அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கேட்பது பிரிவினையல்ல!
2

தாய்மையுணர்வைப் பெறட்டும்!

அப்பொழுது பண்டாரமாகத் தெரிந்தேன். பண்டாரம் என்றால், ‘இல்லை, போ‘ என்று விரட்டும் நிலையில் நிதியமைச்சர் இருந்தார். இப்பொழுது ‘குழந்தைத்தனம்‘ என்று கூறியிருக்கிறார். குழந்தையென்றால், இடுப்பில் வைத்துக் கொண்டு ‘அழாதே, நான் வாங்கித் தருகிறேன்‘ என்று கூறும் நிலைக்கு நிதியமைச்சர் வந்திருக்கிறார் என்று பொருளாகும்.

குழந்தை என்று கூறியதன் மூலம் நிதியமைச்சர், எனது கள்ளமில்லா உள்ளத்தை ஒப்புக் கொள்கிறார் என்றாகிறது. ‘குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில்தான் என்பதை நிதியமைச்சர் உணர்ந்து, இனி அவர் தாய்மை உணர்வைப் பெற வேண்டுமென விழைகிறேன்.

“வருகின்ற தேர்தலில் பணத்தை அள்ளிவீசி, எங்களை வீழ்த்திவிடலாம் என்று கருதலாம். இங்கேயும் சரி வெளியிலும் சரி நீங்கள் எங்களை அழிப்பதற்குத் தீட்டிவரும் திட்டங்களை நாங்கள் அறிவோம். உங்களிடத்தி்லே கத்தி இருந்தால் அதைத் தீட்டிக் கொண்டு வாருங்கள்“.

“திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தேர்தலோடு நின்றுவிடுவது அல்ல. அதன் அங்கம் தேர்தலுக்குப் பிறகும் நீடிக்கும். தி.மு.கழகத்தின் அரசியல் அங்கம் தேர்தலில் ஈடுபடுகிறது. தேர்தலுக்கப் பின்னர் எவ்வித விளைகள் ஏற்பட்டாலும எங்களுடைய இலட்சியம், நாட்டு மக்களின் உள்ளங்களில் ஊடுருவிப் பாயும் என்பதை ஆட்சியினர் உணருவர்“.

இழந்ததைப் கேட்கிறோம்

“பிரிந்து செல்வதால், குழப்பம் ஏற்படும் என்பதும், அதற்கு உதாரணமாகப் பாகிஸ்தானைக் காட்டவதும் பொருத்தமற்றதாகும். இந்திய யூனியன் என்பது இருந்துதான் தீரவேண்டும் என்பதல்ல. ‘காமன்வெல்த் நாடுகள்‘ என்று இன்றைய தினம் இல்லையா? அதில் இந்தியாவும்இணைந்து இருக்கவில்லையா? அதைப்போல் இந்தியக் காமன்வெல்த் ஆக ஏன் இருக்கக்கூடாது?“

“நாங்கள் பிரிவினை எதையும் கேட்கவில்லை எங்களுடைய விருப்பத்துக்க மாறாகக் கொண்டுபோய் இணைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட் வேண்டுமென்றுதான் கேட்கிறோம். இருந்ததைத் கேட்கிறோம் – இழந்ததைக் கேட்கிறோம். எங்களால் முடிந்தால் பெற்றக் கொள்கிறோம். இல்லையேல் அம்முயற்சியில் மடிந்து விடுகிறோம்“.

“இன்று நாடெங்கும் பேசப்பட்டு வருகின்ற தேசிய ஒருமைப்பாடு பற்றிய குறிப்பேடு விவாதத்திற்காக டைடை மீது வைக்கப்பட்டிருக்கிறது. இதற்குரிய விளக்கத்தையும் நிதியமைச்சர் முன்னதாகவே பேசினார்.

மன்றத்தில் பேசிய பல்வேறு கட்சித் தலைவர்களும், டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்கு எங்களையும் அழைத்திருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்கள். எங்களை அழைக்காதது குறித்து நாங்கள் வருந்தவில்லை.

வேறுபாடு உண்டு

ஒருமைப்பாடு என்பதற்கும் இணைப்பு என்பதற்கும் வேறுபாடு உண்டு. நிதியமைச்சர் ‘தேசிய இணைப்பு‘ என்று குறிப்பிட்டுப் பேசினார். நிதியமைச்சர் குறிப்பிட்டபடி இணைப்பு என்பதற்குப் பொருள் பல்வேறு உறுப்புகளை ஒன்று சேர்ப்பதாகும். ஆனால் ஒருமைப்பாடு என்பதற்குக் பொருள் உருவங்களையே ஒன்றுகூட்டி ஒருமையாக்குவது என்பதாகும். இணைப்பு என்பதற்கு அகராதியில் குறிப்பிடப்படும் பொருள் துண்டுபட்ட பொருள்களைக் குவிப்பது. ஒரு பொருளாக இணைப்பது என்பதாகும்.

நிதியமைச்சர் ஒற்றுமை என்பதற்கு உரிய அடிப்படையான பொருளையும், வரையறுப்பையும் தெளிவாக்கி இருந்திருப்பாரானால், கட்சி அடிப்படையில் மட்டுமல்ல பொதுவாகவே பயன்படக் கூடியதாக இருந்திருக்கும்.

தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள் இந்தக் குறிப்பேட்டில் தரப்பட்டுள்ளன. இதைப்படிக்கும்போது, அவர்களுடைய எண்ணத்தையும் தோற்றத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்த மேற்கோளாகக் கொட்டியுள்ள உவமை, மகாபாரதமும் அதனையொட்டியுள்ள குருசேத்திரப் போரும் அகும். அந்தப் போரில், வடநாட்டில் இருந்தவர்களும், தென்னகத்தில் இருந்தவர்களும் கலந்து கொண்டார்கள் என்பதை அவர் குறிப்பிட்டார்.

ஆனால் சங்க இலக்கியத்தில், இந்தப் போர்பற்றிக் குறிப்பிடப்பட்ட தெல்லாம் போரில் இரண்டு கட்சியிலும் ஈடுபடாமல், இரண்டு கட்சியாருக்கும் தென்னகத்தவர் உணவு அளித்தார்கள் என்பதுதான். அவர்கள் முருண்பாட்டிற்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் என்பதுதான்.

வரலாற்றில் காட்டுவதற்கு இயலுமா?

இந்தத் துணைக்கட்த்தில் வடக்கேயாயினும், மேற்கேயாயினும், கிழக்கேயாயினும் நாட்டின் எந்தப் பகுதியானாலும் பலமுள்ள ஓர் அரசு உருவெடுத்தபோது, அவர்கள் பலவீனமான பகுதிகளைச் சேர்த்துக் கொண்டு, சாம்ராஜ்யமாகக் கட்டியுள்ள முயற்சித்தார்களே தவிர, இப்பொழுது பேசப்படுகின்ற தேசிய ஒருமைப்பாடு என்கிற அளவில் அமைக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தையாவது நிதியமைச்சர் வரலாற்றில் காட்ட முடியுமா? இவ்வறிக்கையில், அசோகர், ஹர்ஷர், அக்பர் என்று குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், ஒரு பெரும் அரசைக் கட்டினார்கள். அவர்களுடைய அரசும் நர்மதைக்கு அப்பால் தான் இருந்ததது. அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். அவர்கள் ஆற்றிய பணிகளைப் போற்ற வேண்டியவர்கள் தமிழ் மக்கள் மட்டுமல்ல, எல்லா நாட்டு மக்களும் ஆவர்.

ஆனால், அவர்கள் அனைவரும்மெத்த முயற்சி எடுத்து அமைத்த பேரரசுகள் ஏன் நிலைக்கவில்லை என்பதை எண்ணிப் பார்த்தீர்களா? அப்பேரரசில், நிபுணர்கள் இல்லையா?

அப்பேரரசுகளைக் காக்கும் அளவில் எது இருக்கவில்லையோ, அது இப்பொழுதும்இல்லை என்பதால் அப்பேரரசுகள் காலப்போக்கில் அடைந்த நிலையைத்தான் மீண்டும் இந்நாடு அடையும்.

இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டும் எங்களைப் பார்த்து நிதியமைச்சர் கூறுகிறார். எங்களை ‘மக்களே கவனித்துக் கொள்வார்கள்‘ என்று இதுபொருள்படப் பேசினார்.

தூய்மையான இதயத்தைச் சந்தேகிக்காதீர்!

எங்களை அமைச்சர் மதிக்காமல் இருக்கலாம். எங்களுடைய வாதங்களை அவர் எற்க மறுக்கலாம். ஆனால், எங்களுடைய தூய்மையான இதயத்தைச் சந்தேகிக்க வேண்டாம். எங்களுடைய கொள்கையில் நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை குறைவானதில்லை.

இந்தியா எக்காலத்திலாவது ஒன்றாக இருந்ததா என்பதற்கு இக்குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டிருக்கிற இரண்டொரு சமஸ்கிருத சுலோகங்கள் தவிர, மற்றவை எல்லாம் எனக்குப் புரிகிறது. ஒருமைப்பாட்டினை உருவாக்க சகிப்புத்தன்மை தேவை என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், எப்பொழுதுமே சகிப்புத் தன்மை உண்டு. வடநாட்டில் சகிப்புத் தன்மை கிடையாது என்பதற்கு ஜபல்பூர், கான்பூர் அசாம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களும் நேரு பண்டிதரையே குஜராத்தில் 90 இடங்களில் பேச விடாமல் தடுத்ததும் நமக்கு விளக்குகின்றன. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், சகிப்புத் தன்மை என்பது எப்பொழுதுமே உண்டு.

கவனிக்க வேண்டாமா?
எனக்குத் தெரிந்த முக்கியமான பெரிய காங்கிரசுக்காரர் ஒருவர் என்னிடம் பேசி்க் கொண்டிருந்தார். அவர் அப்பொழுது, ‘வடநாட்டிலிருந்து, தென்னாட்டைப் பிரித்துக் கொண்டு போகப்போவது திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அல்ல. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே தென்னாட்டைப் பிரிவினை செய்துவிடப் போகிறார்கள் என்று நான் அவர்களிடம் கூறிவிட்டு வந்தேன்‘ என்று கூறினார். இப்படிக் கூறியவர் யார் என்பதை நிதியமைச்சர் கேட்கமாட்டார். நானும்அதைக் கூறமாட்டேன்.

முன்னாள் நிதியமைச்சரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஒருமுறை, ‘இந்தியா என்றால் பாரதம், பாரதம் என்றால் உத்திரப்பிரதேசம்‘ என்று குறிப்பிட்டார். அதையும் கவனிக்க வேண்டும்.

இது ஒரு சாதனையா?

இந்தியாவை ஒன்றுபடுத்தியதாகச் சர்தார் பட்டேலை பற்றிக் கூறி நிதியமைச்சர் பாராட்டினார். இதில் பட்டேலைப் பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது? அப்படிப் பாராட்டுவது பட்டேலுக்கு இருந்த உண்மையான பெருமையைக் குறைப்பதாகும். மன்னர்களை ஒழித்துக் கட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கோட்டைக் கொத்தளங்களுக்குள் இருந்து கொண்டு வண்ண உடையணிந்து கொண்டு பொதுமக்களைக் கண்டு நடுங்கிக் கொண்டு கத்தி தூக்கித் தெரியாதவன் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருந்த மன்னர்களை, ‘போனது போகட்டும், இருப்பதற்கு ஏதாவது தாருங்கள்‘ என்று கெஞ்சியோரை அடக்கியதில் என்ன சாதனை இருக்கிறது?

அப்படி அது ஒரு சாதனை என்று கூறப்படுமானால் அதைச் சாதிப்பதற்குப் பட்டேலுக்கு வலது கரம் போலிருந்து துணை புரிந்தவர் வி.பி.மேனன் அவர்கள் ஆவார். அப்படிப்பட்ட வி.பி.மேனன் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டைப்பற்றிக் கருத்தறிவிக்கையில், “மலையைக் கெல்லி எலியைப் பிடித்திருக்கிறார்கள். ஆளும் கட்சியினர் வருகின்ற பொதுத் தேர்தலுக்காக நடத்திக் காட்டும் ஸ்டண்ட் இது“ என்று குறிப்பிட்டார். இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா?

எத்தனை நாளைக்கு இந்தப் போக்கு?

சிலர் இந்த ஆட்சிமுறையைப் ‘பெட்ரல்‘ ஆட்சிமுறை என்று கூறுகின்றனர். மற்றும் சிலர் , ‘யூனிட்டரி‘ ஆட்சி முறை என்று சொல்கின்றனர். ‘நாங்கள் இரண்டுக்கும் நடுவே போகிறோம்‘ என்று நிதியமைச்சர் கூறுவார்.

இன்றைய ஆட்சியாளர்கள் பொருளாதாரத் துறையாக இருப்பினும், அரசயில் பிரச்சனையாக இருப்பினும், வெளிநாட்டுக் கொள்கையாக இருப்பினும், சந்து கிடைத்த இடத்தில் நுழைந்து கொள்கின்றனர். இதுவே கொள்கையாகவும் இருக்கிறது. ஏனென்றால், உங்களுக்கு இரண்டிலுமே நம்பிக்கை கிடையாது. சந்தர்ப்பம் கிடைத்தால், எந்தக் கை ஓங்குகிறதோ அந்தப் பக்கம் சாய்ந்து கொண்டு பேசுவீர்கள். உங்களுக்குச் சிலப்பதிகாரமும் தேவை மனுதர்மமும் தேவை. தேவநாகரியும் தேவை – தமிழும் தேவை. கூழும் வேண்டும் மீசையும்வேண்டும். எத்தனை நாளைக்கு இந்தப் போக்கு?

தேசியக் கவுன்சில் கூட்டத்தில்,நிதியமைச்சர் ‘இந்தி மொழி ஆதிக்கம் கூடாது‘ என்று பேசினார். அவரை அறியாமலேயே அவருள்ளத்தில் இருந்த மொழிப்பற்று வெளிவந்துவிட்டது.

இப்படி நாட்டுப்பற்று, தமிழ்ப் பண்பாட்டு உணர்ச்சி, ‘தமிழன் என்றொரு இனமுண்டு‘ என்ற பற்று இருக்கும் வரையில், துப்பாக்கி ஒன்றும் செய்துவிடாது. சட்டம் எதுவும் சாதித்துவிடாது. தேர்தலும் ஒன்றும் செய்துவிடாது. இங்கேயும் சரி, வெளியிலும் சரி, எங்களை எதுவும் அசைத்துவிடாது.

யாரை மிரட்டுகிறார் நிதியமைச்சர்!

நிதியமைச்சர் ‘பிப்ரவரியில் பார்த்துவிடலாம்‘ என்று கூறுகிறார். இந்தத் தேர்தலைப் பொறுத்தா எங்கள் கட்சி இருக்கிறது, அரசியல் வாழ்வு என்பது ஐந்தாண்டுக்கு ஒருமுறை அளிக்கப்படும் மரண சாசனமா? பக்தவச்சலமும் கோபால் (ரெட்டி) யாரும் தேர்தலில் தோற்றார்கள். இப்படித் தோற்றுவிட்ட காரணத்தாலே அவர்கள் அரசியல் வாழ்வை விட்டு ஓடியா போனார்கள்? கோபால் (ரெட்டியார்) டெல்லியில் அமைச்சராக இருக்கிறார். டெல்லிக்குச் செல்லவிருக்கும் நமது நிதியமைச்சருக்கே அவர் இடம் தருகிறாரோ இல்லையோ? யாரை மிரட்டுகிறார் நிதியமைச்சர்? தேர்தலில் தோற்ற குமாரசாமி ராஜாவுக்குக் கவர்னர் பதவி கிடைக்கவில்லையா? நமது நிதியமைச்சரை இவ்வளவு நாளாக ‘நிதி மந்திரி‘ என்று எண்ணியிருந்தேதன். அவர் இப்பொழுது ஆலமரத்தடி ஜோசியராகவும் இருக்கிறார்.

நிதியமைச்சர் எங்களைக் கேலி பேசினார். எங்களுக்குக் கேலி பேசத் தெரியாதா? ‘இன்று இமயமலை வரை என்பார்கள். பின்னர் மங்கோலியா வரை என்பார்கள். அதன் பின்னர் மெசபடோமியா உள்பட இந்தியா என்பார்கள்‘ என்று கேலி செய்யத் தெரியாதா?

இருக்கிறதா அதிகாரம்?

நிதியமைச்சர் ‘இந்தியா ஒரு பெடரேஷன்‘ என்று வாதாடினார். பெடரேஷனுக்குரிய அடையாளம் ஏதாவது இருக்கிறதா? ஒரு பெடரல் அரசுக்கு இருக்க வேண்டியது மாநிலங்கள் தங்களுக்குரிய அதிகாரத்தை எடுத்துக் கொண்டு மிச்ச அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கொடுத்துவிடுவதுதான். ஆனால், இப்பொழுது இருக்கும் மத்திய அரசு, தன்னிடம் பல அதிகாரத்தை வைத்துக் கொண்டது போக மிச்சமிருப்பதை மாநிலங்களுக்குக் கொடுத்து இருப்பதுதான். ரெசுடியரி பவர்‘ என்பது மாநிலங்களுக்கு இருக்க வேண்டும். இருக்கிறதா?

கல்வித் துறை மாநிலங்களின் பொறுப்பில் இருக்க வேண்டியதாகும். இந்தத் துறையை இன்றைய தினம் மத்திய அரசின் துறையாக மாற்ற வேண்டுமென்று பேசப்படுகிறது. இது எங்கே கொண்டுபோய் விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ‘இவர்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நன்றாகத் தூங்கட்டும் பறிகு பார்த்துக் கொள்ளலாம்‘ என்பதைப் போல இருக்கிறதே தவி, வேறு என்ன இருக்கிறது,

உள்ளதும் பறிபோய்விடும்

நிதியமைச்சர் இந்த ஆட்சி முறையில் எத்தனை நாளைக்குச் சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்? சற்றத் துணிந்தால், எதிர்த்துப் பேசினால், அமைச்சருக்கு உள்ளதும் பறிபோய்விடும். என்னைப் பொறுத்தமட்டில் நான் இழக்கப்போவது ஒன்றுமில்லை. நாங்கள் ஒன்றும் இந்த நாட்டு விடுதலை இலட்சியத்தில் தெரியாத்தனமாக ஈடுபடவில்லை. தியாகிகள் எண்ணிக்கை குறைந்து, எவரேவரோ அவர்கள் பெயரை இரவல் வாங்கிக் கொண்டிருக்கும் கட்டத்தில் நிதியமைச்சர் இருப்பதால், அவருக்கு இது புரியாது.

இந்தியா ஏன் பெரிய நாடாக இருக்க வேண்டும் என்பதை அறிய விரும்புகிறேன். பெரிய நாடு என்பதற்குரிய பொருள்தான் என்ன? இத்தனை மைல் நீளம், இத்தனை மைல் அகலம் என்பதா? பொருளாதாரப் பலத்திலா? இராணுவப் பலத்திலா? எதிலே பெரிய நாடு என்று பொருள் கொள்கின்றீர்கள்?

ஐரோப்பா கண்டத்தில் பல நாடுகள் இருக்கின்றன. அவைகள் சிறிய நாடாக இருப்பதால் அவற்றின் எல்லைக் கோடுகளை அழித்துவிடச் சொல்லி நேரு பண்டிதரிடம் கூறலாமா? அல்லது அவருக்கு வேறு பல வேலைகள் இருக்கின்ற காரணத்தால், அங்கெல்லாம் தொடர்புள்ள நிதி அமைச்சரே இந்தக் காரியத்தைச் செய்யலாமல்லவா?

உட்பொருளை உணருவீர்!

சிலருக்கு இருப்பதை ஆதரிப்பதில் ஒரு சுவை இருக்கிறது. காரணம், இப்படி நீண்ட நாட்களாக இருக்கும் அமைப்பில் இருந்து பழகிவிட்ட காரணத்தால் உணர்ச்சி இடம் பெறுவதைக் கேட்பது என்றால் அதில் எதிர்பப் வரும் – பழி வரும். இது ஒருபுறமி்ருக்க, உலக வரலாற்றில் சிறிய நாடுகள் வளர்ச்சி பெற்றனவா பெரிய நாடுகள் வளர்ச்சி பெற்றனவா என்பதைப் பார்க்கலாம்.

கலையை, பண்பாட்டை, நாகரிகத்தை, அரசியலை உலகத்துக்குப் போதித்தது இப்பொழுதுள்ள கிரேக்க கூட்டமைப்பு அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க நகர அரசுதான்.

தமிழகம் தனித்து இருந்தபோதுதான் சங்கம் தோன்றியது. இலக்யிம் தோன்றியது. வள்ளுவர் தோன்றினார்.

இதைப்போன்ற ரோமாபுரி சிறிய நாடாக இருந்த போதுதான் உலகத்தின் புகழைப் பெற்று விளங்கியது. இதுதான் வரலாறு. இதை ஏன் மாற்ற வேண்டும்?

இன்றைய உலகில் மால்டா, சைப்ரஸ் ஏன் தனி நாடுகளாகப் பிரிகின்றன? அவர்கள் செய்த தியாகமெல்லாம் வீணுக்கா அல்லது அங்குள்ளவர்களெல்லாம் தற்குறிகளா? உலக நாடுகள் சபையில் 101 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் உட்பொருள் என்ன? 101 தனி நாடுகள் என்பதுதான்.

தயாராகவே இருக்கிறோம்

நாட்டுப் பிரிவினை கோருபவர்கள் ஒரு சிறிய கூட்டத்தினர் என்று நிதியமைச்சர் கூறினார். அவர் எதைக் காரணமாக வைத்துக் ்கொண்டு கூறினாரோ? ஒருவேளை, அவருக்குப் பின்னாலேயுள்ள 150 பேர்களையும், 15 பேர்களாக உள்ள எங்களையும் பார்த்து அவ்விதம் கூறினாரோ, என்னவே? நாங்கள் சிறிய கூட்டத்தினர்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இந்த நேரத்தில் எனது நண்பர் சின்னதுரைக்கு, உள்நாட்டுப் போரை நாங்கள் ஆரம்பிப்போம் என்பதல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். இதைக் குறிப்பிட்டவர் பண்டித நேரு அவர்கள்தான்.

நாங்கள் கொல்லப்படுவதாக இருப்பின், இறப்பதற்குத் தயாராக இருக்கிறோம். நாங்கள் இறந்த பிறகு ஒருவேளை எங்களுக்குப் பின்னால் வருபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்களோ.

நிதியமைச்சர் அமெரிக்காவில் நடைபெற்ற வடக்கு தெற்கு உள்நாட்டுப் போரைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் அமெரிக்கா உள்நாட்டுப்போரை எண்ணிக் கொண்டு இருக்கிறார். அமெரிக்காவில் நடைபெற்ற போர், அடிமைப் பிரச்சினையின் விளைவாக எழுந்ததே தவிர, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற அல்ல என்பதை அவர் நினைவுப்படுத்திக் கொண்டு, நாட்டு மக்களுக்கும் அதனை எடுத்துக் கூறவேண்டும்.

எங்கள் நிலை வேறு

நான் கூட அமெரிக்காவை உதாரணத்துக்கு அழைத்துக் கொண்டு பேசமுடியும். அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த உட்ரோவில்சன், ‘ஒவ்வொரு நாடும் சுயநில்ணய உரிமை பெற்றதாக இருக்க வேண்டும்‘ என்று கூறியிருக்கிறார் இந்த அடிப்படையில் நாங்கள் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று கோரினால், நீங்கள் இப்படிப் பொருள்கொண்டால் (உள்நாட்டுப் போர் என்று) அதற்கு நாங்கள் என்ன செய்வது.

நாங்கள் தனி இனத்தவர், தனிப்பண்பாடு, மொழி, கலை, பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள். இப்பொழுது இணைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து, நாங்கள் வெளியேற வேண்டுமென்று கூறுகின்ற கருத்தை ஏன் தவறாக நினைக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் எத்தனைக் காலத்துக்குப் பாகிஸ்தான் பிரிவினையைக் காட்டி எங்களை இணைத்து வைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?

காலத்தின் கரம், என்றாவது ஒருநாள் இதை அழித்து எழுதத்தான் போகிறது என்பதை நிதியமைச்சரும் தெரிந்து கொள்ளப் போகிறார்.

எவ்விதம் இணைந்து இருக்க இயலும்?

காந்தியின் அருமைச்சீடர் மீராபெண், இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்துவிட்டு இநத்ப் பத்து ஆண்டுகளில் பல பகுதகிளில் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டுவிட்டன என்று கூறியிருக்கிறார்.

அவர்களுக்குக் கூடத் திராவிடம் புரிந்துவிட்டது, வடக்கேயுள்ள மாநிலங்கள் ஒன்றாக இருந்துகொண்டே ஒற்றுமையைப் பெற முடியவில்லை என்றால், 2,000 ஆண்டுகளாகவே வேறுபட்ட மொழி பண்பாடு இவற்றைக் கொண்டுளள் நாம். அவர்களோடு எவ்விதம் இணைந்து இருக்க முடியும்?

தாகூர், பாரதியார், பண்டித நேரு ஆகியோர் தங்கள் காலத்தில் செய்ய முடியாத காரியத்தை நீங்கள் செய்துவிட முடியும் என்றா எண்ணுகிறீர்கள்? இதனால், அவர்கள் திறமையற்றவர்கள் என்று நான் கூறுவதாகக் கருதக்கூடாது.

இரண்டு நாடுகளை இணைத்து விடுவதாலே ஒற்றுமை ஏற்பட்டு விடுமா? மூன்று ஆண்டுகளுக்கு முன்னர். அரபுத்தேசியம் என்ற பெயராலே எகிப்தும், அதற்குப் பக்கத்தில் உள்ள சிரியாவும் இணைந்தன. இநத் இணைப்பு நாட்டுக்குப் பண்டித நேருகூட வாழ்ந்து அனுப்பினர். ஆனால் மூன்று ஆண்டுக்காலம் கழித்து இப்பொழுது, ‘அராபியத் தேசியம் என்ற பெயராலே, எகிப்து நாட்டு ஆதிக்கம் சிரியாவில் இருக்கிறது‘ என்று காரணம் காட்டி, சிரியா பிரிந்து விடவில்லையா?

உரிமையை மதிக்கிறேன்

‘இனியொரு பிரிவினை கிடையாது‘ என்று அமைச்சர் கூறினார். அவருடைய குரலில் பண்டித நேருவின் குரல் கேட்டது. ‘அணுகுண்டு காலத்தில், பாகிஸ்தான் என்று பேசுவது பொருளும் இல்லை, அதற்கு இடமும் இல்லை‘ என்று முன்பு அவர் பேசினார். இப்படி வீராப்புப் பேசியவர்தான் பிரிவினைக்கு இணங்கினார்.

இதைப்போன்ற மராட்டிய மாநிலம் பிரிக்கப்படுவதை எதிர்த்துப் பேசினார். ஏற்பட்ட எதிர்ப்பைக் கண்டு அவரே மராட்டியத்தைப் பிரித்துக் கொடுத்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலை இங்கு உருவாகத்தான் போகிறது. அப்படி உருவாகும் நேரத்தில் நீங்களும் அதனை ஒப்புக் கொள்ளத்தான் போகிறீர்கள்.

“உங்களிடமிருந்து நட்பு, நேரம், நல்லெண்ணம் ஆகியவற்றைப் பெறக்கூடாது என்ற எண்ணம் எனக்கில்லை. நான் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பதையே இந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் அருவருப்போடு பார்க்கிறார்கள். நான் இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்கிறேன். காரணம், எனது இலட்சியத்தில் தாங்கிக் கொள்கிறேன். காரணம், எனது இலட்சியத்தில் எனக்குள்ள உறுதிதான். உங்களை நான் மதிக்கிறேன். அதைவிட என் உரிமையை மதிக்கிறேன்.

(நம்நாடு - 13,14.11.61)