அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திட்டங்களை வெட்டுவது முறையா?
1

தமிழ்நாட்டின் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்மீது தமிழச் சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் 11.1.61 அன்று அணண்ா அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் (சுருக்கம் ஏற்கனவே வெளியாகியுள்ளது முழு விவரம் இங்குத் தரப்படுகிறது.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டிருக்கிற பல்வேறு திட்டங்களை இந்த மன்றம் ஏற்றுக் கொள்கிறது. சம்பிரதாயத்திற்காக இது தன்னுடைய ஒப்புதலையும் அளிக்கிறது என்ற முறையில் இன்று கனம் கிருஷ்ணசாமி (நாயுடு) அவர்களால் ஒரு திருத்தம் பிரேரேபிக்கப்பிட்டிருப்பதோடு, அதில் சேர்க்கப்ட்ட வேண்டிய திட்டங்கள் இன்ன இன்ன அளவு சேர்க்கப்படாதது ஒரு பெருங்குறை என்று எதிர்க்கட்சிக்காரர்களாலும் சில திருத்தங்கள் பிரேரேபிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

பயனேதும் ஏற்படுமா?

இதிலே, நேற்றைய தினத்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் விவாதத்தைக் கவனித்துக் கொண்டிருக்கையில் எனக்கு ஏற்படுகிற எண்ணம், ‘இதனால் உண்மையில் ஏதாவது பயன் ஏற்படுமா?‘ என்பதுதான்.

இங்கே இப்போது இந்த மூன்றாவது திட்டத்தைப் பற்றி விவாதிப்பதன் மூலம், இந்த மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஏதாவது மாறுதல் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். என்னுடைய எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகக் கனம் நிதியமைச்சர் அவர்களிடம் கூடக் கேட்டு அறிந்து கொண்டேன்.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் இப்போது அமுலில் இருக்கிறது. ஏப்ரல் முதலேஅது நடைமுறைக்கு வந்துவிட்டது. நடைமுறையில் இருந்துவருகிற மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி இப்போது நாம் சபையில் விவாதிப்பதன் மூலம். அந்த மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போக்கை மாற்றியமைக்க முடியுமா என்ற ஐயப்பாடு உறுதியாகி இருக்கிறது.

சட்டப் பிரச்சினை எழுப்புகிறேன்

ஏனென்றால், இதற்கு முன்னாலே மூன்றாவது ஐந்தாண்டு நகல் திட்டத்தை நாம் இந்தச் சபையில் விவாதித்திருக்கிறோம். இனன் இன்ன திட்டங்கள் தேவை என்று அப்போது எதிர்க்கட்சியினரால் பல கருத்துக்கள் வலியுறுத்திக் கூறப்படுகின்றன. ஆளும் கட்சியில் உள்ளவர்க்ளும் அமைச்சர்களும் ரூ.400 கோடிக்குப் பல திட்டங்களை அமைத்துக் கொண்டு, இதுதான் நல்ல திட்டம், இதற்குச் சபை அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி, சபையின் அனுமதியையும் ஒருவகையில் பெற்றுச் சென்றார்கள்.

இந்த மன்றத்தில் ஒப்புதல் அப்போது ரூ.400 கோடிக்கு அறிவிக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் நமது நிதியமைச்சர் அவர்கள் பேசிய பேச்சு மட்டும் அல்ல – அந்தப் பேச்சோடு இவர் வெளியிட்ட ‘பாவ‘ங்களும் கூட எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. பரிட்சைக்குச் செல்லும் மாணவனுக்குச் சகுனம் பார்த்து அனுப்புவதுபோல, சபையின் ஒப்புதலோடுகூட, ‘டெல்லிக்குச் சென்று வாருங்கள். வென்று வாருங்கள்‘ என்று அனுப்பினோம். அந்த இடத்தில் ரூ.400 கோடிக்கு இந்தச் சபை அங்கீகாரம் அளித்திருக்கிறபோது அவர்கள் ரூ.291 கோடிக்குத்தான் அனுமதித்தார்கள் என்று நமது நிதியமைச்சர் அவர்கள் ஒப்புக்கொண்டு வந்தார்களே, அது சரியா என்ற சட்டப் பிரச்னையைக்கூட இங்கே எழுப்ப விரும்புகிறேன்.

அனுமதி பெற வேண்டாமா?

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ள பிரதிநிதிகள் அடங்கியுள்ள சட்டமன்றத்தில் ரூ.400 கோடிக்கு என்று ஒரு திட்டத்தை அங்கீகரித்திருக்க – சபையில் விவாதிக்கப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திருக்க – டெல்லியில் உள்ள திட்டக்குழு, ரூ.291 கோடிக்குத்தான் அனுமதித்தது என்றால், உடனே திரும்பவும் அதற்குச் சபையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டாமா?

திட்டக்குழு, நாட்டின் பெரிய மந்திரி சபையா? சூப்பர் கானினேட்டா? இல்லையென்றால் அது ரூ.291 கோடி என்று நமது மாநிலத் திட்டத்தைக் குறைத்தவுடனே நமது நிதியமைச்சர் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக இங்கே வந்து அவர்கள் ரூ.291 கோடிக்குத்தான் அனுமதி அளிப்போம் என்கிறார்கள். உங்கள் கருத்து என்ன? என்று இந்த மாமன்றத்திலே கேட்டிருக்க வேண்டும். அப்போது உண்மையில் திட்டக்குழு சூப்பர் கேபினெட் அல்ல என்ற வாதம் பொருத்தமாக இருக்கும்.

ஆனால் இங்கே ரூ.400 கோடிக்கு என்று வகுத்த திட்டத்தை அவர்களுக்கு ரூ.291 கோடி என்று குறைத்தவுடனே, அந்தப் பணத்திற்கு ஏற்ற வகையில் சில பல திட்டங்களை விட்டுவிட்டு இலட்சிய அளவுகளையும்கூடக் குறைந்துவிட்டிருக்கிறார்கள். இந்தச் சபையின் அனுமதியைப் பெறா விட்டாலும், அமைச்சரவையையாவது உடனடியாகக் கூட்டி, இதைப்பற்றி ஆலேசித்தார்களா என்று அறிய விரும்புகிறேன்.

வேடிக்கையாக இருக்கிறது

அப்படி அவர்களே பார்த்து முடிவு செய்து, கடந்த எட்டு மாதங்களாக அதை அமுல்நடத்திக் கொண்டிருக்கிற போது, இன்றைய தினம் இந்தச் சபையிலே அதைப்பற்றி விவாதிப்பதும், இந்தச் சபை அதற்கு ஒப்புதல் அளிக்கிறது என்பது சம்பிரதாயத்திற்குத்தான் என்றாலும் – ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதும் உண்மையில் வேடிக்கை யாகத்தான் இருக்கிறது.

திருமணமாகாத ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவன் – மனைவியாகப் பெற்றோர்களுக்கே தெரியாமல் வாழ ஆரம்பித்தவுடன் ஏதோ தங்களுடைய முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுடைய திருமணத்திற்கு என்று ஒப்புக்காக ஒப்புதல் அளிப்பதுபோல், இன்றைய தினம் இந்தச் சபையிலே ஆளும் கட்சியினரைச் சேர்ந்தவர்களும்கூட ரூ.400 கோடிக்குத் திட்டத்தை அமைத்து ஒப்புக் கொண்டிருக்கிறபோது, அதை ரூ.291 கோடியாகச் சபை அங்கத்தினர்களைக் கேட்காமலே குறைத்துவிட்ட போதிலும் இப்போது, ஒப்புக் கொள்கிறோம் என ஒப்புக்காகத் தெரிவிக்க வேண்டியது அவசியமா என்று எனக்குப் புரியவில்லை. இந்த விவாதம் அந்த வகையில் அமைவது என்றால், உண்மையில் பயனற்றதாகவே ஆகும்.

பயனற்ற விவாதம்

அதற்கு மாறாக ரூ.291 கோடிக்கு நாங்கள் ஒப்புக் கொண்டாலும், சபை ஒப்புக்கொள்ளவில்லை. இந்தத் திட்டங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளாதது வருந்தத்தக்கது என்று திருத்தங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆகவே இவற்றையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஒருக்கால் மத்திய அரசினிடம் வற்புறுத்திக் கேட்பதற்கு இந்தத் திருத்தங்களை விவாதித்து ஏற்றுக் கொள்வது உபயோகமாகக்கூட இருக்கும். அப்படியில்லையென்றால் இந்த விவாதம் பயனற்றதாகத்தான் இருக்கிறது என்பது என்னுடைய வாதம்.

பயனற்றது என்று சொல்கிறபோது, எதிர்க்கட்சியில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதனால் பயனில்லை என்ற கருத்தில் சொல்லவில்லை.

பெருவாரியாக இந்த இரண்டு நாட்களாக இங்கே நடக்கிற விவாதத்தைப் பார்க்கிறபோது கூவம் ஆற்றிலிருந்த கொள்முதல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது வரையில் பல திட்டங்களை வலியுறுத்தியிருக்கிறார்கள். அணைக்கட்டிலிருந்து மனைக்கட்டு வழங்க வேண்டுமென்ற திட்டங்கள் வரை சொன்னார்கள். இதற்கு அவசியம் இப்போது இங்கே என்ன இருக்கிறது? நடைமுறையில் இருந்து வருகிற திட்டம் இதனால் மாற்றி அமைக்கப் பயன்படப் போகிறதா? அல்லது இங்கே விவாதித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற சம்பிரதாயம்தான் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிற ஒரு திட்டத்திற்கு அவசியமா, ஆகவேதான் பயனற்றது இந்த விவாதம் என்று சொன்னேன்.

அரசியல் ‘தலையெழுத்து‘

அன்றைக்கு ரூ.400 கோடிக்கு நலத்திட்டத்தை அமைத்து இந்த மன்றத்திலே விவாதித்தபோது, ‘ஆகா இதுதான் உயர்ந்த திட்டம். இந்தத் திட்டத்தை நாங்கள் தயாரித்திருக்கிறோம் என்று பெருமையோடு பேசி ஆதரவு கொடுத்த ஆளுங்கட்சியினர்‘ இன்று அத்திட்டம் ரூ.291 கோடியாகக் குறைக்கப்பட்டு பின்பு தீர்மானித்துள்ள பல திட்டங்களைக் கைவிட்டுவிட்டு, இன்றைக்குச் சபையில் வந்திருக்கிறபோது. ‘ஐயா( இப்படிக் குறைந்துவிட்டதே‘ என்று கொஞ்சம்கூட வருந்தாது, இதுதான் உயர்ந்த திட்டம் என்று பேசுகிறார்கள் என்றால் அதுதான் அரசியல் தலையெழுத்தாகும். இது துரதிருஷ்டவசமாக இன்னும் குறைக்கப்பட்டாலும கூட இப்போதுதான் இது சிறந்ததாக இருக்கிறது. சிறுகக்கட்டிப் பெருவாழ் என்று தானே சொல்லியிருக்கிறார்கள் என்று தங்களையே சமாதானம் செய்துகொண்டு பாராட்ட வேண்டிய நிலை ஆளுங்கட்சியினர்களுடையது. அதுவும் தேர்தல் நெருங்கிவிட்ட நேரம். ஆகவே, இப்போது இதைக் கண்டித்துப் பேசினால் என்ன ஆகுமோ என்று அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியதுதான்.

ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இங்கே நடக்கிற விவாதத்தைப் பார்க்கிறபோது, ஆகா இந்தத் திட்டத்தைப் போல் உண்டா? இதைக் குறை சொல்கிறார்களே, எதிர்க் கட்சியில் இருப்பவர்கள்? என்று அவர்கள் அங்கலாய்த்துக் கொள்கிறபோது, ஏதோ அவர்களும் வாதத்திற்காகப் பத்திரிகையில் போடப்பட்டிருக்கிறதே தவிர, இங்கேயுள்ள அத்தனைக் கட்சிகளும் திட்டமிட்ட வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றைய பாராட்டு பொருந்துமா?

அதுவும் இந்தப் பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு திட்டமிட்ட வாழ்க்கையே சிறந்த ஆட்சிக்கு இலக்கணமாக அமைந்துவிட்டிருக்கிறது. ஆனால், போடப்பட்டுள்ள திட்டம் எவ்வாறு இருக்கிறது? இந்தத் திட்டத்தின் பலனை யார் அனுபவிக்கிறார்கள்? என்றெல்லாம் ஆராயவ்து திட்டத்தையே வெறுப்பதாகாது. ஆகையால், திட்டத்தின் குறைபாடுகளை எடுத்துச் சொல்கிற நேரத்தில், இந்தக் கண்ணோட்டத்தோடு, இதைக் கவனிக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது எனக்கு முன்னாலே பேசிய மைலாப்பூர் தொகுதி அங்கத்தினர் திரு.இராமசாமி அவர்கள், மின்சாரம் எந்த அளவுக்கு இங்கே உற்பத்தியாகிறது என்பதை மிகவும் ஆர்வத்தோடு சொன்னார்கள். அவர்களேதான், நலத்திட்டம் பற்றி விவாதிக்கையில் இதைச் சொன்னார்கள்.

மின்சாரத்தை உற்பத்தி செய்துவிட்டோம் என்று பாராட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில் நானே சொன்னேன் – ‘சும்மா வெளிச்சம் போட்டுக் காட்டினால், போதாது. தொழில் துறையில் ஒவ்வொரு சிறு சிறு தொழிலுக்கும் கூட எத்தனை யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து அளிக்கப்படுகிறது என்று பார்க்க வேண்டும். தொழில் துறையில் அதிகமான அளவுக்கு எப்போது மின்சாரம் உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் உண்மையான வளர்ச்சி என்று சொல்ல முடியும் என்றேன். தெரிந்தோ, தெரியாமலோ இதே கருத்தைத்தான் அப்போது திரு.இராமசாமி சொன்னார். ஆனால் இன்றைய தினம், ரூ.291 கோடியாகக் குறைத்துவிட்டபோது எவ்வளவு வெளிச்சம் போட்டிருக்கிறோம். எத்தனைக் கிராமங்களுக்கு விளக்குப் போட்டாகிவிட்டது. இது அபிவிருத்தி இல்லையா? என்று பேசினார். இது எனக்குப் புரியவில்லை. தேர்தலுக்கு முன்னாலே பேசுகிற பேச்சு இது என்று மட்டும் புரிகிறது. இன்றைய தினம் உற்பத்தியான மின்சாரம் எவ்வளவு? விவசாயத்திற்கு இதர தொழில்களுக்கு எவ்வளவு உபயோகப்படுத்துகிறோம் இதை கவனிக்க வேண்டாமா?

நோக்கம் நிறைவேற்றப்படவில்லை

இன்றைய தினம் நம்முடைய கனம் அமைச்சர் அவர்கள் என்ன சொன்னார்கள்? இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டார்கள். இது சரியல்ல என்று பேசுகிறார்களே? என்று சொல்லிவிட்டு, புள்ளிவிவரங்களைக் காட்டினார்கள். நம்முடைய இலட்சிய அளவுகள்தான் அதில் அமைந்து விட்டனவே.

கனம் இராமசாமி அவர்களும், ‘இப்படி இத்திட்டத்தைக் குறை கூறுகிறார்களே என்று தொடங்கி, இப்படியே போனால் இங்கே தொழில் துறை வளராது நிலக்கரி கிடைப்பது இல்லை. இதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றுதான் பேசினார்.

அந்த வகையில் பார்க்கும்போது நான் உள்ளபடியே என்னுடைய வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திட்டமிட்டவர்களுடைய நோக்கம் நிச்சயம் நிறைவேற்றப்பட்டவில்லை. 14 இலட்சம் டன் உணவு உற்பத்தி 16 இலட்சமாக உயர்ந்துவிட்டது என்ற புள்ளி விவரங்களைக் காட்டுவதில் பயனில்லை.

விவசாய நிபுணர்கள் பார்ப்பார்களா?

உங்களுடைய புள்ளிவிவரங்களை விவசாய நிபுணர்கள் ஏறெடுத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள். உங்களுடைய புள்ளி விவரத் தயாரிப்பிலே நிறையத் தவறுகள் இருக்கின்றன என்று பெரிய நிபுணர்கள் வலியுறுத்திக் கூறி வருகிறார்கள். ஆகையால் அந்தப் புள்ளிவிவரங்கள் வலிவு குறைந்தவன் கைத்தடியை ஊன்றி நடப்பதை போல் உங்களுக்கு உதவுகின்றனவே தவிர நாட்டிலே இருக்கக்கூடிய நிலைமையில் எந்தவிதமான மாற்றத்தையும் அது தெளிவுபடுத்தவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய கனம் அம்மையார் அவர்கள், ஆரம்பத்தில் எங்களைக் கண்டித்துவிட்டு பிறகு என்ன சொன்னார்கள்? இது வேண்டும் அது வேண்டும் என்று சொன்னார்கள். இது சரியல்ல. அது சரியில்லை என்று பேசினார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒவ்வோர் அங்கத்தினரும் பேச ஆரம்பிக்கும்போது பிள்ளையார் குட்டாக இந்தத் திட்டத்தை வரவேற்கிறேன் என்று சொல்லிவிட்டு அதற்குப் பிறகு ஐயோ, அதைச் செய்யவில்லையே, இதைச் செய்யவில்லையே என்று கூறுகிறார்.

கனம் இராமசாமி அவர்கள் இந்தத் திட்டத்தின் குறைகளைக் கூற ஆரம்பித்து, அதற்குப் பிறகு பெரிய தொழில்கள் எல்லாம் வளர்ந்திருக்கின்றன என்று தம்மைத் தாமே உற்சாகப்படுத்திக் கொண்டு, அடுத்த நிமிடத்திலேயே மூடப்படும் தருவாயில் இருக்கக்கூடிய தொழில்களை எடுத்துக் காட்டு்கிறார்.

அடிமனம் உண்மையை உணருகிறது

என்ன மனப்பான்மையிலே இவர்கள் நடத்துகிறார்கள் என்பதை நாட்டுமக்கள் யோசித்துப் பார்க்கத்தான் செய்வார்கள் என்பதைக் கூற விரும்புகிறேன். பெரிய தொழில்கள் வளர்ந்திருக்கின்றன என்று சொல்லும்போது அவருடைய நெஞ்சின் அடிமனம் அவர் தொழில் அதிபராக இருக்கிற காரணத்தால் அவர் உண்மையை அறிந்திருந்திருக்கிற காரணத்தால், உண்மையை உணர முடிகின்ற காரணத்தால், பெருந்ததொழில்கள் வளரவில்லை என்பது தெரிவதோடு, இருக்கக்கூடிய தொழில்களும் மூடப்படக்கூடும் நிலையில் இருக்கின்றன என்பதை அவர் எடுத்துக்காட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. நிலக்கரி போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை. உற்பத்திச் சாதனங்கள் போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை என்று பேசுகிறார்கள்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒவ்வோர் அங்கத்தினரும், தங்களுடைய 10 நிமிடப் பேச்சை வீட்டுக்குச் சென்று அவர்களே, ஆழ்ந்து படித்துப் பார்க்கட்டும். 2 நிமிடம் எதிர்க்கட்சிக்கு என்று ஒதுக்கிவிட்டு 4 நிமிடம் தொகுதிக்கென்று ஒதுக்கிவிட்டு, கடைசியில் போகிற போக்கில் எங்கே மறந்து விடுவார்களோ என்று 2 நிமிடம் எங்களைப் பற்றிச் சொல்லிவிட்டு உட்கார்ந்து விடுகிறார்கள் என்பது தெரியும்.

அவ்வாறு நீங்கள் கூறும் யோசனைகள் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே இணைக்கப்படுமா? எங்களுடைய கருத்தை வி்ட்டுவிடுங்கள் – உங்களுடைய கருத்து மதிக்கப்படுகிறதா? ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?

வாய்திறந்து பேசுகிறதா, ஐந்தாண்டுத் திட்டம்?

இந்த மன்றத்திலே ரூ.400 கோடித் திட்டத்தை வைத்து விவாதிக்கும்போது ஐந்து முக்கியமான திட்டங்கள் வற்புறுத்தப்பட்டன. ‘தமிழ்நாட்டுக்கு அணு உலைக்கூடம் தேவை என்று கூறியிருக்கிறோம். அதுபற்றி வாய்திறந்து பேசுகிறதா மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டம்? அதற்கு நிதி ஒதுக்கியிருக்கிறார்களா? இதுபற்றி வெளியிலே உள்ளவர்கள் கேலி செய்வார்களே என்பதற்காக ‘நாங்கள் அதற்காகப் பூர்வாங்க வேலையைத் துவக்க இருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

சேலத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற ரூ.25 கோடி போதுமா? அந்தத் தொகையைக் கொண்டு அந்தத் தொழிலை நடத்த முடியுமா? ரூர்கோலாவும் துர்காபூரும் எந்த அளவுக்கு வளமாக இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாதா?

ரூ.25 கோடிச் செலவில் சேலத்திலே இரும்பு எஃகுத் தொழிலை ஆரம்பிக்கப் போகிறோம்( என்பது வேண்டுமானால் தேர்தலுக்குப் பயன்படலாமே தவிர உண்மையிலேயே அந்த தொழிலைத் திறம்பட நடத்தப் போதுமானதா?