திராவிட
முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்பட இருக்கும் பெரிய செலவு மிக
விரைவில் உண்டாக இருப்பதால் தி.மு.க. உறுப்பினர்களும், ஆதரவாளர்களும்,
அன்பர்களும் பல்வேறு வகையில் நிதி திரட்டித் தரும் பணியில்
ஈடுபடுகின்றார்கள். பெருஞ்செலவு ஏற்படும் என்று தெரிந்திருந்தால்
நாங்கள் தேர்தலிலேயே ஈடுபட வேண்டாம் என்று சொல்லி இருப்போமே
என்று இப்போது கைபிசைந்து கொள்வதிலே அர்த்தமில்லை. திருச்சி
மாநாட்டில் வாக்கெடுப்பு எடுத்தபோது இதை எண்ணிப் பார்த்து
இவ்வளவு பெரிய தொகையைச் சேர்க்கும் ஆற்றல் திராவிட முன்னேற்றக்
கழகத்திற்கோ நாட்டு மக்களுக்கோ இல்லை என்ற ஐயப்பாடு, அச்சம்
காரணமாக தேர்தலில் ஈடுபடவேண்டாம் என்று சொல்லி இருக்கலாம்.
ஆனால் பெருவாரியான மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில்
ஈடுபடத்தான் வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். ஆகையால்
பெரும் நிதி திரட்ட வேண்டிய பணியும் வெற்றிக்காகப் பாடுபடும்
வேலையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பொது மக்களுக்கும்
ஏராளமாக இருக்கிறது. ஆகையினால் தான் நாங்கள் எந்த ஊர்களில்
நடைபெறுகின்ற நிகழ்ச்சியாயினும் அது தேர்தல் நிதிக்குப்
பயன்படுமா என்று பார்த்துப் பார்த்துக் கேட்டு அவைகளில்
கலந்து கொள்ளுகின்றோம்.
காலையிலே கட்டணம் போட்டு இங்கே நடத்துகின்ற இந்தக் கூட்டம்
உண்மையிலே எந்தக் கட்சிக்காரரரும் கட்டணம் போட்டுக் கூட்டம்
நடத்துவது இல்லை; கட்டணம் போடாத கூட்டத்திற்கே ஆட்கள் வருவதில்லை;
வந்தால் கொஞ்சம் கட்டணம் கூடத்தருகிறோம் என்று அழைத்தாலும்
மக்கள் வராமல் இருக்கிறபொழுது, கட்டணம் போடும் கூட்டங்களுக்கு
மக்கள் கூடுகின்றார்கள் என்றால் உண்மையிலேயே திராவிட முன்னேற்றக்
கழகம் அடைந்திருக்கின்ற வளர்ச்சிக்கு அது ஒரு அறிகுறியாகும்.
கட்டணம் போட்டு நடைபெறுகின்ற இதுபோன்ற கூட்டங்களில் கல்லூரிகளிலே
தரப்படும் அறிவுரைகளைப் போல தரவேண்டும் என்று எனக்கு நீண்ட
நாட்களாகவே ஆவல் உண்டு. ஆனாலும் தேர்தல் காலத்தில் எதுவும்
தேர்தலுக்காகப் பயன்பட வேண்டும் என்று எண்ணுகின்ற காரணத்தினால்
நானும் நண்பர் நடராசனைப் போல் தேர்தலைப்பற்றியே பேச வேண்டியவனாகிறேன்.
நண்பர் நடராசன் அவர்கள் வேலூரில், வேலூர்த் தொகுதியில்
திராவிட முன்னேற்றக் கழக சார்பில் யார் நிறுத்தப்படுகின்றாரோ
அவர் வெற்றி பெறப் பாடுபட வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்
கொண்டார். வேலூரைப் பொறுத்தவரையில், நாம் திராவிட முன்னேற்றக்
கழகத்தார் 150 இடங்களில் நிற்க இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிற
இடங்களில் நாங்கள் நிச்சயம் வென்ற தீருவோம் என்று எண்ணியிருக்கிற
இடங்களில் வேலூர் ஒன்று என்பதை உங்களிடத்தில் நான் மகிழ்ச்சியோடு
தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே வேலூரிலே உள்ள மக்களுக்கு
மற்றத் தொகுதியிலே உள்ள மக்களைவிட அதிக பொறுப்புணர்ச்சி
இருக்கிறது.
சில இடங்களில் நாம் போட்டியிட இருப்பது அந்தத் தொகுதியில்
இருக்கிற காங்கிரஸ் சக்தியை அந்தத் தொகுதியிலேயே தேக்கி
வைப்பதற்காகும்; சில தொகுதிகளிலே நாம் போட்டியிடுவது அந்தத்
தொகுதியிலே இருக்கும் காங்கிரசார் வேறு தொகுதிக்கு வந்த
அந்தத் தொகுதியில் இருப்பவர்களைத் தட்டிவிடாமல் இருப்பதற்கு,
அவர்களை உசுப்பிவிடாமல் இருப்பதற்காகும்; இன்னும் சில தொகுதிகளில்
நாம் போட்டியிடுவது அந்தத் தொகுதியிலே÷ உள்ள திராவிட முன்னேற்றக்
கழகத்தின் ஆதரவாளர் தங்கள் வாக்குகளை வேறு பெட்டிகளில் போடக்கூடாது
என்று அவர்கள் ஒதுங்கி இராமல் உனக்கு என்று ஒரு பெட்டி உண்டு.
உன் வாக்குகளை அதிலே போடு, என்று அவர்களை அந்தப் பக்கம்
அனுப்புவதற்கு; ஆனால் வேலூரிலே நாம் நிற்பது நிச்சயமாக வெற்றி
பெறுவோம் என்ற கருத்தோடு தான் நிற்கிறோம்.
ஆகவே வேலூரிலே உள்ள தோழர்கள், வேலூரைச் சார்ந்த தோழர்கள்,
இதற்கு முன் அவர்களிடையே இருந்த கட்டுப்பாட்டை விட அதிகமான
கட்டுப்பாட்டுடன் திராவிட முன்னேற்றக் கழகம் நிறுத்தும்
அபேட்சகம் வெற்றி பெறப்பாடுபட வேண்டும். தோழர் நடராசன்
அவர்கள் மெத்தத் தைரியத்தோடும் உறுதியோடும் உங்களிடத்திலே
பேசினார். திராவிட முன்னேற்றக்கழகம் பல இடங்களிலே வெற்றி
பெற இருக்கிறது. காங்கிரசின் பணபலம் நம்மை ஒன்றும் செய்துவிடாது
என்று நான் உங்களிடத்திலே அந்த வீணான தைரியம் தரப் பிரியப்படவில்லை.
போராட்டத்திற்குப் போவதற்கு முன்னரே இரண்டு கட்சிகளும்,
இரண்டு பக்கத்தில் உள்ளவர்களுக்கும் என்னென்ன வலிவு உள்ளதென்பதை
நீங்கள் ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்த்து அதற்குப் பிறகுதான்
நீங்கள் உண்மையிலேயே போராட்டத் தினுடைய விளைவுகளைக் கணக்கெடுக்க
வேண்டும். வள்ளுவர் அதனை மிக அழகாக வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார்.
தன் வலிவும் மாற்றான் வலிவும் ஒப்ப நோக்கிப் பார்த்துத்தான்
ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டும். அந்த வகையிலே நான் காங்கிரசுக்குள்ள
வலிவைக் குறைவாக மதிப்பிட வில்லை. காங்கிரஸ் கட்சிக்கு இன்றைய
தினம், இன்னமும் தாக்குப் பிடிக்கின்ற சக்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு இன்றைய தினம் சர்க்காரின் பலம் இருக்கின்றது.
காங்கிரஸ் கட்சிக்கு இன்றைய தினம் பத்திரிகைகளின் பம் இருக்கிறது.
பயந்த பணக்காரர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.
கள்ள மார்க்கெட்காரர்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கைலாகு கொடுக்கிறார்கள்;
காங்கிரசை எதிர்த்து யாராலேயும் நிற்க முடியாது என்கிற கிலி
பழைய காலத்திலே இருந்து வந்தவர்களுக்கும், நீண்ட நாட்களாக
அரசியலில் இருந்து வந்தவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஒப்புயர்வற்ற தலைவர், உலகப் புகழ்பெற்ற
தலைவர், எல்லா நாடுகளிலும் ஏற்றம் பெற்றிருக்கின்ற தலைவர்
பண்டித ஜவகர்லால் நேரு அந்தக் கட்சிக்குத் தலைவராகக் கிடைத்திருக்கின்றார்.
நான் அந்தக் கட்சியைப் பற்றியும், அதற்கு இருக்கும் செல்வாக்கைப்
பற்றியும் இந்த அளவுக்குச் சொன்னதற்குக் காரணம், நம்முடைய
எதிரி எவ்வளவு வலிவோடு இருக்கிறான் என்பதை நாம் நன்றாக
உணர்ந்தால்தான், அந்த அளவுக்கு நாம் வளர்ந்தாக வேண்டும்
என்ற பொறுப்புணர்ச்சி நமக்கு இருக்கும் வருகிற பயில்வான்
காமா பயில்வான் தான் என்பது தெரிந்தால் தான் நாமும் ஒரு
பத்து கசரத்துப் போட்டுவிட்டுப் பயில்வானிடத்தில் போவோம்.
வருகிற பயில்வான் புல் தடுக்கினால் கீழே விழுவான் என்று
நாமாகக் கருதிக்கொண்டு போனால், நாம் நடக்கிற நடையிலேயே
கீழே விழுந்துவிடுவோம். ஆகையினால்தான் எதிரியைப் பற்றிக்
குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று உங்களை நான் பணிவன்போடு
கேட்டுக்கொள்ளுகின்றேன்.
தேர்தல் காலத்திலே காங்கிரஸ்காரருக்குப் புதிதான வலிவு கிடைக்கும்.
தேர்தலுக்கு முன்னால் வரை கதரைத் தொட்டிருக்க மாட்டார்கள்.
கைராட்டினத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள். காந்தி படத்தைக்
கும்பிட்ருக்க மாட்டார்கள். காங்கிரஸ் கூட்டங்களுக்குப்
போயிருக்க மாட்டார்கள். ஆனால் தேர்தல் நெருங்க, நெருங்க
ஒரு ஊரில் தேர்தலில் அபேட்சகராக நிற்க வேண்டும் என்று கருதும்
ஒருவர் திடீரென்று கதர்க்கடைக்குப் போவார்; 10 கெஜமோ 12
கெஜமோ கதர்த் துணி வாங்கி சட்டை தைத்து போட்டுக்கொண்டு
கடை வீதியிலே உலாவுவார். நான் யாருடைய பெயரையாவது சொன்னால்
யாரோ ஒரு நிஜமான புருஷரைச் சொல்லுகின்றேன் என்று நீங்கள்
கருதவேண்டாம். உதாரணத்திற்குச் சிலவற்றை நான் சொல்லுவேன்.
ஒரு ஊரிலே யாராவது ஒருவர்-சீதாபதி என்று வைத்துக்கொள்ளுங்கள்-
புதிதாகக் கதர்சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு கடை வீதியிலே
போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடை வீதியிலே அவரைப்
பார்க்கிற ஒரு தோழர் “என்னய்யா இதற்கு முன்னாரே இல்லாமல்
இப்போது கதர்ச்சட்டை போட்டிருக்கிறீரே முன்பெல்லாம் அழகாக
சில்க் சட்டைகளும், அற்புதமான டசூர் சூடடுகளும், நல்ல பின்னி
சூட்டுகளும் போட்டுக் கொண்டு வருவீர்களே, இன்றைய தினம்
கதர் போட்டுக் கொண்டு வருகின்றீர்களே?” என்று கேட்டால்
அவர் சிரித்துக்கொண்டே “தேர்தல் வருகிறதல்லவா, என்னை வி.றி
க்கு நிற்கச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் இந்தச் சனியனை
மாட்டிக் கொண்டேன்” என்று அவர் சொல்வதை நீங்கள் கேட்கலாம்.
சனியன் என்று அவரே கருதினாலும், அதையெல்லாம் மாட்டிக் கொண்டாவது
அந்தக் காங்கிரசில் நிற்கவேண்டும் என்ற அளவில் காங்கிரசுக்குப்
புதிய புதிய பலம் தேர்தல் காலத்திலே வந்து சேரும்.
அதைப் போலவே புதிய புதிய எதிர்ப்புகள் நமக்கு தேர்தல் காலத்திலே
வந்து சேரும். சாதாரணமாக, உதாரணத்திற்கு நான் சொல்லுவேன்,
ஏதாவது ஒரு ஊரில், விருதம்பட்டி என்று வைத்துக்கொள்ளுங்கள்,
விருதம் பட்டிக்குத் தோழர் நடராசனை அழைத்திருப்பார்கள்
ஒரு கூட்டத்திற்கு, விருதம்பட்டி கூட்டத்திற்கு அவர் வருவதாகச்
சொல்லி போகாமல் இருந்தார் என்று வைத்துக்கொள்ளுங்கள்,
6 மாதத்திற்கு முன்னாலே அதையெல்லாம் அப்போது மறந்து விட்டிருப்பார்கள்;
மறு கூட்டம் போட்டுக்கொள்ளலாம் என்று கூட இருப்பார்கள்.
ஆனால் தேர்தல் வருகிறது என்று தெரிந்தவுடன் நடராசன் விருதம்பட்டிக்கு
போய் அங்கே இருப்பவர்களைப் பார்த்து “நீங்களெல்லாம் கழகத்திற்கு
வேலை செய்ய வேண்டும், தேர்தலிலே வெற்றி பெறச் செய்ய வேண்டும்,
என்று கேட்டுக் கொண்டால், விருதம்பட்டித் தோழர்கள் அவரைத்
திரும்பிப் பார்த்துச் சொல்லுவார்கள், “நன்றாக இருக்கிறது
நீங்கள் சொல்லுகின்ற பேச்சு, 6 மாதங்களுக்கு முன்னாரே கூட்டத்திற்கு
அழைத்தேன், ஆறு கடிதங்கள் போட்டேன். ஒன்றுக்கு கூடப்பதில்
இல்லை. வருவதாகச் சொன்னீர்கள், நோட்டீசுகள் போட்டோம்,
வால் போஸ்டர்கள் ஓட்டினோம். கடைசி நேரத்திலே வராமல் போய்
விட்டீர்கள், நாங்கள் வேலை செய்ய மாட்டோம், என்று சொல்லிப்
புதிதான விரோதத்தைத் தேர்தல் காலத்திலே கிளப்பிவிடுவார்கள்.
நான், இரண்டையும் ஒப்பிட்டுப்பார்க்கும்படி உங்களைக் கேட்டுக்
கொள்ளுகின்றேன். தேர்தல் காலத்திலே காங்கிரசுக்குப் புதிய
வலிவு கிடைக்கும். தேர்தல் காலத்திலே திராவிட முன்னேற்றக்
கழகத்திற்குப் புதிதாக எதிர்ப்புகள் கிடைக்கும். எப்பொழுதும்
காங்கிரஸ்காரர்களுக்கு இருக்கும் பலத்தோடு மிக அதிகமான
புதுப்பலம் அவர்களுக்குச் சேரக்கூடும். உண்மையிலேயே பொது
மக்களை கட்டணம் கொடுத்து வரச் சொல்லி 1000 ரூபாய் நிதி
திரட்டி நாம் இந்தக் கூட்டத்தை நடத்துகின்றோம். தேர்தலிலே
இதைச் செலவிடப் போகிறோம். ஆனால் காங்கிரசிலே ஒரு அபேட்சகர்
நின்று, அவர் செலுக்காக நிதி திரட்ட வேண்டும் என்று காமராசர்
இதே வேலூருக்கு வருகிறார் என்றால், இங்கே 4 அணாவும் 8 அணாவும்
கொடுத்து நடக்கின்ற கட்டணக்கூட்டத்திற்கு வரமாட்டார். காலையிலே
10 மணியிலே இருந்து 1 மணி வரை நீங்கள் ஏதாவது சினிமா கொட்டகையிலே
பேச வேண்டும் என்று அழைத்தால் அதற்கு அவர் ஆகட்டும் என்று
வரமாட்டார். அவர் செய்யக் கூடிய காரியம் எல்லாம், ‘ஊரிலேயே
எங்கே பெரிய பங்களா இருக்கிறது? என்று கேட்டார். அல்லது
‘டிராவலர்ஸ் பங்களாவில் ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொல்லுவார்.
காமராசர் அங்கே வந்து இறங்கி விட்டார் என்ற சேதி தெரிந்ததும்,
எப்படி எங்காவது பிணம் விழுந்ததும், கழுகுகள் தூரத்தில்
இருந்தாலும் வட்டமிட்டுப் பிணம் இருக்கும் இடத்திற்கு வருமோ,
அதைப்போல காமராசர் எங்காவது வந்து இறங்கி இருக்கிறார் என்று
தெரிந்த உடன் மெருகு குலையாத மோட்டார்கள் 10,15 அந்த திக்கு
நோக்கித் தானாகப் புறப்படும். அண்ணாத்துரை என்ன இவ்வளவு
கேவலமாகக் காமாராசரைப் பிணத்திற்கும், மற்றவர்களைக் கழுகுக்கும்
ஒப்பிடுகின்றாரே என்று நீங்கள் சொல்ல வேண்டாம். நான் உதாரணத்திற்கு
மட்டும்தான் அதைச் சொன்னேன். காமராசருக்குக் கழுகுப் பார்வை
இருக்கலாம்; ஆனால் பிணக்கோலம் அவருக்கு இல்லை.
அவர் அங்கு தங்கி இருந்த உடன் மெருகு குலையாத மோட்டரிலே
வந்த சீமான்கள், மிட்டாதாரர்கள், வெளியிலே இருக்கிற பணியாளர்களைப்
பார்த்து உள்ளே ஐயா இருக்கிறார் என்று கேட்பார்கள். இன்னும்
சில பேர் ரொம்பப் பந்தத்தோடும், பாசத்தோடும், “நாடாரவர்கள்
இருக்கிறாரா என்று கேட்பார்கள், அதற்கு முன்னாரே நாடாரைப்பற்றி
இவரே கூடக்கேவலமாகப் பேசி இருப்பார். அதற்கு முன்னாலே காமராசரைப்
பற்றிக்கூட இவர் கண்டபடி ஏசி இருக்கக்கூடும் என்றாலும் காமராசர்
முதல் மந்திரி ஆகிவிட்டார் என்று தெரிந்தவுடன், அவர் தேர்தலுக்கு
ஆட்களைப் பொறுக்க வந்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்ட
உடன் மெருகுகுலையாத மோட்டாரிலே ஏறிவருகிற சீமான்கள் “நாடார்
இருக்கிறாரா? என்று கேட்டு “இருக்கிறார்” என்று வெளியே இருப்பவர்
அறிவித்த உடன் மெள்ள உள்ளே நுழைந்து, அதிக ஜனநெருக்கடி உள்ள
கோயிலுக்குள் சென்றவன், மூல விக்ரகம் கண்ணுக்குத் தெரியாவிட்டால்,
பக்தர்களை இந்தக்கையினாலும், அந்தக் கையினாலும் விலகிப்
பார்த்து, “அம்பாளுடைய அழகுதான் என்ன? அம்பாள் கழுத்திலே
இருக்கிற மாங்காய் மாலையினுடைய அழகுதான் என்ன? காதிலே இருக்கிற
வைர ஓலை 6000 தாளும் போல் இருக்கிறதே, நம்முடைய வீட்டிலே
இருப்பது 2000 தானே தாளும், என்று தன்னுடைய நகைக்கும் கோயில்
நகைக்கும் கணக்குப் பார்க்கின்ற பக்தர்களைப் போல், வந்தவர்களை
எல்லாம் விலக்கி விட்டுக் காமராசரைப் பார்த்து, “இவர்தானே
காமராசர்? “ஆமாம் இவர்தான் காமராசர்” “நல்ல கம்பீரமான இருக்கிறார்”
முன்னாரே எல்லாம் கொஞ்சம் ஒல்லியாக இருந்தார்; “ஆமாம் மந்திரியாக
வருவதற்கு முன்னாலே” இப்போது ஒரு சுற்று நன்றாக வளர்ந்திருக்கின்றார்”
“ஆமாம் அப்படித்தான் வளர்ந்திருக்கின்றார்” அவருக்கென்ன
இலட்சுமி கடாட்சம் இருக்கிறது; முகத்திலே பாருங்கள் சரசுவதி
கடாட்சம் இருக்கிறது” என்று பக்கத்திலே ஒருவர் சொல்லுவார்.
பக்கத்திலே இன்னொரு காங்கிரஸ் தோழர் தொடையைக் கிள்ளி,
“இலட்சுமி கடாட்சம் இருக்கிறது என்று சொல்லு; அது உண்மை,
சரசுவதி கடாட்சம் என்று சொல்லாதே, அது அவருக்கு அவ்வளவாக
கிடையாது” என்று அவர் சொல்லுவார். இவ்வளவுக்கும் பிறகு
அருகில் அவரை உட்கார வைத்த உடன் காமராசர் அவரைப் பார்த்துக்
கேட்பார்; நீங்கள் காமராசரைப் பலபேர் நேரடியாகச் சந்தித்துப்
பேசி இருக்க மாட்டீர்கள், நான் நேரடியாகச் சந்தித்துப் பேசி
இருக்கிறேன். காமராசரிடத்தில் இருக்கும் பழக்கம் யாராவது
தன்னிடம் பேசவருகிறார் என்றால், யார் வருகிறாரோ அவருடைய
முகத்தைப் பார்ப்பது போல்தான் இருக்கும்; வேறு எந்தப் பக்கத்தையோ
பார்த்துக் கொண்டுதான் பேசுவார். இவராகத்தான் திரும்பித்
திரும்பி அவருடைய முகத்தைப் பார்க்க வேண்டும். அப்படிப்
பார்த்துக் கொண்டே உள்ளூரிலே இருக்கிற பெரிய மனிதர் வேலூரைப்
பற்றிச் சொல்லுவார்.
“வேலூர் எப்படி இருக்கிறது?” என்று காமராசர் கேட்டார்.
“அதென்னங்க எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்கள். நீங்கள்
நினைக்கிறபடி இருக்கிறது” என்று இவர் பூடகமாகச் சொல்லுவார்.”
“ஐயா, நான் நினைக்கிறபடி இருக்கிறது என்பது இருக்கட்டும்,
எப்படி இருக்கிறது? யார் நிற்பார்கள்? என்று கேட்டவுடன்,
இவர் நிற்கலாம், அவர் நிற்கலாம் என்று ஆட்களைச் சொல்லுவார்கள்.
“யாரை நிறுத்துவது என்பது இருக்கட்டும். தேர்தல் நிதிக்கு
நமக்கு பணம் தேவை” என்று சொன்னவுடன் ஆயிரத்திலே இருந்துதான்
கிளம்புமே தவிர, ஒரு ரூபாய், 100 காலணா, 101 ஓரணா என்று
இந்த வகையிலே அந்தத் தேர்தல் நிதி இருக்காது. எதற்காக நான்
இதைச் சொல்லுகிறேன் என்றால், காங்கிரசில் இந்தத் தேர்தல்
நிதி வெகு சுலபத்தில் மிகப்பெரிய அளவில் சேரக்கூடும். நானே
காங்கிரஸ்காரர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாரே தேர்தல்
நிதி எப்படி திரட்டினார்கள் என்பதை அறிவேன். பதவி ஒரு மனிதனை
எந்த அளவுக்கு வேலை செய்யும் என்பதும் எனக்குத் தெரிந்திருக்கிறது.
பதவி இல்லாத காலத்திலே இவர்கள் எவ்வளவு பரிதவித்தார்கள்
என்பதும் நமக்கு நன்றாகப் புரிந்திருக்கிறது. ஆகையினாலே
காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் காலத்தில் பெரும் பணம் சேருவதற்கு
வாய்ப்பிருக்கிறது.
இப்போது நீங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பீர்களானால், பணபலம்
படைத்த ஒரு கட்சி, பத்திரிகை பலம் படைத்த ஒரு கட்சி, பணக்காரர்களாலே
ஆதரிக்கப்படுகின்ற ஒரு கட்சி, பார்புகழுகின்ற பண்டிதருடைய
ஆதினத்திலே இருக்கிற ஒரு கட்சி, காங்கிரஸ் கட்சி, அதை எதிர்த்து
நிற்கிற நாம், பணபலம் அற்றவர்கள், பத்திரிகை பலம் குறைந்தவர்கள்,
பண்டிதருடைய கோபத்திற்கு ஆளானவர்கள், காமராசராலேயே கசப்பு
என்று கருதப்படுபவர்கள். இது மட்டுமல்லாமல், நம்முடைய மாபெரும்
தலைவர் பெரியார் இராமசாமியாலும் இழித்துப் பேசப்படு கின்றவர்கள்.
நான் எந்த உண்மையையும் உங்களுடைய மனதிலே இருந்து மறைக்க
விரும்பவில்லை. எதனையும் குறைத்து மதிப்பிடச் சொல்லவில்லை.
இரண்டையும் நீங்கள் சரியாகவே கணக்கிட்டுப் பாருங்கள். இந்தப்
பக்கத்திலே இருக்கிற காங்கிரஸ் கட்சியையும், நல்லவகையிலேயே
கணக்கெடுங்கள். இன்னொரு பக்கத்திலே இருக்கிற நம்முடைய வலிவையும்
நீங்கள் கணக்கெடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த இரண்டும் ஒன்றோடொன்று போட்டி இடுகின்ற நேரத்தில்
நீங்கள் எந்த அளவுக்கு எங்களுக்கு ஆதரவளித்தால் காங்கிரஸ்
கட்சியைத் தோற்கடிக்க முடியும் என்பதை இந்தக் கூட்டத்திலேயே
நீங்கள் தீர்மானித்துச் சொல்ல வேண்டும்.
“அதற்கென்ன அண்ணாத்துரை சொல்லிவிட்டார் நிற்கவேண்டும் என்று,
இன்னார் நிற்கிறார் வேலூரில்; நாங்கள் வேலை செய்கிறோம்”
என்று ஒப்புக்குச் சொல்லி விட்டால் போதாது உள்ளன்போடு
நீங்கள் இந்த விஷயத்திலே ஈடுபட்டாக வேண்டும். உங்களுக்கிருக்கிற
முழு ஆற்றலையும் இதிலே பயன்படுத்தி ஆக வேண்டும்; உங்களுக்கிருக்கின்ற
முழு சக்தியைத் திரட்டித் தந்தாக வேண்டும். உங்களிடத்திலே
இருக்கின்ற, பண பலம், உங்களுக்கிருக்கின்ற செல்வாக்கு, மக்களை
ஈர்த்து வருகின்ற காந்தசக்தி அத்தனையையும் நீங்கள் ஒன்றாகத்
திரட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் காணிக்கையாக
ஒதுக்கினால் தான் காங்கிரஸ் கட்சியைச் சமாளிக்க முடியும்.
சுலபத்திலே, கண்களைத் திறந்து பார்த்தால் சிவபிரான் திரிபுரத்தை
எரித்துவிட்டதைப்போல், திராவிட முன்னேற்றக் கழகம் நின்று
விட்டால் வென்றுவிடும் என்று உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை.
இந்த அளவுக்கு நாட்டிலே கஷ்டங்கள் இருக்கின்றன. இடையூறுகள்,
இன்னல்களும் ஏராளமாக இருக்கின்றன. இவைகளை எல்லாம் தாண்டி
முன்னேற முடியும் என்ற நம்பிக்கை மட்டும் நம்முடைய உள்ளத்திலே
கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கைக்குக்
காரணம், நீங்கள் அவ்வப்போது அளித்துக் கொண்டு வருகிற பேருதவி;
நீங்கள் காட்டுகின்ற நல்ல உற்சாகம் அத்தனையையும் விட, என்னுடைய
உள்ளத்திலே இந்த நம்பிக்கை இருப்பதற்குக் காரணம், நம்மைத்
தவிர இந்தக் காரியத்தைச் செய்வதற்கு நாட்டிலே வேறு கட்சி
இல்லை.
காங்கிரஸ் கட்சி பலமான கட்சி தான்; இல்லை என்பார் இல்லை.
காங்கிரஸ் கட்சிக்கு அளவற்ற பணபலம், அதையும் நான் குறைத்து
மதிப்பிடச் சொல்லவில்லை. பண்டித ஜவகர்லால் நேருவுக்குச்
செல்வாக்கு இல்லை என்று பேசுகின்ற சிறுமதி படைத்தவன் அல்ல
நான்; பண்டித ஜவகர்லாலுக்கு நேருவுக்கு இருக்கிற செல்வாக்கை
எதிலே இருந்து தெரிந்து கொள்கின்றோம்? அவர் அமெரிக்காவுக்குப்
போனால் அமோகமாக வரவேற்கப் படுகிறார். சீனாவுக்கு போனால்
இராஜோபசாரம் நடத்துகின்றார்கள். இலண்டனுக்குப் போனால்
இராணியாலே வரவேற்கப் படுகின்றார். ஜெர்மனிக்குப் போனால்
அங்கே இருக்கின்ற பெருந்த் தலைவர்கள் கைகுலுக்குகின்றார்கள்.
இரஷ்யாவுக்குப் போனால் குருஷேவும் புல்கானினும் போட்டி
போட்டுக்கொண்டு அவருக்கு உபசாரம் செய்கின்றார்கள். இவைகளைப்
பார்த்துப் பண்டித ஜவகர்லால் நேருவுக்குப் பெருஞ் செல்வாக்கும்
மதிப்பும் இருக்கிறது என்று நாம் கணக்கெடுக் கின்றோம்.
இதே செல்வாக்கு யாராருக்கு இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்தால்,
போன வாரத்திலே இந்தியாவுக்கு வந்திருக்கின்ற பிரமுகர்களில்
திபெத் நாட்டைச் சேர்ந்த இரண்டு லாமாக்கள் வந்திருக்கின்றார்கள்.
ஒருவருடைய பெயர் தலாய் லாமா; மற்றவருடைய பெயர் பஞ்சன் லாமா.
இவர்களுக்கு இந்தியாவிலே எந்த அளவுக்கு வரவேற்பு என்றால்,
ஆகாய விமானத்தில் அவர்கள் இறங்கிய நேரத்தில், பாலம் விமான
நிலையத்தில் இராஜேந்திர பிரசாத்தும் பண்டித ஜவகர்லால் நேருவும்
போட்டியிட்டுச் சென்றார்கள் வரவேற்க; வேதாந்தத்தை உணர்ந்த
டாக்டர் இராதாகிருஷ்ணன் லாமாக்களை வரவேற்கப் போனார். ஆயிரக்கணக்கான
மக்கள் விமான நிலையத்தில் அணிவகுத்து நின்றார்கள். டில்லியினுடைய
இராஜ பவனத்திலேயும், இராஜ வீதிகளிலேயும், ஏராளமான மக்கள்
நின்றார்கள். அவர்களுக்கு உற்சாகமான ஊர்வலம் நடத்தினார்கள்.
சில பக்தர்கள் லாமாக்கள் நடந்து வந்து கொண்டிருந்த நேரத்தில்
பாதையிலே அடியற்ற நெடுமரம் போல விழுந்து அவர்களுடைய ஆசீர்வாதத்தைப்
பெற்றார்கள். லாமாக்கள் ஒரு உயர்ந்த பீடத்திலே அமர்ந்து
கொண்டு, தங்கள் காலிலே வீழ்ந்து வணங்கியவர்களுக்குப் பட்டுத்
துணியைக் கொஞ்சம் கொஞ்சம் கிழித்து மந்திரம் செபித்து
அந்தத் துணியை எல்லாம் கொடுத்தார்கள். அந்தக் கிழிந்த கந்தலை
லாமாவினுடைய கைபட்டது என்ற காரணத்தாலே லாமாவினுடைய ஆசீர்வாதம்
கிடைத்தது என்று நம்பி கண்களிலே ஒற்றிக்கொண்டு புனிதப்
பொருளைப் போல பக்தர்கள் காப்பாற்றினார்கள். இதை நான் ஏன்
சொல்கின்றேன் என்றால் தலாய்லாமாவுக்கும் பஞ்சன் லாமாவுக்கும்
இந்தியாவிலே இந“த அளவுக்கு வரவேற்புக்கிடைத்தது. இதைத் திபெத்
நாட்டுப் பத்திரிகையிலே படிக்கிறவர்கள், பஞ்சன் லாமாவுக்கும்
தலாய் லாமாவுக்கும் இந்தியாவில் அமோகமான வரவேற்பு என்று
பூரிப்பு அடையத்தான் செய்வார்கள். ஆனால் இந்த அளவுக்கு வரவேற்புக்
கொடுத்தார்களே தவிர, தலாய் லாமாவையும் பஞ்சன் லாமாவையும்
வேலூரிலே உள்ள நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா? காட்பாடியிலே
உள்ள மக்கள் அவர்கள் காலிலே விழுந்து கும்பிட முடியுமா?
இஸ்லாமியர்கள் ‘அவரை எங்களுடைய குரு’ என்று ஏற்றுக்கொள்ள
முடியுமா? கிறிஸ்தவர்கள், இவர்தான் எங்களுக்குக் கண்கண்ட
கடவுள் என்று காட்டிக் கொள்ள முடியுமா? அல்லது இந்துக்களாவது
லாமாக்களைப் பார்த்து இவர்களுக்கு இந்த அளவு வரவேற்பு இருக்கிறது;
உற்சாகமிருக்கிறது மக்களிடத்தில், ஆகையினால் இவர்களை ஏற்றுக்கொள்ள
முடியும் என்று சொல்ல முடியுமா என்றால், அவர்களுடைய கதையை
நீங்கள் பார்த்தால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நான் உங்களை இப்போது எண்ணிப்பார்க்கச் சொல்வது, டில்லியிலும்,
கல்கத்தாவிலும் பம்பாயிலும், லக்னோவிலும், பிற இடங்களிலும்
தலாய் லாமாவுக்கும் பஞ்சன் லாமாவுக்கும் இந்த அளவு செல்வாக்கு
இருக்கிறது என்ற காரணத்தினாலே நாம் அவர்களைக் கடவுள் என்று
ஏற்றுக்கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
போன மாதத்தில் அபிசீனிய மன்னர் வந்தார். அபிசீனிய மன்னருக்கு
அமோகமான வரவேற்பு அளித்தார்கள். அபிசீனிய மன்னருக்கு அமோகமான
வவரேற்பு அளித்த காரணத்தினாலேயே அபிசீனிய மன்னர், இந்த நாட்டுக்கு
“ராஜா” வாகட்டும். அல்லது இந்துமதக் குருவாகட்டும் என்று
யாராவது ஏற்றுக்கொள்வார்களா என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களை எல்லாம் கூட விட்டுவிடுவார்கள். மக்கள் வெள்ளமே
திரண்டு போயிற்று. குருஷேவுக்கும், புல்கானினுக்கும். குருஷேவுக்கும்,
புல்கானினுக்கும் இந்த அளவுக்குச் செல்வாக்கு இருக்கின்ற
காரணத்தினாலே அவர்களே வந்து தலைவர்கள் ஆகட்டும் என்று யாராவது
ஏற்றுக்கொள்வார்களா? என்ன சொல்வார்கள் அவர்கள்? நேருதான்
இருக்கவேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் போராடுவார்களே
தவிர, செல்வாக்கு பெற்ற புல்கானின் வரட்டும் குருஷேவ் தலைமை
வகிக்கட்டும் என்ற எந்தக் காங்கிரஸ்காரனும் சொல்ல மாட்டான்.
நான் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் அந்தந்த நாட்டுக்குள்ள
தலைவர்களை அந்தந்த நாட்டுக்காரர் போற்றத்தான் செய்வார்கள்.
அந்த வகையிலே பார்த்தால், அண்ணாத்துரை, பண்டித நேரு நம்முடைய
நாட்டுரக்கரல்லவா என்று நீங்கள் கேட்கலாம். அதிலே தான் நமக்கும்
மற்ற அரசியல் கட்சிகளுக்கும் அடிப்படையிலே வித்தியாசம் இருக்கிறது!
பண்டித நேரு அவர்கள் செல்வாக்குப் பெற்றவரா? என்று என்னைக்
கேட்டால், “ஆம்” என்கிறேன் நான். “அறிவாளியா?” என்று கேட்டால்,
நிச்சயமென்கிறேன் நான். “ஆற்றல் உள்ளவரா?” என்று கேட்டால்,
“நிரம்ப ஆற்றல் படைத்தவர்” என்கிறேன் நான். “பார் முழுவதும்
செல்வாக்கு இருக்கிறதா?” என்று கேட்டால் “கட்டாயம்” என்கிறேன்
நான். “ஆனால் அவர் நம்முடைய நாட்டுக்காரரா? என்று கேட்டால்,
“இல்லை” என்று திட்டவட்டமாக நான் சொல்லுகின்றேன். இது ஒன்றுதான்
எனக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்.
மற்ற அரசியல் கட்சிகள் நேருவுக்கு அறிவுச் சூனியம் என்று
பேசுகிறார்கள். நான் அப்படிப் பேசுபவன் அல்ல. மற்ற அரசியல்
கட்டிக்காரர்கள் நேருவுக்குச் செல்வாக்கே கிடையாது என்கிறார்கள்.
நான் அப்படிக் குறைவாக மதிப்பிடுபவன் அல்ல. மற்றக் கட்சிக்காரர்கள்
நேரு நல்லவர் என்று சொல்கின்றார்கள். அதையும் நான் குறை
சொல்லவில்லை.
ஆனால் மற்றக் கட்சிக்காரர்களே நேரு நம்மவர் என்கிறார்கள்.
நான் நேரு நம்மவர் அல்ல என்கிறேன்.
தலாய்லாமா நமக்கு எப்படியோ, புல்கானின் நமக்கு எப்படியோ,
குருஷேவ் நமக்கு எப்படியோ, அபி சீனிய மன்னர் நமக்கு எப்படியோ,
எலிசபெத் இராணியார் நமக்கு எப்படியோ, ஐசன்ஹோவர் நமக்கு
எப்படியோ அப்படி வரவேற்கத்தக்க விருந்தாளி நேரு என்றால்
நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். ஆனால் அவர்
நம்மை எல்லாம் ஆட்டிப் படைக்கத்தக்கவர், நம்மை எல்லாம் ஆள்ததக்கவர்,
என்று சொன்னால் அதிலே பயன் இல்லை.
பக்கத்து வீட்டு மாமரம் இனிப்பான பழங்கொடுக்கிற காரணத்தாலேயே,
அது நம்முடைய வீட்டு மாமரம் என்றால், அவர்கள் கூடச் சண்டைக்கு
வருவார்கள். நம்முடைய வீட்டு மாமரத்துடைய மாங்காய் கொஞ்சம்
புளிப்பாக இருக்கிறது. அதிலே ஊறுகாய் போட்டுச் சாப்பிடுவதிலே
இருக்கிற பெருமை பக்கத்துவீட்டு மாங்காயைக் கள்ளத் தனமாகப்
பறித்து போடுகிற ஊறுகாயிலே இனிமை இருக்காது; மானமும் தக்காது.
அதைப்போல ஒரு நாட்டுக்குத் தலைவனை நீங்கள் தேர்ந்தெடுக்க
வேண்டுமானால், யார் உயர்ந்த நிலையில் இருக்கின்றாரோ அவரை
அழைத்துக்கொண்டு வந்து நான் தலைவராக்குகிறேன் என்று இருக்கிற
அரசியல் குருட்டுத்தனம் இந்த நாட்டிலே மெத்தப் பதவி இருக்கிறது.
ஆகையினால் தான் எந்தெந்த நேரத்திலே யார் யார் உயர்ந்திருக்கின்றார்களோ,
எந்தெந்த நேரத்திலே யாருக்குச் செல்வாக்கு இருக்கின்றதோ,
அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்கள் ‘எங்கள் தலைவர்’ எங்கள்
தலைவர் என்று இந்த நாட்டிலே அரசியல் கட்சிகள் வரவேற்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் துணிந்து, ஆனால் தூய
உள்ளத்தோடு உறுதியாக அதே நேரத்திலே பிறரை இழிவாகக் கருதாமல்
எடுத்துச் சொல்லுகிறது; அந்தந்த நாட்டுக்குத் தலைவர்கள்
உண்டு; அதைப்போல இந்த நாட்டுக்குரிய தலைவர்களை நீங்கள்
தேடுங்கள். நாங்கள் அந்தத் தகுதிக்கு ஏற்றவர்கள் அல்லாமல்
இருக்கலாம். பெரியார் சொல்லுவதைப்போல ‘இவர்கள் அதற்கு
யோக்யதை அற்றவர்கள்’ என்று அவர் சொல்லுவதிலே அர்த்தமிருக்கக்கூடும்.
ஆனால் அவருக்கு அந்த யோக்யதை உண்டல்லவா? அவரைத் தலைவராக
ஏற்றுக்கொள்ளுவோம்; நேருவை அல்ல. அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளுவோம்;
நேருவை நம்பி வாழுகிற காமராசரை அல்ல என்று நாமெல்லாம் இன்றைய
தினம் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.
|