருவிதத்தில் பலத்தையும் தருகிறது. இன்னொரு விதத்தில் பலவீனத்தையும் தருகிறது. அவருடன் ஒன்றாகப் பணியாற்றினோம்-என்று கூறிக்கொள்பவர்களுக்கு ஏற்படும் தெம்பு எனக்கு ஏற்படாதது மனதின் பலவீனமாக இருக்கலாம்; ஒரு கடமை யுணர்ச்சியுள்ள ஒரு கட்சிக்காரரை இன்னொரு கட்சித் தோழர் பாராட்டுவதாக இல்லாமல், வெகு தூரத்திலிருந்து குடியரசுத் தலைவரின் பணியைக் கண்டு மகிழ்ந்து உண்மையாகப் பாராட்டுவதாக எனது பாராட்டு இருக்கிறது. இது உண்மை அடிப்படையிலமைந்த பலம்.

நான் இப்படிப் பாராட்டும்போது, துரதிர்ஷ்டவசமாக அவர் ஆற்றிய உரையில் பெரிதும் ஏமாற்ற உணர்ச்சியையே பெற்றேன். அரசியல் சட்ட சரித்திரத்தின் மாணவர்கள் என்ற முறையில், குடியரசுத் தலைவர் பேசினால், அதன் மூலம் அரசாங்கம் பேசுகிறது என்பதை அறிவோம். எனவே அந்த உரையில் ஏதாவது குற்றங் குறைகளை எடுத்துச் சொன்னால், அது குடியரசுத் தலைவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் கூறுவதாகக் கருதப்கூடாது கருத மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அரசு சரியானபடி உள்ளதை உள்ளபடிச் சொல்லவில்லை. எனவே, தலைவர் அவர்களே, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அதைப்பற்றிச் சில கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

திட்டங்கள் பற்றி திட்டத்தின் தந்தை எனப்புகழ்த்தக்க கனம் வி.டி.கிருஷ்ணமாச்சாரியார் எடுத்துரைத்ததைக் கேட்கும் பேறு பெற்றேன். குடியரசுத் தலைவர் உரையைப் படித்துப் பார்த்தால், அது ஒரு கம்பெனியின் ஆண்டறிக்கைபோல் இருக்கிறதே தவிர, நம்பிக்கையையும், குறிக்கோளையும் எடுத்தோதுவதாக இல்லை.

கம்பெனியின் ஆண்டறிக்கை-என்று குறிப்பிடுவதன் காரணம், அந்தக் கம்பெனி இப்போது உறுப்பினர்களைத் தேடி அலைகிறது; பணத்தேவை மிகுந்துவிட்ட கம்பெனியாகவும் தென்படுகிறது.

குடியரசுத் தலைவர் உரைமீது பேசிய ஆளும் கட்சியினர் பேச்சில் ஒரு பெருமிதமும், செருக்கும் கொண்டிருக்கிறார்கள். ‘ஓ’ நாமும் மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்! எனவே எதைச் சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்; எதைச் செய்தாலும் சரியாக இருக்கும். எனவே சிறிய கட்சிகளுக்கு நம்மைத் தட்டிக் கேட்க உரிமை இல்லை” என்று எண்ணுகிறார்கள்.

பொதுத் தேர்தலில் வெற்றி அடைந்த பிறகு எந்தக் கட்சியும் பெருமிதம் கொள்ள உரிமையுண்டு. நல்ல அமைப்பு முறையும் நல்ல பண வசதியும் படைத்த காங்கிரஸ் போன்ற கட்சி பல்வேறு அக்கறையும் கொள்கைகளும் கொண்ட எதிர்க்கட்சி குழுக்களை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல என்பதையும் உங்கள் அனுமதியோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

காங்கிரசின் பலம் அதனிடம் இல்லை, எதிர்க்கட்சிகளின் பலவீனத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் பலம் இருக்கிறது.

எனவே, வெற்றியில் பெருமிதம் கொள்வதைக் காட்டிலும் ஆளும் கட்சி பணிவையும், ஜனநாயகத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே முதற்கருத்தைக் கூறும்போதே பொதுத்தேர்தலில் நடந்த ஊழல்களை இந்தத் தரப்பு உறுப்பினர்கள் எடுத்துக் கூறினார்கள்.

தேர்தலில் நடைபெற்ற ஊழல் முறைகளைப் பற்றி இத்தரப்பு உறுப்பினர்கள் பேசியபோது ஆளும் கட்சி அங்கத்தினர்கள் அவற்றை நிரூபிக்க முடியுமா என்று கேட்க எழுந்தார்கள். ஆதாரங்கள் மட்டும் எங்கள் கைக்குக் கிட்டும் நிலைமை இருந்தால், அய்யா, நாங்கள் இந்தக் கம்பீரமிக்க அவையில் அவை குறித்துப் பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை (ஆளும் கட்சியினரை) சட்டமன்றத்திற்கு இழுத்துச் சென்றிருப்போம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

போதுமான வசதிகளற்ற வகையில் வைக்கப்பட்டுள்ள மற்ற கட்சிகளுக்குத் தக்க ஆதாரம் காட்டி நிரூபிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் நீதி நடவடிக்கைகளைவிட இப்பிரச்சினையில் உள்ளடங்கியுள்ள தத்துவத்தையே பெரிதும் வலியுறுத்துகிறோம்.

ஆளும் கட்சி பெரும் தொழில் நிறுவனங்களிலிருந்து நன்கொடை பெறுவது சட்டபூர்வமானதுதான் என்றாலும் அது ஒழுங்கீனமான செயல் என்று நீதி மன்றங்கள் கண்டனம் தெரிவித்தது. நமக்குத் தெரியாதா? அதற்குப் பிறகும் (ஆளும் கட்சியினர்) டாட்டா பிர்லாக்களின் ஆயுத சாலைகளிலிருந்து பண ஆயுதம் பெற்றிருக்கின்றனர்.

எங்கிருந்து இவர்கள் தேர்தல் நிதியைச் சேர்த்துக் கொண்டார்கள் என்பதை நாடு மறந்துவிட்டதா? இந்த அடிப்படையில்தான் ஆளும்கட்சி பெருமை கொள்கிறதா? ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறலாம், மற்ற கட்சிகளிடமும் கூட இந்த ஒழுங்கீனம் உள்ளதென்று, இந்த பரந்த துணைக்கண்டத்தின் மூத்த பெரும் கட்சி என்ற முறையில் உயர்ந்த மரபுகளை ஏற்படுத்துவது காங்கிரசின் தலையாய கடமை அல்லவா?

இந்த நேரத்தில் பழமொழி ஒன்று நினைவிற்கு வருகிறது. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வ
ழி.

மரபுகள் என்று எதையெதை காங்கிரஸ் உண்டாக்குகின்றதோ, அதையெலாம் மற்ற கட்சிகள் பின்பற்றினாலும் பின்பற்றலாம். நான் பின்பற்றினாலும் பின்பற்றலாம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதின் காரணம் அந்த வார்“த்தையில் பின் பற்றாமல் இருந்தாலும் இருக்கலாம் என்பதும் தொக்கி நிற்கிறது.

எனவே எங்கள் முதல் கருத்தே இந்தத் தேர்தல் சமூகமாகவும், சுதந்திரமாகவும், நடைபெறவில்லை. மக்களின் எண்ணமும், நியாய பூர்வமாகத் தெரிந்து கொள்ளப்படவில்லை.
எனவே அடுத்த தேர்தலிலாவது பஸ் முதலாளிகளுடனும், லாப வேட்டைக்காரர்களுடனும், பர்மிட்காரர்களுடனும் தொடர்புகொள்ளாமல் திரு.கங்காதரன் சின்கா இங்கே குறிப்பிட்டது போல, பொதுத் தேர்தலுக்கு ஆறு மாதத்துக்கு முன் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் மந்திரிகளும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் பதவிக்கு வரமுடியுமா என்ற நான் அறைகூவல் விடுக்கிறேன்.

எனவே, குடியரசுத் தலைவர் பேச்சின் ஒரு பகுதியில், நாமனைவரும் ஜனநாயக மரபுகளைக் கட்டிக் காக்க வேண்டுமென்று-

திரு.ராமா ரெட்டி (மைசூர்) இதற்கு ஏதாவது முன் உதாரணம் உண்டா?

மன்றத் தலைவர்: ஆறு மாதத்திற்கு முன் ராஜிநாமா செய்வதற்கு உதாரணம் உண்டா என்று கேட்கிறார்.

புபேஷ் குப்தா (மேற்கு வங்கம்): ஒருவரது கன்னிப்பேச்சில் குறுக்கிடுவதற்க முன் உதாரணம் இல்லை.

அண்ணா: ஆம், இது என்னுடைய கன்னிப்பேச்சுதான், ஆனால், குறுக்கீடுகளால் கூச்சமடைகிறவன் அல்ல. எனவே, குறுக்கீடுகளை நான் விரும்புகிறேன்.

இரண்டாவதாக, குடியரசுத் தலைவரின் உரையில் நான் மூன்று உன்னத தத்துவங்கள் மிளிருவதைக் காண்கிறேன் ஜனநாயகம், சோஷலிசம், தேசீயம் என்பவையே அவை.

ஜனநாயகத்தைப் பொறுத்த வரையில், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும், அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயலுக்குப் பொதுமக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளும் வாக்கெடுப்பு முறையும் இந்தப் பெரிய உபகண்டத்தில் அமுலாகாதவரை ஜனநாயகத்திற்கான எந்தப் பலனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

சோஷலிசத்தைப் பொறுத்தவரை, இந்த அவையில் ஒரு புதுவிதப் பொருள் தரப்பட்டது. கனம், ராமமூர்த்தி டாட்டா பிர்லா போன்றோரின் தொழிற்சாலை. நிறுவனங்களைப் பற்றி எடுத்துரைத்தபோது மற்றொரு மதிப்பிற்குரிய உறுப்பினர் பங்குகளைப் பற்றியும் இலாபங்களைப் பற்றியும் வியத்தகு விளக்கம் தந்ததைக் கண்டேன்.

கோடி கோடியாக இலாபம் குவிக்கப்பட்டாலும், டாட்டா, பிர்லாக்களின் பணப்பெட்டிக்குள் போகாமல், பங்குதாரர்களுக்குப் போய்விடுவதை எடுத்துச் சொன்னார். இதுதான் பொருளாதார விளக்கம் என்றால் நமக்கேன் பொதுத்துறை, தனியார்துறை என்ற இரண்டு, எனது மதிப்பிற்குரிய நண்பர் தனியார் துறைதான் பொதுத்துறை என்றும், டாட்டா பிர்லாக்களால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைகள் அனைத்தும் பொதுத்துறையைச் சேர்ந்தவை என்றும் கருதினால் பொதுத்துறை, தனியார் துறை என்று ஏன் வேறுபாடு காட்டவேண்டும்? பங்குகளும் இலாபங்களும் பிரிக்கப்பட்டுத் தரப்படுகிறது என்று குறிப்பிட்டபோது வேற குறிக்கோளை நோக்கி, அவர் குறிக்கோளை விட்டு எங்கேயோ போய்விட்டார்.

இந்தப் பிரச்சினையைப்பற்றி ஆராய நாம் அமைத்த குழுக்கள், பலமுள்ள தொழில் சாம்ராஜ்யங்கள் ஏக போக உரிமைகளின் மேல் வளர்ந்திருப்பதாக அறிவித்து இருக்கின்றன. பிரதம மந்திரிகூட இந்த பிரச்சினையைப் பற்றிக் கவனிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இரண்டு திட்டங்களினால் உற்பத்தியான வளம் எங்கே, எப்படிப் போயிற்று என்பதைக் கண்டுபிடிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

எனவே, இங்குள்ள சோஷலிசம் வேறு வகையானது என்று வாதிடுவதைவிட வேறு ஏதாவது பெயர் தந்துவிடலாம். சோஷலிசத்தின் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? அதற்கு உங்கள் சொந்த விளக்கத்தை ஏன் தருகிறீர்கள்?

சோஷலிசம் என்பது சேமநலம் மட்டுமல்ல, சேமநலத்திற்கு உறுதி தருவது மட்டுமல்ல. சமத்துவத்தை உண்டாக்கப் பாடுபடுவது சோஷலிசம்.

லாஸ்கியின் கூற்றுப்படி சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது அல்ல. எல்லோருக்கும் சமவாய்ப்பு தருவதாகும்.

ஆனால், இங்கே சமவாய்ப்பு தரப்பட்டது. தந்து கொண்டிருக்கிறோம் என்று கூறமுடியுமா? தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்பட்ட வகுப்பு என்பதெல்லாம் எதைக் குறிக்கிறது?

ஹைதராபாத்தில் பழங்குடி மக்கள் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடைபெற்றது. அதில் பிரதம மந்திரியும், ஜகஜீவன்ராமும் கலந்துகொண்டனர். ஐக்கியமாக எக்கருத்தையும் சொல்லாமல், பல்வேறுபட்ட கருத்துக்களைச் சொன்னார்கள். பிரதம மந்திரி அங்கே கூறினார். இனிமேல் தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்பட்ட வகுப்பினருக்கும் சலுகைகள் தரக்கூடாது என்று! ஆனால் ஜகஜீவன்ராம், இயற்கையாகவே எழுந்து சொன்னார். சமுதாயத்தின் கடைசித் தளத்திற்கு விரட்டப்பட்ட அவர்களுக்கு இன்னும் சலுகைகள் வேண்டும் என்று.

இப்படி இரண்டு பெரியவர்கள் ஒரே கட்சியில் இருந்து இத்தகைய கருத்து வேறுபாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஆளும் கட்சிக்கும், மற்ற கட்சிகளுக்கும் கொள்கை வேற்றுமை இருப்பதில் ஏதாவது வியப்பு இருக்க முடியுமா?

எனவே இங்கு சோஷலிசத்திற்குத் தரப்படும் பொருளும் செயல்படும் முறையும் உண்மையான சோஷலிசத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லவில்லை.

இந்தியாவின் நண்பரும், இந்த அரசாங்கத்தின் ஆதரவாளரும் அமெரிக்காவின் தூதரும் பொருளாதார நிபுணராயுமிருக்கிற டாக்டர் கால்பிரெய்த் நமது சோஷலிசத்தைப் பற்றிக் கூறியுள்ளதை இங்கு கூற விரும்புகிறேன். அவர் இதனை தபாலாபீஸ் சோஷலிசம் என்று கூறியுள்ளார். ஏன் பேராசிரியர் கால்பிரெய்த் அவ்வாறு கூறினார்.

அவர் ஏன் அப்படிக் கூறினார் என்றால், இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் சர்க்கார் ஏற்று நடத்தும் தொழில்கள் உயர்ந்த அளவு இலாபத்தோடு இயங்கவேண்டு மென்பதை வலியுறுத்தவே கூறியுள்ளார். அமெரிக்காவும், ருஷ்யாவும் இதைத்தான் செய்கின்றன என்றும் கூறுகிறார்.

கிடைக்கும் இலாபத்தை மீண்டும் தொழிலேயே போட்டு மறுமுதலீடாக்கி மக்கள் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அந்தப் பேச்சின் கருத்து. ஆனால் கனம் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பாசனத் திட்டமானாலும் மின்சாரத் திட்டமானாலும் தொழில் திட்டமானாலும் சர்க்கார் துறையில் எதிர்பார்க்கும் அளவிற்கு இலாபம் வருவதில்லை என்றார் அவர். இப்படி ஏன் இருக்கிறது என்றால் நாம் சோஷலிசத்திற்குத் தரும் வேறுபட்ட விளக்கத்தினால்தான் ஏராளமான பொருள் பொதுத்துறையில் போடப்பட்டிருந்தாலும் அதற்காக செலவிடப்பட்ட உழைப்புக்கேற்ற ஊதியமோ, எந்த நேரத்திற்காக முதலீடு செய்யப்படுகிறதோ அந்த நோக்கமோ நிறைவேறுவதில்லை. சிந்திரிபொகரோ போன்ற மற்ற திட்டங்களைப்பற்றி மக்களிடம் சிந்துபாடி வர்ணிக்க முயற்சி எ’úத்துக்கொள்ளும் அளவுகூட அதன் பலனில் இல்லை.

இப்படிக் கூறுவதன் மூலம் நான் திட்டத்திற்கு எதிர்ப்பானவன் என்று நினைத்துவிடக் கூடாது என் ஆதரவு அனைத்தும் திட்டத்திற்கு திட்டத்திற்குத்தான். பொதுத்துறைக்குத்தான். இவ்வளவு குறைவான இலாபம் சம்பாதிக்கும் வகையிலும் இவ்வளவு சேதாரத்துடனும் பொதுத்துறை இல்லாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஊழலைப்பற்றிய வதந்திகள் நிறைய உலவுகின்றன. அதுபற்றி புள்ளி விவரங்கள் தரும் நிலையில் நான் இல்லை. ஆனால் ஊழலும் தவறான நிர்வாகமும், இதர கேடுகளும் பொதுத்துறையில் இருப்பதாக வதந்திகள் பரவலாக இருக்கின்றன. ஆகையால், சோஷலிசம் என்ற குறிக்கோள் இருந்தாலும் நாம் அதை நோக்கி முன்னேறிச் செல்லவில்லை என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றே உணர்கிறேன்.

மூன்றாவது தேசியம், எந்தக் கட்சியைச் சார்“ந“திருக்க நான் பெருமை கொள்கிறேனோ அந்தக் கட்சிக்கு இது மிகவும் நெருங்கிய தொடர்புள்ளதாகும். இப்போது அதிக வழக்கத்திலிருக்கும் வார்த்தையை உபயோகிக்க வேண்டுமானால் அதை தேசிய ஒருமைப்பாடு என்று அழைக்கலாம்.

அதைப்பற்றிப் பேசமுன் ஒன்று கூற விரும்புகிறேன். சுதந்திரம் பெற்று 15 ஆண்டுகள் கழித்து, தேசிய அரசாங்கம் ஒன்று 15 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய பின்னரும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு முயற்சி எடுத்துக் கொள்வது இதுவரை செய்து வந்த சிந்தித்து வந்ததற்கெல்லாம் எதிரிடையானது, என்று தானே பொருள்? தேசீயத் தலைவர்கள் இத்தனை நாள் செய்துவந்த முயற்சி அனைத்தும் கனியவில்லை என்று தானே பொருள்? இன்றைக்கு மட்டும் ஏன் தேசீய ஒருமைப்பாடு பற்றிப் பேசவும், திட்டம் தீட்டவும் புறப்பட்டுள்ளோம்?

மக்கள் ஒன்றுபட்டபின் ஒருமைப்பாட்டிற்கென்ன வேலை?

தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், ஆங்கிலம் தெரிந்த உறுப்பினர்கள் இந்தியில் பேசுவதும் கேள்வி கேட்பதும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம்.

அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன? நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசீய ஒருமைப்பாட்டிற்கான வழியா?

தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லுவது முன்னுக்குப்பின் முரணாக வாசகம் என்றுதான் கூறுகிறேன்.

ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் ஒருமைப்பாட்டிற்கு இப்போது என்ன அவசியம் வந்தது.

கால வெள்ளத்தில் மறைந்து போய்விட்ட தத்துவங்களின் வறுமைதான் தேசிய ஒற்றுமை.

எனவே, நாம் இதுபற்றி மறுபடியும் எண்ணுவோம். நமக்கென்று அரசியலமைப்பு இருக்கிறது. பெரிய திறமைசாலிகள் தான் அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். எனினும் நாடு என்ன என்பதை மறுபடியும் எண்ணிப் பார்க்க வேண்டிய புனராலோசனை செய்ய வேண்டிய புது விளக்கம் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக இருக்கிற நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்குப் பகையாளிகள் அல்ல.

நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப்படுகிறேன்.

இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பானவன் அல்ல.

ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்.

நான் என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம்.