அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கத்தி எடுத்தவன் கத்தியாலேயே மடிவான்
2

அடித்தான் என்பதும்அடித்துத் துரத்தினான் என்பதும் ஒன்றாகத் தெரிந்தாலும், சட்டச் சிக்கல்கள் ஏராளமாக இருப்பதால் வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள். ‘அடித்தான்‘ என்பதற்கு வேறொரு சட்டப்பிரிவு போடுவார்கள் ‘துரத்தினான்‘ என்பதற்கு இன்னும் அடிப்பதற்காக மிரட்டித் துரத்தினான்‘ என்றும் பொருள் கொள்வார்கள். எனவே, இந்தச் சட்டப்பிரிவுகளிலிருந்து விடுபடுவதற்கு வழக்கறிஞர்கள் தேவை. அதற்கு நமக்குப் பணம் தேவை.

இதையெல்லாம் எண்ணித்தான் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு நாடகத்தில், ‘சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு. அந்த விளக்கை ஏழைளால் எளிதில் பெற முடியாது‘ எனக் குறிப்பிட்டிருந்தேன். பணக்காரர்களுக்கு அந்த விளக்குகள் மிகச் சுலபத்தில் கிடைக்கு்.

ஏழை உழவன் மகளுக்கு நேரிட்ட கதி

அந்தக் காலத்திலே பிரெஞ்சு நாட்டு வழக்குமன்றத்தில் ஒரு வழக்கு நடந்தது. தன்னுடைய கைகளை ஓர் உழவன் மகள் காயப்படுத்திவிட்டதாக நீதிபதியிடம் ஒரு பிரபுவின் மகன் புகார் கொடுத்தான். அந்த ஏழைப்பெண், நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டாள். அவளை விசாரித்த பொழுது தெரியவந்தது இதுதான். சந்தைக்குச் சென்று ஒரு சந்து வழியாக அவள் வரும்பொழுது குதிரை வண்டியில் வந்து கொண்டிருந்து அந்தப் பிரபுவின் மகன் கண்களில் அவள் தென்பட்டுவிட்டாள். மூக்கும் முழியுமாக இருந்த அந்தப் பெண்ணைக் கண்ட பிரபு, முதலில் தண் கண்களால் சாடை காட்டி அவளை அழைத்தான். அவள் பேசாமல் சென்று கொண்டிருக்கவே, வண்டியை நிறுத்திக் கீழே இறங்கிய அப்பிரபுவின் மகன், அவள் கையைப் பற்றி இழுத்தான். அவள் கண்ணாடி வளையல்கள் உடைந்து அவனுடைய உள்ளங்கையில் கீறி இரத்தம் வந்துவிட்டது. இதுதான் நடந்த சம்பவம். இதற்காக அந்த நீதிமன்றம் அந்தப் பெண்ணிற்குச் சிறை தண்டனை விதித்தது, காயப்படுத்திய காரணத்திற்காக அந்தக் காரிகை காராக்கிருகத்தில் தள்ளப்பட்டாள்.

இன்று நிர்வாகம் சீர்கெட்டிருந்தாலும் நீதி கிடைக்கிற்து என்று நான் மனமார நம்புகிறேன். தீர்ப்புகள். நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதையும் அறிகிறேன் அண்மையில் ஒரு கொலை வழக்குத் தீர்ப்பில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர், அந்த வழக்கிற்குப் பின்னால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருப்பதைச் சுட்டிக்காட்டித் தீர்ப்பு தந்திருக்கிறார். வேறு பல நீதிமன்றங்களும், போலீசார் பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன.

காங்கிரஸ் தலைவர்கள் முன்வருவார்களா?

நம் தோழர்கள் மீது போடப்படுகின்ற வழக்குகள் உண்மையானவையா என்பதை அறிய நீதித்துறையில் உள்வர்களை சட்ட நுணுக்கம் தெரிந்த ஒரு வழக்கறிஞர் குழுவை ஏற்படுத்தி நீதி விசாரணை நடத்தி, நம் தோழர்களைக் குற்றவாளிகள் என்று நிரூபித்தால், அச்சம் – தயை- தாட்சண்யம் இன்றி அவர்களைக் கண்டிக்கிற பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதைப்போல் காங்கிரஸ் கட்சியினர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களைக் கண்டிக்கிற பொறுப்பைக் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

அன்பழகன் அவர்கள், இவைகளெல்லாம் போலீஸ் அமைச்சரின் பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். நான் உங்களுக்கும் சொல்வேன் – அன்பழகனுக்கும் சொல்லிக்கொள்வேன் – தண்ணீரைக் கொண்டு தண்ணீரைக் கழுவ முடியாது. போலீஸ் அமைச்சரைக் கொண்டு போலீஸ்த் துறையைத் திருத்த முடியாது. ஒரே மரத்தில் காய்த்த காய்கள் ஒரே பீசில் கிழிக்கப்பட்ட துணிகள் அவர்கள்.

எங்கள் ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அமைச்சர் பக்தவச்சலத்திடம் கூறினேன். அதற்கு அவர், ‘சாட்சி யார்?‘ என்று கேட்டார். நான் போலீஸ்காரர்கள் செய்கின்ற அட்டூழியங்களை எடுத்துக் கூறினேன். அவர் மனம் அதைப் பற்றி என்ன நினைக்கிறது? அருவறுப்படைகிறதா? வெட்கப்படுகிறதா? என்பதை அறிய நினைத்து, அவர் முகத்தைப் பார்த்தேன். மனதில் தோன்றும் மாற்றங்களை அவர் முகத்தில் காண்பது அவ்வளவு எளிதல்ல. இது ஒரு நடிகனால்தான் முடியும். நான் ஒரு நடிகன் என்ற காரணத்தால், அவர் உள்ளத்து உணர்ச்சியை அறிய முயன்றேன். இப்படி கட்சிக்கு வேலை செய்யும் ஆட்கள்கூட போலீஸ்த்துறையில் இருக்கின்றார்களா என்ற அவருடைய உள்ளத்து எண்ணம் எனக்குத் தெரிந்தது. இந்த போலீஸ் அதிகாரி யாரென்று அறியும் ஆவல் உணர்ச்சி அவருக்கு எழுந்ததும் தெரிந்தது.

பலன் கிடைக்க வேண்டாமா?

‘அன்பழகன்தானே பேசுகிறார். அணண்ா பேசவில்லையே என்று அவர்கள் சும்மா இருக்கக்கூடும்‘ என்று அன்பழகன் பேசுகையில் குறிப்பிட்டார் நான் பேசாதிருக்கும் வரையிலாவது ‘இன்னும் துருப்புச் சீட்டு இறங்கவில்லை‘ என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். துருப்புச் சீட்டும் இறங்கிவிட்டால் ஆட்டத்திற்குப் பலன் கிடையாது.

எனக்கு நீதிமன்றத்திடம் இன்னும் நிறைய நம்பிக்கை இருக்கிறது. பம்பாயிலே ஒரு வழக்கு நடந்தது. அது வேடிக்கையான வழக்கு மட்டுமல்ல. விசித்திரமான வழக்கும்கூட. மத்திய அரசாங்கம் வெளியிட்ட செய்தியில்... சர்க்கார் தரப்பில் வாதாடும் வக்கீல்) என்று அச்சிடுவதற்குப் பதிலாக... என்று அச்சிட்டார்கள் என்றால் ‘உடலையும், உள்ளத்தையும் சற்றுத் தாரளமாக விலைக்குத் தருவது‘ என்பது பொருள். அந்த அம்மையார் பெயர் எனக்கு நினைவில்லை. அதைச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. அந்த அம்மையார் மத்திய அரசாங்கத்தின் மீது பம்பாய் நீதிமன்றத்தில் மானநட்ட வழக்கு போட்டார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இது தவறு என்று தெரிகிறது. எனவே கோர்ட்டுக்கு வெளியில் சமாதானம் செய்து கொள்ளுங்கள்‘ என்று சொன்னார். மத்திய அரசாங்கம் ரூ.15,000 கொடுத்து சமாதானம் செய்து கொண்டது.

நீதி குறைந்துவிடவில்லை என்பதை உணருகிறோம். ஆனால் நீதிமன்றத்தின் படிக்கட்டுகள் நிரம்ப உயரமானவை அவைகளில் ஏற உடலில் வலிவு மட்டும் போதாது, மடியில் கனமும் வேண்டும்.

நீதியை விரும்பினேன்

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு விருந்தில், ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி (அவர் இப்பொழுது இறந்துவிட்டார்) பாரிஸ்டர் எத்திராஜ் (அவரும் இப்பொழுது இறந்துவிட்டார்). இன்னொரு வழக்கறிஞர் இரண்டு பெரிய காங்கிரஸ்காரர்கள் (அவர்களில் மிகப்பெரிய காங்கிரஸ்காரர் இறந்துவிட்டார். இன்பொருவர் உயர்ந்த நிலையில் இருக்கிறார். அப்பொழுதும் உயர்ந்த நிலையில் இருந்தார்.)

ஆக நாங்கள் எல்லோரும் கலந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பாரிஸ்டர் எத்திராஜ் அவர்கள், நான் வழககைப் படித்துப் பார்த்தேன். வீடு புகுந்து ஆளைக் கொல்லத் தேடி பொருளையும் கொள்ளையடித்துச் சென்றார்கள் என்று கூறப்படும் ஒரே வழக்கில், அடிக்கடி கொள்ளை என்ற சொல் கூறப்படுகிறதே என்று துரவிப் பார்த்தேன். கொள்ளை அடிக்கப்பட்ட பொருள் என்ன தெரியுமா? ஒரு பென்சில் மேசையின் மீது இருந்தது கைப்பட்டுக் கீழே விழுந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். வீட்டின் உள்ளே சென்றதற்கு ஒரு விரிவு மேஜை அருகே சென்றதற்கு ஒரு பிரிவு களவாடிய பொருளுக்காக ஒரு பிரிவு என்று இப்படிப் பல சட்டப் பிரிவுகள் இருக்கின்றன என்றார்.

இதைக்கேட்டு கொண்டிருந்த நீதிபதி அவர்கள், ‘இதுபோன்ற வழக்குகள் எத்தனையே வந்த அடிப்பட்டுப் போயிருக்கின்றன. ‘இது வரட்டும் பார்ப்போம் என்றார். காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுமானால், இந்த வழக்கை திரும்பப் பெற சர்க்காருக்குச் சிபாரிசு செய்கிறோம் என்றார்கள்.

நான், ‘என் முகத்தாட்சண்யத்திற்காக வழக்கைத் திரும்பப் பெறுவது சரியல்ல. அப்படிச் செய்வது எனக்கே அவமானம் என்னுடைய தோழர்கள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுவதுதான் எனக்கும் கழகத்துக்கும் பெருமைதரத்தக்கது‘ என்றேன்.

நல்ல வழக்கறிஞர்கள் நமக்குக் கிடைப்பார்களானால் நிச்சயம் நமக்கு நீதி கிடைக்கும். ‘இந்த வழக்குகள் சிறிய வழக்குகள். மாஜிஸ்திரேட் கோர்ட் வழக்குகள் சாதாரண வழக்குகள்‘ என்று அலட்சியம் செய்து, சாதாரண மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வராதவர்கள்தான் நல்ல வழக்கறிஞர்களாக இன்றைய தினம் கருதப்படுகிறார்கள். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வலிவற்ற வாதம் செய்துவிட்டால், உயர்மன்றத்தில் நீதி கிடைக்காது.

வழக்கறிஞர் பெரிய மனது வைத்து, நாம் தருகின்ற குறைந்த பணத்திற்கம் சாதாரண மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குக்கூட வந்து வாதிடும் இயக்கப் பற்றுக்கொண்ட வழக்கறிஞர்கள், நம்பால் அன்பு கொண்டவர்கள், நாம் நீதிவழி நடப்போர் என்று அறிந்த நடுநிலையாளர்கள், நீதி ஒன்றினையே கருதும் வழக்கறிஞர்கள் வாதிட முன்வருவார்களானால் கட்டாயம் இதுபோன்ற அநீதி நடைபெறாது.

வசதியிருந்தால் வழக்காட இயலும்

நம் கழகத் தோழர்கள் எவ்வளவு சாதுக்கள் என்றாலும், வழக்கு மன்றம் போக வசதி இருந்தால்தான் வெற்றி பெற முடியும். போலீசாரின் நறுக்கான நான்கு வழக்குகள் உடைபட்டுப்போனால், நினைத்தபோதெல்லாம் யார்மீதும் வழக்கு ஜோடிக்கும் வழக்கத்தைப் போலீசார் விட்டு விடுவார்கள். இப்படிச் சட்டத்தைக் கொண்டு அடக்குவதற்குத் தான் ஜனநாயகம் என்று பெயர். கழக வளர்ச்சி அக்கட்டத்தை அடைந்துள்ளதால், ‘வழக்குபோட்டு வாட்டுவது‘ என்ற முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதைப் படிப்படியாகத்தான் நாம் குறைக்க முடியும்.

சட்டம் கூடப் பணக்காரர்களுக்குத்தான் வளைகிறது. காஞ்சிபுரத்தில் ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவரையும், ஒரு புட்டையும் கைப்பற்றி மதுவிலக்கு போலீசார் வழக்கு போட, சப்-இன்ஸ்பெக்டர் சாட்சி சொன்னால் போதும். இன்னொரு சாட்சி தேவையில்லை. சப்-இன்ஸ்பெக்டர் ‘சின்னசாமி வீட்டில் இந்த பாட்டிலை நான் எடுத்தேன்‘ என்று சொன்னால் போதும். வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை கிடைத்துவிடும். ஆனால் இங்கே குற்றவாளி வசதி உள்ளவர் அவர் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்தார். கோர்ட்டில் வக்கீல் சப்-இன்ஸ்பெக்டரை நோக்கி, ஐயா( இந்தப் புட்டியில் என்ன இருந்தது? என்று கேட்டார். ‘பிராந்தி‘ என்றார் அவர் ‘ஏன் விஸ்கியாக இருக்கக்கூடாது?‘ என்று வக்கீல் கேட்டார் ‘இல்லை இல்லை‘ பிராந்திதான் என்றார் சப்-இன்ஸ்பெக்டர். விஸ்கிக்கும் பிராந்திக்கும் வித்தியாசம் தெரியுமா? என்று கேட்டார் வக்கீல். தெரியும் என்றார் சப்-இன்ஸ்பெக்டர் அப்படியானால் பிராந்தி எப்படியிருக்கும்? என்றார் வக்கீல் முகர்ந்தால் ஒரே நெடியாக இருக்கும் என்றார் சப்-இன்ஸ்பெக்டர். நீங்கள் அந்தப் புட்டியை முகர்ந்து பார்த்தீர்களா? என்றால் வக்கீல். அவசரதத்தில் பார்த்தேன் என்று சொல்ல விட்டார் சப்-இன்ஸ்பெக்டர். உடனே அந்த யூகம் மிகுந்த வக்கீல். மாஜிஸ்திரேட்டைப் பார்த்து, ஐயா( தயவு செய்து மாஜிஸ்திரேட் முகர்ந்து பார்த்துவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து என்னய்யா, வெறும் தண்ணீர் இருந்த புட்டியை நீ முகர்ந்து பார்க்கவில்லையா? என்று கேட்டு, வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார். பணவலியும், வாதத்திறமையும் இருந்தால் தான் சட்டத்தை வெல்ல முடியும் – முடிகிறது.

அது போலீசார் வழக்கம்

அன்பழகனுக்குச் சொல்லிக் கொள்கிறேன் – சாட்சியில்லாமல் பணமில்லாமல், வக்கீலின் வாதத் திறமையில்லாமல் வழக்குகளில் வெற்றிபெற இயலாது. இளைஞர்கள் மீது வழக்குப் போடுவது இன்று மட்டுமல்ல, அன்று முதல் இன்றுவரை போலீசாரின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஒரு மன்னன் ஒருநாள் காலையில் எழுந்து மாடிக்குச் சென்று தெருவை எட்டிப்பார்த்தான். அப்பொழுது வீதியிலே ஓர் ஏழை – இளைத்தவன், கருத்தவன் போய்க் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துவிட்டு மன்னன் திரும்புகையில் வாயிற்படி இடித்து ஒரு சொட்டு இரத்தம் வந்துவிட்டது அதைக்கண்ட மந்திரி, ‘மன்னா இது என்ன காயம்? எப்படி ஏற்பட்டது?‘ என்று கேட்டான். மன்னர், ‘தெருவிலே ஓர் ஏழை போனான். அவன் முகத்தில் விழித்தேன். அதனால் இப்படி காயம் ஏற்பட்டுவிட்டது‘ என்று சொன்னார். உடனே அந்த மந்திரி, அந்த ஏழையை இழுத்து வரச் செய்தான். காலையில் உன் முகத்தை மன்னர் பார்த்ததால் அவர் இரத்தம் சிந்தினார். ஆகவே, பாவியாகிய நீ உயிர்வாழக் கூடாது. நீ அவ்வளவு கெட்டவன். அயோக்கியன் என்று வறி அவனைச் சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டான். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை மந்திரிகள் என்றால் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. தண்டனையைக் கேட்ட ஏழை சிரித்தான். ‘ஏன் சிரிக்கிறாய்?‘ என்று கேட்டான் மன்னன். நீங்கள் என் முகத்திலே விழித்ததால் உங்களுக்குத் தலையில் காயம் மட்டும் ஏற்பட்டது. நான் உங்கள் முகத்தில் விழித்தால் என் தலையே போகப்போகிறது – உயிரே போய்விடும்‘ என்றான்.

அக்கிரமத்தின் ஆட்சி நடைபெறும்போது இத்தகைய அவதூறு வழக்குகள் சாதாரணம்தான்.

சாறாகப் பிழிந்ததன் பலன் இதுதானா?

கழ்க நண்பர்கள் வீணான வலுச் சண்டைக்குப் போக மாட்டார்கள். ஆனால், காரசாரமான கருத்துக்களை எடுத்துச் சொல்லி விளக்குவார்கள். ஆத்திரச் செயல் உணர்ச்சி இந்த 10 ஆண்டுக்காலத்தில் அவர்களிடம் இல்லாதவாறு செய்து சாறாகப் பிழிந்துவிட்டுச் சக்கையாக அல்லவா அவர்களை விட்டு வைத்திருக்கிறேன். இதை நான் சொல்லத்தான் முடியும் நான்தானா சட்டம்? நான்தானா நீதிமன்றம்? நான்தானா நீதிபதி? எனவே, வழக்கு மன்றத்தில் நம் நியாயத்தை எடுத்துச் சொல்லி நீதி பெறுவதில் நாம் தேர்ச்சி பெறவேண்டும்.

கோவலன் கொண்டு சென்ற காற்சிலம்பு அவனுடையது தான் என்று இப்போதுதான் தெரிகிறது. ஆனால், கோவலன் கணவன் எனத்தவறாக உணர்ந்துதான் பாண்டிய மன்னன் அவனை வெட்டுப் பாறைக்கு அனுப்பினான். கண்ணகி கூடத் தனக்குச்சாட்சியாக இன்னொரு சிலம்மைப உடைத்து, அது மாணிக்கப்பரல் உடையது‘ என்று காட்டிய பிறகுதான், ‘யானே அரசன்? யானே கள்வன்‘ என்று கூறிப் பாண்டிய மன்னன் உயிர் துறந்தான். மன்னனுடனே கோப்பெருந்தேவியும் மாண்டாள்.

தூய்மையான ஆட்சி நடந்த அந்தக் காலத்திலேயே கண்ணகி தன் காற்சிலம்பைச் சாட்சியாகக் கொண்டு வந்து காட்டி நீதி பெற்ற போது, அந்தோணி அம்மாள் சாட்சி கொண்டுவர வேண்டாமா? சாட்சி இல்லாமல் அன்னம்மாள் எப்படி வழக்கு போட முடியும்?

அன்புள்ளோர் அதிகம் தேவை

வழக்கறிஞர்களைப் போலவே நல்ல பல டாக்டர்கள் நமக்குத் தேவை. நம்மைக் குத்துவார்கள், வெட்டுவார்கள். அந்த நேரத்தில் அவர்களைக் காப்பாற்ற டாக்டர்கள் தேவை. ஆச்சாரியாருக்குக் கறுப்புக்கொடி காட்டியபோது சென்னைக் கோட்டை இரயில் நிலையத்திற்கு அருகில் முள் வேலிக்கு அருகில் கழகத் தோழர்களை மடக்கி போலீசார் அடித்தனர். காயம்பட்ட தோழர்களுக்குக் கட்டுக்கட்டினால் ஆட்சியாளருக்குக் கோபம் வரும் என்று உணர்ந்த டாக்டர்கள், அன்று தங்கசாலைத் தெருவில் இருந்த நம் தலைமை நிலையத்திற்கு அடிபட்ட தோழர்களுக்கு மருந்து தடவ, கட்டுக்கட்ட ஒருவரும் வரவில்லை. ஆனால் ஒரே ஒரு டாக்டர் மட்டும் வந்தார். அவருடைய தைரியத்தைப் பாராட்டினேன். இறுதியில் விசாரித்ததில் அந்த டாக்டரிடம் யாரும் போவதில்லை என்று தெரியவந்தது. இன்று நிலைமை மாறி இருந்தாலும், இன்னும் மருத்துவர்கள் நம்பால் அன்பு கொண்டவர்கள் பெருக வேண்டும்.

‘கத்தியால் குத்தப்பட்ட கபாலிக்கு நல்ல மருத்துவச் சிகிச்சை கிடைத்தது‘ என்று அன்பழகன் குறிப்பிட்டார். ஆனால் பத்து வருடத்துக்கு முன் இவ்வாறு ஒருவர் குத்தப்பட்டிருந்தால், ‘செத்தான்‘ என்ற நிலைதான் இருக்குமே தவிர, ‘குத்துப்பட்டுப் பிழைத்தார்‘ என்ற நிலைமை இருந்ததிருக்காது. குத்துப்பட்டு வந்தவுடன் கட்டுக் கட்டி, கபாலியைக் காப்பாற்றிய மருத்துவத் துறைக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அத்திப்பழத்தில் அத்தனையும் சொத்தையா?

அன்பழகன் அவர்கள் போலீசுத் துறை முழுவதும் கெட்டுவிட்டதாக போலீசுத் துறையில் குற்றம் குறைகள் மலிந்துவிட்டதாக எடுத்துச் சொன்னார்கள் போலீசுக்காரர்கள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல. அத்திப் பழத்தில் அத்தனையும் சொத்தையல்ல. ஓரத்தில் வெம்பி இருக்கிறது.

ஒரு சில போலீசுக்காரர்கள் நமக்குத் துன்பம் விளைவிக்கலாம். அதனாலேயே எல்லோரும் பொல்லாதவர்கள் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது கத்தியால் குத்தப்பட்ட கபாலி. போலீசு நிலையத்திற்குப் போனவுடனேயே, அவரை மருத்துவமனைக்கு அனுப்பலாம். அங்கே உட்காருங்கள். பிறகு விசாரிக்கலாம். அபப்டி ஒன்றும் அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பிக் கவனிக்க வேண்டிய கேசு அல்ல என்று போலீசு அதிகாரி கூறியிருந்தால், கபாலியின் உயிர் என்னாகியிருக்கும்? ஆனால் அந்த அதிகாரி அப்படிச் செய்யாமல் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி உடனே சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது – போலீசுத் துறை இன்னமும் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது என்பது.

கடமையை உணர்வீர் – காரியமாற்றுவீர்!

போலீசு அதிகாரிகள் சிரித்தால் நம் தோழர்கள் உறவு கொண்டாடுவார்கள். செப்டம்பரிலே சிரிக்கின்ற சப்-இன்ஸ்பெக்டர், அக்டோபரிலே முறைப்பார். சென்னையிலே சிரிக்கின்ற சப்-இன்ஸ்பெக்டர், செங்கல்பட்டிலே முறைப்பார். இது அவர்கள் குறையல்ல. போலீசின் வாழ்க்கை முறை அது. அந்த சப்-இன்ஸ்பெகடர் நல்லவர் என்று நம் கழகத் தோழர்கள் கூறுவதை நானே கேட்டிருக்கிறேன். கட்சியைக் கருவறுக்கின்ற காரியத்தில் போலீசு ஈடுபட்டிருக்குமானால் அதைத் தடுத்து நிறுத்துவது நம் கடமையாகும்.

ஒரே சிறப்புக் கூட்டத்தில் ரூ.10000 வசூலாக ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் அன்பழகன் பேசிய அவ்வவும் வீண். நீங்கள் காட்டிய ஆர்வம் அவ்வளவும் ஏமாற்றம். நீங்கள் சேர்த்துக் கொ்டுங்கள் – அவர்கள் வழக்குப் போடட்டும் – நாம் நீதி பெறுவோம்.

(நம்நாடு - 4, 7, 16, 17.11.61)