அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நான் தருகின்றேன் 1000 கோடிக்குத் திட்டம்
2

பிலிம் தொழில் மெல்ல ஆனால் உறுதியான முறையில் அன்னிய நாட்டு வாணிபத்தில் இடம் பெற்றிருக்கிறது. எனவே அத்தகைய நல்வாய்ப்பினைச் சாதகமாக்கிக் கொண்டு சர்க்கார் அந்த வாணிபத்தினைப் பெருக்க முன்வரவேண்டும். இத்தொழில் பற்றிய செய்திகளைத் திரட்டி தொழில் நுணுக்கப் பயிற்சி அளிப்பதற்கான வழிவகை காணும்பொருட்டு வெளிநாடுகளில் சர்க்கார் கண்காணிப்பாளர்களை நியமிக்கவேண்டும்.

வளர்ந்துவரும் இத்தொழிலில் கிடைக்கும் கிராமத்தில் சர்க்கார் பங்குபெற சினிமாத் தொழிலை தேசீய உடமையாக்குவதோடு, ஸ்டுடியோக்களையும் தாமே எடுத்து நடத்த முன்வரவேண்டும்.

சர்க்கார் பிலிம் மட்டுமின்றி இத்தொழிலுக்கு வேறு பலவிதமான துணைக்கருவிகளும் தேவைப்படுகின்றன. எனவே இவைகளைப் பெறுவதற்கு அன்னிய வாணிபத்தில் பெரும் பொருளைச் செலவழிக்கும் கணிசமான தொகையைச் சர்க்காரே இத்துணைக்கருவிகளை தயாரிக்க முற்படுமேயானால் பெருமளவு சேமிக்கலாம்.

இத்தொழிலுக்குத் தேவைப்படும் நவீன கருவிகளின் தரம், தன்மை ஆகியவைகள் குறித்து சர்க்கார் ஆலோசனை வழங்குவதை விட சர்க்காரே இத்துணைக் கருவிகளை உற்பத்தி செய்ய முற்பட்டால் தரமான கருவிகளை நல்ல முறையில் உற்பத்தி செய்யலாம்.

நவீன விஞ்ஞான சாதனங்கள் தடையின்றி கிடைக்குமானால் நம்முடைய கலைஞர்கள் மேல்நாட்டுக் கலைஞர்களுடன் போட்டியிட முடியும் என்பதோடு உலக நாட்டு வாணிபச் சந்தையில் படத்தொழில் சம்பந்தப்பட்ட நம்முடைய வாணிபத்தை நல்ல முறையில் பலப்படுத்த முடியும்.

தோல் சம்பந்தப்பட் தொழிலைப் பொறுத்த வரையில் சென்னை முதலிடம் பெற்றிருக்கிறது. ஆனால் சீரான முறையில் முயற்சிக்கப்படுமானால் தற்போது பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும் தோலை இங்கேயே தேக்கிவைத்து பெருமளவில் மக்கள் சக்தியையும் பயன்படுத்தி இலாபம் தரக்கூடிய தொழிலாக மாற்றி அமைக்க முடியும்.

கம்பள ஏற்றுமதியும் கவனம் செலுத்தவேண்டிய மற்றொரு பொருளாகும். மிகப் பழைய முறைகளைக் கையாள்வோரிடத்தில் இந்தத்தொழில் தற்போது இருந்துவருவதால் மிகவும் பிற்போக்கான நிலையில் இருக்கிறது. தொழில் நுணுக்க ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் உருப்படியான மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஏற்றுமதிப் பொருளாக இருக்கின்ற காரணத்தால் இது விஷயத்தில் அதிகமான கவனம் செலுத்தவேண்டும்.

இந்தத் தொழிலுக்கும் இன்னும் இதுபோன்ற ஏனைய தொழில்களுக்கும் மாநில சர்க்கார் உதவி வழங்குகிறது என்றாலும் இன்னும் அதிகப்படியான பயன் கிடைக்கவேண்டுமானால் கிடைத்துவரும் நிதி உதவிகள் ஏதோ அடையாளமாக அளிக்கின்ற தன்மையில் இல்லாமல் மனப்பூர்வமான முயற்சிகள் முழு அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பத்துப் பதினைந்து ஆண்டுகளில் அதிக வருவாய் அளிக்கத்தக்க வகையில் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

மிகப் பலவற்றை அடைவதற்கு ஒரு சிலவற்றையாவது நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். சிலவற்றை அடைவதற்கு பலவற்றை நாம் நோக்கிப் பார்க்கவேண்டும்.

இப்பிரச்சினைகளை நிபுணர் குழு ஒன்று ஆராய்ந்து பார்த்து இந்த மாநிலத்தின் தனிச்சிறப்பாக விளங்கத்தக்க வகையில் ஒரு தொழிற்சாலை அமைக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த தொழிற்சாலைக்கு மாநில சர்க்கார் போதுமான நிதியுதவியளிக்க முன்வரவேண்டும்.

எல்லாப் பிரச்சினைகளையும் பரிசீலிப்பது என்பதுதான் இன்றைய நடைமுறையாக இருக்கிறது. ஆனால் அவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்று விடுகிறது.

சாதாரணமானதன்றி திட்டமிட்டபடி பட்டியலில் இடம்பெற தங்களுக்கேற்ற வகையில் பல்வேறு விதமான தொழிற்சாலைகளை சின்னஞ்சிறிய நாடுகள் பல உருவாக்கியிருக்கின்றன. எனவேதான் அந்த நாடுகள் அனைத்தும் வெகுவாக முன்னேற்றம் கண்டிருக்கிறது. கடிகாரத் தொழிலில் சிறந்து விளங்கும் ஸ்விட்சர்லாந்தும், பால்பண்ணைத் தொழிலில் புகழ்பெற்று விளங்கும் டென்மார்க்கும் அளவில் சிறியது என்றாலும் பலம் பொருந்திய இந்த நாடுகள் மிகப்பெரிய தங்கள் தொழிலின் மூலம் உலக நாடுகளின் வாணிபச் சந்தையைப் பெருமளவில் கைப்பற்றியிருக்கின்றன.

தோட்டங்களில் உற்பத்தியாகும் காப்பி, தேயிலை, ரப்பர், வாசனைத் திரவியங்கள் ஆகியவைகள் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரத்தக்கனவாக இருக்கிறது. ஆனால் அவைகள் அனைத்தும் தனிப்பட்டோர் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. அவைகள் நல்ல வரி தரக்கூடிய நிறுவனங்களாகவே சர்க்கார் கருதிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பொருள்கள் அனைத்துக்கும் ஏற்றுமதிக்கான நல்லதோர் எதிர்காலம் இருப்பதால் தனியார்துறை ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி நல்லதோர் திட்டத்தின் மூலம் மாநில சர்க்கார் நிர்வாகத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

ஆனால், திட்டங்களை உருவாக்கவும், நிறைவேற்றவும் அதிகாரம் பெற்றிருக்கும் கட்சி தனியார் துறையின் இன்றியமையாத தேவையில் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஏனைய கட்சியினர் இக்கருத்தினை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

இன்றைய தினம் பெருமளவில் விவசாயத்தையே நம்பிக் கொண்டிருக்கிற காரணத்தால், இந்த மாநிலத்தைத் துரிதமாகத் தொழில் மயமாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. விவசாயத்தையே பெருமளரில் நம்பிக்கொண்டிருக்கும் நிலைமை மாறி தொழில்துறை விரிவான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டாலொழிய எந்த நாடும் முன்னேற்றமடைய முடியாது.

ஆனால் விவசாயத்தையே சுழன்று கொண்டிருக்கும் பொருளாதார நிலைமை மாற்றமடைவதற்கு நீண்டதோர் காலம் பிடிக்கும்போது முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் விவசாயம் மட்டுமே பெரியதோர் தொழில் வளமாக வளர்ச்சியடைந்துள்ள போது, இங்கே மட்டும் எல்லாவிதமான நடைமுறை உபயோகத்திற்கும் அது ஒரு பரம்பரை பாத்யதையாக இருந்து வருகிறது.

இத்துறையில் அதிக நாட்டம் செலுத்தப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடுகளும், எதிரிடையான எண்ணங்களும் உருவானதால் முன்னேற்றத்தின் வேகம் தடைப்பட்டுவிட்டது.

நாட்டின் உணவுப் பற்றாக்குறையை நிறைவு செய்வதே இரண்டு திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. பெருந்தொகை செலவழிக்கப்பட்டது, திட்டங்கள் பல உருவாக்கப்பட்டன. ஆனால் பத்தாண்டுகள் கழித்தும் கூட பழைய நெருக்கடியும் புதிய ஆபத்துக்களும் உணவுக்கட்டத்தை முற்றுகையிட்டுக் கொண்டே இருக்கிறது.

உணவு உற்பத்தியைப் பெருக்க மாநில சர்க்கார் மனப்பூர்வமான முயற்சிகள் எடுத்துக்கொண்டு வெற்றிபெற்று விட்டதாக அறிவிக்கின்றனர். ஆனால் விவசாயம் தொடர்புள்ள அடிப்படைக் கொள்கைகளைப் பொறுத்தவரையில் ஒரே சீரான துணிவான நடவடிக்கைகள் ஏதும் சர்க்கார் மேற்கொள்ளவில்லை.

மிகச் சாதாரணமான நில உச்சவரம்பு இத்துணை ஆண்டுகளாக அரசியல் பேச்சுக்குரியதாகவே இருக்கிறது. நில உச்சவரம்புதான் செய்யப்பட வேண்டியதோர் மிகக் குறைந்தபட்ச நடவடிக்கையாக பொருளாதார நிபுணர்களும் தத்துவமேதைகளும் ஒருசேர சுட்டிக்காட்டியிருக்கின்றனர். எனினும் நில உச்சவரம்பு சட்டமானது இன்னும் அது தனது உண்மை உருவத்தை அடையவில்லை.

இந்தச் சிறு சட்டத்தை உருவாக்க காலவரையின்றிய இந்தக் காலதாமதம் அவர்களது முன்னேற்பாடான திட்டத்தின் பிரதிபிம்பமாகத் திகழ்கிறது என்பதை அறிவிப்பதற்குப் போதுமான எடுத்துக்காட்டாகவே அமைந்திருக்கிறது.

புரட்சிகரமானதோர் மாற்றங்கள் வெடித்துக் கிளம்புவதற் கான வழிவகைகள் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கிறது.

அதனுடைய வலிவும் பொலிவும் தகர்த்தெறியப்பட்டாலும் இன்றைய நிலையில் கூட இந்தச் சட்டம் விவசாயத்துறை சீரமைப்பிற்கான திட்டங்கள் தீட்டுவதற்கு இன்றியமையாத ஒரு தேவையான இருக்கிறது.

“உழுபவனுகே நிலம்” என்ற வார்த்தை திரைமறைவுக்குத் துரத்தப்பட்டுவிட்டது. பங்கீட்டுக்கு ஏற்றதோர் தீவிரமான திட்டம் என்று சொல்லக்கூடிய நிலைமாறி அதிக உற்பத்தி செய்யவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.

நிலவளம், முயற்சி ஆகியவைகளைப் பொறுத்தே உற்பத்திப் பெருக்கம் இருக்கிறது. முறைகள் மாற்றத்திற்கேற்ப முயற்சியின் மூலம் மட்டும் பல்வேறு பயனை அடையலாம்.

உற்பத்திப் பெருக்கத்திற்கு இயந்திர சாதனம் கொண்ட விவசாயம் நல்லதோர் முறை என்று பேசப்பட்டு வந்தாலும் தொழில் நுணுக்கம் தெரியாத தொழிலாளர்களும் விவசாயிகளும் மிகுதியாக இருக்கும் இந்த மாநிலத்தில் இந்த முறை சாத்தியமான தல்ல. தலைமுறை காலமாக விவசாயத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ளர்களின் தொகை கணிசமான அளவிற்கு இருக்கிறது.
பெருவாரியான விவசாயத் தொழிலாளர்கள் இந்த மாநிலத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு 115 நாட்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர் என்றும், அத்துடன் அவர்கள் பெறும் ஆண்டு வருமானம் இந்தியாவில் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது.

எனவே இந்தப் பிரச்சினை இரண்டு உண்மைகளை உள்ளடக்கியிருக்கிறது.

உற்பத்தியையும் பெருக்க வேண்டும். அதே நேரத்தில் விவசாயியின் வருமானத்தையும் உயர்த்தவேண்டும்.

உபயோகிப்பவர்களை எந்த வழியிலும் பாதிக்காத வகையில் இதைச் செய்தாகவேண்டும். சிக்கல் நிறைந்த பிரச்சினைதான் என்றாலும் உபசாரமான வார்த்தைகள் தேவையில்லா ஒன்று. மேலும் குழப்பமான எண்ணங்கள் மேலும் விபரீதத்தையே உண்டாக்கும்.

அரசியல் உலகத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் அவ்வப்போது இதுபற்றி வழங்கிவரும் கருத்துக்கள் எத்தகைய குழப்பமான நிலைமை நிலவிவருகிறது என்பதையே காட்டுகிறது.

நில உச்சவரம்பு சட்டத்தோடு மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைத் துவக்கவேண்டும்.

பல இலட்சக்கணக்கானவர்கள் உள்ளத்தில் குறைந்தது அமைதியான ஆர்வத்தை உண்டாக்குவதற்குப் பயன்படும்.

வாழ்க்கைத்தரம் சாதாரண மனிதன் சக்திக்கு எட்டிய வகையில் இருக்கச் செய்ய அத்தியாவசியத் தேவைப் பொருள்களின் விலைவாசிகள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என்ற பிரச்சினை ஆளும் கட்சியினர், அரசியல்வாதிகள் பொருளாதார நிபுணர்கள், விவசாயிகள், அத்தியாவசியப் பொருள்களைப் பயன்படுத்துவோர்களின் பிரதிநிதிகள் ஆகிய அனைவருடையவும் கருத்தோட்டமாக இருக்கவேண்டும்.

நம்பிக்கைக்கு ஒவ்வாத வகையில் உற்பத்திப் பெருகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் உணவுப் பண்டங்களின் விலைவாசிகளும் உயர்ந்துவிட்டன.

இந்தத் தத்துவம் வியக்கத்தக்கது மட்டுமல்லாமல் ஆபத்தானதும்கூட.

இத்தகு வருந்தத்தக்க நிலைமைக்கு மத்திய சர்க்கார் எந்த அளவுக்குப் பொறுப்பானது என்பதை கண்டுபிடித்தாக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மத்திய சர்க்காரின் கட்டுப்பாடோ அல்லது ஆய்வுரைகளோ ஏதுமின்றி, விலைவாசிகளின் உயர்வைத் தடுக்க வழிவகைகள் காண மாநில சர்க்கார் உரிமைபெற்றிருக்க வேண்டும்.

மத்திய சர்க்கார் அளவுக்கு மீறிய செல்வாக்கையும், அதிகாரங்களையும் கொண்ட ஒரு உயர்ந்ததோர் அங்கமாக இருக்கின்ற காரணத்தால், தேவைகான மனு போடுகின்றபோது அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் கேட்கப்பட்டால் உணவுத் தானியங்களைக் கொள்முதல் செய்யவேண்டும்.

எனவே உணவுத்துறையைப் பொறுத்தவரையில் எப்படியிருந்தாலும் மத்திய சர்க்கார் தலையீடு இன்றி சுயஉரிமை இருக்கவேண்டும்.

நிலவளத்தைப் பொறுத்து உணவு உற்பத்தி இருக்கின்ற காரணத்தால் நிலத்தை வளமாக்குவதற்குண்டான வழித்துறைகளை கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

நீர்ப்பாசனம், உரவகைகள், விதைகள் இன்னும் இதுபோன்ற வைகள் விவசாயத்திற்கு இன்றியமையாத தேவைகளாகும். ஆனால் இவைகளைப் பொறுத்த வரையில் கூட வினிநோகிக்கக்கூடிய அதிகாரத்தை மாநில சர்க்கார் பெற்றிருக்கவில்லை. அல்லது அதிலும் பல்வேறுவிதமான தொல்லைகள், இடுக்கண்கள் மாநில சர்க்காருக்கு ஏற்பட்டிருக்கிறது.

பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மாநில சர்க்காரால் நிர்மாணிக்கப்பட்டாலும், துவக்க காலத்தில் கூட மத்திய சர்க்காரின் துணையும் உதவியும் தேவைப்படுகிறது.

சிறு நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில சர்க்கார் தாராளமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

ஏரிகளையே நாம் அதிகம் நம்பிக்கொண்டிருக்கிற காரணத்தால், ஏரிகளைப் பழுதுபார்க்கும், ஆழப்படுத்தவுமான காரியங்களுக்காகச் செலவழிக்கப்படும் தொகை கணிசமான அளவிற்கு உயர்த்தப்பட வேண்டும். வேலைமுறைகளையும் துரிதப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

மதிப்பீடுகள் தயாரிக்கவும், அனுமதி வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டவைகள் நிறைவேற்றப்படுவதிலும் ஏற்படும் காலதாமதம் கிராமக்களின் அளவு கடந்த பொறுமையைச் சோதிக்கும் தன்மையிலேயே இருக்கிறது. மாநில சர்க்கார் அதனுடைய வேலைமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

மாநிலத்தில் உள்ள 23,000 ஏரிகளில் 4,000 ஏரிகள் தான் இதுவரை கவனிக்கப்பட்டிருக்கின்றன.
இன்னும் பல ஏரிகள் கவனிக்கவேண்டிய நிலையில் உள்ளன. மேலும் இத்துறையில் வழக்கமாக நடைபெறுவதைப் போன்றில்லாமல் அவசரகாலத் திட்டமாகக் கருத்தில்கொண்டு வேலைமுறைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

ஏரிகள் மட்டுமின்றி நீர்ப்பாசனக் கால்வாய்களும் உடனடியாகக் கவனிக்கத்தக்க நிலையில் உள்ளன.

இந்த வேலைகளை நிறைவேற்ற இராணுவத்தினரின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த வேலைகளுக்கு பிரத்தியேகமான இயந்திரங்களைத் தேவையை வற்புறுத்திப் பெற்றுப் பயன்படுத்த வேண்டும்.

அப்படி இருந்தபோதிலும் சிறுநீர்ப்பாசன திட்டத்தின் இலட்சியத்தை நாம் அடையக்கூடும். கிருஷ்ணா, கோதாவரி, கிருஷ்ணா-பெண்ணாறு போன்ற மாநிலங்களின் நீர்ப்பாசன திட்டம் கேரள மாநிலத்தில் உள்ள ஆறுகளின் தண்ணீரைக் கொண்டு வருதல் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டாலொழிய நாம் திக்கற்றவர்களாகி விடுவோம்.

பிரத்தியேகமான இந்தத் திட்டங்களை உருவாக்க, தொழில் நுணுக்கம் பெற்ற பிரத்தியேகமான நிபுணர் குழு ஒன்றினை அமைக்கவேண்டும்.

ஏற்கனவே அதிகப்படியான வேலைகளில் ஈடுபட்டுள்ள நிர்வாக இயந்திரத்திடம் இந்தப் பிரச்சினையை ஒப்படைப்பதானது காலதாமதத்தையே உண்டாக்கும்.

மாநிலத் தண்ணீர்த் திட்டங்களைப் பிராந்தியக்குழு ஒன்றிடத்தில் ஒப்படைப்பதே கண்ணுக்குப் புலப்படும் சிறந்த வழியாகும். மேலும் முடிந்தால் பலதரப்பட்டவர்கள் கொண்ட குழு ஒன்றினை நியமிக்கலாம்.

மூன்றாவது திட்டத்தில் இதற்கு முதலிடம் அளிக்கவேண்டும்.

அண்டை நாடுகளில் மாநில முதல்வர்கள் உதவி புரிவதாக ஏற்கனவே வாக்களித்துள்ளதால் இந்தத் திட்டத்தைத் தீட்டுவதில் எவ்வித காலதாமதமும் கூடாது.

மாநில சர்க்கார் இதை வற்புறுத்தி இதற்காக நிதி ஒதுக்குவதற்கான வழிவகைகளைக் காணவேண்டும்.

விஞ்ஞான உதவியின் மூலம் பாலைவனங்களையும், காடுகளையும் வளமுள்ள விளைநிலங்களாக மாற்றுகின்ற நாடுகளை நாம் பார்க்கும்போது, தண்ணீர் பயனற்றுப் போகும் கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகளின் மிதமிஞ்சிய தண்ணீரை நாம் கொண்டு வருவதென்பது நம்முடைய சக்திக்கப்பாற்பட்டது என்று நாம் சிறிதும் எண்ணக்கூடாது.

தண்ணீர் ஆவியாக மாறி வீணாவதைப் பற்றி அடிக்கடி பேசப்படுகிறதே தவிர அதனைத் தடுக்க முற்படவில்லை.

கட்டுப்பாடுகள் பெருமளவு அதிகாரிகளின் பயிற்சிக்கு விடப்பட்டிருக்கிறது. இத்தகைய பிரச்சினைகளும், கிராம புனர்வாழ்வு, குடிசைத் தொழில்கள், சமூக முன்னேற்றம், எல்லாம் வட்டார வளர்ச்சி துறையின் பொறுப்பில் இருக்கின்றன. செலவிடப்படும் தொகைகளுக்கு ஏற்ற பலனை ஈடாக காண முடியவில்லை. மேலும் இந்தத் துறை அரசியலுக்கு ஆட்பட்டிருப்பதும் மறுக்க இயலாது.

பொது மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் ஆதரவைத் திரட்ட, இத்துறைக்கான வழிகளைத் திட்டக்குழு ஆராயவேண்டும். இந்த வட்டார வளர்ச்சித் துறை நாளுக்கு நாள் சிறப்பைப் பெற்று வருகிறது.

மேலும், சாலை அமைப்பு, நில மீட்பு, புறம்போக்குகளைப் பயன்படு“த்துதல் போன்ற காரியங்களை மேற்கொள்ள ஒரு ‘நிலப்படையை’ அமைப்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. இதில் கட்டாயப்படுத்துவதோ, வற்புறுத்துவதோ தேவையற்றது. மாநில அரசு முகாம்களை அமைத்து, அதற்கான செலவுகளை ஏற்று, படையைத் திரட்டவேண்டும். இதன்மூலம் ஓரளவிற்கு வேலையில்லாத திண்டாட்டத்தையும் போக்க முடியும். விரைவாக முன்னேறவும் வழி ஏற்படும்.
இந்த யோசனைகளுக்கு ஆதாரமாக புள்ளி விவரங்கள் தரப்டவில்லை என்பது உண்மை. அதனால் புள்ளி விவரங்கள் தேவையில்லை என்பதல்ல. சீராக சரியான புள்ளி விவரங்களைப் பதவியிலிருப்பவர்கள் பெற வழி இருப்பது சாதாரணமாக புலப்படும் உண்மை.

அந்தப் புள்ளி விவரங்களை நன்னோக்குடன் தரப்பட்ட யோசனைகளைக் கேலி செய்வதற்குப் பயன்படுத்தாமல், துவக்க நேரத்தில் ஏற்படக்கூடிய இன்னல்களையும் பொருட்படுத்தாமல் நல்ல திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக ஆலோசனைக் குழுக்களை அமைத்து, குறிப்பிட்ட திட்டங்களை ஆட்சியிலிருப்பவர்களும், நிபுணர்களும் கலந்து பேசி முடிவுகளை மேற்கொள்ள முனையவேண்டும்.

இரண்டு முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
திட்டங்களின் நோக்கம் நன்மையை அடிப்படையாகக் கொண்டவை என்கிற உணர்வு ஏற்படும்போது, மக்களிடையே ஆர்வம் எழும். இலாபமே நோக்கம் என்கிற எண்ணம் தொழிலாளரிடம் ஏற்படுமானால், உற்சாகம் குறையும். எனவே இலாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு திட்டத்தை சில துறைகளிலாகிலும் மேற்கொள்ளவேண்டும். நியாய அடிப்படையில் சம பங்கு கிடைக்கும் போது உற்பத்திக்கு புது வேகம் ஏற்படும்.

திட்டங்களை உருவாக்கியவர்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போக்கி, சீரான வருமானத்தை உண்டாக்க முனைந்தனர். ஆனால், இன்றுவரை இதில் போதிய வெற்றி காணப்படவில்லை.

மற்றொரு முக்கிய விஷயம் இவ்வளவு பெரிய திட்டத்திற்கு எப்படி தேவையான பணத்தைத் திரட்டப்போகிறோம் என்பதாகும். ஏற்கனவே வரிக்கொடுமை, அதிலும் மறைமுக வரியின் மூலம், மக்களை அடியோடு வாட்டியிருக்கிறது. எனவே, மேலும் வரிகளை உயர்த்துவது விரும்பத்தக்கதல்ல. சமுதாயத்தில் மேல் தளத்திலிருப்பவர்களிடம் குவிந்திருக்கும் பணத்தைத் திரட்டும் வழிகளை நாம் கொள்ளவேண்டும். இவை மக்கள் திட்டங்கள் என்கிற உணர்வு ஏற்படும்போதே, மக்களிடம் உற்சாகம் ஏற்படும் மக்களுக்கு அந்த விரும்பத்தக்க எண்ணம் தொடர்புள்ள துறைகளில் ஏற்படவேண்டும்.

பெரிய நகரங்களில் உருவாக்கப்பட்ட திட்டங்களையும் ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும். சேரி ஒழிப்புத் திட்டங்களை மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்துவது மிக மிக அவசியம். ஏன் என்றால் எந்தத் திட்டமும், தனி மனிதனை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டதாகும். அத்தடன் புதிய முற்போக்குத் திட்டங்களைத் துணிவுடன் செயல்படுத்த வேண்டும்.

சூரியனின் சக்தி வீணாவதைத் தடுக்கவேண்டும். இதைப்பற்றி ஆராய்ந்தவர்கள் பல உபயோகரமான யோசனைகளை கூறியிருக்கின்றனர். இதுவரை சூரிய அடுப்பு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முயன்று செய்ய ஏராளமாக இருக்கின்றன. சூரிய சக்தியைப் பன்படுத்த ஒரு நிபுணர் குழு முற்படவேண்டும்.

சிறு அணைகள், சிறு தேக்கங்கள், போன்றவைகள் பற்றிய போதிய அக்கறை செலுத்தவில்லை. பெரும்பாலும் எல்லா மாவட்டத்திலும் இந்த திட்டங்களை மேற்கொள்ள வசதிகள் இருக்கின்றன. அவை மகத்தானவைகளாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவை நீர்பாசன வசதியை உறுதியாக ஏற்படுத்தித் தரும்.

பல ஆண்டுகளாக அரசினரிடம் வாளாயிருக்கும் பாலாறு திட்டம் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குழாய் கிணறுகள், ‘ஆர்டீசன்’ கிணறுகள் பரவலாக ஏற்பட வேண்டும்.

வட ஆற்காடு மாவட்டத்தில் செய்யாறு திட்டம், செங்கற் பட்டில் வேகவதி திட்டம், மதுரையில் ஆலாங்குளம் திட்டம், குடகனாறு திட்டம், கீயாறு திட்டம், இப்படி பல திட்டங்களைப் பற்றி பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை அமுலாக்கவேண்டும்.

மூன்றாவது திட்டத்தில் வாய்ப்புள்ள இடங்களில் தண்ணீரைத் தேக்கி நீர்பாசனத்திற்குப் பயன்படுத்த வழிகளைக் காணவேண்டும். இதிலிருந்து, மாநில அரசு, மாற்றாந்தாய் நிலையைத் மாற்றி, நியாயமான பங்கைப் பெற்று, புறக்கணிப்பு நிலையை தவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது. பதவியிலிருப்பவர்கள் விழிப்புடன் இம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்தாலன்றி, உரிய பங்கைப் பெற இயலாது. கெஞ்சிக் கேட்பதன் மூலம் பலன் ஏற்படாது. கோரிக்கைகளை வற்புறுத்தவேண்டும், பிச்சையின் மூலம் வெற்றியைத் தேட முடியாது.

அடிப்படைத் தொழில்கள், பெரிய துறைமுகங்கள், அணுசக்தி தயாரிப்பு போன்ற திட்டங்களுக்குப் பெரிய தொகைகள் ஒதுக்கியாக வேண்டும். மாநிலத்துறையின் கீழ் அமையக் கூடிய திட்டங்களுக்கும் பெரிய தொகைகள் தேவைப்படுகின்றன.

எனவே கேட்கப்பட்டிருக்கும் தொகை, போதுமானதென்று கருத இடமில்லை.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் குறைந்தது 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் அளவிற்கு மத்திய, மாநில திட்டங்களை ஆராயவேண்டும் என்று அரசினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை நீடித்துவந்த புறக்கணிப்புக்கும், பின்தங்கிய நிலைமையையும், நினைவில் கொள்ளும்போது, இந்தத் தொகையைக் கேட்பது நியாயத்திற்குப் புறம்பானதென்றோ, பேராசையானதென்றோ எண்ணவும் இடமில்லை.

திட்டக்குழு இரண்டு மூன்று முறை கூடிவிட்டால் மட்டும் பிரச்சினைகளைத் தீர்த்துவிட இயலாது அவ்வப்போது கூடவேண்டும். ஆலோசனைக் குழுக்களும், நிபுணர்களும் கூடி திட்டங்களை ஆராய்ந்து உருவாக்க வேண்டும் இதுதான் ஆளும் கட்சியின் நோக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

திட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒன்றாகும். கூடிக் கலந்து பேசி, கட்சிகளின் ஆதரவையும், நல்லெண்ணத்தையும் பெறுவது புதிய வலிவையும், உணர்வையும் ஏற்படுத்தும்.
எவ்விதக் குறைபாடும் இல்லாமல் தனிப்பட்ட ஒரு கட்சி மட்டுமே திட்டங்களை உருவாக்குவது விரும்பத்தக்கதல்ல.

அத்துடன், யோசனைகளை கூறியவர்களை அடிக்கடி கூட்டி, திட்டங்களின் நடைமுறைகளை மதிப்பிடவும் தக்க தேவையான பரிந்துரைகளைக் கூறவும் வாய்ப்பிருக்க வேண்டும்.

திட்டங்களை உருவாக்குவது துவக்கம்-பிறப்பிற்கு ஒத்தது- ஆனால் பிறந்த குழந்தையைச் சீராக, முறையாக, வளர்ப்பதில் தான் பல நன்மைகள் அடங்கியிருக்கின்றன.

-முதல் பதிப்பு: 1961, வெளியீடு, மக்கள் பதிப்பகம், சென்னை-1