அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திராவிடம் உரிய இடத்தைப் பெறும்!
2

தேர்தலில் தோற்றது ஏன்

பணம்தான் தேர்தலில் வெற்றி தேடித்தரும் என்றால், பித்தாபுரமும், போடிநாயக்கனூரும் பொப்பிலியும், எட்டயபுரமும் தேர்தலில் தோற்றது ஏன்? பித்தாபுரம் மகாராஜா தேர்தலுக்காகவே ஒரு பத்திரிமை ஆரம்பித்தார். வடநாட்டிலிருந்து ஒரு ஆசிரியரை வரவழைத்து, ஆசிரியர் பொறுப்பை ஒத்துக்கொள்ளச் சொன்னார். அந்த ஆசிரியர் பெயர் ஈசுவர் டட் என்பதாகும். அறிவு நுட்பம் உள்ள அவர், ‘உன்னை நம்பி நான் எப்படி வருவது? நீங்கள் எவ்வளவு காலம் பத்திரிகை நடத்துவீர்களோ? எனவே, எனக்கு முதலில் மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து தரவேண்டும் என்று கேட்டார். ‘சரி‘ என்று ஒப்புக் கொண்டார் பித்தாபுரம். மூன்று மாதம் கழித்துத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. பித்தாபுரம் தோற்றார். பத்திரிகை அச்சகம் மூடப்பட்டது. அந்த ஆசிரியர் தன் சொந்த ஊரான நாகபுரிக்குப் போய்விட்டார்!

இப்படிப் பணம், தேர்தலில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் பயன்படுமே தவிர, எல்லா நேரத்திற்கும் பயன்படாது!

எத்தனை நாளைக்கு இது!

பணம் ஒன்றினையே நம்பிக்கொண்டு தேர்தல் நிதி என்ற முறையில் பெரும் தொகைகளை மிட்டா மிராசுகள் மில் அதிபர்கள், ஆலை அரசர்கள் முதலியவர்களிடம் பெற்றுத் தேர்தலை நடத்தும் காமராசர், எவ்வளவு காலத்திற்கு வெற்றி பெற முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சில வேளைகளில் காங்கிரசுத் தொண்டர்களே அருவருப்படையத் தக்க முறையில் தேர்தலுக்கு ஆட்கள் நிறுத்தப்படுகிறார்கள்.

காங்கிரசுக்காரர்களின் கண்கள் இன்று காஞ்சிபுரத்தையும், குளித்தலையும், சென்னைப் பட்டினத்தையுமே சுற்றிச் சுற்றி வருகின்றன. இப்படி எங்களைப் பார்க்கின்ற நேரத்திலே உங்களது பல கோட்டைகள் பறிபோகின்றன!

வருகிற தேர்தலில் காங்கிரசுக் கோட்டைகள் தவிடு பொடியாகும். இந்த மாதம் சுற்றுப் பயணம் செய்துவிட்டு வந்ததில் எனக்குத் தைரியம் அதிகமாகி இருக்கிறது!

விழிப்புணர்ச்சிதான் இநநிலைக்குக் காரணம்!

விருத்தாச்சலம் நல்லூர்த் தொகுதியில் இரவு 7.30 மணி முதல் காலை 4.30 மணி வரை கூட்டங்கள் நடந்தன. நாங்கள் தொழுதூர் சென்றபோது பொழுது விடிந்தது. உழவர்கள் கழனிக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். பெண்கள் தெருவில் சாணி தெளித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்திலும் நாங்கள் கூட்டம் போடக் காரணம் என்ன? நான் என்ன முற்றும் துறந்த முனிவனா? ஆண்டவன் அருள் பெற்றவனா? நான் தொட்டால் பட்டமரம் துளிர்த்துவிடுமா? நான் என்ன இமயமலையில் ஒற்றைக் காலில் தவம் இருந்தவனா? ஊசி முனையில் தவம் கிடந்து உபதேசம் பெற்றவனா? இல்லையே!

நான் என்ன அகில உலகம் சுற்றியவனா? ஆளுங்கட்சித் தலைவனா? அப்படியும் இல்லையே!

பின் ஏன் என்னைக் காண அவர்கள் நடுநிசியானாலும் விடியற்காலம் ஆனாலும், பொழுது புலர்ந்தாலும் கூடுகிறார்கள்? அப்படி அவர்கள் கூடுவதற்குக் காரணம் உலக அரங்கில் திராவிடத்திற்கு இடம் வேண்டும் என்ற எண்ணமும் விழிப்புணர்ச்சியும்தான்!
இந்த நிலைமை இனியும் நீடிக்க வேண்டுமா?

உலக அரங்கில் திராவிடம் வேண்டுமா என்றால் கட்டாயம் வேண்டும். அதனால் என்ன இலாபம் – என்றால், நிச்சயம் இலாபம் இருக்கிறது.

உலக அரங்கில் திராவிடத்திற்கு இடம் கிடைக்காவிட்டால் அமெரிக்கர்கள் அகநானூற்றைப் பற்றிக் கேட்காமல் – புறநானூற்றைப்பற்றிக் கேட்காமல் – திருவள்ளுவரைப் பற்றிக் கேட்காமல், கீதையைப் பற்றித்தான் கேட்பார்கள். தாகூர் கவிதைகளைக் குறித்துத்தான் வினவுவார்கள். விசயலட்சுமிக்குக் கவர்னர் பதவி எந்த மாநிலத்தில்? என்று மட்டுமே கேட்பார்கள். டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீண்டும் அரசியலுக்கு வருவாரா? என்று வினவுவர். நேரு எப்படி இருக்கிறார்? என்று குசலம் விசாரிப்பர்.

ஆனால், உலக அரங்கத்துக்குத் திராவிடப் பிரதிநிதிகள் போனால், மற்ற நாட்டுப் பிரதிநிதிகள் நம்முடைய இலக்கியத்தைப் பற்றிக் கேட்பார்கள். ‘பாருக்கே பண்பாட்டைப் போதித்தது நீங்கள் தானாமே?‘ என்று கேட்பார்கள். ‘உலகில் பல நாடுகளில் காட்டுமிராண்டித்தனமாக மக்கள் வாழ்ந்த பொழுது, மற்ற நாட்டினர் உச்சிமேல் வைத்து மெச்சத் தகுந்த நாகரித்தோடு வாழ்ந்தவரக்ளாமே‘ என்று கேட்பார்கள்!

பரவுவது எப்போது?

ஊரிலிருந்து ஒரு பெரியவர் வந்தால். ‘மழை எப்படி? எல்லோரும் சௌக்கியமா?‘ என்று கேட்பார்கள். தன் மகளுடைய மைத்துனன் வந்தால். ‘மருமகள் சௌக்கியமா? என்று கேட்பார்கள். மருமகன் வந்தால், ‘மகள் சௌக்கியமா? இப்போது ஏதாவத உண்டா?‘ என்று கேட்பார்கள்.

இப்படி வருகின்றவர்களின் உறவு முறைக்கு ஏற்றவாறு சேதிகளைக் கேட்பதுபோல், உலக அரங்கிற்குச் செல்லும் நாட்டுப்பிரதிநிதிகளுக்கு ஏற்றவாறுதான் அங்குக் கேட்பார்கள்.

எட்டுத் தொகையும், பத்துப்பாட்டும் ஏட்டளவில்தான் இருக்க வேண்டுமா? படித்தவர்களுக்கு மட்டும்தானா? திருக்குறள்? மணிமேகலையும், சிந்தாமணியும் புலவ்ாகளுக்கு மட்டுந்தானா? சிலப்பதிகாரம் சிவஞானத்திற்கு மட்டுந்தானா? இவைகள் எல்லாம் உலக அரங்கில் பரவவுது எப்போது? – ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ ஆனால்தான்(

சிறப்புமிக்க வரலாறு நமக்கு இருக்கிறது!

கணா நாட்டுப் பிரதமர் நிகருமா எழுதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் ‘8000 ஆண்டு வரலாறு கணா நாட்டுக்கு இருக்கிறது‘ என்று எழுதியுள்ளார். ‘5000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் நீக்ரோக்கள்‘ என்று எழுதியுள்ளார். கோல்டுகோஸ்ட் என்ற அடிமை நாடு அழிந்து கணா நாடு என்ற பெயருடன் விடுதலை விருது பெற்றதும். நிக்ருமா இல்லாத வரலாற்றை உண்டாக்கிக் காட்டி இருக்கிறார், நமக்கோ ஒரு சிறப்பு மிக்க வரலாறு இருக்கிறது!

திருமணம் ஆனவனைப் பார்த்து, ‘குழந்தை எத்தனை?‘ என்று கேட்டால் தக்க பதில் சொல்லுவான். திருமணம் ஆகாதவனைப் பார்த்து, குழந்தை எத்தனை? என்றால் அவனுக்கு எப்படியோ இருந்தாலும் சொல்லுவானா?

அதேபோல், விடுதலை பெற்ற பிறகு அந்நாட்டின் வரலாற்றைக் கேட்டால் சொல்லுவார்கள். அதை விட்டு விட்டு. அடிமை நாட்டைப் பார்த்து, ‘உனக்கு வரலாறு இருக்கிறதா?‘ என்று கேட்டால் – இருந்தாலும், எப்படிச் சொல்லுவது?

எனவே, ‘உலக அரங்கில் திராவிடம்‘ உரிய இடத்தைப் பெற நீங்கள் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை மாவட்டத் தி.மு.கழகம், தேர்தல் நிதிக்காகத் தன்னுடைய பங்குத் தொகையில் இன்றோடு ரூ,22000 சேர்த்துத் தந்திருக்கிறது. அந்த நிதியைச் சேர்ப்பதில் ஈடுபாடு கொண்டு ஒத்துழைத்த மாவட்டச் செயலாளர், வட்டச் செயலாளர்கள் மற்ற அலுவலர்கள், ஆதரவாளர்கள் ஆகிய அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மாவட்டப் பங்குத் தொகையில் இன்னும் ரூ.3000 மட்டுமே தரவேண்டியிருக்கிறது. இந்த ரூ.3000 மிகவும் குறைந்த தொகை. அதை நிறைவு செய்வதோடல்லாமல், தேர்தலில் சென்னைத் தொகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்படும் கழக உறுப்பினர்களுக்கு ஆகும் தேர்தல் செலவை நம் கழகத் தோழர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். ‘என்ன அண்ணா, சென்னை இதைத் தாங்குமா?‘ என்று நீங்கள் கேட்கலாம். 22 இலட்சம் மக்களைத் தாங்குகின்ற சென்னை இதைத் தாங்காதா?

சென்னையின் ஏற்றத்திற்கு யார் காரணம்?

சென்னை பெற்றிருக்கிற ஏற்றத்திற்கும் இனி பெறவிருக்கின்ற ஏற்றத்திற்கும் நீங்கள்தான் காரணம். சென்னை மாநகராட்சியில் நான்கு மேயரை உண்டாக்கினீர்கள். இதையே கிராமப் புறத்தில் உள்ளவர்கள் கொச்சை மொழியில், ‘பட்டணத்தைத் தி.மு.க. பிடித்துவிட்டது‘ என்கிறார்கள் சென்னையைத் தி.மு.க. பிடித்து விட்டது. மதுரையைத் தேவர் பிடித்துவிட்டார். கோவையைக் கம்யூனிஸ்டுகள் பிடித்து விட்டார்கள். தஞ்சை தி.மு.க கையில் இருக்கிறது‘ என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

பழைய கால அரசியல் வரலாற்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். காங்கிரசு ஆளுங்கட்சியாக அமைவதற்கு முன்னாலே, கார்ப்பரேஷனில் இடம் பெற்றார்ர்கள், சத்தியமூர்த்தி மேயரானார். அப்போது அவர் ‘ரிப்பன் கட்டிடத்தைக் கைப்பற்றி விட்டோம். இனி கடற்கரை அருகிலுள்ள கோட்டையைக் கைப்பற்றுவோம்‘ என்றார்.

நான் இப்பொழுது சொல்லுவேன் – தி.மு.க. ரிப்பன் கட்டிடத்தைக் கைப்பற்றிவிட்டது. இனி கைப்பற்ற வேண்டிய கட்டினம் அதிகத் தூரத்தில் இல்லை. கொள்கை வீரர்களாகிய உங்களால் தியாகத் தீரர்களாகிய உங்களால் – இலட்சிய செம்மல்களாகிய உங்களால்தான் இத்தகைய ஏறற்ம் தி.மு.க.வுக்குக் கிடைத்தது.

காடு கரம்புகளில் உள்ள மக்களும், நெஞ்சுருக உளம் கனிய அன்பொழுகத் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட வேண்டிய மாற்றத்தைக் குறித்து, எண்ணிப்பார்த்து, அதனை எடுத்து விளக்குகிறார்கள்.

நாங்கள் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாக விட்டது. நாங்கள் பேச வேண்டியதெல்லாம் பேசியாவிவிட்டது. நாங்கள் எழுத வேண்டியதையெல்லாம் எழுதியாகிவிட்டது( இனி நீங்கள் மற்றவர்களிடம் பேச வேண்டியதைப் பேசி – சொல்ல வேண்டியதைச் சொல்லி – விளக்க வேண்டிய முறையில் விளக்கி ஓட்டுக்களைச் சேகரித்து வெற்றிபெறச் செய்வது உங்கள் பொறுப்பாகும்.

அந்த நிலையில் நாம் இல்லை!

நாம் ஒன்றும் புதிதாகக் கட்சி ஆரம்பித்து, ‘இதுவா கொள்கை – அதுவா கொள்கை?‘ என்று தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் பொருளாளருக்கும் கருத்து வேற்றுமை இருக்கும் நிலையில் இல்லை. நம்முடைய கொள்கை நாடறிந்த கொள்கை.

பேச வேண்டியவர்களே பேசி, கேட்கவேண்டியவர்களே கேட்டுக் கொண்டிருப்பது சுவையுடையதுதான் என்றாலும், நமக்கு நேரம் எங்கே இருக்கிறது? நாங்கள் ஒவ்வொரு தொகுதிக்கம் செல்ல வேண்டும். எனவே, நிங்கள் வாக்காளரைச் சந்திக்க வேண்டும். பொதுத் தேர்தல் நெருங்கி வருகிறது – மிக வேகமாக வருகிறது, நாட்களோ அதிகம் இல்லை. இந்த நிலையில் அச்சம்கூட எழச் செய்கிறது!

வாக்காளர்களுக்கு வலிமை அதிகம், அதை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த வலுவில் நம்பிக்கை தேய்ந்துபோகத் தக்க அளவில் – பணத்தின் நம்பிக்கையோடு காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்கள்!

யாரைத் திருப்திபடுத்தினர்?

இல்லையென்றால் 14 ஆண்டுகளாக ஆட்சியில் காங்கிரசுக்காரர்கள் யாரைத் திருப்திபடுத்தினார்கள்? உழவர்களைத் திருப்திபடுத்தினார்களா என்றால் இல்லை. எங்களுக்கு உரம் கிடைப்பதில்லை. விவசாயம் வளர வழி இல்லை‘ என்கிறார்கள்.

தொழிலாளர்கள் திருப்திப்பட்டார்களா என்றால், இல்லை. வேலை இல்லை – வேலை கிடைத்தால் அதற்கேற்ற கூலி இல்லை. கூலி கிடைத்தாலும் வாழ்வுக்கு அதுபோத வில்லை எங்கள் உழைப்பால் முதலாளிகள் பெறும் இலாபத்தில் உரியதோர் பங்கு எங்களுக்கு இல்லை‘ என்கிறார்கள்.

கிராமத்து மக்கள் திருப்திபட்டார்களா என்றால் இல்லை. ‘உழவு சரியில்லை, செய்தொழில் வேறு இல்லை, படிக்க பள்ளி இல்லை. நோய் தீர மருந்தகம் இல்லை‘ என்கிறார்கள்!

வியாபாரிகள் திருப்திப்பட்டார்களா என்றால், இல்லை ‘விற்பனை வரி அதிகாரிகள் தொல்லை தாங்க முடியவில்லை. விற்பனை வரித் தொல்லையோ சொல்லத் தேவை இல்லை. பணம் வருவதைப் பற்றியோ, போவதைப் பற்றியோ கூடக் கவலை இல்லை. மனமே பாதிக்கப்படுகிறது‘ என்கிறார்கள்.

ஆசிரியர்கள் திருப்திப்பட்டார்களா என்றால் இல்லை. ‘தரப்படும் ஊதியக் குறைவால் எல்லையில்லா அல்லல்படுகிறோம்‘ என்கிறார்கள்!

ஆதித்திராவிடர்கள் திருப்திப்பட்டார்களா என்றால் இல்லை. ‘காங்கிரசால் அரசின் என்ற பெயர் பெற்றோமே தவிர இருப்பது பழைய சேரிகள், வாழும் இடமோ பழைய குடிசை குழந்தைகள் விளையாடுவதோ சேற்றில் – சகதியில் நாங்கள் என்ன சுகம் கண்டோம்? என்கிறார்கள்.

தைரியத்திற்குக் காரணம்?

பிற்பட்ட வகுப்பார்கள் திருப்திப்பட்டார்களா என்றால், இல்லவே இல்லை, பிற்பட்ட வகுப்பார் என்று சொல்லிக் கொண்டு சிலர் எம்.எல்.ஏ., எம்.எல்.சி., ஆனார்களே தவிர எங்கள் சமூகத்துக்கு என்ன நன்மை கிடைத்தது? என்கிறார்கள் அவர்கள்!

இவ்வளவுக்கும் பிறகு எந்தத் தைரியத்திலே அவர்கள் தேர்தலிலே நிற்கிறார்கள்?

65 வயது கிழவர் – கண் பொட்டை,இரு கால்கள் இருக்கின்றனவே தவிர, அவரால் நடக்க முடியாது. உடலிலோ தழும்பு, 18 வயதுப் பாவை – கண்களோ மலர்கள் என்கிறார்கள். உடலில் இளமையின் மெருகு! இந்தப் பெண்ணை, அந்தக் கிழவர் ‘நம்மால் மணம்புரிந்து கொள்ள முடியும்‘ என்று எந்தத் தைரியத்தில் நினைக்க இயலும்? தன்னுடைய பெட்டியிலுள்ள பணத்தை நம்பித்தானே?

அதைப்போல், வறுமையில் வாழும்மக்களைத் தங்களிடத்துள்ள பணத்தைக் கொண்டு ஓட்டுப்போடச் செய்யலாம் என்று நினைக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள் கண் குருடான கிழவனுக்கு, கிளிபோன்ற பெண்ணைக் கட்டிக்கொடுக்க எந்த நல்ல தந்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டான் அல்லவா? இதற்குக் கை தட்டிப்பயனில்லை. இதை வீடுவீடாகச் சென்று நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

நிலைமையை விளக்குவீர்!

காலுக்குச் செருப்பு வேண்டும் என்பதற்காக வீட்டிலுள்ள பசுவை அறுத்துச் செருப்பு செய்வது பாவக்காரியம் என்று வைதீகர்கள் சொல்வதுபோல், நம் ஓட்டைக் கொடுத்து, ‘நீங்கள் வந்த வரிபோடுங்கள், வாட்டி வதையுங்கள்‘ என்பது பாவக்காரியம்!

இதை நீங்கள் வீட்டுக்கு வீடும், தெருவுக்குத் தெருவும் அங்காடிகள் தோறும் அந்திசாயும் நேரமானாலும் அலுவலகத்திலிருந்து வரும் நேரமானாலும், காங்கிரசு ஆட்சியின் கேடுபாடுகளை எடுத்து விளக்கி ஓட்டுச் சேகரிக்கும் வேலையில் ஈடுபடவேண்டும். இந்தக் கருத்துக்களைப் போஸ்டர்‘களில் கையால் எழுதலாம். சற்று வசதி உள்ளவர்கள் சுவரொட்டிகளை அச்சிட்டும் ஒட்டலாம்!

நாவலர் அவர்கள் பேசும்போது ரூ.18000க்கு வாங்கிய வீட்டைப் பழுதுபார்க்க ரூ.81000 செலவாகும் என்று தெரிந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு செலவோ ரூ.28000 ஆன வீட்டை ரூ.600க்கு விற்றதை எடுத்து விளக்கியபோது, ‘அப்படியா?‘ என்று ஆச்சரியப்பட்டீர்கள்! இத்துடன் நாவலர் வேலை முடிந்தது. இனி உங்களுடைய வேலை – அந்த வீடு யாரிடத்திலிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்கப்பட்டது? என்பதை ஆராய்ந்தால் அங்கேயும் கதர் இருக்கும் – இங்கேயும் கதர் இருக்கும்(

உபயோகமில்லாத அந்த வீட்டை உயர்ந்த விலைக்கு ஒரு காங்கிரசுக்காரர் வீற்றிருக்க வேண்டும். அதை ஏலத்தில் உண்மை மதிப்புக்கும் குறைந்த விலையில் ஒரு காங்கிரசுக்காரர் வாங்கியிருக்க வேண்டும். எங்களுக்குக் கிடைத்த தகவல் இவ்வளவுதான். அதை உங்களுக்குச் சொல்லிவிட்டோம் இனி இதை ஊருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது உங்களுடைய பொறுப்பு!

நம்பிக்கையின் எதிரொலியே!

வித்துவானிடம் பாட்டுப் பயிலும் மாணவன், தான் முன்னேற வேண்டுமானால் வித்துவான் இரண்டு பிர்க்கா கற்றுக் கொடுத்தால், மாணவன் நான்கு பிர்க்கா பாடவேண்டும். அவர் அதைக் கண்டு அதிசயிக்க வேண்டும். ‘இந்தச் சங்கீதத்தை எங்கே கற்றாய் எனக்குக் கூடத் தெரிய வில்லையே?‘ என்று அவர் சொல்ல வேண்டும். அதுதான் ஒர மாணவன் முன்னேற்றத்திற்கு அழகு!

உங்களை நான் நன்றாக அறிவேன் உங்கள் நம்பிக்கையின் பேரில்தான், ‘நாட்டுப் பிரிவினை என்றாலும தயார்‘ என்கின்றேன். சட்டசபையில்கூட, ‘கத்தி இருந்தால் தீட்டிக் கொள்ளுங்கள், சட்டம் இருந்தால் செயல்படுத்துங்கள்‘ என்று வீரமாகச் சொன்னேன். இது என்ன – என் தனிப்பட்ட தைரியமா? நான் வளர்க்கப்பட்ட குடும்பமோ பங்காளிக் குடும்பமாயிற்றே.

வலிவு தேடித் தாருங்கள்!

வாலிபர்கள் வீரமாக வருவதையும், வயோதிகர்கள் வாலிபரைப்போல் வருவதையும், தங்களிடமிருந்து வீரத்தை ஆடவர்கள் கற்றக்கொள்ள வேண்டுமென்பதைப் போல் தாய்மார்கள் நம்முடைய கூட்டங்களுக்கு வருவதையும் நித்தம் நித்தம் நான் காண்கிறேன். எனவே, 15 பேர்களுடன் சென்ற நான், மூன்று பேர்களைப் பறிகொடுத்த பிறகும் அவ்வளவு வீராவேசமாகப் பேசியதைக் குறித்து அமைச்சர்களுக்கே ஆச்சரியம் ஏற்பட்டுவிட்டது. என்னைக் கூட அவர்கள் பார்ப்பதில்லை. சுற்றிச் சுற்றிப்ப பார்க்கிறார்கள். என்ன இவன் இப்படிப் பேசுகிறானே, எங்கேயாவது பட்டாளத்தை ஒளித்து வைத்துவிட்டு வந்து பேசுகிறார்னோ‘ என்று கூட நினைக்கிறார்கள்.

அண்மையில் நண்பர் எம்.ஜி.ஆர். நடத்திய மழை அங்கி அளிப்பு விழாவில் நான் பேசியபொழுது கடைசியில் ஒன்று குறிப்பிட்டேன் – கூட்டம் அவர்களுக்குக் கூடும். ஆனால் ஓட்டு எங்களுக்கு என்றார் காமராசர். ஆனால், இனி கூட்டமும் எங்களுக்குத்தான் ஓட்டும் எங்களுக்குத்தான் என்று! என் வார்த்தையைப் பொய்யாக்காமல் இருப்பது உங்கள் பொறுப்ப!

மைனாரிட்டி சர்க்கார் இது!

அடுத்தமுறை சட்டமன்றத்துக்குப் போகும்போது, ‘என்ன ஆயிற்று உன் அறைகூவல்?“ என்று அமைச்சர்கள் கேட்டால் நீங்கள் வெற்றி தேடித்தரப்போகும் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டாளத்தை அழைத்துப் போய்க் காண்பிப்பேன்( உங்களால் முடியாவிட்டால் எங்களை நம்பி எப்படி அண்ணா நீங்கள் இப்படியெல்லாம் பேசலாம்?‘ என்று தனியாகச் சொல்லிவிடுங்கள்.

1957ஆம் ஆண்டுத் தேர்தலில் வலுவிழந்துவிட்ட காங்கிரசுக் கட்சிதான் இன்று நாட்டை ஆளுகீறது என்பதைச் சுட்டிக் காட்டித்தான் சொல்லுகிறேன் – காங்கிரசு பெற்றதை விட காங்கிரசு அல்லாத கட்சிகள் பெற்ற வாக்குகள் அதிகம். இப்போது நம்மை ஆளுகிற சர்க்கார் ‘மைனாரிட்டி‘ மக்களின் சர்க்காரே தவி, ‘மெஜாரிட்டி‘ மக்களின் சர்க்கார் அல்ல!

நடு வீட்டில் உட்கார வேண்டியவர் நம் வீட்டுப் பெரியவர். சை நேரத்தில், பூசாரிகூட நடுவீட்டில் உட்காரலாம். நடுவீட்டில் உட்கார்ந்ததாலேயே நம் வீட்டுப் பெரியவரைவிட பூசாரி உயர்ந்தவர் என்று பொருளல்ல! அதுபோல், ஆளுங்கட்சி ஆகிவிட்டதாலேயே காங்கிரசுக் கட்சி உயர்ந்த கட்சி என்று பொருளல்ல!

காரணத்தை அறிவீர!

சென்ற தேர்தலில் எதிர்க் கட்சிகளின் ஓட்டைத்தி.மு.க.கழகம் கம்யூனிஸ்ட் சட்சியும், சுயேச்சைகளும் பங்கு போட்டுக் கொண்டதால் காங்கிரசுக் கட்சி பெருவாரியாக வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.

போன பொதுத்தேர்தல் கூட்டங்களில் நம் கழகப் பேச்சாளர் ஒரு மணிநேரம் பேசினால் அதில் கால்மணி நேரம் கம்யூனிஸ்டுகளைக் கண்டித்துப் பேசினார்கள். கால் மணி நேரம் காங்கிரசைக் கண்டித்துப் பேசினார்கள்! மீதி கால் மணி நரேத்தில் கழகக் கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள்.

எதிர்க் கட்சிகள் பலவற்றைக் கண்டித்ததில் நேரத்தைச் செலவழித்ததாலும் நம் கட்சியைப்பற்றி எடுத்துச் சொல்ல நேரமில்லாததாலும் நம் வீழ்ச்சிக்குக் காரணமாய்ச் சென்ற தேர்தல் அமைந்தது.

நுழைவதற்கு இடந்தராதீர்!

உதாரணத்திற்கு ஒன்று சொல்லுவேன். நண்பர் பாலனிடம் ரூ.100 இருக்கிறது. என்னிடம் ரூ.200 இருக்கிறது. தோழியர் சத்தியவாணி முத்து அவர்களிடம் ரூ.100 இருக்கிறது. என்னிடம் இருக்கிற ரூ.50தைச் சத்தியவாணிமுத்து வாங்கிக் கொண்டால், அவருடைய 100 ரூபாய் 150 ஆகிறது. என்னுடைய 200 ரூபாய் 150 ஆகிறது. பாலனுடைய 100 ரூபாய் மட்டும் அப்படியே இருக்கும்.

அதைப்போல, காங்கிரசுக்கட்சியின் வலிவை எதிர்க்கட்சிகள் பங்கிட்டுக் கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் மடிபிடி சண்டை போட்டால் காங்கிரசுக்காரர்கள் மாப்பிள்ளைகளைப் போல் சட்டசபையில் நுழைந்து விடுவார்கள்.

எனவே, இனி எல்லாக்கட்சி மேடைகளிலும் காங்கிரசுக் கட்சியைப் பற்றி மட்டுமே நாம் கண்டிக்க வேண்டும். ‘கம்யூனிஸ்டுகள் கொள்கை நம் நாட்டுக்குஉகந்தது அல்ல‘ என்று நாமும், ‘என்ன இருந்தாலும் பிரிவினைக் கூடாது‘ என்று அவர்களும், பிப்ரவரியில் பேசக்கூடாது. நமக்குள்ளே ஒருவரை ஒருவர் தாக்கிப் போசிக் கொள்ளக்கூடாது!

வெட்டிப் பேச்சு கூடாது!

மரத்திலுள்ள பழத்தைப்பறிக்கச் சென்றால் பழத்தை உற்றுப் பார்க்காமல் மரத்திலுள்ள இலைகளை எண்ணுவோமா? சாப்பிடுவதற்கு இலை போட்டால்,அதில் பரிமாறி இருக்கும் பண்டங்களைப் பார்க்காமல் இலையிலுள்ள ஈர்க்கை எண்ணுவோமா?

அதைப்போல், வெற்றிப் பழத்திற்காகக் காத்திருக்கும் நாம் வெட்டிப் பேச்சில் ஈடுபட்டுப் பயன் எனன்? நாம் தாக்குவதையெல்லாம் மார்ச்சு மாதத்தில் பார்க்கலாம். பிப்ரவரி வரை இதற்கெல்லாம் இடம்கொடுக்காமல் பொது எதிரியான காங்கிரசின் சர்வாதிகாரத்தை நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்! காங்கிரசின் எதேச்சாதி காரத்தை எடுத்துச் சொல்லுங்கள்! காங்கிரசு ஆட்சியில் ஏற்பட்டிருக்கிற வறுமை, கொடுமை, பசி, பட்டினி, பஞ்சம், வேலையில்லாத திண்டாட்டம் ஆகியவைகளை மக்களுக்கு விளக்குங்கள்!

இம்மாநிலக் காங்கிரசு ஆட்சி, வடவருக்கு வால் பிடிக்கும் ஆட்சி. இந்த ஆட்சி மீண்டும் வந்தால் வடக்கு மேலும் வளரும தெற்கு மேலும் தேயும் என்பதை அதிகாரப்பூர்வமாக விளக்குங்கள்!

இதற்குப் பிறகு பாருங்கள் 1962 தேர்தலுக்குப் பிறகு காங்கிரசு களைத்துப்போய், இளைத்துப்போய், ‘அப்பா, ஐயா‘ என்று ஆவல் மிகுந்த கண்களோடு சட்டசபையில் நுழைந்து. நம்மை அரவணைத்தால்தான் தங்களுடைய ஆட்சி நிலைக்கம் என்ற நிலை அவர்களுக்கு ஏற்படும்.

கிடைக்காதா என்ன?

மோரில் வெண்ணெய் இருக்கிறது. கடைய வேண்டிய முறைப்படி கடைந்தால்தான் வெண்ணெய் கிடைக்கும்! அதைப்போல, ஓட்டு இருக்கிறது – வாக்காளர்களை அணுகி கேட்கவேண்டிய முறையில் கேட்டால் ஓட்டு கட்டாயம் கிடைக்கும்.

நமக்கு வேண்டிய பணம் சுவரொட்டிகளை அச்சடிப்பதற்கு! சுவரொட்டி என்ற பேச்சுப் பேசினாலேயே கருணாநிதியின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது! 1000 சுவரொட்டிக்கு வேண்டிய கருத்துக்கள் தயாராக இருக்கின்றன! இதை நான் கருணாநிதியிடம் சொன்னால், ‘பணம் எவ்வளவு கொண்டு வந்திருக்கிறீர்கள்?‘ என்று கேட்கறிார். தவறிப்போய் இவருக்குக் கருணாநிதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் இவரிடம் நிதி இருக்கிறதே தவிர கருணை இல்லை.

சுவரொட்டிக்கு வெற்றி!

போன தேர்தலில் நாம் 25 வகையான சுவரொட்டிகளைப் போட்டோம். அந்தச் சுவரொட்டிகள் நம்முடைய பிரச்சாரத்தைவிட அதிகமாக வேலை செய்தது. ‘அந்த சுவரொட்டி ஒரு துணை அமைச்சரையே தோற்கடித்தது‘ என்று நாவலர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தகைய சுவரொட்டிகளை நாம் போட்டவுடனே ‘ஐயோ‘ இது என்ன தேர்தல்முறை?‘ என்று காங்கிரசார் கேலி செய்தார்கள். ஆனால், அந்தக் காங்கிரசுக்காரர்களே ஹெக்டே என்ற பாராளுமன்ற உறுப்பினரை இங்கிலாந்துக்கு அனுப்பி, அங்கு உள்ள தேர்தல் அறிக்கை முறைகளை அறிந்துவரச் சொன்னார்கள். அவரும் அங்குச் சென்று வந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதை நான் படிக்க நேர்ந்தது. அதில் இங்கிலாந்திலுள்ள கன்சர்வேடிவ் கட்சியும், தொழிற்கட்சியும் சுவரொட்டிகள் மூலமே அரசியல் கட்சிப் பிரச்சாரம் செய்கின்றன‘ என்று குறிப்பிட்டிருக்கிறது. அங்கு ஒட்டப்பட்ட இரண்டு உயிரோட்டம் நிறைந்த சுவரொட்டிகள் ‘கன்சர்வேடிவ்‘ கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. சுவரொட்டிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி செலவு செய்திருக்கிறார்கள். அந்த ரூ.2 கோடி மட்டும் என்னிடம் இருந்தால் ஆறேமாதத்தில் திராவிட நாடு வாங்கிக் காண்பிப்பேன்.

அவர்கள் போட்ட சுவரொட்டிகளில் இரண்டு சுவரொட்டி இங்கிலாந்து மக்களையே உலுக்கிவிட்டடதாம் ஒரு சுவரொட்டியில் ஒரு நல்ல வீடு. அதன் அருகே அருமையான பாதை. அந்தப் பாதையிலே அழகான கார். மனைவி வாயிற்படியில் வந்து நின்று கொண்டிருக்கிறாள். கணவன் வேலைக்குப் போக கார் ஏறுகிறான். அந்த நாட்டு முறைப்படி மனைவி கையை ஆட்டுகிறாள். கணவனும் கையை உயர்த்துகிறான். இந்தப் படத்துக்கு அடியில் ‘Don’t Act, Labours Spoil it; Vote Conservative என்று இருந்ததாம்.

ஓட்டு நமக்குதான்!

ஒருமணி நேரம் நான் பேசி, இரண்டு மணிநேரம் நாவலர் பேசி, முக்கால் மணி நேரம் கருணாநிதி பேசி செய்கின்ற பிரச்சாரத்தைவிட ஒழுங்கான வீடு, நிம்மதியான வாழ்க்கை முதலியவற்றை அவர்கள் சித்தரித்துக் காட்டுவதைப்போல் நாம், குடிசை வீடு, நிம்மதியற்ற வாழ்க்கை முதலியவற்றைப் படம் போட்டு, அதன் கீழே, மீண்டும் காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் இதே கதிதான்‘ என்று சின்னச் சின்ன நோட்டீசில் இருந்து தெரு முழுவதும் அடையக்கூடிய சுவரொட்டிகள் வரையில் போட்டுக் காட்டினால் ஓட்டு நமக்குத்தான்!

இங்கிலாந்தை இளகச் செய்தது இன்னொரு சுவரொட்டி ஒரு தாய். அவருக்கு ஐந்த வயதுக் குழந்தை. அதைப் படம் போட்டு, அதன் கீழே – அந்தக் குழந்தை தாயைப் பார்த்துக் கேட்பதுபோல் ஆங்கிலத்தில் ‘Mummy, What is Black Market? ‘Ask Labour Party’ என்று எழுதி இருந்ததாம்.

நாமும் ஒரு தாயையும் – குழந்தையையும் படம்போட்டு குழந்தை தாயைப் பார்த்து, ‘அம்மா கள்ள மார்க்கெட் என்றால் என்ன?‘ ‘காங்கிரசைக் கேளு‘ என்பதைப்போல் போட்டுக் காட்டினால் வெற்றி நமக்குத்தான்.

என்னிடம் உள்ள சிறிய சிறயி நோட்டுப் புத்தகத்தில் 1000 சுவரொட்டிகளுக்கு வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் பங்குத்தொகையைச் செலுத்திவிட்டவுட்ன சுவரொட்டிகளைப் போடுவதற்காக உங்களிடம் வருவேன். அப்பொழுது நீங்கள் கொடுக்கின்ற அளவுக்குச் சுவரொட்டிகளை அச்சடித்து வெளியிடுவேன். என்னை நிர்க்கதியான நிலைமையில் விட்டுவிட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் கொடுத்த பணத்திற்குக் கணக்குக் கேளுங்கள் தருகிறேன்.

உங்கள் ஆறுதல்தான் காரணம்!

சென்ற தேர்தலில் ரூ.2 இலட்சம் தேர்தல் நிதியாகத் தந்தீர்கள். அதற்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் 15 சட்டமன்ற உறுப்பினர்களையும் தந்தேன்.

நாம் தேர்தலில் ஈடுபட்டதின் விளைவாக நான்கு மேயர்கைளப் பெற்றுத் தந்தேன்.

பெத்துநாய்க்கன்பேட்டையில் முன்பு. ‘கார்ப்பரேஷன் கவுன்சிலருக்காவது நிற்கலாம்‘ என்று நின்று பார்த்துத் தோற்னேன். ஆனால், இப்போதுத முன்னாள் மேயர் மூன்று பேரும, இந்நாள் மேயர் ஒருவரும் காஞ்சிபுரத்துக்கு வந்து எனக்காக ஓட்டுக் கேட்டார்கள். பாவம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ நான் கவுன்சிலர் எலக்ஷனிலே தோற்றவன் என்பது(

நமக்கு ஏற்பட்டிருக்கிற அரசியல் மாறுதல் காரணமாக காமராசர் 150 பேர் பட்டியலைத்தான் எடுத்துக்கொண்டு டெல்லிக்குப் போகமுடிகிறது – உங்கள் ஆறுதல்தான் இந்த அரசியல் மாறுதலுக்குக் காரணம். குறைந்த செலவில் நிறைந்த அரசியல் மாறுதலைச் செய்கிறோம்.

வெற்றிக்கு வழிகோலுங்கள்!

நீங்கள் ஒரு ரூபாய் தந்தால் ஒன்பது ரூபாய்ப் பலனைக் காட்டுகிறேன். ‘அண்ணா நான் அரை ரூபாய்தான் தருவேன்‘ என்றால். அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும்.

நீங்கள் மாவு கரைத்துக் கொடுங்கள் – பணியாரம் சுட்டுத் தருகிறேன்! நீங்கள் விறகுவெட்டிக் கொடுங்கள் நான் அடுப்பு மூட்டித் தருகிறேன். நீங்கள் பணம் தாருங்கள் வெற்றி பெற்றுத் தருகிறேன்.

நேற்ற நான் ஒரு கூட்டத்தில் பேசினேன். நாவலர் ஒர் இடத்தில் பேசினார். கருணாநிதி ஓரிடத்தில் பேசினார். இப்படிப் பேசிவிட்டு. ‘இன்று சிறப்புக் கூட்டத்திற்கு மக்கள் வருவார்களா?‘ என்று கருணாநிதியைக் கேட்டேன். ஆனால் இங்குவந்து பார்த்ததும் என்னை நானே கண்டித்துக் கொண்டேன். ‘அண்ணாதுரை உனக்குப் புத்தியில்லை. மக்களுடைய ஆர்வத்தை நீ அறியவில்லை‘ என்று.

எனவே, நீங்கள் நல்ல ஆர்வம் காட்டி உழைத்து வெற்றி பெற்றுத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 1, 2, 7.12.61)