அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பெரியார் ஒரு சகாப்தம்!
3

நமக்கு ஒவ்வாத பழக்க வழக்கம்:
நமக்கு ஒவ்வாததும், எவ்வகையிலும் பொறுத்தமற்றதும். நம்மோடு ஒன்றியிருக்க முடியாததுமான சம்பிரதாயங்கள் எப்படியோ நமது சமுதாயத்தில் புகுத்தப்பட்டுவிட்டன. நமக்குத் தேவையற்ற காரியங்களை நீக்கவேண்டுமென்று கருதி, முதலில் திருமண முறையில் இருந்த தேவையற்ற, பொருளற்ற சடங்குகளை நீக்கிப் புதுமுறையான திருமண முறையை கையாளவேண்டிய தாயிற்று. இதனை நம் மக்கள் பெருமளவு கையாள ஆரம்பித்துவிட்டனர். இன்று நாட்டில் பெருமளவிற்கு இம்முறை பரவிவிட்டது. இதை ஆரம்பித்தபோது ஏற்பட்ட இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள் ஆயிரமாயிரம். இன்றைய தினம் தார்போட்ட ரோட்டில் காரோட்டி காரை விரைவாக ஓட்டுவதுபோல், எல்லோரும் இம்முறையினைப் பின்பற்றத் துவங்கிவிட்டனர் இம்முறையில் செய்யப்படுவதை எல்லோருமே பெருமையாகக் கருத ஆரம்பித்துவிட்டனர். இத்திருமண முறை சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று இருந்தபோதும், லட்சக்கணக்கான திருமணங்களில் வழக்கு மன்றம் போனது என்பது 2,3 தான் இருக்கலாம். அதுபோன்று வைதீகத் திருமணங்களில் கூட பல, வழக்குமன்றங்களுக்கு வந்திருக்கின்றன.

சுயமரியாதைத் திருமண செல்லுபடி சட்டமாக்கினோம்:
இதனை நாங்கள் சட்டபூர்வமாக்கியபோது, சட்டமன்றத்தில் முன்பு ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு கேலி பேசிய காங்கிரஸ் நண்பர்களும் இப்போது இதை மிகத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார்கள்; மிக அவசியம் செய்யவேண்டியது என வலியுறுத்தினார்கள். அதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன்.”
(தமிழகச் சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, முதன்முதலாக விருதுநகரில் 6.12.87 அன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திருமணத்தை நடத்திவைத்து ஆற்றிய உரை)

பொதுத் தொண்டினை ஓர் கலையாகவே மாற்றிவிட்டார் பெரியார்:
“... பெரியார் அவர்கள் சொன்னார்கள் ‘நான் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பாதீர்கள்; உங்கள் அறிவைக்கொண்டு சிந்தித்து உங்களுக்குச் சரியென்று பட்டதை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார்கள். ஏன் அப்படிச் சொன்னாரென்றால், சிந்திக்க ஆரம்பித்தா“ல அதில் எதுவும் சிறு தவறுகூட இருக்காது. அவர் சொன்னவையெல்லாம் உண்மை என்பது நன்றாகவே தெரியும். அதைக் கண்டுபிடிப்பதில் சிந“திப்பவனுக்குத் தைரியம் தானாகவே வந்துவிடும். அப்படிப்பட்ட பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பிவருகிற பெரியார் அவர்கள் பல ஆண்டுகாலமாக எடுத்துச் சொல்லியும், இன்னமும் மக்கள் திருந்தாமலிருக்கிறார்களே என்ற கவலையால் கடுமையாக நம் இழிநிலையைச் சுட்டிக்காட்டுகிறார். பெரியார் அவர்கள் காலத்தில் அவரது கண்களுக்குத் தெரியுமாறு நாட்டில் இன்று பல சீர்திருத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன.

பெரியார் அவர்கள் தனது தொண்டின்மூலம் பொதுத் தொண்டினை ஒரு கலையாகவே மாற்றியுள்ளார்கள். ரயில் புறப்படுகிற நேரத்தில் ரயிலில் போகவேண்டியவன் காப்பியை அருந்திக்கொண்டு மிக சாவகாசமாக இருந்தால் பெரியவர்கள், நாலுவார்த்தை திட்டி, காப்பி பிறகு குடிக்கலாம்; வண்டி போய்விடும்; வண்டியிலேறு என்பதுபோல, “உலகம் இவ்வளவு முன்னேறியிருக்கிறது; நீ இன்னும் இப்படி இருக்கிறாயே?” என்ற கவலையால், கடினமாகவும், வேகமாகவும் வலியுறுத்தி நமக்குப் பகுத்தறிவைப் புகட்டுகின்றார்.

பெரியாரின் முதல்கவலை நம் சமுதாயத்தைப் பற்றியதே:
எனக்கு நன்றாகத் தெரியும்; அவருக்குள்ள கவலை; ‘இத்தனை ஆண்டுகள் பாடுபட்டும் இந்தச் சமுதாயம் இன்னும் இப்படியே இருக்கிறதே; இதை எப்படி முன்னுக்குக் கொண்டுவருவது? உலகமக்களோடு சமமாக்குவது?’ என்கின்ற கவலை அவருக்கு நிறைய இருக்கிறது. பெரியார் அவர்கள் நினைப்பது போலில்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இன்று மாறுதல் ஏற்பட்டுத்தான் இருக்கிறது.

வேகமான மாற்றம் தேவை:
இன்றைக்குச் சமூகம் பெருமளவுக்குத் திருந்தி இருப்பதை உணருவார்கள். 30,35 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி மன்றங்களில், தாங்கள் சைவர்கள், தாங்கள் வைணவர்கள் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக தங்களின் நெற்றியிலே பூச்சும் நாமமுமாகத் தான் எல்லோரும் வந்திருப்பார்கள். இன்றைக்கு 100க்கு 5 பேர் நெற்றியில் கூட குறிகள் காண்பது அரிது. அதுவும் வியர்வையினால் பாதி மறைந்தும் மறையாமலும் இருக்கிறது. இப்படிச் சமுதாயமானது வைதீகக்கட்டுக் குலைந்து கொண்டிருக்கிறது. பெரியாருக்கிருக்கிற கவலை இன்னும் வேகமாக மாறவேண்டும்; ஒரேயடியாக மாறவேண்டுமென்பதே! இந்தச் சமுதாயம் இன்னும் வேகமாக நடக்கவேண்டும்; முன்னேற்றமடைய வேண்டும் என்பதேயாகும்.

முதன்முதல் பெரியார் பேச்சைக் கேட்ட நான்...

பெரியார் அவர்களின் கருத்துக்களை நான் முதன்முதல் 40 வருடங்களுக்கு முன் கேட்க நேர்ந்தபோது, என்ன இவர், இப்படிப் பச்சையாகப் பேசுகிறாரே’ என்று நினைத்தேன். பின் அவரது கருத்துக்களைச் சிந்தித்து, அவரோடு தொண்டாற்றத் தொடங்கிய பிறகு அவர் பேசும்போது அதை விட்டுவிட்டாரே இதை விட்டுவிட்டாரே என்ற உணர்வு ஏற்பட்டது. அப்படித் தான் எல்லோருக்கும் முதலில் கசப்பாகத் தோன்றும்; சிந்தித்தால்தான் உண“மையை உணர முடியும். நான் பொறுப்பேற்றுள்ள தமிழ் நாட்டரசு மக்களிடையே பரவியிருக்கும் மூடப்பழக்க வழக்கங்களை நீக்கப் பாடுபடும். நாம் மட்டுமல்லாமல், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள், ஒன்றிப்புக்கள் பகுத்தறிவு வளர்வதற்குப் பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அவைகள் கண“காட்சிகள் நடத்த வேண்டும். கண்காட்சியில் கடைத்தெருக் கடைகளை ஒரு பந்தலில் கொண்டு வந்து வைப்பதாக இருக்கக்கூடாது. உலகின் முன்னேற்றத்தையொட்டி கல்வி போக்குவரத்து ஒழுக்கத்துறை முன் நம்பிய கடவுள், இப்போது எப்படி அக்கடவுள்களை மக்கள் விட்டார்கள் என்பனவற்றை விளக்கக்கூடியதாக அமைய வேண்டும். பெரியார்’ அவர்கள் சுட்டிக்காட்டியதை கவனத்தில் கொண்டு நகராட்சியினர் தங்களால் இயன்ற அளவு தொண்டு வேண்டுகின்றேன்.”
(திருப்பத்தூர் நகராட்சி மன்றத்தின் 80வது ஆண்டு நிறைவு விழாவில் 13.12.67 அன்று கலந்துகொண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

தமிழர் வாழ்வினை உயர்த்திய பேராசிரியர் பெரியார்!

“...பெரியார் அவர்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் சிறந்த கல்வி பெறவேண்டும்; அதுவும் பகுத்தறிவு கல்வியாக இருக்கவேண்டும்; அதற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துச் சொல்லவேண்டும். இதை அரை நூற்றாண்டாக எடுத்துச் சொல்லி வருபவர் பெரியாரவர்கள் ஆவார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், என் ‘திராவிட நாடு’ பத்திரிகையில் ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல நாட்டுக் கவிஞர்கள், பல நாட்டுப் பேராசிரியர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘நமது தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார்’ என்று எழுதியிருக்கின்றேன“. அவர் சமுதாயத்தில் செய்த தொண்டு மிக அதிகம். அவரது கருத்துக்களை, கொள்கைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மனவளம் பெறவில்லை. நிலத்தினுடைய வளத்திற்குத் தக்கபடிதான் பயிர் வளர முடியும்; அதுபோல, மனவளம் பெற்றவர்கால்தான் பெரியாரின் கருத்துக்களை ஏற்க முடியும். ஆனால், அவரது தொண்டு வீண் போகவில்லை. பெரியார் அவர்களின“ 30,40 ஆண்டு தொண்டுகளுக்குப் பிறகு, புதிதாகக் கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை? பள்ளிகள் எத்தனை? என்ற கணக்கில் பார்த்தால்; தமிழகத்தில் அறிவுப் புரட்சி நடைபெற்றிருப்பதும், வெற்றி பெற்றிருப்பதும் தெரியும். பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பிரசாரத்தின் வலிமை எவ்வளவு என்பதும் தெரியும். அவர் பிரசாரத்தைத் துவங்கிய காலத்தில் பல வகுப்பார் படிப்பதற்கே அருகதையில்லாதவர்களென்று ஏட்டிலே எழுதிவைக்கப்பட்டது மட்டுமல்ல, நாட்டிலே சொல்லப்பட்டும் வந்தது, அந்த வகுப்பாரேகூட நம்பினார்கள் நமக்குப் படிப்பு வராது என்று! நாம் எதற்காகப் படிக்க வேண்டுமென்று அவர்கள் தெரியாமல் தடுமாறினார்கள். நான் கல்லூரியில் பொருளாதார ‘ஆனர்சு’ வகுப்பை எடுக்கச் சென்றபோது, அங்கு ஆசிரியராக இருந்த ஒரு பார்ப்பனர் ‘இந்தப் பொருளாதாரப் பாடம் உனக்கு வருமா? உனக்கேன் இது? வேறு ஏதாவது எடுத்துக்கொள்!’ என்று கூறி, என் ஆர்வத்தைக் குறைக்கப் பார்த்தார். நான் பொருளாதாரத்தையே எடுத்துச் சிறந்த முறையில் தேர்வும் பெற்றேன்.

நான் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அது எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

நமது இன மாணவர்கள் திறமைக்கோர் எடுத்துக்காட்டு:

நம் மாணவர்கள் ஒன்றும் அறிவில் குறைந்தவர்கள் அல்லர். அவர்களுக்குத் தகுந்த ஊக்கமும், வாய்ப்பும் கொடுத்தால், முற்போக்குச் சமுதாயத்தோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்து விடுவார்கள். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் ஆயிரமாயிரம் மேடைகளிலே பேசியுள்ளேன். அதற்குமுன், தமிழகத்தில் தலைசிறந்த வக்கீல்கள் யார் என்றால், ஒரு அல்லாடி கிருஷ்ணசாமி; தலைசிறந்த டாக்டர் யார் என்றால், ஒரு ரங்காச்சாரி; ஒரு சிறந்த நீதிபதி யார் என்றால், முத்துச்சாமி அய்யர்; சிறந்த நிர்வாகி யார் என்றால், கோபால்சாமி அய்யங்கார். இப்படித்தான் சொல்லக்கூடிய நிலையில் தமிழகம் இருக்கிறது என்று சொல்லி வந்தேன். இன்றைய தினம் எந்தத் துறையில் எடுத்துக்கொண்டாலும் இதுவரையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இருந்தவர்கள் முதல்தரமான வக்கீல், தலைசிறந்த மருத்துவர் என்று இப்படித்தான் இருக்கிறார்கள். சர்.ஏ.ராமசாமி முதலியார் அரசியலில் இருந்து விரட்டப்பட்டார் என்றாலும் அய்தராபாத் சம்பந“தமாக ஏற்பட்ட ஒரு விவகாரத்தினைத் தீர்ப்பதற்கு அய்நா.வில் பேச, அவரை நேரு விரும்பி வேண்டிக்கொண்டார் என்றால், அவர் திறமையைக் கருதியே அல்லவா? சர்.ஏ.ராமசாமி அய்.நா. சென்று வந்ததுமட்டுமல்ல; வென்றும் வந்தார். இப்படி நம்மிலே பல அறிஞர்கள், படித்தவர்கள் இருக்கிறார்கள். பிற்பட்ட இனம் என்று தவறான காரணங்களைக் காட்டி, அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் இன்று உயர்பதவிகளில், உத்யோகங்களில் நல்ல செல்வாக்கோடு இருக்கின்றனர். இந்த அளவு அதிகப்பட வேண்டும். ஆகவே, இத்தகைய வளர்ச்சி பெரியார் அவர்களின் அரை நூற்றாண்டு இடைவிடாத் தொண்டினால் ஏற்பட்டது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

சமுதாய புரட்சியே பெரியாரின் முக்கிய பணி:
பெரியார் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிற பணி சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சிகரப் பணியாகும். அரசாங்கத்தால் மட்டுமே ஒரு சமுதாயத்தை அடியோடு மாற்றியமைத்துவிட முடியாது. அரசாங்கத்திற்கு அந்த வலிமை இல்லை. என்னிடம் ஒரு அரசு அளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அது ஒரு பெரிய சர்க்காருக்குக் கட்டுப்பட்டுக் காரியமாற்ற வேண்டிய ஒன்றே தவிர, தன்னிச்சையாக காரியமாற்ற முடியாது. இதனைப் பெரியாரவர்கள் நன்கு அறிவார்கள். உலகத்திலே எந்த நாட்டிலேயும் சர்க்காரால் சாதித்ததைவிட, தனிப்பட்ட சீர்திருத்தவாதிகளாலேயே சமூகம் திருத்தப்பட்டிருக்கிறது.

பெரியார் அறிவுரைதான் சமூகத்தை முன்னேற்றுகிறது:
பெரியார் அவர்கள் தரும் பெரும் பேருரைகளால், அவருடைய சலியாத உழைப்பினால், அவர் தந்துள்ள பகுத்தறிவு கருத்துக்களினால்தான் இன்றைய தினம் நம் சமூகம் மிக நல்ல அளவிலே முன்னேறிக்கொண்டு வருகிறது. அவருக்குத் திருப்தி ஏற்படுகிற வகையிலே இல்லாமலிருந்தாலும், என்னைப் போன்றவர்கள் இந்த அளவுக்குக்கூட மாறுவார்களா என்று எண்ணிப் பார்க்காத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முதியோரின் மூடச்செயல்:
ஒருமுறை பெரியாரும் நானும் ஈரோட்டிக்குப் பக்கத்தில் ஈங்கூர் என்னும் கிராமத்தில் சுய மரியாதைப் பிரசாரத்திற்காகச் சென்றோம். அந்த ஊரில் இருந்த பெரிய மனிதர் ஒருவர், நாங்கள் பேசிய இடத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, அந்த ஊரில் உள்ள மற்றவர்களைவிட்டு, நாங்கள் பேசிக் கொண்டிருக்கிற இடத்தில் காற்றடிக்கும் பக்கம் பார்த்துச் சாம்பலைத் தூவிக் கொண்டேயிருக்கச் சொன்னார்; பெரியாரும் பேசிக்கொண்டே யிருந்தார். நான் பேசும்போது குறிப்பிட்டேன், ‘சாம்பலைத் தூவிக்கொண்டேயிருக்கிறீர்கள்; அது பெரியாரை என்ன செய்யும்? தாடியிலே படலாம், அது ஏற்கனவே வெள்ளை... அதனால் எந்தக் கெடுதலும் வராது’ என்று பேசினேன்.

இப்போது பெரியார் பேசும் பேச்சுக்களைக் கேட்டால் ஒருகணம் மயக்கம் வருகிறது. அடுத்து ஒருவரையொருவர் சந்தித்துப் பேசும்போது நியாயம்தான், தேவைதான் என்ற எண்ணம்தான் வருகிறதே தவிர, அதைக் கேட்ட உடனே பதறிய காலம்; பகைத்து எழுந்த காலம்; ‘இவர்களைப் படுகொலை செய்து விடலாம்’ என்று பேசிக்கொண்டிருந்த காலம்; இந்தக் காலங்கள் எல்லாம் அந்தக் காலங்களாகிவிட்டன. இப்போதிருக்கும் காலம் மிகப் பக்குவம் நிறைந்த காலம். பெரியார் அவர்களின் கருத்துக்களைச் சட்டமூலம் செயல்படுத்த, இந்த சர்க்காரின் அதிகார எல்லைக்குட்பட்டு என்னென்ன செய்ய முடியுமோ அவைகளைச் செய்ய, எப்போதும் தயாராக இருக்கிறேன்.

பெரியாரவர்கள் கருத்துக்களைச் செயலாக்க நான் தயார்:
பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்லுகிற கருத்துக்களையும், கொள்கைகளையும் பரப்புவதற்கு, செயலாக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன் சர்க்காரிலே இருந்துகொண்டு ஏதோ சில காரியங்களைச் செய்யவா? அல்லது விட்டுவிட்டு உங்களிடம் வந்து, தமிழகத்திலே இதே பேச்சை பேசிக்கொண்டு உங்களோடு இருக்கவா? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை பெரியாரவர் களுக்கே விட்டுவிடுகின்றேன். அவர் என்னோடு வந்து, ‘பணியாற்று’ என்றால்-அதற்குத் தயாராக இருக்கின்றேன்.

சமுதாயப் பணிக்குப் பெரியாரைத் தவிர வேறு ஆளே இல்லை:
கோலாரிலே தங்கம் கிடைக்கிறது என்றால், பூமியை வெட்டியவுடன் அது பாளம் பாளமாகக் கிடைப்பதில்லை. கல்லை வெட்டி, அதைக் கரைத்து அறைத்துக் காய்ச்சிய பின்தான் மின்னும்தங்கத்தை எடுக்கின்றனர். அவ்வளவு கஷ்டப்பட வேண்டி யிருக்கிறது. அதுபோன்றுதான் சமுதாய சீர்திருத்தப் பணியாகும். பெரியார் அவர்களுக்கு நாம் தந்துள்ள சமுதாய சீர்திருத்த வேலை, அவர் இறுதி மூச்சுள்ளவரை செய்து தீரவேண்டிய வேலை. ஏனென்றால், அந்தப் பணியைச் செய்வதற்கு அவரைத் தவிர வேறு ஆள் இல்லை. நேற்று இருந்ததில்லை; நாளைக்கு வருவார்களா என்பதும் அய்யப்பாட்டிற்குரியது. பெரியார் அவர்கள் செய்யும் வேலையில் மனநிம்மதியோடு இருக்கலாம். தமிழகம் இன்று எந்தப் புதுக்கருத்தையும் ஏற்றுக்கொள்வதற்கும், தாங்கிக் கொள்வதற்கும் தயாராக இருக்கிறது. அது செயல் வடிவத்திலே வருவதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அவரது கருத்துக்களும், கொள்கைகளும் இன்னும் முற்றும் செயல்படவில்லை; அது செயல் வடிவத்திற்கு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால், அது செயல்பட்டே தீரும் பெரியாரவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பணி மிகச் சிறந்த பணி; நம் நாட்டிற்கு மிகத் தேவையான பணி! அதனை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் பெரியாரவர்களுக்கே உண்டு. ஆனாலும், அவருக்கு ஓய்வு கொடுத்து அவரது வேலையை நாம் மேற்கொள்ள வேண்டும்.

பகுத்தறிவை வளர்க்கும் படிப்பே தேவை:
பள்ளிக்கூட ஆசிரியர்கள் பகுத்தறிவோடு சொல்லிக் கொடுப்பார்களேயானால், இன்னும் பத்து ஆண்டுகாலத்தில் நமது மாணவர்கள் மற்ற உலக மாணவர்களோடு போட்டி போடக் கூடிய அறிவில் முன்நிற்கக் கூடிய அளவில் செய்துவிட முடியும். நமது பள்ளிகளில், கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப்படுகிற கல்வி, அவன் கல்லூரியைவிட்டு வெளியேறும்போது வெறும் எழுத்தறிவுக்குப் பயன்படுகிறதே தவிர, பகுத்தறிவுத் துறைக்குப் பயன்படக் கூடியதாக இல்லை. இப்போது நாட்டிலிருக்கின்ற கல்வித் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். அதுபற்றி கல்வி நிபுணர்களோடு கலந்து ஆலோசித்துப் புதுக்கல்வித் திட்டம் வகுக்க வேண்டும்.

பெரியாரால் கிடைத்த முதல் வரவேற்பு:
இன“று பெரியாரவர்கள் எனக்குப் பொன்னாடை போர்த்தினார்கள், உண்மையாகவே இது எனக்குப் பெருமைதான். இதைவிட நான் பெருமையாகக் கருதுவது, பெரியாரவர்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ என்னவோ; எனக்கு ஈரோட்டில், முதன்முதலில் நகராட்சியில் வரவேற்புக் கொடுக்கச் செய்து சால்வை போர்த்தினார்கள்; அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது எனக்கு முதன்முதல் வரவேற்பு என்பதே ஈரோட்டில் நகராட்சியால் கொடுக்கப்பட்டதுதான். அதன்பின், இப்போது நிறைய வரவேற்புக் கொடுக்கிறார்கள் என்றால், அவை எனக்காக அல்ல, பதவிக்காகக் கொடுக்கப்படுவதேயாகும். பெரியாரவர்கள் இடையிலே சில ஆண்டுகள் எனக்குக் கொடுக்கவேண்டிய பரிசுகளையெல்லாம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்.

பெரியாரின் கட்டளைப்படியே நான் நடப்பேன்:
இன“றுமுதல் பெரியார் இருக்கிற இடத்தில் நானிருப்பேன்; நானிருக்கிற இடத்தில் அவருடைய கருத்திருக்கும். எனவே, இனிமேலும், பெரியாரும் அண்ணாதுரையும் ஒன்றுசேர்ந்து விட்டார்கள் என்று சொல்வது அரசியல் உலகத்தில் யாரோ சிலருக்கு ஒருவித சந்தேகத்தை உண்டாக்கி, அவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து விட்டார்களாமே என்கிற கலவரத்தையும் உண்டாக்கக் கூடுமாதலால், இனி அப்படிக் கூற வேண்டாமென நண்பர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

பெரியாரை நாம் கஷ்டப்படுத்திவிட்டோம்:
நாம், பெரியாரை வெகுவாகக் கஷ்டப்டுத்தி விட்டிருக்கிறோம். அவர் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டு கட்டளையிட வேண்டிய வயது அவரது தொண்டினை நாம் மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு ஏற்படவில்லை. ஆளதனாலே நாம் அவருக்குக் காட்டவேண்டிய நன்றியைக் காட்டக் கடமைப்பட்டவராவோம். நன்றியைக் காட்டிக் கொள்வதில் நான் முதல்வனாக இருப்பேன் என்பதையும் இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.”
(19.12.67 அன்று நாகரசம்பட்டியில், புதிதாகக் கட்டப்பெற்ற ‘பெரியார் ராமசாமி கல்வி நிலையத்’த் தினைத் திறந்துவைத்து ஆற்றிய உரையின் ஒருபகுதி)

தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பண்பு:
“நான் பெரியாரவர்களுடன் வடநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் நம் மக்களைவிட மூட நம்பிக்கையுள்ளவர்கள். பெரியாரவர்களின“ தோற்றத்தைக் கண்டு, அவர் தென்னாட்டிலிருந்து வந்திருக்கும் பெரிய சாமியார் என்றும், நான் அவரது சிஷ்யன் என்றும் கருதிவிட்டார்கள். அப்படி நினைத்துத்தான், ஆரியதர்மத்தை வளர்ப்பதற்காகவென்றே செயல்பட்டவரான சிரத்தானந்தா கல்லூரியின் தலைவர், பெரியார் அவர்களைப் பார்த்துத் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குத் தாங்கள் வந்து அறிவுரை கூறவேண்டுமென்று கேட்டார். அவரும் ஒத்துக்கொண்டார். தான் எதைச் சொல்லுகிறாரோ அதை மற்றவர்கள் உடனடியாகக் கடைப்பிடிக்க வேண்டும்; அதன்படி நடக்கவேண்டும் என்று கருதுபவர் அல்ல பெரியார். பிறர் கடைப்பிடிக்கும் மார்க்கத்தில் சென்று, அவர்கள் மனம் புண்படாமல் அதனை எடுத்துக் கூறுவதுதான் அவர் பண்பு.

வடநாட்டு மாணவர்களைக் கவர்ந்த பெரியார்:
சிரத்தானந்தா கல்லூரிக்குச் செல்லவேண்டுமென்றதுமே எனக்குச் சற்றுப் பயமாகத்தான் இருந்தது. அங்கு போய் நமது கருத்தைச் சொன்னால், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ என்று பயந்தேன்; என்றாலும் துணிந்து பெரியாரவர்கள் பின்சென்றேன். கல்லூரிக்குள் நுழையும்போதே அங்கிருந்த மாணவர்கள், தங்கள் வழக்கப்படி என் முகத்திலும், அவர் முகத்திலும் சந்தனத்தை அள்ளிப் பூசினார்கள். எனக்குச் சங்கடமாக இருந்தது. என் நிலையினைக் கண்ட பெரியார் நான் எங்குத் தவறாக நடந்துகொண்டு விடுவேனோ என்று தொடையைக் கிள்ளி ஜாடை காட்டினார். அதன்பின் நானும் சற்று அமைதியடைந்து பொறுமையாக இருந்தேன். பின் பெரியார் அவர்கள் பேச ஆரம்பித்து, ஒவ்வொரு சங்கதியாக எடுத்து விளக்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற கருத்தை அவர்கள் அதுவரை கேட்டதே இல்லை. அப்போதுதான் அவர்கள் புதுமையாகக் கேட்கின்றனர். இராமாயணத்தைப் பற்றி அவர் விளக்கியதைக் கேட்கக் கேட்க, சற்றுத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. கூட்டம் முடிந்ததும் அம்மாணவர்கள் ‘ராவணாக்கி ஜே!’ என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டனர். அது போன்று இருக்கின்ற உண்மையினை எடுத்துக்கூறினால், மக்கள் ஒத்துக்கொள்ளாமல் போகமாட்டார்கள். அவர்களை விட நம் மக்கள் தெளிவு பெற்றவர்களாவார்கள்.

பெரியார் பணியை எல்லோரும் மேற்கொள்ள வேண்டும்:
நம் நாட்டில் உத்தியோகத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற பெரும் புலவர்கள், படித்துப் பட்டம் பெற்றவர்கள், மேதாவிகள் என்பவர்கள் முன்வந்து தங்களுக்கு உண்மையென்று தோன்றி யதைத் தாங்கள் பதவியிலிருக்கும்போது சொல்லப் பயந்ததைத் துணிந்து எடுத்துச் சொல்லவேண்டும். பெரியாரவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பணியினை மேற்கொண்டு தொண்டாற்ற முன்வரவேண்டும். நமது பெரியவர்கள் எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற எண்ணத்தை விட்டுப் பொதுத் தொண்டு செய்ய முன்வரவேண்டும்.

கல்வி முறையை மாற்றியாக வேண்டும்:
நமது பள்ளிக்கூடங்களில் கங்கை எங்கே உற்பத்தியாகிறது என்பதை பூகோள வகுப்பில் சொல்லிக் கொடுக்கும்போது, ‘அது ஹரித்துவாரிலே உள்ள மலையில் உற்பத்தியாகி வருகிறது’ என்று பூகோள ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிறார். தமிழ் வகுப்பில் சொல்லிக் கொடுக்கும்போது தமிழாசிரியர்கள், ‘கங்கை சிவபெருமானின் ஜடாமுடியில் உற்பத்தியாகிறது’ என்று சொல்லிக் கொடுக்கின்றனர். பரீட்சையில் மாணவன் தமிழ் வகுப்பில் சொல்லிக் கொடுத்ததைப் பூகோள பரீட்சையிலும், பூகோள வகுப்பில் சொல்லிக் கொடுத்ததைத் தமிழ்ப் பரீட்சையிலும் எழுதினால், அவனுக்கு என்ன கிடைக்கும்? அவன்மேல் தவறு இல்லை என்றாலும் அவனுக்கு மார்க்குக் கிடைப்பதில்லை. இதுபோன்ற மாறுபாடான கல்வி முறையானது மாற்றியமைக்கப் பட வேண்டும். உண்மையான அறிவை மாணவர்கள் பெற வழி வகுக்கப்படவேண்டும். அத்தகையதான அறிவுப் புரட்சியினைச் செய்ய நாம் தயாராக இருந்தாலும் மக்கள் அதற்குத் தயாரான நிலையில் இல்லை. அதற்குப் பெரியாரவர்கள் தொண்டும் பிரசாரமும் மிகவும் தேவையாகும்.”
(மத்தூர், ‘அரசினர் உயர்நிலைப் பள்ளி’ கட்டிடத் திறப்பு விழாவில் 19.12.67 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

சமூக நீதியின் இருப்பிடம் பெரியார்!
“சமூக நீதியற்ற தன்மைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட மக்களுக்காகத் தமிழ் நாட்டில் போராட்டத்தை நடத்தியவர் பெரியார் (ராமசாமி) அவர்களே. அதேபோன்று தெனாலியில் முதலில் குரலெழுப்பியவர் ராமசாமி சவுதரி என்பவராவார். இந்த இரு பெரும் சமூகச் சீர்திருத்தத் தலைவர்களுக்கும் ஒரே பெயர் பொருந்தியிருப்பது வியப்புக்குரிய தாகவிருக்கிறது. கடவுளின் அவதாரமென்று கூறப்படுகிற ராமசாமியையும் அதையொட்டிய கருத்துக்களையும் நிறுவனங்களையும் எதிர்த்து-ராமசாமி என்ற அதே பெயருள்ள இரு பெரியார்களும் கண்டன மாரிகளைப் பொழியும் பிரசாரங்களைச் செய்யும் தகுதி பெற்றவர்களாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் நாங்கள் இந்தப் பிடிவாதமான மக்களை எங்களுடைய கருத்துக்களுக்கு ஏற்ப வளைத்துக் கொண்டு வருவதற்கு இருபதாண்டு காலமாக விவாதித்து வந்திருக்கிறோம்; இறுதியாக நாங்கள் வெற்றிபெற்றோம். பூமியிலுள்ள தீமையை ஒழிக்கக் கடவுள் 10 அவதாரங்களுக்குக் குறையாமல் எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் தீமைகள் முழுவதும் ஒழிந்த பாடில்லையே. மனிதர்களாகிய நமக்குத் தான் தீமைகள் எதிராகப் போரிட்டு, அதை வேரோடு ஒழித்துக்கட்டும் மிக உயர்ந்த கடமை ஏற்பட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதைக்காரர்களாகிய எங்களில் சிலர் சுயமரியாதைத் திருமணம் என்ற சீர்திருத்தத் திருமணங்களை நடத்த, போலீஸ் உதவியை நாட வேண்டியதா யிருந்தது. அந்தத் திருமணங்கள் குருக்கள் இல்லாமலும், மந்திரங்கள் சொல்லப்படாமலும், ஓமத்தீ இல்லாமலும் நடத்தப்படும் திருமணங்களாகும்.

சுயமரியாதை திருமணத்தின் நெடுங்கதை பாரீர்:

ஒரு கிராமத்தில் பெரியார் (ராமசாமி) அவர்களும், நானும் ஒரு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கச் சென்றபோது, போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி சொல்லி அனுப்பினார். நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றபோது, எங்களைக் கைது செய்யவோ, காவலில் வைக்கவோ அழைக்கவில்லையென்றும், சனாதனிகளால் தொல்லை நேராது எங்களைப் பாதுகாக்கவே அழைத்ததாகவும் அந்தப் போலீஸ் அதிகாரி கூறினார். ஆனால், இன்றோ தமிழ் நாடெங்கும் அத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அவைகள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாக மசோதா வொன்று நான் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டேன்.”

(ஆந்திராவிலுள்ள தெனாலியில் கவிராசு ராமசாமி சவுதரி-ஆவுல கோபாலகிருஷ்ணமூர்த்தி “பவ விகாச கேந்திர” த்தை 29-1-68 அன்று திறந்துவைத்து ஆற்றிய உரையின் ஒரு பகுதி)