அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மறுமலர்ச்சி
1

(சிதம்பரம், இளங்கோ மன்றத்தின் ஆறாம் ஆண்டுத் துவக்க விழா 1.7.45 மாலை 6.00 மணிக்கு, செட்டியார் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், உயர்திரு. சி..என்.அண்ணாத்துரை, எம்.ஏ.அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது, அவர் ஆற்றிய சொற்பெருக்கு இந“நூல் வடிவில் தரப்படுகிறது)
இளங்கோ மன்றம் என்ற கருத்தமைந்த பெயருடன், நண்பர் மாணிக்கம் அவர்கள் இங்கு நடத்திவரும் இந்தக் கழகத்தின் ஆதரவிலே மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் பேசியிருக்கிறேன். நாடாளும் உரிமைபெற்ற இளங்கோ துறவியானார். நான் துறவிகளைச் சமுதாயத்தின் தொல்லைகள் என்று கருதுபவன். எனினும், இளங்கோவின“ துறவு, காவி உடுத்திக் கானகம் சென்ற கதையாக முடியவில்லை, கவர்ச்சி மிகுந்த காவியத்தை இயற்றிய கனிவாக இருந்தது. காவி அணிவது காற்பலம் கஞ்சாவுக்கு என்ற முறையிலே உள்ள துறவறத்தைதே நாங்கள் கண்டிப்பவர்களாகை யால், இளங்கோ போன்ற இலக்கியகர்த்தாக்கள் துறவிகளாக இருந்தனர் என்பதற்காக அவர் தம“ அருமை பெருமையினை மறக்க மாட்டோம்.

இந்த மன்றத்தினர், அறிவும் ஆராய்ச்சியும் இந்நாட்டிலே பரவப் பணிபுரிகின்றனர். அந்தப் பணியின் மூலமாகத்தான் இங்குப் பீடித்துள்ள பிணி பலவும் போக முடியும். வேறெங்கும் தேவைப்படாத அளவு இங்குத்தான் இத்தகைய பிரச்சாரம் தேவை. ஏனெனில் இங்குத் தான், தெரிந்துகொள்ளக்கூடிய வைகளை மக்கள் தெரிந்து கொள்ளப் பிரயாசைப்படுவதில்லை. புரியாதனவற்றையெல்லாம் புரிந்தவர் போலப் பேசுவர், நம்புவர். எனவே தான், இங்கு பல காலமாகப் பணியாற்றிவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றித் தவறான கருத்தும் விஷமத்தனமான எதிர்ப்பும் இருந்துவருகின்றன.

புறத்தில் புதுமை பெற்றோம், அகத்தில்...

இன்று நாம் சகல துறைகளிலும் புதுமையைப் பெற்றிருக்கிறோம். அனுபவிக்கிறோம். இல்லாமல் வாழ்வு நடவாது என்ற அளவுக்கு வந்துவிட்டோம். இதோ நடக்கும் இந்தக்கூட்டம் இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்குமானால், இங்கே இருவர் மூவர் தீவர்த்தியும் கையுமாக நிற்பர். பக்கத்திலே எண்ணெய்ப் பானையுங் கையுமாக வேறு சிலர் நிற்பர். தீப்பொறிக்கும் புகைக்கும் பயந்து பயந்து மக்கள் இருப்பர், கூட்டம் நடக்கும், இன்றோ, பொறியும் புகையுமின்றி, பிடிப்போரும் எண்ணெய் ஊற்றுவோருமின்றிப் பன்மடங்கு அதிகமான ஒளியை எளிதாக வீசும் விளக்கு விளக்குகிறது. முன்பு ஒலிப்பெருக்கி இருந்ததில்லை. ரேடியோ இல்லை, இதோ மேலே வட்டமிட்டுக் கூட்டத்தவரின் கவனத்தை இழுக்கும் விமானம் பறந்ததில்லை. இவைகளை இன்று பெற்றுப் பயன் பெறுகிறோம். உடையிலே, உணவிலே வாழ்க்கை வசதிகளிலே நாம் மிக மிக முன்னேறி, பழைய நிலைமையிலிருந்து அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி மாறியேவிட்டோம். ஆனால் உள்ளத்திலே மட்டும், அன்று கொண்டதையே விடாப்பிடியாக இன்றும் கொண்டிருக்கிறோம்.

அறிவுப்போர் நடத்துகிறோம்

விமானத்தில் பறக்கும் இந்த விஞ்ஞான காலத்திலும், இராமன் காலத்திலே நம்பிய சகுனத்தடையை நம்புகிறோம். அரிச்சந்திரன் காலத்துப் பல்லிசொல் பலனை இப்போதும் நம்புகிறோம். அதன்படியே நடக்கிறோம். சுயமரியாதை இயக்கம் இந்தப் போக்கைக் கண்டிக்கிறது. அந்தக் காலக் கருத்துத்தான் நமக்குச் சொந்தமானது, அதற்குத்தான் வந்தனை வழிபாடு செய்ய வேண்டும். அவை சரியா தவறா என்று ஆராய்வதே தேவ நிந்தனை என்ற பேசப்படும் போக்கை நாங்கள் கண்டிக்கிறோம். இரவு மதுரமாயிருந்த பால், காலையிலேயே திரிந்து விட்டால் சாக்கடைச் சேறாகிறது. மாலையிலே மாளிகைகளிலே மனோஹரிகளின் கூந்தலுடன் கொஞ்சிய மலர், காலையிலே கசங்கியதும் வீசி எறியப்படுகிறது குப்பையிலே பொருட்கள் மட்டுமல்ல. எண்ணங்கள், ஏற்பாடுகள், முறைகள், நீதிகள் எனும் எவையும் அப்படித்தான் காலத்துக்கு ஏற்றதாக, சுவைக்கு உதவுவதாகப் பயன்தரத் தக்கதாக, நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் என்று கூறுகிறோம். இந்த அறிவுப்போர் நடத்தும் எங்களைக் குறைகூறும் தோழர்கள் உள்ளம் ஒன்று தவிர, மற்றவற்றிலே மாறிவிட்டார்கள். அதை மறைக்கவுமில்லை. இங்கு தவிர, மற்ற இடங்களிலே கருத்துக்கள் அவ்வப்போது ஆராயப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டு, புது மெருகிடப்பட்டு, சில நீக்கப்பட்டு, பல புதிதாக ஆக்கப்பட்டுள்ளன. செடியிலே மலர் கூத்தாடுகிறது. மணம் வீசுகிறது. மறுநாள் வாடுகிறது. உதிர்கிறது. பிறகு வேறொரு மலர் உதிக்கிறது. இரண்டாவது மலர் பூத்திட அந்தச் செடிக்கு நீர் பாய்ச்சி எருவிட்டுப் பாதுகாத்திட வேண்டும் அப்போதுதான் புதுமலர் கிடைக்கும்.

மறுமலர்ச்சி அன்றும் இன்றும்

அது மட்டுமல்ல நமது பணி வாடிய மலரையே மீண்டும் மலரச் செய்ய முயல்கிறோம். அழுக்கடைந்த அமைப்புகளைச் சீர்செய்வது, திரிந்துபோன முறைகளைத் திருத்தி அமைப்பது, பாசி படிந்த இடத்தைத் தூய்மையாக்குவது, தேய்ந்த தத்துவங்களுக்கு உரம் ஊட்டுவது குனிந்த உள்ளத்தை நிமிர்த்துவது, கூனிப் போன கொள்கையைச் சரிசெய்வது இழந்த இன்பத்தைத் தேடுவது இது எங்கும் நடக்கும் நிகழ்ச்சி. இதை மறுமலர்ச்சி என்று அழைப்பர் ஐரோப்பாக் கண்டத்திலே. பல்வேறு நாடுகளிலும் இந்த மறுமலர்ச்சி நடந்ததுண்டு. ஒருகாலத்தில் ஜெர்மனியும், பிரான்சும், இத்தாலியும், இங்கிலாந்தும், வேறுபல நாடுகளும் பாவமன்னிப்புச் சீட்டுகளைப் பாதிரிமார்களிடம் பணம் கொடுத்துப் பெற்றுப் பரமனைத் திருப்திபடுத்தியதாக எண்ணினதுண்டு ஏசுவின் விசுவாசிகள் அனைவரும் கத்தோலிக்கராக மட்டுமே இருந்தனர். மார்ட்டின்லூதர் என்ற மாவீரன் தோன்றினான். மார்க்கத் துறையிலே மறுமலர்ச்சியை உண்டாக்கினான். பிராட்டஸ்டெண்ட் கிளர்ச்சி நடந்தது. இதன் பயனாக ஏசுவின் விசுவாசிகள் தொகையும் குறையவில்லை. கிறிஸ்து மார்க்கத்தின் எழிலும் குன்றவில்லை. எதிர்ப்பும் ஆபத்தும் அடக்குமுறையும் இருந்தன. மறைந்தன. லூதரின் புரட்சி அறிவுப் பூங்காவிலே அழகான மறுமலர்ச்சியை உண்டாக்கிற்று. மார்க்கத்துறையோடு நின்றுவிடவில்லை மறுமலர்ச்சி. ஆட்சிமுறை, சமுதாய அமைப்பு முறை, பொருளாதாரக் கருத்து, கலை முதலிய எல்லாத்துறைகளிலும் புகுந்தது. அதற்கு எங்கும் எதிர்ப்புத்தான். ஆனால் மறுமலர்ச்சி மாய்ந்து போகவில்லை.

சுயமரியாதை இயக்கம். இதை மறுமலர்ச்சிக்குப் பாடுபடுகிறது கடவுள், மதம், சமூகம், பொருள் இயல், கலை, ஆட்சிமுறை ஆகிய சகலவற்றிலும் இந்த இயக்கம் வேலை செய்கிறது. எங்கும் பழமையின் இருள் அகலவேண்டும், புதிய ஒளி பரவவேண்டும் என்று பாடுபடுகிறது.

அறிவாளிகள் எனப்படுவோர் எதிர்ப்பதேன்

சுயமரியாதைக்காரன் என்ன செய்கிறான்? வகுப்புவாதம் பேசுகிறான், பார்ப்பனரைத் திட்டுகிறான், போதாக்குறைக்கு இப்போது ஆரியர், திராவிடர் என்றும் பேசுகிறான், என்று ஏசுபவர் பலர். சுயமரியாதை இயக்கம் மறுமலர்ச்சி இயக்கம் என்று மன்றாடிக் கூறிய காலத்திலே இந்நாட்டு மேதாவிகள் ஆம் என்று கூறவோ சரியா என்று பரிசீலனை செய்யவோ மனமின்றிக் கிடந்தனர். வெளிநாடுகளில் எல்லாம் இத்தகைய சீர்திருத்த இயக்கத்தை அறிவாளிகள் ஆதரிப்பார்கள். பாமரர் எதிர்ப்பர். இந்த விசித்திரமான நாட்டிலேயோ அறிவாளிகள் என்று கூறப்பட்டு வரும் படித்தவர்களான பார்ப்பனர், முழுமூச்சாக சீர்திருத்த இயக்கத்தை எதிர்த்தனர். படிக்காதவர்கள் என்று அவர்களால் இகழப்பட்ட தோழர்கள் ஆதரித்தனர், கலந்து வேலை செய்தனர். விரும்பி, மனமார இசைந்து பார்ப்பன மேதாவிகள் கலந்திருந்ததால் இன்று நாங்கள் ஆரியர் திராவிடர் என்ற வரலாற்று வாயிற்படி வரையிலே போயிருந்திருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிராது. எங்களுடைய நியாயமான கிளர்ச்சியை நாட்டுக்கு நன்மை தரக்கூடிய இயக்கத்தை, அறிவாளிகள் ஆதரிக்கவேண்டிய மறுமலர்ச்சியை வெளிநாடுகளிலே விவேகிகள் வரவேற்கும் இயக்கம் போன்ற சுயமரியாதை இயக்கத்தை, ஏன் இந்த நாட்டிலே உள்ள மேதாவிகள், மகாகனங்கள், அல்லாடிகள், சாஸ்திரிகள், ஆச்சாரியர்கள் விஷம் போலப் பாவிக்கின்றனர் என்ற சிந்தனை எங்களுக்கு ஏற்பட்டது. மற்ற நாடுகளைப் போலன்றி இங்கே இந்த மேதாவிகள் பிராமண ஜாதியினர் பெரும்பான்மையான மக்கள் இருளில் கிடந்தால் மட்டுமே வாழக்கூடிய விதமாகத் தமது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கின்றனர். புது எண்ணம் பிறந்தால் தமது வாழ்வுக்குக்க கேடு வரும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள். அதனாலே தான் மறுமலர்ச்சியை இவர்கள் எதிர்க்கிறார்கள் என்பது தெரிந்தது. தெரியவே இந்தக் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று பார்ப்பனகுளத்துக்குக் கூறத்தொடங் கினோம்.

மாறக்காணோம். இவ்வளவு கூறியும் இந்தக் குலத்தின்குணம் மாறக் காணோமே ஏன்? இந்தக் குணம் எப்போது இந்தக் குலத்துக்கு உண்டாயிற்று என்று ஆராய்ந்தோம். பழங்கால முதலே இந்தக்குணம் பார்ப்பனருக்கு இருந்து வந்திருக்கிறது என்பது தெரிந்தது தெரியவே, இப்படிப்பட்ட கேடு பயக்கும் குணத்தை இந்தக்குலம் பெற்றிருக்கிறதே, இந்தக்குலம் நமது இனமா? என்று ஆராய்ச்சி செய்தோம். செய்ததில் இவர்கள் பழந்தமிழ் மக்களல்ல, வடநாட்டுப் பகுதியிலிருந்து இங்கு வந்தவர் என்று ஏற்பட்டது. ஏற்படவே, வடநாடு சென்று இந்த வர்க்கத்தின் வரலாற்றை விசாரித்தோம். அதுபோது வரலாறு நம்மைக் கைபர் கணவாய் அருகே அழைத்துச் சென்று,ம த்திய ஆசியாவிலிருந்து இந்த ஆரிய இனம் இந்தக் கைபர் கணவாய் வழியாகத்தான் இங்கே நுழைந்தது என்று காட்டிற்று. வரலாறு கூறிய உண்மையைத்தான் இன்று நாங்கள் ஆரியர் திராவிடர் பிரச்சனை என்று பேசுகிறோம், வரலாறு காட்டிய உண்மை. வாழ்க்கை முறையிலேயும் தெரிகிறது. எனவே மறுமலர்ச்சி இயக்கத்தார், இன எழுச்சிக்காக இன்று வேலை செய்கின்றனர். இந்த மறுமலர்ச்சியை மார்க்கத்துறையில் புகுத்தும் போது, நம்மை நாஸ்திகர்களென்று நிந்திக்கின்றனர், சமுதாயத்துறையிலே புகுத்தும்போது வகுப்புவாதிகள் என்று வசை பேசுகின்றனர், அரசியல் துறையிலே புகுத்தும் போது நாட்டைத் துண்டாடுபவர்கள் என்று தூற்றுகிறார்கள். இந்தத் தூற்றலினால் நாம் கூறும் உண்மையை மறைந்துவிட முடியாது. உண்மை, சமூக மக்களின் மனத்திலே ஊடுருவிப்பாய்ந்து விட்டது.

தள்ளுவன் தள்ளிக் கொள்வன கொள்க

மறுமலர்ச்சி நோக்கத்துடன் நாங்கள் எதனையும் ஆராய்கிறோம். சிலர் அந்த நோக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல், எந்தெந்தச் சமயத்திலே நாங்கள் எதை எதைக் குறை கூறுகிறோமோ, அந்தந்தச் சமயத்தில் நாங்கள் அவ்வக் கருத்துக்கு விரோதிகள் என்று கூறிவிடுகிறார்கள். உதாரணமாக, நாங்கள் இராமாயணத்தை மறுமலர்ச்சி நோக்குடன் ஆராய்ந்து அது நமக்கு ஏற்ற ஏடல்ல என்று கூறுகிறோம். உடனே சிலர், இவர்கள் கலையின் விரோதிகள் என்று அவசர முடிவு கட்டுகிறார்கள். இது தவறு கண்ணோடு கண்ணினை நோக்கொக்கிட ஒன்றை ஒன்று பற்றி உண்ணத் தலைப்படும் அளவு காதல் கொண்டு வில்லை ஒடித்து எந்தச் சீதையை இராமன் திருமணம் புரிந்து கொண்டானோ, எந்தச் சீதையின் பிரிவு ஆற்றாமல் மானே, மயிலே மரமே மடுவே ஜானகியைக் கண்டீரோ என்று கானகத்திலே நின்று கதறினானோ, அதே பிரியநாயகி சீதையை, நிந்தனை நேர்ந்தால் என்ன செய்வது என்று சஞ்சலப்பட்டு, ஆருயிர்க் காதலனாகிய இராமன். அவள் கற்புள்ளவள் தான் என்று கண்டு கொள்ளவும், காட்டவும் வேண்டி, சீதையை நெருப்பிலே குளித்து எழுந்திரு என்று கூறி, சீதையின் கற்பை ஆராய்ச்சி செய்தான் என்றால், இராமாயணத்தை, நெடுங்காலத்திற்கு முன“னே இருந்த நினைப்புக்கும் நிலைமைக்கும் நீதிக்கும் ஏற்றதான கதையை இன்று ஆராய்ச்சி செய்து பார்ப்பதிலே தவறு என்ன? இராமனுக்கும், சீதைக்கும் இருந்த தொடர்பை விடவா, உங்களுக்கும் இராமாயணத்துக்கும், இராமனே சீதை சம்பந்தமாக ஆராய்ச்சி செய்தார் என்றால் நீங்கள் இராமாயணம் நமக்கேற்ற நீதி நூலா, நமது நாட்டு முறையைச் கூறும் நூலா, நமது போதனைக்குரிய ஏடா என்று ஆராய்ச்சி செய்து பார்ப்பதிலே தவறு என்ன இருக்கிறது. நாங்கள் இந்தக் காரியத்தைத்தான் செய்யும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இராமாயணத்துக்கு மட்டுமல்ல, எதற்கும் ஏடுகள் விஷயமாக மட்டுமல்ல, ஏற்பாடுகள் விஷயமாகவுங் கூட தேவையா, அறிவுடைமைதானா, நமக்கு நன்மை பயப்பதா, நமக்கு உயர்வு தருவதா, நாம் வாழ வழிவகுப்பதா என்று எதனையும் ஆராய்ந்து பார்த்து, தள்வன தள்ளிக்கொள்வன கொள்க என்று கூறுகிறோம். இது குற்றமாகுமா என்று உங்களைக் கேட்கிறேன்.

சீதையின் கற்பைப்பற்றி யாருக்கு அக்கறை.

சீதை கற்பிழந்தவள் என்று நண்பர் புலவர் மாணிக்கம் அவர்கள் கூறினதாகவும், அதற்காக இவ்வூர் ஐயரொருவர் கோபித்த தாகவும் இங்குக் கூறினார். உண்மையிலேயே, சீதை கற்புடைய மங்கையா இல்லையா என்பது பற்றிய அக்கரை இராமனுக்கு இருக்கவேண்டும். நமக்கு இருக்கவேண்டிய அவசியமில்லை. இராமன் இது விஷயத்திலே அக்கரை கொண்டவனானதால் தான், இந்தச் சந்தேகம் வரும் என்று சஞ்சலப்பட்டுச் சீதையின் பரிசுத்தத் தன்மையை விளங்கச் செய்ய, சீதையை நெருப்பிலே மூழ்கிக்கிடச் செய்தான். அவன் அதனால் திருப்திபட்டால், அவன் சஞ்சலம் தீர்ந்தது என்று அர்த்தம். நமக்கு அந்தப் பிரச்சினை, தொல்லையோ, துயரமோ தரக்கூடியதல்ல. ஆனால் ஒருவிஷயம் கற்பு விஷயமாக இராமன் மனோபாவம் எப்படி இருந்தது என்பதைக் கம்ப இராமாயணத்திலே ஓரிடத்திலே காணச் சந்தர்ப்பம் இருக்கிறது.

கற்புக்கு உதாரணம் இதோ.

விசுவாமித்திரருடன் கானகம் சென்ற இராமன் மிதிலை போகிறான் வழியிலே அவனுடைய பாததுளி பட்டுக் கல்லொன்று வெடித்து ஒரு காரிகை வெளிப்படுகிறாள். ஐயன் கேட்க முனிவர் கூறுகிறார். இராமா, இவள் கௌதமரின் தர்ம பத்தினி அகலிகை என்று தர்ம பத்தினிக்கு ஏன் இக்கதி நேரிட்டது என்பதையும் ரிஷி விளக்குகிறார். அகலிகை மீது காமங்கொண்ட இந்திரன் தேவர்க்கு அரசன், தேவராஜனுக்குத் தோன்றும் திவ்ய குணத்தைப் பாருங்கள். கோழி உருக்கொண்டு கூவ, விடிந்தது என்று எண்ணிக் கௌதமர் வெளியே போக, இந்திரன் கௌதமருடைய உருக்கொண்டு, உள்ளே நுழைந்து, அகலிகையைக் கூடினான். எந்த நேரத்தில்? விடியற்காலை, ஆஸ்ரமத்திலே, இது நடந்தது. ஆரம்பத்திலேயே கதையிலே உள்ள ஆபாசத்தைப் பாருங்கள். கௌதமர் பெரிய தவசி. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்குமுள்ள தொடர்பு பற்றிய விசாரணையிலே ஈடுபடவேண்டிய முனிசிரேஷ்டர் கௌதமர். அகலிகை மாண்புடைய மாது. விடியும் நேரம். கதிரவன் ஒளிபரப்பும் நேரம். நீராடல், நிகண்டுபடித்தல், நிர்மலனைத் தொழுதல் ஆகிய காரியங்களுக்கேற்ற நேரம். ஆனால் கதையின்படி அந்த ஆஸ்ரமத்திலே அதிகாலைக் கடன் கலவி. இது ஆஸ்ரமவிதியோ, அல்லது கவியின் முறையோ தெரியவில்லை. அம்மையாரும் இதிற் சிந்தனை ஏதும் என்று கொண்டார் என்ற குறிப்பில்லை. ஆபாசம் இத்துடன் முடியவில்லை. நாடிய பொருள் கிட்டிற்று என்று மட்டற்ற மகிழ்ச்சியுற்றுக் கூடிக் கிடந்தான் தோடுடைய செவியனையும், கருட வாகனனையும் நித்த நித்தம் தொழுது வாழும் தேவதேவன். காலை மலரும் நேரத்திலே காமம் மிகுந்தது. காவிக்கும் கமண்டலத்துக்கும் கடுகளவும் அடுக்காதே என்று கருத்திலே கொள்ளாதது மட்டுமல்ல. ஒருசமயம், பதி சொல் தவறலாகாது என்பதற்காப் பசி உணர்ந்து அம்மையார் விருந்திட்டார்கள் என்று கூறிச் சமாதானம் பெறலாம் ஆனால் அகலிகை அம்மையின் மனம், அந்த அளவோடு நின்றதாகக் கவி கூறவில்லை. கலவி இன்பத்தின்போதே கண்டு கொண்டார்களாம் கௌதமரல்ல அந்த ஆசாமி என்று.

ஆசிரமத்து அம்மையின் அருமையான பழக்க உணர்ச்சி.

இதோ நான் பேசுகிறேன். ஒலிபெருக்கி சத்தத்தை வெளியே எடுத்துச் செல்கிறது. வீதியிலே சற்றுந்தொலைவிலே வருகிறபோதே, அண்ணாத்துரையின் குரல் என்று கூறுகிறார்கள் என்றால், என்ன பொருள்? என் குரலைப் பலமுறை கேட்டுப் பழக்கப்பட்டதால், இம்முறை கேட்கும் போது, என் குரல் என்னும் உணர்வு தோன்றுகிறது பழக்கக் காரணத்தால், ரேடியோவிலே இசை கேட்கிறோம். எடுப்பின் போதே கூறிவிடுகிறோம் இன்ன வித்வான் பாடுகிறார் என்று அவர் இசையைக் கேட்ட பழக்கத்தால், இவ்விதமாக அம்மையார் அகலிகையார் கலவி செய்வது கௌதமனல்ல என்று கண்டுகொண்டார்கள் என்று கம்பர் கூறுகிறார் என்றால், ஆஸ்ரமத்து அம்மைக்குள்ள அருமையான பழக்க உணர்ச்சி எவ்வளவு அற்புதமாக அமைந்திருக்கிறது பாருங்கள்.

இடத்துக்கேற்ற இயல்பு:
போகட்டும், இடத்துக்கேற்ற இயல்பு இல்லை, மறப்போம் அந்த கேட்டினையும் மேலே நடந்தது என்ன? கௌதமர் அல்ல என்று தெரிந்தும் அம்மையார் என்ன செய்தார்கள்? ஆ, பாவி, என்று அலறினார்களா? இல்லை. ஆவேசம் பிடித்தவர் போல எழுந்தோடினார்களா? இல்லை, என்ன அக்கிரமம் நடந்துவிட்டது. ஐயோ என் நாதரல்லவே இந்த நீசன் யாரடா நீ, பிடி சாபம் என்று மிரட்டினார்களா? இல்லை. வேறு நடந்தது என்ன, வேறு ஆள் என“று மனத்திலே பட்டது, அதனால் காரியம் எதுவும் கெட்டுவிட்டதாகக் கவி கூறவில்லை. தட்டுத் தடங்கலின்றித் தவசிரேஷ்டருக்கு மனைவியாக வாய்த்த அந்தத் தளிர்மேனியாளை தேவர் உலகத்துக் காமுகன் அனுபவித்தான். பிறகு கௌதமன் பிரவேசம், சாபம் என்று கதை. இங்கே கவனிக்க வேண்டியது. கௌதமன் அல்ல என்று தெரிந்ததும் தடுக்காமல் இருந்த அகலிகை கற்புள்ள காரிகை என அறிவுள்ள எவரேனும் ஒப்புக் கொள்வாரா? தெரிந்தது, ஆனால் என் செய்வேன் என்று குப்பைமேட்டிலே வாழும் குடியனின் கூத்தி கூறினாலும், அவன் சும்மா விடுவானோ? அவன் சும்மா இருப்பினும் ஊரார் வாளாயிருப்பாரா? அத்தகைய அகலிகையை, இராமர் அடிதொழுகிறார் முனிவர் அம்மையின் கதையைக் கூறிய பிறகு இவ்விதம் கதை இருக்கிறதே. இப்போது கூறுங்கள் கற்பு சம்பந்தமாகக் காகுத்தன் கொண்ட கருத்துத்தான் என்ன?

கம்பதாசர்கள் சமாதானம் கூறமுடியுமா?
கம்பதாசர்கள் இதற்கு என்ன சமாதானம் கூறுவர்? கேட்டாரா இராமபிரான், அம்மே அந்த வேளையிலே காமத்தால் அந்தகனான இந்திரன் சூதாக நடந்தான் இடையிலே கௌதமரல்ல என்று நெஞ்சு தெரிவித்தும், மிஞ்சிய காமத்தால் உம்மிடம் கொஞ்சி விளையாடிய அந்தப் பஞ்சையை நீர் விரட்டியிருக்க வேண்டாமா? அவ்விதம் செய்யாதது தவறல்லவா? என்று இல்லை, அம்மையின் அடி தொழுதார். பிடி சாபம் என்று கூறிய கணவன் காரிகையைக் கல்லாக்கினார். சகஜம், ரிஷிக்கு இருந்த ரோஷம் இது. கற்பை இழக்கின்ற நேரத்திலே மனத்திலே அந்தச் சந்தேகம் தோன்றியும் வேல் பாய்ந்த வேங்கைபோல் சீறாமல் அது சாத்தியமில்லை எனினும் வல்லூறு துரத்தக் கண்டு வட்டமிடும் மாடப்புறா போல வட்டமிடாமல், அவரல்ல போலிருக்கிறதே என்று தோன்றியும் அந்தத் தோகையாள், கேடு முற்றுமளவும் கிடந்தது குற்றந்தான். அதற்காகக் கழுவாய் தேடத்தான் வேண்டும் என்று கோசலைச் செல்வன் கூறலாகாதா? விழுந்து கும்பிடுகிறான். வழுக்கி விழுந்த வனிதை முன், பிறகு கற்புக்குப் பொருள்தான் என்ன? கானகம் வாழும் காட்டு ஜாதி மங்கையா? இல்லையே, கடவுள் நெறி நிற்கும் முனிவரின் தர்ம பத்தினி ஆயிற்றே அகலிகை.