அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கேட்பது பிரிவினையல்ல!
1

சட்டமனற்த்தில் அண்ணா அவர்கள் மாநில மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் சுருககம் இங்குத் தரப்படுகிறது.

“இம்மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் குறிக்கப்பட்டிருக்கிற பல்வேறு திட்டங்களை இம்மன்றம் ஒப்புக் கொள்ளுகிறது – ஏற்றுக் கொள்ளுகிறது என்றும் தி-கிருஷ்ணசாமி அவர்கள் கட்சியின் சார்பில் ்கொடுக்கப்பட்ட திருத்தமும், அதற்கு எதிர்க்கட்சிகள் அளித்துள்ள திருத்தங்களும் தற்போது விவாதத்தில் இருக்கின்றன.

மாற்றியமைக்க இயலுமா?

விவாதத்தில் இருக்கின்ற திட்டத்தை, நாம் விருமபி ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா என்பதை நிதி அமைச்சரைக் கேட்கிறேன். ஏனெனில் தற்போது விவாதத்தில் இருக்கிற இத்திட்டம் குறித்து ஏற்கனவே ஒருமுறை விவாதித்து, ஏற்கப்பட்டு இந்த ஆண்டு, ஏப்ரல் திங்களிலிருந்து நடைமுறைக்கக் கொண்டுவரப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இப்படி நடைமுறையில் செயல்பட்டு வருகின்ற திட்டத்தை, இப்போதைய விவாதத்தின் மூலம் மாற்றியமைக்க முடியுமா என்பது ஐயத்திற்குரியதாகும்.

ஜனநாயகப் பண்பை அவமதித்ததாகாதா?

ஏற்கனவே இம்மன்றத்தில், திட்டச் செலவு ரூ.400 கோடி என்று தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது. அப்பொழுது நிதியமைச்சர் பேசிய பேச்சு மட்டுமல்ல – அவருடைய மகபாவம் கூட எனக்கு நினைவுக்கு வருகிறது. தேர்வுக்குப் போகிற பள்ளி மாணவனை, வீட்டிலுள்ளவர்கள் நல்ல சகுனம் பார்த்து அனுப்பி வைப்பதைப்போல், நாமும், நிதியமைச்சரை, ‘சென்று வாருங்கள் வென்று வாருங்கள்’ என்று கூறி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். அப்படி அனுப்பி வைத்த பின்னர் நிதியமைச்சர் திட்டத்தை ரூ.400 கோடியிலிருந்து ரூ.261 கோடியாகக் குறைத்துக் கொண்டு வந்தார்.

இம்மன்றத்திலே கூடி விவாதித்துத் திட்டத்தை இறுதியாகத் தீர்மானித்துக் குறித்து அனுப்பிய தொகையை நிதி அமைச்சர் ரூ.291 கோடியாகக் குறைத்துக் கொண்டு வந்தது எந்த அதிகாரத்தின் அடிப்படையில் என்பதைச் சட்டப் பிரச்சினையாகவே கேட்கிறேன். இம்மன்றத்தின் அதிகாரத்தைப் பெறாமலேயே திட்டத் தொகையை ர.291 கோடியாகக் குறைத்துக் கொண்டு வந்தது சட்டமன்றத்தின் உரிமையையும், சனநாயகப் பண்பையும் அவமதித்ததாகாதா?

கேட்கவில்லையே, அமைச்சர்!

நிதியமைச்சர், திட்டக்குழு அதிகாரம் படைத்த ‘குழு அல்ல‘ என்று கூறினாலும, அப்படி அக்குழு இல்லமல் இருந்திருக்குமானால், இத்திட்டத்தை வெட்டியிருக்க இயலாது( அப்படி வெட்டுவதாக இருந்தால் இம்மன்றத்தைக் கூட்டி, செலவுத் தொகையை வெட்ட வேண்டும்( இதற்கென்ன செய்யச் சொல்கிறீர்கள்? என்று இம்மன்றத்தை அல்லவா கேட்டிருக்க வேண்டும்?

மாநில அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ரூ.600 கோடித் திட்டச் செலவை இம்மன்றம் ரூ.400 கோடியாகக் குறைத்தது. அதையும் ரூ.291 கோடியாகக் குறைத்தது, அவசர அவசரமாகக் குறைக்கப்பட்தே தவிர, எவ்வித ஆலோசனைக்கும் எடுத்துக் கொண்டு, அதன் பின்னர், குறைக்கப்படவில்லை.

கேலிக் கூத்தல்லவா?

இப்படி அவசர அவசரமாக வெட்டப்பட்ட திட்டத்திற்கு நடைமுறையில் செயலப்ட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒப்புதல் கேட்பது என்பது கேலிக் கூத்தாகும்.

திருமணம் நடந்து முடிந்தபிறகு மணமக்களைக் கண்டு பொதுவாகக் ஒப்புதல் அளிப்பது போனற்து இப்பொழுது அளிக்கப்படும் ஒப்பம்!

இம்மன்றத்தில் பேசிய ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர். அருமையான திட்டங்களை எடுத்துக்கூறி அவற்றைச் சேர்க்க வேண்டுமெனக் கோரினர். கூவம் ஆற்றின் நாற்றத்தைப் போக்குவதிலிருந்து, காவிரிக்கு மற்றொரு அணைக்கட்டுவது வரையில் பல திட்டங்களை எடு்த்துக் கூறினர்.

இங்கே எடு்த்துக் கூறுப்பட்ட திட்டங்களை, நடைமுறையில், உள்ள திட்டத்தோடு இணைப்பதற்கு அமைச்சருக்கு ஆளும் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களாலே கூறுப்பட்டதாகவே இருப்பினும் அவற்றை ஏற்றுத் திட்டத்தில் சேர்க்க அமைச்சரால் முடியுமா?

அவர்களின் ‘தலையெழுத்து‘

இத்திட்டம் ரூ.400 கோடியாக இம்மன்றத்தில் தயாரிக்கப்பட்ட பொழுது ஆளும் கட்சி உறுப்பினர்கள். ‘ஆகா‘ அருமையான திட்டம்‘ என்று பாராட்டினர். அது ரூ.291 கோடியாகக் குறைத்துக் கொண்டு வரப்பட்ட பிறகும் திட்டமென்றால், இதுவல்லவா திட்டம்?‘ என்று பாராட்டுகின்றனர். இன்னும் குறைக்கப்பட்டாலும், ‘நிதியமைச்சரால், சிறுகக்கட்டிப் பெருக வாழ வேண்டும் என்ற நோகக்த்தோடு தயாரித்த நல்ல திட்டம்‘ என்று பாராட்டவும் கூடும். ஆளுங்க கட்சியினர். அரசு தரும் எந்தத் திட்டமாயினும் அவற்றை ஆதரித்து ஆகவேண்டும். அது அவர்களின் அரசியல் தலையெழுத்தாகும்.

எதிர்ப்பவர் எங்குள்ளனர்?

இரண்டு நாட்களாக இம்மன்றத்தில் பேசிய ஆளும் கட்சி உறுப்பினர்கள். நாங்கள் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டுவதைக் கண்டு, நாங்கள் ஏதோ திட்டத்தை எதிர்பப்பதாகவும், திட்டத்தை எதிர்க்கும் எங்களுக்கு ஓட்டு கிடைக்காது என்பதைப் போலவும், எங்களை ஓட்டர்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்றும் பேசுகிறார்கள்.

திட்டத்தை யாரும் எதிர்கக்வில்லை. திட்டமிட்ட வாழ்க்கையை மேலானது என்பதிலிருந்து திட்டமில்லாத நாடு முன்னேற முடியாது என்பது வரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். திட்டத்தை எதிர்ப்பவர்கள் இம்மன்றத்தில் அல்ல-வெளியில் இருக்கிறார்கள்.

நாங்கள் திட்டத்தில் உள்ள குறைகளை-இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை எடுத்துக்காட்டுவதைக் கண்டு ஆளுங்கட்சியினர் அஞ்சுகின்றனர். அவர்களுக்கு உள்ளூர எலும்புகளில் சுரம்பிடித்து இருக்கிறது.

இப்படிப் பேசுவதுதான் இயல்பு போலும்(

மின்சார உற்பத்திப் பெருக்கத்தைக் குறித்து, முன்னர் இம்மன்றத்தில் பேசிய இராசம்இராமசாமி, ‘உற்பத்தியான மின்சாரம். இந்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும்‘ எனக் கூறினார். இதையே அப்பொழுது பேசிய நான். ‘மின்சாரத்தால் வெளிச்சம் போட்டுக் காட்டிப் பயனில்லை( தொழிலுக்குப் பயன்படுத்தப்படவேண்டும்‘ என்று எடுத்துச் சொன்னேன். அப்பொழுது திட்டம் ரூ.400 கோடியாக இருந்தபோது பேசிய இராசம் இராமசாமி அவர்கள் அப்படிக் கூறினார். இன்று அவர் பேசுகையில் ‘நமது நாட்டில் எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாகிறது தெரியுமா?‘ என்று பேசுகிறார். தேர்தலுக்கு முன்னர் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் இப்படிப் பேசுவது இயல்பு போலும்(

யாருக்காகத் திட்டம் போட்டீர்கள்? அதன் இலட்சியம் என்ன? யாருக்குத் திட்டத்தினால் பலன்கிடைக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள். எந்த அளவு உணவு உற்பத்தியைப் பெருக்கியூள்ளீர்கள்? பெருகியுள்ள மின்சார உற்பத்தி எதற்குப் பயன்பட்டது? இவற்றையெல்லாம் வெறும் வெளிச்சம் போட்டுக் காட்டினால் மட்டும் போதாது.

நிபுணர்கள் தீண்ட அஞ்சும் புள்ளிவிவரங்கள்

இவற்றுக்கெல்லாம் பதிலாகத் தயவு செய்து புள்ளிவிவரங்களை அள்ளி வீசாதீர்கள். நீங்கள் வீசுகின்ற புள்ளிவிவரங்களை நிபுணர்கள் தீண்டுவதில்லை. அவர்கள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். வலிவு குறைந்தவர்கள் கைத்தடியை ஊன்றி நடப்பதைப்போல் ஆளுங்கட்சியினர் புள்ளி விவரங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

பிள்ளையார் சுழியைப் போட்டுக் கொண்டு அகவல் பாவை ஆரம்பிப்பதுபோல், ஆளுங்கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் முதல் இரண்டு நிமிடம் எங்களைத் தாக்கி விட்டு, அடுத்த நான்கு நிமிடத்தில், ‘அதுவேண்டும், இது வேண்டும்‘ என்று தங்கள் குறையை எடுத்துக் கூறிவிட்டு, கடைசியாக முடிக்கும்போது, தங்களுடைய வழக்கமான பல்லவியை மறந்துவிடாமல் இருக்க மீண்டும் நிமிடம் எங்களைத் திட்டிவிட்டு அமருவதைத்தான் காண்கின்றோம்.

எங்களுடைய கருத்துக்களை ஒரு பக்கம் தள்ளி வையுங்கள், நீங்கள் கூறிய கருத்துக்கள் ஏற்கப்படுகிறதா? உங்களுடைய கருததை மதிக்கிறார்களா?

இந்த மன்றத்தில் ‘சேலத்தில் உருக்கு ஆலை அமைக்கப்பட வேண்டும்‘ என்று பேசப்பட்டது. அது குறித்துத் திட்டத்தில் ஏதாவது காணப்படுகிறதா? இதற்குப் பூர்வாங்கமாக ரூ.25 கோடியைத்தான் மாநில அரசு ஒதுக்கியுள்ளது. சேலம் இரும்பை வெட்டியெடுக்க இந்த ரூ.25 கோடி போதுமா? ரூர்கேலாவிலும், துர்காபூரிலும் இந்த அளவுதானா மூலதனமிட்டனர்? இந்த ரூ.25 கோடி தேர்தல் வாக்குறுதிக்குத்தான் பயன்படும்.

ஏற்கப்படாதது ஏன்?

அனைத்திந்திய ஒற்றுமையைப் பற்றிப் பேசுபவர்கள் – கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறுபவர்கள் அதிகாரத்தில் இருந்தும்கூட கிருஷ்ணா – பெண்ணாறு திட்டம், கங்கை – காவிரித் திட்டம் போன்ற பல திட்டங்களில் எவையேனும் ஏற்கப்பட்டிருக்கிறதா?

திட்டமிடப்பட்டதன் அடிப்படை நோக்கம் நிறைவேறியுள்ளதா? ரூ.400 கோடியாக இருந்த திட்டத்தை ரூ.291 கோடியாக வெட்டியதன் காரணமாகப் பொருளாதார இலக்கு‘ மட்டுமல்ல திட்டத்தின்‘செயல்முறையே‘ பாழ்பட்டுவிட்டது. இதற்காக நாம் அனைவரும் கூடி ஒருநாள் அழுவதற்கு இத்திட்டம் பயன்படுமேயன்றி வேறு எதற்குப் பயன்படும்? வேண்டுமானால் பண்டாரங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடையலாம். ‘பாதுஷா‘க்களாக விரும்புகிறவர்கள் இதைக்கண்டு திருப்தியடைய முடியுமா?

திட்டமென்றால், ‘இன்னின்ன இடத்தில் இதைச் செய்வோம்‘ என்பது மட்டுமல்ல. அந்தத் திட்டங்களினால் இன்னின்ன பலன்கள் ஏற்படும் என்பதுதான் முக்கியமாகும். திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றுவது என்பது தன்னலமற்ற தூய பணி என்ற முறையில் அமையவேண்டும். அதனால் தான் நேரு திட்டங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கவிதா வாக்கியங்களைப் பயன்படுத்துகிறார்.

மதிக்கத்தான் வேண்டுமா?

திட்டத்தின் நோக்கம், தனிப்பட்டவர்களிடையேயுள்ள ஏற்றத்தாழ்வைப் போக்குவதும், பிரதேசங்களுக்கிடையேயுள்ள வேற்றுமைகளைப் போக்குவதும்தான் என்று கூறப்பட்டது. நெஞ்சிலே கைவைத்துக்கூறுங்கள், இன்று வேண்டாம் நாளை என் எதிரில் வேண்டாம் – தனியாகவாவது சொல்லுங்கள்( வடக்குக்கும், தெற்குக்கும் இருக்கும் ஏற்றத் தாழ்வு போக்கப்பட்டுவிட்டதா? தேசிய அபிவிருத்திக் குழுவில் நிதி அமைச்சரே பேசியிருக்கிறார். தென்னகத்தை வளப்படுத்தும் பல திட்டங்கள் ஒப்புக் கொள்ளப்பட வில்லை. நிதி அமைச்சர் பார்வை புரிகிறது. ‘நான் ஒட்டிக் கொண்டிருக்கிச் சொல்லுகிறேன். நீங்கள் வெட்டிக் கொண்டு ஓடச் சொல்லுகிறீர்கள்‘ என்று கூறுவது தெரிகிறது.

பத்து ஆண்டுகள் பார்த்தாகிவிட்டது. இரண்டு திட்டங்களும் முடிந்துவிட்டன. இப்பொழுதும் நமது கோரிக்கையை அவர்கள் மதிக்கவில்லை என்றால், வெட்டிக் கொண்டு ஓடாமல் என்ன செய்வது? ஒட்டிக் கொண்டிருக்க எண்ணுவது பதவி ஆசையாக இருக்கலாம். ‘மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்‘ என்பது பழமொழியாகும்.

தொழில் துறையில் இந்த அரசின் பங்கு என்ன? கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கப்ட்ட பணத்தைத் தவிர வேறு என்ன? இந்த அரசுக்கு கார்ப்பரேஷன் மூலம் ரூ.1 கோடி தொழிற்சாலை மூலம் ரூ.5. 6 கோடி இப்படி இரண்டொரு மத்திய அரசு தொழிலைக் காட்டலாம். இந்த அளவித்லான் இந்த அரசு திருப்திப்படுகிறதா?

மறைப்பதால் பயனென்ன?

அலுமினியத் தொழிலை அரசுத்துறையில் அமைக்கப் போவதாக நிதியமைச்சர் வாக்குறுதி அளித்தார். ஆனால், நடந்ததென்ன? இப்படித் தொழில் துறையில் பல தவறுகளை இழைத்து வருகிறீர்கள். தவறு செய்ததோடு மட்டுமல்லாமல், செய்யும் தவறுகளை மறைத்துக் கொண்டும் வருகிறீர்கள். நீங்கள் மறைத்து வரும் தவறுகளை எடுத்துக்காட்டுபவர்களைப் பொதுமன்றங்களில் தூற்றியும் வருகிறீர்கள்.

பிரதேச ஏற்றத்தாழ்வுகள் போக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய 10 ஆண்டுக்கால அவா. இயலவில்லை என்று நிதியமைச்சரே கூறியிருக்கிறார். எங்களில் பலர் சென்ற தேர்தலில் தோல்வியுற்ற நேரத்தில், ‘வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தோம்‘ என்று கூறியதைப்போல, நிதியமைச்சர் நமது தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயங்குகிறார்.

இதைப்போல் மத்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் ஏற்றத்தாழ்வைப் போக்குவது குறித்து கருத்தறிவிக்கையில், என்னால் செயல்படுத்த முடியாததை நான் சொல்ல மாட்டேன்‘ என்றார். அப்படியானால் திட்டத்தின் அடிப்படை நோக்கமான ஏற்றத் தாழ்வைக் குறைப்பது என்பது அடிபட்டுப்போகிறது!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் டி.டி.கிருட்டிணமாச்சாரி கூட ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டதென்றும் 100க்கு 96 பேர் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் பெறவில்லை யென்றும் ஒரு சிலரிடம் செல்வம் குவிந்தள்ளதென்றும் கூறியிருக்கிறார்.

அமெரிக்கத் தூதுவர் பேராசிரியர் கால்பிரெய்த் கூட நமது நாட்டு ‘சோஷலிசத்தைப் பற்றிக் கூறுகையில், ‘தபால் நிலைய சோஷலிசம்‘ என்று குறிப்பிட்டார்.

இப்படிப்பட்ட சோஷலிச அமைப்பில், தனி நபரிடையே யுள்ள ஏற்றத்தாழ்வை எவ்விதம் ஒழித்துவிடப் போகிறீர்கள்.

இரண்டு குடும்பங்களிடம் ரூ.500 கோடி

சமீபத்தில் டில்லியில் கூடிய ஆசியப் பொருளாதார நிபுணர்கள் மாநாட்டில் பேசிய ஒருவர் இந்தியாவில் இரண்டு முதாளிக் குடும்பங்களிடம் ரூ.500 கோடி மூலதனம் இருப்பதாகக் குறிப்பிட்டார். இதுதான் சமதர்மம் என்றால், சமதர்ம இலட்சியத்தை உருவாக்கியவரின் கல்லறை கூட இந்த நாட்டிலே இருக்க விரும்பாது.

தொழில் துறையில், தொழிலாளிகளையும் பங்குதாரர்களாக ஆக்குவதாக நிதியமைச்சர் முன்பு கூறினார். அந்தத் திட்டம் இப்பொழுது என்னவாயிற்று? இத்திட்டத்தைச் செயல்படுத்த நிதியமைச்சர் மேற்கொண்ட முயற்சி என்ன?

நாட்டில் தனி முதலாளிகள் பெருகியிருக்கிறார்கள், நாளுக்கு நாள் அவர்கள் வளம் பெற்று வருகிறார்கள்.

பொதுத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி என்ன? நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், கோச் பாக்டரி அறுவை வைத்தியக் கருவித் தொழில் ஆகியவற்றை மத்திய அரசின் ஆதிக்கத்தில் விட்டுவிட்டு இந்த அரசு ‘வைதீக‘ பாஷையில் கூற வேண்டுமானால் அவர்களுக்கு ‘ததாஸ்து‘ பாடுவதும், ‘அட்சனை போடுவதும்தான் செய்கிறார்கள். இதற்காகவா, நீங்கள் ஆட்சி செலுத்தவேண்டும்? இந்தத் தொழில்களைத் தவிர வேறு எதை இந்த அரசினர் கொண்டு வந்தனர்? ஏராளமான பாராட்டு மிகுந்த நல்லெண்ணத்தைத்தான் வடக்கிலிருந்து கொண்டு வந்தார்கள் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? திரு.சீனிவாச (ஐயர்) இங்குப் பேசுகையில் ‘பறங்கிப்பேட்டைத் துறைமுகம் விரிவு படுத்தப்பட வேண்டும்‘ என்று கூறினார். இவைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனவா?

வடக்கே இருப்பவர்கள் நினைத்த மாத்திரத்தில் காண்டலா துறைமுகம் உருவாக்கப்பட்டது. தோண்டத் தோண்ட மண் குவிந்தாலும், அதை விரைவில் செய்தார்கள் வரியற்ற துறைமுகமாகவும் செய்தார்கள்.

கூடுமே தவிர குறையாது!

தொழில் வளத்தைப் பெருக்கத் தவறிவிட்டீர்கள், சமதர்மம் நிறைவேற்றப்படவில்லை. வேலையில்லாத் திண்ணடாட்டம் போக்கப்படவில்லை. பிரதேச வேற்றுமை நீக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, இவற்றைப் போக்க ரூ.1000 கோடி தேவை என்று நான் கூறினேன். முன்பு அதிகாரிகள், பல்வேறு துறையின் சார்பில் தயாரித்த திட்டத்தின் தொகை ரூ.600 கோடியாகும். இப்பொழுது ஆளுங்கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் தெரிவித்த திட்டங்களையும் கணக்கிட்டுக் கொண்டு, அத்தொகையைக் கூட்டினால் ரூ.1000 கோடி ஆகாதா? அதற்கு மேல்தான் ஆகுமே தவிர குறையாது.

திட்டமிடப்படும் தொகை, மத்திய அரசின் பங்கு – மாநில அரசின் பங்கு, தனியார் துறை, பொதுத்துறை, பொதுத்துறையின் தொழில் முதலீடு இவ்வளவு என்று நிதியமைச்சர் கணக்கைப் பிரித்துக்காட்டி எனக்குக் கூறினார். இந்தச் சாதாரண விஷயம்கூட எனக்குத் தெரியாது என்று நிதியமைச்சர் கருதுகிறாரா? அப்படி அவர் நினைப்பாரானால் அரசியல் சூழ்நிலை அவரை அப்படி நினைக்கச் செய்கிறது என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

நான் ரூ.1000 கோடி தேவையென்று கூறியவுடன், ‘பண்டாரம்‘ என்று சொன்னார்கள்.

நிதியமைச்சர: “நான் மட்டும் அப்படிக் கூறவில்லை( ராஜாஜி கூடச் சொல்லியிருக்கிறார்.“

அண்ணா: “அதையும் உள்ளடக்கியே, “சொன்னார்கள்‘ என்று பன்மையில் கூறினேன்“.