அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஜனநாயகம் நிலைக்க
2

நம்முடைய பழம் புராணங்களில் எங்காவது நீங்கள் இந்தியா என்று பார்க்கின்றீர்களா? தேவார திருவாசகங்களில் இருக்கின்றதா இந்தியா என்று? திருப்புகழ் காவடிச் சிந்திலாவது பார்க்கின்றீர்களா? இல்லையே! அங்கே நீங்கள் கேட்பதெல்லாம், சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, அதற்கடுத்து பல்லவ நாடு, கொங்கு நாடு இப்படி நாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டீர்களே தவிர, இமயம் முதற்கொண்டு குமரி வரையிலே இருக்கின்றது இந்தியா என்று ஒரு நாடு என்பதாக என்றைய தினம் நமக்குத் தெரிந்தது? இந்த நாட்டைச் சுரண்டுவதற்கு என்றைய தினம் வெள்ளைக்காரன் வந்தானோ, அவன் தன்னுடைய நிர்வாகச் சவுகரியத்துக்காக, டெல்லியிலே கோட்டை கட்டி, பம்பாயிலே இன்னொரு கோட்டை கட்டி, சென்னையிலே வேறோர் கோட்டை கட்டி, கோட்டைக்குக் கோட்டை, கொடிமரத்துக்கு கொடி மரம், இரும்புச் சங்கிலி போட்டுக் கட்டினான். நீங்கள் ஏன் அடிமைச் சங்கிலிக்குள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? எதற்காக அந்த அடிமைச் சங்கிலியைப் பார்த்து இதுதான் அகில இந்தியா என்கிறீர்களா? உண்மையிலே நான் உங்களிடத்திலே வேண்டிக் கேட்டுக் கொள்ளுவேன், திருமண வீட்டிலே கொடுக்கின்ற சந்தனமானாலும், உடலிலே பூசி, அது நன்றாக உலர்ந்து, கொஞ்சம் அரிப்பு எடுக்க ஆரம்பித்தால் வீட்டிலே வந்து கழுவுகிறோமே, அது சந்தனம்-மணமிருக்கின்றது. அன்போடு கொடுத்தார்கள். உபசாரத்திற்காகக் கொடுத்தார்கள் என்றாலும் பூசி உலர்ந்து விட்டால் மறுபடியும் துடைத்து விடுகின்றோமே சந்தனத்தையே துடைக்கின்றோம் என்றால், வெள்ளைக்காரன் பூசிவைத்த அந்தச் சேற்றிலே இன்றைய தினம் நின்று கொண்டு “இது எவ்வளவு வாசனை தெரியுமா, இதிலேதான் எனக்குச் சமதர்ம மணம் கிடைக்கின்றது” என்று என்னுடைய கம்யூனிஸ்ட் நண்பர்கள் சொன்னால், நான் அவர்களுடைய நாசிக் குற்றத்தைப் பற்றிப் பரிதாபப்படுவதா, அல்லது அவர்களுக்குத் திடீரென்று சேற்றிலே தோன்றி விட்ட காதலைப்பற்றிப் பச்சாதாபப்படுவதா!

பழந்தமிழ்நாடு எப்படி எல்லாம் வாழ்ந்திருந்தது. இன்றைய தமிழ்நாடு எந்த வகையிலே இருக்கின்றதென்றால், ஏழெட்டாண்டுக் காலத்திற்கு முன்னால், நம்முடைய நாட்டிலே நல்ல மழை இல்லாமல், பஞ்சம் ஏற்பட்டு, வீட்டுக்கு வீடு பட்டினி படை எடுத்து, அரிசி கிசைக்காமல் இருந்த காலத்தில், இங்கே இருக்கின்ற மக்கள் எல்லாரும் டெல்லியிலே இருக்கின்ற ஒரு மந்திரி-உணவு மந்திரி இன்றைய தினம் கவர்னராக இருக்கின்றார்-முன்ஷி என்பவரைப் பார்த்து “ஐயா பட்டினியாக இருக்கின்றது” என்றார்கள். உடனே முன்ஷி திருப்பிக் கேட்டார் “எதனாலே பட்டினி? என்று, “அரிசி கிடைக்கவில்லை ஆகையினாலே” என்றார்கள். “அரிசி ஏன் கிடைக்கவில்லை” என்று கேட்டார். அந்த அரசியல் வித்தகர். “நெல் இல்லை ஆகையினாலே அரிசி இல்லை” என்றார்கள்.

“ஓ மறந்துப் போனேன், நெல் இல்லை அல்லவா? ஏன் நெல் இல்லை? என்றார். “விளைச்சல் இல்லை” என்றார்கள். “விளைச்சல் ஏன் இல்லை?” “மழை இல்லை.”

“ஓ, அப்படியானால் மரங்களை நடுங்கள். அது வானத்தை முட்டும். மேக மண்டலத்தைத் தாக்கும், மழை பொழியும், மழைக்குப் பிறகு பயிர் விளையும், அதற்குப் பிறகு நெல் கிடைக்கும், பிறகு அரிசி கிடைக்கும், சாப்பிடலாம்” என்றார்.

“ஐயா, இந்த வித்தையைத் தான் நாங்கள் செய்து கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு விறகுக்காகக் காடுகளை அழித்துவிட்டார்கள். பட்டாளத்துக்காரர்கள் காட்டுக்குக் காடு டேரா அடித்து, காடுகளை எல்லாம் அழித்துவிட்டார்கள். அதனாலே இந்த அளவுக்கு எங்களுக்குத் தொல்லை வந்தது. இப்போது எங்களுக்குப் பசியைப் போக்கிக்கொள்ள அரிசி தேவை என்றார்கள். பதில் என்ன சொன்னார் முன்ஷி?

“அரிசி தருகிறேன்” என்றாரா? இல்லை, “ஏன் நீங்கள் அரிசியே வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டார். “இல்லை, அதுதான் எங்களுக்குப் பழக்கம், சேரன் சோழன் காலத்திலே இருந்து இப்பொழுது இருக்கிற சின்னசாமி காலம் வரையில் நாங்கள் அரிசி சாப்பிட்டுத்தான் பழக்கம்” என்றார்கள். “இல்லை இல்லை அரிசி வேண்டாம் உங்களுக்கு பருத்திக் கொட்டை சாப்பிடுங்கள்” என்றாரே!

“பருத்திக் கொட்டை! எங்களையா சாப்பிடச் சொல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, முன்ஷி திருப்பிச் சொன்னார்; “நீங்கள் என்ன பருத்திக் கொட்டையைச் சாதாரணமாகக் கருதுகின்றீர்களா? பருத்திக் கொட்டையை வைத்துத்தானே பசுவை வளர்க்கிறோம்? பருத்திக் கொட்டை தின்பதால்தானே பசு நல்ல மதுரமான பால் தருகின்றது? ஆகையினால் மக்களே காங்கிரஸ் ஆட்சியில் ஆளுக்கு ஒரு பிடி பருத்திக்கொட்டை சாப்பிடுங்கள், பசுவைப் போல் நீங்கள் வளமாக இருப்பீர்கள்” என்று சொன்னவர் அல்லவா முன்ஷி?

“அகில இந்தியா அகில இந்தியா” என்று கருத்துக் கொண்டு ஒரு பிடி பருத்திக்கொட்டை சாப்பிடுங்கள் என்று சொன்ன ஒரு ஆட்சியை எப்போதுமே நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று கடமைப்பட்டிருந்தால், நீங்கள் கம்யூனிஸ்டுகளாக இருங்கள், நீங்கள் சோஷியலிஸ்டுகள் என்று பெருமை பேசிக்கொள்ளுங்கள். “அண்ணாத்துரை சார்ந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் பிற்போக்கானது” என்று சொல்லுங்கள். அதைப்பற்றி எல்லாம் நான் உங்களிடத்திலே வாதாடவில்லை, சண்டைக்கு வரவில்லை, கோபம் கூடக்கொள்ளவில்லை. நீங்கள் அறியாமல் சொல்லுகின்றீர்கள்; காலம் உங்களுக்குப் பாடம் புகட்டும், ஆகையினால் அதற்கு பதில் கூடச்சொல்லமாட்டேன். ஆனால் ஒருபிடி பருத்திக்கொட்டை சாப்பிடுங்கள் என்று சொன்ன ஒரு மந்திரியினுடைய ஆட்சியை மறுபடியும் ஏன் வரவேற்கிறீர்கள்?

நான் படித்த பிரஞ்சுப் புரட்சியின் வரலாற்றில், பௌலான் என்ற ஒரு கவர்னர், பசியாலும், பட்டினியாலும் தாக்கப்பட்ட மக்கள் அவனுடைய மாளிகையை நோக்கிப் படையெடுத்தார்கள். உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பௌலான். நல்ல ஆட்டு இறைச்சியையும் அதைவிட உருசி தருகின்ற வேறு பறவைகளின் இறைச்சியையும், கடித்துத் கடித்துத் தின்று கொண்டிருந்தான். ‘ஐயா பசி, ஐயா பசி’ என்று கதறினார்கள். உடனே வெளியில் எழுந்து வந்தாள். கூச்சல் போட்டுக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து “ஏன் இந்த கூச்சல்?” என்று கேட்டான். “பசி ஆகையினாலே கூவுகின்றோம்” என்று அவர்கள் சொன்னார்கள். பசித்தால் என்ன? போய் எதையாவது சாப்பிடுங்கள் என்றான். “ஐயா எங்களுக்கு ரொட்டி கிடைக்கவில்லை. ரொட்டி தட்டுவதற்கு கோதுமை கிடைக்கவில்லை” என்று அந்தப் பஞ்சத்தால் அடிபட்ட மக்கள் கதறினார்கள், பதறினார்கள், உடனே ஆணவம் பிடித்த பௌலான் சொன்னான்; அங்கே பக்கத்திலே இருந்த வைக்கோலைக் கையிலே எடுத்த “எதுவும் கிடைக்காவிட்டால் இதோ இந்த வைக்கோலைத் தின்னுங்கள்” என்று எதிரிலே போட்டுவிட்டு உள்ளே போனான்.

அதற்குப் பிறகு பிரான்சு நாட்டிலே புரட்சி நடந்தது. புரட்சி என்ற உடன் பட்டாளத்தில் இருந்தவர்கள் எல்லாம் புரட்சியிலே சேர்ந்தார்கள். மாடு தின்னும் வைக்கோலைமனிதனைத் தின்னச் சொன்னான் அல்லவா மமதையாளன்! பௌலான் அவன் ஒளிந்திருக்கின்ற மாளிகைக்குள்ளே போய் அவனைக் கர கர எனப்பிடித்து இழுத்து வந்து தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். வெட்டுப் பாறையின் மீது அவனை உட்காரவைத்து, தலையைச் சாய்த்து, வெட்டப் போகிற நேரத்தில் கூட்டத்தின் நடுவிலிருந்து ஒருவன் கதறினான் “வெட்டாதீர்கள், வெட்டாதீர்கள்” என்று உடனே அந்த மக்கள் கேட்டார்கள், “வெட்டாதே என்ற இவனைப்பற்றியா சொல்லுகின்றாய்? இவன் எவ்வளவு அக்ரமக்காரன் தெரியுமா? மனிதர்களைப் பார்த்து புல் தின்னச் சொன்னான். அப்படிப்பட்ட மாபாவியாயிற்றே, இவனை வெட்டாமல் விடலாமா? என்று. “ஒரு கணம் பொறுங்கள் என்றான் அவன். சொல்லிவிட்டு வேகமாக வெளியிலே ஓடினான். எங்கோ கிடந்த கொஞ்சம் வைக்கோலைக் கொண்டு வந்தான், பௌலானுடைய தலைமயிரைப் பிடித்தான், தூக்கினான்; வாயைத் திறந்தபோது அந்த வைக்கோலைத் திணித்து “இப்போது வெட்டுங்கள்” என்றான் வெட்டினார்கள்.

முன்ஷியை நாம் அப்படி எல்லாம் செய்யமாட்டோம், ஏன் என்றால், நாமெல்லாம் பலாத்காரத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். பலாத்காரத்திலே நம்பிக்கை வைத்திருந்த மக்கள் அப்படி எல்லாம் வெட்டுப் பாறையில் வைத்து, நாட்டு மக்களை அவமதித்தவனை வெட்டி தள்ளினார்கள். ஆனால் இந்த நாட்டிலே, ஆணவத்தையாவது நீங்கள் வெட்ட வேண்டாமா? அதிகார ஆதிக்கத்தையாவது வெட்ட வேண்டாமா? காங்கிரஸ் சர்வாதிகாரத்தையாவ வீழ்த்த வேண்டாமா? ஜனநாயகத்தை யாவது உண்டாக்க வேண்டாமா? இல்லையானால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை எதற்காக நமக்குத் தேர்தல்? ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வைப்பதனுடைய கருத்து என்ன? ஆடையிலே எப்படி நாளாக நாளாக அழுக்கு ஏறுமோ, அதைப்போல், அரசியலில் எந்தக் கட்சி அமர்ந்தாலும், நாளாக நாளாக கறை ஏறும். ஏறுகின்ற கறையை நாட்டுமக்கள் துடைத்து நீக்க வேண்டும். நீக்குவதற்குத்தானே உங்களிடத்திலே போடுகின்ற ஆடையைப் பார்த்து, எங்ககெங்கே கறை இருக்கிறது என்று கண்டு பிடித்து, எத்தகைய சவுக்காரம் போட்டால் போகும் என்று கண்டுபிடித்து, தோய்த்து எடுத்து மடித்தால் தான் உங்களுக்கு ஆட்சியிலே புதுமை கிடைக்குமே தவிர, பழைய கந்தையே எங்களுக்குப் போதும் என்று சொன்னால் நாட்டிலே எப்படிப் புதுமை கிடைக்கும்? கிடைத்த சோப்பு சன்லைட் சோப்போ, 501 ஓ ஏதோ ஒரு சோப்பு, இதை வைத்து நீங்கள் வெளுத்துக்காட்டுங்கள் என்று சொல்லுகின்றார் என்றுதான் பொருள். உபயோகித்துப் பாருங்களேன்! தமிழ்நாட்டு மக்கள் என்னை 20 வருஷமாகப் பயன்படுத்தினார்கள். காஞ்சிபுரத்து மக்கள் ஒரு 5 வருஷத்திற்கு உபயோகிக்க கூடாதா? தமிழ்நாட்டு மக்கள், நானும் நான் சார்ந்திருக்கின்ற கட்சியும் எதை எதை வெளுத்துவிடுமோ என்று பயந்து “அப்பா நீ எதை வேண்டுமானாலும் வெளுத்து விடு; வைகுந்தம் வரையிலே போகாதே, கைலாயம் வரையிலே போகாதே’ என“று தானே சொன்னார்கள்? இப்பொழுது கூட டாக்டர் சீனுவாசன் அதைத்தானே சொல்லுகின்றாராம் ஆஸ்திகத்து ஓட்டா நாஸ்திகத்துக்கு ஓட்டா? என்று.

அவர் ஏதோ ஆறு ஏழு கோயில்கள் கட்டியவரைப் போலவும் நான் பத்துப் பதினோரு கோயில்களை இடித்தவனை போலவும், அவர் ஏதோ காலையில் எழுந்த உடன் பட்டை பட்டையாக விபூதி பூசுகின்றவரைப் போலவும், என்னுடைய வீட்டில் பிள்ளையார் மாடமே இல்லாததைப் போலவும், அவர் ஏதோ கந்தர் அநுபூதியைப் படித்தவர் போலவும், எனக்கு அது எதுவும் தெரியாததைப் போலவும்; எனக்காவது நல்ல தமிழ் தெரியும் புராணம் தெரியும், அவருக்கு என்ன தமிழ் தெரியும்? தமிழ் தெரிந்தால் தானே புராணம் தெரியும்? தமிழ் தெரிந்தால்தானே தேவார திருவாசகம் தெரியும்? இதைக்கூட அறியாமல் இருக்கின்ற அவர் தேர்தல் காலத்திலே வந்து ஆஸ்திகத்துக்கு ஓட்டா, நாஸ்திகத்திற்கு ஓட்டா? என்று கேட்கிறார். அதற்கப்புறம் ஆஸ்திகம் தான் என்று சொன்னால் சைவத்துக்கு ஓட்டா வைணவத்துக்கு ஓட்டா என்பார். இல்லை ஐயா வைணவத்துக்கு தான் ஓட்டு என்றால், வடகலைக்கு ஓட்டா, தென்கலைக்கு ஓட்டா என்று கேட்பார். வடகலைக்குத்தான் என்றால் பட்டையாகப் போடுகிற வடகலைக்கா, மெல்லிசாகப் போடுகிற வடகலைக்கா என்பார்; இப்படிப்பட்ட அரசியல் எங்கே கொண்டு போய் நிறுத்தும்?

அதுவா அரசியலில் இன்றைய தினம் பிரச்சினை? காங்கிரசினுடைய சர்வாதிகாரம் நீடிக்க வேண்டுமா, சரிய வேண்டுமா அதுதான் உங்கள் முன்னாலே இருக்கிற பிரச்சினை. அந்தக் காங்கிரஸ் கட்சி சிங்கம் புலி கரடி போல் சட்டசபைக்கு வந்தாலும், நான் ஒருவன் போனாலும் போதும் சர்ச்சைப் போல ஆட்டி வைப்பேன் என்று திரு. தங்கவேலர் அவர்கள் உண்மையிலேயே என்னிடத்திலே இருக்கிற ஆசையினாலே சொன்னார். நான் சிங்கம் புலி கரடியை அடக்கக்கூடிய அளவுக்குத் திறமை படைத்தவன் அல்ல. ஆனால் காங்கிரசிலே உள்ளவர்கள், சிங்கமுமல்ல, புலியுமல்ல. ஏன் என்றால் இன்றைய தினம் வந்த “தினமணி” பத்திரிகையை நீங்கள் பார்த்தால், காமராஜரை இன்றைய தினம் ஆதரித்துக்கொண்டிருக்கும் பெரியார் இராமசாமி என்ன சொல்லுகிறார் என்பது தெரியும். பத்திரிகையைப் படித்துக் காட்டுகின்றேன்.

“காங்கிரஸ் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் கழுதை மாதிரி இருந்தது. போன தேர்தலில் அது பன்றியாயிற்று, இந்தத் தேர்தலுக்குப் பிறகு அது கட்டெறும்பாகி மறைந்து விடும்.”

இது காமராஜரை ஆதரிக்கின்ற பெரியாரின் பேச்சு!

பல பேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாருக்கும் எனக்கும் ஏதோ பகை வந்துவிட்டது. ஆகையினால் நடுவிலே புகுந்து விடலாம் என்ற காங்கிரஸ்காரர்கள் மனப்பால் குடிக்கின்றார்கள். நாங்கள் இரண்டு பேரும் எப்போது சந்திக்கின்றோம் என்று காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாது.
நான் சொல்லுவதிலிருந்து சந்தித்தப் பேசுகின்றோம் என்று அர்த்தமல்ல. இதுதான் சந்தித்துப் பேசுவது!

காங்கிரசைப்பற்றி அவர் கொண்டிருக்கின்ற கருத்து அது கழுதை, அது பன்றி, அது கட்டெறும்பு என்பது. அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அநுபவமும், பொது வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்திருக்கின்ற பெரும் பேறும் எனக்குக் கிடைக்காத காரணத்தினால், நான் அவ்வளவு கடுமையான வார்த்தைகள் உபயோகப்படுத்தாமல் காங்கிரஸ் சர்வாதிகாரம் செய்கிறது என்கிறேன்.
என்னால் சிங்கம் புலி கரடியை அடக்குவதற்கு முடிகிறதோ இல்லையோ, கட்டெறும்பு என்பது பெரியார் இராமசாமியின் அகராதிப்படி உண்மையானால், நீங்கள் என்னைச் சட்ட சபைக்கு அனுப்பினால் காலாலேயே தேய்த்து விடுவேன். ஏன் முடியாது? என்னுடைய காலுக்கு அந்த வலிவு கூடவா இல்லை?