அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திராவிடம் உரிய இடத்தைப் பெறும்!
1

3.11.61 அன்று ஒற்றைவாடைக் கலையரங்கில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உலக அரங்கில் திராவிடம் என்ற தலைப்பில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தேர்தல் நிதிக்காக சென்னை மாவட்டத் தி.மு.க. ஏற்பாடு செய்திருக்கும் இந்தச் சிறப்புக் கூட்டத்திற்க உரிய நேரத்தில் வரமுடியாத காரணத்தை வழக்கப்படி சொல்லுவேன் என்று எண்ணி ஏமாறாதீர்கள். காஞ்சிபுரத்திலிருநது காரில் புறப்ட்ட நான் 18 மைல்களைக் கடந்தவுடன் கார் பகுதடைந்து விடவே அங்கிருந்து வந்த ஒரு லாரியில் ஏறி பூவிருந்தவல்லி வரை வந்தேன். ஏற்ற வேண்டியதற்கு மேல் அதிகமான பளுவை அந்த லாரியில் ஏற்றியிருந்ததால் சென்னைக்கு நேரே வராமல் ஆவடிக்குப் போய். அங்கிருந்துதான் சென்னைக்கு வரும் என்று சொல்லி என்னை அங்கு இறங்கிவிடச் சொன்னார்கள். பூவிருந்தவல்லியிலிருந்து பஸ் ஏறி, கிண்டிவரை வந்தேன். அங்கு ஒரு டாக்சியில் ஏறி இங்கு வந்து சேர்ந்தேன்.

இடம் கிடைத்தே தீரும்

வழியில் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டும், உரிய காலத்தில் வரா விட்டாலும் எப்படியோ வந்து சேர்ந்துவிட்டதைப் போல். உலக அரங்கில் திராவிடம், உரிய இடம் பெறுவதற்குக் காலம் அதிகமானாலும், கஷ்டங்கள் அதிகம் பெற்றாலும் கிடைத்தே தீரும் என்று தெரிகிறது.

உலக அரங்கில் திராவிடம் என்ற தலைப்பு என்க்கு அறிவிக்கப்பட்ட தலைப்பு. நான் அறிவித்த தலைப்பு அல்ல என்றாலும் எனக்குப் பிடித்த தலைப்பு. என் தம்பிமார்கள் உள்ளத்தில் எழுந்த தலைப்புமாகும்.

உலக அரங்கம் – அரசியல் துறையானாலும், வறுமை எந்தத் துறையானாலும் எல்லா நாட்டுத் தலைவர்களும் ஒன்றுகூடி ஒற்றுமையோடு பணியாற்றுகின்ற ஓர் அரங்கமாக அந்தக் காலத்திலே காட்சி அளித்தது. ஆனால் இன்று அந்த அரங்கம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வதற்கும், ஒரு நாட்டினுடைய அறிவுச் செல்வத்தை மற்ற நாடுகள் பெறுவதற்கும், ஒரு நாட்டினுடைய அழகுச் செல்வத்தை மற்ற நாடுகள் பெறுவதற்கும் உண்டான பண்டமாற்றுச் சாலையாகக் காட்சியளிக்கிறது.

பண்பாட்டைப் போதித்த மொழி!

தமிழகம், தமிழ்நாடு தமிழ்கூறு நல்லுகம் என்று இப்படி எந்தப் பெயரிட்டழைத்தாலும் இந்த நாடு, உலக்ததிற்கே தனிப்பண்பாட்டுத் தூதுவன் என்ற முறையில் பண்பாட்டைப் போதித்து வந்தது. இதை நான் சொன்னவுடனே, நம்மைவிட்டு விலகிச் சென்றவர்கள், பார், பார் திராவிடநாடு, திராவிடநாடு என்று பேசிய அண்ணாதுரை இப்பொழுது தமிழ்நாடு தமிழகம், தமிழ்கூறு நல்லுகம் என்று இறங்கி வந்து பேசுகிறார் என்று சொன்னால் நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இன்றைய கேரள நாடுதான் அன்றைய சேரநாடு என்பதை அறியாத அப்பாவிகள்தான், கர்நாடகம் ஆந்திரம் போன்ற இன்றைய பிறமொழி மாநிலங்களும் அன்றைய தமிழ்த் தரணியின் அங்கங்களாக இருந்தன என்பதை அறியாதவர்கள்தான் அப்படிக் கூறுவார்கள்.

அன்று இருந்த தமிழ்மொழி திரிய ஆரம்பித்து தெலுங்கு மொழி கன்னடமொழி – மலையாள மொழி என வடமொழிக் கலப்பால் உருப்பெற்றன. இந்த மொழிவழி அடிபப்டையில் வந்த மாநிலங்களே கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை.

மொழிவழி பிரிந்த மாநிலங்களை இனவழி ஒன்றுகூட்டி ஓர் அரசியல் கூட்டாட்சி ஏற்படுத்துவதே நாம் கேட்கும் திராவிட நாட்டின் இலட்சியம்.

ஐ.நா.வில் இடம் ஒதுக்க இயலாதா?

பண்டைத் தமிழகத்தின் பரப்பும், இன்றைய திராவிடத்தின் பரப்பும் ஒரே பரப்பாக இருக்கக் காண்கிறோம். தமிழ் இலக்கியத்தில் உள்ள பழைய தொடர்புகளை அன்றைய தமிழகத்தில் கண்ட கருத்துக்களை இன்றைய திராவிடத்தில் காணலாம். இன்றைய திராவிடத்திற்கு ஐ.நா.வில் இடம் ஒதுக்க வேண்டுமா? என்று அதிலுள்ள 100 உறுப்பினர்களும் கேட்பார்களானால் அவர்கள் விவரம் அறியாதவர்களாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, வேறு எப்படி இருக்க முடியும்.

சின்னஞ்சிறு நாடு சிலோனுக்கு ஐ.நா.வில் இடம் ஒதுக்கி இருப்பதைப் போல் குட்டிநாடு கணாவுக்கு இடம் ஒருக்கி இருப்பதைப்போல் – இன்னும் எத்தனையோ சிற நாடுகளுக்கும் ஒதுக்கினால் என்ன கெட்டுவிடும்? எது அழிந்துவி்டும்.

ஒவ்வொரு நாடும் அதன்தன் பண்பாடுகளை காப்பாற்றிக் கொண்டு. தங்கள் நாட்டு பண்பாட்டினுடைய இயல்பு கெடாமல்க முன்பின் முறைமை கெடாமல் பார்த்துக் கொண்டும், ஒரு பண்பாட்டின் குறைவாட்டினை இன்னொரு கலக்கலம். அதனாலே, உலகத்தி்லே உள்ள எல்லாப் பண்பாடுகளையும் ஒழித்து அழித்துவிட்டு, எல்லாப் பண்பாட்டையும் கலக்கி ஒரே பண்பாடாக ஆக்க வேண்டும் என்று பொருள் அல்ல. இதை விளக்க இலக்கியம் படிக்க வேண்டும் என்ற அவசியம் இலலை.

டாக்டரைத் தேடியல்லவா செல்ல வேண்டும்?

தாய்மார்கள் வீட்டில் சமையற்கட்டில் எதையெதை எந்தெந்த அளவுக்கப் போடவேண்டும் – எதை முதலில் போடவேண்டும். எதை பிறகு போட வேண்டும் – என்று அறிந்து பண்டங்களை செய்வதைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். உளுந்த வரைட செய்ய வேண்டுமானால் – உளுந்து செய்ய வேண்டுமானால் உளுந்து, மிளகாய், வெங்காயம், மிளகாய் உப்பு முதலியவைகளை போட வேண்டிய அளவுக்குப் போட்டு, பிறகுவானலியில் எண்ணெய் காந்த்வுடன் வடையைத் தட்டிப் போடுவார்கள் தாய்மார்கள். ப்பூ இவ்வளவுதானா? என்று நினைத்து, ஒரு ஆடவன், கொஞ்சம் உளுந்து, கொஞ்சம் மிளகாய், சிறிது வெங்காயம் சிறித உப்பு இவைகளை வாயில் போட்டுக் கொண்டு, டாக்டர் வீட்டுக்குப் போக நேரிடுமே தவிர விடை கிடைக்காது. அதற்குரிய பக்குவமுறையில் செய்தால் தான் விடை கிடைக்கும்.

பண்டங்களைப் பக்குவம் கெடாதபடி செய்வதற்குப் புதிதாக வந்த மருமகளுக்கு நல்ல மாமியார் கற்றுக் கொடுப்பதைப் போல், உலகத்திற்கு உதவக்கூடிய பண்பாட்டை உண்டாக்க வேண்டும்.

அப்படியென்றால், மொழிகளையும் அழித்துவிட்டு ஒரே மொழியாக்கி விட்டால். உலகம் பண்பாட்டோடு வாழும் என்று சிலர் வாதிடலாம். ஆனால், எல்லா மொழிகளையும் ஒரே மொழியாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏகாதிபத்தியப் பாதையில்தான் அழைத்துச் செல்லும். எனவே, பாமரர் மொழியில் கூறு வேண்டுமானால் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாகிவிடும். நல்ல பங்களாவில் வசிக்கப் போகிறேன் என்று இருக்கிற மாடி வீட்டையும் இடித்துவிட்டு வாடகை வீடு தேடுவது போன்ற நிலைமையையைத்தான் உண்டாக்கும். ஆகவே மொழியை ஒழிக்காமல் – அழிக்காமல் குறைக்காமல் – சுருக்காமல் பொன்னேபோல் போற்றிக் காப்பாற்ற வேண்டும்.

நாட்டின் வலிவு எதில் இருக்கிறது?

ஐ,நா,வில் சின்னஞ்சிறு நாடுகள், பெரிய நாடுகள், வல்லரசுகள் இவையாவும் அங்கம் வகிக்கின்றன. வல்லரசுகள், பல நாடுகளுக்குப் பணம் தந்து அவைகளைத் தம் பக்கம் இழுத்துக் கொள்ளுகின்றன.

பெரியநாடு சிறிய நாட்டுக்குப் பகையாகிவிடும் –என்று நமக்குக் கவனப்படுத்துகிறார்கள். அப்படியென்றால் புரட்சிக்கு முன்னும் புரட்சிக்குப் பின்னும் பெரிய நாடுதான் சீனா. அதைச் சின்னஞ்சிறிய நாடான ஜப்பான் ஆட்டிப் படைத்தது. ஆனால் பரப்பிலும் பிரிவிலும் பெரியதான் சீனா இன்று திபெத்தைக் கூடத் தொட்டுப் பார்க்கின்ற அளவுக்கு வலிவு பெற்றிருக்கிறது.

ஒரு நாட்டின் வலிவு அதன் அகல நீளத்தில் இல்லை. ஆனால் அந்த நாட்டு மக்களின் மனவளத்தைப் பொறுத்திருக்கிறது.

இதை நான் சொன்னவுடனே, என்ன இருந்தாலும் அண்ணாதுரை பிரிவினைவாதி. அப்படித்தான் பேசுவான் என்று காங்கிரசுக்காரர்கள் சொல்லக்கூடும். ஆனால், அவை என்னுடைய வாசகங்கள் அல்ல. இந்தியத் துணைக் கண்டத்தின் தலைமையமைச்சர் நேரு பண்டிதர் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் டென்மார்க் நாட்டின் தலைநகரான ஹெக் நகரில் பேசும்போது ஆங்கிலத்தில் குறிப்பிட்ட அவரது வாசகங்களைத்தான் நான் உங்களுக்குத் தமிழிலே சொன்னேன்.

பர்மா நாட்டு முதலமைச்சர் யூனு அவர்கள் ஒருமுறை சிறிய நாடு வாழக்கூடாது என்று கூறுவது என்னைப் போன்ற சிறியவர்கள் வாழக்கூடாது என்று சொல்வதுபோல் ஆகும் என்று குறிப்பி்ட்டிருக்கிறார்.

கிளிப்பிள்ளை போலப் பேசி பயன் என்ன?

உலக அரங்கில் படிக்காதவர்களும், படித்தவர்களும் படிக்காத மேதைகளும், ஏழைகளும் பணக்காரர்களும், மஞ்சள் நிறமுறையவர்களும். சிவப்பு நிறமுடையவர்களும், கறுப்பு நிறமுடையவர்களும் இருக்கிறார்கள். சிறிய நாடு, பெரிய நாடு? என்பதற்கு அளவு என்ன? சிறிய நாடு எவ்வளவு அளவு இருக்க வேண்டும் – பெரிய நாடு எவ்வளவு அளவு இருக்க வேண்டும் என்றாவது வரையறுத்திருக்கிறார்களா இந்தக் காங்கிரசுக்காரர்கள்? எனவே, விவரம் தெரிந்த காங்கிரசுக்காரர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிப்பதை விட்டுவிட்டு சிறிய நாடு வாழுமா? என்று கிளிப்பிள்ளை போலப் பேசிப்பயன் என்ன?

இவர்களால் ‘பாரதம்‘ என்று அழைக்கப்படும் இந்தியப் பூபாகத்தின் ஒரு பகுதியான ஆப்கானிஸ்தான் பாரத காலத்தில் காந்தாரமாக இருந்திருக்கிறது. அநத் நாட்டில் பிறந்தவள்தான் காந்தாரி என்று ‘பாரதம்‘ சொல்லுகிற இந்தப் பழங்கதையைச் சொல்லிப் பாத்தியதை கொண்டாடு வாரா நேரு? ஆனால் பாத்தியத்தை கொண்டாடாமலேயே சீனாக்காரன் எத்தனையோ மைல்களைப் பிடித்திருக்கிறான்?

முன்னொரு காலத்தில் இந்தியாவின் தலைநகரம் ‘கண்டலா‘ என்ற இடமாக இருந்தது. அசாம் ‘காமரூபம்‘ என்று அழைக்கப்பட்டது. மங்கோலியாவில் ஒரு பகுதி – பர்மாவில் ஒரு பகுதி – இலங்கை – இத்தனையும் இருந்தன. அவைகளையும் இன்று பெறவேண்டுமானால் முடியுமா? அவைகள்போன பிறகு இந்தியா வாழவில்லையா?

சர்வாதிகாரிகள் சென்ற பாதையும் இதுதான்!

பணக்காரர்கள், வீட்டின் மீது வட்டிக்குக் கொடுத்து பிறகு வீட்டையே விலைக்கு வாங்கிவிடுவார்கள். இப்படி வாங்கிச் சேர்த்த வீடுகள் மொத்தத்தையும் காட்டி, ‘இவைகள் எல்லாம் என் வீடுகள்‘ என்று கூறுவது போல், வல்லரசுகள். மற்ற நாடுகளை வாள்முனையில் பிடித்து, ‘சாம்ராஜ்யம்‘ என்கின்றன.

உலகை ஆளவேண்டும் என்று எண்ணிய இட்லர், அவனுடைய திட்டம் படிப்படியாக வெற்றி பெறவே, நார்வேயை நாலு நாட்களில் பிடித்துவிடுகிறேன். பின்லாந்தை இரண்டு நாட்களில் பிடித்துவிடுவேன் என்று சொன்னானாம்! ‘நாங்கள் தான் ஐரோப்பாவின் எசமானர்கள், நாங்கள்தான் ஆளப்பிறந்தவர்கள். எங்கள் பண்பாடுதான் உலகத்திலேயே சிறந்த பண்பாடு என்று கர்ச்சித்திருக்கிறான்!

மற்றொரு போர் வீரன் நெப்போலியன், பிரான்சு நாட்டிலிருந்து கிளம்பி, ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் பிடித்தான். பிடித்த நாடான ஸ்பெயினுக்குத் தளபதியை அரசனாக்கி – நாடு பிடிக்கும் வெளியுடன் பிரஞ்சுக் கோட்டையிலே கொலுவீற்றிருந்தானாம்.

ஒரே பண்பாடு – எவ்வாறு உருவாக இயலும்!

‘இந்திய அரசியல் சட்டம்‘ என்ற பொறிக்குள் நம்மையெல்லாம் 14 ஆண்டுக்காலம் பூட்டி வைத்துவிட்டு தேசீய ஒருமைப்பாடு பலனளிக்கவில்லை‘ என்று பேசுவது எனக்கு இராமாயணத்தின் கடைசி காண்டத்தை நினைவுபடுத்துகிறது. விபூடணன் துணையுடன் சுக்கிரீவனின் உதவியுடன் இலங்கையை வென்று, அசோகவனத்துக்குச் சென்று ‘எந்த மரம் சீதை தங்கியிருந்த மரம்‘ என்று இராமன் அனுமாரைக் கேட்க, ‘இந்த மரம்தான்‘ என்று அனுமான் சொல்ல, ‘அந்த மரம் மட்டும் இருக்கிறது. மாதாவைக் காணோம்‘ என்று கதை முடிந்திருந்தால் எவ்வளவு வெட்கக் கேடாக இருந்திருக்கும்? அதைப்போல் 14 ஆண்டுக்காலமாகத் தேசிய ஒற்றுமைக் குறித்துப்பேசிவிட்டு, ‘முயன்றும் முடியவில்லை‘ என்பது போல் நேரு பேசுகிறார்!

ஒரு நாட்டுக்கு ஒரு பண்பாடு என்றால், அதை இழந்து விடமாட்டோம்! ஆனால், பல நாடுகளைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டம் என்ற கூட்டுப்பூபாகத்தில், ஒரே பண்பாட்டை உண்டாக்க இயலாது!

பத்திரிக்கையிலே பார்த்தேன் – ஒரு அமைச்சர் ‘எல்லோரும் கூடிப்பாடினால் பாரதப் பண்பாடும், தேசீய ஒற்றுமையும் உண்டாகும்‘ என்று கூறியிருக்கிறார். இதைப் படித்தவுடன், திருப்பதிக்கு குடையெடுத்துப் போகும் போது ‘கோவிந்தம், கோவிந்தம்‘ என்று பாட்டுப் பாடுவார்களே அதுதான் என் நினைவுக்கு வந்தது! ஒருவர் ‘சப்பாத்தி சாப்பிட்டால் ஒற்றுமை வந்துவிடும்‘ என்கிறார். இன்னொருவர் ‘தேவநாகரி பேசினால் ஒற்றுமை உண்டாகிவிடும்‘ என்கிறார். ஆனால் நம்முடைய மதிமிக்க நிதியமைச்சர் சுப்பிரமணியம், ‘இந்தியா ஒரே தேசம். இதற்கு நாம் விசுவாசம் செலுத்துவோம்‘ என்று பள்ளிப் பிள்ளைகள் கூறினால் ஒற்றுமை உண்டாகிவிடும் என்கிறார்! இவர்களுடைய கூற்றுகளெல்லாம் எவ்வளவு கருத்தற்றவையாக இருந்தால், இன்னும் தேசிய ஒருமைப்பாடு கிடைக்காமல் இருக்கும்?

எவரை ஏய்ப்பதற்கு எத்தனிக்கின்றீர்கள்?

காந்தியாரின் மணிமொழிகளைப் படித்த பிறகும், தாகூரின் கவிதைகளைப் பயின்ற பிறகும், பாரதியார் பாடல்களைப் பாடிய பிறகும், நேருவின் பேச்சுக்களைக் கேட்டபிறகும், எல்லா எழுத்தாளர்களும் அவர்தம் ஏடுகளில் தங்கள் எண்ணங்களைத் தீட்டிய பிறகம் தேசிய ஒருமைப்பாடு உண்டாக வில்லையென்றால், என்ன அர்த்தம்?

காந்தியாரைவிடவா ஒரு அகிம்சாவாதியை இன்னும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள். தாகூரைவிடவா உயிர்ப்புச் சக்தியுள்ள பெருங்கவிஞராக உங்களுக்குக் கிடைக்க போகிறார்? பாரதியாரைவிட தேசிய உணர்ச்சியூட்டும் கவிஞரையா வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்போகிறீர்கள்? நேரு பார்த்து முடியாத ஒன்றை நீங்கள் வேறு யாரைக்கொண்டு சாதிக்கப் போகின்றீர்கள்? நேருவைவிட பெரிய தலைவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா? அவரை எங்கேயாவது ஒளித்து வைத்திருக்கிறீர்களா? காட்டுங்கள் பார்ப்போம்! தேசிய ஒற்றுமை என்று கூறி யாரை ஏயக்கப் பார்க்கின்றீர்கள்?

தேசிய ஒற்றுமை – செத்துவிட்ட சித்தாந்தம்

‘தெருக்கோடியிலே ஜாலவித்தை செய்பவன், சில சில்லரை வித்தைகளைக் காட்டிவிட்டு, கடைசியாக இரண்டு கூடைகளைத் திறந்து ஒன்றில் பாம்புத்தோல் இருப்பதைக் காட்டி மூடிவைத்து விடுவான். இன்னொரு கூடையைத் திறந்து. அதில் கீரித்தோலும் உயிர்பெற்று எழுந்து சண்டை போடுவதைக் காட்டுகிறேன்‘ என்று சொல்லி, அங்குள்ள மக்களிடத்தில் காலணா, அரையணா வசூல் ஒரு ஐந்து அணா ஆகும். வசூல் குறைவு என்பதை எண்ணிப் பார்த்துத் தெரிந்தவுடன். ‘இந்த வசூலுக்குக் கீரித்தோலும், பாம்புத் தோலும் உயிர் பெறாது‘ என்று கூறி, ‘அடுத்த தெருவுக்கு வாருங்கள்‘ என்று சொல்லிப் போவதைப்போல், நிதியமைச்சர் சுப்பிரமணியம், ‘தேசிய ஒற்றுமை‘ என்ற கூடையை மூடிக்காட்டித் தேர்தலுக்கு ஓட்டு வாங்க ஊருராய்ப் போகிறார்!

‘தனிநாடு கேட்டவர்கள் அத்துமீறிச் செல்லக் கூடாதென்பதற்காகத்தான் நாங்கள் 153ஆவது சட்டப் பிரிவைக் கொண்டு வந்தோம்‘ என்று நமது நிதியமைச்சர் கூறியிருக்கிறார். நாங்கள் ஒன்றும் அப்படி அத்துமீறிச் செயல்படுபவர்களல்ல! ‘பம்பாய் மாநிலம் எனக்குத்தான்‘ என்று மராட்டியரும், ‘எனக்குத்தான்‘ என்று குசராத்தியரும் கேட்ட நேரத்தில் மொரார்ஜி தேசாய் பேசிய கூட்டமொன்றில் கலவரம் விளைவித்தார்கள். கல்லூரி மாணவர்கள் கூட்டிய கூட்டத்தில், அம்மாணவர்கள் நேருவைப் பேச அனுமதிக்க வில்லை என்று கொட்டை எழுத்துக்களில் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. மொழிச் சிக்கலில் அசாமியரும் வங்காளிகளும் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டனர். அப்பொழுதெல்லாம் வராத சட்டம் இப்பொழுது ஏன்?

பலாத்காரத்தை உண்டாக்கியதல்லவே!

விடுதலை உணர்ச்சி உங்களுக்குள் புரையோடிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட அரசு, இன்று அவசரம் அவசரமாகச் சட்டமியற்ற முன் வந்திருக்கிறது. நம்முடைய இலட்சியம் பலாத்காரமில்லாமல் நம் நாட்டின் விடுதலையைப் பெறுவதுதான். எனவே அந்த இலட்சியம், பலாத்காரத்தில் நம்மை எப்பொழுதும் கொண்டு போய்விடாது.

வடநாட்டில், பரீட்சையில் கேள்வித்தாள்கள் கடினமாக இருக்கிறது என்றால்கூட கல்லூரிக்குப் போகாமல் – டிராமைக் கொளுத்துவது, பஸ்களைக் கொளுத்துவது – ஆசியர்களைத் தாக்குவது ஆகிய வன்முறைக் செயல்களில் ஈடபடுகிறார்கள். நாமோ அவர்கள் குட்டினால்கூட, ‘உங்கள் கை வலிக்குமே‘ என்று கூறுபவர்கள்! நம்மைப் பார்த்து. ‘பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள்‘ என்று சந்தேகிப்பது நிதியமைச்சரின் அரசியல் அப்பாவித்தனத்தைக் காட்டுகிறது!

‘சென்னையிலே பேசிய மத்திய அமைச்சர் தத்தார் அவர்கள். ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்பது பேச்சளவில் குற்றமாகாது. ஆனால், அதைச் செயல்படுத்தினால் 153ஆவது சட்டப்படி குற்றம்‘ என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘சட்டத்திற்குப் புறம்பாக நடந்தால் தண்டனை கிடைக்கும்‘ என்ற சட்ட அரிச்சுவடியை அறியாதவர்கள் அல்ல தி.மு.கழகத்தினர்!

இயக்கத்தின் இலட்சியத்தை உணருவீர்!

விடுதலை இயக்கத்துக்கு உள்ள இலட்சணமே துப்பாக்கியைக் காண்பித்தால் மார்பைக் காட்டுவதும். சிறைச்சாலையைக் காண்பித்தால் – வீட்டுக்கும் சிறைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் நாங்கள்‘ என்று கூறிச் சிறை செல்லத் தயாராக இருப்பதுமாகும்.!

மொழியின் பெயரால், சாதியின் பெயரால் பிரிவினை உணர்ச்சியைத் தூண்டினால் –அடிக்கடி சண்டையில் ஈடுபட்டால், 153ஆவது சட்டம் குறுக்கிட்டுத் தண்டிக்கும் ஏன்று கூறி விளக்கம் தர அமைச்சர்கள் முன்வருகிறார்கள். நாங்கள் அடித்தால்கூட போலீசு ‘பஞ்சசீலம்‘ பேசும் என்று சொல்லுங்கள் பிறகு பாருங்கள்!

படிப்பகத்தில் உட்கார்ந்திருந்த கபாலியைக் கத்தியாலே குத்தினார்கள். இதைக் குறித்து எந்தப் பத்திரிகை தலையங்கள் எழுதியது? அவர்கள் பேனாவில் மை இல்லையா? பேனா கூர் மழுங்கிவிட்டதா?

பத்திரிகைகள் என்ன செய்தன?

அது போகட்டும் – திண்டுக்கல் காங்கிரசுக் கட்சி உறுப்பினருக்கும் சின்னாளப்பட்டி இளைஞர் காங்கிரசு உறுப்பினருக்கும் அடிதடி ஏற்பட்டு, கோர்ட்டுக்குச் சென்று அபராதம் கூடப் போட்டார்கள். இந்தச் செய்தியை எந்தப் பத்திரிகை வெளியிட்டது? இவர்கள் சண்டை, அரசியல் காரணமாகக்கூட இல்லையாம். குளத்திற்குப் போகிற பெண்களை முறைத்துப் பார்த்தாராம். இளைஞர் காங்கிரசு உறுப்பினர் அதைக் கண்டித்தாராம் காங்கிரசு உறுப்பினர். இந்தத் தகராறு தான் சண்டைவரையில் போய் அபராதத்தோடு முடிந்திருக்கிறது. இதை வெளியிட எந்தப் பத்திரிகையும் முன்வரவில்லை!

போகட்டும் வடநாட்டில் அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவர் சஞ்சீவி ரெட்டியார் ஊர்வலம் சென்றபோது உருவிய கத்தியுடன் அவரைக் கொலை செய்ய ஒரு வாலிபன் வந்தானாம். இதைக் குறித்து ஒரு குட்டித் தலையங்கம் கூட எழுத இந்தப் பத்திரிகைகளுக்கு மனமில்லை!

ஆனால், கூட்டத்தில் ஒரு கல் விழுந்ததற்காக, வன்முறை, வன்முறை என்று ஒரே கூச்சலிட்டு, வன்முறைச் செயல்கள் எங்கள் கட்சியில் இருப்பதாகத் தலையங்கம் எழுதி, எங்களுக்குப் புத்திமதி சொல்ல முன்வருகின்றன இந்தப் பத்திரிகைகள்! ‘அண்ணாதுரை சாதுதான். அவர் தம்பிமார்கள் பொல்லாதவர்கள். அவர்களுக்கு அவர் புத்திமதி சொல்லவேண்டும்‘ என்று அவர்கள் எழுதினார்கள்.

நாடு அறியாததல்லவே!

ஆகா, இவர்கள் எப்பேர்பட்ட சாதுக்கள்? – இவர்களை நாடு அறியாதா? இவர்கள் ஊற்றிய திராவகம், கொளுத்திய தபாலாபீசுகள். அறுத்த தந்திக் கம்பிகள். பெயர்த்த தண்டவாளங்கள் பற்றி நாட்டு மக்களுக்குத் தெரியாதா? அவர்கள் காலம் அபப்டி – எங்கள் காலம் இப்படி!

தி.மு.கழகத்தில் போக்கிரி ஒருவன் சேர்ந்து எட்டு நாட்களாகிவிட்டால் அவன் சாதுவாகிவிடுவானே!

மதுரை மாநாட்டில் வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்று முதலாவதாகத் தீர்மானம் போட்டதுபோல், நாங்கள் வன்முறையில் ஈடுபடுவதாக அவர்கள் பேசியிருக்கிறார்கள். ‘வன்முறை கூடாது ஆகாது’ என்று கூறியவர்கள் வீடுபுகுந்து அடித்ததையும், காத்திருந்து வெட்டியதையும் எங்கே கண்டித்தார்கள்.

நினைவு தடுமாறியவனின் வெறியாட்டம்!

காஞ்சிபுரத்தில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு காங்கிரசுக்காரன் அளவுக்கு மீறி குடித்துவிட்டானாம். குடிவெறியினால் தடுமாறி, 1957இல் நடைபெற்ற தேர்தல் அன்று நடைபெறுவது போல் எண்ணிக் கொண்டானாம். பட்டப்பகலில் பட்டாக் கத்தியை எடுத்துக் கொண்டு ‘எவனாவது அண்ணாதுரைக்கு ஓட்டு போட்டால் தலையைச் சீவுவேன், ஜாக்கிரதை என்று ஆடிசன்பேட்டைக் கடை வீதியிலே சுற்றிச் சுற்றி வந்தானாம். கடைக்காரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்களாம். கடைசியில் தைரியம் உள்ள ஒருவர் போலீசுக்குப் போன் செய்தாராம், போலீசு வருவதை அறிந்து கொண்ட அந்தக் குடிகாரன் மண்டலக் காங்கிரசுக் கமிட்டி உறுப்பினர் ஒருவர் வீட்டில் போய் ஒளிந்து கொண்டானாம். போலீசார் அவனைப் பிடித்து வழக்குப் போட்டுக் கோர்ட்டில் அபராதம் கூட விதித்தார்களாம். உங்களுக்கு நான் சொல்வதிலே சந்தேகம் இருந்தால் காஞ்சிபுரம் சென்று விசாரித்துப் பாருங்கள்! நிருபர்களே நேரில் சென்று கேளுங்கள்!

அதிசயமோ அதிசயம்!

இதிலிருந்து யார் வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை நீங்கள் அறியலாம். அவனைக் காங்கிரசுக் கட்சியிலிருந்து தள்ளவில்லை. அந்தக் குடிகாரன் ஏற்கனவே பலமுறை சிறை சென்றவன், ‘கேடி‘ என்றும் சொல்லுவார்கள். போலீசுக் குறிப்பேடுகளிலே பலமுறை அவன் பதிவாகியிருக்கிறான். அவன்தானே மண்டலக் காங்கிரசுக் கமிட்டியில் இருக்கிறான்? தமிழ்நாட்டுத் தலைவர் பெயருக்குப் பக்கத்தில் அவனுடைய பெயர்தானே வருகிறது? அவன்தானே அளகேசனுக்கு வரவேற்புக் கொடுப்பதில் முன்னிலையில் நிற்கிறான்? அதைக் காண எனக்குக் கூடக் கூசுகிறதே, நாட்டிலே நடைபெறுகின்ற அக்கிரமங்களுக்கு – அநியாயங்களுக்கு – முன்கூறிய காலித்தனங்களுக்குக் காரணமான காங்கிரசுக்காரர்களை யார் கண்டித்திருக்கிறார்கள்!

வடக்கே சின்னஞ்சிறு பிரச்சினைகளுக்கெல்லாம்கூட கத்திக்குத்து, கல்வீச்சு, கலவரம் நிகழ்வதைப் பத்திரிகைகளிலே நித்தம்நித்தம் படிக்கிறோம்!

153ஆவது சட்டத்தால் பிரிவினைச் சக்தியை அடக்க முடியாது. மாறாக, பிரிவினைச் சக்தி முன்னிலும் பன்மடங்கு அதிவேகமாக வளரும் என்று பல உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலே பேசினார்கள். அவர்கள் என்ன பைத்தியக்காரர்களா?

மந்திரியானால் புத்தி போய்விடுமா?

‘சட்டம் போட்டால் போதாது, அதனைச் செயல்படுத்த வேண்டும்‘ என்று ‘மெயில்‘ பத்திரிகை எழுதி காட்டிற்று!

‘வகுப்புவாதக் கட்சிகளுடன் கூட்டு சேராமல் இருக்க இந்தச் சட்டம் உதவும்‘ என்று ‘இந்துப்‘ பத்திரிகை எழுதி தனக்குக் காங்கிரசு கட்சி மீதுள்ள அரிப்பைத் தீர்த்துக் கொண்டது.

இந்தச் சட்டத்தைப் பார்க்கின்ற பொழுது சில வேளைகளில். இருக்கும் புத்தியும் மந்திரியானால் போய் விடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எங்களுக்குக் கிடைத்து இருக்கின்ற சக்தி வேறு கட்சியினருக்குக் கிடைத்திருந்தால் பத்து நாட்களில் பலாத்காரப் புரட்சி நடத்திக் காட்டுவார்கள்! எனக்குப் பலாத்காரத்தில் நம்பிக்கையில்லை – கழகம் என பொறுப்பில் உள்ளவரை அந்தப் பேச்சுக்கே இடமில்லை! எத்தனை நாளைக்குத்தான் என் தம்பிமார்கள் பொறுப்பார்கள்? இந்த அண்ணாவே இப்படித்தான் என்ற எத்தனை தம்பிமார்கள் என்னைக் கடிந்து கொள்கிறார்கள்? ஓடிப்போன தம்பிமார்களை நினைத்தாலே சபலம் தட்டும் எனக்கு, என்னுடன் அன்றுமுதல் இன்றுவரை இருந்து உழைக்கும் தம்பிமார்கள் கஷ்டப்பட்டால் நான் எப்படிப் பொறுப்பேன்? நீங்கள் நடத்துவதை நடத்துங்கள் என்று சொன்னால் – செய்கையால் என் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாலே போதுமே?

ஐயமேன், ஐயனே!

‘நான் சொன்னால் இரயில்கள் ஓடாது. ஆனால் அத்தகைய செயலில் எனக்கு நம்பிக்கை இல்லை‘ என்று நான் சிதம்பரத்தில் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டேன். என்னுடைய வாசகத்திலுள்ள முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்குப் பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு அமைச்சர் சுப்பிரமணியம் பேசி, தன் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அண்ணாதுரை கட்சி இரயிலை நிறுத்தினால் நான் போலீசை அழைக்கமாட்டேன் – பட்டாளத்தை அழைக்க மாட்டேன் – இளைஞர் காங்கிரசை விட்டே அடக்கி விடுவேன்‘ என்று பேசியிருக்கிறார்! போலீசு மீது உங்களுக்குச் சந்தேகமா? பட்டாளத்தின் மீதும் உங்களுக்கு ஐயமா?

இதுவரையில் அமைச்சருக்கு நாட்டின் நிலைமைதான் தெரியவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் அவருக்குக் காங்கிரசு நிலைமையும் தெரியவில்லை என்பதை இன்றுதான் உணர்கிறேன்.

இளைஞர் காங்கிரசில் இருப்பவர்கள் என்னைவிட வயது அதிகமான இளைஞர்கள் யாரும் அதில் ஐம்பது வயதுக்கு குறைவாகச் சேர்க்கப்படுவது இல்லையாம். ‘ஒளி படைத்த கண்ணினாய் வா, வா‘ என்ற பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவர்கள் கண்ணில் ஒளியுமில்லை – கண் கண்ணாகவும் இல்லை. கண்ணாடி போட்ட கண்களாகவே இருக்கின்றன! அவர்கள் எந்த நேரமும் ‘சுப்பிரமணியா, மாணிக்கவேலா‘ என்று அர்ச்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள்தான் நம் கழக இளைஞர்கள் நடத்தும் இரயில் நிறுத்தத்தைத் தடுத்து விடுவார்களாம்!

யாருக்கு ஐயா வெற்றி?

நம் மாவட்டச் செயலாளர் நீல நாராயணனை அழைத்து, இரயில் நிறுத்து என்று கழகம் கட்டளையிட்டால், அவர் இரயில் நிலையத்திற்குச் சென்று இரயிலுள்ள சங்கிலியை இழுப்பார். இளைஞர் காங்கிரசுக்காரர் சென்று அவர் கையைத் தட்டி ‘இழுக்காதே‘ என்பார். இவர் இழுப்பேன் என்பார். இருவருக்குள் தகராறு ஏற்படும். பெட்டியிலுள்ள பிரயாணிகள் ‘நமக்கு ஏன் வீண்வம்பு?‘ என்று பேசாமல் போய்விடுவார்கள். இரயிலில் பிரயாணம் செய்ய வேண்டியவர்கள், ‘அங்கே தி.மு.கவினருக்கும் இளைஞர் காங்கிரசுக்காரருக்கும் தகராறு‘ என்றெண்ணி, பேசாமல் பஸ்ஸில் பிரயாணம் செய்வார்கள். அப்படி இரயிலிலேயே பிரயாணம் செய்யவேண்டியவர்களும் இராகுகாலம் எமகண்டம் பார்த்த, ஐயரிடம் பஞ்சாங்கம் பார்த்து அல்லவா ஊருக்குப் புறப்பட வேண்டி வரும்! எப்படிப்பார்த்தாலும் எங்களுக்கு வெற்றிதான்!

சிதம்பரத்தில் நான் சொன்னதைப் பற்றி நிதியமைச்சர் இளைஞர் காங்கிரசை விட்டு அட்க்குவேன் என்று சொன்னது பலாத்காரத்தில் அல்ல – சத்தியாகிரகத்தின் மூலம்‘ என்று இன்னொரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவருடைய வாதத்தை வாதத்துக்காகவே ஏற்றுக் கொண்டாலும். நீல நாராயணன் வீட்டிற்கே முன்னிலையில் இரயிலை நிறுத்தப் போகாதே என்று சொல்லி இளைஞர் காங்கிரசு மறியல் செய்வதாக வைத்துக் ்கொள்வோம். அப்பொழுதும் இரயிலுக்குச் செல்லுபவர்கள், அங்கே மறியலாமே, அதன் முடிவு என்ன ஆகியது என்று தெரிந்துகொண்டு இரயிலுக்குப் போகலாம் என்று எண்ணி நீல நாராயணன் வீட்டெதிரில் கூடுவார்களே தவிர, உடனே இரயிலுக்குப் போய் விட மாட்டார்கள்! எனவே, உங்கள் எண்ணம் ஈடேறாது – எங்கள் திட்டம்தான் வெற்றி பெறும்.

வாதத்தைப் போற்றுவேன்!

காஞ்சிபுரத்தில் ‘அண்ணாதுரையை வரவிடாதீர்கள்‘ என்று கேட்டுக்கொண்ட நிதியமைச்சர் சுப்பிரமணியம், ஈரோட்டுக்குப் போய் இடம் பார்த்துப் பேசியிருக்கிறார். அண்ணாதுரை ஜெயிக்கமாட்டார்‘ என்று! அவர் பேச வேண்டிய இடத்தில் அதைப்பற்றிப் பேசியிருப்பதால் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், நான் தோற்கக் கூடிய காரணகாரியங்களை அவர் விளக்கிப் பேசி இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். ‘அண்ணாதுரையை எதிர்த்து நிற்கும் நடேச (முதலியார்) அலிபுரம் சிறையிலே ஆறு ஆண்டு வாடியவர். தண்டி யாத்திரை சென்றவர். ஒத்துழையாமை இயக்கத்திலே முக்கியப் பங்கேற்றவர். வெள்ளையரை எதிர்த்து வாழ்நாளில் முக்கால் பகுதிச் சிறையிலே கழித்தவர்‘ என்று சொல்லி, ‘அண்ணாதுரைக்கு இந்தத் தகுதி உண்டா?‘ எனவே, அண்ணாதுரை தோற்பது நிச்சயம் என்று பேசி இருந்தால், பேச்சிலே விவேகம் இல்லாவிட்டாலும் அவர் வாதத்தைப போற்றி இருப்பேன்!

சட்டசபைக்கு உள்ளே போவது எனக்காக அல்ல இந்த நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு வாதாடுவதற்காக! எனவே, வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படுபவர்கள் மக்களாக இருக்க வேண்டுமே தவிர நான் அல்ல! சிறிய தேள் ஆறடி மனிதனைக் கொட்டினால். ஆள் துடியாய்த் துடிக்கிறான், அதே தேள் வகையாக மாட்டிக் கொண்டால் அதைக் காலிலே தேய்த்துக் கொன்று விடுகிறோம்! பணமும் அப்படித்தான் வறுமையில் அது கொட்டும்பொழுது அதன் வேகம் மிக அதிகமாக இருக்கும் ஆனால் சில வேளைகளில் அந்தப் பணமே செல்லாக்காசாகி விடுகிறது!