அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நல்ல தீர்ப்பு
1

தோழர்களே!
நான் பேசப்போகும் 'நல்ல தீர்ப்பு' ஆசிரியருக்கும் மாணாக்கருக்கும் உள்ள தொடர்பைப் பற்றியதன்று. ஆனால் அது என்னைப்பற்றிய தீர்ப்பே ஆகும். தலைவரவர்கள் ஏதோ எனக்கு இங்குப் பேச 144 போடப்பட்டதாகச் சொன்னார்கள். ஆசிரியகட்கு என்னிடம் உள்ள அசூசையோ அல்லது ஆத்திரமோ இதற்குக் காரணம் அன்று. ஆனால் அவர்கள் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாததே காரணமாகும். மேலும், நான் நாட்டிலே புதுயுகப் புரட்சிக் கருத்துக்களைக் கொண்ட ஓர் இயக்கத்தோடு தொடர்புக் கொண்டுள்ளேன். என்னைப்பற்றி நீங்கள் தவறாக அறிந்தீர்கள், அறிவிக்கப்பட்டீர்கள், ஆனாலும், இன்று நாம் ஒன்று கூடியுள்ளோம். ஊடலுக்குப் பின் கூடல் போல ஆகவே, இளந்தோழர்களே இன்று நான் கொண்டுள்ள கருத்துக்களைக் கேட்டு, செய்துள்ள குற்றங்களைக “கேட்டு அவற்றின் வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு, அவை சரியா தவறா என்று ஒரு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். அது எனக்காக அல்ல. உங்களுக்கு உங்கள் நாட்டின் நலனுக்கு, உங்கள் நாட்டுச் சமுதாயத்திற்கு நீங்கள் அளிக்கும் நல்ல தீர்ப்பாகும்.

எது நல்ல தீர்ப்பு
தீர்ப்பு என்றால் பலவிதம் உண்டு. ஆண்டவன் அடியார்க்கு அளிக்கும் தீர்ப்பு ஒருவிதம் அரசன் குடிமக்களுக்கு அளிக்கும் தீர்ப்பு மற்றொரு விதம். சட்டசபைத் தீர்ப்பு ஒரு தன்மையது வலியோர் எளியோருக்கும் முதலாளிகள் தொழிலாளிகளுக்கும் அளிக்கும் தீர்ப்பு பிறிதொரு தன்மைத்து இவையாவும் நல்ல தீர்ப்பு என்றே அவரவர் நவிலுவர். ஆனால் தீர்ப்பு காலத்திற்குத் தக்கவாறும் நிலைமைக்குத் தக்கவாறும், கருத்துக்குத் தக்கவாறும் மாறும் மாறித்தான் தீரும். மாறித்தான் தீர வேண்டும். ஒரு காலத்திலே நல்ல தீர்ப்பாக விளங்கியது பிறிதொரு காலத்திலே நல்ல தீர்ப்பு அல்ல என்று எள்ளி நகையாடப்படும்.

நம் நாட்டிலே பசுவின் கன்றைக் கொன்ற மகனைத் தேர்க்காலில் வைத்து மடித்தான் மனுநீதி கண்ட சோழன். இது அவனுக்கு, அவனது கருத்துக்கு, அக்கால நிலைமைக்கு ஏற்றபடி நல்ல தீர்ப்பு. ஆனால் அவ்விதம் செய்ய, இக்காலத் தந்தையர்கள், தாய்மார்கள், சகோதர சகோதரிகள் ஒருப்படுவார்களா? அந்தக் காலத்து நல்ல தீர்ப்பு இந்தக் காலத்திற்குப் பொருந்துமா? கிரேக்க நாட்டிலே, பகுத்தறிவாளன் சாக்ரதிஸ் நாட்டிலே பகுத்தறிவை வளர்த்தான். மக்கள் நாட்டின் சாதாரண மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும், அழகு, சத்தியம், ஆண்டவன் முதலியவைகளைப் பற்றி ஒருவித உணர்ச்சியை எழுப்பி உண்மையை உள்ளபடி உணர ஊக்கினான். ஆனால் அக்கால உலகம் அவனுக்கு அளித்த தீர்ப்பு, அவனைச் சிறையிலே அடைத்துச் சிந்தனையைச் சிதைக்க முயன்றது. நஞ்சை நாவால் சுவைக்க வைத்து எமனுலகுக்கனுப்பியது. இதுவும் அப்போது நல்ல தீர்ப்பு தான்.

இங்கிலாந்திலே சுதந்திரத்தை நாடி உழைத்த பொடிஷியா என்னும் மாதை உரோமானியர் மகா கொடுமைப்படுத்தினர். அது அவர்களுக்கு அப்போது நல்ல தீர்ப்பே.

அரசனின் தெய்வீக உரிமை கொண்டாடிய சார்லஸ் மன்னன் தன் அரண்மனை முன்னிலையிலேயே தூக்கிலிடப்பட்டான். இதுவும் ஒரு நல்ல தீர்ப்பே.

பிரான்சிலோ நாட்டு மக்களை அடைக்க உதவிய (பாஸ்டில்) சிறையை வீழ்த்தி, புரட்சியைப் போற்றி நாட்டோர் நன்மையை நாடி, சீமான்களையும் பூமான்களையும் அதே பாஸ்டில் சிறையில் அடைத்தோரை அந்நாடு தூக்கிலிட்டு நல்ல தீர்ப்பு செய்தது. அது ஒரு காலம்.

ஆனால் ரஷ்யாவிலோ மன்னன் முதல் மடாதிபதிகள் வரை மக்கள் நலனுக்கு மாறானோரை மடந்த தட்டிச் சுட்டு வீழ்த்தி நாட்டிலே சமத்துவத்தை நிலைநாட்டின புரட்சி வீரர்களைப் போற்றாதார் யார்? இது இக்காலத்துக்கேற்ற ஒரு நல்ல தீர்ப்பென அவர்கள் கருதுகின்றனர்.

நான் மறுமுறையும் கூறுகின்றேன். தீர்ப்பானது. காலத்தையும் தீர்ப்பளிப்போரின் தன்மையையும் தழுவியதாகவே இருக்கும்.

சான்றாக, ஆசிரியர்கள் என்னை அழைக்க அலட்சியம் செய்தது அவர்கள் நிலைக்கு, தன்மைக்கு நல்ல தீர்ப்பாகலாம். இது மாணவரின் நல்ல தீர்ப்புக்கு மாறாக இருந்திருக்கலாம். ஆனால் என்னைச் சரியாக அறியாமல் தீர்ப்பளித்தது நல்ல தீர்ப்பு என நான் கருதமாட்டேன்.

சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் தீர்ப்பு எதுவானாலும் அதுதான் நல்ல தீர்ப்பு. நல்ல தீர்ப்பு நல்லவர்கள் செய்யும் தீர்ப்பாக என்றும் இருக்காது. ஏனெனில், நல்லவர்கள் தீர்ப்பு, என்றும் இரக்கமுடையதாகவே இருக்கும்.

சமுதாயம் ஒரு வழுக்கு நிலம்
இன்றைய சமுதாயம் செல்லரித்து, சீர்க்கெட்டுச் சின்னாபின்னப்பட்டுச் சிதறிக்கிடக்கிறது. எனவே இன்று நல்ல தீர்ப்பு; சமுதாயப் புரட்சி புரிந்து சமுதாயத்தையே உருக்கி வேறு அச்சில் வார்ப்பதாகத்தான் இருக்கும். இது புரட்சி வேகத்தால்தான் முடியும். இத்தகைய சமுதாயப் புரட்சியை இளந்தோழர்கள் ஈவு இரக்கமின்றி, மாறுதலுக்குக் கட்டுப்பட்டு நடத்த வேண்டும். மக்கள் மாறுதலை எதிர்த்து வாழமுடியாது. ஒன்று மாறுதலோடு ஒன்றி வாழ முடியும். இன்றேல் மாறுதலோடு மோதி மடிய முடியும். இன்றைய சமுதாயம் வழுக்கு நிலம் போன்றது. வழுக்க நிலத்திலே ஒருவன் எத்தனைக் காலம் விழிப்போடு நடக்க முடியும்? கனத்த காற்றடித்தால் அவன் வழுக்கி விழுவது திண்ணம். ஆகவே அவன் வழுக்கு நிலத்தைச செம்மைப்படுத்துவதுதான் சிறந்த வழி மாற்றி அமைப்பது தான் மனத்திற்குகந்த மார்க்கம். அதுதான் என்றும் வழுக்கி விழாதிருக்கும் வழி.

நம் நாட்டுச் சமுதாயம் சாதி வேற்றுமையினாலும் பொருளாதார மாறுபாட்டினாலும் செல்லரித்துக் கிடக்கிறது மேலும் செல்லரித்துக் கொண்டே வருகிறது. தீண்டாதோர் என்போரைச் சகல துறைகளிலும் சாதியின் பேரால், சமயத்தின் பேரால் என்றென்றும் தீண்டாதாராக்கியுள்ளோம். அடிமைப்படுத்தியுள்ளோம். இது நல்ல தீர்ப்பா?

கவலையை மாற்ற முயலும் தோழருக்கு...
இதற்கு சில தோழர்கள் இந்த நிலை நம் நாட்டில் தான் உளதா? அமெரிக்காவிலே நீக்ரோவைப் பற்றியில்லையா? என்று கூறி மற்ற நாடுகளிலும் வேற்றுமை இருக்கத்தான் இருக்கிறது. அதுபோல நம் நாட்டிலும் இருக்கிறது. எனக்கூறி கவலையை மாற்ற முயல்வர். ஆனால் அந்நாட்டுச் சமுதாயத்தைவிட இந்நாட்டுச் சமுதாயம் சிறப்புற்றுச் சீர்கேடுற்றிருப்பதேன். இங்கு ஒரு சாதியான் மற்றொரு சாதியானைத் தொட்டால் தீட்டு, தலை முழுகவேண்டும். ஆனால் இன்று ஒருவைரயொருவர், வெட்டு, குத்து அடி என்று ஆர்ப்பரிக்கும் ஹிட்லரோ, சர்ச்சிலோ, ரூஸ்வெல்ட்டோ அல்லது அந்த நாட்டு மக்களோ சாதாரணமாக ஒருவரையொருவர் தொட்டால் தீட்டு, தலை முழுகவேண்டும், மதம் மாசுற்றது என மனம் பதைக்கமாட்டார்கள். அங்கு மக்கள் இனம் எல்லோருக்கும் மரியாதை. இங்கு தில்லைத் திருத்தல் ஜோதியிலே கலந்த நந்தன் காலம் முதல் அம்பேத்கார் வைசிராய் ஜோதியிலே கலந்த இன்றுவரை ஒரே தீர்ப்பு. தீண்டாதே என்ற தீர்ப்பு. இது நல்ல தீர்ப்பா?

அமெரிக்காவிலே நீக்ரோ இயற்கையிலேயே அழகற்று அமைக்கப்பட்டான். அதை மாற்ற முடியாது. ஆனால் நம்நாட்டுச் சகோதரர்கள் யாவரும் நம்மைப் போன்றவர்களே என்பதை எவராலும் மறுக்க முடியுமா? அமெரிக்காவிலே நீக்ரோவோடு உண்ணல், உறவாடல் உண்டு. கலப்பு மணம் உண்டு. கல்விக் கலை உண்டு. ஆனால் இங்கோ!

அறிவுக்கு அறமாகப்படாதது அடாதது...
நம் நாட்டுத் தலைவர்கள் ஆப்பரிக்காவிலே, ஆப்ரிக்கர் இடத்திலே வாழும் கடல் கடந்த கருப்பர், உரிமைக்காகப் போராடுவர். ஆனால், இந்த நாட்டிலே பிறந்து, இந்த நாட்டிலே உழைத்து, இன்பமற்ற உணவு, உடை, உறைவிடமற்று வறுமையால் வாடி நலிந்து மெலிந்து நசித்து இந்த நாட்டிலேயே என்றென்றும் தீண்டாதானாகவே மரிக்கும் தோழர்களைப் பற்றிக் கவனித்ததுண்டா? மேற்கண்ட அநாகரிகத்தின் அடிப்படையை அஸ்திவாரத்தை, ஆணிவேரை அறுத்தெறிய முற்பட்டதுண்டா? ஏன் இல்லை, இளந்தோழர்களே! இதுப்பற்றி நீங்கள் நல்ல தீர்ப்பளிக்க வேண்டுகிறேன். இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளையில்லா விட்டாலும் நாட்பல கடந்தாவது, கல்லூரியை விட்டகன்ற பிறகாவது சிந்தித்து ஒரு நல்ல தீர்ப்பு அளியுங்கள்! ஊருக்குழைப்போராகில் எங்களை வீணே தடுக்காது வாளாயிருப்பதே நீங்கள் நாட்டுக்கு நல்லக்கூடிய நல்லறமாகும். நாங்கள் ஒன்றும் எங்களைச் சகலகலா வல்லவர்கள் என்றோ, பண்டிதர்கள் என்றோ பறைசாற்றவில்லை. அறிவுக்கு அறம் என்று பட்டதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றோம். அல்லாததை அக்கணமே அடாதது என்று அறிவுறுத்துகிறோம். உதாரணமாக, திருமணக் காலங்களிலே, பட்டப் பகலிலே பகலவன் ஒளியிலே நம்மவர் விளக்கு ஏற்றி வைக்கின்றனர். இந்த விளக்கு ஏன்? எதற்காக என்று கேட்கிறோம்? ஆண்டவன் அளித்த அருணனிருக்கும்போது ஏன் இந்த விளக்கு என்று கேட்கிறோம். உங்கள் சிந்தனையைச் சற்றுக் கிளறி விடுகிறோம். சீர்தூக்கிப் பாருங்கள் என்று, சீர்தூக்கிப் பார்த்து உங்கள் சொந்த முடிவுக்கு வாருங்கள்.

இனப்பற்று மிக்க இலக்கியமுண்டா?
மற்றும் கடவுளே இல்லை என்றோ, கடவுள் இருக்கிறார் என்றோ நான் கூறவில்லை அறிவோடு, ஆற்றலோடு ஆபாசமற்ற கடவுள் இல்லை நமக்கு. இருக்கவில்லை நமக்க என்று தான் கூறுகிறேன். மாசுமறுவற்ற மதம் இல்லை நமக்கு. இனப்பற்று மிகுந்த இலக்கியம் இல்லை நமக்கு. அன்பு தரும் அறிவூட்டும் சமுதாயம் இல்லை நமக்கு. மனிதர் மனிதத்தன்மையோடு வாழச் சுயேச்சை சுதந்திரம் இல்லை நமக்கு.

நமக்கிருக்கும் இலக்கியமெல்லாம் ஆழ்வார்கள் நாயன“மார்கள் முதலியோரின் அற்புத லீலைகளைப் பற்றியவைகளாகவும், ஆண்டவனின் பத்தவதாரங்களை விளக்கி அதிசய அநாகரிகமான அற்புதங்கள் நிறைந்தவைகளாகவும், கலையின் பெயரால் இனக்கொலை செய்பவைகளாகவுமேதான் இருக்கின்றன. அறிவுக்குப் பொருந்தாதவையும், ஆராய்ச்சிக்கு நிற்காதவையும், அறிவையே அகற்றி மடமையை மக்கள் மனத்தில் புகுத்தும் போலிகளாகவே நமக்கிருக்கும் இலக்கியங்கள் உள்ளன.

கயமைத்தனமான கடவுள் தன்மை
கிருத்துவனுக்கோ ஒரே ஒரு பிதா பரமண்டலத்திலே உண்டு. இஸ்லாமியனுக்கோ ஒரே கடவுள், அதுவும் உருவமற்ற அரூபி. ஆனால் நமக்கோ, மூலக்கடவுளர் மூவர். அவருக்கும் குடும்பங்கள் பல. அதிலும் நிரந்தரக் குடும்பங்கள் சில. தற்காலிகக் குடும்பங்கள் பல. உதாரணமாக, சிவனாருக்குப் பார்வதியும் கங்கையும் நிரந்தரக் குடும்பங்களாகும். தற்காலிகக் குடும்பங்களோ தாருகாவன ரிஷி பத்தினிகளைப்போல சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு இருக்கும். ஏன் இதை கூறுகிறேன்? நமக்கும் கிறித்துவனுக்கும், இஸ்லாமியனுக்கும் கடவுள் உணர்ச்சியில், தன்மையில் உள்ள வேற்றுமையைக் காட்டத்தான், நம்முடைய கடவுட்டன்மை கயமைத்தனமாக உள்ளது. கபோதித்தனமாக உள்ளது என்பதை உறுத்திக் காட்டத்தான். இவ்விதக்கயமைத்தனத்தையும், கபோதி குணத்தையும் விடுத்து, கடவுளை சர்வ வியாபகன், உருவமற்ற அரூபி, அருளுடையவன் என்று மட்டும் ஏன் கூறலாகாது? இதற்குப் புராணமேன்? மதம் ஏன்? மக்களிடை மாற்றம் (சாதி பேதம்) ஏன்? கடவுளைப்பற்றிய இந்தத்தீர்ப்பு நல்ல தீர்ப்பா நவிலுங்கள் நாட்டோரே!

அரன் அருள் அரைக்கணத்தில் கிட்டும்-யாருக்கு?
நமக்குள் கடவுள் வேண்டும். நல்ல கடவுள் வேண்டும். அறிவுக்குப் பொருத்தமான, ஆராய்ச்சிக்குட்பட்ட நிகண்டிலே நீசத்தன்மையற்ற கடவுள் உணர்ச்சி வேண்டும் என்று தான் கூறுகிறேன். நல்ல தீர்ப்பு அளிக்கும் கடவுள் வேண்டும். இங்கே ஒன“று கூற ஆசைப்படுகிறேன். சிலர் கூறக் கேட்டிருக்கிறேன் சிவன் பார்ப்பன ரல்லா தாருக்கே உரித்தானவரென்று அவர்களையே அவர் உயர்வாக மதித்தார் என்று காரணம், கண்ணப்பரைத்தான், பார்ப்பனரல்லாத ஒரு வேடுவரைத் தான் எம்பெருமான் அப்பா! அப்பா! என்று அழைத்து அன்பு கூர்ந்தனராம். மற்றும் செட்டிகுல நங்கையாகிய காரைக்கால் அம்மையாரைத்தான் அம்மே! அம்மே! என்று தம் அமுத வாக்கால் அழைத்தாட்கொண்டாராம். மற்றவருக்கும் இப்போது கிடைக்கவில்லையே! என்னை நம்பால் நந்தம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே! கண்ணப்பர் அப்பா! என்ற அழைப்புப் பெறத் தம் கண்களைப் பெயர்த்து அப்ப நேர்ந்த கஷ்டத்தை! காரைக்கால் அம்மையார் அம்மே! என்ற ஆசீர்வாதம் பெற, பேயாகி, உடலை வருத்தி, நாடி நரம்பற்று, உருக்குலைய நேர்ந்ததை! இப்பேறு பெற இவர்கள் பட்ட துன்பம் எவ்வளவு? ஆனால், இதே சிவனை பார்ப்பனர் எத்துணை எளிதில் அடைகின்றரென்பதைக் காணுங்கள். திருவிளையாடல் புராணத்திலே பாருங்கள்! பார்த்துக் கைலாயத் தீர்ப்பு நல்ல தீர்ப்பா என்று கூறுங்கள்! மதுரையில் சொக்கர் ஆலயத்தில் அம்மையும் அப்பனும் சொக்கட்டானாடிக் கொண்டிருக்கின்றனர். திடீரென்று அப்பன் எழுந்தார். அம்மை கேட்க, உன“ பக்தன் நம்மை நாடி வருகிறான். அவனை ஆட்கொள்ள வேண்டும் என்று விடையேறி அம்மையோடு விண்ணிலே சென்றார். பக்தன் செய்த பாபங்களுக்கு பிராயச்சித்தம் கூறினார். பொற்றாமரைக் குளத்திலே மூழ்கு. பசுவுக்கு அருகம்புல்லைப்போடு. ஆலயத்தை மும்முறை வலம் வா. நீ செய்த பாவம் தீர்ந்து எம்மை அடைவாய் என்றார். இவ்வாறே செய்தே பரமன் அருள் பெற்றான். எப்படிப்பட்ட பக்தன்! பஞ்சமா பாதகஞ் செய்த பக்தன். தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பக்தன்! இப்படிப்பட்ட பக்தனுக்கு அரனின் அருள் அரைக்கணத்திலே கிட்டும்! ஏன்? இவர் பார்ப்பனர்! ஆனால் கண்ணப்பருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் கடும் சோதனைகள்! இந்த கைலாயத் தீர்ப்பு நல்ல தீர்ப்பா? இது பக்தியாசாரத் தீர்ப்பா? அல்லது ஜாதியாசாரத் தீர்ப்பா?

சிறு வயதில் வெண்ணெய் திருடி, பெரிய வயதில் பெண்ணைத் திருடியவன் தம் கடவுள்
கிருத்துவன் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்குப் போவதிலே பொருளுண்டு. ஏனெனில் அவனுடைய நாதர் அவர்களுக்காகத் தம் இரத்தத்தைச் சிந்தினார். அதிலே அவனுக்குப் பெருமை உண்டு.

முஸ்லிம் ஒரு நாளைக்கு ஐந்துமுறை தொழுகிறான் என்றால் அதுவும் அவனுக்குப் பெருமை தான். ஏன்? அவன் கடவுள் உருவமற்ற அரூபி. அவனுடைய வழிகாட்டி முகம்மதுநபி மக்களுக்காக மக்காவிலிருந்து மதீனாவரை ஓடினார். அஞ்ஞானத்தை நீக்கி அறிவைப் புகட்டினார். ஆனால் நம்முடைய கண்ணன் காட்டிய வழியோ! சிறுவயதிலே வெண்ணெய் திருடி மத்தடி உண்டான். சற்றுப்பெரியவனான போது கோபிகளுடனே பற்பல லீலைகள் புரிந்தான். சேலைகள் திருடினான். பின் ராதை ருக்மணி முதலியோரை மணந்தான். கடைசியாக பாரதப்போரிலே சிறந்த இராஜத்தந்திரத்தைக் கண்டான். நான்கு வர்ணத்தை நான்தான் படைத்தேன் என்று கீதை செய்தான். இந்த வழி நல்ல வழியா? இது நமக்கு தேவையா?

மட்டையடிபடும் மாண்புடைய கடவுள்
அழகான கதைகளோடு, அற்புதங்கள் நிறைந்த புராணங்களோடு, இலக்கியங்களோடு கடவுளை ஒட்டவைத்து, கடவுளுக்குக் கயமைத்தனத்தையும், கபோதித்தனத்தையும் கற்பித்து நாட்டிடை நல்குவது நல்லதா? உலகிலுள்ள விலங்குகள் எல்லாம் ஆண்டவனுக்கு அர்ப்பணம்! இது எருது-சிவனுக்கு கருடன் விஷ்ணுவுக்கு என்று போகும். மரங்கள் எல்லாமும் அப்படியே வில்வம்-சிவனுக்கு. துளசி விஷ்ணுவுக்கு, வேம்பு-மாரியம்மனுக்கு என்று போகும். மற்றும் ஆண்டவனுக்கு அழகான மோகினி ரூபம் முதல் அழகற்ற வராகம் வரை படைத்துள்ளோம். ஏன் இவ்விதம் கடவுளைக் கபோதித்தனமாகக் கயமைத்தன்மைக்கு உட்படுத்த வேண்டும்? அன்று திருவரங்கத்திலே நடக்கிறது மட்டையடித்திருவிழா? அன்று ஆண்டவன் அரங்கநாதன் ஆலயத்திற்கு அகாலத்திலே வருவார். கதவு மகாலட்சுமியினால் அடைக்கப்பட்டிருக்கும். பகவான் கதவைத் தட்டுவார் (பட்டாச்சாரி ரூபத்திலே). அம்மை உள்ளிருந்து சிறிது கதவைத் திறந்து (இன்னொரு பட்டாச்சாரி ரூபத்திலே) கணவன் மேல் சந்தேகப்பட்டுத் திறக்க மறுப்பார். உலகம் உண்ட மாதவன் உத்தமி லட்சுமியைக் கதவைத் திறக்க வேண்டுவார். தாம் இனிச் சரிவர நடப்பதாகச் சத்தியம் செய்வார். அம்மை வெளியே வந்து ஆண்டவனை மட்டையால் தட்டி உள்ளே அழைத்துப் போவார். இது எவ்வளவு மடத்தனம் என்று மனத்தில் சிந்தியுங்கள் மாணவர்களே! இவ்விழா ஒரு முறையல்ல! ஒன்பது முறையல்ல, ஒவ்வோராண்டும் நடைபெறுகிறது. தூயக் கடவுளுணர்ச்சி பெற விரும்பும் நாம் இத்தகைய கயமைத்தனமாக, காலித்தனமான, கபோதித்தனமான திருவிழாக்களைக் கடவுள் பேரால் கொண்டாடவிட்டுவைப்பது நல்லதா? அது கடவுளையே கயவனாக்குகிறதல்லவா? இவ்விதம் நடப்பது நல்ல தீர்ப்பா? மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற செந்தமிழ் இலக்கியகளைத் தமிழ்நாட்டிற்கு அளித்து, அருளே வடிவாய் அருகணைத் தொழுத சமணர்களைச் சம்பந்தர் கழுவேற்றிய நாளை இன்றும் மதுரையிலே திருவிழா கொண்டாடுவதை நம் சைவமெய்யன்பர்கள் கண்டுகளித்து வருவது நல்லதா? அவர் தம் திருவிழி இன்னும் விழிப்படையவில்லையா? அவர்தம் அறிவு அஞ்ஞானத்தைவிட்டு அகலவில்லையா? ஒரு பக்கம் அன்பே சிவம் என்று ஆரவாரம். அதே சமயம், அன்பு சமயத்தின் பேரால் அன்பற்ற, அறிவுக்குப் பொருந்தாத ஆஸ்திகத் திருவிழாக்களா? அதிசயம் நிறைந்த அநாகரிகக் கதைகளா? இவ்விழாக்கள் சமரச சன“மார்க்க சமயங்கள், கடவுளர்கள் தழைத்தோங்கத் தேவையா? தேவையில்லை! அருளுடைய சமயத்திற்கு, ஆண்டவனுக்குத் தேவையில்லை என“பது திண்ணம்.

நிலைமைக்கேற்ற நீதி
சிறிய ஜன்னலால் போதிய காற்று கிடைக்காவிடின் அதை இடித்துப் பெரிய ஜன்னல் வைக்கிறோம். பாலம் பலமற்றதாக இருந்தால் அதை மாற்றிப் பலப்படுத்துகிறோம். ஜுரம் செந்தூரத்தினால் குணமாகாவிட்டால் ஜெர்மன் மருந்துகள் உட்கொள்கிறோம். இதிலெல்லாம் பழமையைக் கண்மூடிக் கொண்டு கைப்பற்றுவதில்லை. அதுபோலவேதான் கடவுளுணர்ச்சியிலும் நமக்கு மாற்றம் வேண்டும். மாற்றம் செய்தாக வேண்டும். நமக்கும் கிராமங்களிலே உள்ள மக்களுக்கும் இருக்கும் வித்தியாசங்களைக் கவனியுங்கள். நாம் எல்லோரும் பூமி உருண்டை என்று நன்றாய் அறிவோம். தந்தி, டெலிபோன், வயர்லெஸ் முதலியவைகளைப் பற்றி நன்றாய் அறிவோம். ஆனால் கிராமத்திலே சென்று கிராம மணியக்காரனைப் பார்த்து பூமி உருண்டையா? தட்டையா? என்று கேட்டால் அவன், பூமி என்னவோ தட்டைதான் அது நம்ம பெரியவர்கள் எல்லாங்கூட எழுதி வைத்திருக்கிறார்கள். இரணியன் தம்பி இரண்யாட்சதன் கூடப் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனானாம். அதை மகாவிஷ்ணு பன்றியாகப் போய் திரும்பக் கொண்டு வந்தாராம். அதுதான் உண்மை என்று நம்ம அய்யர், அர்ச்சகர், புராணிகர் எல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால் இப்ப என்னமோ நம்ம பையன் பூமி உருண்டை என்று படிக்கிறான். அதான் கிறிஸ்துவப் படிப்பில்லையோ! என்று பதில் சொல்வான். மேலும் அவனைப் பார்த்து, டெலிபோன், தந்தி, ரயில் ஓடுவது எப்படி என்றெல்லாம் கேட்டால் அது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பான். இவைகள் தற்கால வாழ்வுக்கு வேண்டியவை, தெரிந்து நன்கு புரிந்து கொள்ளக் கூடியவை. ஆனால் தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்பான். புரியுமா என்று கேட்டால் புரியாது என்பான். ஆனால் அவனைப் பார்த்து உலகம் எத்தனை என்றாலோ, பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், நரகலோகம், நாகலோகம் என்று பதில் சொல்வான். நம்ம ராஜா யார் என்றால் தேவேந்திரன் என்றும், எமனுக்கு என்ன வாகனம் என்றால் எருமைக்கடா என்றும் பதில்கள் மிகவேகமாகக் கிடைக்கும். இப்படிப்பட்ட புரிந்து கொள்ள முடியாத, அவன் அறியாத, அறிந்து கொள்ள முடியாத விஷயங்கள் அவனுக்கு மனப்பாடம் ஆனாம் அறிவு வளர்ச்சிக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் வேண்டியவற்றில் அவன் அரைக்கால் பலங்கூட அறிந்திருக்க மாட்டான். ஏன் இவ்விதம் நகரிலே ஒரு நீதியும், நாட்டிலே ஒரு நீதியும் வழங்கப்படுகிறது. நீதி என்றும் நிலை பெற்றதா? நீதி நிலைமைக்குத் தக்கபடி மாறும். நிகண்டுக்குக் கட்டுப்பட்டு நிற்காது. சான்றாக, ரயிலுக்குத் தாமதமாகச் செல்பவன் ரயில் தவறினால் ரயில் சீக்கரம் போய்விட்டதென்று குறை கூறுகிறான். அது அவன் நிலைமைக்கேற்ற நீதி. ஆனால் அதே ரயிலில் அரைமணி முன்னதாகச் சென்று அமர்ந்திருப்பவன் அதைக் கட்டை வண்டிக்கும், கூட்ஸ் வண்டிக்கும் ஒப்பிடுகிறான். இது இவனது நிலைமைக் கேற்ற நீதி. ரயிலில் நிற்பவன் படுத்திருப்பனைப் பார்த்து, எழுந்திரு என்கிறான். படுத்திருப்பவன் அடுத்த வண்டி பார் என்கிறான். இது அவரவர்கள் நிலைமையில் அவரவர்கட்கு நல்ல நீதியாகும். கண்ணகி காலத்தில் கோவலன் நடத்தை நீதியாக இருந்திருக்கலாம். ஆனால் அது இக்காலத்திற்குச் செல்லாது. இக்காலக் கண்ணகி கோவலனை சும்மா விடமாட்டார்கள். அல்லது அவளது தாய் தகப்பனும் சும்மா விட்டார். அதுபோலத்தான் ராமன் சீதை, நளாயினி, நளன்-தமயந்தி முதலியோர் காலத்து நீதி அக்காலத்திற்கு ஏற்றதாக இருந்தது. அது இப்போது செல்லாது. நீதியின் சக்கரம் சதா உருண்டு கொண்டே இருக்கும். அதனை நாம் நம் அறிவைக் கொண்டு நம் நிலைக்கேற்பத் திருப்ப வேண்டும்.