அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஒட்டுமாஞ்செடி
2

அறைகூவல் விடுத்துப் பார்க்கட்டும்:
கோவையிலே பெரியார் பின்னர், தான் ஏதோ தீவிர திட்டத்தில் இறங்கப் போவதாகவும் தன்னைத் தானே முதல் பலியாக்கிக் கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். இதைக்கேட்ட நான் பயந்தே போனேன். ஏன் அவர் பலியாக வேண்டும். கூடாதே, என்று நினைத்தேன். ஆனால் சமீபத்தில் பெரியார் திருச்சியில் பேசிய பேச்சைப் பார்த்தவுடன் எனக்கு அன்று இருந்த பயம் நீங்கி விட்டது. நான் இன்னும் 10 ஆண்டுகளாவது வாழ விரும்புகிறேன். அதற்காகத்தான் நான் திருணம“ என்கின்ற பேரால் ஒரு ஏற்பாடு, எனது வாழ்க்கைக்குத் துணை ஏற்படுத்திக் கொண்டேன் என்று பேசினார். அவர் நன்றாக வாழட்டும்! சீனக்கிழவரைப் போல, பர்மிய நாட்டு வயோதிகரைப் போல், துருக்கி நாட்டு பெரியாரைப் போல் வாழட்டும்! இன்னும் காந்தியார் வாழ விரும்பியபடி 125 வயது வரையில் வாழட்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் பணியைக் கண்களால் காணட்டும். அவர் கொள்கை, திட்டம், நம்மால் நல்ல முறையில் நிறைவேற்றப்படுகிறதைக் கண்டு களிக்கட்டும்! தவறு இருந்தால் திருத்தட்டும்! போகும் பாதை தவறு என்றால் சுட்டிக்காட்டட்டும்! ஆனால் வேலை செய்வதைத் தடுக்க வேண்டாம், பகை உணர்ச்சியை வளர்க்க வேண்டாம், திராவிடர் கழகத்துக்கும்-திராவிட முன்னேற்ற கழகத்துக்குமிடையே! நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள் என்று ஒரு அறைகூவல் (சிலீணீறீறீமீஸீரீமீ) விடுத்து விட்டு அவர் தம் வழி நடந்து கொண்டு போகட்டும்!

சமதர்ம பூங்கா:
திராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்ற கழகமாகட்டும், படை வரிசை வேறு வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான், கோட்பாடு ஒன்றுதான்; திட்டமும் வேறு வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டு பட்டு விட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிகளும், வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும் இரு கழகங்களும். இருதிக்குகளிலுமிருந“தும் வடநாட்டு ஏகாதி பத்தியத்தை ஒழித்து வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவாகத் திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும்.

அதிலே எந்த கழகமும் பூங்கா அமைத்தாலும் அதில் பூக்கும் புஷ்பங்கள், காய்கள் கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியை, மகிழ்ச்சியைத்தான் குறிக்கும். இரு பூங்காவும் தேவை. ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை. அவசியமுமில்லை. எது புஷ்பித்தாலும் மாலையாகப் போவது திராவிடத்துக்குத்தான் என்ற நல்லெண்ணம் வேண்டும். அதை விட்டு நள்ளிரவிலே பூங்காவின் வேலி தாண்டி பாத்தியை அழிக்கும் வேலிதாண்டிகள் வளரக் கூடாது.

கொள்கையைப் பரப்புவதே பணி:
இப்போது மழை வந்தது. சிறிது நேரம் சங்கடமாகத்தான் இருந்தது. இப்போது மழை ந‘ன்றிருக்கிறது. மழை பெய்ததற்கு முன்பு இருந்த வெப்பம் மாறி குளிர்ந்த காற்று வீசுகிறது. மெல்லிய மேகம் பரவி அழகளிக்கிறது.

மழை பெய்து நின்று கறுத்த வானம் வெளுத்திருப்பது போல இன்று புதுக் கழகம் அமைத்து முன்னேற்ற வேகத்துடன் மோதுதல் இன்றிப் பணியாற்றப் புறப்பட்டு விட்டன.

கொள்கையைப் பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும். நான் உண்மையிலேயே கூறுகிறேன், நமது எழுத்தாளர் எவரும் கடுமையான நடையில் தாக்குவதைக் குறைத்து விட வேண்டும். இதனால் நமக்கு லாபமில்லை. பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அத்தனை பேருக்கும் நஷ்டந்தான். திராவிடர் கழகத்தை நாம் தாக்கி, முன்னேற்றக் கழகத்தை அவர்கள் தாக்கி, அவர்கள் லாபத்துக்காகத் தான் வேலை செய்கிறார்கள் என்று நாம் கூற, இல்லை! இல்லை! அவர்கள் தான் சுயநலமிகள், லாப வேட்டைக்காரர்கள் என்று அவர்கள் ஏச, மக்கள் இவர்களுக்கும் லாபம்தான் குறிக்கோள், அவர்களுக்கும் லாபம்தான் குறிக்கோள் என்று கருதும் நிலை ஏற்பட்டு விடும். எனவேதான் கூறுகிறேன்.

நம்மிடையே பகையுணர்ச்சி கூடாது. இதே சமயத்தில் கொள்கையை விட்டுக் கொடுக்கவும் கூடாது. பிரிவினை, பொருளாதாரச் சீரழிவிலிருந்து மீட்சி, பழைமையிலிருந்து விடுதலை ஆகிய லட்சியங்களுக்காகவே உழைக்க வேண்டும்.

பாதை தவறிய தலைவரைப் புறக்கணித்தோம்:
இவ்வளவு பேசுகிறாயே பேதம் கூடாது, பிளவு கூடாது என்று! ஏன் நீங்கள் அங்கிருந்தே பணியாற்றக “கூடாது? விலகுவானேன்? வேறு கட்சி அமைப்பானேன்? என்று கேட்கத் தோன்றும். கேள்வி சரிதான். பாதை தவறிய தலைவரைப் புறக்கணித்தோம். தவறை தவறுதான் என்று எடுத்துரைத்தோம். அவரோடிருந்து பணியாற்ற முடியாத நிலைமையிலிருக்கிறோம். எவரிடமும் நம்பிக்கையில்லை என்று இழி சொல்லையும், உதவாக்கரைகள் என்ற பழியையும், தூற்றலையும் ஏசுதலையும் சுமக்கும் பெரும்பாரம், பெருஞ்சுமை ஏற்பட்டு விட்டது. இவைகளைத் தாங்கிக் கொண்டு அவரோடு ஒத்து வேலை செய்வது முடியாத காரியம். ஆகவே, விலகினோம் பெருந்தன்மையோடு வேறு அமைப்பில் பணியாற்றுகிறோம், லட்சியத்தை நிறைவேற்ற.

பொறாமை கிடையாது:
எந்த அளவுக்கு வேலையைக் குறைத்துக் கொள்ளலாமோ அந்த அளவுக்குக் குறைத்துக் கொள்ளப் பிரியப்படுபவன் நான். அதுவே எனது சுபாவம். அப்படிப்பட்ட நான் விலகி, வேறு கட்சியில் தொண்டாற்றத் தொடங்கியிருக்கிறேன். காரணம், எனது நண்பர்கள், கழகத்தில் முக்கிய பங்கு கொண்டு தொண்டாற்றும் பெரும்பாலோர் பொது வாழ்விலேயே சலிப்புற்று, பொது வாழ்வையே விட்டு விலகும் அளவுக்குச் சென்றனர்.

பெரியாரின் திருமண ஏற்பாட்டைக் கண்டித்து 250 கழகங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றின, வேலை செய்ய முடியாது அவரோடு என்று! நிர்வாக அங்கத்தினர்களில் மிகப் பெரும்பான்மையோர் அவரோடு ஒத்துழைக்க முடியாது எனக் கூறிவிட்டனர். எல்லாப் பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் அவரோடு ஒத்துழையாமை செய்தனர். கழகப் பத்திரிகைகள் யாவும் அவரை ஆதரிக்கவில்லை.

பெரியாருக்கு வலது கை இடது கை என இருந்தவர்-பெரியாரின் முன்னோடிகள், பின்னே சென்றவர்கள்- உறவினர்களிலும் உற்றாராக இருந்தவர்கள் உழைத்தவர்கள், உள்ளப் பண்பு மிக்கவர்கள், உற்சாகமுள்ளவர்கள், உணர்ச்சிமிக்க வர்கள், ஊருக்குத் தெரிந்தவர்கள், இவர்கள் யாவரும் பிரிந்தனர் அவரை விட்டு! அவரோடு ஒத்துழைக்கவில்லை. காரணம் அவர் திருமண விஷயந்தான். மணியம்மையைப் பெரியார் திருமணம் செய்து கொண்ட விஷயம் திராவிட கழகம் இதுவரை சொல்லி வந்த கொள்கைகளுக்கு விரோதமாய் இருக்கிறது. திராவிடர் தலைகளைக் குனியவைக்கும் படி செய்திருக்கிறது என்பதைத் தவிர, இவ்விஷயத்தால் எனக்கோ மற்ற யாருக்கோ பொறாமை கிடையாது. நான் ஏன் இதில் பொறாமைப்பட வேண்டும்?

பெரியாரை மணந்துகொள்ள மனுப்போட்ட பெண்ணா நான், பொறாமைப்பட!

சம்பத்துக்குப் பரிந்துபேச அவசியமில்லை:
பெரியாருக்குச் சொந்தமான குடும்பச் சொத்துக்கள் இத்திருமணத்தின் காரணமாக சம்பத்துக்கே வராமல் போய்விடும். சம்பத்துக்காக நான் பரிந்து பேசுகிறேன். பெரியார் மீது துவேஷப் பிரசாரம் செய்கிறேன் என்று கூறுகிறார்களாம். உங்களுக்கு நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். பெரியார் சொத்து விவரம் அதன் ஏற்பாடு உங்களில் பலருக்குத் தெரியாது. எனவேதான், அவர்களால் பேச முடிகிறது இதுபோல. சட்ட நுணுக்கம் தெரியாதவனல்ல சம்பத்து! சொத்து விஷயத்தில் ஆசை இருந்தால் சம்பத்து மணியம்மையிடம் நயமாகப் பேசிப் பணம் வாங்கிக் கொள்ளத் தெரியாதா? சென்று பேசமுடியாத நிலையிலே இருக்கிறாரா அம்மையார்? சம்பத்தின் சின்னம்மாதானே. இப்போது அவரைச் சந்தோஷப்படுத்தி சலுகைகள் பெறத்தெரியாதவனா?

பின் ஏன் குடும்பத்தை, வீட்டை விட்டு வெளியேறினான். அப்போது அவன்தான் விடுதலையின் மானேஜர். பெரியாரின் திருமணச் செய்தி கேட்ட அன்று, 18,20 வயது சுலோச்சனா சென்னை, பெரியார் வீட்டிலிருந்து தனது ஒன்றரை வயதுக் குழந்தையோடு தன்னந்தனியாக வெளியேறி ஈரோடு சென்றார்கள். மணியம்மை உள்ளே புகுந்தார். மருமகள் வெளியேறுகிறார். தேவையா? பெரியாரின் திருமணத்தால், அவருடைய குடும்பத் தினரும், உறவினரும் தலை குனிந்தனர். திராவிடர் கழகத்தினர் சகலரும் தலை குனிந்து தேம்பி அழுதனர். இந்த வெட்கக் கேட்டைத் தாங்க முடியவில்லை. மாற்றார் மனமகிழும் நிலை வந்தது. கல்கி போன்ற பத்திரிகைகள் கேலியும், கிண்டலும் செய்யுமளவுக்குச் சென்றனர். திராவிடர் கழகம் தன்னாலே அழிந்துவிடும் என்று கேலிச் சித்திரம் தீட்டுமளவுக்குக் கொண்டு போய் விட்டது. இந்த நிலை வேண்டாம் என்றுதான் இப்போது திராவிடர் முன்னேற்றக் கழகம் தனியாய், பெரியார் வகுத்துச் சென்ற பாதையில் தீவிரமாய்ச் செல்ல முனைந்திருக்கிறது. இன்னும் அவருக்கும் எனக்கும் உள்ள பற்று, பாசம் அகவவில்லை, என்னை விடவில்லை; விட்டகுறை, தொட்டகுறை போகவில்லை; நான் கேட்கிறேன், தோழர்களே! எது முக்கியம் நமக்கு? லட்சியமா? பெரியாரா, லட்சியம் தேவை. பெரியாரல்ல என்ற முடிவு செய்தோம். பிரச்சனை முடிந்தது. இதோ நம் கண்முன் வடநாட்டு ஏகாதிபத்தியம் மக்களை பாழ்படுத்தும் பாசிசம், பதுங்கிப் பாய நினைக்கும் பழைமை இவைகள் தான் ஒழிய வேண்டும்.

மொழிப் பிரச்னைக்கு முடிவுகாண வேண்டாமா?
தற்போது நம்மால் வெறுத்து ஒதுக்கப்பட்ட இந்தி, டெல்லி அரசியல் நிர்ணயசபையிலே, அரசியல் திட்டத்திலே முக்கிய அங்கமாக ஏற்பட்டுவிட்டது. நிலைமை என்ன இப்போது? இந்தி கூடாது என்று கூறினோம். குற்றமென்று கைது செய்தனர். இனி அரசியல் திட்டத்துக்கே விரோதி. நாட்டுக்கே துரோகி என்று குற்றஞ்சாட்டக் கூடும். அந்த நிலையிலை வடநாட்டு ஏகாதிபத்தியம் தன்னைத்தான் பலப்படுத்திக் கொண்டு முன்னேறுகிறது. மூன்று மொழிகளை நாம் சுமக்க வேண்டிய பெரும்பாரம் நமக்கு ஏற்பட்டு விட்டது. இந்தி நுழைவுக்குப் புதிய பலம், புதிய பாதுகாப்புத் தரப்பட்டு விட்டது. டெல்லி சர்க்காரால், இங்குள்ள மக்களின் நிலையை, நாட்டத்தை நாம் அறிவிக்க வேண்டும் அரசாங்கத்துக்கு.

அறிவுப் புரட்சிக்கு எதிர்ப் புரட்சி!
மற்றோர் புறம் பழமையும் வைதீகமும் காலட்சேபம் கதர்ப் பிரசங்கம் என்ற முறையிலே நாட்டிலே தமது பிடியைப் பலப்படுத்திக் கொள்ள வேலை செய்து வருகின்றன. சனிக்கிழமை ‘ஹிந்து’ பத்திரிகையை எடுத்துப் பாருங்கள்! எத்தனையெத்தனை கதாப் பிரசங்கங்கள், காலட்சேபங்கள், பழமைக்குப் பக்கபலம் தேட, வைதீகத்தை வாழ வைக்க! அறிவுப் புரட்சிக்கு எதிர் புரட்சி செய்கின்றன! சாமேத விளக்கம், அதர்வண விளக்கம், உபநிஷத்து உபன்யாசம், கீதாஉபதேசம், தேவார திருவாசக பாராயணங்கள், நாயன்மார் ஆழ்வார் புராணங்கள் இப்படிப் பழமை தனது பிடியைப் பலமாக இறுக்கிக் கொண்டு போகிறது. இந்த நாட்டுப் பாசிசம் ஒன்றோடொன்று இணைந்து பகுத்தறிவுப் பாசறையைப் பாழ்படுத்தித் தவிடுபொடியாக்கத் திட்டமிடுகின்றன. நிலைமையை நன்கு பயன்படுத்தத் திட்டமிடுகின்றன. இந்த நிலையிலே நாம் பொறுப்புணர்ச்சியோடு இலட்சிய நோக்கோடு நடந்து கொள்ள வேண்டும். நாம் புரியும் பிரச்சாரம் பத்திரிகைகளிலே வராது, பழமைக்கு ஆதரவுதேடும் பணியில் அவைகள் முனைந்துள்ளன என்ற காரணத்தால், நம்மிடையிலே கலம்க என்றால் விளம்பரம் செய்வர் பத்தி பத்தியாக! நேற்று நடந்த நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் கூட்டத்தைப் பற்றி ‘இந்தி’ பத்திரிகை வெளியிட்ட முறையைப் பாருங்கள். ஷிஜீறீவீN வீஸீ ஞிக்ஷீணீஸ்வீபீணீ ளீணீக்ஷ்லீணீரீணீனீ திராவிடர் கழகத்திலே பிளவு என்று தலைப்புக் கொடுத்துச் சேதி போடுகிறது. நிர்வாக உறுப்பினர் கூட்டம் என்று சொன்னால் கமிட்டிக் கூட்டம் போட என்று போட்டுக் காட்டுகிறது. பேதம், பிளவு அதிகமாக வழி வகுக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் தோன்றியது என்ற சேதி போதும் என்றேன். போட்டதா அப்படியே? இல்லை! இது ஒரு சிறு ‘சாம்பிள்’ மாதிரி. நான் பெரியாரை குறை கூறினால் பத்தியாக ஆறுகாலம் தலைப்புடன் வரும். பெரியார் என்னை ஏசினால் பக்கம் பக்கமாக வரும். ஏன்? இருவரையும் பொதுமக்கள் முன் அயோக்கியர்கள், சுயநலமிகள் என்று எண்ணும்படி செய்யத்தான். இதனால் யாருக்கு லாபம்? என்பது எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் என்ன, புராணங்கள் படிக்காதவர்களா? “குருஷேத்திரம்” ஏற்பட்டால், கண்ணனுக்குத்தான் லாபம் என்பது எப்படி எங்களுக்குத் தெரியாமல் போய்விடும்! மோதுதல் யாருக்குப் பயன்படும் என்பது தெரிந்துதான் செயலாற்றுகிறோம். தனியாக, தனி அமைப்பின் கீழ்.

ஓயமாட்டோம் உழைப்போம்!
பழமையும் பாசிகமும் முறியடிக்கப்படும் வரை ஓய மாட்டோம். உழைப்போம், உருவான பலனைக் காண்போம். அப்போது பெரியார் “பயல்கள் பரவாயில்லை” உருவான வேலைதான் செய்கிறார்கள் என்று உள்ளம் மகிழும் நிலை வரத்தான் போகிறது.

தூத்துக்குடி மாநாட்டுக்கு நான் போகவில்லை, ஒரு கேள்வித்தாள் சென்றது பெரியாருக்கு. “அண்ணா ஏன் வரவில்லை என்று” அதற்குப் பெரியார், “முத்தன் ஏன் வரவில்லை, அப்புறம் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஏன் வரவில்லை, சுந்தராம்பாள் ஏன் வரவில்லை, என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே” என்று அலட்சியமாகப் பதிலளித்தார். அதற்குப் பிறகு ஈரோடு மாநாட்டிலே, “அண்ணா வந்திருக்கிறார், மகனிடம் பெட்டிச் சாவியைக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறும் நிலை வரத்தான் செய்தது. அவர் “சாவியைக் கொடுத்தேன்” என்று கூறினார். அந்தச்சாவி எந்தப் பூட்டுக்கும் பொருந்தாத சாவி. எனவே அது எந்தக் காரியத்துக்கும் உபயோகப்படவில்லை. ஆனாலும் தூத்துக்குடி மாறி ஈரோடு வந்ததுபோல இன்றுள்ள நிலைமாறத் தான் போகிறது என்ற உறுதியோடு, உற்சாகத்தோடு பணிபுரிவோம். நாட்டிலே ஆற்றி வந்த நல்லறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துவோம்! பாசிசப் பழமையையும் நாட்டை பாழ்படுத்தும் சக்திகளையும் எதிர்த்துப் போராடுவோம். நாட்டிலே இன்று 144 ஏராளம். புத்தகங்கள் பறிமுதல்! அச்சகங்களுக்கு ஜாமீன் தொகை ஓயவில்லை. குறையவில்லை. நேற்றுக்கூட நான் எழுதிய ‘லட்சிய வரலாறு’ என்ற புத்தகத்தைப் பற்றிப் போலீஸார் அது என்ன? இது என்ன? என்று கேள்விமாரி பொழிந்தவண்ம் இருந்தனர். வடநாட்டுப் பாசிசத்தை ஒழிக்கப் பாடுபடும் திராவிட மக்களைப் பழமைப் பிடியினின்றும் விடுபட விரும்பும் பகுத்தறிவுவாதிகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சர்க்கார் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமாகப் பறிமுதல் செய்து கொண்டே போகிறார்கள். அடக்கு முறையை வீசிக் கொண்டே இருக்கிறார்கள். இவ்விஷயமாக வெகு சீக்கிரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தக்கதொரு நடவடிக்கையிலே ஈடுபடப் போகிறது. சர்க்கார் காணத்தான் போகிறார்கள்! சர்க்கார் பறிமுதல் செய்த புத்தகம் பகிரங்கமாக விற்பனை செய்யப்படும் சைனா பஜாரில்!

இரண்யன் நாடகம் ஆடுக!
‘இலட்சிய வரலாறு 6 அணா’ ‘இராவண காவியம் ரூ.6’ ‘ஆரியமாயை 6 அணா’ ‘ஆசைத்தம்பி புத்தகம் நாலணா’ என்று தொண்டர்கள் விலை கூறுவதைக் கேட்கத் தாந் போகிறோம். இலட்சிய வரலாறு புத்தகம் இப்போது கிடைக்காது. எப்பொழுதோ விற்றுத் தீர்ந்துவிட்டால் இலட்சிய வரலாறு” என்று கூறப்படும். முகப்பிலே மட்டும் “இலட்சிய வரலாறு” என்று இருக்கலாம். உள்ளே காலி காகிதம் வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் விற்பர் இலட்சிய வரலாறு என்று கூறி பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் இப்படித்தான் விற்கப்படப் போகின்றன! அப்போது இந்த சர்க்கார், என்ன செய்யப் போகிறது. எப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறது. எப்படி விளையாடப் போகிறது. பொதுமக்களும், பார்க்கத்தான் போகிறார்கள். இதே போல் நமது இயக்க நாடகங்கள் தடை செய்யப்படுகின்றன சர்க்காரால், தகாத செயல்கள் தான் இதுவும். தடை செய்யப்பட்ட நாடகங்களில் முதலாவதான, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்பது.

திராவிட முன்னேற்றக் கழக முக்கியதர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். மன்றாடிக் கேட்கிறேன். அவர்களின் முக்கிய வேலை, முதல்வேலை இந்த நாடகத்தை ஆங்காங்கு பொதுமக்கள் முன் நடத்திக் காட்டும் திட்டம் வகுக்கும்படி இதற்கு நீங்கள் தயாரா? எத்தனைபேர் கை தூக்கிக் காட்டுங்கள் (கூட்டத்தினர் பெரும்பாலோர் கைகளும் உயர்ந்திருந்தன) எல்லோரும் கை தூக்கி விட்டீர்களே! இத்தனை பேரும் சென்றார் சர்க்கார் சிறையிலே இடமிருக்காதே! நமக்கும் திராவிடர் கழகத்துக்கும் பிளவு இல்லை. ஆனால் போட்டி உண்டு. போட்டி உணர்ச்சி உண்டு. தீவிரத்திலே அதாவது ஆங்கிலத்தில் கூறப்படும் ˆஜீஷீNˆனீணீஸீˆலீவீஜீ போட்டி உணர்ச்சி காரியம், ஆற்றும் திறமையிலே வேண்டும். இது கண்ணியத்தின் பெயரால், நாகரீகத்தின் பெயரால், நல்லறிவின் அடிப்படையில் ஏற்பட வேண்டும்.

புதுக்கழகம் ஒட்டுமாஞ்செடி:
பகை உணர்ச்சியை வளர்த்து எதிரிகளுக்கு இடம் கொடுத்து ஏமாளிகளாகத் தேவையில்லை! நான் முன்னர் குறிப்பிட்டபடி ‘கல்கி’ பத்திரிகை, என்ன தைரியமாக எவ்வளவு சந்தோஷமாக தீட்டியது காங்கிரசுக்கு எதிராக ஒரு கட்சியும் இல்லையென்று! இந்து மகாசபைக்கு ஒரு வேலையும் இல்லை; கம்யூனிஸ்டுகள் கலகக்காரர்கள், சமதர்மிகள் வெற்றி பெறமாட்டார்கள், திராவிட கழகத்தினர் தன்னாலேயே அழிந்து விடுவர் என்று ஆருடம் கூறியது. இது ஆத்திரத்தின் மீது காட்டப்பட்ட ஆருடம். ஆசையின் விளைவு அப்பனே! இதை விட்டு விடு. மரம் அழியவில்லை அதிலிருந்து ஒட்டுமாஞ்செடி தோன்றியிருக்கிறது. இதை வெட்டி விடமுடியாது. நான் திராவிட நாடு ஆரம்பித்த நேரத்திலே குடந்தையிலே ஒரு கூட்டத்தில் பேசினேன். அப்போது எனக்கு ஒரு கேள்வித்தாள் தரப்பட்டது. கேள்வி என்ன தெரியுமா “குடியரசு” இருக்க நீ ஏன் திராவிடநாடு ஆரம்பிக்கிறாய் என்று கேட்கப்பட்டது. நான் பதில் கூறினேன். ‘குடியரசு, இருக்கிறது அதே கருத்தை எடுத்துக்கூற ஒரு ஒட்டுமாஞ்செடி முளைத்திருக்கிறது காஞ்சீபுரத்தில், அதே கொள்கைகளைப் பரப்ப.

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஒட்டுமாஞ்செடி தான். மன்வளம் ஏராளம். அதே பூமி, நீர்பாய்ச்சி, பதப்படுத்த, பாத்திகட்ட முன்னிற்போர் பலர். ஒட்டுமாஞ்செடி பூத்துக் காய்த்து கனிகுலுங்கும் நாள் விரைவில் வந்தே தீரும்! இதனால் ஒட்டுமாஞ்செடி மாமரத்துக்கு விரோதமல்ல. திராவிட கழகத்துக்கு முரணானது அல்ல. ஒத்த கருத்துக் கொண்டதே ஒட்டுமாஞ்செடி!

பெரியார் அளித்த பயிற்சி:
நம்மிடம் பணம் இல்லை. “இந்தப் பயல்களிடம் பணம் ஏது, கொஞ்ச நாட்களுக்குக் கூச்சல் போட்டு அடங்கி விடுவார்கள். பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும்?” என்று பேசப்படுகிறதாம். அதே நேரத்தில் பணம் சம்பாதிக்கிறான். சினிமாவுக்கு கதை எழுதுகிறான், நாடகமாடுகிறான் நல்ல பணம் சம்பாதிக்கிறான், என்று தூற்றப்படுகிறேன் நான்! இந்த இருவகைப் பேச்சுக்களையும் காணும் போதும், கட்சி நடத்த ஆனாலும்வழி வகை இருக்கிறது. பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது. நான் சம்பாதித்தது உண்மையோ, பொய்யோ அதுபற்றிக் கவலையின்றி அதை அப்படியே ஏற்று, அந்த வழியைக் கடைப்பிடித்தேனும் பணம் சம்பாதித்துக் கட்சி நடத்தலாம் என்ற தைரியம் பிறக்கிறது. பணம் என்பது ஒரு சாதனமே ஒழிய அது சகல காரியங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல இருந்தே தீர வேண்டும். எல்லா காரியங்களுக்கும் என்ற நிர்ப்பந்தம் தேவையில்லை. நமது உழைப்பின் மூலம், உறுதியின் மூலம் எவ்வளவோ பணத்தேவையைத் தவிர்க்கலாம். குறைக்க முடியும்.

முக்கியமாக, முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்து போரிட திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணிப்படை வரிசை அமைக்க வேண்டும். அதில் பங்குகொள்ள சமதர்மத் தோழர்களை, வாருங்கள் என்று வரவேற்கிறேன், கம்யூனிஸ்டுகளை ஒத்துழையுங்கள் என்று கூப்பிடுகிறேன்.

“பேச்சுரிமையைப் பறிக்காதே. புத்தகங்களை பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்! பெரியாரே! நீரளித்த பயிற்சி பக்குவம் பெற்ற நாங்கள் உம் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம், துவக்க நாளாகிய இன்றே!

இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத் துவக்க விழாவிலே இத்தனை பெருங்கூட்டமாகக் கூடி, மழையையும் பொருட் படுத்தாமல், நின்று பேராதரவு தந்த பெருமக்களே! உங்களுக்கு எனது நன்றி. துவக்க விழாவிலே நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள். எழுத்துரிமை பேச்சுரிமை தூக்க வாரீர் என்ற போர்ப்பரணிதான். விரைவில் அந்த நாள் வந்தே தீரும். காத்திருங்கள் அழைப்பு விரைவில் வரும்.

-1953 மதிமன்றம், சென்னை-1