அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தேர்தலில் நாம்
2

இந்த முதல் கட்டத்தில் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டு வதெல்லாம், நேரு பண்டிதர் ஆற்றல் மிக்கராவக இருந“தாலும், நம்முடைய நாட்டுக்காரர் அல்ல. நம்முடைய நாட்டுக்காரராக இல்லாத காரணத்தினால்தான் சென்ற மாதத்தில் அரியலூரில் பயங்கரமான விபத்து ஏற்பட்டு சர்க்காருடைய கணக்குப்படி 150 பிணங்களைக் கண்டுபிடித்து எடுத்தார்கள்; சர்க்கார் தேடிப்பார்த்து இது ஆனா பெண்ணா என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இதற்கு கை எங்கே கால் எங்கே என்று தேடிப்பார்த்து, வெட்டுப்ட்ட கையை உடலிலே ஒட்டிப் பார்த்து ஓ இது இதனுடைய கை அல்ல என்று தூக்கிப் போட்டு ‘அவர்’ ‘இவர்’ என்று சொல்லிக் கொண்டிருந்த உருவங்களை எல்லாம் ‘அது’ ‘இது’ என்று சொல்லி, பள்ளம் வெட்டி அதிலே போட்டு, பெட்ரோலையும் ஊற்றிக்கொளுத்தி விட்டு ‘எத்தனைபேர் செத்தார்கள்’ என்று கேட்டால் ‘நாலு குவியல் இருக்கும் என்ற கணக்குக் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட பயங்கர விபத்து அரியலூரிலே தோன்றிற்று.

பண்டித ஜவகர்லால் நேரு நம்மவராக இருந்திருப்பாரானால், நம்முடைய நாட்டுக்காரராக இருந்திருப்பாரானால், நம்முடைய நாட்டினுடைய உண்மையான தலைவராக இருந்திருப்பாரானால் இங்கே வந்திருக்க வேண்டாமா? அரியலூர் விபத்தைக் கேள்விப்பட்டவுடன் டெல்லி பாராளுமன்றத்தில் இங்கே இருந்து போன என் நண்பர் முத்துச்சாமி வல்லத்தரசுதான் குழந்தை போலத் தேம்பித் தேம்பி அழுதார் என்று பத்திரிகைகளிலே நாம் பார்த்தோம்.

பண்டித நேருவுக்கு வந்த கவலை அத்தனையும், என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் ம.பொ.சிவஞானம் பத்திரிகையில் எழுதி இருப்பதைப்போல் தம்முடைய உயிர்த்தோழர், தம்முடைய உற்ற நண்பர், லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்து விட்டாரே என்று அந்தக் கவலையைத் தெரிவித்தாரே தவிர, உண்மையிலேயே அவர் இந்த நாட்டுக்காரர் ஆனால் இந்த நாட்டுக்கு உடையவர் ஆனால், நம்முடைய இனத்தவர் ஆனால் நம்முடைய இரத்தமும், அவருடைய இரத்தமும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையது என்று சொல்லிக் கொள்ளத்தக்க வகையிலே நமக்கும் அவருக்கும் பந்தமும் பாசமும் இருக்குமானால், அரியலூர் விபத்தைக் காண்பதற்கு ஓடோடி வந்திருக்க மாட்டாரா என்று கேட்கறேன். காங்கிரஸ்காரர்களே, நண்பர்களே, தமிழர்களே, நல்லறிவு படைத்தவர்களே, நீங்கள் தயவு செய்து இந்த ஒரு கட்டத்தை எண்ணிப்பாருங்கள்.

பம்பாயிலேயும், வங்கத்திலேயும், பீகாரிலேயும், மற்றப் பல இடங்களிலும் விபத்துக்கள் நேரிடுகின்ற நேரத்திலே அஸ்ஸாமிலே நேரிடுகின்ற நேரத்தில், இதே பண்டித ஜவகர்லால் நேருவுக்கு அங்கெல்லாம் போக வேண்டும் என்று அக்கரை இருக்கிறது. துடி துடிக்கின்றார். இரயிலில் போனால் நேரமாகும் என்று ஆகாய விமானத்தில் ஏறிப் பறக்கின்றார். அஸ்ஸாமிலே நேரிட்ட வெள்ளத்தை நேரடியாகப் போய் பார்ப்பதற்கு பாதைகள் உடைந்துவிட்டன; ‘வரவேண்டாம்’ என்று தந்தி கொடுக்கின்றார்கள் அஸ்ஸாமிலே உள்ள அதிகாரிகள். “ஜீப் போகின்ற பாதைகள் உடைந்து விட்டால் என்ன? ஆகாய விமானத்திலே வருகிறேன்” என்கிறார்.
வெள்ளம் இன்றைய தினம் வருகிறது; மக்கள் கஷ்டப்படுகிறார்கள்; நாலுநாள் ஆவதற்குள் ஆகாய விமானத்தில் பறந்து சென்ற பண்டித ஜவகர்லால் நேரு, அஸ்ஸலாம் பிரதேசம் முழுவதையும் சுற்றிப் பார்க்கிறார். தன்னுடைய ஆகாய விமானத்திலே இருந்து உணவுப் பொருள்களை மூட்டை கட்டிப் பாராசூட் மூலமாகக் கீழே போடச் சொல்லுகின்றார். பெரிய பெரிய மோட்டார் லாரிகளில் ஆயிரக் கணக்கான மூட்டைகள் கோதுமையை ஏற்றி அஸ்ஸலாமுக்கு அனுப்பி வெள்ளத்திலே கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று சொல்லுகின்றார். இதை நான் சொல்வதற்குக் காரணம், அவ்வளவு ஈர மனம் படைத்தவர்; அவ்வளவு இரக்க குணம் படைத்தவர். மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் இதயம் அவ்வளவு துடிக்கின்றது. மக்களுக்கு அவதி விளைகிறது என்றால், அவருக்கு-அந்த அளவு இரக்கம் படைத்தவருக்கு 150 பேர் இங்கே செத்தார்கள் என்றால் இரக்கம் வரவில்லை.

வடக்கே ஏற்படுகின்ற அபாயங்களைக் கண்டு மனம் பதைக்கின்றவருக்கு நம்முடைய மக்கள் இவ்வளவு பேர் சாகின்றார்கள் என“றால் ‘ஏன்’? என்று கேட்பதற்கு நெஞ்சத்திலே அன்பு எழவில்லை என்றால், என்ன பொருள் அதற்கு, அவர் வேறு நாம் வேறு என்பது தவிர? அவர் வேறு நாட்டுக்காரர், நாம் வேறு நாட்டுக்காரர் என்பது தவிர? புல்கானின் எப்படி வரவில்லையோ அப்படித்தான் நேரு இங்கே வரவில்லை. தலாய்லாமா எப்படி வரவில்லையோ அப்படித்தான் அவரும் இங்கே வரவில்லை. ஐசனோவர் எப்படி வரவில்லையோ அப்படித்தான் அவரும் இங்கே வரவில்லை.

ஐசனோவர் எப்படி அநுதாபச் செய்தி அனுப்பினாரோ அப்படித்தான் அவரும் அனுதாபச் செய்தி அனுப்பினார்.

தலாய்லாமா எப்படி 100 ரூபாய் நன்கொடை கொடுப்பாரோ அப்படித்தான் அவர் கொஞ்சம் பணம் கொடுத்தார்.

சவுதி அரேபியா மன்னர் இருந்தால் எவ்வளவு பணம் தருவாரோ அதில் பத்திலே ஒரு பாகம் இவர் கொடுத்திருக்கிறார். இவ்வளவு தான் அவரால் முடிந்ததே தவிர, நம்மவரானால் அரியலூருக்கு வந்திருப்பார், வந்திருப்பது மட்டுமல்ல, நம்முடைய குடும்பத்தார் யாராவது இருக்கிறார்களா என்று கிளறிப் பார்த்திருப்பார், தன்னுடைய உற்றார் உறவினர் யாராவது செத்து விட்டார்களா என்று துக்கம் விசாரித்திருப்பார். அந்தப் பிணக்குவியலைப் பார்த்தவுடன் என்னுடைய ஆட்சியிலா இப்படி ஏற்பட வேண்டும்? என்று மாரடித்துக் கொண்டு மக்களைப் பறிகொடுத்த மாதாக்களைப் போல அழுதிருப்பார். என்ன செய்தார் பண்டிதநேரு? என்ன செய்ய முடிந்தது பண்டித நேருவினால்? இதனாலே பண்டித நேருவைக் குறை சொல்லுகிறேன் என்று நீங்கள் கருதவேண்டாம். ஐந்து பிள்ளைகளைப் படைத்த ஒரு நண்பனை விசாரிப்பதற்கு வந்தானாம் ஒரு நண்பன். உனக்கு எவ்வளவு குழந்தைகள் என்று கேட்டனாம். உள்ள குழந்தை ஐந்து என்றானாம். அந்த நேரத்திலே கூரை பற்றி எரிந்து கொண்டிருந்ததாம். ‘உன்னுடைய பிள்ளைகளிலே நல்லவன் யார்? என்று கேட்டானாம் நண்பன். “அதோ கூரையைக் கொளுத்துகிறானே அவன்தான் என்னுடைய பிள்ளைகளில் நல்லவன், நம்முடைய கூரைவரை கொளுத்துகிறான். மற்றவர்கள் ஊர்க் கூரை எல்லாம் கொளுத்துவார்கள் என்றானாம். அதைப்போல நமக்குக் கிடைத்த தலைவர்களிலேயே நல்லவர் பண்டிதநேரு. அவருடைய நிலைமை இப்படி என்றால், மற்றவர்கள் வந்தால் நம்முடைய கதி என்ன என்பதைத் தயவு செய்து எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆகையினாலே தான் தி.மு.க. இந்த நாட்டுக்கு உரிய கட்சி. இந்த நாட்டுக்குரிய தலைவர்களைத் தேடிக்கொள்ளுவதற்கு ஒரு வாய்ப்பு என்று சொல்லுகிறதே தவிர, தேர்தலில் போட்டியிட்டுப் பாருங்கள் என்று சொல்லவில்லை.

நம்முடைய மதிப்புக்குரிய அமைச்சர் பக்தவச்சலம், போகிற ஊரிலே எல்லாம் இரத்தனச் சுருக்கமாகப் பேசுகிறாராம். இப்போது இருக்கிற பிரச்சினை எல்லாம் ஒரே ஒரு பிரச்சினை. நீங்கள் நேருவை நம்பப் போகிறீர்ளா? அண்ணாத்துரையை நம்பப் போகிறீர்களா? நேருவுக்குச் செல்வாக்கு அதிகமா? அண்ணாத்துரைக்குச் செல்வாக்கு அதிகமா? என்று அமைச்சர் மக்களைக் கேட்டால் நானே சொல்லுவேன் என்னைவிட நேரு அவர்களுக்கு செல்வாக்கு நிரம்ப இருக்கிறது. ஆனால் நான் பக்தவச்சலம் அவர்களுக்கு நான் சொல்லுவேன், நேருவினுடைய வாழ்க்கை வரலாற்றில் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது. அண்ணாத்துரையினுடைய வாழ்க்கை வரலாறு, முதல் அத்தியாயம் எழுதி, அது சரி இல்லை என்று அடித்துவிட்டு, இரண்டாவது அத்தியாயம் எழுதி அதிலே நால்வரி கலைத்துவிட்டு, மூன்றாவது அத்தியாயம் எழுதி, அதிலே மூன்றுவரி எடுத்து விடு, நான்கு வரி எடுத்து விடு என்று பெரியார் இராமசாமி சொல்கிற அளவிலே இருக்கிறது.

ஆகையினாலே இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனற்ற காரியம். கட்டி முடிக்கப்பட்ட கோபுரத்தையும், கட்டுவதற்காகக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கிற செங்கல்லையும் பார்த்து, “அந்தக் கோபுரம் ஆகுமா இந்தச் செங்கல் என்று கேட்பவனை, புத்தியில் மட்டமானவன் என்று ஊரார் சொல்லுவார்கள். மந்திரி என்ற காரணத்தினாலே அவரை அப்படித்துச்சமாக நாம் கருத வேண்டாம். ஆழ்ந்து யோசியுங்கள் என்று மட்டும் அமைச்சர் பெருமானுக்கு நான் சொல்லிக் கொள்ளுவேன்.

பண்டிதநேரு அவர்களுக்குச் செல்வாக்கு அதிகம் தான் என்றாலும், செல்வாக்கு அதிகம் என்பதாலேயே அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளுவதென்பது அரசியல் தத்துவம் ஆகாது. அரசியல் தத்துவம் என்பது யாருக்கு நல்ல ஆற்றல் இருக்கிறதோ அவரைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால், வெள்ளைக்காரனை ஏன் ஓட்டினோம். வெள்ளைக்காரனை ஆற்றல் அற்றவன், அறிவிலாதவன், உலகத்திலே செல்வாக்கு இல்லாதவன், ஏதும் செய்ய இயலாதவன் என்ற காரணத்தினாலா இந்த நாட்டை விட்டுப் போகச்சொன்னோம். அதை நீங்கள் நம்முடைய வேலூரில் உள்ள பழைய காங்கிரஸ்காரர்களை எல்லாம் கேட்டுப் பாருங்கள். இந்தக் கோட்டை மைதானத்திலே கூட்டம் போட்டுக் கோடையிடிகளும் மற்றவர்களும், வந்திருக்கிற மக்கள் எல்லாம் குலை அறுந்து ஓடுகிற அளவுக்கு மேசையைத் தட்டித் தட்டிப் பேசினார்களே, வெள்ளைக்கார ஆட்சிப் போக வேண்டும் என்று என்ன காரணத்தாலே வெள்ளைக் காரனைப் போகச்சொன்னார்கள்? வெள்ளைக்காரனுக்கு ஆளத் தெரியவில்லை என்றா? வெள்ளைக்காரனுக்கு ஆற்றல் இல்லை; அறிவு இல்லை என்றா? அப்படி ஒன்றும் இல்லை. வெள்ளைக்காரனுக்கு அறிவு இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது. அவன்தான் முதன் முதலில் இரயிலைப் பார்க்கச் செய்தான் நம்மை. நமக்குச் தசரதன் காலத்திலே தபாலாபீஸ் இல்லை. இராமன் காலத்திலே இரயில் வண்டி பார்த்ததில்லை. அரிச்சந்திரன் காலத்திலே ஆகாய விமானத்திலே போனது இல்லை. மற்றும் இருந்த பெரியவர்கள் காலத்தில் எல்லாம் நம்முடைய நாட்டுக்குத் தேவையான எந்த வசதியும் இருந்தது இல்லை.

வெள்ளைக்காரன் காலத்திலே தான் வசதி கிடைத்தது. அவ்வளவு ஆற்றல் படைத்தவன், ஆனாலும் அறிவு மிகுந்தவன். ஆனாலும் அவன் அந்நியன், ஆகையினாலே வெளியே வேண்டும் என்ற ஒரே வாதத்தைத்தான் சொன்னோம். அந்த காங்கிரஸ் தலைவர்களை நீங்கள் கேளுங்கள்.

அந்நியன் என்ற காரணத்தாலே வெள்ளைக்காரனை வெளியே போகச் சொன்னது போல், வட நாட்டுக்காரர்களும் அந்நியர்கள், ஆகையினாலே அவர்கள் ஆட்சியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று எடுத்துச் சொல்வது எந்த வகையில் தப்பு என்று கேளுங்கள். எந்த வகையில் அது நியாயக் குறைவு என்று கேட்டுப் பாருங்கள்.

வடநாட்டுக்காரர்கள் வெள்ளைக்காரர்களைப் போல, அமெரிக்க நாட்டுக்காரர்களைப் போல, நமக்கு அந்நியர்கள் என்பதற்கு ஆயிரத்து எட்டு எடுத்துக்காட்டுகளை, நாங்கள் மேடை தவறாமல் தந்து வந்திருக்கிறோம். வெள்ளைக்காரன் நமக்கு எதனாலே அந்நியன். அவன் பேசினால் நமக்குப் புரியாது; நாம் பேசுவது அவனுக்குத் தெரியாது. நாம் பேசுவது தமிழ்; அவன் பேசுவது ஆங்கிலம், ஆகையினாலே அந்நியன் என்றோம். அதே அடையாளத்திலே நீங்கள் வடநாட்டுக்காரனைப் பார்த்தால், நாம் பேசுவது தமிழ், அவன் பேசுவது இந்தி, துன்முகி அல்லது வங்காளி, பீகாரி என்று ஏதாவது ஒருவகை மொழியாக இருக்கும். மொழியிலே நமக்கும் அவனுக்கும் ஒற்றுமை இல்லை. நாம் நாலு முழம் வேட்டி கட்டுகிறோம். அவன் பன்னிரண்டரை கட்டுகிறான். நாம் முன்னாலே சொருகுவோம். அவன் பின்னாலே இழுத்துச் சொருகினால்தான் துணி நிற்கும். நாம் ஆறு கண்டால் குளிப்போம். அவன் ஆறு கண்டால் கன்னத்திலே போட்டுக் கொள்ளுவான். நாம் காடுகிடைத்தால் வேட்டைக்குச் செல்வோம். அவன் காடுகளைப் பார்த்தால், இங்குதான் இராமசந்திரன் சீதாபிராட்டியோடு போனார் என்று கருதி கன்னத்திலே போட்டுக்கொள்ளுவான். நாம் நாளைக்கு ஒரு தடவையாவது குளிப்பதுதான் உடலுக்கு ஆரோக்கியம் என்று கருதுவோம். அவன் கங்கைக்குப் போனாலும், காவேரிக்குப் போனாலும், இராமேஸ்வரத்திற்குப் போனாலும், போட்ட சட்டையைக் கழற்றாமல், இருக்கிற தண்ணீரைக் மொண்டு மேலே ஊற்றிக் கொண்டு தானாக உலரட்டும் என்று விட்டுவிடுவான். கடை வீதியிலே நம்முடைய தோழர்கள் உட்கார்ந்து வியாபாரம் செய்வார்கள். வடநாட்டுக்காரனுக்கு நீங்கள் கடை கொடுத்துப் பார்த்தால் தெரியும். அவன் படுத்துக் கொண்டேதான் வியாபாரம் செய்வான். நம்முடைய கணக்கெல்லாம் இடப்புறம் இருந்து வலப்புறம் எழுதுவோம். அவனுடைய கணக்கெல்லாம் மேலே இருந்து கீழே எழுதுவான். நாம் அரிசிச் சாதம் சாப்பிடுவோம். அவன் கோதுமை உணவு சாப்பிடுவான். எதிலே நாமும் அவனும் ஒன்று? எதிலே நமக்கும் அவனுக்கும் பந்தம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது? வேலூரிலே இருக்கிற மாசிலாமணிச் செட்டியார் பார்த்து ஒரு கொக்கி மாட்டுகிறேன் என்கிறார். இராமசாமி முதலியார் பார்த்து நான் அந்தக் கொக்கிக்குச் கொஞ்சம் பாலிஷ் போடுகிறேன் என்கிறார். மாணிக்கவேலர் பார்த்து கொக்கி அறுந்து விடாமல் நான் பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கொள்ளுகிறேன் என்கிறார். இவ்வளவுதானே தவிர, வடநாட்டுக்கும், தென்னாட்டுக்கும், வடநாட்டுக்காரர்களுக்கும், நமக்கும் எந்த வகையிலே ஒற்றுமை இருக்கிறது? எந்த வகையிலே பாசம் இருக்கிறது? எப்படி நாம் அனைவரும் ஒன்று என்று காங்கிரஸ்காரர்களைக் கேட்க விரும்புகிறேன்.

மொழியிலே வேறு வேறு; நடை நொடி பாவனைளில் வேறு; உணவு உடையிலே வேறு; உணர்ச்சியிலே வேறு. அரியலூர் சம்பவத்தை நீங்கள் எண்ணிக் கொண்டால் அவர்களுடைய உற்சாகம் வேறு, அவர்களுக்கு வருகிற வருத்தம், வாட்டம் வேறு. நமக்கு ஏற்படுகின்ற விபத்தின் போது நமக்குத்தான் வாட்டம் வருத்தம் வருகிறது. ஆகையினால் நண்பர்களே! இந்தத் தேர்தலில், நீங்கள் முதலில் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டியதெல்லாம், மற்றக் கட்சிக்காரர்களைப் போல், காங்கிரசைக் குறை சொல்லி, காங்கிரசைப் பழித்துப் பேசி நேரு பண்டிதரைக் குறைவாகப் பேசி, அவர்கள் வேண்டாம் எங்களை உட்கார வையுங்கள் என்று நாங்கள் போட்டிக்கு அழைக்கிறோம், என்று நீங்கள் கருதாமல், அவர் எவ்வளவு பெரியவர் ஆனாலும் எவ்வளவு ஆற்றல் படைத்தவர் ஆனாலும், அவர் அந்நியர், வடநாட்டுக்காரர்; எனவே அவர் அங்கேயே இருக்கட்டும் நாம் இந்த நாட்டுக்காரர்கள் இந்த நாட்டுக்குச் சொந்தமான ஒரு கட்சியை இந்த நாட்டு மக்களாலே கண்காணிக்கக் கூடிய ஒரு கட்சியை, இந்த நாட்டுக்காரராலே திருத்தக்கூடிய ஒரு கட்சியை, இதிலே உள்ளவர்களை வெற்றி பெறச் செய்வோம் என்று நீங்கள் துணிந்து இந்தக் காரியத்திலே இறங்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒன்று, உங்களை நான் கேட்டுக் கொள்ளுவேன். மாசிலாமணிச் செட்டியார் இன்றைய தினம் இங்கே எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.யாக அவர் ஏதாவது நீங்கள் எதிர்பார்க்கிற காரியத்தைச் செய்யத் தவறுகிறார் என்றால் நீங்கள் மாசிலாமணிச் செட்டியாரைக் கேட்கிறீர்கள், என்னய்யா செட்டியரே, தேர்தல் காலத்திலே இன்னின்னது சொன்னீர்களே, செய்ய முடியவில்லையே என்று, மாசிலாமணிச் செட்டியார் சொல்லுகிறார், ‘இருங்கள், நான் போய்க் காமராஜரைக் கேட்டுவிட்டு வருகிறேன்’ என்று காமராசரைப் போய் மாசிலாமணிச் செட்டியார் கேட்டதும், காமராசர்’ ஆகட்டும் என்று சொல்ல முடியாது. ‘வேண்டாம்’ என்றும் சொல்ல முடியாது ‘இருங்கள் நான் நேருவைக் கேட்டுச் சொல்லுகிறேன்’ என்று அவர் சொல்லுவார். நேருவைப் போய் காமராசர் கேட்டதும், நேரு என்ன உத்தரவிடுகிறாரோ அது காமராசருக்கு தபாலிலே கிடைத்தது. அவர் அந்தத் தபாலை மாசிலாமணிச் செட்டியாரிடத்திலே காட்டி, மாசிலாமணிச் செட்டியார் உங்களிடத்திலே காட்ட வேண்டும்.

இதை நீங்கள் எண்ணிப் பார்த்தால் இரண்டு தபால் பெட்டி இருப்பதைக் காணலாம். இடையிலே ஒரு ஜங்ஷன் இருப்பதைப் பார்க்கலாம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீங்கள் நம்முடைய சாரதி அவர்களையோ, அல்லது நாம் சொல்லுகிற யாராவது ஒரு தோழரையோ, தேர்தலில் வெற்றி பெறச் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நடக்க வேண்டும் என்று கருதுகிற காரியத்தை, சாரதியைப் பார்த்து, “என்னய்யா, தேர்தல் காலத்தில் அப்படி எல்லாம் சொன்னீர்கள், இந்த காரியத்தை நடத்தவில்லையே” என்று கேட்டால் சாரதி சுருக்கமாகச் சொல்லலாம் “எங்களுடைய தலைமைக் கழகத்தைக் கேட்கிறோம்” என்று. தலைமைக்கழகத்திலே வந்து நம்முடைய நாவலர் நெடுஞ்செழியனைப் பார்த்து, நண்பர் சாரதி அவர்கள் எங்கள் வேலூருக்கு இன்ன காரியம் செய்ய வேண்டும் என்று கேட்டால் நாவலர் நெடுஞ்செழியன், “இருங்கள் நான் வடக்கே போய் கேட்கிறேன்” என்று தபாலை அங்கே அனுப்பமாட்டார். அவரே படித்துப் பார்த்து, முடிந்தால், முடியும் என்பார், முடியாது என்றால் முடியாது என்று சொல்லி அதற்குரிய காரணத்தை விளக்குவார். விளக்கியான பிறகு, நீங்கள் சாரதியையும் கேட்கலாம். நெடுஞ்செழியனையும் கேட்கலாம். காங்கிரஸ் காரர்களைத் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு அந்த வசதி இல்லை. அந்த உரிமை இல்லை. மாணிக்கவேலர்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். கட்சி மாறிவிட்டார். யாராவது கிட்டப்போய் கேட்க முடிகிறதா?

மந்திரியைப் போய் யார் பார்க்கிறார்கள்? மந்திரியைப் போய் பார்க்கக் கூடியவர்கள் எல்லாம், மார்க்கெட்டுக் காண்டிராக்டு வேண்டும் என்பவரும், ஜில்லா போர்டு காண்டிராக்டு வேண்டும் என்று கேட்பவரும், பாலம் கட்ட எனக்குக் காண்ட்ராக்ட் கொடுங்கள் என்ற கேட்பவர்களும், இப்படிப்பட்டவர்கள்தான் போவார்கள். ஆகையினால் ‘ஏன் கட்சி மாறிவிட்டீர்கள்?’ என்று இவர்களே கேட்க மாட்டார்கள். ஏன் என்றால் இவர்களே பல கட்சிகளைப் பார்த்தவர்கள்.

ஆகையினாலே, கட்சி மாறுகிற தலைவர்கள், வேறு இடத்திலே தலைமைக் கழகம் வைத்துக் கொண்டிருக்கிற காட்சிகள் இவைகளையெல்லாம் நீங்கள் நம்பினால், எதிர்காலத்திலே மெத்த ஏமாற்றத்தை அடைவீர்கள்.

யானையின் மேல் ஏறிச் செல்பவனைச் சுண்ணாம்பு கேட்கிற கதையில், ஓங்கி வளர்ந்துவிட்ட காங்கிரசைக் கொண்டு, மக்களாட்சிக்கு சாதகம் செய்து கொள்ள முடியாது.

உங்களைப் போல பாதையிலே நடப்பவர்கள், உங்களைப் போல நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக் கூடியவர்கள். இவர்களாகப் பார்த்து அனுப்பினால்தான் நாளைய தினம் நமக்குத் தேவையான காரியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆகையாலே நீங்கள் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டுவதற்குள்ள இரண்டாவது காரணம், தி.மு.க. ஏழை மக்கள் கட்சி, பாட்டாளிகளுக்காக இருக்கிற பாசறை, நடுத்தரக் குடும்பத்தாருக்காக இருக்கிற கட்சி.

அப்படியானால் காங்கிரஸ் கட்சி பணக்காரர் கட்சியா என்று கேட்கலாம். அதிலே நீங்கள் அதிகமான ஆராய்ச்சியே செய்யத் தேவையில்லை. ஏதாவது ஒரு ஊருக்கு நாங்கள் வருகிறோம் என்றால், காங்கிரஸ்காரர் வந்தால் எங்கே தங்குகிறார்? அந்த வீடுகளை நீங்கள் கணக்குப் பாருங்கள். நாங்கள் வந்தால், வந்த உடனே கூட்டம் நடத்துபவரிடத்திலே போக்குவரத்துச் செலவுக்கு எவ்வளவு மன்றாடுகிறோம்; அவர்கள் எந்தளவுக்கு எங்களிடத்திலே கெஞ்சுகிறார்கள் என்று பாருங்கள், அவர்கள் வந்த உடன் எதிரிலே வரும் ஏழு மோட்டாரிலே எதிலே ஏறுவது என்று போட்டா போட்டி இருப்பதை அதையும் நீங்கள் பாருங்கள்.

எந்தக் கட்சி ஏழைக் கட்சி, எந்தக் கட்சி பணக்காரக் கட்சி என்பது உங்களுக்குத் திட்டமாகத் தெரியும். இது சொன்னால் கூடப்போதாது என்று கருதினால் நீங்கள் ஒரு காகிதம் பென்சில் எடுத்துக்கொள்ளுங்கள். வடஆற்காடு மாவட்டம் என“று எழுதுங்கள். வடஆற்காடு மாவட்டத்திலே யார் யார் பெரியபுள்ளி யார் யார் பணக்காரர்கள், யார் யார் வட்டிக்கடை வைத்திருக்கிறார்கள். யார் யார் ஆலை நடத்துகிறார்கள், யார் யார் மோட்டார்த் தொழில் நடத்துகிறார்கள் என்று, இப்படி இலாபம் வருகிற பணக்காரர் தொழிலை எல்லாம் ஒரு பக்கத்திலே எழுதி, இவர்களெல்லாம் எந்தக் கட்சி என்று கோடிட்டுப் பாருங்கள். வி.ஙி.ஞி ஷெரீப் வட ஆற்காடு மாவட்டத்திலேயே பெரிய மோட்டார் மன்னர். வி.ஙி.ஞி ஷெரீப் எந்தக் கட்சியும் வேண்டாம் என்றார், நம்முடைய கட்சி உதவி கூடச் செய்தது, ‘உன்னுடைய கட்சி செய்யவேண்டியதைச் செய்தாயிற்று இனி காங்கிரஸ் ஏதாவது செய்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று இப்போது காங்கிரஸ் கட்சிக்குப் போய்விட்டார். குடியேற்றத்தில் இருக்கிற சண்முக முதலியார் எந்தக் கட்சி? காங்கிரஸ் கட்சி.

எந்தெந்த ஜில்லாவிலேயும் நீங்கள் பார்த்தாலும், கோயமுத்தூரிலே இருக்கிற ஆலைமுதலாளிகள் அத்தனைபேரும் தூத்துக்குடியில் இருக்கிற வியாபாரிகள் அத்தனைபேரும், விருதுநகரிலே இருக்கிற பெரிய பெரிய வியாபாரிகளும், மதுரையிலே இருக்கிற மில் சொந்தக்காரர்களும், இப்படி இருக்கிற அத்தனை பணக்காரர்களும் காங்கிரஸ் கட்சியிலே இருக்கிறார்கள். இந்தப் பணக்காரர்களிடத்திலே வேலை செய்கிற அத்தனைபேரும் திராவிடமுன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள்.

இந்தப் புள்ளி விவரத்தைப் பார்த்தபிறகு உங்களுக்கு சந்தேகம் ஏன்? காங்கிரஸ் கட்சி பணக்காரர் கட்சியா? ஏழைக்கட்சியா? என்பதிலே உங்களுக்கு ஐயப்பாடு ஏற்படக் காரணம் என்ன! இராமநாதபுரம் ராஜா பெரிய பணக்காரர், அவர் காங்கிரஸ் கட்சி. செட்டிநாட்டு ராஜா பெரிய கோடீஸ்வரர், அவர் காங்கிரஸ் கட்சி. சிவகங்கை ஜமீன்தாரர் பெரிய கோடீஸ்வரர், அவரும் காங்கிரஸ் கட்சி. அழகப்ப செட்டியார் காங்கிரசை ஆதரிக்கிறார். கோவை இரத்தினசபாபதி செட்டியார் குடும்பத்தினர் காங்கிரசை ஆதரிக்கிறார். வெட்கங்கெட்ட இந்த நிலை உங்களிடம் சொல்லிக் கொள்வதிலே நான் வருத்தப்படுகிறேன். காங்கிரசுக்கு ஒரே வைரி என்று கோவையில் கொண்டாடப்பட்டு வந்த சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் புதல்வி காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள். டி.வி. சுந்தரம் அய்யங்கார் கம்பெனி காங்கிரசுக்கு வேலை செய்கிறது. நாட்டிலே இருக்கிற பஸ் முதலாளிகள் அத்தனை பேரும் காங்கிரஸ் பக்கத்திலே அணி வகுத்து நிற்கிறார்கள்.

ஆகையினால் ஏழை மக்களாகிய நம்முடைய மக்கள், பாட்டாளித் தோழர்கள், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இனி வாழ வேண்டியவர்கள் வாழுவதற்கான வசதியைப் பெற வேண்டியவர்கள், ஒருவேளைச் சோற்றுக்கும் வழி இல்லாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்கள். காலையிலே எழுந்து மாலை வரையிலே பாடுபட்டாலும் நாகரிகமாக வாழுவதற்கு வழி கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்கள், சிறு சிறு கடை வைத்து வியாபாரம் நடத்தி; அதிலே கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்துகிறார்கள். ஆலையிலே வேலை செய்கிற தொழிலாளிகள், பீடி சுற்றும் தொழிலாளிகள், கைவண்டி இழுப்பவர்கள், கட்டை வெட்டுபவர்கள், மூட்டை தூக்குபவர்கள், குப்பை கூளம் கூட்டுபவர்கள், சிறு குடித்தனம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்படி இருக்கிற மக்கள் அத்தனை பேருக்கும் இன்றைக்கு காங்கிரசிலே இடம் இல்லை; நம்முடைய கழகத்திலேதான் இடம் இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்பதற்கான காரணம், அது உங்கள் கழகம், உங்களாலேயே ஆக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிற கழகம்.

எட்டு வருஷ காலமாக தி.மு.க நாட்டிலே பணியாற்றிக் கொண்டு வருகிற காலத்தில் யாருடைய உதவியினாலே அது வளர்ந்தது? அழகப்ப செட்டியார்களுடைய உதவியா அல்லது குமாரராஜாக்கள் உதவியா அல்லது கோடீஸ்வர்கள் தந்த பணமா என்று பார்த்தால், நீங்கள் தந்த பணம், நீங்கள் தேடித்தருகின்ற காணிக்கை, உங்களுடைய ஆதரவு, இவைகளை வைத்துக் கொண்டுதான் எட்டு வருஷ காலமாகத் தி.மு.க. ஓங்கி வளர்ந்திருக்கிறது இந்தக் கழகம். நாட்டிலே ஒங்கி வளர்ந்திருப்பதற்கு காரணம், கழகத் தோழர்கள் பட்ட கஷ்ட நஷ்டமும், ஏற்றுக்கொண்ட தியாக உணர்ச்சிகளும் ஆகும். இவற்றை நாடு பார்த்து நல்ல ஆதரவு தந்திருக்கிறது. இந்தப் பேராதரவைத் துணையாக வைத்துக்கொண்டுதான“ தேர்தலிலே ஈடுபட இருக்கின்றோம்.

இந்த ஆதரவு நீடித்தும் நல்ல வகையிலே பதப்பட்டும், அற்புதமாகப் பக்குவப்படுத்தப்பட்டு, அரசியல் தெளிவோடு இது ஆக்கப்பட்டும் நல்ல பலன் கிடைக்குமானால், நிச்சயமாக நண்பர் நடராசன் சொன்னதைப் போல் இந்தத் தேர்தலில் நூற்று ஐம்பது இடங்களில் மிகப் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது.

ஒவ்வொரு காங்கிரஸ் அபேட்சகருடைய முகத்தையும் பார்த்து விட்டு வந்தவர்கள் சொல்லுகிறார்கள், யாரை அபேட்சகராகத் தேர்ந்தெடுக்கவில்லையோ காங்கிரசில், அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். “என்னய்யா, இவ்வளவு மகிழ்ச்சி?” என்றால், அப்பா தப்பினேன்; நான் இல்லை, என்கிறார் தேர்ந்து எடுக்கப்பட்டவரைப் பார்த்தால் ‘கவலையோடு இருக்கிறராம், ‘ஏன்யயா கவலை?” என்று கேட்டால், எங்கய்யா பணம் இருக்கிறது? இந்தக் கழகத்துக்காரர் வேறு நிற்கிறார்களாம்? என்று அவர்கள் கவலையோடு இருக்கிறார்” என்று கழகத் தோழர்கள் அல்ல காங்கிரசிடத்திலேயே தொடர்பு கொண்டவர்கள் என்னிடத்தில் சில வேளைகளில் வந்து சொல்லுகிறார்கள்.

எனக்கு அரசியல் நிலைமை புரிகிறது. ஆகையினாலே திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை எல்லாம் இழந்துவிடாமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் இன்றைய தினம் காட்டுகின்ற இந்த உற்சாகத்தைத் தொடர்ந்து காட்ட வேண்டும். தேர்தல் பிரசாரத்தை நாங்கள் வந்துதான் நடத்தவேண்டும் என்று நீங்கள் விட்டுவைத்திருக்கக் கூடாது. தனித்தனியான முறையிலே, நீங்கள் செல்லுகின்ற இடங்களிலே எல்லாம் தேர்தல் பிரசாரம் நடத்த வேண்டும். தேர்தல் பிரசாரத்திலே ஈடுபடுவதற்கு, நீங்கள் பார்த்தால், பார்ப்பனருக்கு இருக்கிற திறமை நம்மவர்களிலே சிலபேருக்கு இருப்பது இல்லை. நம்மவர் எப்போதாவது ரேடியோ கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். பாடுகிறவர் பார்ப்பனரல்லாதவராக இருந்தால்-சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை என்று வைத்துக்கொள்ளுங்கள்-பக்கத்திலே இருக்கிற ஒரு பார்ப்பனர் சித்தூர் சுப்பிரமணியத்தின் பாட்டு பிடிக்கவில்லை என்பதை நமக்குச் சொல்வதற்காகச் சொல்லுவார் “யாரையா அப்படிக் கத்துவது? என்று, யார் பாடுவது? என்று கூடக்கேட்க மாட்டார். ‘யார் இப்படிக் கத்துவது என்பார். உடனே பக்கத்திலே இருக்கிற நாம் சித்தூர் சுப்பிரமணியம்தான் என்று தெரிந்தாலும், பக்கத்தில் இருக்கிற ஐயர் கத்துவது என்று சொல்லிவிட்டாரே என்ற எண்ணத்தினால் ‘இல்லை-சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை-தொண்டை ஏதோ கட்டிவிட்டது போல இருக்கிறது”-என்போம்.

“என்ன தொண்டை கட்றது! அந்த ஆளுக்குச் சாரீரமே கட்டைதான்” என்று ஐயர் அடித்தல் பேசுவார். ஆமாம் என்று சொல்விட்டு நம்முடைய அண்ணன் வீட்டுக்கு வந்துவிடுவான். அரியக்குடி இராமானுஜ ஐயங்காருடைய ரேடியோ நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய நண்பன் நின்று கொண்டு கேட்பான். கட்டை சாரீரம், எங்காவது மேல் ஸ்தாயிக்குப் போக வேண்டும் என்றால், ஆள் கஷ்டப்பட்டு மேலுக்கு எழும்பினால் உண்டே தவிர, தொண்டை எழும்பாது. அதை நீங்கள் அரியக்குடியின் கச்சேரிக்குப் போனால் அவருடைய கையும் உடலும் எந்த அளவுக்கு மேலே உயருகிறது என்று பார்க்கலாம் என்றாலும் அந்த ரேடியோவைக் கேட்கிற ஒரு பார்ப்பனார் ஆஹா என்ன அருமையாக இருக்கிறது அந்த மேலே போய் அப்படியே நின்றார் பாருங்கள், அதிலே தான் மகிமையே இருக்கிறது என்பார். பக்கத்திலே இருக்கிற நம்முடைய தோழர் சொல்லுவார் என்ன மேலே சாரீரம் எட்டவில்லையா? என்பார் பைத்தியக்காரா அவருக்கா எட்டாது! உன்னைப் போகச் சொல்லுகிறார் என்று சொல்லி விட்டு “கற்பனையை அப்படி காட்டிவிட்டார்” என்பார். இப்படி அந்தக் கச்சேரிக்கு மதிப்பைத்தேடுவார். அதைப் போல நம்முடைய தோழர்கள், தேர்தல் பிரசாரம் செய்வதற்கு நமக்குத் தெரிவதில்லை. பார்ப்பனத் தோழர்கள் காங்கிரசுக்கு தேர்தல் பிரசாரம் எந்த வகையிலே செய்தார்கள்? போன தடவை நடைபெற்ற தேர்தலிலே நான் பார்த்திருக்கின்றேன். காப்பி ஆற்றிக் கொண்டே இருப்பார் பார்ப்பனத் தோழர். காப்பி சாப்பிடுகின்றவர் அதை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்து “என்ன ஐயரே காப்பி நன்றாக இல்லையே” என்றால் “எப்படி சார் நன்றாக இருக்கும்? காப்பிக் கொட்டை விலை என்ன தெரியுமில்லை. ஏழரை ரூபாய்-இந்தப் பாழாய் போன ஆட்சியிலே ஏழரையும் விற்கும், எட்டரையும் விற்கும்-காங்கிரஸ் ஆட்சி வந்தால் காப்பிக்கொட்டை விலை குறையும்; காப்பியும் நன்றாக இருக்கும்; திவ்வியமாக நீங்கள் சாப்பிடலாம்-என்ன சார் காங்கிரசுக்குத் தானே உங்க ஓட்டு? ‘என்று இரண்டனாவை வாங்கிக் கொண்டு பிரசாரமும் செய்து நம்முடைய அண்ணனை வெளியே அனுப்புவார், நம்முடைய தோழர் யாராவது ஒருவர் ஓட்டலுக்குப் போகட்டும்; அங்கே இருக்கிற பார்ப்பனத் தோழா அவரைப் பார்த்து, என்ன சார் உங்க கழகம் தேர்தலில் நிற்கிறதா? என்று கேட்டார். ‘நிற்கிறது’ என்பதற்கே கூச்சப்படுகின்ற தோழர்கள் உண்டே நம்மிடத்தில்!

“நிற்கும் போலத்தான் இருக்கும் இரண்டு போண்டா” என்று தனக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுவாரே தவிர, அங்கு பிரசாரத்தை நடத்தலாம் என்று அவருக்குத் தெரிவதில்லை. ஒரு காலத்திலே லெனினிடத்திலே, விறகு வெட்டுகின்ற ஒரு தோழன் வந்து கேட்டானாம். நானும் பொது உடைமைக்குப் பாடுபட வேண்டும் என்று அதற்கு லெனின் சொன்னாராம், “நீயோ விறகு வெட்டுபவன், உனக்கோ பேசத் தெரியாது, எழுதத்தெரியாது-நீ என்ன உதவி செய்ய முடியும் உனக்குப் பொது உடைமையிலே நம்பிக்கை வந்தால் அதுவரையில் போதும்” என்ற அவர் சொன்னாராம். விறகு வெட்டி சொன்னானாம் “லெனின் அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான். எனக்குப் பேசத் தெரியாது. எழுதத் தெரியாது. ஆனால் எனக்கு மட்டும் பேசத் தெரிந்தால் என்னென்ன சொல்லுவேன் தெரியுமா? எனக்கு மட்டும் எழுதத் தெரிந்தால், என்னென்ன எழுதிக் காட்டுவேன் தெரியுமா? என்று உற்சாகத்தோடு சொன“னானாம். அதைக் கேட்டு லெனின் அவனைப் பார்த்து உன்னுடைய உள்ளத்திலே இருக்கிற உற்சாகத்தை நீ பேசித்தான் காட்ட வேண்டும். எழுதித்தான் காட்டவேண்டும் என்று இல்லை. நீ செய்கிற காரியத்திலேயே காட்டலாம்’ என்றாராம். அப்படி அவரவர்கள் துறையில் ஈடுபட்டிருந்து கொண்டே தங்களுடைய நல்ல பணியைச் செய்யலாம் என்று லெனின் சொன்னதைப் போல் நீங்கள் ஈடுபட்டிருக்கின்ற ஒவ்வொரு காரியத்திலும், “என்ன அண்ணாத்துரை கோடாரியா தூக்கச் சொல்லுகிறாய்? என்று கேட்க வேண்டாம். ‘கத்தியா எடுக்கச் சொல்கிறாய்? என்று கேட்க வேண்டாம். அந்தக் காரியத்தைத் திராவிடர் கழகம் சொல்லுகிற போது நான் சொல்லத் தேவை இல்லை. அவர்களே சொல்லிக் கொண்டிருக்கட்டும். நான் உங்களுக்குச் சொல்லுவதெல்லாம் எந்தெந்தத் துறையிலே நீங்கள் ஈடுபடுகின்ற நேரத்திலும் நித்தநித்தம் நீங்கள் அதைச் செய்யலாம். நீங்கள் அருமையாகக் காதலிக்கிற மனைவியிடத்திலே பேசுகிறபோது கூட நீங்கள் அந்தப் பிரசாரத்தைச் செய்யலாம். மனைவி கேட்கக் கூடும் “அதென்ன நான் கேட்ட அந்த மங்களூர் வளையலை வாங்கித் தரவில்லையே! என்று, “என்ன பைத்தியக்காரப் பெண்ணாக இருக்கிறாயே, காங்கிரஸ் ஆட்சியிலே சவரன் விலை ஏறிவிட்டது. அடுத்த தேர்தல் வரட்டும். அந்த ஆட்சி தொலையட்டும். நாலு ஜதை வளையல் வாங்கிப் போடுகிறேன். என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் எங்காவது கடைக்குப் போய் சாமான் வாங்குகின்றீர்கள், கடைக்காரர் விலை அதிகம் என்பதை உங்களிடம் சொல்லுகிறார்; பக்கத்திலே இருக்கிற தோழர் “நெய் இருக்கிறதா?” என்று கேட்கிறார். நெய்யை எடுத்து அவர் விரலிலே தடவி முகர்ந்து பார்த்து “என்னய்யா நெய் நாற்றமாக இருக்கிறதே” என்று சொன்ன உடன், பக்கத்திலே இருக்கிற நீங்கள் சொல்லலாம்; அது என்னப்ப நெய்யா? வடக்கே இருந்து வருகிற டால்டா அல்லவா அது? வடநாட்டுக்காரன் தானே கொள்ளை அடிக்கிறான்’ என்று சொல்லலாம்.

“அப்படியா?” என்று அவர் திருப்பிக் கேட்பார். அது தெரிந்து தானே தி.மு.க. தேர்தலில் நிற்கிறது. இந்தத் தடவை நீ மட்டும் அதற்கு ஓட்டுப்போடு, நல்ல நெய் கிடைக்கிறதா இல்லையா. பார் என்று நீங்கள் சொல்லலாம். ஓட்டலிலே சாப்பிடுகிற போது போடுகிற சாதம் புழுத்த அரிசியாக இருந்து நாற்றம் அடித்தால், “என்னய்யா இப்படி புழுத்திருக்கிறது” என்று கேட்டால், “காங்கிரஸ் ஆட்சியில் இதைவிட நல்ல சோறா கிடைக்கும்? சாப்பிடு சாப்பிடு என்று சொல்லலாம். பிரசாரத்திற்கு மார்க்கமா இல்லை? அந்தப் பிரசாரத்திலே உங்களால் ஈடுபடவா முடியாது? பிரசாரம் நடத்த வேண்டும் என்றால், அண்ணாத்துரை வர வேண்டும், நடராசன் வரவேண்டும் கருணாநிதி வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தால் எங்களுக்கெல்லாம் “ஆண்டவன் அளித்த உடல் ஒன்றுதானே! நாரதப் பிரம்மத்தைப் போல நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு போவதற்கா முடியும்? இருக்கிற நாட்கள் குறைவு. போக வேண்டிய இடங்கள் அதிகம். எடுத்துச் செல்லவேண்டிய விஷயங்கள் ஏராளம். ஆகையினாலே ஒவ்வொருவரும“ தங்களைத் தேர்தல் காலத்திலே உண்மையிலேயே பிரசாரகர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய ப்ததிரிகைகளிலே வருகிற புள்ளி விவரங்களை, மக்களிடத்திலே எடுத்துச் சொல்லலாம். முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே எவ்வளவு செலவழித்தார்கள்? இரண்டாயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு எவ்வளவு செலவழித்தார்கள் 100 கோடிக்கும் குறைவாகத்தான்; இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே எவ்வளவு செலவழிக்கப் போகிறார்கள். ஆறாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்கிறார்கள். எவ்வளவு நமக்குக் கிடைக்கும் அமைச்சர் சுப்பிரமணியம் நானூறு கோடி கேட்டார். நூற்று எழுபது கோடிதான் தருவதாகச் சொன்னார்கள்; தி.மு.க என்ன சொல்லுகின்றது-இரண்டாயிரம் கோடி வாங்கித் தரச் சொல்லுகிறது என்று எளிதாகப் பிரசாரம் செய்யலாமே? அப்பழுக்கற்ற விஷயமல்லவா நம்மிடத்திலே இருப்பது? எந்த எதிரியும் மறுக்க முடியாத ஆதாரமல்லவா நம்மிடத்திலே இருக்கிறது? இவ்வளவு அயன் சரக்கை விற்பதிலே உங்களுக்கு என்ன கஷ்டம்? ஓட்டை ஒடிசலைத் தூக்கிக்கொண்டு காங்கிரஸ்காரன் விற்கப் போகிறான்-ஊசிப்போன சரக்கைப் பிற கட்சிக்காரர்கள் விற்கிறார்கள் நல்ல அயன் சரக்கு, ஆதாரமுள்ளது. உங்களிடத்திலே கிடைத்திருக்கிற பொழுது, நீங்கள் அத்தனை பேருமே அதற்குப் போதும். ஆகையினாலே நாட்டினுடைய விடுதலையிலே நாட்டம் கொண்ட நல்ல அன்பர்கள் இன்றைய தினம் முதற்கொண்டே தேர்தல் பிரசாரத்திலே ஈடுபட்டுவிட வேண்டும். நம்முடைய புள்ளி விவரங்களையும், நாம் காட்டுகின்ற ஆதாரங்களையும் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லுகின்ற உரையாடல்களில், நண்பர்களிடத்திலே பழகுகின்ற நேரத்தில், அங்காடியில் உலவுகின்ற நேரத்தில், நண்பர்களைச் சந்திக்கின்ற நேரத்திலே, எந்தெந்த நேரத்திலே இரண்டு தோழர்களுக்கு மேல் சந்திக்கின்றார்களோ அந்த நேரத்தில் எல்லாம் ஒருவருக்கொருவர் அடிதடி சண்டை வந்துவிட வேண்டும் என்று சொல்லவில்லை ஒருவருக்கொருவர் அன“பினாலே மோதிக் கொள்ளுகின்ற அளவுக்கு நீங்கள் விவாதித்துப் பார்க்கலாம். விஷயங்களை விளக்கிக் கொள்ளலாம். அந்த வகையிலே நீங்கள் தேர்தல் பிரசாரத்தைச் செய்ய வேண்டும் என்று உங்களிடத்திலே நான் வேண்டிக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

வேலூர் 16-12-1956