அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


டெல்லியில் அண்ணாவின் முதல் முழக்கம்
2

கனம் உறுப்பினர்களின் அன்பை இங்கு பல தடவை கண்டேன். நான் இங்கு வந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சில இந்திக்காரர்களால் ஏற்படுத்தப்படும் விரும்பத்தகாத செயல்களை இது மறக்கடிக்க முயல்கிறது.

உங்களோடு ஒரு நாடாக இருக்கக்கூட ஆசைதான். ஆனால் ஆசை வேறு, உண்மைகள் வேறு.

நாங்கள் ஒரே உலகத்தை விரும்புகிறோம். ஒரே அரசாங்கத்தை விரும்புகிறோம். எனினும் நாங்கள் தேசீய எல்லைகளை மறக்கத் தயாராக இல்லை.

இங்கு கனம் தாதாபாய் பட்டேல் குஜராத் பற்றிப் பேசும்போது கனல் தெறிக்கப் பேசினார். தொழில் முன்னேற்றமடைந்த பகுதியிலிருந்து வந்த அவர், குஜராத்திலிருந்து வந்திருக்கிறேன். குஜராத்தைப் பற்றிப் பேசுகிறேன். இப்படியெல்லாம் பேசினார்.

எனது தமிழக மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வகையிலும் அது பிற்போக்கானது இங்கே உங்களுக்கு நான்கு எஃகு ஆலைகள், பத்தாண்டுகளுக்கு மேலாக ஒரு எஃகு ஆலை வேண்டுமென்று கூக்குரலிட்டு வந்துள்ளோம். இவர்கள் என்ன தந்தார்கள்? அந்த கனரக இயந்திர இலாகாவை எங்கள் மந்திரிக்குத் தந்தார்கள். தொழிற்சாலையை அல்ல.

கனம் சுப்பிரமணியம் இங்கு வராமலிருந்தால் எஃகு ஆலை வேண்டுமென்று அங்கிருந்து வலியுறுத்திக் கொண்டிருப்பார்.

இதுதான் ராஜதந்திரமா, விவேகமா, அரசியல் யுக்தியா? எதுவென்று எனக்குப் புரியவில்லை.

அவரை இங்கு அழைத்து வந்து, தென்னகத்தின் கோரிக்கைக்கு அவரையே பதில் சொல்ல வைத்திருக்கிறீர்கள். இதைத்தான் பிரிட்டிஷாரும் செய்து வந்தார்கள்.

பிரி, ஆள், பண்டமாற்று நடத்தி பணம் வாங்கு, புள்ளி விவரங்களை வீசி வாதத்தைக் கெடு, என்பன போன்ற பிரிட்டிஷ் ராஜ தந்திரத்தைப் போலத்தானே இதுவும் இருக்கிறது.

தவறான அடிப்படையில், குரோத மனப்பான்மையால் நாங்கள் பிரிவினை கேட்கவில்லை. பிரிவினை என்றவுடனே வடநாட்டில் வாழ்வோரின் எண்ணத்தில், பாகிஸ்தான் பிரிவினைபோது நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிரிவினையால் ஏற்பட்ட கொடும் விளைவுகளை நான் அறிவேன். அவர்களுக்கு என் அனுதாபம் உண்டு.

எங்கள் பிரிவினை, அந்தப் பாகிஸ்தான் பிரிவினையிலிருந்து மாறுபட்டது.

எங்கள் இலட்சியம் பரிசீலனை செய்யப்பட்டால், அனுதாபத்தோடு அது கவனிக்கப்பட்டால் அப்போது நம் இருசாரார் இடையே குரோத உணர்ச்சி ஏற்படுவதற்கு அவசியம் இருக்காது. அப்போது (பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்டது போன்ற) பின் விளைவுகள் ஏதும் இருக்காது.

நல்ல வேளையாக, தெற்கு ஒரு தனி பூகோள அமைப்பு கொண்டது. அதை நாம் தக்காண பீடபூமி என்றும், தக்காண தீபகற்பம் என்றும் அழைக்கிறோம். எனவே, பிரிவினையால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மக்கள் குடிபெயர மாட்டார்கள். எனவே, அகதிகள் பிரச்சினை இருக்காது. எனவே இதுபற்றி அமைதியாக ஆழ்ந்து, அனுதாபத்தோடு இந்தப் பிரச்சினைகளைக் காணுங்கள்.

ஜோஸப் மேத்தன் (கேரளா): தென்னகத்தின் மொழி என்னவாக இருக்கும்?

அண்ணா: மொழி மற்றும் இதர விபரங்கள் அரசியல் நிர்ணய சபையில் தீர்மானிக்கப்படும்.

என்னதான் இங்கு இருக்கும் நிலையை எடுத்துச் சொன்னாலும், எங்களுக்கு அது கிடைக்காமல் போனாலும் இந்திய அரசின் மீது தான் எங்கள் மக்கள் குற்றம் கூறுகிறார்கள்.

புதிய தொழிற்சாலைகள் உடனே ஏற்படுத்த முடியாததற்கு சில இயற்கையான காரணங்கள் இருக்கலாம். ஆனால் எந்த விநாடி, இரும்பாலை சேலத்தில் வைக்க மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி புதிய ரயில்பாதை போட மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வைக்க மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி புதியரயில் பாதை போட மறுக்கப்படுகிறதோ அந்த விநாடியே தென்னகத்து வீதியோர மனிதன் உடனே எழுந்து கூறுகிறான்.

இதுதான் டில்லியின் போக்கு வடக்கு ஏகாதிபத்தியத்தின் போக்கு இப்படித்தான் அந்த ஏகாதிபத்தியத்திலிருந்து வெளியேறாத வரை உங்கள் நாட்டை நீங்கள் பாதுகாப்பாக செழிப்பாக முன்னேற்றமாக வைத்திருக்க முடியாது.

எனவே நான் இந்தச் சபையில் பிரிவினை பற்றிப் பேசுகிறேன் என்றால் விழிப்புற்றவர்களின் சார்பில் பேசுகிறேன் என்று பொருள்.

மீராபென் அம்மையார் கொஞ்ச நாட்களுக்கு முன் கூறியதுபோல் பிரிட்டிஷாரை எதிர்த்தபோது உருவாகிய இயற்கை ஒற்றுமை நிலையானது என்று நினைக்கக்கூடாது.
பிரிவினைத் தத்துவம் அதற்குரிய சரியான மொழியில் கூறவேண்டுமென்றால் சுயநிர்யண உரிமை உலகப்புகழ் பெற்ற தலைவர்களால் ஏன் இந்த உபகண்டத்தின் நமது பிரதமமந்திரியாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

என் நினைவு சரியாக இருக்குமானால் காபுர்தாலா மைதானத்தில் நேரு அதிகாரப் பூர்வமாகக் கூறினார்.

ஒரு நிறுவனம் என்ற முறையில் காங்கிரஸ் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய யூனியனில் இருக்கவேண்டும் என்றே முயற்சி செய்யும். ஆனால் ஏதாவது ஒருபகுதி பிரிந்துபோக வேண்டுமென்றால் அதற்கு காங்கிரஸ் சம்மதம் தரும் என்று.

இவ்வகையில் காங்கிரஸ் சுயநிர்ணய உரிமையை ஒப்புக்கொண்டிருக்கிறது.

பிரதமரானபோதும் நேருவிடம் தாராள சிந்தனையும், ஜனநாயக உணர்வும் நெஞ்சில் இன்னும் கனன்று கொண்டிருப்பதாக நினைத்து இந்தத் துணிவான வேண்டுகோளை விடுக்கிறேன்.
பிரிவினையால் இந்தியா தரித்திர நாடாகிவிடாது என்று உறுதி இருக்கும்போது ஏன் தீபகற்பத்திற்கு சுயநிர்ணய உரிமை தரக்கூடாது? அப்படி முடிவெடுப்பது இந்தியாவின் தரத்தை உயர்த்துவதாக இருக்கும்.

இந்தியா ஒன்று என நினைப்போருக்கு சொல்லேன், அது இங்குமங்கும் குழப்ப மிகுந்த கதம்பப் பகுதிகளாக இருப்பதைக் காட்டிலும் நேசப்பான்மையுள்ள பல நாடுகளாக இருப்பது நல்லதல்லவா?

இங்கு உறுப்பினர்கள் எழுந்து அந்தத் திட்டம் வேண்டும். இந்தத் திட்டம் வேண்டும் என்று பிரித்து வாதாடும்போது இந்தியா ஒன்று என்பதையும் அது பிரிக்க முடியாதது என்பதையும் மறந்துவிடவில்லையா?

மராட்டிய நண்பர்கள் மராட்டிய மாநிலம் வேண்டியபோது இந்தியா ஒன்று என்பதை மறந்துவிடவில்லையா? பெருபாரி பாக்கிஸ்தானத்திற்குத் தரப்படும் போது வங்காளத் தோழர்கள் கொதிப்படையவில்லையா? ஒரிசாவின் கோரிக்கை கண்டு பீகார் கொதிப்படையவில்லையா? அசாம் வங்கம் ஆகிய இரு பகுதிகளின் மொழித் தகராறில் வெறுப்பு ஏற்படவில்லையா?
இதுவெல்லாம் பிராந்திய நோக்கு என்று ஒரேயடியாக மறுப்பது இதையெல்லாம் பூசி மெழுகவேயாகும்.

எனவே இந்தப் பிரச்சினையைத் தெளிவாகப் பார்க்கவேண்டும் என்று இச்சபையைக் கேட்டுக் கொள்கிறேன். நான் எங்கிருந்து வந்தேனோ அந்த திராவிட பூபாகத்திற்கு சுயநிர்ணய உரிமை தாருங்கள்.

திரு.என்.எம்.லிங்கம்: உங்கள் வாதப்படி சுய நிர்ணய உரிமை தருவதானால், இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுயநிர்ணய உரிமை கேட்பது தானே? அது பொருத்தமாக இருக்கும்.

அண்ணா: கனம் உறுப்பினர் அதற்கும் வாதாடலாம். ஆனால் நான், எனது திராவிட நாட்டிற்குக் கேட்கிறேன். அப்படிக் கேட்பது ஏதோ குரோதத்தால் கேட்கவில்லை. அப்படி நாடு பிரிக்கப்பட்டால் சிறிய, ஒன்றுபட்ட, ஒரே மாதிரியான மக்கள் வாழும் நாடாக மாறும். எல்லாப் பகுதியும் கலந்து பழகி, வளர்ச்சி பூர்வமாக ஒன்றுபடுவார்கள். அப்போது பொருளாதார முன்னேற்றத்தையும், சமுதாய முன்னேற்றத்தையும் மிக நல்ல முறையில் எய்தலாம்.

டில்லிக்கு நான் வந்து 10 நாட்களாகிறது. எல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லை என்றாலும் நான் மரமடர்ந்த சாலைகளுக்கு, புதுத் தெருக்களுக்கு, சோலைகளுக்குச் சென்றேன்.

ஒருசாலைக்காவது தென்னாட்டார் பெயர் வைக்க வேண்டுமென்ற எண்ணம் இந்திய அரசுக்குத் தோன்றாதது ஏன்?

இது தென்னாட்டு மக்கள் இரண்டாந்தர மக்கள் என்பதைக் காட்டவில்லையா?

திருமதி.லட்சுமி மேனன் (வெளிநாட்டு அமைச்சர்): தியாகராஜரோடு என்ற ஒரு ரோடு இருக்கிறது.

ராமரெட்டி: சங்கீத வித்வான் தியாகராஜாவின் பெயரில் ஒரு ரோடு இருக்கிறதே?

ஒரு உறுப்பினர்: இதைவிட உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?

(மேலும் பல குறுக்கீடுகள்)

அண்ணா: கனம் லிங்கம் அவர்களின் வாதம் பற்றி வியக்கிறேன். ஒரு தியாகராய ரோடினால் அது சர் தியாகராயர் பெயரில் அமைந“ததோ அல்லது கீர்த்தனை புகழ் தியாகராயர் பெயரால் அமைந்ததோ தெரியவில்லை அவர் திருப்தி அடைவாரேயானால் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அதுமட்டும் தெற்கிற்குப் போதாது.

தெற்கே வாருங்கள், மோதிலால் நேரு சோலையில் உலவலாம். நேரு வாசக சாலையில் நுழையலாம், கமலா நேரு மருத்துவமனைக்குப் போகலாம்.

திரு.ராமாரெட்டி: இது ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது.

மன்றத்தலைவர்: ஆர்டர், ஆர்டர் அவர் தொடர்ந்து பேசட்டும்.

அண்ணா: அபுல்கலாம் ஆசாத் ரோட்டில் போகலாம். அத்தகைய விஷயம் இங்கேன் இல்லை? தெற்கே உள்ளவர்களின் எண்ணத்தைப் பாருங்கள்.

தெற்கைப்பற்றிப் பேசும்போது தெற்கத்திய நண்பர்களே எழுந்து, அப்படிப் பேசாதே. எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறார்கள்.

இது பய உணர்ச்சியால் வருவது தென்னகப் பிரதிநிதிகளாக இருப்பதால் ஏதாவது கேட்டால் பிரிவினை வாதிகளான தி.மு.கழகத்தில் சேர்ந்து விட்டனரோ, என்று பிறர் அஞ்சுவார்களோ, அதனால் நமது அரசியல் எதிர்காலம் பாழ்பட்டுவிடுமோ என அஞ்சுகிறார்கள். எனவேதான் எழுந்து, அந்த ரோடு இருக்கிறது என்கிறார்கள். இது எனக்குத் தெரியாதா? தென்னகத்திலிருந்து வந்திருக்கிற பிற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அறிந்திருப்பது போலவே நானும் அறிந்திருக்கிறேன்.

நான் ஒரு தேசிய கொள்கைக்காக வாதாடுகிறேன். குறுகிய மனப்பான்மைக்காக அல்ல, கட்சிக் கொள்கைக்காக அல்ல.

என்னுடைய பெருமைக்குரிய நாட்டிற்கு சுயநிர்யண உரிமை கேட்கிறேன். அதன்மூலம், அந்நாடு உலகிற்கு தன் பங்கைச் செலுத்தவிருக்கிறது.

அய்யா எங்களுக்கென்று ஒரு தனிக் கலாச்சாரம் உண்டு.

திராவிட நாட்டிலிருக்கும் கலாச்சாரத்துக்கும் பிற பகுதிகளிலுள்ள கலாச்சாரத்திற்கும் மேலேழுந்தவாரியாக ஒற்றுமை நிலவலாம்.

மன்றத்தலைவர் அவர்களே கன்னியாகுமரியிலிருந்து இமாலயம்வரை ராமனும், கிருஷ்ணனும் தொழப்படுவதால் இந்தியா ஒற்றுமைப்பட்டுள்ளது என்று தாங்கள் முன்பொருதடவை கூறிய பாண்டித்ய மிக்க வாசகங்கள் என் நினைவுக்கு வருகிறது.

அதேபோல உலகமுழுவதும் மரியாதையுடன் பயத்துடனும் ஏசுநாதர் தொழப்படுகிறார்.

இருந்தாலும் ஐரோப்பாவில் பலபல தேசீய நாடுகள் இருக்கின்றன. புதிய புதிய தேசீய நாடுகள் உலகில் வந்துகொண்டே இருக்கின்றன.

ஆகையால் தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசீய இனம் பற்றி குடியரசுத் தலைவர் எதுவும் குறிப்பிடாதது பற்றி நான் மெத்த வருந்துகிறேன்.

ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய இந்த மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது. சோஷலிசம் காரமற்றதாக்கப்பட்டிருக்கிறது. தேசியம் தவறான பொருளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

வரும் ஆண்டுகளில் புது எண்ண ஓட்டத்தின் விளைவாக தென்னகத்தின் தேவையும் தத்துவமும் புனராலோசனை செய்யப்படும் என்று நினைக்கிறேன். நான் சார்ந்திருக்கும் திராவிட நாட்டிற்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்படும் என்று கருதுகிறேன்.

அண்ணாவின் சேவை
ஒரு காங்கிரஸ்காரர் கையில் பத்திரிகை வைத்திருக்கிறார். அதில் தி.மு.கவின் பிரிவினைக் கோரிக்கையை எல்லாக் கட்சிகளும் எதிர்க்கின்றன என்று கொட்டை எழுத்துக்களில் போடப்பட்டிருக்கிறது. அவர் அண்ணாவுடன் பேசுவதாவது. பலே மிஸ்டர் அண்ணாத்துரை உங்களுக்கு எதிராகவாவது நாடு ஒன்றுபட்டு ஒருமைப்பாடு ஏற்படட்டும். இப்படி டெல்லி ஆங்கில தினசரியான இந்துஸ்தான் டைம்ஸ் கேலிச் சித்திரம் போட்டிருக்கிறது.

வெட்டு விழுந்துவிட்டது
இது இந்துஸ்தான் டைம்ஸ், இந்துஸ்தான் ஸ்டாண்டர்டு ஆகிய வட இந்திய ஆங்கில தினசரிகளில் வந்திருக்கும் கேலிச் சித்திரமாகும் திராவிட நாடு கேட்டது தற்கொலை முயற்சி என்பது இந்தச் சித்திரத்தின் கருத்து.

மாநிலங்கள் அவையில் அண்ணா பேசி முடித்ததும் தாயகத்தில் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விமான மூலம் சென்னை வந்து சேர்ந்தார்கள். அண்ணாவை அடுத்து மாநிலங்கள் அவையில் பேசிய எல்லா உறுப்பினர்களும் திராவிட நாடு விடுதலை முழக்கத்திற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தார்கள்.

பிரிவினை என்பது இந்தியாவின் அழிவு. முஸ்லீம் லீக்கின் இரண்டு தேசக் கொள்கையைப் போலவே இதுவும் இருக்கிறது. இந்தியாவைப் பிரிக்க வேண்டுமென்று கூறுவோரிடம் எந்தவித சமரசமுமில்லை. இந்தியா முழுவதும் இதை எதிர்த்துப் போராட வேண்டும். பிரிவினை கேட்பது சட்டப்படி குற்றமாக்கப்பட்டு சரியாகத் தண்டிக்கப்படவேண்டும்.

என்று ஜனசங்க உறுப்பினர் வாஜ்பேய் என்பவர் கடுமையாகத் தாக்கினார்.

அழிவு
போராட்டம்
சட்டப்படி குற்றம்
சமரசம் இல்லை
தண்டிக்கவேண்டும்

இதுபோன்ற கர்ச்சனைத்தான் ஜனசங்கத் தலைவரின் பேச்சிலே திரும்பத் திரும்பக் கேட்கிறதே தவிர, விடுதலை முழக்கத்தின் அடிப்படை உணர்வுக்கான காரணமும் மதிக்கப்படவில்லை. கருத்து விளக்கமும் காணக் கிடைக்கவில்லை.

ஒரு நாட்டுக்கான விடுதலையை அறவழியில் நின்று கேட்பது, கொலை, கொள்ளை போன்ற பஞ்சமா பாதகங்களிலே ஒன்றுபோலக் கருதப்பட்டு அதற்கான தண்டனைகளை நிறைவேற்றும் உத்திரவைப் பழைய காலத்து ராஜாக்களைப்போல, அளித்துக்கொண்டிருப்பது நாகரீக உலகம் தேர்ந்தெடுத்திருக்கிற அரசியல் முறைக்கு ஏற்றதாகாது.

திராவிட நாடு கோரிக்கை சரியானதல்ல. எனினும் நாம் மண்டலங்களுக்கு அதிகாரம் தரவேண்டும். செய்தி போக்குவரத்து ரயில் நிர்வாகத்தைக்கூட அவர்களிடம் தரவேண்டும். என்று சாக்சானோ எனப்படும் நியமன உறுப்பினர் குறிப்பிட்டிருக்கிறார். அவரது பேச்சு நமக்கு திருப்தி அளிக்கக்கூடியது அல்ல என்றாலும், அவருக்குத் திருப்தி அளிக்கக்கூடிய அளவுக்காகவாவது அரசினர் அவரது அபிப்ராயத்தை ஏற்றுக்கொள்வார்களா? என்பதை அவர் மட்டுமல்ல, அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கேரளத்தைச் சேர்ந்த பாரதியும், கர்நாடகத்தைச் சேர்ந்த திவாகரும், ஆந்திராவைச் சேர்ந்த அக்பர் அலிகானும், தமிழகத்தைச் சேர்ந்த கரையாளரும், திராவிட நாடு வேண்டாம் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள், மாநிலங்கள் அவையில்.

பார்த்தீர்களா? திராவிடர்களே திராவிட நாட்டை எதிர்க்கிறார்கள் என்று கேலி பேசப்படுகிறது.

ஆபிரகாம் லிங்கன், நீக்ரோக்களின் விடுதலைக்காகப் போராடினார். சந்தைப் பொருள் எனவும், மந்தைப் பிராணிகள் எனவும் அந்தப் பரிதாபத்திற்குரிய நீக்ரோக்கள் நடத்தப்பட்டபோது அவர்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட கிளர்ச்சியை எதிர்த்தவர்களில் பலர் நீக்ரோக்கள் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்வது கேலி பேசுகிறவர்களுக்குத் தக்க பதிலாகும். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்தவர்களும் மற்ற வடபுலத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் திராவிட நாடு என்ற சொல்லையே தங்கள் காதுகளில் நுழையவிடுவது பாபமெனக் கருதுவது போலக் கண்டனம் தெரிவித்தார்கள். அவர்களைவிட அதிக ஆவேசத்தைத் தென்னகத்து உறுப்பினர்கள் காட்டுவது கண்டு, அண்ணா அவர்கள் அவையிலேயே ஏற்ற பதில் தந்திருக்கிறார்கள்.

தெற்கைப் பற்றிப் பேசும்போது தெற்கத்திய நண்பர்களே எழுந்து, அப்படிப் பேசாதே, எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறார்கள். இது பய உணர்ச்சியால் வருவது தென்னகப் பிரதிநிதிகளாக இருப்பதால் ஏதாவது கேட்டால் பிரிவினை வாதிகளோடு தி.மு.கழகத்தில் சேர்ந்துவிட்டனரோ என்று பிறர் அஞ்சுவார்களோ, அதனால் நமது அரசியல் எதிர்காலம் பாழ்பட்டுவிடுமோ என அஞ்சுகிறார்கள்.

இந்த உண்மையை சரியான சமயத்தில் அண்ணா அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

உயிர் கொடுத்தாவது பிரிவினையைத் தடுப்போம்.

என்று உணர்ச்சி கொப்பளிக்க உத்வேகத்துடன் மாநிலங்கள் அவையில் உமாநேரு என்னும் பெருமாட்டி எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

அதுபற்றி விடுதலைத் தலைவர் அண்ணா அவர்கள் சென்னையில் பேசியபோது, குறிப்பிட்ட வீர வரிகளை திராவிட வரலாறு என்றென்றும் கண்களிலே ஒத்திக்கொள்ளும்.

உயிர் கொடுத்தாவது திராவிட விடுதலையைத் தடுப்போம் என்று பேசியவர்கள் மீது துளியும் எனக்குக் கோபம் இல்லை. தெளிவு பிறக்கும் சூழ்நிலையை நாம் உண்டாக்க வேண்டும். உயிர் கொடுக்கிற பிரச்சினைதான் இது பெறுவதற்கும் உயிர் கொடுக்க வேண்டும். தடுப்பதற்கும் உயிர் கொடுக்க வேண்டும். உயிர் கொடுப்பது எப்படி என்றால் ஒருவருக்கொருவர் குத்திக்கொண்டு சாவது என்று நாங்கள் எண்ணவில்லை.

பாகிஸ்தான் கேட்டபோது, உயிரைக் கொடுத்துத் தடுப்போம் என்றவர்கள் பலர் இன்று உயிரோடுதான் இருக்கிறார்கள்.

பெருபாரி பிரச்சினை வந்தபோது உயிரைத் தந்தாவது பெருபாரியின் இழப்பைத் தடுப்போம் என்று உறுமியவர்கள் யாரும் பிணமாகிடவில்லை.

திராவிட நாடு கோரிக்கை, பொருளற்றது ஆதாரமற்றது என்று பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் பதிலுரைத்துத் தனது கருத்துக்களைப் பொருளற்றதாக்கிக் கொண்டார்.

வட மாநிலங்களிலே உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களையும், பிரதமர் நேரு அவர்களையும் மிஞ்சுகின்ற விதத்தில் திராவிட நாட்டுக் கோரிக்கையை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்துக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் புபேஷ் குப்தா அவர்கள் மாநிலங்கள் அவையிலே கனல் தெறிக்கப் பேசினார்.

திராவிடஸ்தான் என்கிற அபாயகரமான குருட்டுத்தனமான, கருத்தைப் பரப்பும் மேடையாக பாராளுமன்றத்தைப் பயன்படுத்த கம்யூனிஸ்டு கட்சி அனுமதிக்காது.
என்று திட்டவட்டமாகக் கூறினார்.

விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் எந்த நாட்டின் மக்களுக்கும் சோவியத் யூனியன் விசுவாசமுள்ள நண்பனாக இருந்துவந்துள்ளது. இனியும் இருந்துவரும்.

என்ற ரஷ்ய நாட்டுத் தலைவர் குருஷேவ் அவர்களின் பேச்சையும் படித்துவிட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் போக்கையும் ஆராய்ந்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

நாம் கேட்பதை ஒரு நாடாகவே கம்யூனிஸ்டுகளோ மற்றவர்களோ கருதவில்லையா?

இது தனிநாடு அல்ல என்பதற்கு என்னென்ன ஆதாரம்?

இந்தியாவுடன் திராவிட இணைந்திருக்க வேண்டுமென்பதற்கு என்ன அடிப்படை?

எதனால் வடவரும் தெற்கேயுள்ளவர்களும் ஒன்றுபடுத்தப் பட்டிருக்கிறார்கள்?

ஒருநாடு தனியாக வாழ்வதற்குரிய இலக்கணங்கள் எவை எவை?

அந்த இலக்கணம் அனைத்தும் சோவியத் யூனியனால் ஆதரிக்கப்படுகிறது. பக்டூனிஸ்தான் கிளர்ச்சிக்கு இருக்கிறதா?

பாகிஸ்தானில் இருந்து பக்டூனிஸ்தான் பிரியவேண்டுமெனக் கூறுகிற கம்யூனிஸ்டுகள், இந்துஸ்தானில் இருக்கிற திராவிடஸ்தான் பிரியக்கூடாது என்பதற்குக் காட்டுகிற காரணங்கள் என்ன?

சீனத்து ஆக்கிரமிப்பினால் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருக்க கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ள ஒரு பிரிவினர் நல்ல பிள்ளை பட்டம் பெறுவதற்காக, திராவிட நாடு கோரிக்கையை மூர்த்தண்யமாக எதிர்த்துவருகிறார்கள் என்பதைத் தவிர அசைக்க முடியாத சான்றுகளை வைத்துக் கொண்டல்ல.
விடுதலைப் போரில் முதல் கட்டம், அலட்சியப் படுத்துவது.

இரண்டாம் கட்டம், அன்பாகப் பேசிப் பார்ப்பது.

மூன்றாவது கட்டம், மமதையாக மிரட்டிப் பேசி அடக்கிப் பார்ப்பது.

நான்காவது கட்டம், இவ்வளவு ஆதரவா? திகைப்பது.

ஐந்தாவது கட்டம் சரி என்ன வேண்டும்? என்ற சமரசம் பேசுவது.

என்று அண்ணா அவர்கள் சென்னையில் பேசியிருப்பதை நாம் மட்டுமல்ல, நம்மை மிரட்டி அழித்துவிடலாமென எண்ணியிருப்பவர்களும் கூர்ந்து கவனித்து நினைவில் வைத்துக்கொள்வது நலமாகும்.

உபயோகமற்றது. அலட்சியப்படுத்தத் தக்கது யாரோ சில அதிருப்தியாளர் கூக்குரல் என்று கருதப்பட்டு வந்த பிரச்சினையைப் பற்றி அடக்கத்திற்கும் அமைதிக்கும் பேர்போன ராஜதந்திரிகளும் மேதைகளும் அமர்ந்திருக்கும் அவையில் உயிர் கொடுத்தேனும் பிரிவினையைத் தடுப்போம் என்ற ஆவேசம் கிளம்பிற்றென்றால் அது போதாதா? இதற்கு நான் காரணமாயிருந்தேன் என்பதைப் பற்றிப் பெருமைப்படுவதற்கு முன் அங்கே என்னை அனுப்பிவைத்த உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களிடையே அண்ணா கூறியபோது யாருக்குத்தான் உடல் புல்லரிக்கவில்லை?

குடியரசுத் தலைவர் உரை பற்றிக் குறிப்பிட்டு, அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து, ஆட்சியாளரின் ஜனநாயக நேர்மை, தேர்தல் நேரத்தில் எவ்வளவு கெட்டுக் கிடந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, பொருளாதார விளக்கம் தொழில்துறை பற்றிய கருத்துக்களை அளித்துவிட்டு.
நான் திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்தவன். நான் எங்கிருந்து வந்தேனோ அந்த திராவிட பூபாகத்திற்கு சுயாதிபத்ய உரிமை தாருங்கள்.

என்று முதல் முழக்கம் செய்தார். இந்த நிகழ்ச்சியை சரித்திரச் சுவடியிலேயிருந்து யாரும் அகற்றிவிட முடியாது. அதுபோலவே தான் நமது சுதந்திர உணர்வையும் யாரும் அகற்றிவிட இயலாது.

சலுகைகள் அளிப்பது

சில பல உரிமைகள் வழங்குவது

அணைகளைக் கட்டுவது

திட்டங்களைத் தீட்டுவது

திராவிடருக்குப் பதவிகளைத் தருவது

இந்தக் காரியங்களால் திராவிடர் நெஞ்சில் கொழுந்து விட்டெரியும் சுதந்திர ஜ்வாலையை அணைத்துவிட நினைப்பதுதான் பகற்கனவாகும்.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

பின்னர் வேறொன்று கொள்வாரோ?

இந்தக் கவிதை வரிகள் நம் நினைவைவிட்டு என்றும் அகல முடியாதவை.

விடுதலைப் போரில் நாம் மடிய நேரிட்டாலும் இந்த உணர்ச்சி வரிகள் நமது கல்லறைகளில் ஒளிவிட வேண்டுமென்பதே நமது தணியாத ஆசை.