அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நான் தருகின்றேன் 1000 கோடிக்குத் திட்டம்
1

திட்டக் குழிவில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும் பொருட்டு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளும் கட்சியினர் அன்பழைப்பு விடு“திதருப்பதானது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அன்பழைப்புக்குப் பின்னால் பொதிந்து கிடக்கும் நோக்கம் உள்ளபடியே பாராட்டப்பட வேண்டியதாகும். எந்தக் கட்சியனராக இருந்தாலும் அந்த நோக்கத்தினைப் புறக்கணிக்க முடியாது.
இன்றைய அரசியல் அமைப்பில் திட்டம் என்பதானது பெருமளவக்கானதோர் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. திட்டத்தின் அளவு பெரிதாக பெரிதாக, நம்முடைய நம்பிக்கைகள் வளர்ந்து கொண்டே போவதானது இயற்கையானதாகும். எனவே திட்டத்தினைத் தொடர்ந்து மதிப்பிட்டுப் பார்க்கவேண்டியது இன்றியமையாததாகிறது. கூடுமான வரையில் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்திக் கொள்ள வேண்டும். பல்வேறுபட்ட நிலையிலும், புதிய உருவம் தரக்கூடிய மாதிரியாகவும், கூடுதலான ஏற்பாடுகள் செய்யக்கூடிய முறையிலும், திருத்தி அமைக்கக்கூடிய வகையிலும் நகல் திட்டத்தின் அமைப்பு இருக்கவேண்டும்.

இத்துறையில் ஆளும் கட்சியினருடன் ஒத்துழைப்பு என்பதானது திட்டங்களை உருவாக்கவும், அதனை நிறைவேற்றவும் சுறுசுறுப்பான முறையிலும், அனுதாபத்துடனும் இருக்கும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதற்கண் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனவே என்னுடைய கட்சி மனப்பூர்வமான ஒத்துழைப்பினை அளிக்க முன்வருகிறது.

பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் அடிப்படைக் கொள்கைகளில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பதை இத்தருணத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டும். என்றாலும், குறிப்பிடத்தக்க அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் நாங்கள் அரசியல் கட்சியினரால் உருவாக்கப்பட்டி ருக்கும் திட்டத்தின் வரையளவுக்குட்பட்ட விதத்தில்தான் எங்களுடைய ஆலோசனைகளை எடுத்துக்கூறுவதாக இருக்க முடியும்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், ஆளும் கட்சியினரால் கையாலப்பட்டுவரும் பொருளாதாரக் கொள்கையானது ஒரு கலப்படமான பொருளாதாரத் திட்டம் என்றுதான் கூறவேண்டும். மேலும் இத்திட்டத்தின் அடிப்படையாக அமைந்துள்ள அரசியல்-பொருளாதாரத் தத்துவத்தைக் கூறுவதென்றால் “சோஷலிச மாதிரி” என்று தான் சொல்ல வேண்டும். தி.மு.கழகம் குழப்பமற்ற, ஒரு திட்டவட்டமான தத்துவார்த்தத்தையே விரும்புகிறது.
அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளைத் திருத்தியமைக்கவோ, கலந்துரையாடவோ திட்டக்குழுவின் அமைப்பு முறையில் வழிவகைகள் இல்லாத நிலையில்தான் இருக்கிறது.

நாங்கள் செய்யக் கூடியதெல்லாம் அதிகமான அளவில் நன்மைகளைப் பெறவும், சுமுகமான முறையில் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கான முறையிலும் உதவியாகத்தான் இருக்க முடியும். ஆனால் திட்டக்குழுவின் நிர்வாக இயந்திரம் முற்றிலும் ஆளுங்கட்சியினரால் உருவாக்கப்பட்டதேயாகும்.

எனவே தி.மு.கழகத்தினர் வழங்க இருக்கும் ஆலோசனைகள், குறிப்பிடும் குறைபாடுகள் அல்லது ஏனைய கட்சியினரால் வழங்கப்படும் ஆலோசனைகள் அனைத்தும் ஆளும் கட்சியினர் கடைப்பிடித்துவரும் கலப்படமான பொருளாதாரத் திட்டத்தால் அதனுடைய உண்மையான தத்துவார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலை இயற்கையாகவே அமைந்து கிடக்கிறது. மக்களின் எதிர்காலம், அவர்களின் முன்னேற்றம் ஆகியவைகளை உருவாக்க திட்டம் இன்றியமையாத ஒரு தேவை என்ற ஒரு உணர்வுதான் பொதுவான ஒரு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

மாநிலத்தின் திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டம் அற்ற முறையில் அனைத்தும் இருக்கிறது என“பதனைத் திட்டம் ஒன்றினை உருவாக்க முயற்சிப்பவர்கள் உணரத் தவறிவிட்டனர் என்ற கருத்தினை மறந்துவிடுவதற்கில்லை. அதனால் கிடைக்கக்கூடிய ஒரு சில பலனும் மத்திய அமைச்சரவையினரால் உருவாக்கப்பட்டுள்ள திட்டக்குழுவின் மூலமாகத்தான் பெறமுடிகிறது.

மாநிலத்தின் முயற்சி ஓரளவிற்கு உண்டு என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும் பெரிய அளவிற்கான திட்டங்கள் தீட்டும் அதிகாரம் அனைத்தும் மத்திய ஆட்சியாளரிடத்தில் தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட திட்டங்களை ஏற்று நிறைவேற்றுவதற்கு மத்திய சர்க்காரைத் தூண்டுவதற்கு மாநில ஆட்சியினருக்கு வசதியாக இருக்கிறது.

எனவே, மாநிலத் திட்டங்களானது, அதன் போக்கிலேயே முக்கியத்துவம் பெற்றதோர் நிர்வாக அமைப்பினைக் கொண்டதாகவே இருக்கிறது.

நிறைவேற்றப்பட்ட இரண்டு திட்டங்களிலும் பெரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஆளுங்கட்சி மூன்றாவது திட்டத்தையும் நிறைவேற்றக்கூடிய பேராற்றல் தமக்கிருப்பதாக நம்பிக்கொண்டிருப்பது இயற்கையின் பாற்பட்டதாகும். மேலும் அதன் மூலம் உருவாகக்ப்பட்ட பலன்கள் அனைத்தும் அனைவராலும் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய முறை‘ல் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இரண்டு திட்டங்களும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்ற பேருண்மையை ஏனைய அரசியல் கட்சிகள் மறந்துவிடக்கூடாது. மறந்துவிடுவதற்கும் இல்லை. குறைபாடுகளை நாம் உணரும்போது, நம்முடைய முயற்சிகளைச் சரிப்படுத்தக் கொள்ள மேலே கூறிய உண்மைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஆளுங்கட்சியினரை வற்புறுத்தவேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.

மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் தேசீய வருமானத்தை உயர்த்துவதே முடியுந்தருவாயில் உள்ள இரண்டாவது திட்டத்தின் முதலாவதான தலையாய அடிப்படை நோக்கம் என்று கூறப்பட்டது.

இந்த நோக்கம் தவறுடையது என்று யாரும் கூறுவதற்கில்லை. ஆனால் புதியதோர் திட்டத்தைச் செயல்படுத்த முற்படும்போது நடைமுறையில் ஏற்கெனவே உருவான உருப்படியான பலனை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். வாழ்க்கைத் தரத்தில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோமா?

தேசீய வருமானம், தனி நபர் வருவாய் ஆகியவை உயர்ந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகப்பட்டுவிட்டதினால், தனிநபர் வருமானத்தின் மூலம் ஏற்பட்ட பலன் முற்றிலும் பயனற்றுப் போய்விட்டது.

இந“தப் பேருண்மையைக் கருத்தில்கொண்டு, மூன்றாவது திட்டத்தை உருவாக்கும் தருணத்திலும், அதனுடைய நடைமுறைக் காலத்திலும், விலைவாசி உயர்வுகளைக் கட்டுப்படுத்தி மக்கள் வாழ்க்கைத் தரத்தைச் சீர்செய்யக்கூடிய வகையில் இணைந்திருக்க வேண்டும்.

பணவீக்கம், பற்றாக்குறை நிதி நிலை ஆகிய இரண்டும் ஆபத்தான கட்டங்கள் என்று பொருளாதார மேதைகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். அந்நியச் செலாவணிப் பிரச்சினை மிகவும் தொல்லைகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இவைகளைக் கட்டுப்படுத்தவோ, திருத்தியமைக்கவோ நம்முடைய வரையளவுக்கு அப்பாற்பட்ட மத்திய அரசின் கடமை.

அவ்வப்போது ஏற்படக்கூடிய அதிர்ச்சிகள், நன்மை, தீமை ஆகியவைகளை மட்டும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படலாம்.

எனவேதான், மாநிலத் திட்டத்திற்கான அளவினங்கள், அமைப்பு முறைகள் இன்னபிற அனைத்தும் உருவாக்கக்கூடிய அடிப்படை அதிகாரத்தை மத்திய அரசு பெற்றிருக்கிறது.
அடிப்படைத் தொழிற்சாலைகள், கனரகத் தொழிற்சாலைகள் இரண்டும் முக்கியத்துவம் பெற்றதோர் தீவிரமான தொழில் வளர்ச்சித் திட்டத்தின் இரண்டாவது நோக்கமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அடிப்படைத் தொழிற்சாலைகளும், கனரகத் தொழிற்சாலைகள் இரண்டும் முக்கியத்துவம் பெற்றதோர் தீவிரமான தொழில் வளர்ச்சித் திட்டத்தின் இரண்டாவது நோக்கமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அடிப்படைத் தொழிற்சாலைகளும், கனரக தொழில்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனெனில் அவைகள்தான் பொருளாரச் சீரமைப்புக்கு பல்வேறு துணைத் தொழில்கள் தோன்றுவதற்கு மூலகாரணமாய் அமைந்திருக்கிறது.

இதுகுறித்து கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. மிகப் பிரமாண்ட மானவை என்று பண்டித நேருவால் வர்ணிக்கப்படும் அனைத்தும், ஏனைய மாநிலங்களைப் புறக்கணிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெரிய தொழிற்சாலைகள் என்ற பட்டியலின் வரிசையில், இரண்டாவது ஐந“தாண்டுத் திட்டத்தில் நமது மாநிலத்திற்கு ரூ.76 லட்சம் தான் ஒதுக்கப்பட்டது.

மத்திய சர்க்கார் நிர்வாகத்தின் கீழ் ஐம்பது கோடி ரூபாயில் நெய்வேலித் திட்டம் இருக்கிறது என்று கூறி புகலிடம் தேடிக் கொள்வதோடு அத்துடன் மன நிறைவு கொள்கிறோம்.
ஆனால் பல்வேறு அரசியல் கட்சிகள் வற்புறுத்தியும் கூட அடிப்படை தொழில்களுக்கும், கனரகக் தொழிற்சாலைகளுக்கும் வேண்டிய தேவையான பொருள்கள் இன்றுவரை பயன்படுத்தப் படாமலேயே இருக்கிறது.

எனவே இந்த மாநிலத்தில் அடிப்படை, கனரகத் தொழிற்சாலைகள் வளருவதற்கான முறையில் சுறுசுறுப்பாக கவனம் செலுத்துவதோடு கருணையும் காட்டி போதுமான நிதி ஒதுக்கவேண்டும்.

பல்வேறு மாநிலத்திலும் தொழிற் வளர்ச்சியில் காட்டப்பட்டு வந்த பேதம் மக்கள் மத்தியில் கசப்புணர்ச்சியை வளர்த்து விட்டிருக்கிறது என்பது தற்போது நன்கு உணரப்பட்டு வருகிறது. ஏற்றத் தாழ்வுகளை சரி செய்யும் பொருட்டு கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுவிட்டன.

எனவே இந்த மாநிலம் உறுதியான உள்ளத்துடனும், திடமான முயற்சியுடனும் தங்களது பலமான கோரிக்கையை மத்திய சர்க்காருக்கு முன்வைக்க வேண்டும்.

நாட்டின் சரிசமமான வளர்ச்சியை உணர்ந்து அவைகளுக்கு உறுதியளிக்கும் முறையில் முயற்சி எடுத்துக் கொள்கின்ற தன்மையில், தொழிற்சாலைகள் முறையான வகையில் பகிர்ந்தளிக்கவேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

தொழில் வளர்ச்சிக் குறைவுக்கு நிலக்கரி பற்றாக்குறை என்று காரணம் காட்டப்படுகிறது. இந்த வாதததிற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.

தீர்க்க தரிசனத்தோடு துணிவான முறையில் திட்டமிடுவார் களானால் இயற்கைச் செல்வங்களைத் தேடிப் பிடிப்பதோடல் லாமல் இயற்கைச் சக்திகளையும் வென்று தன் வயப்படுத்தி ஆக்க வேலைகளுக்கும் பயன்படுத்தி மிகுந்த பலனைக் காணலாம்.

இயற்கை வளங்கள் குறைந்து காணப்படும் நாடுகள் அனைத்தும் வியக்கத்தக்க முறையில் தொழில் மயமாக்கப் பட்டிருக்கிறது. ஜப்பான் நாடு அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

புனரமைப்பிற்கான அனைத்துத் துறையிலும் நாட்டங் கொண்டு முயற்சி எடுக்கப்பட்டு வரும்போது துவக்கத்திற்கான சில வசதிக் குறைவுகளைச் சுட்டிக்காட்டுவதானது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

“தேசீயக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்போனால் அந்தந்தப் பகுதியிலிருந்து கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களைக் கொண்டு கூடுமானவரையில் அபிவிருத்தி காணுவதே திட்டத்தின் பலன் தரக்கூடிய நோக்கமாகும் இருக்கவேண்டும்.”

“தேசீய திட்டக் குழுவினர் இந்த முறையில் விஞ்ஞான ரீதியில் தொழில்களைப் பரவலாகத் திட்டமிட்டு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்திப் பொருள்களை உண்டாக்கக்கூடிய தொழில்களை ஒழுங்கான முறையில் நடத்திச் செல்லவேண்டும். எந்தப் பகுதியிலும் கிடைக்கக்கூடிய வளங்கள் அபிவிருத்தி யடையாத நிலை ஏற்படக் கூடாது.”

“இதன் மூலமாக வசதிகள் கொண்ட ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூரில் உள்ள தொழிலாளர்களுக்கும் தேவையான வேலை வாய்ப்புத் தேடித் தரமுடியும். உள்நாட்டு வளர்ச்சிக்குத் தேவைப்படும் பணிகளுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர் வர்க்கம் முதல் உரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர்.

உள்நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்கள், உள் நாட்டுத் தேவைகள், உள்நாட்டு வாய்ப்புகள் ஆகியவைகளைக் கூர்ந்து கவனித்துப் பார்த்துத் தக்கமுறையில் துரிதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் நிர்வாக இயந்திரம் உருப்படியான வகையில் செயல்படுமானால் எந்த மாநிலம் அல்லது ராஜ்யம் அல்லது பிராந்தியம் பற்றாக்குறையானது என்றும் எந்த மாநிலம் மிதமிஞ்சியது என்றும் நிர்வாக அதிகாரிகள் திட்டவட்டமாக நிர்ணயிக்க ஏதுவாக இருக்கும்.”

“அப்படி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் பொது நிதியிலிருந்து பற்றாக்குறைப் பகுதிகளைச் சரிசெய்ய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது மிதமிஞ்சிய பகுதிகளில் இருந்து கிடைக்கக்கூடிய இலாபத்தை ஒவ்வொரு துறையிலும் பொதுவான நன்மையை உத்தேசித்து பயன்படுத்தப்பட வேண்டும்” என்று பேராசிரியர் கே.டி.ஷா. சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேற்கண்ட ஆலோசனை நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ளப் படுமானால், தொழில்துறையில் முன்னோடியாக உள்ள மாநிலங்கள் பொது நிதியிலிருந்து அதிகத் தொகை பெறுவதைக் காட்டிலும், தொழ‘ல் துறையில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த மாநிலம் பொதுநிதியிலிருந்து அதிகத் தொகை பெறுவதற்கு உரிமை கொண்டதாக இருக்கும்.

எனவே, பொதுத்துறையில் சேலம் உருக்கு அலுமினியத் தொழிற்சாலைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதனைச் சார்ந்த வேறு பல தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் போதுமான வாய்ப்புகள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு, கிடைக்கக்கூடிய கணிசமான மாங்கனீஸ் தாதுப்பொருளை ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் அதனை ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதில் நம்முடைய கவனத்தை அதிகம் செலுத்தலாம்.

திட்டமிடப்பட்டுள்ள சேலம் உருக்குத் தொழிற்சாலை, ஏனைய மாநிலங்களில் முழு அளவில் இயங்கிவரும் உருக்குத் தொழிற்சாலைகளின் மாதிரி சிறிய அளவினதாகவே இருக்கும் என்ற எண்ணம் பலருடைய உள்ளத்தில் இருக்கிறது. இந்த எண்ணத்தைப் போக்கி, வேறு பல தொழில்களுக்குத் தேவையான இரும்பு உற்பத்தியை உற்பத்தி செய்ய முடியும் என்ற எண்ணத்தை உள்ளத்தில் கொண்டு மாநில சர்க்கார் பெரிய அளவில் திட்டம் தீட்டவேண்டும்.
சேலம் உருக்கைப் பயன்படுத்தி பொருள்களைக் கொண்டு செல்லும் இரயில்வே பெட்டிகளைத் தயாரிக்க முடியும்.

எண்ணெய் வாய்ப்புக்கான ஆராய்ச்சிகளும் காவேரிப் படுகையில் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற காலதாமதமாகும் என்றாலும் மனப்பூர்வமான துவக்க வேலைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இந்த மாநிலத்தில் விரிவானதோர் நிலவள ஆராய்ச்சியும் போதுமான அளவில் மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்துத் துரிதமாக முன்னேறியிருப்பதால், மோட்டார் சாதனங்களுக்குப் பாடிகட்டும் தொழிற்சாலைகள் இந்த மாநிலத்தில் குறைந்தது ஆறு இடங்களிலாவது மேற்கொள்ளலாம்.

இந“த மாநிலத்தில் கால்நடைகளில் இருந்து கிடைக்கும் துணைப் பொருள்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் அதாவது இறைச்சி தோல். தோல் சாமான்கள், ரோமங்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள், கம்பளம், எலும்பு, பால், தசைகள், மிருகங்களின் குளம்பு அல்லது கொம்புகள் ஆகிய தொழிற்சாலைகள் பெரிய அளவில் பொதுத்துறையில் உருவாக்கப்பட வேண்டும்.

கைக்கெடியாரம் செய்தல், விஞ்ஞான சாதனங்களுக்குரிய மெல்லிய நுணுக்கமான சாதனங்கள் தயாரித்தல், விளையாட்டுப் பொருள்கள், தையல் இயந்திரங்கள், மின்சாரப் பொருள்கள், இன்னும் இவைபோன்ற சிறு ரக தொழிற்சாலைகள் நிறுவத் திட்டமிடப்பட வேண்டும்.

இதுபோன்ற சிறு ரக தொழிற்சாலைகளின் நடைமுறையை அறிந்துவர ஜப்பானுக்கும், ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கும் மாநில சர்க்கார் குழு ஒன்றை அனுப்பி வைக்கவேண்டும்.

முந்திரியிலிருந்து கிடைக்கக்கூடிய துணைப் பொருள்களைப் பிளாஸ்டிக் தொழிலுக்குப் பயன்படக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பார்த்து அவைகளை அபிவிருத்தி செய்யவேண்டும்.

மூலிகைகள் கிடைக்கக்கூடிய இடங்களில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறுவக்கூடிய சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இரண்டாவது ஐந்தாண்டு நகல் திட்டத்தில் காகிதத் தொழிற்சாலை துவங்குவதற்கான இன்றியமையாத அவசரத் தேவை குறித்தும் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் உருப்படியான பலனைத்தரவில்லை. நீலகிரி மலைப்பிராந்தியத்திலிருந்து கிடைக்கக்கூடிய மரப்பட்டை, மூங்கில் ஆகியவைகளைக் கொண்டும், தஞ்சையில் உள்ள சர்க்கரை ஆலைகளிலிருந்து கிடைக்கக்கூடிய துணைப்பொருள்களைக் கொண்டும் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் காகித தொழிற்சாலைகள் நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
ஜிப்சம் என்ற ஒருவகை கனிப்பொருள் அளவில் கணிசமாகக் கிடைக்கிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் மிகுந்து காணப்படும். இந்தக் கனிப்பொருளை முறையாகவும், இலாபந்தரக் கூடிய வகையிலும் பயன்படுத்தி அந்தகிகா அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் நிறுவலாம்.
சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் சர்க்கரைப் பாகில் இருந்து கணிசமான அளவில் மின்சார இயக்கத்தை உண்டாக்கக்கூடிய ஒருவித சாராயம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இதுகுறித்து இரண்டு பிரச்சனைகள் எழுகின்றன. பொதுவாக அவைகள் பெரிதும் தடையாகவே இருக்கின்றன. ஒன்று இவைகளுக்குத் தேவையான இயந்திரங்கள் இறக்குமதி செய்வதில் உள்ள தொல்லைகள், மற்றொன்று இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான தொழில் நுணுக்கம் ஆகியவைகளாகும்.

ஆனால் இந்தத் தொல்லைகளுக்கு உடனடியாகப் பரிகாரம் தேடத் தவறிவிட்டால், ஏற்கனவே தொழில் துறையில் முன்னேறியுள்ள ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் இந்த மாநிலம் மிகவும் பிற்போக்கான நிலைக்குப் போய்விடும். எனவே மாநில சர்க்கார், மத்திய சர்க்காரிலிருந்து கிடைக்கக்கூடிய பதில்களைப் பதிவு செய்வதில் மட்டும் மனநிறைவு கொள்ளாமல், இந்த மாநிலத்திற்குத் தேவையான பொருள்களைப் பெறுவதில் உள்ள இறக்குமதி கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்துவதற்கான விதிமுறைகளை வலியுறுத்த வேண்டும். வேற்று நாட்டுத் தொழில் நுணுக்க நிபுணர்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு நாம் வெட்கப்படத் தேவையில்லை. குறிப்பாக ஜப்பான் மற்றும் தொழில் நுணுக்கத்தில் முன்னேறியுள்ள ஏனைய நாட்டுத் தொழில் நுணுக்க வல்லுனர்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நீண்ட காலத் திட்டத்தில் கடினமான உழைப்பின் மூலம் சொந்தத்தில் நம்முடைய தொழில் நுணுக்க வல்லுணர்களை உற்பத்திச் செய்வது என்பது எவ்வளவு சாத்தியமானதாக இருந்தாலும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய காலமாத்தின் மூலம் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நம்முடைய மாநிலத்தின் தொழிலபிவிருத்தியின் எதிர்காலத்தையும், முன்னேற்றத்தையும் தளர்த்தெறித்துவிடக் கூடியதாக இருக்கக் கூடாது.

இதுகுறித்து தூதுவரலுவலகத்தின் மட்டத்தின் பல்வேறு நட்புறவு நாடுகளின் துணையை நாடிப் பெறவேண்டும்.

இந்த மாநிலத்தில் போதுமான மக்கள் சத்தியைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் கைத்தறித் தொழில்கள் இருந்தும், இன்னும் அவைகள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.

உதவி, தள்ளுபடி இன்னும் இதுபோன்ற அனைத்தும் இன்னும் நம்பிக்கை அளிக்கக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. இத்தொழிலை நிலைநிறுத்தக்கூடிய தேவைகள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும். மிகவும் பலம் வாய்ந்த வியாபாரப் பெருக்குடைய நிறுவனங்களின் தேவைகளுக்கான கைத்தறித்துணிகள் கிடைப்பதற்கான உத்தரவாதம் இருக்கவேண்டும்.

நம்முடைய ஏற்றுமதி தேவையான அளவுக்குத் தற்போது இல்லை. அவ்வப்போது ஏற்படக்கூடிய அதிர்ச்சிகளினாலும், இக்கட்டுக்களினாலும் இத்தொழில் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது. அமெரிக்கர்களுக்குத் தேவையான கைத்தறி ஆடைகள் எதிர்காலத்தில் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. பெருமளவில் அந்த நாட்டின் தேவையிருப்பதால், இந்தத் தொழில் மாநில ரீதியில் மேற்கொள்ளப்படுமேயானால் இத்தொழிலுக்கு நல்லதோர் எதிர்காலம் இருக்கிறது என்று எண்ணம் எழுவது இயற்கையின் பாற்பட்டதாகும். உற்பத்தியைப் பொறுத்தவையில் தனிப்பட்டவர்களிடத்திலும் அல்லது கூட்டுறவு நிறுவனங் களிடத்திலும ஒப்படைக்கப் பட்டாலும், அவைகளை ஏற்றுமதி செய்யும் பொறுப்பு முழுவதும் மாநில சர்க்காரின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்.

கைத்தறி ஆடைகளை மாநில சர்க்காரே பெருமளவில் வாங்கி அவைகளை ஏற்றுமதி செய்யவேண்டும்.

தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றிக் கொள்கின்ற தன்மையில் ஏற்றுமதியானது தனிப்பட்டவர்கள் வசம் ஒப்படைக்க்ககூடாது.

ஒரு பயனுள்ள காரியத்திற்குப் பல இலட்சக்கணக்கானவர் களைப் பயன்படுத்திக் கொள்கின்ற முறையில் கைத்தறித் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் காவலனாக சர்க்கார் இருக்கவேண்டும்.

கூட்டுறவு ஸ்தாபனங்கள் அமைத்தல், அவர்களுக்குத் தேவையான குடியிருப்பு வசதிகளைத் தேடித் தருதல் இன்னும் இதுபோன்ற வேலைகள் அனைத்தும் மேற்கொள்ளுவதானது சர்க்காரின் வள்ளல் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமையும். தற்போது தேவைப்படக் கூடியது என்னவென்றால், கைத்தறித் தொழில் நிலையானதாகவும், இலாபம் தரத்தக்கனவாகவும் அமையவேண்டும் என்பதேயாகும்.

உப்பு, இரசாயன உப்பு இன்னும் இதுபோன்ற வகையறாக்களின் ஏற்றுமதிச் சூழ்நிலைகள் அனைத்தும் எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கையூட்டவனவாக இருக்கிறது. தூத்துக்குடி மட்டுமன்றி வேதாரண்யம், சூனாம்பேடு இன்னும் இதுபோன்ற எண்ணற்ற இடங்கள் இத்தொழில் நல்முறையில் வளருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகுந்து காணப்படுகிறது. இத்தொழிலுக்கு மக்கள் சக்தி அதிகம் தேவைப்படக்கூடிய நிலையில் இருக்கிறது. எனவே சர்க்கார் பொதுத்துறையில் உப்பு உற்பத்திக்கான விளைநிலங்களை அதிகம் கொண்டு வருவதற்குப் போதுமான வாய்ப்பு இருக்கிறது.

பல்வேறு விதமான எண்ணெய் வகையறாக்கள், காய்கறி வகைகள், தாவரப் பொருள்கள் ஆகியவைகள் உற்பத்தி செய்யவேண்டும். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் அதிகமான உற்பத்தியைப் பெருக்கவேண்டும்.

தற்போது தனிப்பட்டோர் ஆதிக்கத்திலிருக்கும் பீடித் தொழில்களை பொதுத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்.

உதகமண்டலத்தில் கச்சா பிலிம் தயாரிக்கும் திட்டம் மக்களிடத்தே நம்பிக்கையளிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இன்னும் அது நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

முக்கியத்துவம் பெற்றுவரும் பிலிம் தொழிலை நாம் புறக்கணிக்க வேண்டும்.

கலை, கலாச்சாரத் தொழில்களைவிட பிலிம் தொழில் மிகவும் பெரிய தொழில்களாகத் திகழ்கிறது.
கோடிக்கணக்கான ரூபாய்கள் முடங்கிக் கிடக்கும் இத்தொழிலில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்புப் பெற்றிருக்கின்றனர்.