அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திராவிடம் நமது பிறப்புரிமை
1

“வரலாறு, பொருளாதாரக் காரணங்களின் வலுவான ஆதரவுடன் – அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தி.மு.கழகம் திராவிட நாடு கேட்கிறது. இந்தக் கோரிக்கையைப் புறக்கணிப்பது நல்லெண்ணம் வளர வழி செய்யாது.

“திராவிட நாடு பெறுவது திராவிடர்களின் பிறப்புரிமையாகும். திராவிடர்களின் பிறப்புரிமையைத் தரமறுப்பது நியாயமற்றதாகும். அதனால் ஆபத்து விளையும்.

“திராவிடர்கள் மதியற்ற வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு, டில்லி ஆதிக்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளனர். இந்த வெறுப்பு வளருமானால், விடுதலை கேட்டுக் கொண்டிருக்கும் காலம் போய் விடுதலையைத் தாங்களே தேடிக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துவிடுவர்“ என்று தி.மு.கழக மூன்றாவது பொது மாநாட்டின் நான்காம் நாள் நிகழ்ச்சிகளின் இறுதியில் – தலைவர் முடிவுரையில் அண்ணா அவர்கள் தெள்ளத் தெளிய எச்சரித்தார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது:
“பாகிஸ்தானைத் தர மறுததால் நான் எடுத்துக் கொள்வேன் என்று ஜின்னா அவர்கள், அன்று குறிப்பிட்டார். ஜின்னா அளவுக்கு நான் பலம் பெற்றால் ‘திராவிட நாட்டை எடுத்துக் கொள்வேன்‘ என்று சொல்ல மாட்டேன். ‘எடுத்துக் கொண்டேன்‘ என்றுதான் சொல்வேன். ஆகவே ஜின்னா அளவுக்கு எனக்குப் பலம் தர வேண்டியது உங்கள் கடமையாகும். இத்தகைய பல்தை நீங்கள் தேர்தலின் மூலம் தந்தாக வேண்டும்.

உங்கள் கையில்தான் இருக்கிறது

1962ஆம் ஆண்டில் நான் சட்டமன்றம் நுழைகிற நேரத்தில் நான் திரும்பிப்பார்த்தால் அங்கே பெருவாரியான உறுப்பினர்கள் அணிவகுத்துச் செல்கிற காட்சியை நான் கண்டாக வேண்டும்.

“திராவிட நாடு கிடைக்காது“ என்று சொல்லும் காங்கிரசுக் காரர்களைச் சட்டமன்றத்தினுள் நான் பெருமையுடன் சந்தித்து. ‘இப்போது என்ன சொல்கிறாய்?‘ என்று கேட்டு அவர்களை வெட்கித் தலை குனியச் செய்ய வேண்டும். அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

அந்த வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தித் தமராவிட்டால் – வரும் தேர்தலில் அதிக வாக்குகளை வாங்கித் தராவிட்டால், ‘அண்ணா அண்ணா‘ என்று நம்ப வைத்து என் கழுத்தை அறுத்ததாகத்தான் நான் நினைப்பேன்.

நான் பெற்ற ஒரே வலிமை

நான் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன், குலப் பெருமையோ, குடிப் பெருமையோ, குடும்பப் பெருமையோ எனக்குக் கிடையாது. பணவலிமையும் எனக்குக் கிடையாது. எனக்குக் கிடைத்த ஒரே விமை மனவலிமைதான்(

அந்த வலிமையும், ஆயுள் பலமும், நான் ஏற்றுக் கொண்ட இலட்சியத்தை ஈடேற்றும் வரையில் உதவ வேண்டும் என்று விரும்புகிறேன்.

தேர்தல் மட்டுமே நம்முடைய இலட்சியமல்ல என்பதை இந்த மாநாடு நன்கு உணர்த்துகிறது. வீர வணக்கத்தோடு முடிவடைகிறது. ஆகவே, தேர்தல் ஒர் இடைக்காலச் சம்பவம் என்பதையும், திராவிட நாட்டுப் பிரிவினைதான் நமது இலட்சியம் என்பதையும் நாம் நன்கு உணரமுடிகிறது.

காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாக ஊழல்

கடந்த 14 ஆண்டுக்கால காங்கிரசுக் கட்சியின் நிர்வாக ஊழால் பற்றிக் குறிப்பிட்டு அண்ணா அவர்கள் கூறியதாவது:

“காங்கிரசு ஆட்சியில், நாட்டின் பொருளாதார அமைப்பானது பிரிட்டிஷார் ஆட்சி காலத்திலிருந்ததைவிட அதிகமான அளவு முதலாளித்துவப் பாணியிலேயே உருவாகிக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரத் துறையில் அயலவர்களின் ஊடுருவல் ஆபத்தான அளவில் பெருகிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் நடத்துகின்ற தொழில் துறைகள், நிர்வாகத் திறமையின் சின்னங்களாகத் திகழ்கின்றன.

பொது மக்களிடமும், வெளிநாடுகளிடமும் வாங்கும் கடன்கள் அபரிமிதமாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இக்கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் வசதிகளோ வெகு குறைவு.

வேளாண்மை முன்னேற்ம் காகித அளவில்தான் ஒளியோடு இருக்கிறதே ஒழிய, உண்மையில் இருளைத்தான் காண்கிறோம்.

இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேறிய போதிலும் வேலையில்லாத் திண்ணடாட்டம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

பணவீக்கம் – தொற்றுநோய்!

பணவீக்கம், தொற்றுநோய் போல் பரவி வருகிறது. பொருளாதார வல்லுநர்களின் எச்சரிக்கைக்கும், மக்களின் புலம்பலுக்கும் மத்தியில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதன் விளைவாக விலைவாசிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

“ஆகவே, காங்கிரசுக் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் எனத் தி.மு.கழகம் உறுதி பூண்டிருக்கிறது. இதற்காக தமிழகத்திலுள்ள கோடிக்கணக்கான பாட்டாளி மக்களின் கூட்டாளியான தி.மு.கழகம், காங்கிரசுக்கு எதிரான சனநாயகச் சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி வருகிறது.

இன்றைய இந்திய அமைப்பு உண்மைக்கு மாறுபட்ட – தவறான அனுமானங்களின் பேரால் உருவாக்கப்பட்டதாகும். அதிகாரங்கள் அனைத்தும் டில்லியில் குவிந்திருக்கின்றன. மாநில அரசுகள் வெறும் நிதியுதவி பெறும் நிறுவனங்களாக ஆக்கப்பட்டிருக்கின்றன.

சனநாயகவாதியும் தேசியவாதியுமாகிய தலைமை அமைச்சர் நேருதான், தென்னகத்து மக்களின் உண்மையான உணர்வுகளைத் தெரிந்து கொள்ள முடியும். எனவே, அவரது காலத்திலேயே, அவராலேயே இந்த முக்கியச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என விரும்புகிறோம்.“

மதுரை – திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. மூன்றாவது பொது மாநாட்டிற்குத் தலைமை வகித்த அண்ணா அவர்கள், மாநாட்டில் இறுதி நாளான 16.7.61 அன்று நிகழ்த்திய முடிவுரையின் சுருக்கம் வருமாறு:

“நான்கு நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெற்ற நமது பொது மாநாடு, இன்று முடிவடையும் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. எனது பேச்சுக்குப் பிறகு புரட்சி நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரனின் ‘சுமைதாங்கி‘ நாடகத்தோடு மாநாடு முடிவடைய இருக்கிறது.

இந்தச் சீரிய முயற்சி வெற்றிகரமாக முடிவுறும் நிலையில் இருந்தாலும், இந்த மாநாட்டில் தஞ்சை, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர்களும், தெ.ஆ.மாவட்டத்தின் ஒரு பகுதியினரும் கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியினரும் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க முடியாமல் போய்விட்டது.

இந்த மாநாட்டை இங்குக் கூட்டுவதற்கு எடுத்துக் கொண்ட காலம் போதுமானதாக இல்லை என்றாலும், நம்முடைய மதுரைத் தோழர்கள் எவ்வளவு குறைந்த காலம் கொடுத்தாலும் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

24 மணிநேர மாநாடு

இந்த மாநாட்டை நடத்துவதற்குத் துணையாக, தஞ்சை, திருச்சி மாவட்டத் தோழர்கள் உடனிருந்து சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் காலம் குறைந்திருந்த போதிலும் மாநாட்டை நடத்த துணிந்தோம். ஆனால் வெள்ளம் காரணமாக, எதிர்பார்த்த படி அந்த மாவட்டத் தோழர்கள் மாநாட்டில் பங்கு கொள்ள முடியவில்லை. எனினும், நாமெல்லாம் பெருமைப்படத் தக்கஅளவில் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது.

இருபத்து நான்கு மணி நேரமும் மாநாடு என்று ஏனையோர் உணரும் அளவுக்கு, பகல் முழுவதும் சொற்பொழிவுகளும் விடியற் காலை 3 மணி வரை நாடகமுமாக இந்த நான்கு நாட்களும் நடைபெற்றிருக்கின்றது.

நேற்று இரவு 2 மணிவரை நான் மாநாட்டுப் பந்தலில் இருந்து அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தேன், பல்லாயிரக்கணக்கானவர் நாடக அரங்கில் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் மற்றவர்கள் இந்தப் பந்தலிலே படுத்திருந்த காட்சியையும் கண்டேன்.

மறக்க இயலாக் காட்சி!

இங்கே படுத்திருந்தவர்கள் அத்தனைப் பேரும் மாநாட்டுக்காகவே வந்திருந்தவர்கள் என்றாலும் போர்ப்படையினர் கரியோடும் பரியோடும் வந்து போர் நடத்திவிட்டு, இரவு நேரத்தில் அலுத்துப் படுக்கும் காட்சியைப் போல் இருந்தது.

இவ்வளவு உற்சாகப் பெருக்கும், உணர்ச்சி வெள்ளமும் ஏற்பட்டுள்ளதைக் கண்டு பெருமிதப்பட்டேன். இதற்காக ஓயாது உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

நான் மிகமிகச் சாமான்யக் குடும்பத்தில் பிறந்தவன், எனது குடும்பப் பெருமையையோ பண வலிமையையோ நம்பி என்னை நீங்கள் தலைவராக்கவில்லை. உங்களுடைய ஆற்றலினால்தான் நான் இந்த வலிவினைப் பெற்றிருக்கிறேன். லட்சக்கணக்கான தம்பிமார்களும், தங்கள் இதயத்தை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நீங்கள் காட்டும் நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் ஈடாக உடல்வளம் எனக்கு இருக்குமா என்பதற்கு உறுதியில்லை. ஆனால் உற்சாகம் பற்றிய ஐயம் குறுக்கிடவில்லை.

வெடிகுண்டு வேண்டாம் – நல்லெண்ணம் தேவை

நாம் மிகமிகச் சாமான்யர், ஆனால் நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம் பெரிது – இந்த நாட்டை மீட்கும் காரியம்( வெடிகுண்டினால் மட்டும் பெறக்கூடிய வெற்றியை நல்லெண்ணத்தால் பெற முயலுகிறோம். படை நடத்தினால் மட்டுமே அடையக் கூடிய வெற்றியை மாநாடு நடத்தி அடைய முயலுகிறோம். நரம்பு புடைக்க இரத்தம் கொதிக்கச் செய்து உங்களையெல்லாம் விடுதலை வீரராகக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நமது முயற்சியின் வெற்றிக்கு அறிகுறியாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

எனது மதிப்பிற்குரி மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும், நம்மைப் பற்றி அக்கறையற்றவர்களுக்கும், பத்திரிகைகாரர்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் – இந்த மாநாட்டைப் பார்த்தால் விநாடிக்கு விநாடி, வேளைக்கு வேளை, தி.மு.கழகம் வேக வேகமாக வளர்ந்து வருவதைக் காணலாம். ஒரு அரை டசன் பேச்சாளர்கள் போய்விட்டதால், கழகத்திலிருந்து யார் யாரோ போய்விட்டார்கள் – கழகம் கலகலந்து விட்டது என்றெல்லாம் நாட்டிலே பிரச்சாரம் செய்தார்கள். இந்த நான்கு நாட்களாகத் திருப்பரங்குன்றத்திலும், மதுரையிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒளிவீசும் கண்களோடு கழகம் வளர்ந்துள்ள காட்சிகளைக் கண்டோம். இதிலிருந்தேனும் கழகத்தின் வலிமையை மாற்றுக்கட்சியினரும், மனிதாபிமானம் உள்ள பத்திரிகையாளரும உணர வேண்டும்.

கிராமச் செல்வாக்கு

இந்த மாநாட்டுக்கு நகரிலிருந்து வந்தோரைவிட, கிராமப்புறங்களிலிருந்து வந்திருப்போர் தொகை அதிகமாகத் தெரிகிறது. துணி மூட்டைகளையும், தகரப்பெட்டிகளையும் ஓலைப் பெட்டிகளையும் எடுத்துக் கொண்டு வந்தவர்களையும் மாட்டு வண்டியிலே வந்தவர்களையும், மலர் சூடாத கூந்தலைப் பிணைத்துக் கொண்டை போட்ட தாய்மார்களையும், ஏணை கட்டித் தங்கள் குழந்தைகளை உறங்க வைத்துக் கொண்டிருப்போரையும் இங்கே காண்கிறோம். இதிலிருந்து தி.மு.கழகம் நகரைவிடக் கிராமத்தில்தான் அதிகச் செல்வாக்குப் பெற்று வளர்ந்து வருகிறது என்பதை உணரலாம்.

மற்றொரு உண்மையும் இந்த மாநாட்டின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. ஆந்திரத்திலிருந்தும் கேரளத்திலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் வந்துள்ள தோழர்கள், தமிழ்ப் பேச்சாளர்க்ளுடன் போட்டி போட்டுக் கொண்டு அவரவர் மொழியிலே தமிழைவிட எழுச்சிமிக்க நடையிலும், உணர்ச்சியுடனும் பேசியதைக் கேட்டோம். கர்நாடகத் தோழர்களின் கனிவுரையையும், ஆந்திரத் தோழர்களின் அறிவுரையையும், மலையாளத் தோழர்களின் மாண்புரையையும் தமிழர்கள் கேட்டார்கள்.

வளரவேண்டிய முறையில் வளர்ந்து வருகிறது

சவூதி அரேபியாவிலுள்ள ஒரு தோழரும், சிட்டாங் பகுதியிலுள்ள சில தோழர்களும் மாநாட்டுக்கு வருவதாக எனக்குக் கடிதம் எழுதிவிட்டு வந்திருக்கிறார்கள். ஒரு ஐந்தாறு தோழர்கள் ஐதராபாத்தில் கழகம் துவக்குவதற்க என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். திராவிட நாடு முழுவதிலிருந்தும் பிரதிநிதிகளும், பேச்சாளர்களும் வந்து கலந்துகொண்டிருக்கிறார்கள்.

தி.மு.கழகம் வளரவேண்டிய முறையில் – வளர வேண்டிய நேரத்தில் – வளர வேண்டிய அளவில் வளர்ந்து வருகிறது.

முதுபெரும் கிழவர் திரு.மேடப்பா அவர்கள், இங்கே நமது மேடையில் அமர்ந்திருப்பது நமக்கெல்லாம் பெருமையும் புது நம்பிக்கையும் தருவதாகும். நீங்களெல்லாம் என்னை, ‘அண்ணா‘ என்று அழைக்கிறீகர்கள், நான், ‘அண்ணா‘ என்று அழைக்க யாருமில்லாதிருந்தார்ர்கள். இப்போது எனக்க ஓர் அண்ணா கிடைத்திருக்கிறார். அதுவும் கர்நாடகத்திலிருந்து எனக்கு ஓர் அண்ணா கிடைத்திருப்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

விடுதலை பெறுவது இயற்கை

திரு. மேடப்பா அவர்கள், ‘எனக்கு வாதாடிப் பழக்கமில்லை, தீர்ப்பளிக்கப் பழகியவன்‘ என்று சொன்னார். அவையடக்கத்துக்கு அவர் அப்படிச் சொல்லியிருக்கக்கூடும். அவர் வாதாடும் கலையில் பயிற்சி பெற்ற பின்னர்தான், நீதிபதியாக அமர்ந்தார்.

அவரிடம் நான் தெரிவித்தக் கொள்கிறேன் – ‘ஐயா எங்கள் வழக்கு மிகச் சாமானியமானது. அழுகுரல் கேட்டுத் தாய் தன் குழந்தைக்கப் பால் கொடுப்பதும், பழுத்த கனி தரையில் விழுவதும் எப்படி இயற்கையோ, அதேபோல் பக்குவம் பெற்ற மக்கள் விடுதலை பெறுவதும் இயற்கை‘ என்று.

உறுதுணையாக இருக்கட்டும்

திரு. மேடப்பா அவர்கள் வழக்காடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல, இங்கே நமது தோழர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். உணர்ச்சிகளைப் பார்த்தார். தீர்ப்பளிக்கும் நிலையில், திராவிடத்தின் விடுதலைக்கு வாதம் தேவையில்லை என்று சொல்லி, இந்திய ஏகாதிபத்தியவாதி களுக்கு நல்வழி காட்டியிருக்கிறார்.

அவர் இன்று நம்மிடமிருப்பதால், கர்நாடகத்தில் காலூன்றியிருக்கும் நாம், வீரநடை போட உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறேன்.

மலையாளத்தில் பேசிய தோழர்கள் என் இளமைப் பருவத்தைக் கவனப்படுத்தினார்கள். அவர்கள் பேசிய மொழி மற்றொரு மொழியினருக்கும் நன்றாகப் புரிந்தது. மலையாளம், ஆதித் தமிழ் மொழியில் கிளைத்ததுதான் பொருள். இப்போது எல்லோருக்கும் விளங்கும் என எண்ணுகிறேன். மலையாள மொழிப் பேச்சுக் கேட்டு, என்னையும் அறியாது இளைஞனாகவே இருந்தேன்.

ஆந்திரத் தோழர்கள் தெலுங்கில் பேசியது, அப்பகுதியில் எழுச்சியை வளர்க்கப்பயன்படும் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

உங்கள் நெஞ்சத்திற்கும் திருப்தி ஏற்படட்டும்

மாற்றுக் கட்சியினரும், ஆட்சியாளரும், பத்திரிகையாளரும் இநத் மாநாட்டின் மூலம் மற்றோர் உண்மையையும் உணர்வார்கள் என நம்புகிறேன். இந்த நான்கு நாள் மாநாட்டில் ஏறக்குறைய 100 பேர் வரை பேசியுள்ளார்கள். அவர்கள் அத்துணை பேருடைய பேச்சிலும் ஒரு சிறு ஆபாசம் இருந்தது என்று சொல்ல முடியுமா? வகுப்புத் துவேஷமோ, காட்டுமிராண்டித் தன்மையோ, பிடிக்காத செயலோ இருந்ததாகக் கூறமுடியுமா? ஆபாசமாக எதிர்த்துப் பேசியதாகவோ, தரக்குறைவான சொற்கள் இருந்ததாகவோ எனக்குச் சொல்ல வேண்டாம், உங்கள் நெஞ்சத்திற்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர்களை நான் வேண்டிக் கொள்கிறேன். கழகத் தோழர்கள் எவ்வளவு தூரம் ஆபாசப் பேச்சிலும் வன்முறையிலும் ஈடுபட்டிருக்கக்கூடு்ம் என்பது உங்கள் நெஞ்சத்துக்குத் திருப்தி தந்தால் போதும்(

தேர்தல் பற்றிய தீர்மானம் வந்தபோது எழுச்சியைக் கண்டோம் 1962ஆம் ஆண்டைய பொதுத் தேர்தலில் நாம் எந்த அளவு வெற்றி பெறுகிறோமோ அதைப் பொறுத்தே அடுத்த 15 ஆண்டு அரசியல் நிலை இருக்கிறது. இன்று நாம் எடுத்துக் கொண்டுள்ள சூளுரை 1962இல் அதிக வெற்றியை நிலை நிறுத்த வேண்டும்.

விளம்பரம் பெறமுடியாத துர்பாக்கிய நிலை

வெளிநாட்டுத் தலைவர்களும், நிருபர்களும் என்னைப் பார்க்கக் கேட்பதெல்லாம். நமது மேயல் முனுசாமியைக் கேட்பதைப் போலத்தான். சில நாட்களுக்கு முன்பு சென்னை ‘இந்து‘ பத்திரிகை அலுவலகத்திலிருந்து என்னை ஒருவர் தொலைபேசி மூலம் அழைத்தார். அந்த குரல் எனக்குச் சொந்தம் உள்ள குரல் போல இருந்தது. ‘யார்?‘ என்று கேட்டேன். நான் தாண்டா நரசிம்மன் என்று பதில் குரல் கேட்டது.

நரசிம்மன் என்பவர் எனது பழைய நண்பர். கல்லூரியில் என்னுடன் படித்தவர். அவர், ‘இந்து‘ பத்திரிகையில் பணியாற்றுவது எனக்கு இத்தனை ஆண்டுக்காலம் கழித்துத் தான் தெரிந்தது. இவ்வளவு காலம் நான் விளம்பரம் பெற முடியாத துர்பாக்கிய நிலையை நானே எண்ணிக் கொண்டேன். இப்போதுள்ளதுபோல் பத்திரிகை நிருபரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி எனக்குப் பழக்கமில்லை.

ஜெர்மன் நிருபர் கேட்ட கேள்வி

ஜெர்மன் நாட்டிலிருந்து பெரிய பத்திரிகையொன்றின் நிருபர் வந்திருப்பதாகவும், அவர் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் நண்பர் நரசிம்மன் தெரிவித்தார். சிவஞானத்தால் சீந்தப்படாது – ஆதித்தனால் ஆதிரிக்கப்படாது – பெரியாரின் பேரெதிர்ப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் தி.மு.கழகத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஜெர்மன் நிருபர் தேடிவந்தார். அவரை எங்குச் சந்திக்கச் சொல்வது என்பது ஒரு பிரச்சனையாக இருந்தது. ஏனென்றால், என்னுடைய வீட்டில் அப்போது பழுது பார்க்கும் வேலை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஏதாவது ஓர் ஓட்டலில் அறை பிடித்து, அங்கே அவரை வரச்சொல்லிச் சந்திக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், சென்னையில் ஓட்டல் அறையில் தங்குவது பல தப்பான அர்த்தத்தைத் தரும் என்று கருதி, பின்னர் என் வீட்டிற்கே அவரை வரச் சொல்லிவிட்டேன். அவரும் வந்தார். மூன்று மணி நேரம் என்னிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். அவ்வளவு நேரம் பேசிய பின், அவர் என்னைக் கேட்ட கேள்வி, ‘நாட்டுப் பிரிவினையை அதிகம் பேர் ஆதரிக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன அடையாளம்?‘ என்பதுதான். இதைத்தான் பலரும் கேட்கிறார்கள் – கேட்பார்கள். அர்த்த இராத்திரியில் கூட்டம் போட்டாலும் மலை முகட்டில் கூட்டம் நடத்தினாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்றா அவர்களுக்குப் பதில் கூறமுடியும்?

உலகம் உங்களைக் கவனிக்கும்

“நாட்டுப் பிரிவினையை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்றால் ‘ஓட்டு வித்தை‘ யைக் காட்டுங்கள். சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50, 60 என்று உயர்ந்து, ஆட்சியைக் கைப்பற்றிக் காட்டினால் அப்போதுதான் உலகம் உங்களைக் கவனிக்கும் என்றார் அவர்.

என் தொழில் உறவின் முறை எல்லாம் பத்திரிகைத் துறைதான். எனக்கும், மற்றப் பத்திரிகைகாரர்களுக்கும் எந்தவிதத் தகராறும் கோபமும் இல்லை. ஏதாவது ஏற்பட்டால் அது ‘பங்காளிக் காய்ச்சலாகத்‘தான் இருக்கும். சொல்கிறேன் – சட்டமன்றத்தைக் கைப்பற்றினால்தான் உள்நாட்டு, வெளிநாட்டு நிருபர்களெல்லாம் ஓடிவருவார்கள்.

ஆர்வம் செயலாகட்டும்

நமது மூலதாரக் கொள்கையான ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்பதை நிறைவேற்ற திருவண்ணாமலை சண்முகம் விடுத்த அன்பழைப்பும், கருணாநிதி எடுத்துக் காட்டிய புறநானூற்றுப் போர்க்களக் காட்சியும் வெற்றி தருவது, நீங்கள் 1962இல் காட்டும் உற்சாகத்தைப் பொறுத்துத் தானிருக்கிறது. ‘மனைவியிடம் எவ்வளவு ஆசையாக இருக்கிறேன் தெரியுமா?‘ என்று பேசிவிட்டு, மாதத்தில் 20 நாள் வெளியூரில் தங்கினால் என்ன பொருள்?

கழகத்தின் மீது நீங்கள் காட்டும் ஆர்வம், தேர்தலில் வெற்றி பெற்றுத் தருவதிலேதான் இருக்கிறது. நல்ல வயலுக்கு அடையாளம் நல்ல விளைச்சலைத் தருவது. நல்ல விளக்குக்கு அடையாளம் நல்ல ளியைத் தருவது.

தேர்தலில் நல்ல முறையில் பணியாற்றத் தவறி விடுவீர்களேயானால், என்னை நீங்கள் நம்ப வைத்துக் கழுத்தை அறுத்தீர்கள் என்றுதான் சொல்வேன்.

உயிரினும் உயரிய நமது இலட்சியத்தைப் பிறர் பார்த்துக் கேவலமாகப் பேசக்கூடாது. மாநகராட்சியில் வெற்றி தேடித் தந்ததுபோல், வருகிற பொதுத் தேர்தலிலும் வெற்றி தேடித் தர வேண்டும்.

நாட்டை மீட்பதற்கு உறுதுணையாகட்டும்

இந்த மாநாட்டில் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை மற்றொன்று இருக்கிறது. இம்மாநாடு, மறைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முதுபெரும் கழகத் தோழர்கள் இருவருக்கு வீரக் கேடயம் அளிக்கும் நிகழ்ச்சியோடு முடிவடைய இருக்கிறது. இந்த இரு நிகழ்ச்சிகளினுடைய நோக்கமும் தாய்த்திருநாட்டை மீட்பதற்கு உறுதுணையாக அமைந்தவையாகும்.

“நமது தாய்த்திரு நாட்டை ஏகாதிபத்திய வேட்டைக் காடாக்கி வைத்திருக்கும் பண்டித நேருவின் பாலபருவ வரலாற்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.

சனநாயகவாதி நேருவைத் தவிர காங்கிரசில் வேறு யாரும் இல்லை என்பதை இன்னமும் நான் நம்புகிறேன். அவர் படிக்காத நூல் இல்லை, பார்க்காத நாடு இல்லை, அவர் பெற்ற அத்தனை அறிவும் திராவிடத்தைச் சாகடிக்கத் தானா பயன்பட வேண்டும்?

நாங்கள், அனுபவிக்கக்கூடாதா?

பண்டித நேரு, ஐரோப்பிய நாடு ஒன்றில் பேசுகையில், ‘ஐரோப்பாவில் பல சிறிய நாடுகள் இருந்தாலும், ஒரு நாட்டின் பெருமை, அதன் அகல நீளத்தில இல்லை‘ என்று கூறினார்.

குவெய்த் என்ற ஒரு சிறு நாடு இருக்கிறது, அதை ஒரு நாடு என்று சொல்ல முடியாது, மதுரை மாவட்டத்திலுள்ள ஒருசிறிய தாலுகா அளவில் உள்ள நிலப் பகுதியாகும். அங்கு எண்ணெய்க் கிணறுகள்தான் இருக்கின்றன. அது தனி நாடாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. பக்கத்திலிருக்கும் ஈராக் நாட்டுத் தலைவர் ‘படையெடுத்துத் தாக்குவேன்‘ என்கிறார். குவெய்த்தைக் காப்பாற்ற பிரிட்டிஷ் அரசு, தனது படையை அனுப்பி வைக்கிறது.

பண்டித நேரு, குவெய்த் தனி நாடாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார். அதை ஈராக் ஆதரிக்க மறுக்கிறது.

பண்டிதருக்குக் குவெய்த் மீதுள்ள அக்கறையை நாங்கள் அனுபவிக்கக் கூடாதா?