அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பெரியார் ஒரு சகாப்தம்!
1

பகுத்தறிவு ஊட்டிய பெரியாரே என் தலைவர்:
“நமது தமிழ் நாட்டில் மட்டும், வயதானவர்கள் வீட்டிற்குப் பெரியவர்களாக வீட்டிலேயே இருப்பார்கள். அவரது பிள்ளைகள் வெளியூர்களில் ஒருவர் டாக்டராகவும், ஒருவர் எஞ்சினீயராகவும், ஒருவர் வக்கீலாகவும் இருப்பர். வீட்டில் நடைபெறும் விழா நிகழ்ச்சியின் போது, அந்தப் பெரியவர் தன் மகன்களைச் சுட்டிக்காட்டி “அதோ போகிறானே அவன்தான் பெரியவன், டாக்டராக இருக்கிறான், இவன் அவனுக்கு அடுத்தவன், எஞ்சினீயராக இருக்கிறான். இவர்கள் எல்லோரும் எனது பிள்ளைகள்” என்று கூறி, பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவார். அது போன்று பெரியாரவர்கள், தம்மாலே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்தாலும் ‘அவன் என்னிடமிருந்தவன்; இவன் என்னுடன் சுற்றியவன்’ என்று சொல்லிக் கொள்ளக்கூடிய பெருமை இந்தியாவிலேயே ஏன்? உலகிலேயே பெரியார் அவர்களுக்குத்தான் உண்டு. அவர் காங்கிரசிலிருப்பவர்களைப் பார்த்து தி.மு.கவில் இருப்பவர்களைப் பார்த்து-கம்யூனிஸ்டுக் கட்சியில் இருப்பவர்களைப் பார்த்து-சோஷ்யலிஸ்டுகளைப் பார்த்து ‘இவர்கள் என்னிடமிருந்தவர்கள்; இவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்தேன்; இன்று இவர்கள் சிறப்போடு இருக்கிறார்கள்’ என்று சொல்லிக் கொள்ளக் கூடிய பெருமை அவர்கள் ஒருவரையே சாரும்.

பெரியார் அவர்கள் தமிழ்போல் என்றும் இளமை குன்றாது வாழவேண்டும் எந்தக் குழந்தையும் தப்பிப் போகாமல் பாதுகாக்க வேண்டும். அவர் என்னுடைய தலைவர்! நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன். வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை; அந்த அவசியமும் வரவில்லை. அன்று ஏற்றுக்கொண்டது போல் இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணி செய்து வருகின்றேன்.

கருத்து வேற்றுமை இருப்பினும் குறிக்கோள் ஒன்றே:
ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு இருக்கலாம். குடும்பத்தில், அப்பன்- மகன்- அண்ணன்-தம்பி அவரவர்களுக்கு ஒரு கொள்கை! அவரவர் கொள்கை அவரவருக்குப் பெரிது.

‘கடவுள் கதைகளிலிருந்து மனித சமுதாயத்தைத் திருத்தலாம்; மனித சமுதாயத்தை முன்னேற்றலாம்’ என்று குன்றக்குடி அடிகளார் கருதுகின்றார்; அத்துறையின் மூலம் தொண்டாற்றி வருகின்றார். கடவுள் கதைகள் மனித சமுதாயத்தைக் கெடுக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் போது அவமானம் புழுங்குவதில்லை. மதத்துறையில் நின்று மனித சமுதாயத்தை முன்னேற்றலாம் என அவர் கருதுகின்றார். நாம் பகுத்தறிவுத் துறையால்தான் மனித சமுதாயம் முன்னேற முடியும் என்று கருதித் தொண்டாற்றி வருகிறோம். நாமும் முழு அளவு வெற்றி பெற்றோமா என்றால் இல்லை; அவரும் முழு அளவு வெற்றி பெற்றாரா என்றால் இல்லை. நமது வெற்றியைப் பற்றி நாமும் சந்தேகப்படுகிறோம்; அவரும் அவரது வெற்றி குறித்து சந்தேகப்படுகிறார். அவரவர்கள் நேர்மையாக நடந்து, தங்கள் துறையில் தொண்டாற்ற வேண்டும்.

சுயமரியாதை இயக்கத்தின் சிறப்பு:
சுயமரியாதை இயக்கம் ஒழுக்கச் சிதைவு இயக்கமல்ல. மனித சமுதாயத்தை ஒழுக்க நெறிக்குக் கொண்டு வந்து முன்னேற்ற வேண்டுமென்பதற்குப் பாடுபடும் இயக்கமாகும். முதல் முதல் உள்ளத்தில் சுயமரியாதை இயக்கம், அடுத்துப் பகுத்தறிவு இயக்கம், பிறகு தமிழ் இயக்கத்தோடும் பிணைத்துக்கொண்டது.

நாம் மனித இயற்கையின் பாற்பட்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். நான் பெரியாருடன் இருந்தபோது பல ஆண்டுகளுக்கு முன் அரித்துவாரத்திற்குப் பெரியாருடன் நானும் சென்றேன். கங்கைநதி தீரத்தில் அவர் கம்பீரமாக நடந்து செல்கையில் வீசிய தென்றல் பெரியாரின் வெண்தாடியைத் தழுவி அசைத்து, அவர்மேல் போட்டிருந்த மஞ்சள் சால்வையையும் அசைத்துச் சென்றது. எனக்கு அவர் கம்பளிக்கோட்டு வாங்கிக்கொடுக்காத காரணத்தால், நான் குளிரால் கைகளைக் கட்டிக்கொண்டு அவர் பின் சென்றேன். அது குருவுக்குப்பின் சீடன் மிகுந்த பயபக்தியுடன் செல்வது போல் இருந்தது. பெரியசாமியார் என்று அவரையும், அவருக்குப்பின் கைகட்டிச் சென்ற என்னை அந்தச் சாமியாரின் (பெரியாரின்) சீடன் என்றும் கருதி, வழி நெடுக எங்கள் காலில் விழுந்தனர். பெரியார் அவர்கள் என்னைப் பார்த்து, ‘நம் நாட்டு மக்கள் யாரையெல்லாம் சாமியாராக்குகிறார்கள் பார்’ என்று சொன்னார்கள்.

பகுத்தறிவால்தான் மனித சமுதாயம் முன்னேற முடியும்:
பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள் பகுத்தறிவால் தான் மனித சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவர முடியும் என்றும், அதற்கு எதிராக இருக்கிற மதம், புராணம் இவைகள் எல்லாம் மக்களின் எண்ணத்திலிருந்து அகற்றப்படவேண்டுமென்பதற்காக வும் பாடுபட்டுக் கொண்டு வருகிறோம். மதவாதிகள் மதத்தில்தான் நியாயம் இருக்கிறது; மதம்தான் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டி என்று கருதிக் கொண்டிருக்கின்றனர்.

சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிகள்:
சுயமரியாதை இயக்கம் வளர்ந்து வளர்ந்து பெண்ணுரிமை பெற்றிருக்கிறது; ஆலயங்களில் நுழையும் உரிமை பெற்றிருக்கிறது; இன்னும் பல உரிமைகளைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. தமிழர்களின் குடும்பங்களில் பல சுயமரியாதைத் திருமணங்களை ஏற்று நடத்தியிருக்கிறது. அவர்கள் நமது வணக்கத்திற்குரியவர்களா வார்கள். சட்டப்படி செல்லாது என்று தெரிந்ததனால் ஏற்படும் தொல்லைகளையும் பொருட்படுத்தாமல், மக்களுக்காகத்தான் சட்டம் என்பதை உணர்ந்து, சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர்கள் நமது வணக்கத்திற்குரியவர்கள் ஆவார்கள்

எங்களது ஆட்சியில் விரைவில், சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லத்தக்கதாக சட்டம் கொண்டுவர இருக்கிறோம். ஏற்கனவே நடத்திவைக்கப்பட்ட திருமணங்களும் சட்டப்படி செல்லத்தக்கதாகும் என்று சட்டம் கொண்டுவர இருக்கிறோம். பெரியார் அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை நாங்கள் வந்து செய்யும் வாய்ப்புக் கிடைத்தமைக்காகப் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். நெடுந்தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன், தன் தந்தைக்கு மிகப் பிடித்தமான பொருளைக் கொண்டுவந்து கொடுப்பதைப் போல, நாங்கள் பெரியார் அவர்களிடம் இக்கனியை (சட்டத்தை) சமர்ப்பிக்கிறோம். இதை எனக்கு முன் இருந்தவர்கள் கூட செய்திருக்க முடியும். நான் போய் நடத்தவேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமகிழ்ச்சியடைகின்றேன். நான் திருமணம் ஆனமின் இயக்கத்திற்கு வந்ததால், எனக்கு இந்த வாய்ப்புக் கிடைக்காமல் போய்விட்டது!!”
(திருச்சி நகரிலுள்ள “பெரியார் மாளிகை”யில் 7.6.67 அன்று தந்தை பெரியார் அவர்களால் நடத்தி வைக்கப்பெற்ற மறைந்த ப.ஜீவாநந்தம் மகள் திருமண விழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

அந்த ‘வசந்தம்’
“எனக்கென்று, ஒரு ‘வசந்தகாலம்’ இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஆண்டு பலவற்றுக்குப் பிறகு அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு, இன்றைய கவலை மிக்க நாட்களிலே எழமுடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்கிறேன். பெரியாருக்கு அந்த ‘வசந்தகாலமும்’ தெரியும்; இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.

‘வசந்தகாலம்’ என்றேனே அந்த நாட்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் ‘காடு மேடு’ பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடுமேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.

அப்போது ‘கலவரம் எழாமல்’ ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும்-பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படுமுன்னர், தலைபோகும் தாடி போகும் தடி போகும்-உயிர் போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண்டிய நிலை.

பெரியாரால் திருந்திய தமிழரோ பலப்பலர்:
அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா! என்று ஒரு கடிதத்தை வீசுவார்- ஆமாமய்யா! என்று பொருளற்ற ஒரு பதில் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்கமாட்டார் வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால், செல்வோம், பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில் உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந்திருப்பின், அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக ‘மாலை’ வாங்கிக்கொண்டுதான் வருவார்! அத்தகைய தெளிவும், வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பல திருந்தினர் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டு விட்டிருக்கிறது.

வரலாற்றில் தனி இடம் பிடித்தவர்...
ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு இங்கின்றி வேறெங்கும் இருந்ததில்லை.

அந்த ‘வரலாறு’ துவக்கப்பட்டபோது நான் சிறுவன்.

அந்த வரலாற்றிலே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப் பட்ட நாட்களிலே ஒரு பகுதியில், நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாட்களைத்தான் என் ‘வசந்தம்’ என்று குறிப்பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர் பற்பலர். அவருடன் மற்றப் பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாட்கள் எனக்கு மிகவும் இனிமையான நாட்கள்; இன்றும் நினைவிலே கொண்டுவரும்போது இனிமை பெறுகின்றேன்.

எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்:
எத்தனை எத்தனையோ கருத்துக்களை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்பதனை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும் அக மகிழ்வும், மன நிறைவும் பெற்றிடச் செய்தார்.
கோபத்துடன் அவர் பலரிடம் பேசிக் கண்டிருக்கிறேன்; கடிந்துரைக்கக் கேட்டிருக்கிறேன்; ‘உன்னை எனக்குத் தெரியும் போ!’ என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டிருக்கிறேன். ஒருநாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப்போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது குடும்பத்தில் பிறவாப் ‘பிள்ளை’ எனக் கொண்டிருந்தார்.

தமிழன் வரலாற்றில் முக்கிய கட்டம்:
நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.

இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார் நான் அவருடன் இணைந்தபோது; முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.

அதற்கு முன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்திருக்கிறார்.

இந்த ‘ஆண்டுகள்’ தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள். ‘திடுக்கிட வைக்கிறாரே! திகைப்பாக இருக்கிறதே! எரிச்சலூட்டுகிறாரே! ஏதேதோ சொல்கிறாரே!’ என்று கூறியும், விட்டுவைக்கக் கூடாது! ஒழித்துக்கட்டியாக வேண்டும்! நானே தீர்த்துக் கட்டுகிறேன்!’ என்று மிரட்டியும் தமிழகத்துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர் ஆனால், அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர். மூலையில் நின்றாகிலும், மறைந்திருந்தாகிலும் அந்தப் பேச்சு அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்; கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்; அவருடைய பேச்சோ! அது தங்குதடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது. மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக்கொண்டு, காடுகளைக்கழனிவளம் பெறச் செய்துகொண்டு ஓசை நயத்துடன், ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார், இங்கே பேசுகிறார், அதைக் குறித்துப் பேசுகிறார், இது குறித்துப் பேசுகிறார் என்று தமிழகம் இந்த அய்ம்பது ஆண்டுகளாகக் கூறிவருகிறது.

பெரியார் வாழ்வு முழுதும் உரிமைப் போரே:
மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் எது நேரிடினும் என்ற உரிமைப் போர் அவருடைய வாழ்வு முழுவதும் அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர். அந்த வெற்றியின் விளைவுகளை இந்தத் தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியென்று பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அறிவுப் புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பாளர் பெரியார்! இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண்டின் அளவு, மிகப்பெரியது.

பெரியார் கண்ட தமிழகம்:
தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இ“ந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது. பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்படும்போது வியர்த்துப் போகின்றனர். அப்படியா! முடிகிறதா! நடக்கிறதா! விட்டு வைத்திருக் கிறார்களா! என்று கேட்கிறார்கள்! சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு.

அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இதுபோன்ற பல நகர்களில் என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோது, ஒவ்வொரு ஊரிலும் இதுபோலத்தான் கேட்டனர். யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவு வாதிகள்!

அந்த இடத்துப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள்-பெரிய பெரிய ஏடுகளை! எழுதுவார்கள் அழகழகான கட்டுரைகளை! கூடிப்பேசுவார்கள் சிறிய மண்டபங்களில், போலீசு பாதுகாப்புப் பெற்றுக்கொண்டு! இங்கு?

பழமையின் பிடிவாதம் பொடிப்பொடியானது:
இங்கா! இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத ‘பழமை’ உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்! எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது! ‘ஏ! அப்பா! ஒரே ஒருவர், அவர் நம்மை அச்சு வேறு, ஆணி வேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே’ என்று, இந்நாட்டை என்றென்றும் விடப் போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த ‘பழமை’ அலறலாயிற்று! புதுப்புது பொருள் கொடுத்தும், பூச்சு மெருகு கொடுத்தும், இன்று பழமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றாலும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதனை அறியாதார் இல்லை!
எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல, ஒரு சகாப்தம் ஒரு கால கட்டம் ஒரு திருப்பம் என“று கூறுவது வாடிக்கை.

அக்கிரமம் தென்படும் போது, மிகப் பலருக்கு அது தன்னைத் தாக்காதபடி தடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக்கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சியும்தான் தோன்றும்; எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை.

நேர்மைக்காக பெரியார்...
பெரியார் அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டராலும், எந்த வடிவிலே காணப்படினும், எத்துணை பக்க பலத்துடன் வந்திடனும் அதனை எதிர்த்துப் போரிடத் தயங்குவதில்லை.
அவர் கண்ட களம் பல; பெற்ற வெற்றிகள் பலப்பல! அவர் தொடுத்த போர் நடந்தபடி இருக்கிறது! அவர் வயது 89! ஆனால், போர்க்களத்திலேதான் நிற்கின்றார்!!
அந்தப் போரிலே ஒரு கட்டத்தில் அவருடன் இருந்திடும் வாய்ப்பினைப் பெற்ற நாட்களைத்தான் ‘வசந்தம்’ என்று குறிப்பிட்டேன்.

வாழ்க பெரியார்!
மேலும் பல ஆண்டுகள் அவர் நம்முடன், நமக்காக வாழ்ந்திரு“கவேண்டும். தமிழர் வாழ்வு நல்வாழ்வாக அமைவதற்கு, பன்னெடுங்காலமாக இருந்துவரும் கேடுகள் களையப்படுவதற்கு அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டுவரும் என்பதில் அய்யமில்லை.
வாழ் பெரியார்!”
(தந்தை பெரியார் 89-ம் ஆண்டு பிறந்தநாள் “விடுதலை” மலருக்கு எழுதிய கட்டுரை)

அறிவுப்புரட்சி கண்ட எம் தலைவா வாழி!
“... நம்முடைய தனிப்பெருந்தலைவர் பெரியாரவர்களுடைய 89 வது பிறந்த நாள் விழாவில் நான் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது பற்றி உள்ளபடியே மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் முதலமைச்சரான பிறகு எனக்கு ஏதாவது ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமானால், இந்த விழாவிலே நான் கலந்துகொள்வது தான் அந்த பெரிய மகிழ்ச்சியாகும். ஆனால், உங்களிலே பலருக்கு இது புதுமையானதாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரையில் இடையில் சிலநாள் இல்லாமலிருந்த பழைய நிகழ்ச்சிதானே தவிர, இது புதிதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் அவர்களுடைய 89 வது பிறந்த நாள் விழாவானது இன்றைய தினம் தமிழகத்திலுள்ள எல்லாப் பண்பாளர்ளாலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையானது.

கட்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக எல்லாக் கட்சியிலுள்ள பண்பாளர்களும் வரவேற்கத் தக்கதாக, தமிழக மக்கள் நல்வாழ்வில் அக்கறை உள்ளவர்கள் போற்றத்தக்க நிகழ்ச்சியாக இந்த மாபெரும் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இங்கே வந்திருக்கிற பல்லாயிரக்கணக்கான மக்கள், கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் இருக்குமென்று நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் இந்த மாபெரும் கூட்டத்தில் அமைதியாக இருந்தால்தான் இவ்விழாவிற்கு தனிச்சிறப்புத் தேடிக்கொடுத்தவர்களாவீர்கள்.

பெரியாருக்கு நன்றி செலுத்துவோம்:
பெரியார் அவர்கள் இன்று 89வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில், அவர் நமக்கு இதுவரையில் ஆற்றியிருக்கிற தொண்டுக்கு-அவர்களால் தமிழகம் பெற்றிருக்கிற நல்ல வளர்ச்சிக்கு பெயருக்கு அவர்களுக்கு நாம் நம்முடைய மரியாதையை-அன்பை-இதயத்தைக் காணிக்கையாக்குவதற்கே இங்கே கூடியிருக்கிறோம். பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் நேரத்தில் இங்கே நடந்த ஊர்வலமும், அதன் சிறப்பும் பெரியார் அவர்களுக்கு நம்முடைய வணக்கத்தைத் தெரிவிப்பதற்காகத்தான் என்று எண்ணுவது நமது கடமையாகும்.

புதிய வரலாறு படைத்தவர் பெரியார்:
தமிழகத்திற்கும் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும், இன்னும் உலகத்திற்கே கூட என்றும் சொல்லலாம்; அவர்கள் செய்திருக்கிற அரிய பெரிய காரியங்கள், ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சிகர உணர்ச்சிகள், ஓடவிட்டிருக்கிற அறிவுப்புனல் தமிழகம் என்றுமே கண்டதில்லை. இதற்குப் பிறகும் இப்படிப்பட்ட மாபெரும் புரட்சி வேகத்தை நாம் காணப்போவதில்லை. வரலாற்றில் பொறிக்கத்தக்க புதிய வரலாறு என்று கருதும் நிலைமையை அவர்கள் தன்னுடைய பொதுத் தொண்டின் மூலம் நமக்கு அளித்திருக்கிறார்கள்.

சு.ம.ஆம்ப காலத்தை நோக்கி என் நினைவுகள்:
பிறந்தநாள் கொண்டாடுகிற நேரத்தில் என்னுடைய நினைவுகள், திராவிடர் கழகமாகவும், அதற்கு முன்னால் தமிழர் இயக்கமாகவும், சுயமரியாதை இயக்கமாகவும் இருந்த நேரங்களில் அவர்களோடு இருந்து பணியாற்றிய பல எண்ண அலைகளை நெஞ்சில் ஓடிக் கொண்டிருக்கின்றன. எத்தனை இரவுகள், எத்தனை பகல்கள், எத்தனை காடுமேடுகள், எத்தனை சிற்றாறுகள், எத்தனை பேராறுகள், எத்தனை மாநாடுகள் என்று எண்ணிப் பார்க்கிற நேரத்தில், ஒரு போர் வீரன் களத்தில் புகுந்து, ‘இந்தப் படையை முறியடித்தேன். அந்தப் படையை வென்றேன்’ என்று காட்டி மேலும் மேலும் செல்வதைப் போல அவர்கள் வாழ்நாள் முழுவதும் களத்தில் நிற்கிற ஒரு மாபெரும் போராட்டமே நம்முன் காட்சியளிக்கிறது.

சுகபோகங்களைத் துறத்த நம் தந்தை:

முதல் போராட்டம் அவர் உள்ளத்தில் தோன்றியிருக்க வேண்டும்...! செல்வக் குடியில் பிறந்தவர் அவர்! தன்னுடைய செல்வத்தை செல்வாக்கைக் கொண்டு ஊரை அடக்கிப் போகபோக்கியத்தில் மிதந்து மகிழ்ந்திருக்கலாம். அப்போதிருந்த பலருங்கூட அப்படிப்பட்ட வாழ்க்கையில்தான் இருந்தார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையிலிருந்து தன்னைத் தனியாக்கிக் கொண்டு, தன்னைப் பிரித்துக் கொண்டு, ‘என்னுடைய செல்வம் எனக்கில்லை; என்னுடைய செல்வத்தைக் கொண்டு போகபோக்கியத்தில் திளைக்கப் போவதில்லை; பொது வாழ்க்கையில் ஈடுபடப் போகிறேன்’ என்று எண்ணிய நேரத்தில் அவர்களுக்கிருந்த செல்வமும், அவருடைய குடும்பத்திலிருக்கின்ற செல்வாக்கும், அதனால் அடையக்கூடிய சுகபோகங்களும் அவர்களுடைய மனத்தில் ஒரு கணம் நிழலாடியிருக்கவேண்டும். அப்போது உள்ளத்தில் நிச்சயமாக ஒரு போராட்டம் எழுந்து இருக்கவேண்டும். ‘செல்வத்தில் புரளலாமா? அல்லது வறுமையில், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு என்னை நான் ஒப்படைப்பதா?’ என்ற போராட்டத்தில், தொண்டு உள்ளத்தில் வெற்றியடைந்தார். ‘செல்வத்திற்காக அல்ல நான்; சுகபோகத்திற்காக அல்ல நான்; என்னிடத்தில் உள்ள அறிவு, உழைப்புத்திறன், என்னிடத்தில் அமைந்திருக்கிற பகுத்தறிவு அனைத்தும் தமிழக மக்களுக்குத் தேவை; தமிழகத்திற்க மட்டுமல்ல முடிந்தால் இந்தியா முழுவதற்கும் தேவை; வசதிப்பட்டால் உலகத்திற்கே தேவை; வீட்டை மறப்பேன், செல்வத்தை மறப்பேன், செல்வம“ தரும் சுகபோகங்களை மறப்பேன்’ என்று துணிந்துநின்று அந்தப் போராட்டத்தில் முதன்முதலில் வெற்றி பெற்றார்.

இதில் பிரமாதம் என்று இருக்கிறது என்று எண்ணக்கூடும் செல்வம் இல்லாதவர்கள். செல்வம் உள்ளவர்கள் அவற்றை விட்டு விட்டு வெளியே வருவது ஒருபுறம் இருந்தாலும் ஒருவர் கையில் ஒரு பலாப்பழத்தைக் கொடுத்து ஒரு மணி நேரம் அதை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றால், வைத்திருப்பவர் வாயில் நீர் ஊரும்; நேரம் செல்லச் செல்ல பலாச்சுளையில் மொய்த்துக் கொண்டிருக்கிற ஈயோடு சேர்த்துச் சாப்பிடுவார்களே தவிர, பார்த்துக் கொண்டே இருக்க மாட்டார்கள்.