அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஜனநாயகம் நிலைக்க
3

ஆகையினாலே காங்கிரஸ் ஏதோ மகத்தான முறையிலே இருக்கிறது என்று, நீங்கள் யாரும் தப்புக் கணக்குப் போடத் தேவை இல்லை. அது சீர்குலைந்து கொண்டே வருகின்றது. நாள் தவறாமல் நீங்கள் காங்கிரஸ் பத்திரிகைகளைப் பார்த்தால், இன்னின்னவர் விலகினார். இன்னின்னவர் விலகினார் என்ற பட்டியலைத்தான் பார்க்கமுடியும். பத்து வருஷத்துக்கு முன்னாலே நீங்கள் பார்த்தால் இன்னின்னவர் சேர்ந்தார்கள் என்று பட்டியல் இருக்கும். ஆறுமுகம் காங்கிரசில் சேர்ந்தார், அம்பலவாணர் காங்கிரசில் சேர்ந்தார் என்று இப்படி இருக்கும். இன்றைய தினம் வருவது அம்பலவாணரை நிற்கச் சொன்னார்கள் காங்கிரஸ் டிக்கெட்டில்; அவர் அடுத்த தபாலிலே கடிதம் எழுதி ‘எனக்கு வேண்டாம்’ என்றார். உடனே காமராஜர் அவருடைய வீட்டிற்குப் போய் ‘என்ன அம்பலவாணரே, ஏன் டிக்கட் வேண்டாம் என்றீர்கள்?’ என்று கேட்டால் நம்முடைய திரு.தங்கவேலர் சொன்னதைப் போல “ஐயா, உம்முடைய டிக்கெட் செல்லா டிக்கட், அது வேண்டாம், நான் வேறு டிக்கட் போட்டுக் கொள்கின்றேன் என்று அம்பலவாணர் சொல்லிவிட்டார் என்று இன்றைய தினம் பத்திரிகையில் வருகிறது என்ற அதற்குப் பொருள்?’

கட்டிய கணவன் ஆனாலும் அவனுக்குக் கருத்துக்கெட்டு, மூளைக்குழம்பிப் போய், வெறி பிடித்தவனாக இருந்தால், சொந்த மனைவிகூட அவன் கொஞ்சுவதற்கு அழைத்தால் பக்கத்து வீடு எதிர் வீட்டுக்கு ஓடி ஒளிந்து கொள்ளுவாளே தவிர, என்னைத் தொட்டு தாலி கட்டியவன் தானே, ஆசையோடு தானே அழைக்கின்றான், எவ்வளவு இன்பமாக முன்னாலெல்லாம் இருந்தோம், மறுபடியும் அப்படித்தான் இருப்போமே என்று எந்த மனைவியும் போகமாட்டாள். “ஐயோ, பைத்தியத்தில் இது ஒரு ரகம் போல இருக்கிறது, பார்வதி ஓடிவா, ஏகாம்பரம் இங்கே வா, கந்தப்பா கதவைத்தாள் போடு” என்று சொல்லிவிட்டு வெளியே போவாளே தவிர, பித்தம் பிடித்த கணவனிடத்திலே எந்த மனைவியும் சரசமாட மாட்டாள்.

இன்றைய தினம் காங்கிரசை விட்டு பலபேர் போகிறார்கள் என்றால், என்ன அர்த்தம் அதற்கு? தொட்டுத் தாலி கட்டிய கணவன் என்றாலும், அவனுக்குக் கொஞ்சம் மூளைக்கோளாறு ஏற்பட்டு விட்டது என்று பயந்து ஓடுகின்ற மனைவியைப் போல், வி.கே.இராமசாமி முதலியார் ஓடுகிறார், ஜெயராம ரெட்டியார் ஓடி விட்டார். வெங்கடகிருஷ்ண ரெட்டியார் ஓடினார், இப்படி நாள் தவறாமல் பல பேர் ஓடினார்கள்.

ஓடுகின்றார்கள், ஓடுகின்றார்கள் என்றால் போய் சும்மாவும் இல்லை. எப்படி ஒரு பைத்தியக்காரனுடைய பிடியிலே இருந்து தப்பித்துக்கொண்டு வந்தால், தொலைவிலே இருந்து கொண்டு, அவன் மற்றவர்கள் மேலே பாயாமல் இருப்பதற்குப் பைத்தியக்காரனைக் கல்லாலே அடிப்பார்களோ, அப்படி ஜெயராமரெட்டியாரும், வெங்கிடகிருஷ்ண ரெட்டியாரும், வி.கே.இராமசாமி முதலியாரும் மற்றவர்களும், அந்தப் பிடியிலே இருந்து தப்பித்துக் கொண்டு வெளியே வந்து கல்லை எடுத்து அந்தப்பைத்தியத்தை அடிப்பது போல் அந்தக் காங்கிரசையே எதிர்க்கிறார்கள்.

இந்த வகையிலே சீர்குலைந்து கொண்டு வருகிற காங்கிரஸ் கட்சியை நீங்கள் மறுபடியும் மறுபடியும் பீடத்திலே அமர்த்தினால் எப்படி நமக்கு நியாயம் கிடைக்கும்? எங்கிருந்து நமக்கு நீதி கிடைக்கும்? அப்படியானால் காங்கிரஸ் கட்சியினிடத்திலே இருக்கிற அதிகாரம் சாதாரணமானதா என்றால், டெல்லியிலே அவர்கள் ஆட்சி நடத்துகின்ற வரையில், டெல்லிக்கும் சென்னைக்கும் சங்கிலி இருக்கிற வரையில், அவர்களிடத்திலே குவிந்திருக்கிற அதிகாரம் அமோகமானது. நமக்கு இருக்கின்ற சர்க்கார் ஒன்றல்ல, இரண்டு சர்க்கார் நம்மை ஆளுகின்றது. அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று படே சர்க்கார், பெரிய சர்க்கார் டெல்லியிலே இருப்பது. மற்றொன்று சோட்டா சர்க்கார், சின்ன சர்க்கார், சென்னையிலே இருப்பது. சென்னையிலே இருக்கிற சர்க்காருக்குத் தலைவர் காமராஜர், டெல்லியிலே இருக்கிற சர்க்காருக்குத் தலைவர் ஜவகர்லால் நேரு.

காமராஜர் சர்க்காருக்கு இருக்கிற வேலை நம்முடைய அடிமடியிலே கையைப் போட்டு வரியை வாங்குவது. டெல்லியிலே இருக்கிற சர்க்காருக்கு வேலை காமராஜர் கையைத் தட்டிப் பறித்து அந்தப் பணத்தை பிடுங்கிக் கொண்டு போவது. இப்படி, சென்னையும் பம்பாயும், ஒரிசாவும், வங்காளமும், மற்றும் இருக்கின்ற மாகாணங்களை எல்லாம் சேர்ந்து ஆண்டு ஒன்றுக்கு டெல்லிக்குக் கொட்டி அழுகின்ற பணம் 400 கோடி ரூபாய். இந்த 400 கோடி ரூபாய் பணத்தில் 208 கோடி ரூபாய் பட்டாளத்திற்குச் செலவிடுகின்றார்கள். மேலே உட்கார்ந்து கொண்டிருக்கின்ற டெல்லியின் புதிய பாதுஷாக்கள்.

ஆண்டு ஒன்றுக்கு 208 கோடி ரூபாய் செலவழிக்கின்ற இவர்கள், ஆப்கானிஸ்தானத்தைப் பிடித்தார்களா? பாரசீகத்தின் பேரிலே படை எடுத்தார்களா? பர்மா நம்முடைய காலைத் தொட்டுக் கும்பிடுகின்றதா? எந்த நாட்டைப் புதிதாகப் பிடித்தார்கள் என்றால், காஷ்மீர் நாட்டை ஒன்றரை வருஷம் சண்டை போட்டு, பாதியைப் பிடித்தார்கள், பாதி பாகிஸ்தானிடம் இருக்கிறது என்று அவர்களே வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்ளுகின்றார்கள்.

208 கோடி ரூபாய் பட்டாளத்திற்குச் செலவழிப்பானேன்? பட்டாளத்திற்குச் செலவழிக்கின்ற அந்தப் பணத்தைப் பாதைகள் போடுவதற்குச் செலவழித்தால், நேற்றைய தினம் சென்றிருந்தோம் மோட்டூர் என்ற ஒரு கிராமத்திற்கு; அந்த மோட்டூர் என்ற கிராமத்திற்கும் பக்கத்தில் இருக்கிற ஒழவூர் என்ற கிராமத்திற்கும் ஒரு பாதை இல்லை. “எப்படி ஐயா ஒழவூருக்குப் போவீர்கள்?” என்று கேட்டால், மோட்டூரிலே உள்ளவர்கள் சொன்னார்கள், கழுத்தளவு தண்ணீரிலே இறங்கித்தான் நாங்கள் போக வேண்டும் என்று எவ்வளவு பரிதாபகரமான நிலைமை?

நான் உங்களிடத்திலே பழைய தமிழகத்தைச் சொன்னேன். இங்கிருந்து பாய் மரக்கப்பலிலே, முத்து, பவழம், சந்தனம், அகில், பட்டுப்பட்டாடை இவைகளை ஏற்றிக்கொண்டு போன அந்தத் தமிழன் எங்கே? கழுத்தளவு தண்ணீரிலே இறங்கி நடந்தால்தான் மோட்டூரிலே இருந்து ஒழவூருக்குப் போக முடியும் என்றிருக்கின்ற இன்றைய தமிழன் எங்கே?

208 கோடி ரூபாயைப் பட்டாளத்திற்குச் செலவழித்துவிட்டால் பாதை போடுவதற்குப் பணம் எங்கே? கல்லூரி கட்டுவதற்குக் காசு ஏது? சட்டியிலே இருந்தால் அல்லாவ அகப்பையிலே வரும் என்பதைப் போல், மா கரைத்து வைத்திருக்கின்ற சட்டியிலே இருந்து வேறு யாருக்காவது மாவைக் கொடுத்துவிட்டால், மாப்பிள்ளைக்குப் பணியாரம் சுட வேண்டுமானால், மா எங்கிருந்து கிடைக்கும்? திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கின்றது பணத்தை டெல்லிக்கு அனுப்பாதே என்று.

வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் கொடுக்காதே-வேண்டாம். காங்கிரஸ்காரரிடத்திலேயே கொடு, கம்யூனிஸ்ட்காரர்களுக்கு அதிகமான அரிப்பு இருக்கிறதா, அவர்களிடத்திலே கொடு, சோஷியலிஸ்டுகளிடத்திலே கொடு. சைவ சித்தாந்த சமாஜத்திலே கொடு, எங்கு வேண்டுமானாலும் கொடு, டெல்லியிலே கொடுத்துவிட்டுப் பிறகு காவடி தூக்காதே. டெல்லியிலே கொடுத்துவிட்டு நம்முடைய நாட்டு மக்களைப் பஞ்சத்திலும் பட்டினியிலும் போடாதே என்று தான் திராவிட முன்னேற்றக் கழகம் கேட்கிறது. இது தேசியத்தை எந்த வகையில் குத்துகிறது? குடைகிறது?

இதனால் கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கு கோபம் வருவானேன். மக்களுக்கு இது பிடிக்கின்றது என்பதாலே கோபம் வருகிறதே தவிர, வேறு எதனாலே கோபம் வருகின்றது?

ஒரு பக்கத்திலே சுந்தராம்பாள் பாட்டு நடக்கின்றபோது தெருக்கோடி பஜனைக் கோயிலிலே உட்கார்ந்து ஓடிந்து போன தாளத்தை வைத்துக்கொண்டு, பிய்ந்து போன மிருதங்கத்தைத் தட்டிக்கொண்டு கட்டிப் போன தொண்டையிலே பாடுகின்றவன், “யாரைய்யா இப்படி ஏதோ கத்திக்கொண்டிருக்கின்றார்கள், நம்ம பஜனை கெட்டுரிடுகின்றதே” என்றுதான் சொல்லுவன்.
சுந்தரம்மாள் பாட்டுக்கும், இவனுடைய ஓட்டை மிருதங்கத்திற்கும் ஒடிந்து போன தாளத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாட்டு மக்களுக்கு என்னுடைய பாஷை புரிந்து விட்டது. நாட்டு மக்களுக்கு திராவிட நாடு என்பதிலே வேட்கை பிறந்து விட்டது. அதை இனி யாராலும் அணைக்க முடியாது.

நாட்டு மக்கள் அந்தப் பகுதியிலே திரும்புகின்றார்கள் என்ற உடனே, கை தட்டி, கம்யூனிஸ்டுகள் “அங்கே போகாதே அது ஆபத்தான பாதை, என் பின்னோடு வா, என் பின்னோடு வா” என்று அழைக்கின்றார்கள். எங்கே ஐயா? என்று கேட்டால் டெல்லி வரையிலே போகலாம் என்கிறார்கள்.
நான் தமிழ்நாட்டு மக்களை, கொல்லிமலையைப் பாருங்கள், குடகு மலையைப் பாருங்கள், கொச்சி மலையைப் பாருங்கள், பாலாற்றைப் பாருங்கள், காவேரியைப் பாருங்கள், வைகையைப் பாருங்கள், தாமிரபணியைப் பாருங்கள் என்கிறேன். காங்கிரஸ்காரர்களே, தேவலோகத்திலே ஓடுகின்ற ஆற்றைப் பாருங்கள் என்கிறார்கள். கம்யூனிஸ்டுகளோ கங்கைக்கரைக்கே வா என்று அழைக்கின்றார்கள். காலிலே வலிவு இருக்கின்றதா? கருத்து அதற்கு இடம் தருமா?

ஆகையினால்தான் பழந்தமிழகம் எப்படி டெல்லியின் பிடிக்குக் கட்டுப்படாமல், எந்த ஆதிகத்திற்கும் உட்படாமல், யாரையும் ஆதிக்கத்திற்குக் கொண்டு வராமல், மற்றவர்களை மதித்து மற்றவர்களாலே மதிக்கப்பட்டு, மற்றவர்களை நண்பர்களாகப் பெற்று, மற்றவர்களுக்கு அறிவை ஊட்டி, மற்றவர்களிடமிருந்து அறிவைப் பெற்றுக்கொண்டு, மற்றவர்களிடத்திலே வியாபாரம் நடத்த இடம் கொடுத்து, எப்படி உரிமை மிக்க நாடாக வாழ்ந்ததோ, அதைப்போல வாழ்வதற்கு வழி இருக்கிறது, வகை இருக்கிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது.

இதை எடுத்துச்சொல்வதற்கு ஏற்ற இடங்கள் டெல்லி சட்டசபையும், சென்னை சட்டசபையும்.

காங்கிரசனாலும், கம்யூனிஸ்ட் ஆனாலும், சோஷியலிஸ்ட் ஆனாலும் வடநாடு, தென்னாடு என்று பேச முடியாது. வடநாடு, தென்னாடு என்று பேசுவதால் எங்களுக்கேதாவது இலாபமா? அதையும் நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

கம்யூனிஸ்ட் நண்பர்கள் பேசுகின்றனர். “நாங்கள் அல்லவா நெசவாளர்களுக்கு நண்பர்கள்” என்று.
நெசவாளர்கள் பட்டினி கிடந்த நேரத்திலே, தொட்டிலிலே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை தாயினுடைய மார்பகத்திலே பால் இல்லாத காரணத்தினாலே, மார்பு விம்மிச் சாகின்ற நிலையிலே இருக்கின்ற குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டு கணவன் எங்கே எங்கே என்று அந்தத் தாய் தேடிக்கொண்டு தெருக்கோடியிலே போய், “புளிய மரத்திலே தூக்குப் போட்டுக் கொண்டு தொங்குகின்றவன் உன் கணவனா பார்” என்று பிறர் சொல்லக் கேட்டு, அங்கே போய்ப் பார்த்து அழுது கொண்டிருந்தார்களே, அந்தக் காலத்திலே கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அந்தக் காலத்திலே கைத்தறி நெசவாளர்களுக்குச் சாதகமாக எந்தக் காரியத்திலே ஈடுபட்டிருந்தார்கள்? தத்துவம் பேசுகின்றார்கள்; அறிகின்றேனே சந்தா வசூலிக்கின்றார்கள்; கணக்கும் தெரியும், கைத்தறி நெசுவாளர்கள் பட்டினி கிடந்த நேரத்தில் அவனுடைய நூலுக்கும் சேலைக்கும், வேட்டிக்கும் கிராக்கி இல்லாதிருந்த நேரத்தில் மலைமலையாகக் கைத்தறி ஆடைகள் தேங்கி நின்ற காலத்தில் நாங்கள் அல்லவா தோளின் மேலே மூட்டையைப் போட்டக் கொண்டு திரிந்தோம், திருச்சியிலும், தஞ்சையிலும் பிற இடங்களிலும் அழகேசன் கூட போன கூட்டத்திலே சொன்னாராம், “என்ன அண்ணாத்துரை 51 ரூபாய்க்கு விற்று விட்டால் துணி தீர்ந்து விட்டதா?” என்று. அண்ணாத்துரையாவது 51 ரூபாய்க்கு விற்றான். அழகேசன் எவ்வளவுக்கு விற்றார்? கம்யூனிஸ்ட்டுகள் எந்த அளவுக்கு விற்றார்கள்?

நெசவுத்தொழில் வளமாக இருக்கின்ற நேரத்திலே வருவார்கள். ஆனால் அவனுடைய நெற்றி வியர்வையும், அவனுடைய கண்ணீரும் ஒன்றாகக் கலந்து கீழே விழுந்ததே, அந்த நேரத்திலே எங்கே போய் இருந்தார்கள்?

நான் திருச்சியிலே விற்றபோது, கம்யூனிஸ்ட் நண்பர் இராமமூர்த்தி தஞ்சையில் விற்றிருக்கலாம் அல்லவா? ஜீவானந்தம் சென்னையிலே விற்றிருக்கலாம் அல்லவா?

கருணாநிதி நாகப்பட்டிணத்தில் விற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மாயாண்டி பாரதி மதுரையிலே விற்றிருக்கலாம் அல்லவா? உங்களுடைய தோள் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை மட்டும் தானா ஏந்த வேண்டிய தோள்? எங்களுடைய கண்களுக்கு மட்டும்தானா கைத்தறி நெசவாளர்களுடைய துயரம் தெரிய வேண்டும்? உங்களுடைய கண்களுக்கு இது எதுவும் தெரியாமல், அகில இந்தியா மட்டும்தானா தெரிய வேண்டும்?

என்ன கண் ஐயா அப்படிப்பட்ட கண்? என்ன தோள் ஐயா அப்படிப்பட்ட தோள்? எந்த வாயினாலே இன்றைய தினம் சொல்லுகின்றீர்கள் அண்ணாத்துரைக்கும் நெசவாளருக்கும் என்ன சம்பந்தம் என்று?

அண்ணாத்துரைக்கும் நெசவாளருக்கும் என்ன சம்பந்தம் என்பது மாத்திரமல்ல. அண்ணாத்துரைக்கும் நெசவாளிக்கும் இருக்கும் சம்பந்தத்தின் அளவுக்கு நெசவாளிக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் எப்பொழுது சம்பந்தம் இருந்தது?

பத்து வருஷத்துக்கு முன்னாலே என்று கருதுகின்றேன். கைத்தறி நெசவளாளர்கள் லுங்கிகளை நெய்து மலைமலையாகக் குவித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். நம்முடைய ஊரிலே மௌலான கம்பனி ஒன்று புதிதாக ஆரம்பித்த நேரம். இப்போது காங்கிரசிலே இருக்கிறார் அல்லவா, நமது நகரப் பிரமுகர் செங்கல்வராய நாயுடு அவர்கள்; என்னிடத்திலே தான் வந்தார்?
“அண்ணாத்துரை! லுங்கி எல்லாம் தேங்கி விட்டது, பர்மாவுக்கு அனுப்ப மாட்டேன் என்கிறார்கள், சிலோனுக்கு அனுப்ப மாட்டேன் என்கிறார்கள், வா கூட்டம் போடலாம். மாநாடு நடத்தலாம்” என்றார்.

பெரிய காஞ்சிபுரம் வட்டாரத்திலே பெரிய மாநாடு போட்டோம். நெசவாளர்களை எல்லாம் ஒன்றாகத் திரட்டினோம். அதற்கேற்ற வசதி கிடைத்தது. லுங்கிகள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆயின. நெசவாளர் துயரம் துடைக்கப்பட்டது.

அப்போது எங்கே போயிருந்தார்கள் கம்யூனிஸ்டுகள்? அப்போது என்ன செய்து கொண்டிருந்தார் டாக்டர் சீனுவாசன்? லுங்கி என்றால் என்ன? என்று கேட்டிருப்பார் டாக்டர் சீனுவாசன். அவருக்கு என்ன தெரியும் லுங்கி என்றால்! கம்யூனிஸ்டுகள் சொல்லி இருப்பார்கள். ‘லுங்கிக்கு ஏற்பட்டால் போதுமா? பட்டு ஜவுளிக்கு இருக்கிறது” என்று இதிலே இருந்து இன்னொரு பக்கம் தாவி இருப்பார்கள்.

யார் அன்றைய தினம் வந்தவர்கள்? தங்கவேலர் அன்றைய தினம் தேவைப்பட்டார். அண்ணாத்துரை அன்றைய தினம் அழைக்கப்பட்டான். அழைத்துக் கொண்டு போன செங்கல்வராய நாயுடு எங்களை இங்கேயே இருக்கச் சொல்லி விட்டு, “நான் இன்னொரு மார்க்கெட்டுக்குப் போய் வருகிறேன்” என்று காங்கிரஸ் மார்க்கெட்டுக்குப் போயிருக்கிறாரே தவிர, நெசவாளிக்கும் நம்முடைய கழகத்துக்கும் இருப்பதைப் போன்ற தொடர்பு வேறு எந்தக் கட்சிக்கு உண்டு?”

ஆகையினாலே நெசவாளத் தோழர்களே, உங்களுக்கு எந்தக் கட்சி நட்புக் கட்சி, என்பதைப் பற்றி நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

எந்தக் கட்சியும் இல்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள்... நமக்கு இருப்பதெல்லாம் வேலும“ மயிலும் துணை, நூலும் தாரும் துணை, அவ்வளவுதான் என்று நீங்கள் தீர்மானிப்பதானாலும் சரி. நெசவாளிக்கு உள்ள கஷ்டம் நிரந்தரமாக போக வேண்டுமானால் அதற்கு என்ன வழி? நெசவாளி நெய்து குவித்துக் கொண்டே இருக்கின்ற நேரத்தில் வடநாட்டிலே இருந்து ஆலை ஜவுளிகள் இறங்கிக் கொண்டே இருந்தால், என்றைய தினமும் நெசவாளியினுடைய குறை தீராது. மழை பெய்து கொண்டே இருக்கும் போது கூரையை மாற்றிக் கொண்டே இருந்தால் என்ன பயன்? குடையிலே ஓட்டை இருந்தால், மழைக்கு அதைப்பிடித்துக் கொண்டே போனால் என்ன? அதைப் போல வடநாட்டு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஜவுளி தினுசுகள், ஆமதாபாத், கான்பூர், ஷோலாப்பூர், இப்படிப்பட்ட இடங்களில் நெய்யப்படுகின்ற வேட்டிகளும், சேலைகளும், தமிழ்நாட்டு மார்க்கெட்டில் கொண்டு வந்து குவிக்கப்படுகின்ற வரையில், இங்கே நெய்யப்படுகின்ற வேட்டிகளுக்கும் சேலைகளுக்கும் எந்த விதத்திலும் ஆபத்து வரும்.

புற்றின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தால் ஒரு 5 நிமிடம் பாம்பு கடிக்காமலிருக்கலாம். ஏன் என்றால் அந்த நேரத்தில் பாம்பு இரை தேடுவதற்கு வேறு பக்கத்திலே போயிருக்கக்கூடும். எப்படியும் மறுபடியும் அந்தப் புற்றுக்குள்ளே பாம்பு வரும். புற்றின் மீது உட்கார்ந“திருக்கின்ற வரையில் பாம்புக்கடி என்ற ஆபத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

அதைப்போல, வடநாட்டு ஆலைத்தொழில் தமிழ்நாட்டு நெசவுத் தொழிலுக்குப் போட்டியாக இருக்கிறவரையில், நெசவாளர்களுடைய அல்லது தீராது, ஆனால் என்ன இருந்தால் தீரும்? திராவிட நாடு என்ற எல்லைக்கோடு கிடைத்து விட்டால் தீரும்.

திராவிட நாடு என்ற எல்லைக்கோடு கிடைத்தால், எப்படித் தீரும்? திராவிட நாட்டுச் சர்க்கார் உட்காருவார்கள். “நம்முடைய நாட்லே எத்தனை இலட்சம் கைத்தறி நெசவாளர்கள்? அவர்கள் நெய்கிற ரகங்கள் என்னென்ன? நாற்பதா? அறுபதா? எண்பதா? கரைபோட்ட வேட்டியா, கரை போட்ட சேலையா? இந்த ரகங்களைக் குறித்து இந்த ரகங்களை மில்லிலே இங்கேயும் தயாரிக்கக்கூடாது. வெளியிலே தயாரித்தாலும் உள்ளே வரக்கூடாது” என்று ஒரு சின்ன சட்டம் போட்டால் தீரும். பிறகு அல்லல் எப்படி வரும்.

மலேரியாவுக்கு ஒரே ஒரு கொய்னா மாத்திரை சாப்பிடுவதைப் போல், காலராவுக்கு ஒரே ஒரு ஊசி போட்டுக்கொள்வதைப் போல், நெசவாளியினுடைய அல்லல் தீருவதற்கு இந்த மாமருந்து தவிர வேறு மருந்திருந்தால் காட்டுங்கள். வேறு யாராவது சித்த வைத்தியர் சூரணம் தந்தால் தயவு செய்து அந்தப் பொட்டலத்தைப் பிரித்துக் காட்டுங்கள். இராசகோபாலாச்சாரி யாரே இதைத்தானே சொன்னார், முதல் மந்திரியாக இருந்த நேரத்தில்? வடநாட்டு ஆலை முதலாளிகளைக் கேட்டுக் கொண்டார். டெல்லி சர்க்காரைக் கேட்டுக் கொண்டார் “எங்களுடைய நாட்டில் தயாரிக்கப்படுகின்ற கைத்தறி ரகங்களுக்குப் போட்டியாக வடநாட்டிலிருந்து துணிகள் வராமல் தடுத்துவிடுங்கள்” என்று கேட்டார். இப்பொழுது இருக்கிறாரே நிமியமைச்சர் கிருஷ்ணமாச்சாரி, இவர்தான் அப்போது அங்கே தொழில் அமைச்சராக இருந்தார். அவர் சொன்னார், “என்ன பைத்தியக்காரத்தனமான கோரிக்கை? எப்படி என்னாலே அவைகளைத் தடுக்க முடியும்?” என்றார், அவ்வளவுதான். வெளிப்படையாகச் சொன்னார். உள்ளூர அவருடைய மனது என்ன சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் “இது என்ன என்னை இந்தக்காரியத்தைச் செய்ய சொல்லுகின்றார்களே, ஆலை முதலாளிகளைத் தடுத்து விட்டால், டாட்டா என்னைத் தண்டிப்பாரே, பிர்லா என்னிடத்திலே பேச மாட்டாரே. பஜாஜ் எனக்கு விருந்தளிக்க மாட்டாரே” என்று அவர் மனதிற்குள் எண்ணிக்கொண்டு வடநாட்டு ஜவுளிகள் இங்கே இறங்குவதற்கு வழி செய்து வைத்தார்.

இப்போது திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பி வைத்தால் அங்கே உட்கார்ந்து கொண்டு தட்டிக்கேட்க முடியும்.

எங்களாலே என்ன செய்ய முடியும் என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டதாக நான் கேள்விப்பட்டேன். அந்தச் சந்தேகம் அவர்களுக்கு வந்ததைப் பற்றி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் என்றால் எங்களாலே என்ன செய்ய முடியும் என்பது இப்போதே அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

எங்களாலே அவர்களை எதிர்க்க முடிகிறது. பொப்பியால் எதிர்க்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டார், பித்தாபுரத்தால் எதிர்கக் முடியவில்லை, ஓய்ந்து விட்டார், விஜயநகரத்தால் எதிர்க்க முடியவில்லை, உட்கார்ந்து விட்டார், வெங்கடகிரியால் எதிர்க்க முடியவில்லை, உட்கார்ந்து கொண்டார், இராமநாதபுரத்தால் எதிர்க்க முடியவில்லை, சரண்புகுந்து விட்டார். ராஜா சர் குடும்பத்தாரால் எதிர்க்க முடியவில்லை. இரவல் டிக்கட் வாங்கிக்கொண்டார்கள். ஆனால் இந்த அன்னக் காவடிகள் இன்றைய தினம் உங்களை எதிர்க்கிறார்கள். அதிலே இருந்து புரிந்து கொள்ளுங்கள், என்ன செய்ய முடியும் என்று! என்ன செய்ய முடியும் என்று கேட்டால், உள்ளே அனுப்பினால், ஆண்டவன் அருளாலும், உங்கள் ஆசீர்வாதத்தாலும் அவர்கள் எண்ணம் நிறைவேறாமல், நீங்கள் என்னை உள்ளே அனுப்புகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நாங்கள் தட்டிக் கேட்ட பிறகுதான் டெல்லி தர்பாருக்கே ஒரு புது பாஷை தெரியும். இதுவரையிலே டெல்லி தர்பாருக்குத் தெரிகின்ற பாஷை எல்லாம், உங்களுடைய உண்மையுள்ள ஊழியன் என்பதுதான். நாங்கள் போனால் தான் டெல்லி தர்பாருக்கு தெரியும், உன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களல்ல நாங்கள் உங்களுடைய மதிப்புக்குரிய தோழர்கள் என்று சொல்லுவோம். உங்களுக்கு எஜமானார்கள் என்ன மமதையோடு பேசமாட்டோம். உங்களுடைய மதிப்புக்குரிய தோழர்கள் என்று சொல்லுவோம். ஆண்டவனையே தோழன் என்றல்லவா நாயன்மார்கள் அழைத்தார்கள் அதை விடவா இங்கே இருக்கிற காங்கிரஸ்காரர்களுக்கு நேரு விடத்திலே பக்தி இருக்க வேண்டும்? ஆகையினாலே டெல்லி தர்பாரைத் தட்டிக் கேட்பதற்கு ஏற்ற உள்ளத் திடமும், தத்துவத்திடமும் கொள்கை உறுதியும் படைத்தவர்களை நீங்கள் அங்கே அனுப்பினால்தான் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், நமக்கு கிடைக்க வேண்டிய பங்குத் தொகைகள் நமக்குக் கிடைக்கும்.

அப்படியானால் என்ன பங்கு என்று நீங்கள் கேட்கலாம். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6000 கோடி ரூபாய் செலவு செய்யப் போவதாக, டெல்லியிலே உள்ளவர்கள் அறிவிக்கின்றார்கள். உங்களுக்கும் எனக்கும் 6000 கோடி என்ற சொன்னவுடனே ஏதோ சொல்தான் புரிகின்றதே தவிர, அதனுடைய விவரம் புரியாது. எனக்கு ஏறக்குறைய 46 வயது ஆகிறது. நான் மொத்தமாக ஒரு இலட்சரூபாயைப் பார்த்ததில்லை. தங்கவேலரவர்கள் பார்த்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். அவர் பார்த்தாரோ இல்லையோ, நம்முடைய நாவலர் நெடுஞ்செழியன் பார்த்தார், இலட்ச ரூபாயை. அவருடைய வீட்டுப் பணமல்ல-நம்முடைய மாந‘ல மாநாட்டு வசூல் பணத்தைப் போட்டு ஒரு நாள் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “இலட்சரூபாய் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று. இந்தப் பாழாய்ப்போன கணவருக்கு அந்தப் பாக்கியம் கூடக்கிடைக்கவில்லை. நான் அதைக்கூடப் பார்க்க வில்லை. நான் வேறு வேலையில் ஈடுபட்டிருந்தேன். இப்படி பல இலட்சங்கள் சேர்ந்தால் ஒருகோடி. கோடிக்கு நம்முடைய நாட்டிலே என்ன மதிப்பு வைத்திருக்கின்றார்கள் என்றால்; யாரிடத்திலாவது இலட்ச ரூபாய் இருந்தால் அவனை ராஜா ஆக்கி விடுவார்கள். அவனை இலட்சாதிபதி என்பார்கள். கோடி ரூபாய் இருந்தால் ராஜாகூட அல்ல, ஈஸ்வரனே ஆக்குவார்கள், ‘அவருக்கென்ன கோடீஸ்வரன்’ என்பார்கள். அப்படி இருக்கிற ஈஸ்வரன் 6000 ஈஸ்வரன் வரப்போகிறான் இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டத்தில்.

(காஞ்சிபுரம் 5-2-1957)