அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மறுமலர்ச்சி
2

சீதை கற்பும் இராமன் ஆராய்ச்சியும்
அதற்குமேலே அகலிகை குற்றமற்றவள், அவள் நெஞ்சிலே தவறில்லை என்று விசுவாமித்திரர் கௌதமருக்குச் சிபாரிசு செய்கிறார். அகலிகை குற்றமற்றவள், நெஞ்சார ஏதும் பிழை செய்யவில்லை என்று கௌதமர் கருதி இருந்தால் கல்லாக்கி இரு“கமாட்டாரே, கல்லாக்கியதன் கருத்தே. அவர் அம்மையை அசுத்தமானாள் என்று கருதியதைக் காட்டுகிறது? அவருக்கு விசுவாமித்திரர் சிபாரிசு செய்கிறார். அகலிகை குற்றமற்றவள் ஏற்றுக்கொள்க என்று என்னமோ தம்பீ. எதுவோ தெரியாமல் நடந்து விட்டது. அவள் வேண்டுமென்று தெரிந்து செய்யவில்லை. அவள்மீது குற்றமில்லை என்ன செய்வது? நடந்தது நடந்துவிட்டது. நல்லபெண். வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோ, விசாரப்படாதே என்று எந்தக் கணவனுக்காவது யாராவது சிபாரிசு செய்து விட்டு உருவாக வீடு திரும்ப முடியுமா? இத்தகைய சிபாரிசுகளை ஏற்றுக்கொண்டார் கௌதமர். இந்த அகலிகை கதை மூலம், இராமன் கற்பை ஒரு மங்கை இழந்துவிட்டபோதிலும் நெஞ்சாரக் குறை செய்யவில்லை என்றால், அவள் மன்னிக்கப்பட வேண்டியவள் மீட்கப்படவேண்டியவள் என்பது மட்டுமல்ல. அவள் அடி தொழுதிடுதலும் சரி என்ற அளவுக்கு மனோபாவம் கொண்டவன் என்பது விளங்குகிறது. சீதை கற்பிழந்தவளா இல்லையா என்பது பற்றி இராமன் ஆராய்ச்சி செய்தது எம்முறையிலே இருந்திருக்கும்? இப்போது நீங்கள் தான் சிந்தித்துப் பாருங்கள், என்ன சொல்வீர்கள்?

சீதையின் உடல் மட்டும் கெட்டுவிட்டதா?
என் நண்பர் மாணிக்கம் கூறினார் தவறு செய்வதென்பது, மனம், வாக்கு, காயம் (எண்ணுவது, சொல்வது, செய்வது) என்ற முறையிலேதான் இருக்கும் என்று இதிலே சீதையைப் பற்றிக் கம்பர் கூறும்போது ஒரு கவியிலே சீதை மனத்தாலும், வாக்காலும் குற்றம் செய்திலள் என்று கூறுகிறார். காயத்தை விட்டுவிடுகிறார் ஏன்? காயம் கெட்டுவிட்டது என்று பொருள் தொக்கி நிற்கவில்லையா? இவ்வளவு முக்கியமான பிரச்னையிலே அவர் தவறுதலாகவோ, மறந“தோ, காயத்தைப்பற்றிக் கூறாமல் விட்டிருப்பாரா என்று கேட்டால் கோபித்துப் பயன் என்ன? பதில் கூறித்தானே ஆகவேண்டும். கவி தவறிழைத்தார் என்று கூறுங்கள். ஜானகியைக் காப்பாற்ற வேண்டுமானால், கம்பனையா குறை சொல்வது என்று தோன்றினால், ஜானகியைக் கைவிடுங்கள். இரண்டும் இஷ்ட மில்லை என்றால் சிதம்பரநாதரிடம் சொல்லிப் பாடலை ரிப்பேர் ஷாப்புக்கு அனுப்பி வையுங்கள். உள்ளதை நாங்கள் சொல்லும்போது எங்கள்மீது கோபித்து என்ன பயன்? புதிய உலகில் வாழும் மக்கள் எதனையும் புதுநோக்குடன் கவனித்தல் வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். இது தவறு என்று தூற்றுகிறார்கள். சில தோழர்கள். அவர்களுக்கு ஒரு புத்தகத்தைப் படிக்கும்படி சிபாரிசு செய்கிறேன். அது சு.ம.வின் ஏடல்ல.

கௌதமர் விசாரணை-அகலிகையின் வாக்குமூலம்:
அதுவே இராமசாமி ஐயங்கார் என்பவர் தீட்டிய புத்தகம். வீரவனிதையர் வாழும் ஒரு வசீகர தீவைக் கற்பனைச் சித்திரமாகத் தீட்டிக் காட்டுகிறார். நண்பர் வ.ரா. அந்தத் தீவிலே கல்லூரி. கல்லூரியிலே நாடகம் ஒரு நாடகம் அகலிகை பற்றி என்ன நடக்கிறது? நீதி தேவி, கௌதமனை அழைத்து விசாரணை நடத்துகிறாள். அகலிகையை அல்ல, குற்றம் செய்தது அகலிகை தானே, கொடுமைக்கு ஆளான கௌதமனை ஏன் விசாரிக்க வேண்டும் என்று கேட்பீர்கள், விளக்கம் இருக்கிறது அதில் ஏன், அகலிகையைக் கல்லாக்கினாய், என்று கேள்வி குற்றச்சாட்டு அது. அவள் கற்பிழந்தாள். எனவே தண்டித்தேன் என்றார் கௌதமர். இந்திரன் விசாரிக்கப்படுகிறான். இல்லை என்று நான் கூறவில்லை. நடந்தது உண்மை ஆனால் நான் என்ன செய்வேன். அந்த நாரீமணி மீது எனக்கு நெடுநாட்களாக நாட்டம். எப்படியோ கௌதமருக்கு அவள் கிட்டிவிட்டாள் என் மனத்திலே இருந்த மோகம் அதனால் பட்டுப்போகவில்லை. சமயம் கிடைத்தது. சல்லாபம் நடந்தது என்று அவன் கூறி விட்டான். அகலிகையை விசாரித்தபோது கௌதமன் ரிஷி தவசிக்குத் தையலாள் ஏன்? வேண்டுமெனில், அவர் போன்ற பலரோகப் பிராப்திக்காகப் பஜனை செய்யும் ஒரு பழுத்தபக்தையை மணம் செய்து கொள்வதுதானே. நான் இள மங்கை. என்னை மணந்தார். இன்பபுரிக்கு அவர் என்னை அழைத்துச் சென்றாரா, இல்லை. இறைவன் தொண்டின் பெருமையையே அவர் அறிவார், உரைப்பார். இந்திரன் என்னை இழுத்துச் சென்றான். இன்ப புரிக்கு குற்றம் என் மீது இல்லை. எனக்குக் கணவனாக வந்து வாழ்வுக்குத் தடைக்கல்லான கௌதமனே குற்றம் புரிந்தவன் என்றாள் மாது அகலிகை. தீர்ப்பு என்ன? கௌதமன் செய்தது தவறு. அகலிகை இஷ்டம்போல் நடக்கலாம் என்பதுதான். இது கோதைத் தீவிலே நடக்கும் நாடகம். எவ்வளவு புரட்சிகரமானது. புதுமையானது, மேதை நிறைந்தது நுணுக்கமான ஆராய்ச்சி என்று நண்பர் வ.ரா.வின் இந்த முறையைப் பலர் புகழக் கேட்டிருக்கிறேன். மகிழ்ந்துமிருக்கிறேன். ஆனால் அடுத்த கணம், மகிழ்ச்சி மறைந்து பெருமூச்செறிந்திருக்கிறேன். இதனைப் புகழ்பவர்களே இதுபோல் பழைய நிகழ்ச்சிகள், பழைய நிலைமைகள், பழைய நீதிகள் இவைகளை எடுத்துக்கூறும் ஏடுகள் ஆகியவற்றைக் கண்டித்துப் புதுநோக்கம், புதுப்பொருள்கள் கூறும் சுயமரியாதைக்காரர்களைக் கயவர், கலை உணர்விலாதார், கடவுளை மறந்தார். கசடர் என்று கண்டிக்கின்றனரே, நல்லவேளை நண்பர் வ.ரா.நம்மோடு பிறக்காமல், அங்கே பிறந்தார், அதனால் தப்பினார். அவர் கூறுவதுபோல மட்டுமல்ல அவ்விதமான சிந்தனைக்கே வழி கோலிய சுயமரியாதைக்காரர் மீது எவ்வளவு சுடு சொல் வீசப்படுகிறது என்று எண்ணும்போது ஏக்கம் வரத்தான் செய்கிறது.

சீதை கற்பற்றவள்-இதோ ஆதாமர்:
சீதை தீக்குளிக்கு முன்பு செப்பினாள் என்று, கம்ப இராமாயணம் மீட்சிப் படலத்திலே (84 ம் பாட்டு) உள்ள செய்யுளை ஆராய்ச்சி செய்துதான் நண்பர் மாணிக்கம் சீதையின் நிலைபற்றிக் கூறினார். அதற்கு அவரை நிந்தித்தனர். அவரை அவ்விதம் சிந்திக்கச் செய்த செய்யுளைப் பாருங்கள் பார்த்தபின் அவர் கருத்திலே குறை காணுவது சரியா தவறா என் நீங்களே முடிவு செய்யலாம்.

கனத்தினால் கடந்த பூணழலைய கைவளை
மனத்தினால் வாக்கினால் மறுவுற்றே லெனின்
சினத்தினால் சுடுதீயால் தீச்செல்வா என்று
வனத்துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்.

என்பது அப்பாட்டு முதல் அடி சீதையைப் பற்றிய வர்ணனை கடைசி அடி அம்மை ஐயனை வணங்கின செய்தி இடையே உள்ள இரண்டு அடிகளே பிரஸ்தாப விஷயத்துக்கு உரியவை. அதன் பொருளை கவனியுங்கள்.

தீச்செல்வா, மனத்தினால் வாக்கினால் மறுவுற்றேனெனின்
சினத்தினால் சுடுதீ என்றாள்.

என்று அந்வயப்படுத்திப் பாருங்கள் அக்னிதேவா, நான் மனத்தாலோ மொழியாலோ, அதாவது சிந்தனையாலோ பேச்சாலோ குற்றவாளியாக இருப்பின், கோபங்கொண்டு என்னைச் சுட்டு எரி என்று சீதை கூறுகிறாள். மனம், வாக்கு இரண்டு பற்றி மட்டும் கூறிக்காயம் பற்றிக் கூறாதது ஏன்? திரிகரணம் சுத்தியாக இருத்தல் வேண்டும். அதாவது மனம், வாக்கு, காயம் எனும் மூன்று கரணமும் சுத்தமாக இருக்கவேண்டும் என்றுதானே அறநூல் கூறுகிறது. இங்கு அம்மை திரிகரணத்தில் இரண்டு கூறி மூன்றாவதை விட்டது. ஏன் என்பதுதானே பிரச்னை. இதைக் காட்டும் தோழர்மீது கோபித்துப் பயன் என்ன? இதனை மாணிக்க ஐயர் சொன்னால் மேதாவி, ஆராய்ச்சியாளர் என்று பேசும் கூட்டம். மாணிக்கம் செட்டியார் என்பதற்காகத்தானே எதிர்க்கிறது. இது தகுமா? என்று கேட்கிறோம்.

இளைஞர்களே, நீங்கள் தீர்ப்பளியுங்கள்:
நண்பர் மாணிக்கம் கம்பராமாயணச் செய்யுள் ஒன்றை ஆராய்ந்து சீதையினுடைய கற்பின் இலக்கணத்தைப்பற்றிப் பேசினார். இது கலைவாணர்களுக்குக் கிலியும், மதவாதிகளுக்கு மருளும், பழமை விரும்பிகளுக்குப் பீதியும் கொடுத்திருக்கிறது. மேல் நாடுகளிலே இத்தகைய ஆராய்ச்சிகள் அறிவாளிகளால் வரவேற்கப்பட்டு மறுமலர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாகவே கலையைப் பற்றி நாங்கள் கொண்டுள்ள கருத்து தவறான நோக்கத்துக்காக அல்ல. எங்களையும் கலையையும் நன்றாக உணராதவர்களும் உள்ளது போய்விட்டால் உரம் கெட்டுவிடும் என்று எண்ணும் உளவலி அற்றவர்களும், நம்மைக் கயவரென்றும் கலை அறிவு இல்லாதார் என்றும் கடிந்து உரைத்தாலும், இளைஞர்களாகிய நீங்கள் நான் கூறுவதைப் பொறுமையுடன் கேட்டுத் திறமையுடன் ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டுகிறேன். கலை விஷயமாக மட்டுமல்ல. கடவுட் கொள்கை விஷயமாகவுங்கூட.
காலத்துக்கேற்ற கவைக்குதவும் ஆராய்ச்சியே எங்களது:
மதத்தலைவர்கள் என்று அபிஷேகிக்கப்பட்டு மடாலயங்களிலே கொலுவீற்றிருக்கும் குருமார்கள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பைபற்றியும் அம்மைக்கும் ஐயனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற முறையிலே அல்ல நாங்கள் செய்யும் ஆராய்ச்சி. ஜன சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்கள் அமைந்திருக்கின்றவா என்பதே எங்களுடைய கவலை. இதற்காக எங்கள்மீது காய்வது மறுமலர்ச்சி இயக்கத்தைக் கெடுப்பதாகும். மறுமலர்ச்சி இயக்கத்தைக் கெடுப்பவர்களை மாநிலத்திலே மிகமிக மட்டரகமென்று மதியுள்ளோர் கூறுவர்.

கயவனும், காமுகனும் கடவுளா?
அன்புக்கும், அருளுக்கும் இருப்பிடமென்று தத்துவம் கூறும் ஆண்டவனைப் பற்றி அந்த நாளிலே ஆதிக்கத்திலிருந்தவர்கள் எழுதிவைத்த ஆபாசமான கதைகளை இந்தக் காலத்திலே வந்தனை வழிபாட்டிற்குரியன என்று மந்த மதியினர் கூறலாம். சிந்தனையில் தெளிவுள்ள நீங்கள், சிறுதொண்டனைப் பிள்ளைக் கறிகேட்ட சிவனை, சீலத்தையும் மறந்து இல்லக் கிழத்தியை அனுப்பி வைக்கும்படி இயற்பகையைக் கேட்ட இறைவனை, கடவுள் இலக்கணத்தை விளக்கக்கூடிய கர்த்தா என்று கருதமுடியுமா? இத்தகைய இழிவான கதைகளை இந்த உலகத்திலே இந்நாட்டிலன்றி, இன்றளவும் நம்பிக்கொண்டிருப்பவர் வேறெங்கேனும் இருக்கின்றனரோ? இறைவன் இங்குக் கண்ணைக் கேட்டான், பெண்ணைப் பெற்றான், மண்ணை விரும்பினான் என்று கதைகள் இருப்பதுபோல் வேறு எங்கேனும் எந்த மதத்திலேனும் உண்டா? ஏன் இல்லை? இவைகளால் நாம் அடைந்த பயன் என்ன? இத்தகைய கதைகளை நம்பிக் கிடக்கும் நம் நாடு உள்ள நிலையை, ஆண்டவனை அறிவோடு பூஜித்துக் கடவுளைக் காமுகனாகவும், கயவனாகவும் கடை மனிதனின் கெட்ட குணங்களைத் திருக்கலியாண குணங்களாகக் கொண்டவனாகவும் சித்தரிக்காமல், ஞானத்திற்கும் சீலத்திற்குமுள்ள இருப்பிடமாகச் சித்தரித்துக் கொண்டுள்ள நாடுகளும் மதங்களும் உள்ள நிலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

போட்டி மதங்கண்டு புதுப் பூசாரிகள் ஆகவன்று:
மத விஷயமாகவுங்கூட நாங்கள் கூறுவது என்ன? மக்களுக்குள் ஜாதியைக் கற்பித்துப் பேதத்தை உண்டாக்கும் ஏற்பாட்டை மதமென்றும் மாண்புடையது என்றும் கூறி அதனைக் கண்டித்தலே மகா பாவம் என்று மிரட்டினால் எதற்கும் காரணம் கேட்கும் எதையும் ஆராய்ந்து பார்க்கும் இந்தக் காலத்திலே யார் மருளுவார்கள்? அதிலும் உருவமற்ற ஆண்டவனை உள்ளன்போடு வணங்கி ஒருவரை ஒருவர் தாழ்த்தாமல் ஒன்றே குலம் என்ற தத்துவத்தோடு வாழுகின்ற இஸ்லாமியர்களைக் கண்ட பிறகு, ஆண்டவன் சன்னதியைக் கள்ளர் குகை ஆக்காதீர்கள் என்று பூசாரிகளைக் கடிந்துரைத்த ஏசுநாதரின் வரலாற்றைப் படித்த பிறகு, புனிதமான எண்ணமும் நிராசையும் தேவையே தவிர, நீரில் மூழ்குவதும் நீண்ட தூரம் செல்வதும் ஆரியப் புரோகிதரின் ஆணைக்கு அடங்குவதும் ஆண்டவனை அடைய மார்க்கங்களல்ல என்ற அறவுரையை, சுக போகத்தைத் துறந்து ஆரண்யத்தில் அலைந்து அறிவின் எல்லைக்கண்டு அவனிக்கு எடுத்துரைத்த புத்தபிரானின் வரலாற்றைப் படித்த பிறகு, எப்படி நம்முடைய பழையகால ஏற்பாடாகிய பார்ப்பனீயப் பலிபீடமாகிய இந்துமதத்தை ஏற்றுக்கொள்ளமுடியும்? இதைத்தான் நாங்கள் எடுத்துச் சொல்கிறோம். அதிலும் நம்முடைய சமுதாயம் இன்றுள்ள இழிநிலையைக் கண்டதால், இந்நிலையை மாற்ற மறுமலர்ச்சியே மருந்து என்று தெரிந்து அந்த பணியில் இறங்கினோமே தவிர, போட்டி மதம் ஸ்தாபித்துப் புதுப் பூசாரிகள் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல.

பழைய கால ஏற்பாடுகளால் நாமடைந்த பாழ்நிலை:
பழைய கால ஏற்பாடுகளைப் பற்றிக்கொண்டிருப்பதால் நாம் எந்த அளவுக்குப் பாழான நிலையில் இருக்கிறோம், பயனற்ற செயல்கள் புரிகிறோம். வெளிநாட்டாரால் பரிகசிக்கப்படுகிறோம் என்பதை எண்ணிப்பார்ப்பவர்கள் எமது பணியில் பங்கு கொள்வரே தவிர, நமக்கு எதிரிடையாகப் படைதிரட்ட மாட்டார். ஆனால், பரிதாபத்திற்குரிய பாமரருக்கு, விரோதி யார்? நண்பன் யார்? என்று விளங்குவதில்லை. அவர்கள் மட்டுமா? படித்தவர்கள் மட்டுமென்ன, கல்லூரி மாணவர் மட்டுமென்ன, மாணவர்கள் படிக்கவில்லையா தங்கள் கல்லூரிகளில் கிரேக்க சாம்ராஜ்ய அழிவுக்குக் காரணம் ஹெலாட் என்ற வகுப்பினருக்கு உயர் வகுப்பினர் இழைத்துவந்த கொடுமைதான் என்பதை ரோம்சாம்ராஜ்ய அழிவுக்குக் காரணம் பிளபியன் (தாழ்ந்த வகுப்பினர்) பெட்ரிஷியன் (உயர்ந்த வகுப்பினர்) என்ற பேதம் என்பதை, அவர்கள் படிக்கவில்லையா? சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்ற மும்மணிகள் நாகரிகத்தின் சின்னங்கள் என்பதை.

பரிதாபகரமான படித்த கூட்டம்:
இப்பொழுது மட்டுமென்ன, ஆப்பிரிக்காவிலே நம்மவருக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றவுடன் ஆர்ப்பரிக்கவில்லையா கல்லூரி மாணவர்கள். ஆங்கிலேயரை எதிர்த்து அறப்போர் புரியவில்லையா? ஆகஸ்ட் கலவரத்தில் சேரவில்லையா? ஆசிரியமார்களுக்கு அடங்கி இருக்க முடியாதென்று எச்சரிக்கை விடவில்லையா? எல்லாம் செய்தனர் எதுவும் செய்வர். ஆனால் இங்குள்ள சமூகக் கொடுமைகளைக் கண்டால் ஏதும் கேளார், எதிர்த்திட எவரும் முன்வாரார், ஏன்? ஆங்கிலேயரை எதிர்க்கும் ஆற்றலுள்ள அதே கல்லூரி மாணவனுக்குத் திருமணம் நடக்கும். அய்யர் வருவார். அப்பக்கமிருந்து இப்பக்கம் எழுந்திரு என்பார். ஆகஸ்ட் வீரன்-அமெரியை எதிர்க்கும் தீரன்-சுதந்திரத்திற்காகப் போராடும் சூரன், அய்யருக்கு மட்டும் அடங்குவான், அவர் கூறுவது அனைத்தையும் கேட்பான். எதற்கும் ஏன் என்று காரணம் கேளான், எதிர்த்திட துணிவுகொள்ளான். இந்தப் பரிதாபகரமான படித்த கூட்டம் பக்குவம் பெறுவதற்குத்தான் இத்தனை பாடு ஒருவர் சொற்படி மற்றவர் நடப்பது அவசியத்தைப் பொறுத்தது காரணத்தோடு கூடியது என்றால், எவரும் குறை கூறார். படுத்திருக்கும் நோயாளியிடம் டாக்டர் வருகிறார், நாக்கை நீட்டு என்கிறார். நீ சொல்வது நான் கேட்பதா என்று நோயாளி இருக்கமாட்டான். நீட்டுவான், தன் நோய் தீர்க்கும் ஆற்றல் டாக்டருக்கு உண்டு என்பதால் கட்டியிருக்கும் வீட்டின் குறட்டை இடித்து எடு என்று முனிசிபல் கமிஷனர் கூறுகிறார். என் வீட்டுக்கு நீ யார் என்று வீட்டுக்காரர் கேளார். நகரப் பொதுமக்களின் நலனுக்காக அதிகாரி அவர் என்ற காரணத்தால் அதுபோல் அறிவு ஆற்றல் செல்வம் சிறப்பு முதலிய எதிலே பார்ப்பனர் உங்களைவிடச் சிறந்தவர்கள் என்று அவர்களுக்கு அடங்குகிறீர்கள்?

ஆரியனுக்கு ஏழாம் அறிவும் உண்டு:
பணத்திலே பெரியவராக ராஜா சர் இல்லையா? படிப்பிலே பெரியவர்களாக சர்.சண்முகமும், சர்.ராமசாமியும் நம்மிடம் இல்லையா? இருந்தும் ஏன் இந்த இனம் பார்ப்பனிடம் பணிந்து கிடக்கிறது. ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் ஆறறிவு படைத்த மனிதனிடம் அடங்குவதிலே ஆச்சரியம் இல்லை. ஆனால் ஆறறிவு படைத்த தமிழன் அதைப்போலவே ஆறறிவு படைத்த ஆரியனிடம் அடங்கிக் கிடப்பது அதிசயமாக இருக்கிறதென்று அன்பர் ஒருவர் கூறினார். ஆனால் ஆரியனுக்கு ஏழாம் அறிவு ஒன்று இருக்கிறது. அதுதான் பிறரை ஏய்த்துப் பிழைக்கும் அறிவு இப்படி அடங்கிக் கிடக்கும் தமிழன் தரணி ஆண்டவன் என்றும், ஆற்றல் மிகுந்தவென்றும் அந்த நாள் வரலாறு அறிவிக்கிறது. இமயத்திலே வெற்றிக்கொடி நாட்டிய தமிழன் என்று சொல்லப்பட்டவன் இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதா? அன்று ரோமாபுரிவரை வாணிபம் நடத்திய தமிழன் இன“று வாழவழி யின்றித் திகைப்பதா என்பதுதான் இன்று நாங்கள் உங்களை சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்வது. ஆகவேதான் பார்ப்பனீயம் என்ற பழைய ஏற்பாடு பாராண்ட தமிழர்களைக் கோழைகளாக்கிற்று என்று கூறுகிறோம். மீண்டும் மாண்புடன் வாழ வேண்டுமென்றால் இந்தப் பார்ப்பனீயம் அழிக்கப்பட்டாக வேண்டும்.

கல் உடைக்கும் பார்ப்பனனைக் கண்டதுண்டோ?

இன்றுள்ள வறுமையைத்தான் கவனியுங்கள், வளமில்லாத நாடு வறுமையுடன் இருந்தால் ஆச்சரியம் இல்லை. அரபு நாட்டுப் பாலைவனத்தில் எஸ்கிமோப் பனிக்காட்டில் வளமிராது. இங்கு நீர்வளமும் நிலவளமும் குடிவளமும் குறைவில்லை மக்கள் மனவளம் ஒன்றைத் தவிர வற்றாத ஜீவநதிகள் அவைகளால் வளர்க்கப்படும் வயல்கள், அவைகளில் விளையும் வகை வகையான மணிகள், நஞ்சையும், புஞ்சையும், மிகுதி, நாடெங்கும் சாலைகள் சோலைகள், மண்ணுக்கடியில் பொன், கடலுக்குள்ளே முத்து, காட்டிலே சந்தனம். இயற்கை எழிலுடன் விளங்கும் இந“நாட்டில் இல்லாமை இருக்கக் காரணம் என்ன? அந்த இல்லாமையும் அதன் பயனான ஈனத்தொழில் புரியும் நிலைமையும் தமிழரை மட்டும் தாக்குவானேன்? கல் உடைக்கும் பார்ப்பனனை நீங்கள் கண்டதுண்டா?

வர்ணாசிரமம் சூது நிறைந்த ஒரு சுரண்டல் இயந்திரம்:
கவிகள் பாடும் கருங்குவளை மலர்போன்ற கண்படைத்த நம் இனக் காரிகையர் காட்டுப் பாதையில் கடும் வெயில் நேரத்தில் கல்லுடைக்கக் காணலாம். அது மட்டுமல்ல, வளமுள்ள இந்த நாட்டிலே பிறந்து இங்கு வாழ வழியின்றிக் கடல் கடந்து மலாய் ரப்பர் தோட்டத்திற்கும், சிலோன் தேயிலைக் காட்டிற்கும் கூலிகளாகச் செல்லுபவர் அக்கிரகார வாசிகள் அல்ல. அந்தப் பரிதாபத்திற்குரிய தமிழர் தாய் நாட்டில் தாயைவிட்டு விட்டுத் தனியே செல்வர். திரும்பி வரும்போது தாய் புதைக்கப்பட்ட இடத்தையே காண்பர். மனையானை மனையில் விட்டுச் செல்வர். திரும்பி வருகையில் அவளை எலும்புக்கூடாகக் கண்டு திகைப்பர். சொந்த நாட்டிலே சோற்றுக்கு வகையின்றி, தங்க ஓடு போட்ட திருமண்டபத்தில் திருநடனம் புரியும் தில்லையானும், வைரக்கற்கள் இழைத்த விமானத்தில் படுத்துறங்கும் அரங்கநாதனும், வைர நாமத்தைச் சூட்டிக்கொண்டிருக்கும் வரதனும், வெள்ளி ரிஷமமேறும் சிவனும், தங்க மயில் முருகனும் தங்கியிருக்கும் தாய்நாட்டில் தாங்கள் வாழ்வதற்கு வழியின்றி, வெளிநாடு செல்லும் அந்தப் பரிதாபத்திற்குரிய தமிழர், கப்பல் தட்டில் நிற்கையில் இந்த நாட்டை வாழ்த்தியிருப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? கண்ணீரைக் கடல்நீரில் கலக்கிய அந்தக் கதியற்றவர்கள். அஷ்ட ஐஸ்வரியங்கள் உன்னிடத்தில் இருந்து என்ன? நாங்கள் அனாதைகள் தானே, வற்றாத நதிகள் இங்கே பாய்ந்து என்ன? எங்கள் வாழ்க்கை பாலைவனம் தானே, நஞ்சையும், புஞ்சையும் இருந்தென்ன? நாங்கள் பஞ்சைகள்தானே? நாங்கள் வாழ வழி செய்யாமல் வெளிநாட்டிற்கு எங்களைப் போகச் செய்யும் தமிழ்நாடே, அரசியலை ஆங்கிலேயனிடமும், ஆத்மார்த்தத்தை ஆரியனிடமும் வாணிபத்தை வடநாட்டானிடமும் ஒப்படைத்து விட்டுக் கிடக்கும் அடிமை நாடே எங்களுக்குச் சோறில்லை. சொர்ணம் விளையும் இந்த நாட்டில் எங்களை இக்கதியில் விடும் நீ இருந்ததென்ன? போயென்ன? அக்ரமத்திற்கு இடமளித்து அனாதைகளைத் துரத்தும் நீ அழிந்துபடு, அழிந்துபடு என்று சபிக்காமலிருந் திருப்பாரா? வெளிநாட்டிற்குக் கூலியாகச் செல்லும் இழிநிலை, பாடுபட்டும் பசியார உணவின்றித் திகைக்கும் தேய்நிலை நீங்கவேண்டாமா? வர்ணாசிரம தர்மம் என்ற வகைய்றவர் பேசும் ஏற்பாடு வேறொன்றுமில்லை. சூது நிறைந்த ஓர் சுரண்டல் இயந்திரம்தான். அதை முறியடித்தால் பாடுபடுபவன் பதைக்க வேண்டியதில்லை, உழைப்பு வீணாகாது. உலுத்தர் உயரமாட்டார். சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற வசதி என்ற தத்துவத்தை அமுலுக்குக் கொண்டுவர முடியும்.

திராவிட நாடு தனிநாடு ஆகவேண்டுமென்றும், மத சமுதாயக் கலைத்துறைகளில் மறுமலர்ச்சி ஏற்படவேண்டுமென்றும் நாங்கள் கூறுவதன் நோக்கம், எல்லாரும் இன்புற்று இருக்கவேண்டும் என்பதுதான். எனவே, இந்த மறுமலர்ச்சி இன்ப வாழ்வின் மணம் கமழும் மறுமலர்ச்சி-தேவை என்று உணரும் தோழர்கள் இதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

(1-7-45 சிதம்பரம் இளங்கோ மன்ற ஆறாம் ஆண்டு துவக்கவிழா தலைமையுரை)