அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திராவிடம் நமது பிறப்புரிமை
2

தனிநாடாவதைத் தடுக்கக்கூடாது

வரலாற்றுச் சிறப்புமிக்க இயற்கை வளமிக்க திராவிடம் தனி நாடாகக் கூடாதா?

பட்டாணிஸ்தான் பாகிஸ்தானின் ஒரு பகுதி அங்கு வாழ்பவர்களும் பாகிஸ்தானின் குடிமக்கள்தான். அவர்கள் பக்தூனிஸ்தான் கேட்கிறார்கள், அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் மறைமுகமாக ஆதரவு காட்டுகிறது, பண்டித நேரு வெளிப்படையாகவே ஆதரிக்கிறார்.

நாகர் நாடு – எழுச்சிக்கு இருப்பிடமாகவும், வீரச் செயல்களுக்குப் பிறப்பிடமாகவும் இருக்கிறது. துப்பறியும் கதைகளில் வரும் காட்சிகளைப் போல அங்கே போராட்டம் நடந்து வருகிறது. நாகர்கள் தலைவர், துப்பறியும் இலாகாவையும் ஏமாற்றிவிட்டு இங்கிலாந்து நாட்டுக்குப் போய்விட்டார். அந்த உரிமைப் போரை நேரு நசுக்க முனைகிறார்.

பண்டித நேரு படித்தறிந்த கருத்துப்படி நடக்க வேண்டுமானால் திராவிடம் தனி நாடாவதைத் தடுக்கக்கூடாது.

குறுக்கே நிற்பானேன்?

‘பெரிய நாடு சிறிய நாடுகளை அடக்குவது அரசியல் காட்டுமிராண்டித்தனம். இதனால்தான் முதல் ஜெர்மன் யுத்தம் வந்தது“ என்று சிறிய நாடுகளுக்காக ஐ.நா. அவையிலும், காமன்வெல்த் மாநாட்டிலும் பரிந்து பேசும் நேரு இதற்குக் குறுக்கே நிற்பது பொருத்தமல்ல!

ஐரோப்பாக் கண்டத்தில் பல சிறிய நாடுகள் இருந்தன. அவற்றில் கிரேக்க நாட்டிலிருந்துதான் அறிவு பரவியது. சாக்ரடிஸ், அரிஸ்டாடில், பிளாட்டோ ஆகியவர்கள் வாழ்ந்தது சின்னஞ்சிறு கிரேக்க நாட்டில்தான். ரோம் நாடு தான் வீரத்துக்குரிய நாடாக இருந்தது. தீரச் செயல்களுக்கும் அதுதான் இடமாக இருந்தது. அதன் செல்வாக்கு வளர்ந்து சாம்ராஜ்யமாக மாறியது.

ஒருவருக்கு அளவோடு செல்வம் இருந்தால் நல்லவராக இருப்பதையும், நாணயமாக இருப்பதையும் பார்க்கிறோம். அளவு மீறிய செல்வம் படைத்தவர் தீய செயல்களில் ஈடுபடுவதையும் எடுத்தேன் – கவிழ்த்தேன் என்று பேசுவதையும் பார்க்கிறோம்.

அளவுக்கு மீறிப் பணம் படைத்தவர் வெறும் மாமிசப் பிண்டமாக இருப்பதுபோல் நாடு பெரிய நாடாக இருந்து பயன் என்ன? பெரிய நாடான புனித ரோம் சாம்ராஜ்யம் அழிந்ததுபோல், உதுமானிய சாம்ராஜ்யம் அழிந்ததுபோல், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அழிந்து வருவதுபோல் ஏகாதிபத்தியங்களெல்லாம் மண்ணோடு மண்ணாகப் போகும்.

விழித்தெழுந்து விட்டால்....

“கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு வைத்திருக்கும் இராணுவமும், போலீசும், சிறைச்சாலையும் நம்மிடம் இருக்கும்போது அண்ணாதுரையும், நெடுஞ்செழியனும், கருணாநிதியும் என்ன செய்ய முடியும்?“ என்று காங்கிரசுக் காரர்கள் நினைக்கிறார்கள். நம்மைப் பார்த்துக் கேலி செய்கிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில் முதலாம் சார்லஸ் மன்னன் மகேசனாகக் கருதப்பட்டான். ‘அவனை எதிர்ப்பவர்கள் அழிந்து விடுவார்கள்‘ என்று சொல்லப்பட்டது. அவனையே தூக்கு மேடையில் நிறுத்தினார்கள் மக்கள்.

விளையாட்டாக ஒரு வாலிபன், மன்னரின் அரண்மனைச் சுவரில், ‘வாடகைக்கு விடப்படும்‘ என்று எழுதி வைத்தான். அவனைப் பார்த்து, மற்றவர்கள் ‘சித்தனே, பித்தனே, இது எப்படியப்பா நடக்கும்? கோவின் இல்லமாகிய அரண்மனையை எப்படி வாடகைக்கு விடுவார்கள்?‘ என்று கேட்டார்கள். அதற்கு அந்த வீர வாலிபன், ‘மக்கள் விழித்தெழுந்து விட்டனர், கிளர்ச்சியில் மனிதர்கள் தலைவகள் உருளப்போகின்றனர், பிறகு மன்னன் இருக்க மாட்டான், அரண்மனையில் வசிக்க ஆள் இருக்கமாட்டார்கள், அதன் பிறகு வாடகைக்கு விட வேண்டியதுதான்.

பின்னாலே எழுத வேண்டியதைத்தான் இன்றே எழுதினேன்‘ என்றான்.

விளையாட்டுப் பிள்ளையின் செயல் அல்ல!

அதேபோல், நாம் ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்று சுவரில் எழுதும் வாசகம் விளையாட்டுப் பிள்ளையின் விபரீதச் செயல் அல்ல, அரண்மனையில் வீரவாலிபன் எழுதியதைப் போன்ற போர்ப் பயிற்சியாகும்(.

பண்டித நேரு கேட்கலாம் – ‘திராவிட நாட்டுக்கு 4 வேதம், 18 புராணங்களில் ஆதாரமிருக்கிறதா?‘ சங்க இலக்கியங்களில் சான்று உண்டா என்று.

இந்தியப் பூபாகத்தில் ஆப்கானிஸ்தானமும் சேர்ந்திருந்தபோது, அதற்குத் ‘காந்தார நாடு‘ என்று பெயர். அந்த நாட்டுப் பெண்தான், பாரதக் கதையில் வரும் காந்தார ஆனால், பாரதகக் கதையை ஆதாரம் காட்டி, இப்போது ஆப்கானிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதி‘ என்று யாராவது வாதாடுவார்களா?

இன்றைய அசாம் மலைப்பகுதிதான் காமரூபம் என்று முன்பு சொல்லப்பட்டது. அதுவும் தனித்து வாழ விரும்புகிறது.

பர்மாகூட ஒரு காலத்தில் இந்தியாவுடன் இணைந்து தான் இருந்தது. பழைய பூகோளத்தில் இந்தியப் படத்தைப் பார்த்தால் ‘பாரத மாதா‘ கையில் சூலாயுதத்துடன் முந்தானையைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்பதுபோல படம் போட்டிருப்பார்கள்.

பள்ளம் விழுந்த இந்தியா

இப்போது, ‘பாரத மாதா‘வின் முந்தானை இருந்த இடம் பர்மாவாகவும், சூலம் இருந்த இடம் பாகிஸ்தானாகவும் முடி இருந்த இடம் காஷ்மீராகவும் இருக்கின்றன. இந்தியப் பிரிவினையின்போது பாரதமாதாவின் முந்தானையும் கூந்தலும், தோள்பட்டையும் துண்டாடப்பட்டன. ஒரு கரமே துண்டிக்கப்பட்டது. நெய்யப்படும் துணியை எலி கடித்தால் ஏற்படும் பள்ளம்போல், இந்தியா பள்ளம் விழுந்திருக்கிறது.

‘எங்கிருந்தோ வந்த முஸ்லீம்களுக்குத் தனி நாடா? என்று கொக்கரித்தவர்கள், அவர்களுக்கென்று தனி நாடு கொடுத்து விட்டார்கள். ஆனால் நாங்கள் எங்கிருந்தும் வந்தவர்களல்ல, எங்கள் நாட்டை நாங்கள் ஆளவேண்டும் என்று கேட்கிறோம், இது தவறா?“

“ஜனாப் ஜின்னா சென்னை வந்தபோது, அவருடைய பேச்சை நான் நேரிலே கேட்டேன். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது – காற்றடித்தால் விழுந்து விடக்கூடிய ஒல்லியான உருவம் உள்ள அவர், தனது விரரை ஆட்டி, ஆட்டிக் கேட்டார் – பாகிஸ்தானை நீங்கள் கொடுக்கப் போகிறீர்களா, நானே எடுத்துக் கொள்ளட்டுமா? என்று. ‘பாகிஸ்தானை உலுகிலுள்ள பல நாடுகள் ஆதரிக்கின்றன, இதற்கு என்ன சொல்கிறீர்கள்?‘ என்று கேட்டார். இதை நான் காதாரக் கேட்டேன்.

காங்கிரசுக்காரர்கள் ‘பாகிஸ்தானா, ஊகூம்....‘ என்று உதட்டைப் பிதுக்கினார்கள், ஆனாலும் அவர், இறுதியிலே பாகிஸ்தான் பெற்றார்.

ஜின்னா அளவுக்கு நான் வலிமை பெற்றவனல்லன் என்றாலும், இங்கே என்னை விட்டால் வேறு யாரும் கிடையாது. இந்தக் காரியத்தை நான்தான் செய்ய வேண்டியவனாக இருக்கிறேன்.

பாகிஸ்தான் கேட்ட முஸ்லீம் சமுதாயம் இருந்த அளவுக்கு இந்த (திராவிட) இனம் திரண்டிருந்தால், திராவிடம் கொடுக்காவிட்டால் நான் எடுத்துக் கொள்வேன்‘ என்று என்னால் சொல்ல முடியும்.

காலம் கனியவில்லை.... மனதில் படியவில்லை!

காலையிலே இங்குப் பேசிய தோழர் மனோகரன், அயர்லாந்து விடுதலை வீரன் டிவேலராவைப் பற்றிக் கூறினார். அந்தக் டிவேரலா தனது நாட்டு மக்களைப் பார்த்து, ‘பிரிட்டிஷ் வழக்கு மன்றத்திற்கப் போகாதீர்கள்‘ என்று கூறி, ‘இதோ இருக்கிறது நமது நீதிமன்றம், இவர்தான் நீதிபதி‘ என்ற காட்டி அழைத்தார். ஒருவர்கூட பிரிட்டிஷ் நீதிமன்றத்திற்குப் போகவில்லை. அப்படிப்பட்ட விடுதலை வரலாற்றையெல்லாம் நாம் விளையாட்டுக் காகப் படிக்கவில்லை. இன்னும் அந்த அளவுக்கு இங்கே காலம் கனியவில்லை, மனதில் படியவில்லை என்றுதான் காத்திருக்கிறோம்.

முறைப்படி எழுப்புவோம்

1962இல் நான் சட்டமன்றத்திற்குள் நுழையும்போது நான் திரும்பிப் பார்த்தால் மகிழும் அளவுக்கு நீங்கள் நமது தோழர்களை அனுப்பி வைப்பீர்களானால், நானும் ஒரு கை பார்க்கலாம். நமது வரலாற்றை மறைப்பவர்களை பூகோள உண்மைகளை மறுப்பவர்களை, இலக்கிய ஆதாரங்களை எதிர்ப்பவர்களை, எடுத்தெறிந்து பேசுபவர்களை ஒருகை பார்க்கலாம்.

இதைச் செய்யாமல், ‘அண்ணா நீ செய்ய வேண்டியதைச் செய்‘ என்று சொன்னால், நான் என்ன செய்ய முடியும்? மாவு இல்லாமல் பணியாரம் செய்ய நான் என்ன மந்திரவாதியா?

தாலிக்கயிறு இல்லாமல் திருமணம் நிறைவேற முடியாது. ஆனால், கட்டவேண்டிய நேரத்தில் – கட்ட வேண்டிய முறைப்படி கட்டினால்தான் அது தாலிக்கயிறாகும். தாலியில் கோர்ப்பது 40ஆம் நம்பர் நூலென்பதால் 40ஆம் நம்பர் நூலெல்லாம் தாலிக் கயிறாவிட்டது. பாவிலிருக்கின்ற நூலைத் தாலிக்கயிறு என்று கூற முடியாது. அந்த நூலுக்கு தாலிக்கு உள்ள பெருமை கிட்டிவிடாது.

அதைப்போல, நாம் திராவிட நாடு பிரச்சனை எழுப்ப வேண்டிய முறைப்படி எழுப்ப வேண்டிய இடத்தில் எழுப்ப வேண்டும்.

ஏகாதிபத்தியத்திற்கு வேட்டு

நமக்கு கிடைக்கின்ற ஓட்டுச் சீட்டு ஏகாதிபத்தியத்திற்கு வைக்கின்ற வேட்டு!

நம் தாய்த்திருநாடு மீட்கப்படுவதற்குமுன், நீங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

கடந்த 14 ஆண்டு, காங்கிரசு ஆட்சியில் வெள்ளையன் ஆட்சியில் இருந்ததைவிட பொருளாதார முதலீடு அதிக வலிவுடன் இருந்து வருகிறது. வெளிநாட்டு முதலீடு மட்டும் ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை போடப்பட்டிருக்கிறது. போன ஆண்டு மட்டும் ரூ.1,900 கோடி வரை தனிப்பட்டவர்கள் முதல் போட்டிருக்கிறார்கள். ‘முதலாளித்துவம் ஒழிய வேண்டும், தொழில்கள் தேசிய மயமாக்கப்பட வேண்டும்‘ என்று சொல்கிறவர்கள் ஆட்சியில்தான் இந்த நிலை(

முதலாளித்துவம் ஏன் முறியடிக்கப்பட வேண்டும்

‘இப்போதே சிலவற்றைத் தேசியமயமாக்கியிருக்கிறோம்‘ என்று சொல்கிறார்கள், இது போதுமானது என்றால் காங்கிரசுக்கு ஓட்டு்ப் போடுங்கள்.

உழவர்களுக்கு நிலம், தொழிலாளர்களுக்கு வசதி, மக்களுக்கு வயிறார உணவு, மானமார உடை, குடியிருக்க வீடு ஆகிய அடிப்படைத் தேவைகள், முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டாலன்றி நிறைவேற முடியாது.

உரத் தொழிலானாலும் வெளிநாட்டார், முதல் போட்டுப் பங்காளியாகிறார்கள். டெலிபோன், மோட்டார் தொழிற்சாலையானாலும் அமெரிக்க முதலாளிகள் பங்காளியாகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு தொழிலிலும் வெளிநாட்டான் பங்காளியாகச் சேர்க்கப்படுகிறான்.

‘பொருளாதாரப் பிடி‘ எவருடைய கையில்?

முதன் முதலில் வியாபாரக் கம்பெனிதான் இந்தியாவை அடிமைப்படுத்திப் பிரிட்டிஷ் அரசுக்குக் காணிக்கையாக்கியது என்பதை மறந்துவிடக் கூடாது. ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு அமெரிக்க ஆதிக்கத்துக்கு உட்படுகிற நிலை வந்துவிடக் கூடாது. நம்முடைய பொருளாதாரப் பிடி இன்று வெளிநாட்டின் கையில் இருக்கிறது. நம்மவர்கள் வெறும் குமாஸ்தா நிலையில் இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு டி.வி.எஸ். கம்பெனியார் பஸ்விட்டார்கள். பஸ்களுக்காக யாரும் காத்திருக்கம் நிலைமையை அவர்கள் உண்டாக்கவில்லை. அவர்கள் தங்கள் உயர்தர அதிகாரிகளையெல்லாம் அனுப்பிக் கவனிக்கச் சொன்னார்கள். போலீசார் செய்ய வேண்டிய பணிகளைக் கூட அவர்களே செய்து கொண்டார்கள்.

சென்னையி்ல் அரசாங்கம் பஸ்களை இயக்குகிறது. அங்கே அரசாங்கப் பஸ்களில் காது செவிடுபடும் படியாக ஓசை கேட்கும். ஆறு மாதம் தொடர்ந்து அரசாங்க பஸ்களில் ஒருவர் போனால் காது செவிடாகவே போய்விடும். ஏனென்று கேட்டால் ‘சர்க்கார் பஸ் அப்படித்தான் இருக்கும்‘ என்கிறார்கள். திறமைக் குறைவாக நிர்வாகம் நடத்தினால் யார் சர்க்காரை நம்புவார்கள்.

உதாரணம்... எதற்கு?

இப்படி நிர்வாகம் நடப்பது, ஆச்சாரியார் குறைசொல்வதற்குத் தானே இடம் வைக்கிறது? நான் இந்த நேரத்தில் ஆச்சாரியாரை உதாரணத்துக்குச் சொல்வது, இந்த ஒரு விஷயத்திற்குத்தான்.

எனக்கு எங்கெங்கு எது எது தேவையோ அதை மட்டும்தான் எடுத்துக் கொள்வேன். மயிலிடமிருந்து தேவைப்படுவது தோகைதான். குயிலிடம் எதிர்ப்பார்ப்பது குரல் இனிமைதான். பசுமாட்டிடம் எதிர்பார்ப்பது பால் தான். பசு சாணி போடுகிறதே என்றால், அதைத் தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். அதேபோல, ஆச்சாரியார் இந்த விஷயத்தில் சொல்வதை மட்டும் எடுத்துக் காட்டினேன். அதற்கு மேல் போகவில்லை.

செய்யுமா அரசு?

திராவிடச் சமதர்மக் குடியரசுக் கூட்டாட்சி அமைக்க வேண்டும் என்று பாடுபடுகிற நாம், ‘காங்கிரசின் நிர்வாக ஊழல்களை முறியடிக்க வேண்டும்‘ என்று கூறுகிறோம். தொழில்கள் ம்டுடமல்ல – தொழிலாளரையும் அரசு தனது உடமை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

தொழில் அறிஞர் ஜி.டி.நாயுடு அவர்களை, அரசாங்கம் தனது உடைமையாக்கிக் கொள்ள வேண்டும். டி.வி.எஸ். குடும்பத்தையும் மற்றும், கோவை போன்ற இடங்களில் உள்ள முதலாளிகளையும் சேர்த்து ஒரு தனி ‘போர்டு‘ அமைக்க வேண்டும். அந்த போர்டின் மூலம் தொழில்களை இயக்க வேண்டும்.

டி.வி.எஸ். பஸ் நிறுவனம் தனியார் உடைமையாக இருந்தபோது கிடைத்த இலாபம் எவ்வளவு? அரசாங்க போர்டால் நிர்வகிக்கப்படும் போது கிடைக்கும் இலாபம் எவ்வளவு? என்று பார்க்கவேண்டும். முன்னைவிட இலாபம் குறையுமானால், தொழிலதிபர்கள் தங்கள் திறமையைக் காட்ட மறுக்கிறார்கள் என்று பொருள். அவர்களுடைய பழைய கணக்கு அரசாங்கத்திடம் இருப்பதால், அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்.

வெற்றி பெற முடியாதே!

யுத்தக் காலத்தில் சர்ச்சில் இப்படித்தான் செய்தார். இந்த முறைக்கு ‘கான்ஸ்கிருப்ஷன்‘ என்று பெயர் இப்படியில்லாமல் இப்போது அரசினர் போட்டுள்ள திட்டம் வெற்றி பெறாது(

இப்போது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பொது வெளிநாட்டுக் கடன்கள் அளவுமீறி உயர்ந்துள்ளன. வெள்ளைக்காரன் வைத்துவிட்டுச் சென்ற ஸ்டர்லி்ங் இருப்பு என்ன ஆயிற்று? அதுவும் போய் ரூ.5000 கோடி கடன் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கடன் சுமை மேலும் அதிகப்பட்டால், நமது முதுகு முறியும். ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வாங்கிய கடனைக் கொடுக்க நேரிடும்.

கடன் பற்றி அண்ணாத்துரை கூறினால், ‘எங்களுக்கா அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டோம், நாட்டுக்குத் தானே செலவிட்டோம்? என்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள். இப்படித்தான் துருக்கியில் மெண்டாரிஸ் பேசினார். ‘தைரியமிருந்தால் இந்தப் பணத்தில் கை வைத்துப் பாருங்கள்‘ என்று நான் அவர்களுக்குக் கூறி கொள்கிறேன். வாங்கிய கடனை திருப்பித்தர நமக்கு வழி இருக்கிறதா?

இந்தச் சர்க்காரின் திறமையைச் சர்க்கரை வியாபாரத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஒரு டன் சர்க்கரையின் அடக்க விலை ரூ.700 ஆகிறது. இதை ரூ.1000க்கு வெளிநாட்டில் விற்றால் தான் இலாபம் வரும். ஆனால், இங்குள்ள சர்க்கரையை வெளிநாட்டில் ரூ.400க்கு விற்கிறார்கள். இதில் ரூ.300 நஷ்டம் அடைகிறார்கள். இப்படி நஷ்ட வியாபாரம் செய்பவர்கள், எதைக் கொண்டு கடனை அடைக்கப் போகிறார்கள்.

இங்கிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்கு எந்தப் பொருள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது? திடீரென்று இங்கு உள்ள ஆலவாயப்பன் அமெரிக்கர்கள் கனவில் தோன்றி, நீங்களெல்லாம் சைவர்களாகக் கடவது‘ என்று கூறி, அமெரிக்காவை சைவ நாடாக்கினால், அப்பொழுது வேண்டுமானால் இங்கிருந்து விபூதி, உருத்திராட்சம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கலாம்.

பெருமைபட இயலுமா?

நேற்று நான் தஞ்சை வெள்ளப் பகுதிகளுக்குச் சென்றிருந்த போது, அரசாங்கச் செலவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சோறு போடுவதாகக் கூறினார்கள். அந்தச் சோற்றை என்னிடம் கொண்டு வந்து காட்டினார்கள். அதை அருகில் கொண்டு வந்த உடனேயே நாற்றம் வீசுகிறது, குமட்டலும் வாந்தியும் வருகிறது. இதுபற்றி நான் தஞ்சைக் கலெக்டரிடமும் தெரிவித்தேன். ‘7000 மூட்டை அரிசி சோறு போடுவதற்காகக் கிடைக்கிறது‘ என்று அவர் பெருமைப்பட்டுக் கொண்டார். அந்த அரிசி கிடங்கில் அடைக்கப்பட்டுக் கிடந்து வந்திருப்பதால் அது நாற்றமடிக்கிறது. உணவு நிலை இந்த நிலையில் உள்ளது.

குறைகள் களையவில்லையே!

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்த வருகிறது. பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நிர்வாகத்தில் குறைகள் மலிந்துள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம்( சில இலாக்காக்களில் வேலை நடைபெறவில்லை என்ற நிலை மறுபுறம்.

கோர்வாலா, தேஷ்முக், ஆப்பின்பீ ஆகியோர் காட்டிய குற்றச்சாட்டுகள் – தணிக்கை அறிக்கைகள் காட்டிய குறைகள் இன்னும் களையப்படவில்லை.

மதுரையில் உள்ள ஒருவருடைய மூத்த பெண்ணை விருதுநகர் மாப்பிள்ளைக்கு மணம் செய்வித்ததாக வைத்துக் கொள்வோம். அந்த மருமகன், தன் மனைவியை அடித்துத் துரத்திவிட்டு மீண்டும் தன் மாமனாரிடம் வந்து, இளைய பெண்ணை மணம் செய்விக்கும் படி கேட்டால், அந்த மாமனார், பாழுங்கிணறு இல்லாவிட்டாலும் புதிய கிணறு தோண்டியாவது அதில் தன் பெண்ணைத் தள்ளுவாரே தவிர, விருதுநகர் மாப்பிள்ளைக்கா கொடுப்பார்? (நான் உதாரணத்திற்க விருதுநகர் என்று சொன்னேனே தவிர, விருதுநகருக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் வருத்தப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்). அதைப்போல இன்னமும் காங்கிரசை யார் நம்புவார்கள்?

சான்றுக்கு இவர்கள்

ஆதி திராவிடச் சமுதாயத்துக்கு இந்த ஆட்சியினால் நன்மையில்லை என்பதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். தாழ்த்தப்பட்டவர்கள் தலைவர் சிவராஜ், ‘இனி காங்கிரசை நம்பக் கூடாது‘ என்கிறார். அமைச்சர் ஜெகசீவன்ராம் ஐதராபாத்தில் நடந்த மாநாட்டில் பேசுகையில், ‘ஏமாற்றப்பட்டிருக்கிறோம்‘ என்று கூறியிருக்கிறார்.

சுதந்திரம் பெற்று 14 ஆண்டுகள் ஆகியும், இன்னமும் மலம் தூக்குவதற்கு என்று ஓர் இனம் இருந்து வருகிறது. ஆதிதிராவிடத் தாய்மார்கள், மல்லிகை மணம் கூந்தலில் வீசுவதற்கப் பதில் மலத்தைக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிச் செல்லும் பரிதாபக் காட்சியை இன்னும் பார்க்கிறோம். இது ஆதிதிராவிடருக்குச் செய்த நன்மையா?

சென்னையில் நடந்த பிற்பட்ட வகுப்பினர் மாநாட்டில், அமைச்சர்களான மாணிக்கவேலர், லூர்து அம்மையார், இராமையா ஆகிய மூவரும் கலந்து கொண்டனர். தங்கள் சமூகத்துக்கு காங்கிரசு ஆட்சியில் நன்மை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் இராமையா சொன்னார். மற்ற இரு அமைச்சர்களும் அதை மறுத்திருக்கின்றனர்.

காங்கிரசின் சார்புடைய தொழிலாளர் அணியான ஐ.என்.டி.யூ.சி., ‘தொழிலாளர்களுக்கு இந்தத் துரைத்தனம் நன்மை செய்யவில்லை‘ என்ற அறிக்கை விடுத்திருக்கிறது.

எனவே, இந்த ஆட்சியை ஒழித்துக்கட்ட 1962இல் பணியாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 18, 20, 21, 24.7.61)