அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தமிழரின் மறுமலர்ச்சி!
2

எழுச்சி தோன்றியது
ஜெர்மன் நாட்டு மாக்கஸ் முல்லர், ஆரியவர்த்தம் ஆரியமொழி, ஆரிய நாகரிகம் ஆரிய மதம் என்பவைகளையே ஐரோப்பியருக்கு எடுத்துக் கூறினார். தமிழர் என்ற உணர்ச்சி மங்கிற்று. ஆரியரின் பிரசாரம் ஆங்கில நாட்டவரையும் மயக்கிற்று. விபசாரியிடம் சிக்கி வீட்டிலுள்ளோரை இழிவுப்படுத்தி விட்டு பொருளைப் பாழாக்கும் காமாந்தகாரனின் கதைபோல, ஆரியரிடம் மயங்கிய ஆங்கிலேயன் நாட்டுக்குடையவர்களாகிய நம்மவரைப் புறக்கடையில் நிறுத்திவிட்டு ஆட்சிபீடத்திலே ஆரியரை சர்வாதிகாரியாக்கினர். தமிழர் தத்தளித்தனர். அந்தத் தத்தளிப்பு தன்னுணர்வைத் தந்தது. தன்னைத்தான் அறியத் தொடங்கிய பிறகு, தமிழன் தான் இழந்தவைகளைத் தேடத் தொடங்கினான். தேடிக்கொண்டும் இருக்கிறான். தமது அழிவுக்குக் காரணம் என்ன என்று கண்டுபிடித்தான். அதனைக் களைய முற்படுகிறான். தூங்கியவன் விழித்ததுபோல் இன்று தமிழரிடை ஒரு எழுச்சி உண்டாகியிருக்கிறது. இந்த மறுமலர்ச்சியைப் பல்வேறு துறைகளில் காண்கிறோம். தமிழ்மொழி துவங்கி, தமிழ்நாடு என்ற எண்ணம் வரை இந்த மறுமலர்ச்சி இருக்கிறது.

வழி தவறி அலைந்தவன், நேர் வழி தெரிந்து நடக்க ஆரம்பிக்கும்போது, செந்நாய் சீறினாலும், சிறுத்தை உறுமினாலும், சிந்தை கலங்கத் தேவையில்லை. நமது பாதையை நாம் விட்டு அகலோம் என்றே உறுதி கொள்ள வேண்டும். மனம் இருக்க மார்க்கம் இல்லாது போகுமா?

மறுமலர்ச்சி
இத்தகைய மறுமலர்ச்சி, இன எழுச்சி-இயல்பு. இதுபோல் பல்வேறு நாடுகளில், நடந்துள்ளன. ஆனால் இங்கு இருப்பது போன்ற எதிர்ப்பு அங்கு இருந்ததில்லை.

15,16 வது நூற்றாண்டுகளில், ஐரோப்பாவிலே, பல்வேறு நாடுகளிலே, இத்தகைய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அந்தக் காலத்திலே விளைந்த பலன்களே அந்நாடுகளை மேன்மைப்படுத்தின.

பிரிட்டனிலே டியூடர் மன்னர் காலத்திலே, மறுமலர்ச்சி ஏற்பட்டது. மதத்துறையிலே சீர்திருத்தம், மக்கள் மன்றத் துறையிலே மாறுதல்கள், கலையிலே ஓர் புதுமை தோன்றிற்று. சிறந்த இலக்கியங்கள் வெளிவந்தன. தன்னாட்டுணர்ச்சி, தன் மொழிப்பற்று, தன்மானம் ஆகியவைகள் தாண்டவமாடின. பின்னரே பிரிட்டன் பலமுள்ளதாயிற்று. பிரிட்டனிலே, கவிகள், எழுந்தோவியங்களை ஏற்படுத்திக் கொண்ட நேரத்திலேதான், பிரிட்டீஷ் கப்பல்கள், திரைகடல்களைக் கடந்து சென்றன. மக்கள் தீரச் செயல்கள் புரிந்தனர். பழங்காலம் என்பது எல்லாத் துறைகளிலும் மடிந்தது. எழுதுவது புது முறையில், பேசுவது புதுவிதமாக இலக்கியம் புதுவிதமானது, என்ற நிலைமை ஏற்பட்டது.

எதிர்ப்பு மடியும்
ஐரோப்பாக் கண்டத்திலே, அறிவுலகமும் வீரர் உலகமும் அமளியில் ஈடுபடும் விதமான, புரட்சிக்குக் காரணமாக இருந்த வால்டேர், ரூசோ, மார்ட்டின் லூதர் போன்றவர்கள் இத்தகைய மறுமலர்ச்சித் தோட்டத்தில் உழவர்கள்! அவர்களுக்கும் அவர்கள் புகுத்திய எண்ணங்களுக்கும் எதிர்ப்பு இருந்தது! இறந்தது!! இங்கும் இன்று மறுமலர்ச்சி காண்கிறோம். அந்த எதிர்ப்பு இறுதியில் மடியத்தான் போகிறது. கடல் அலையை, கைத்தடி கொண்டு அடிக்க முயலுவோனின் கை சலிக்குமேயொழிய, அலை சலிக்காது.

ஆனால், மற்றைய நாடுகளிலே நடந்ததற்கும் இங்கு நடப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு, அங்கெல்லாம் மறுமலர்ச்சியை எதிர்த்தவர்கள், வெறும் பழமை விரும்பிகள். இங்கு எதிர்ப்பவர்கள், பழமை விரும்பிகள் மட்டுமல்ல; இன்று இருக்கும் முறையினால், ஆதிக்கம் செலுத்தி வாழும் கூட்டத்தினர். மறுமலர்ச்சி, பழமையையும் பாழாக்குமோ என்பது அல்ல அவர்களின் பயம். நமது ஆதிக்கம் போய்விடுமே என்பதே அவர்களின் திகில். எனவேதான் இங்கு, எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. இந்தக் கடுமையைப் பொருட்படுத்தாமல், புதிய எழுச்சிக்காகப் போரிடும் முன்னணிப் படையினர், தேசத்துரோகி, வகுப்புவாதி என்று ஏசப்பட்டுத் தூற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் அந்த முன்னணிப் படை போட்டு வைக்கப்போகும் பாதையிலே பட்டாளங்கள் பலப்பல பிறகு நடக்கும். மக்கள் மகிழ்ச்சியோடு அந்தப் பாதையிலே நடந்து, புதூர் சென்று வாழ்வார் என்பது திண்ணம்.

தமிழரின் மறுமலர்ச்சியே. தமிழில் ஏன் பிறமொழி கலக்க வேண“டும்? என்று கேட்கச் சொல்கிறது.

தமிழரின் மறுமலர்ச்சியே, தமிழகத்திலே இந்தி கட்டாயப்பாடமா? என்று கிளர்ச்சி நடத்தச் சொல்லிற்று.

அந்த மறுமலர்ச்சியே மார்க்கத் துறையிலே, ஆரிய ஆபாசங்கள் கூடாது என்று தைரியமாக எடுத்துக் கூறச் சொல்லிற்று. சமுதாயத் துறையிலே நீ உயர்ந“தவன் நான் தாழ்ந்தவன் என்ற பேதம் கூடாது என்று கூறச்சொல்லிற்று.

கண்டனக் குரல்
இத்தகைய ஒவ்வொரு முயற்சிக்கும் ஆரியர்கள் கூடி தமிழரைக் கண்டிக்கின்றனர். தமிழ் இசைக்கு ஆதரவு தரவேண்டுமெனப்படும் முயற்சியைக் கண்டித்து, சின்னாட்களுக்கு முன்னம், சென்னை இரானடே மண்டபத்தில் ஆரியர்கள் பேசினர். அவர்கள் வெளியிட்ட கருத்து சங்கீதத்துக்கு நாதம்தான் பிரதானம். ஆகவே, எந்த மொழியில் சாஹித்தியம் இருக்கிறது என்பது பற்றிக் கவலை இல்லை. தெலுங்குக் கிருதிகள் இருப்பவை நல்லவை. தமிழ்ப்பாடல்களைத் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. தியாகய்யர் போலத் தமிழகத்திலே ஒருவர் தோன்றியதும், தமிழ்ப் பாடல்கள் உண்டாகும் என்பதாகும்.

இசையை, மக்கள் கேட்டு இன்புறவேண்டுமானால், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் சாஹித்தியம் இருந்தால் முடியுமே தவிர, சாஹித்தியம் வேறு மொழியிலே இருந்தால் முடியாது. நாதம் காதை கவரும், கருத்துக்கு என்ன அளிப்பது? தமிழனுக்குத் தமிழ்; தெலுங்கனுக்குத் தெலுங்கு; வடவருக்கு வடநாட்டு மொழியில், சாஹித்தியம் அமைத்தால்தான் அந்த இசையைக் கேட்டதும் அவர்கள் இன்புற முடியும்.

தெவிட்டாத விருந்து
இப்போது தமிழ் நாட்டிலே நடைபெறும் கச்சேரிகளில் தமிழ் இசை எவ்வளவு விரும்பப்பட்டு வருகிறது என்பதையும் நாம் விவரிக்கத் தேவையில்லை.

தோழர் தியாகராஜ பாகவதரின் பாடல்கள், இன்று தமிழருக்குத “தெவிட்டாத விருந்தாக இருக்கின்றன. அவருடைய குரல் அமைப்பு மட்டுமல்ல அதற்கு காரணம். அவர் தமிழ்ப் பாட்டுக்களைத் தெளிவாகக் கேட்கும்போதே, பொருட்சுவையை மக்கள் ரசிக்கும் விதத்திலே பாடுவதுதான் முக்கியமான காரணம். சங்கீத வித்துவான்கள் என்ற சன்னத்துக்கள் பெற்று விளங்குவதாகக் கூறப்படும் பேர்வழிகளிடம் உள்ள வித்தை, பாகவதரிடம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றியோ, ‘சுரம்’ போடுவதில் அவர் இன்னாரைவிடக் குறைந்த திறமை உள்ளவரா என்பது பற்றியோ, மக்கள் யோசிக்கவில்லை. அவசியமுமில்லை. பாகவதர் “மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை” என்று பாடினால் அது வீட்டிலே, வெளியிலே, இரவிலே, பகலிலே கிழவர் குழந்தை உள்பட, பாடும் பாட்டாகிவிடுகிறது. அழகும், அழுத்தத்திருத்தமும், பொருட்சுவையும் ததும்ப, “உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ” என்று பாகவதர் பாடினார். நாட்டினர் அதனைப் பாடுகின்றனர். காரணம் அவர் பாடுவது புரிகிறது. கேட்பவர் களிக்கின்றனர். அந்த இசை, கேட்போர் உள்ளத்திலே சென்று தங்குகிறது.

பூரிக்கின்றனர்
தோழியர் கே.பி.சுந்தராம்பாளின் இசைக்குத் தமிழர், தமது செவியையும், சிந்தனையையும் பரிசாக அளித்ததன் காரணமும் இதுவே. “செந்தூர் வேலாண்டி” என்று பொருள் விளங்கப் பாடும் போது, இன்ன விஷயமாகப் பாடப்படுகிறது என்று புரிந்து கொண்டு பூரிக்கின்றனர்.
இசை விருந்தை இன்று அளித்துக்கொண்டு வரும் தோழியர் எம்.எஸ்.சுப்புலட்சுமி தியாகராயர் கீர்த்தனங்களைப் பல வருடப் பாடமாக பழக்கத்துடன், பாடிக்கொண்டிருந்தபோது வித்துவான்களுக்கும் அறிமுகமாகி இருந்தாரேயொழிய, நாட்டு மக்களுக்கு அறிமுகமாகவில்லை. ஏன்? நாட்டினர் எம்.எஸ்.எஸ். பாடுவது பிரமாதமான வித்தை அடங்கிய பாட்டு என்று கேள்விப்பட்டார்களேயொழிய. அதன் சுவையை அனுபவிக்க முடியவில்லை. ஆனால், அதே எம்.எஸ்.எஸ். “மனங்குளிர” என்ற செந்தமிழ் இசையைப் பாடியதும், தமிழரின் மனமெல்லாம் குளிர்ந்தது. இசை நம்மை இழுத்து சகுந்தலை கண்ட சோலை, சாலை, பசு, மான், கன்று, குயில், மயில் ஆகியவற்றை நமது மனக்கண் முன் நிற்கும்படிச் செய்தது. இசை இன்பத்தை மக்கள் முழுவதும் அடைய முடிந்தது.

தமிழ் இசைக்கு ஆதரவு இருக்குமா என்று கேட்கும் பேர்வழிகள். இசையாக தண்டபாணி தேசிகரின் தமிழ் இசை, மக்களை எவ்வளவு உருக்குகிறது. பொருள் விளங்க உணர்ச்சி ததும்ப. அவர் நமது தமிழில் நம்மிடம் பாடுவதால், மக்கள் உருகுவது இருக்கட்டும். தேசிகரே உருகுவதைக காணலாம். தமிழ் இசை பாடும்போது!

மதுரை மாரியப்ப சுவாமிகள், சிதம்பரம் ஜெயராமன், திருவாரூர் நமச்சிவாயம் ஆகிய இசைமணிகளின் ஒலி. நமது தமிழாக இருப்பதால் நமது நெஞ்சை அள்ளுவதைக் கூறவேண்டுமா?

இயற்ற முடியாதா?
நம்மவரின் நெஞ்சில் நேராகச் சென்று இன்பத்தைத் தர, தமிழ் இசையினால் மட்டுமே முடியும். அத்தகைய தமிழ் இசையை வளர்க்க, பாடகர்களும், கழகங்களும் முற்படுகின்றனர். வெளிமொழிக் கீதங்கள் என்ற முறையில் இரண்டோர் கிருதிகள் பாடலாம். குற்றமில்லை; ஆனால் இசை என்றாலே அது தெலுங்கோ, இந்துஸ்தானியோதான் என்ற பொருள்படும்படி கச்சேரிகள் இருப்பதை இனித் தமிழர் வரவேற்க மாட்டார்கள்.

“ராகப் பிரதானமுள்ள கீர்த்தனங்கள்” தமிழிலே இல்லை. இனி ஏற்பட வேண்டும் என்று ‘மித்திரன்’ கூறுகிறது. ஆனால் இ“ன்றுள்ள இசை வல்லுநர்களால், இத்தகைய ராகப்பிரதானமுள்ள கீர்த்தனங்கள் இயற்ற முடியாது என்று மித்திரன் கூறத் துணிகிறதா என்று கேட்கிறோம். கர்நாடக சங்கீத வர்ணமெட்டுக்களை அனுசரித்துச் சில தமிழ்ப்பாட்டுக்கள் உள்ளன என்பதை ‘மித்திரன்’ ஒப்புக் கொள்கிறது. அவை போன்ற பாடல்கள் வளரவே அண்ணாமலை நகர் மாநாட்டினர் வழிவகை தேடினர்.

வாய்ப்பாட்டு ஏன்?
சங்கீதம் எந்தப் பாஷையாக இருந்தாலென்ன? என்று கூறுபவர்கள். ராக இலட்சணமே முக்கியம்! சாஹித்ய இலட்சணம் முக்கியமாகாது என்று கூறுபவர்கள், திருவாடுதுறை ராஜரத்தினம் அவர்களின் நாதஸ்வரமும், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் பிடிலும்இருக்க, வாய்ப்பாட்டு வேறு ஏன் தேடுகிறார்கள்? அந்த நாதஸ்வரத்தில், ராக இலட்சணங்கள், போதும் என்ற அளவுக்குக் கேட்கலாம்! ஜிலுஜிலுப்பு வேண்டுமா? கமகம் தேவையா? ஆலாபனத்தில் அலங்காரம் வேண்டுமா? எது நாதஸ்வரக்காரரால் முடியாது. தாள வரிசைகளிலே திறமைகள் கேட்க வேண்டுமா? பக்கத்திலே நிற்கும் தவுல்காரரைப் பார்த்தால் போதுமே! கோடை இடி கேட்கும்! சங்கீதம், வெறும் ராக இலட்சணம் நாதம் என்று பேசுவோர், நாதத்தை, நாதஸ்வரத்தில், பிடிலில், வீணையில், புல்லாங்குழலில் கேட்கின்றனர் என்றாலும் வாய்ப்பாட்டும் தேடுகின்றனர்! காரணம் என்ன? வாய்ப்பாட்டில் நாதமும், நெஞ்சை அள்ளும் சாஹித்யமும் இருக்கின்றது என்பதற்காகத்தான் நெஞ்சை அள்ளும் சாஹித்யம் தமிழருக்குத் தமிழில் இருத்தலே முறை.

முன்னாளில் இசை

“பொழிறரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
யெழுதரு மின்னிடையே யெனையிடர் செய்தவையே”

பக்கத்தில் காதலி! எதிரே கடல்! யாழை வாசித்துக் கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள இசையை இனிமையாகப் பாடுகிறான் இளமையும் செல்வமும் பொருந்திய கோவலன். மாதவியின் மனம் மகிழப் பாடினான்! மாதவியோ, ஆடலிலும் பாடலிலும் தேர்ந்த அணங்கு. கோவலன் வணிகன் ஆயினும். அவன் பாடியது, மாதவியை மகிழ்விக்கும் விதமாக இருந்தது.

நறுமலரே! விரிமணலே! மதிமுகமே! மின்னிடையே! என விளித்துக் கோவலன் யாழை இசைத்துக் கானல்வரி பாடுகிறான். அந்நாட்டினருக்குத்தான் இன்று, “கச்சேரிகளில், களைகட்டும் பாட்டுக்கள்” இல்லை. தெலுங்கு கிருதிகள் போய்விட்டால், சங்கீதக் கலையே ஷீணமாகிவிடும் என்று ‘மித்திரன்’ கூறும் நிலை வந்தது!

“மரகதமணித்தாள் செறிந்த
மணிக்காந்தண்மெல்விரல்கள்
பயிர் வண்டின் கிளைபோல
பன்னரம்பின் மிசைப் படர
வார்தல் வடிந்தலுந் தலுறழ்தல்
சீருடனுருட்ட றெருட்டலுள்ள
லேருடை“ பட்டடையென
விசையோர் வகுத்த
வெட்டுவகையினிசை காரணத்துப்
பட்டவகை தன்செவியினோர்த்
தேவலன் பின் பாணியாதெனக்
கோவலன் கையாழ் நீட்ட
கோவலன், யாழை மீட்டி இசை பாடி இன்புற்றான்!

வார்தல்:-சுட்டு விரற் செயல் தொழில்.

வடித்தல்:-சுட்டு விரலும் பெருவிரலுங் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்.

உந்தல்:- நரம்புகளை உந்தி, வலிவிற் பட்டதும், மெலிவிற் பட்டதும், நிரல் பட்டதும், நிரவிழிப்பட்டதும் என்றறிதல்.

உறழ்தல்: ஒன்றிடை யிட்டும், இரண்டிடையிட்டும் ஆராய்தல்.

என்று, மேற்படி செய்யுளில் வரும் பதங்கட்கு, அடியார்க்கு நல்லார் தரும் பொருளைப் படித்துவிட்டப்பிறகு, தமிழின் இசை உள்ளமும் இசை வளமும் எங்ஙனம் இருந்தது என்பதை ஆரியத் தோழர்கள் அறியட்டும்.

இசைக் குழல்கள் எண்ணற்ற இருந்த இடம் இது! ஆங்கு இசை பயின்று, இசை நுணுக்க முணர்ந்து, ஏழிசையைப் பாடி வாழ்ந்தவரே தமிழர்.

சிறுவயது முதலே, இசையே தமிழரின் தோழன்.

ஊசல்வரி, கந்துகவரி ஆற்றுவரி, கானல்வரி முதலியன இன்று தமிழருக்கு வெறும் சொற்றொடர்கள். முன்னாளில், அவைகள் இனிய இசைகள்!

இசை எனும் சொல்லுக்கே வயப்படுத்துவது. இசைவிப்பது என்பது பொருள் இதனைத் தமிழர் நன்குணர்ந்து, பயன்படுத்தி வந்தனர். மகிழ்ந்தனர். மகிழ்வித்தனர்.

தினைப் புனத்திலிருந்து ஓர் தீஞ்சுவை மொழியாள் தத்தை எனப்படுவாள்! இசை மொழிவாள். அந்த இசை கேட்ட பறவைகள் இசைக்கு வயமாகி மயங்குமாம்!

மலையோரத்தில், குறிஞ்சி பாடக்கேட்ட மழ களிறு உறங்குமாம்! இனிய இசையில் மயங்கி “அசுணமா” எனும் இசையறிபறவை, எதிரில் தன்னை மறந்து நின்று, பிடிபடுமாம். ஆனினங்கள் அடங்குமாம். மதங்கொண்ட யானையும் இசைக்கு அடங்கும் என்று கலித்தொகை கூறுகிறது. அது மட்டுமா?

“ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை”

அதாவது, கள்வரும், இசைகேட்டு, கொடுந்தொழில் மறந்து நின்றனராம்.

தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவிகள் என இசைக்கருவிகள் எண்ணற்றன இருந்தன.
தோற்கருவிகளில் மட்டும் பேரிகை, படகம், இளக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, காடிகை முதலிய முப்பதுக்கும் மேற்பட்டு இருந்தன.

இசைக் கருவிகளுக்கு இயம் என்றோர் பெயருண்டு. பலவகை இசைக் கருவிகளையும், வாசிக்கத் தெரிந்த காரணம் பற்றி, ஒரு புலவருக்கு நெடும் பல்லியத்தனார் என்ற பெயரும் இருந்தது.

பாடுவோர் பாணர் என்ற தனிக் கூட்டமாகவும் இருந்து, தமது முதுகுகளில், வகைவகையான இசைக்கருவிகளை ஏற்றிக் கொண்டும், பலநாடு சென்று பாடி மகிழ்வித்துப் பரிசு பெற்று வாழ்ந்தனர்.

மங்கின அழிந்தன
இன்னின்ன காலத்துக்கு இன்னின்ன இசை பாடுதல் பொருத்த மென்றிருந்து பாடி வந்தனர். காலையில் மருதப் பண்ணும் மாலையில் செல்வழிப் பண்ணும் பாடுவாராம்.
இசைத் தமிழின் இலட்சண விளக்கமாகச் சிகண்டியார் என்பவர் இசை நுணுக்கம் என்ற நூலையும், நாடகத் தமிழுக்குச் செயிற்றியன் என்ற நூலைச் செய்யிற்றியனார் என்பவரும் இயற்றினர்.

ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற வடமொழிப் பெயர்களுடன் உள்ள சுரம் ஏழும், ஏழிசை என்ற பொதுப்பெயருடன் முறையே குரல், துத்தம், கைகிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற தமிழ்ப்பெயருடன் விளங்கின.

தமிழர் ஒரு சுரத்தை பதினாறு ஆகப் பகுத்துணரும் பக்குவம் பெற்றிருந்தனர்.

ராகம் என்று கூறப்படுவது, தமிழரால் பண் என்று குறிக்கப்பட்டு வந்தது.

ராக லட்சணங்கள் பொருந்திய தமிழ்ப் பாடல் இல்லை என்று கூறுவோருக்குக் கூறுகிறோம். தமிழரின் பண்கள் எண்ணற்று இருந்தன. வடமொழியில் கரகரப்பிரியா எனக் குறிப்பிடப்படுவதே படுமலைப்பாலையப்பண் என்றும், கல்யாணி எனும் ராகம் அரும்பாலைப்பண் என்றும் முன்னாளில் குறிப்பிடப்பட்டது. அரிகாம்போதிக்கு தமிழர் அளித்த பெயர், கோடிப்பாலைப்பன் பைரவிக்கு விளரிப் பாலைப்பண், தோடிக்கு செவ்வழிப் பாலைப் பண் என இங்ஙனம் ராக இலட்சணங்கள் எவ்வளவோ தமிழில் இருந்தன. மறைந்தன! ஆரியத்தால் மங்கின; அழிந்தனவும் உண்டு.

ஆலாபனம் எனும் இசை நுணுக்கத்தைத் தமிழர் ஆலத்தி என்று அழைத்து வந்தனர். ஆரோகணம் அவரோகணம், கமகம் என்பன முறையே ஏற்றம் இறக்கம் அலுக்கு என்ற பெயருடன் விளங்கின. தமிழர் அவைகளில் தேர்ச்சி பெற்று, தேன் தமிழை உண்டு வாழ்ந்து வந்தனர். இன்று இரவல் இசை பெறும் நிலையில் உள்ளனர்.

எந்தப் பார்ப்பனர், மனு, 4-ம் அத்தியாயம், 15-ம் விதிப்படி இசை பயின்று, பொருள் ஈட்டக் கூடாது என்று தடுக்கப்பட்டு இருந்தனரோ, அதே ஆரியர்களின் சொத்தாக இசை இன்று கருதப்பட்டு வரும் நிலைமை ஏற்பட்டது.

அரியக்குடியார் அலறுகிறார்; பாபநாசம் சிவன் பதறுகிறார்; மருங்காபுரியார் மனவேதனைப்படுகிறார். ‘இந்துவும் மித்திரனும்’ முகாரி பாடியபடி உள்ளன. தமிழரின் அடாணா வெளிப்படும்வரை இசைப்பற்றி இவர்கள் இறைச்சலிட்டபடிதான் இருப்பர்.
பாவ, ராக, தாளம் எனும் மூன்றும் இழைந்திருக்க வேண்டும் இசையிலே என்பர். இசை நூல் வல்லோர் பாவம் விளக்கமாக இருக்க, அவரவருக்குப் புரியும் மொழியில் பாடல்கள் இருந்தாக வேண்டும். தமிழருக்குத் தமிழ் மொழியில் பாடல் இருந்தால்தான் புரியும்; சுவைக்க முடியும்; எனவே, தமிழ்நாட்டிலே தமிழ் இசைதான் முக்கியமாகத் தேவை.

சுவைக்க முடியும்
தமிழரின் இசைப்பற்று, தியாகய்யர் காலத்துக்குப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது. தெலுங்குக் கீர்த்தனங்கள் தோன்றா முன்னம், ராம கதையையோ, கிருஷ்ண கோலாகலத்தையோ கீர்த்தனங்களாக அமைக்கா முன்னம் தமிழரின் இசை இறைவன், இயற்கை, இன்பம் எனும் மூன்று துறைகளை உள்ளடக்கியதாக, உணர்ச்சியும் உற்சாகமும் தரத்தக்கதாக இருந்தது. இசைக்கருவிகள் எண்ணற்று இருந்தன. இசை நூற்களும் உண்டு. இசைக்கடலில் நீந்தி விளையாடி மகிழ்ந்தனர் மக்கள். ஆணும் பெண்ணும் பாடுவர், ஆடுவர், அரசனும் மக்களும் இசை பயின்றனர். இன்புற்றிருந்தனர்.

கடலைக் கண்டால் ஓர் பாடல், கரியைக் கண்டால் ஓர் பாடல், தளிரைக் கண்டால் ஓர் பாடல், தனது காதலியைக் கண்டு ஓர் பாடல் எனத் தமிழர் தமது இன்ப உணர்ச்சியை இசை வடிவில் எத்துணையோ சிறப்புடன் வெளிப்படுத்தி வாழ்ந்தனர். இன்று தியாகராயர் கிருதிகளைவிட வேறு இல்லை என்று அவர்கள் முன்னால் கூறப்படுகிறது.

இசைச் செல்வத்தை இவ்வளவு பெற்று முன்னம் வாழ்ந“த தமிழர், இன்று கேட்பது, தமிழ்நாட்டிலே தமிழ்ப்பாடல்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த முயற்சியில் தமிழர் வெற்றிபெற்றால், இழந்த தமிழ் இசையை மீண்டும் பெற முடியும். ஆரியம் தமிழரின் எல்லாவகையான செல்வங்களையும் கொள்ளை கொண்டது போலவே, இசைச் செல்வத்தையும் கொள்ளை கொண்டது. இதனை அறிய, தமிழர் தொன்மைபற்றி ஆசிரியர் சுந்தரம்பிள்ளை எழுதிய அரிய நூலையும், மற்றையோரின் ஆராய்ச்சி நூற்களையும், தமிழர் படிக்க வேண்டுகிறோம். தமிழரின் மொழிவளம், ஆட்சி வளம் முதலிய துறைகள் பற்றிய அரிய ஆராய்ச்சிகளிலே உண்மைகள் மிளிரும். தோழர் தேவநேயப் பாவாணர் எழுதிய ஒப்பியல் மொழி நூலில் உள்ளவைகளைத் தமிழர் கற்றுணர வேண்டும்.

அவர்களுக்குப் பிடிக்காது
தமிழ் இசை மறைந்து, வேற்று மொழியில் பாடல் பரவியதனால், நாம் இன்பத்தை மட்டுமே இழக்கவில்லை. இயற்கையின் அழகை உணரும் அறிவையும் பகுத்தறிவுத் திறனையும் இழந்தோம். புதுப்பாடல்கள், புதுக் கருத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும். வெறும் பக்திரசம் மட்டுமே ஊட்டக்கூடியதாக இருத்தல் போதாது. பக்திரசம் தமிழ் இசையில் இன்றும் உண்டு. ஆனால் ஆரியருக்கு அது பிடிக்காது. திருத்தாண்டகம், பிள்ளைத்தமிழ் போன்றவைகளைத் தோழர் சுந்தரமூர்த்தி ஓதுவார் எத்துணை இன்பரசத்துடன் பாடினார். தியாகய்யரின் ராமரசத்தை அருணாசலக் கவிராயரின் தமிழ்க் கீர்த்தனங்களில் காண ஆரியர் மறுப்பர். கோபலகிருஷ்ண பாரதியின் நந்தன் பாடல்களும், சித்தர்களின் பாடல்களும் சுப்பராமரின் தமிழ்ப் பதங்களும் ஆரியருக்குப் பிடிக்கவில்லை. ஆகவேதான் தமிழிலே பாடல்கள் ஏது என்று கேட்கின்றனர். தோழர் மாரியப்பசாமி எனும் இசைச்செல்வர், தியாகய்யர் கீர்த்தனை மெட்டுகளிலேயே செந்தமிழில் கிருதிகள் அமைத்து, இனிய முறையில் பாடுகிறார்! ஆரியருக்கு அது பிடிக்காது. அவர்கள் அசல் ஆரிய ரசமே தேடுவர். பக்தி என்ற ரசத்தையும் ஆரியத்தோடு கலந்து பருகுவரேயன்றித் தமிழோடு கலந்து பருகச் சம்மதியார். காரணம் தமிழர்கள் என்றால் அவர்களுக்கே வேம்பு! அதற்குக் காரணம் அந்த ஒரே மொழிதான் பரந்த இந்தியாவில் ஆரியப் படையெடுப்பைத் தாக்குதலைப் பொருட்படுத்தாமல் பணியாமல் சீரிளமைத் தீறனோடு விளங்குகிறது. அத்தகைய தமிழ் இசையில் மீண்டும் ஆதிக்கம் பெறுமானால், தமது கதி என்னாகுமோ என்று ஆரியர் பயப்படுகின்றனர்! தமிழில் இசை வளரக்கூடாதெனத் தடுக்கின்றர். தமிழனுக்குத் தமிழ் இசையைப் பெற உரிமை உண்டு! அதைத் தடுக்க ஆரியருக்கு உரிமை இல்லை! ஆயினும் ஆரியர் தடுக்கின்றனர்! தமிழரே உமது கருத்து என்ன? என்ன செய்யப்போகிறீர் என்று தமிழரை கேட்கிறோம்.

“நாம் பெருங்கூட்டம்! அஃதோர் சிறு கும்பல்” என்றார் இனிமை ததும்பும் கருத்தை, இளமையின் முறுக்குடன் கலந்து கவியாக உலகினோர்க்குக் கூறினார் ஷெல்லி என்பார். கவியின் கருத்தை வெறும் எழுத்துக் கோவையாகக் கொண்டு நோக்குதல் கூடாது; பலன் தராது.

ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் போதும்! மான் மந்தையைச் சிறு ஓநாய்க் கூட்டம் விரட்டியடிக்கும். பாம்பு படையைக் கலக்கும் ஷெல்லி கூறிய கருத்து இங்கு பயன்தராது. கட்டுப்பாடும், உறுதியும், உணர்ச்சியும் கொண்டதாக ஒரு பெருங்கூட்டம் இருப்பின், அதனை ஒரு சிறு கூட்டம் எதிர்த்துப் பயன் இல்லை என்பதே கவியின் கருத்து.

எண்ணிக்கையைவிட இங்கு இயல்பே முகுகியமாகக் கவனிக்கப்படுதல் வேண்டும்.

ஒருமைப்பாடு
தமிழ் இசை இயக்கத்தைப் பெருங்கூட்டம் ஆதரிக்கிறது. சிறிய கும்பலொன்று எதிர்க்கிறது. எதிர்க்கிறது என்றுரைப்பதை விட எதிர்த்தது என்றுரைத்தால் பொருந்தும் என எண்ணுகிறோம். பல்வேறு கட்சிப் பற்றுடையவர்களும், தமிழினால் ஒன்றாக்கப் பட்டு ஒருமனதாகி, ஒத்த கருத்தை வெளியிட்டதைக் கேட்ட பிறகும், தமிழ் இசை இயக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு இருப்பினும், நாங்கள் எதிர்த்தே தீருவோம் என்று கூறும் அளவுக்கு அந்தச் சிறு கும்பல் அறிவை இழந்துவிட்டிருக்கும் என்று நாம் நம்ப மறுக்கிறோம். அவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் இசையைத் தமிழர் ஆதரிக்கின்றனர் என்பதை. எனவே, எதிர்த்துப் பயனில்லை என்று தீர்மானித்துவிட்டிருப்பர்.

“தமிழ்ப் பாடல்களைச் சில்லறை உருப்படிகள் என்று கூறுகிறார்களோ, அந்தக் கெட்ட வழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று தோழர் தியாராஜபாகவதர் கூறினபோதும், திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்கள் தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத கச்சேரிகளுக்குப் போகாதீர்கள்; தமிழ்ப் பாடல்களை பாடாத வித்வான்களை அழையாதீர்கள் என்று கூறியபோதும், என் கீர்த்திக்குக் காரணமே தமிழ்தான் என்று தோழர் தண்டபாணி தேசிகர் அகங்குளிர கூறியபோதும், எந்தக் கூட்டத்தார் எந்த வகுப்பார், எந்த பத்திரிகைக்காரர் எதிர்த்தபோதிலும், தமிழர் அஞ்சத்தேவையில்லை என்று குமாரராஜா சர் முத்தையச் செட்டியார் அவர்கள் கூறிய போதும், மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் கூடியிருந்த மக்கள் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தைக் கண்டோர் அறிவர். தமிழரிடை பிறந்துள்ள புத்துணர்ச்சியை! தமிழிலே சாஹித்யம் உண்டா? உண்டு என்றனர் சொற்பொழிவாளர்கள். பாடிப்பாடிக் காட்டினர் இசைச் செல்வர்கள். கேட்டுக் களித்தனர் மக்கள். கேட்டது போதாதென மேலும் மேலும் தமிழ்ப் பாடல்கள் பாடும்படி கேட்டனர். இது போதும்; தமிழ் இசையை எதிர்க்கும் பேர்வழிகளின் கண்களைத் திறக்க! கருத்தைத் துவக்க!
கிளர்ச்சியின் சிறு பகுதி

இந்தப் பிரச்சினை தனிப்பட்டதென்றோ, திடீரெனத் தோன்றியதன்றோ நாம் கருதவில்லை. இசை விஷயமாக எழுப்பிய இந்தக் கிளர்ச்சி, ஒரு மாபெருங் கிளர்ச்சியின் சிறு பகுதி; தமிழகத்திலே எழும்பியுள்ள மறுமலர்ச்சியில் ஒரு பாகம். இதனை எதிர்ப்போரின் செயலும், மறுமலர்ச்சியைக் கண்டு மனந்தாளாது எதிர்த்தொழிக்க எண்ணும் கூட்டத்தின் கொடுமைமிக்க செயல்களில் ஒன்று என்றே நாம் கருதுகிறோம். எனவே, இந்தச் சமயத்தில் தமிழர், பொதுவாக உள்ள பெரிய பிரச்சினையைச் சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம்.

இன்று தமிழருக்கு எழுச்சி, இசை விஷயமாக மட்டும் வந்ததில்லை! எதிர்ப்பும் அந்தத் துறையில் மட்டும் ஏற்படவில்லை!

எத்தனையோ கிளர்ச்சிகள்!

மொழியிலே கலப்பு வேண்டாம் என்றோர் எழுச்சி.

இனத்திலே பற்றிருக்க வேண்டும் என்பதற்கோர் எழுச்சி.

நாட்டிலே யாவரும் ஒன்றெனும் எண்ணந்தோன்ற வேண்டும் என்பதற்கோர் எழுச்சி.

நாட்டு எல்லை குறிக்கப்பட வேண்டும் என்றோர் கிளர்ச்சி.

நாட்டின் செல்வம். நாட்டினருக்குப் பயன்பட வேண்டும் என்று கூறுவது மற்றோர் கிளர்ச்சி.

நாட்டுக்கு நாட்டினருக்கேற்ற சட்டதிட்டங்கள் அடைய வேண்டும் என்று வலியுறுத்த ஓர் கிளர்ச்சி.
இன்னோரன்ன பிற கிளர்ச்சிகள், பல சிற்றிருவிகள் கூடி ஆறு ஆவது போல் தமிழர் மறுமலர்ச்சியும் பெரியதோர் இயக்கமாதலை, கூர்ந்து நோக்குவோர் காணக்கூடும். தமிழர் அதனைக் கூர்ந்து நோக்கவில்லை. ஆனால் எதிர்ப்பாளர்கள் கூர்ந்து நோக்கிப் பார்த்துத்தான் ஒவ்வொரு கிளர்ச்சிக்கும் எதிர்ப்பை உண்டாக்கிப் பார்க்கின்றனர்.

அது ஒரு சிறு கும்பல்! ஆம்! மிகச்சிறு கும்பல்! ஆனால், சப்மெரைன்போல் மறைந்திருந்து தாக்கும் இயல்பு; விஷவாயு போல் பரவினதும் மாய்க்கும் கொடிய சக்தி. வெடிகுண்டுபோல் வீசப்பட்டதும் அரண்களைப் பிளந்தெரியும் வலிமை பெற்றது. இல்லையேல் சிறு கும்பல் பெரியதோர் கூட்டத்தை எங்ஙனம் எதிர்க்கத் துணியும்!

விக்டோரியா மண்டபக் கூட்டத்திலே தோழர் டி.எஸ்.சொக்கலிங்கம், தமிழை எதிர்க்கும் சிறுகூட்டத்தை ஜார் காலத்தில் இருந்த ரஷிய சீமான்கள் கூட்டத்திற்கு ஒப்பானது என்றுரைத்து, அந்தச் சரிதம் மீண்டும் நடைபெறும் என்று எச்சரித்தார்!

அந்தச் சிறு கும்பலின் சக்தி அவருக்குத் தெரிய காரணமிருக்கிறது.

அந்தச் சிறு கும்பல், பெரும்பாலானவரை ஆட்டிப்படைக்கும் சூழ்ச்சிப் பற்றி அவர் அறிந்து கொள்ளாதிருக்க முடியாது. அவர் அதுபற்றி வெளியே பேசாதிருக்கிறார். ஆனால் அன்று இசை அவருடைய உள்ளத்திலே சென்று உண்மையை இழுத்து வெளியே எறிந்தது என்றே நாம் நம்புகிறோம்.

ஏழை எளியவர் மொழி
“ரஷிய மொழி, ஏழை எளியவர் மொழி; பிரெஞ்சு மொழி கனவான்கள் பேசும் மொழி. ஆகவே, நாங்கள் பிரெஞ்சு மொழி பேசுகிறோம் என்று உரைத்த ரஷிய சீமான் கும்பல் போல், இங்கு ஒரு சிறிய கூட்டத்துக்குத் தமிழ் மொழியிடம் துவேஷமிருக்கிறது. இதுவரை, அவர்கள் பெரும்பாலோரை அடக்கி ஒடுக்கி வாழ்ந்தார்களே, அதையேதான் இம்மனப்பான்மையும் காட்டுகிறது” என்று தோழர் சொக்கலிங்கம் கூறினார். உண்மை! ரஷ்ய சீமான்கள் பிரெஞ்சு மொழியைக் “கனவான்கள்” மொழி என்று கூறினது போல், இங்கு ஒரு சிறு கூட்டம் சமஸ்கிருதத்தை “தேவ பாஷை” என்று கூறிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்களை அடக்கி ஒடு“க்கி ஆட்சி புரிகிறது. ஜார் காலத்துச் சீமான்கள் மன்னனும் மத குருமார்ளும் வாழ்க! மற்றையோர் மாளினும் மாள்க! என்றுரைத்தது போலவே, மனுவும் வாந்தாதாவும் அருளியது. பூதேவர்களிடம் மற்றையோர் மண்டியிட்டே கிடத்தல் முறையென்று கூறுகிறது. ரஷிய உழவனோ, பாட்டாளியோ தொட்டால் தீட்டு எனக் கருதினானில்லை. இங்குள்ள சிறு கூட்டம் பெரும்பாலான மக்கள் தொட்டால் தீட்டு என்று கூறுகிறது. அவர்களுடன் ஒன்றாக இருந்து உண்ண மறுக்கிறது. தொழ மறுக்கிறது. ரஷிய சீமானுக்காவது ஆயுதங்கள் இருந்தன! இங்கே உள்ள சிறு கும்பலுக்கு அதுவுமில்லை. ரஷிய சீமானாவது ஆயிரம் வேலி நிலமுடையோன்; ஆபரணப் பேழையுடையோன்! ஆயுதந்தாங்கிய ஏவலருடையோன் என்று கூறலாம் இங்குள்ள சிறு கும்பலுக்கு அவைகளுமில்லை; எனினும் ரஷிய சீமான்கள் ஆட்டிவைத் ததைவிட இங்குள்ள சிறு கும்பல் பெரும்பாலான கூட்டத்தை ஆட்டி வைக்கிறது.

அந்த ரஷிய ஜார் கூட்டம் அழிந்ததே, அதே கதியைத்தான் இந்த அந்தஸ்துக் கூட்டமும் அடையும் என்று தோழர் சொக்கலிங்கம் கூறினார். கேட்ட தமிழர் களித்தனர்.

அத்தன்மை படைத்த சிறுகும்பலின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பது பற்றி, எக்கட்சியைச் சார்ந்த தமிழருக்குள்ளும் கருத்து வேற்றுமை இல்லை என்பது, அந்தக் கூட்டத்திற்குத் தெரியும்படி தமிழர்கள் நடந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழிக்கும் கலைக்கும் ஊறு நேராதபடி பாதுகாக்கத் தமிழர் திரண்டு விடுவதுபோலவே, தமிழரின் தன்மானம் பறிக்கப்படும் போது தமிழர்கள் எந்தக் கட்சியினிடம் இருப்பினும், தமிழர் அணி வகுப்பில் வந்து சேர வேண்டும். தமிழரைச் சமமாக நடத்த மறுக்கும் சிறு கூட்டத்தை எதிர்க்க ஒன்று சேர வேண்டும். தமிழ்நாட்டைப் பிற நாட்டாரோ, பிற இனத்தாரோ பங்கப்படுத்த வளங்குன்றச் செய்யச் செல்வத்தைச் சுரண்ட முற்படும் வேலைகளில் தமிழர்கள“ ஒன்றாகத் திரண்டெழ வேண்டும். தமிழரின் மறுமலர்ச்சிக்கு இந்த எண்ணமே உறுதுணை. இந்த எண்ணத்துடன் தமிழர் பணியாற்றுவரேல் தமிழர் முன்னேறிவிடுவர் என்பது திண்ணம்.

இன்றுள்ள நிலைமை
இன்றுள்ள நிலைமை அங்ஙனமில்லை. தமிழ்நாட்டிலே தமிழன் தாழ்ந்த ஜாதி என்று தமிழன் படிக்கும் சாஸ்திர இதிகாச புராணங்கள் கூறுகின்றன. தமிழனின் பணத்தால் நடைபெறும் நீதி மன்றங்களில் அதற்கேற்பவே தீர்ப்புகள் தரப்படுகின்றன.

தமிழனுக்குத் தமிழ்நாட்டிலே தமிழரின் பணத்தால் கட்டி, தமிழரின் பணத்தால் பராமரிக்கப்படும் கோயில்களிலே தமிழருக்குச் சம உரிமை இல்லை; உண்டிச் சாலைகளிலேயும் இல்லை.

தமிழ் நாட்டிலே, தமிழனுடைய மொழியிலே தகாத மொழிகள் கள்ளிப்போல் படர்ந்துவிட்டன.

தமிழ்நாட்டிலே தமிழனுக்கும் வேலை கிடைப்பதில்லை. மோரிசுக்கும், ஜான்சிபாருக்கும் நெட்டாலுக்கும், மலேயாவுக்கும், பர்மாவுக்கும், இலங்கைக்கும் சென்று உழைத்து உருமாறி சிதைகிறான். வியாபாரம் தமிழனிடம் இல்லை.

“கலை தமிழனுடையதாக இல்லை. தமிழனுக்கு இழிவைத் தரும் கற்பனைகளும், அடக்குமுறைச் சட்டங்கள் கொண்ட ஆபாசங்களுமே கலையாகத் தரப்பட்டுள்ள”

இங்ஙனம் மொழி, கலை, சமுதாயம், பொருளியல் முதலிய எல்லாத் துறைகளிலும், தமிழன் இழிவுப்படுத்தப்பட்டு வருவதன் காரணம், ‘சிறு கும்பலொன்று’ ஆதிக்கம் செலுத்தி வருவதனால்தான்.

‘எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே’ என்று பாரதியார் பாடிய பிற்பாடு கூட கால மாறுதலை அறியாமல் இவர்கள் நடப்பது வெறும் அறிவீனம் ஒரு சிலர் சேர்ந்து கொண்டு தங்கள் சுயநலத்திற்காக மெஜாரிடியாரை அடக்கி ஆளும் காலம் கவிழ்ந்துவிட்டது என்று தினமணி 1941, செப்டம்பர் 16 ந் தேதி இதழில் கூறியிருக்கிறது.

கவிழ்ந்துவிட்டதா? உண்மையாகவா, இல்லை! கவிழ்ந்து விட்டிருக்குமேயானால், நாம் பள்ளுப் பாடுவோம்! இன்னமும் கவிழவில்லை. ஆனால் கவிழ்வது மட்டும் உறுதி.

‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே, என்றார் பாரதியார். ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகள் போச்சே என்பதற்குப் பதிலாகப் போச்சோ என்று கேட்கவேண்டிய நிலைமையில் இருக்கிறது. இன்னும் சிறு கும்பல் சீறுகிறது! ஆதிக்கம் செலுத்துகிறது! தமிழரை எதிர்க்கிறது! தமிழரின் மறுமலர்ச்சியை அழிக்கக் கருதுகிறது. ஆம்! ஜார் அடைந்த கதியை அடைந்ததும். அந்தச் சிறு கூட்டம் தனது ஆணவத்தை அடக்கிக் கொள்ளத்தான் இல்லை. அதனை அடக்கத் தமிழர் எழுச்சி பெறவேண்டும்.