அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கத்தி எடுத்தவன் கத்தியாலேயே மடிவான்
1

வகுப்பு வாதத்தை அடக்குவதற்காக என்று சட்டம் போட்டு, அதன் மூலம் எங்களை அடக்கப்பார்க்கிறார்கள். நாங்கள் என்ன அப்படி அடிதடியில் இறங்கக்கூடியவர்களா? அப்படி இறங்கினால்தான் உங்கள் போலீசு சும்மா இருக்குமா?

‘நாங்கள் அடிதடி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் போலவும். எங்களைப் போலீசார் விட்டுவைத்துக் கொண்டிருப்பதைப் போலவும், இந்தச் சட்டத்தை இப்போது கொண்டு வந்திருக்கிறீர்கள்.

“இந்தச் சட்டம் எங்களை அடக்குவதற்காக உருவாக்கப்படவில்லை என்றால், பாராளுமன்றத்தில் இந்தச் சட்டம் வந்தபோது அதைப்பற்றி பேசியவர்க்ள் எல்லாம் என்ன பைத்தியக்காரர்களா? ‘இச்சட்டம் நிறைவேறினால் பிரிவினையைத் தடுப்பதற்குப் பதிலாகப் பிரிவினைக்காரர்களுக்கே வலிவு ஏற்படும்‘ என்று அவர்கள் பேசினார்களே!“

அதன் பொருள் என்ன?

“அப்போது ‘மெயில்‘ பத்திரிகை தனது தலையங்கத்தில் ‘சட்டம் போட்டால் மட்டும் போதாது( அதை அமுல்படுத்த வேண்டும்‘ என்று எழுதவில்லையா? ‘இந்து‘ பத்திரிகை இச்சட்டத்தை ஆதரித்து எழுதுகையில், ‘காங்கிரசுக்காரர்கள் வகுப்புவாதக் கட்சித்தலைவரோடு சேர்ந்திருக்கிறார்களே‘ என்று குறிப்பிடவில்லையா? சட்டம் நிறைவேறிய அன்று இரவு 10 மணிக்கு என்னைத் தொலைபேசி மூலம் ஒரு பத்திரிகைக்காரர் கூப்பிட்டுக் கேட்டாரே, ‘உங்கள் கட்சியை ஒழிக்கச் சட்டம் நிறைவேறி விட்டதே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று டெல்லியிலே நடந்த முதலமைச்சர் மாநாட்டில், ‘பிரிவினைகோரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தடை போட வேண்டும்‘ என்று வடநாட்டைச் சேர்ந்தவர்கள் சொல்ல, அதைக்கேட்டு நமது முதலமைச்சர் ‘அதெல்லாம், இப்போது வேண்டாம்( தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்‘ என்று கூற, உடனே சட்ட அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி எழுந்து, இப்போது பாராளுமன்றத்திலே ஒரு மசோதா வந்திருக்கிறது( அது நிறைவேறினால் போதும். அதைக் கொண்டே பிரிவினைச் சக்திகளை ஒடுக்கிவிடலாம்‘ என்று கூறினாரே அதன் பொருள் என்ன?

“எனவே, ‘வடக்கு தெற்கு‘ என்று பேசினாலேயே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம்“ என்று சென்னை மாவட்டத் தி.மு.க. சார்பில் ஒற்றைவாடைக் கலையரங்கில் நே்று நடைபெற்ற தேர்தல் நிதிச் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நானும் சட்டம் படித்திருக்கிறேன்

அண்ணா அவர்கள் 153ஆவது பிரிவுச் சட்டத்தைப் பற்றியும் நிதியமைச்சர் அது பற்றிப் பேசியதைக் குறிப்பிட்டும் விளக்கியதாவது

“153ஆவது சட்டம் என்பது புதிது அல்ல, ஏற்கனவே இருப்பதுதான். ஆனால், அதில் இப்போது ஒரு திருத்தம் சேர்த்திருக்கிறார்கள். 153ஆவது சட்டத்தில், ‘ஏ‘, ‘பி‘ என்று சில பிரிவுகள் இருக்கின்றன. சுவரொட்டியில் அதையெல்லாம் போட்டு விளக்க இடமில்லாததால் அதைக் குறிப்பிடவில்லை.

“நான் சட்ட நிபுணனல்ல, ஆனால், எனக்கச் சட்டம் தெரியாது என்று பொருளல்ல. நானும் சட்டம் படித்திருக்கிறேன். ஏற்கனவே இருந்து வந்த இந்தச் சட்டத்தில், ‘தவறான நோக்கத்தோடு‘ ஒருவர் பேசினால், வழக்குப் போடலாம் என்று இருந்தது. இப்போது, ‘தவறான நோக்கத்தோடு பேசினால்‘ என்ற வாசகத்தை நீக்கிவிட்டார்கள். பழைய சட்டப்படி யார் மீதேனும் வழக்குத் தொடரப்பட்டால் ‘தவறான நோக்கத்தோடு பேசவில்லை‘ என்று வழக்கு மன்றத்தில் சொல்லலாம். இப்போதுள்ள சட்டப்படி எப்படிப் பேசினாலும் வழக்கு தொடரப்படும். பிறகு வழக்கு மனற்த்தில் போய், அப்படிப் பேசவே இல்லை‘ என்று நிரூபித்தாக வேண்டும்“.

“அரசாங்க ஒற்றர் காங்கிரசுக் கட்சிக் கூட்டத்திற்கச் சென்று குறிப்பெடுத்து வந்தால், அவர்கள் பேசுவதைக் குறிப்பிட்டு வாதாடலாம். ஆனால், அரசாங்க ஒற்றர் அவர்கள் கூட்டத்திற்குச் செல்வதில்லை. எனவே வழக்கு மன்றத்திற்குச் சான்று காட்ட வேறு வழியில்லை.

வலிமையைப் பார்ப்போம்

“நிதியமைச்சர் சொன்னாராம் – ‘இந்தச் சட்டம் தி.மு.கழகத்திற்கு அல்ல. அவர்களை அது பாதிக்காது‘ என்று( அப்படியானால் நாங்கள் போட்ட சுவரொட்டியும் சட்டத்தைக் குறிப்பிட அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அந்தச் சட்டம் விஷம் கக்கினால் பாம்பாக வடிவெடுத்தால், சுவரொட்டியிலே காட்டப்பட்டுள்ளது போலத்தான் நடக்கும்.“

“நாங்கள் சட்டத்திற்கு மதிப்பளிக்கிறோம். எனவேதான், பாம்புகளைக் கையால் நெறிப்பது போல் படம் போட்டோம். ‘153‘ என்று போட்டு அதன்மீது காலால் மிதிப்பதுபோல் காட்டி, ‘சட்டத்தை மிதித்துத் துவைப்போம்‘ என்று கூறுவது போல் படம் போடவும் எங்களுக்குத் தெரியாமலில்லை. ஆனால் அப்படிச் செய்ய விருப்பமில்லை.“

“இந்தச் சட்டம் பாம்புபோல் விஷத்தைக் கக்க ஆரம்பித்தால் பிறகு, என்ன செய்ய வேண்டுமோ அது நடக்கும். தைரியமிருந்தால், இந்தச் சட்டத்தை எங்கள் மீது பயன்படுத்திப் பாருங்கள் – உங்கள் பாம்புக்கு உள்ள வலியையும் எங்கள் கரங்களுக்கு உள்ள வலிமையையும் பார்ப்போம்.“

அண்ணா அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது –
“காஞ்சிபுரத்திற்கு வந்திருந்த நிதியமைச்சர் சுப்பிரமணியம் வழிநெடுகிலும் கட்டப்பட்டிருந்த ‘153‘ பாம்புச் சுவரொட்டியைக் கண்டு ஆத்திரப்பட்டு, பதிலளிக்கும் முறையில், நகைச்சுவையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு பேசியிருக்கிறார்.

கலை உள்ளமும் அவருக்கில்லை

“எப்போதுமே நமது நிதியமைச்சர், நகைச்சுவையாகப் பேச நினைத்துப் பேசினால், தானே சிரித்துக் கொண்டு பேசுவாரே தவிர, அதைக் கேட்பவர்க்குச் சிரிப்பு வராது( அவருக்கு நகைச்சுவையே வராது. ஏனென்றால் அவருக்கு நகைச்சுவை உள்ளம் கிடையாது( ஏன் கிடையாது என்றால் அவருக்குக் கலை உள்ளம் இல்லை.

அவர் சொன்னாராம் – ‘இந்தச் சுவரொட்டியில், ‘153‘ என்ற எண், பாம்புபோல வரையப்பட்டிருப்பதைப் பார்த்ததும். முதலில் எனக்கு அந்தச் சட்டத்தின் நினைவு வரவில்லை. ‘நாங்கள் 153 பேர் சட்டமன்றத்திலிருப்பதைத்தான் தி.மு.கழகத்தினர் இப்படி ‘பாம்பு போல்‘ காட்டியிருக்கிறார்கள் போலும் என்று எண்ணினேன். பிறகுதான் சட்டத்தின் நினைவு வந்தது‘ என்று.

நிதியமைச்சரின் பேச்கைக் கேட்டு எங்கள் ஊர்மக்கள் பேசிக் கொண்டார்கள், ‘காங்கிரசுக்காரர்கள் உள்படியே பாம்புதான் என்றால் அந்தப் பாம்புக்குச் செய்ய வேண்டிய வேலையைச் செய்யத்தான் வேண்டும் என்று(

நிதியமைச்சர் தமது பேச்சில், ‘153‘ ஆவது பிரிவுச் சட்டத்துக்கும் இவர்களுக்கும் (தி.மு.கவுக்கும்) சம்பந்தமே கிடையாது என்று சொன்னாராம். எப்படிச் சம்பந்தமே இல்லாமல் போய்விடும் என்பதை ஆராய வேண்டும்.

முன்னணியில் தி.மு.க.

வகுப்புவாதம் கூடாது என்று சொல்லுவதிலே திராவிட முன்னேற்றறக் கழகம், எல்லோரையும்விட முன்னணியில் இருந்து வருகிறது(

இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால் எல்லாக் கட்சியினருடைய பேச்சையும் அரசாங்கம் தன் சுருக்கெழுத்தாளரை அனுப்பி எழுதி வரச் சொல்ல வேண்டாமா?

காங்கிரசுக்கட்சிக் கூட்டத்திற்குக் சுருக்கெழுத்தாளர் அனுப்பப்படுவதில்லை( எனவே, பேசப்படும் ஜாதித் துவேஷப் பேச்சு, வழக்குமன்றத்திற்கு வராது. அந்தப் பேச்சை வைத்துக் கொண்டு வழக்கு மனற்ம் செல்ல முடியாது. ஆகையினால் எல்லாக் கட்சிக் கூட்டங்களுக்கும் அனுப்பப்படாமலிருக்க வேண்டும்.

முன் வரட்டுமே அவர்கள்(

153ஆவது சட்டப் பிரிவு நிறைவேற்றப்பட்டது உள்ளபடியே வகுப்புவாதத்தை ஒழிக்கும் காரியமா என்பதை யோசித்துப் பார்க்க வண்டும். அதற்காகத்தான் என்றால் அமைச்சர் மாணிக்கவேலர் துரிஞ்சாபுரம் தொகுதியை விட்டு வேறொரு தொகுதியில் நின்று போட்டியிடட்டுமே( முதலமைச்சர் காமராசர் சாத்தூர் தொகுதியை விட்டு வேறொரு தொகுதியில் அல்லவா நிற்க வேண்டும்?

இப்படி எந்தெந்த வகுப்பு எங்கு அதிகமாக இருக்கிறதோ அந்தந்த வகுப்புகளைச் சார்ந்தவர்கள் அந்தந்தத் தொகுதியில் போட்டியிடுவது மாற்றப்பட வேண்டாமா?

நான் சார்ந்துள்ள – தொகுதி எந்த வகுப்பாரையும் பெருமபான்மையாகப் பெற்றிராத தொகுதியாகும். அங்கேகூட, சில நாட்களுக்கு முன்பு துருவித் துருவி ஆராய்ந்தார்கள்( - எந்த வகுப்பார் அதிகம் என்று நாயக்கர்கள் என்று சொல்லப்படும் வகுப்பார் அதிகம் என்று. ஒரு நேரத்தில் கருதப்பட்டது( ‘அதுவும் இல்லை‘ என்று இப்போது கணக்கெடுத்துப் பார்த்துக் கூறுகிறார்கள்.

எனவே, அரசியலில் தரத்தையும், நியாயத்தையும் நிலைநாட்ட வேண்டாமா?

வேறு தொகுதியில் போட்டியிடத் தயார்!

நான்கூட வேறு தொகுதியிலிருந்து – அந்தத் தொகுதி மக்களால் விரும்பு அழைக்கப்ட்டால் அங்குச் சென்று போட்டியிடத் தயாராகியிருக்கிறேன். தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் எனக்கு இடமில்லை என்று மக்கள் தீர்பபளித்து விட்டால், பிறகு அப்படிப்பட்ட சட்டமன்றத்தில் எனக்கென்ன வேலை? எனவே நான் வேறு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்று கவலைப்பட மோட்டேன்.

அரசியலில் 5 ஆண்டு என்பது ஒரு கைநொடிப் பொழுதாகும். எனவே ஒரு ஐந்தாண்டுக்குச் சட்டமன்றத்திற்குப் போகாதிருந்து விட்டால் ஒன்றம் நஷ்டமில்லை.

ஆகையினால் முதலில் ஜாதியின் பெயர்களை அகற்றி, அந்த உணர்ச்சிகளை மாறற் வழிகோலுங்கள் என்று அரசினரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மாற்ற முயன்றார்களா?

இப்பொழுதுகூட, முதலமைச்சர் காமராசர் சட்ட மன்றத்தில் உட்காருமிடத்தில், நாற்காலியின் பின்புறம் எழுதி ஒட்டப்பட்டிருக்கும் பெயரைப் பார்த்தால், ‘காமராஜ நாடார்‘ என்றுதான் இருக்கும். காமராசர் காங்கிரசுக் கமிட்டித் தலைவராக இருந்த நேரத்தில், ‘காமராஜ்‘ என்று அழைத்து வந்தார்கள். முதலமைச்சரானதும், ‘காமராஜ் நாடார்‘ என்றுகூட அல்ல ‘நாடார்’ என்றாலே காமராசரையே குறிக்கும் என்கிற அளவுக்கு நாட்டிலே பேசப்படுகிறது. அதைப்போல, ‘நாயக்கர்‘ என்றால் மாணிக்கவேலரையும், ‘முதலியார்‘ என்றால் பக்தவத்சலத்தையும் குறிக்கும் நிலைமையைப் பார்க்கிறோம். இந்த நிலைமையை மாற்ற அவர்கள் முயன்றார்களா?

இன்று நாட்டில் ஒவ்வொரு தெருவும் சாதியின் பெயரால் அழைக்கப்படுவதைப் பார்க்கிறோம். துணி வெளுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வசிக்கும் தெருவைக் கேவலமான பெயரிட்டுச் சாதியின் பெயரால் அழைக்கிறார்கள். இன்னமும் இந்த நிலை நீடிக்கலாமா? ஏன் இதை மாற்றக்கூடாது.

அடுத்த தலைமுறையாவது பின்பற்றக் கூடுமல்லவா?

என்னுடைய பிள்ளையைப் பார்த்துக் ‘கள்ளுக்கடை தெரியுமா?‘ என்று கேட்டால் அவனுக்குத் தெரியாது( ஏனென்றால் அவன் மதுவிலக்குச் சட்டம் ஏற்பட்ட பிறகு பிறந்தவன்.

அதேபோல், இந்தத் தலைமுறையில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கிவிட்டால், அடுத்துவரும் தலைமுறைகளாவது ஜாதியைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருக்கச் செய்ய வழி ஏற்படும்.

எனது தொகுதியில் ஒரு சிற்றூருக்குப் பெயல் ‘லப்பைப் குடிக்காடு‘ என்று இருக்கிறது. இதைப்போல திருச்சி மாவட்டத்திலும் இருக்கிறது. இன்னும் ‘செட்டியார்பேட்டை‘ என்று ‘ரெட்டியார்புரம்‘ என்றும் இருப்பதைப் பார்க்கிறோம்.

இவற்றின் பெயர்களையெல்லாம் மாற்ற ஒரு தனி ஐந்தாண்டுத் திட்டமா தேவை? அதற்கு அமெரிக்காவில் இருந்தா பணம் வரவேண்டும் இங்கிாந்திலிருந்தா போர்டு எழுதி வரவேண்டும்? கொஞ்சும் மனம் வரவேண்டு்ம்- அவ்வளவு தான்.

“153 ஆவது சட்டப்பிரிவு கொண்டு வந்தது முதல் அதைப்பற்றி நாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் பிரச்சாரம் செய்வதைக் கண்டு அஞ்சிய டெல்லி அமைச்சர் ஒருவர். ‘திராவிட நாடு, பேச்சளவில் குறைவில்லை. அதை நடைமுறையில் கொண்டு வந்தால் குற்றம்‘ என்று விளக்கம் அளிக்க முன்வந்திருக்கிறார். அதற்குத்தானா நம் வரிப்பணத்திலிருந்துத மூவாயிரம் ரூபாயை அவருக்குச் சம்பளமாகக் கொட்டி அழுகிறோம்.“

“சிறுநீர் கழித்தால் சிறை கொலை செய்தால் விட மாட்டோம். திருடினால் தண்டனை என்று எந்த போலீஸ்காரனும் சொல்லமாட்டான். அதைவிடக் கீழானவரா அமைச்சர்? - சட்டத்திற்கு மாறாக நடந்தால் தண்டனை என்பது யாருக்குத் தெரியாது? இதை அவர் சொல்லித்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமா?

“பலாத்காரத்துக்கு நீங்கள் எங்களைத் தள்ளினால் பிறகு விளைவைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலைத் தி.மு.க. தலைவர்கள் இழந்துவிட நேரிடும். கழகமே இருக்காது. எனவே, விளையாட்டாகக் கருதி வினையைத் தேடிக் கொள்ளாதீர்கள் என ஆட்சியாளரை எச்சரிக்கிறேன்.“

மக்கள் சும்மா விடமாட்டார்கள்

“பலாத்காரம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் நான் இன்னும் எத்தனை ஆண்டுக்காலம் இருக்கப்போகிறேன்? பிறகு தி.மு.க. தலைவர்களுக்கு எந்தத் தீங்கு நேரிட்டாலும், மக்கள் உங்களைச் ச‘சும்மா விடமாட்டார்கள். மக்கள் சக்தியை எந்தச் சக்தியும் வென்றதாகச் சரித்திரமே கிடையாது. இதைப் படித்தும் அறியாத – பார்த்தும் உணராத – உணர்ந்தாலும் வெளிக்காட்டாத நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் பெரிய ஜோதிடக்காரரைப் போல் கணித்துப் பேசியிருக்கிறார்.

“நாம் அடிமைகள் என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டோம். ‘வடக்கு வாழ்கிறது. தெற்குதேய்கிறது‘ என்பதைச் சொல்லிவிட்டோம். ஐந்தாண்டுத் திட்டத்திலே நமக்கு நீதியில்லை என்பதைக் கூறிவிட்டோம். வடவராட்சியில் நமக்கு வாழ்வு இல்லை என்பதை விளக்கிவிட்டோம். நாம் வாழ வேண்டும் என்றால் நமக்கென் ஒரு ஆட்சி இருக்க வேண்டுமெனத் தெளிவுபடுத்திவிட்டோம். திருக்கழுக் குன்றத்தைச் சுற்றி, ‘சொக்கம்மா‘ என்று கூப்பிட்டால் ஏனம்மா என்று பதில் வரும என்பார்கள். அதைப்போல், கொடுக்க வேண்டிய குரலைக் கொடுத்துவிட்டோம். பதில் வராது என்றா கருதுகிறீர்கள்? இவவளவுக்குப் பிறகம் வடவர்களைப் பார்த்துச் ‘சிலப்பதிகாரமா? – கொளுத்தி விட்டோம். மணிமேகலையா? – அழித்துவிட்டோம், சிந்தாமணியா ஒழித்துவிட்டோம்‘ என்று நமத மக்கள் சொல்லிவிடுவார்களா?“

தாங்களே மரித்துக் கொள்வார்கள்

“மந்திரவாதி எலும்பை வைத்துக்கொண்டு மனிதனை மிரட்டுவான். நீங்கள் மனிதர்களை வைத்துக் கொண்டு யாரை மிரட்டுகிறீர்கள்? தி.மு.க. அழியும் – அழியும் என்று சுப்பிரமணியம் பேசுவது அவர் அழிவையே அவர் சுட்டிக்காட்டுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மற்றவர்கட்குக் குழி வெட்டுபவர்கள் – தாங்களே அதில் விழுந்து மரித்துக் கொள்வார்கள் என்பது பழமொழி அல்லவா?‘

‘எனவே நீங்களெல்லாம் வருகின்ற பொதுத் தேர்தலுக்கு அயராது தளராது பணிபுரிந்து பெரும் வெற்றி பெற்றுக் காட்டி நமது விடுதலைக் கோரிக்கைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.“

‘கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்‘ எனும் இயேசுவின் பொன்மொழி நினைவிருக்கட்டும். ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு‘ என்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் இரு நாடகத்தில் எழுதியதுபோல், கத்தியினால் பலன் இல்லை. குத்துப்பட குத்துப்படத்தான் கழகம் வளரும். குத்தக்குடியவர்கள் குத்தட்டும். எங்களில் சாகத் துணிந்தவர்கள் சாகிறோம். உங்கள் கத்திகள் மழுங்குகிற அளவுக்கு எங்களிடம் மார்புகள் இருக்கின்றன. கத்தி மழுங்கியபிறகு. கத்தியோடு நிற்பவர்களை எதிர்த்து எங்களில் மிச்சமுள்ளோர் கண்களில் ஆர்வத் தீ கொழுந்துவிட்டு எரியும். அது மிகவும் பயங்கரமானது.

“இட்லர் விமானங்களை அனுப்பி இரவு 12 மணிக்குமேல் இலண்டன்மீது வெடிகுண்டுகளை வீசச் செய்தான். பல முக்கியமான கட்டிடங்கள் இடிந்தன. இலண்டன் பாராளுமன்றத்தின் ஒரு பகுதி சிதைந்தது. அதே பாராளுமன்றத்தில் இட்லர் என்ன பயங்கரம் புரிந்தாலும் இலண்டன் மாநகரம் தாங்கும்‘ என்று கூறினார் சர்ச்சில். அதுபோல் “எப்படிப்பட்ட கொடுமைக்கு ஆளாக்கினாலும், எத்தகைய வழக்குகளைப் போட்டாலும், எத்தனை வெட்டு, குத்துகள் ஏற்பட்டாலும் தி.மு.கழகம் அதைத் தாங்கும்.

இரத்தம் உணர்ச்சியூட்டும்

‘கத்தியால் எங்களைக் குத்த முடியும். ஆனால் குத்தக் குத்தக் கத்தி கூர் மழுங்கும். சிந்தும் இரத்தம் மற்றவர்களுக்கு உணர்ச்சியூட்டும்.

‘சென்னை நகரத்தில் நம் கழகத் தோழர்கள் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதால், வழக்குகளை நடத்துவதற்கு நிதி திரட்டுவதற்காகக் கூட்டப்பட்ட இத்தேர்தல் நிதி வழக்குச் சிறப்புக் கூட்டத்தில் நீ்ங்கள் காட்டிய ஆதரவு போதுமானது என்று நான் கருதவில்லை.

தோழர் அன்பழகன் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்ற விவரங்களைக் கொண்டு போலீசார் எத்தகைய வழக்குகளை நம்மீது போடுகிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதைப்போன்ற வழக்குகள் மட்டுமல்ல – இன்னும் பல வழக்குகள் கழகத் தோழர்கள்மீது போடப்படலாம். இவைகளுக்கு நீதிமன்றம் சென்று நீதிபெற, சென்னைக்கு மட்டும் ரூ.10,000 இருந்தால்தான் நம்மால் சமாளிக்க முடியும். பத்திரிக்கைகளில் தனி அறிவிப்பு தந்த ஒரே ஒரு நிகழ்ச்சியில் ரூ.10,000 சென்னை நகருக்கு மட்டும் திரட்டியாக வேண்டும்.

வழக்கு சாமானியமானதல்லவே

தோழர் அன்பழகன் சொன்ன விஷயங்களை, பரபரப்புடன் கேட்டீர்கள். நீங்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் அளித்தால் தான் அன்பழகன் பேசியதற்கு நீங்கள் ஆதரவு தந்ததாகப் பொருள். நீங்கள் காட்டிய விறுவிறுப்புக்கும் அத்தாட்சி.

இத்தகைய வழக்குகளில் வெற்றிபெற நமக்கு வழக்கறிஞர்கள் ஏராளமாகக் தேவை. நமக்கென்று நான் சொன்னது. நாம் செலவிடக் கூடிய பணத்திற்கு வரக்கூடிய வழக்கறிஞர்கள் என்று பொருள்.

நம்மீது போடப்படுகின்ற வழக்குகளில் வெற்றிபெற ஏராளமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வழக்கின் செலவுக் கணக்கையும் பார்க்கின்றபோது, நம்மாள் தாங்க முடியாத அளவுக்குப் பணம் செலவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு பெரிதும் வருத்தம் அடைய வேண்டியுள்ளது. பணமில்லாமல் வழக்குகளை எப்படிச் சமாளிப்பது?

சாட்சியம் முக்கியமல்லவா?

அன்பழகன் அவர்கள் இரண்டு ஆடுகளைப் போலீசார் எடுத்துப் போனதாகவும், நாலு கோழிகளைப் பிடித்துப் போனதாகவும், ஆறு வாத்துகளை எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார்கள். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், நீதிபதி வழக்குத் தொடுப்பவரைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி, ‘எடுத்துப் போனதற்கு யார் சாட்சி? என்ன சாட்சி?‘ என்பதுதான். இதை நம்முடைய பக்கத்து வீட்டிலிருக்கும் ஒரு தோழர்தானே பார்த்திருக்க முடியும்? அவர் சாட்சி சொல்ல வந்தால், ‘இவரும் கழகத்தைச் சார்ந்தவர். எனவே, இவர் சாட்சியம் நம்பத் தகுந்தது அல்ல‘ என்று எதிர்த்தரப்பு வக்கீல் கூற, உண்மையான நம் வழக்கு தள்ளப்பட்டுவிடும். எனவே, வழக்குக்குச் சாட்சி முக்கியம். நம் கட்சித் தோழர்கள் தான் சாட்சி சொல்ல வருவார்கள். எதிர்க்கட்சித் தோழர்களா சாட்சி சொல்ல வருவார்கள்?