அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திட்டங்களை வெட்டுவது முறையா?
1

கேட்பாரில்லாமல் கிடக்கின்றனவே!

கனம் அம்மையார் அவர்கள், ‘இடித்தால் இரும்பு கிடைக்கும், தோண்டினால் தங்கம் கிடைக்கும்‘ என்று பேசினார்கள்( ‘நாங்கள் இடித்துக் கொண்டும் தோண்டிக் கொண்டும்தான் இருக்க வேண்டும். இரும்பையும், தங்கத்தையும் வெளியே எடுத்துக்கொண்டுவர வேண்டியவர்கள் பின்னாலே வர இருக்கிறார்கள்‘ என்ற உண்மையைத்தான் மறைமுகமாக இவர்கள் எடுத்துச் சொன்னார்கள் என்று கருதுகிறேன். ஆகவே, இங்கு நிறைவேற்றப்பட்ட இந்தத் திட்டத்தின்படி கேட்கப்பட்ட ஐந்தில் இரண்டு கேட்பாரில்லாமல் இருக்கின்றன!

‘இண்டர்-ஸ்டேட் வாட்டர் சப்ளை‘ (மாநிலங்களுக்கு இடையே தண்ணீர்ப் பங்கீடு) பற்றி அந்த நேரத்தில் மந்திரியவர்கள் பன்னிப்பன்னிப் பேசினார்கள். கிருஷ்ணா, பெண்ணாறு திட்டத்தைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசினார்கள். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்பதிலே அதிக அக்கறை கொண்ட அவர்கள், கங்கையையும் காவிரியையும் இணைக்கும் திட்டத்தைப் பற்றி்ப் பேசினார்கள். அதற்கு மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் விதி செய்யப்பட்டிருக்கிறதா? அதற்குக் கொஞ்சம் இடமாவது கொடுத்திருக்கிறார்களா?

அதேபோன்று, மின்சார உற்பத்தியை அதிகப்படுத்துவது, அணு மூலமாகத்தான் முடியும் என்று ஒவ்வொரு உறுப்பினரும் வலியுறுத்திப் பேசினார்கள். இது இந்தத் திட்டத்திலே சேர்க்கப்பட்டிருக்கிறதா?

ஆகவே ரூ.400 கோடித் திட்டமானது ரூ-291 கோடியாகக் குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல் – ‘பனான்ஷியல் டார்ஜட்‘ குறைக்கப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், ‘பிசிகல் டார்ஜெட்‘ டும் குறைக்கப்பட்டு, பல திட்டங்கள் வெட்டப்பட்டு, குறைக்கப்பட்டுள்ளன என்பதை நான் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அழுவதுதான் திருப்தியா?

இந்தத் திட்டத்திலே மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது, அனைவரும் கூடி ஒருநாள் அழவேண்டுமானால் அழலாமே தவிர, மகிழ்ச்சிகொள்ள என்ன வழி இருக்கிறது, ‘கிடைப்பது கிடைக்கட்டும்‘ என்று திருப்திப் பட்டுக்கொள்ள முடியுமா என்றால் என்னைப் பற்றிக் கனம் நிதியமைச்சரவர்கள் முன்னர் ‘பண்டாரம்‘ என்று சொன்னார் – பண்டாரங்களாக இருந்தால் திருப்தியடையலாமே தவிர, ‘பாதுஷா‘க்கள் எப்படித் திருப்தி அடைய முடியும்?

ஆகவே, ரூ.400 கோடித் திட்டத்தை மறுபடியும் வலியுறுத்தும் வகையில், இந்த ரூ.261 கோடித் திட்டத்தை ஏற்றுக் கொண்டோம் என்ற தீர்மானத்தைப் போடாமல், ரூ.400 கோடி திட்டத்தைத் திட்டக்குழு நீக்காமல் இருந்தால் நாட்டுக்கு மேலும் சிலபல நன்மைகள் கிடைத்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் முறையில், ‘எங்கள் நாட்டு மக்கள் இந்தத் திட்டங்களையெல்லாம் வலியுறுத்திக் கேட்கிறார்கள்‘ என்று எதிர்த்தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள திருத்தத்தை ஏற்றுக் கொண்டால் – அதனை டெல்லி வட்டாரத்தில் எடுத்துச் சொன்னால் தக்கபலன் கிடைக்கும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திட்டத்தின் அடிப்படை

இரண்டாவதாக, நம்முடைய திட்டத்தினுடைய நோக்கத்தைப் பற்றி அறிய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். திட்டம் என்பது, ‘இன்னின்ன இடத்தில் விதைப் பண்ணைகள் ஆரம்பித்தோம். இவ்வளவு பொலி காளைகள் வாங்கிக் கொடுத்தோம். இவவ்ளவு உரங்கள் விநியோகம் செய்திருக்கிறோம்‘ என்று சுட்டிக்காட்ட போடக்கூடிய ஒரு வரவு செலவு ஏடல்ல(

‘நாங்கள் இன்னின்ன வகையில் நாட்டைத் திருத்தியமைக்க விரும்புகிறோம். மக்கள் வாழ்க்கையை இந்த அளவுக்கு முற்போக்கு செய்ய விரும்புகிறோம்‘ என்ற மெஷினரி ஸ்பிரிட் மனோபாவந்தான் திட்டத்திற்கு அடிப்படையாகும். அவ்வாறல்லாமல் செய்யப்படும் காரியங்களைச் சொல்ல ஐந்து வருடத் திட்டம் என்ற ஒரு ஐங்கணைக்கைப் போடுவதை விட, வருடத்திற்கு ஒரு முறை, ‘இன்னின்ன இடத்திலே இன்னின்ன செய்திருக்கிறோம்‘ என்று சொல்லிக் கொண்டிருக்கலாம்.

மக்களுடைய வாழ்க்கையை இப்படித் திருத்தியமைக்க விரும்புகிறோம் – என்பதுதான் திட்டத்தின் அடிப்படை.

அதனால்தான், திட்டத்தைப்பற்றிப் பிரதமர் நேரு அவர்கள் பேசுகிற நேரத்தில், ஏறக்குயை ‘கவிதா வாக்கிய‘த்தைப் பயன்படுத்துகிறார். ‘மக்கள் முகத்தைப் பாருங்கள்‘ கிராமப் புறத்தைப் பாருங்கள், அவர்களுடைய முகத்திலே தோன்றும் புதிய ஒளியைப் பாருங்கள்! என்று பேசுகிறார்.

சாதிக்கமுடியாத காரியங்களையெல்லாம் திட்டத்தால் சாதிக்க முடியும் என்று கூறும் நேரத்திலே இந்த மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கியமான கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன.

தனிப்பட்ட ஆட்களுக்குள்ளே உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மட்டுமல்ல, பிரதேசங்களுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதும் போக்குவதும் மூன்றாவது திட்டத்தின் நோக்கமாகும் என்று சொல்லுகிறார்கள்.

நெஞ்சிலே கைவைத்துப்பார்த்து – இன்று வேண்டாம். நாளை என் எதிலிலே வேண்டாம், தனியாக - ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் யோசித்துப் பார்ப்பார்களேயானால் இந்த மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் பிரதேச வேற்றுமை போக்கப்பட்டிருக்கிறதா – அந்த வேற்றுமை போக்கப்படுவதற்கேற்ற வகையிலே திட்டங்களை விரிவு படுத்தியிருக்கிறார்களா? என்றெண்ணிப் பார்ப்பார்களானால் இல்லை என்று தெரியும்.

மதியாதார் தலைவாசல் மிதிக்கலாமா?

வடநாட்டுத் திட்டங்களோடு தென்னாட்டுத் திட்டங்களை ஒப்புவமை காட்டிப் பேசும் நேரத்தில், ‘ஏன் வடக்கு – தெற்கு என்று பேசுகிறீர்கள்‘ என்று கேட்கும் நீங்கள் தேசிய அபிவிருத்திக் கூட்டத்தில் இந்தக் கருத்தைப் பேசவில்லையா? நிதி அமைச்சரின் பார்வை பேசுகிறது – இந்தியாவில் இருந்து கொண்டு நான் பேசுகிறேன். நீ ஓடிப்போக வேண்டுமென்று சொல்லிக்கொண்டு பேசுகிறாய் என்று. 10 வருடமாக இந்த நிலை என்றால் ஓடாமல் என்ன செய்வது? பதவி வேண்டுமென்றால் ஒட்டிக் கொண்டிருக்கலாம். அவரது கருத்து, மதிக்கப்பட்டதா? மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்களே.

ரூ.400 கோடித் திட்டத்தை நாட்டு மக்கள் கோருகிறார்கள் என்று சொல்லி, திரும்பத் திரும்ப வற்புறுத்தி அமைச்சர் அவர்கள் வாங்கி வருவதாக இருந்தால் அவருககுக் கொடி தூக்கும் தொண்டராக மாறி டில்லிக்கு அனுப்புவோம(

இதற்குத்தானா ஆட்சி நடத்துகிறீர்கள்?

தொழில்துறையைப் பொறுத்தவரையில் இந்த மூன்றாவது திட்டத்தில் சர்க்கார் என்ன செய்திருக்கிறார்கள்? ‘ஸ்டீல் ரீ-ரோலிங் மில்லுக்கு ஒரு கோடி ரூபாய், 1 இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷனுக்கு ஒரு கோடி ரூபாய் – என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கு ரூ.50 இலட்சம்( பெருமைப்படக் கூடிய காரியமா இது!

நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலைப் பார்த்தால் முதலாளிமார்களை ஆதரிக்கக்கூடிய சர்க்கார் என்பதற்குத் தான் ஆதாரமிருக்கிறதே தவிர பாட்டாளிகளின் சர்க்கார் என்பதற்கான ஆதாரம் இல்லையே! ‘காகித ஆலையா – சேஷசாயி கம்பெனி, ரேயான் தொழிற்சாலையா? - வெங்கடசாமி நாயுடு, அலுமிமினியம் தொழிற்சாலையா? – வெங்கடசாமி நாயுடு‘ என்று ஒவ்வொரு தொழிலையும் ஒவ்வொரு முதலாளிகளிடத்திலே கொடுத்திருக்கிற நீங்கள் எதற்காக இங்கே ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள் என்று கேட் ஆசைப்படுகிறேன்.

முதலாளிக்கும் – தொழிலாளிக்கும் தகராறு வந்தால் போலீசைக் கொண்டு தொழிலாளரை உதைக்கச் சொல்லுவது – விலைவாசி ஏறிக் கொண்டேயிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கவா நீங்கள் ஆட்சி நடத்துகிறீர்கள்?

திறமையில்லையா, அனுபவம் இல்லையா?

இந்தத் தொழில்களை நடத்த ஆட்சியில் இருப்பவர்களுக்குத் திறமையே இல்லையா? எடுத்து நடத்துவதற்குப் போதுமான ஆட்கள்தான் இல்லையா? அல்லது நமக்கு அனுபவம்தான் இல்லையா? இத்தாலி நாட்டுக் கம்பெனியோடு ஒப்பந்தம் பேசி திரு.வெங்கடசாமி அவர்கள் அலுமினியம் தொழிற்சாலை ஆரம்பிக்க இருக்கிறார் என்றால், அந்தத் தொழிற்சாலையை ஆரம்பிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லாமல் போய்விட்டதா?

நம்முடைய நிதியமைச்சர் அவர்கள், இதே மன்றத்திலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் – அலுமனியத் தொழிற்சாலை பொதுத்துறையில்தான் வரும். கவலைப்படாதீர்கள். மத்திய சர்க்கார் பணம் கொடுக்காவிட்டாலும் நாங்களே கார்ப்பரேஷன் ஆரம்பித்துப் பணம் சேர்ப்போம் என்று(

மனற்த்திற்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி வெங்கடசாமி ஆரம்பிக்கிறார். அதற்கு நீங்கள் – வைதீகப் பாஷையில் சொல்ல வேண்டுமானால் – ‘ஏதாஸ்து‘ என்று அவர்கள் தலையில் ‘அட்சதை‘ போடுகிறீர்களென்றால் அதற்காகவா நிங்கள் ஆட்சிப்பீடத்தில் இருக்கிறீர்கள்? நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது இப்படித்தானா?

தவறை மறைக்கிறீர்களே!

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் தொழில் துறையில் பின்தங்கியிருக்கிற நம் நாட்டை முன்னுக்குக் கொண்டுவரத் தவறிவிட்டீர்கள்! தவறவிட்டது மட்டுமல்லாமல் உங்கள் தவறை மறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். மறைத்துக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல், தவறைச் சுட்டிக்காட்டக் கூடியவர்களைப் பொதுமக்கள் மன்றத்தில் மிகக் கேவலமாகப் பேசிவிட்டு வருகிறீர்கள்.

ஆகவே, நாடு முழுவதும் தொழில் துறையில் ஒரே மாதிரி முன்னேற்றம் வேண்டும். ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது – என்று நீங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தீர்களே தவிர, செயலில் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? வேறு ஒரு இடத்தில் நமது நிதியமைச்சர், “16 வருடமாக இந்த எண்ணம் எனக்கு உண்டு( எனக்குப் பிற பிரதேச வேற்றுமைகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம்தான்! ஆனால், வெற்றிபெற முடியவில்லை“ என்று பேசியிருக்கிறார்.

எங்களைச் சிலபேர், தேர்தலுக்கு நின்று தோற்றதற்குச் சொல்வதுண்டு, ‘வெற்றி இழந்தோம்‘ என்று ‘தோற்றோம்‘ என்று சொல்லுவதற்குக் கூச்சம் என்பதால்! அதேபோல, நிதியமைச்சருக்கு இருக்கிற கூச்சத்தினால் வெற்றிபெற வில்லை என்று சொன்னார்களே தவிர தோற்றுத் திரும்பியிருக்கிறாக்ள்.

கனம் சி.சுப்பிரமணியம் – “அது மாதிரி சொல்லும் நிலை எனக்கு வேண்டாம்.“

அண்ணா – “நீங்கள் விரும்புகிற இது, பிப்ரவரி மாதத்தில் நடைபெற வேண்டிய காரியம் இப்போது இருக்கிற நிலையில் அல்ல!“

... ஆகையால் அந்த முதல் நோக்கம் பிரதேச வேற்றுமைகளைத் தீர்த்துக்கட்டுவது நிறைவேற்றப்படவில்லை.

திட்டத்தின் நோக்கம் எங்கே நிறைவேறிற்று?

இரண்டாவது – ‘தனிப்பட்டவர்களுக்கு வரக்கூடிய வருவாயில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்திருக்கிறீர்களா? என்றால் இந்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசர்ய் தெளிவாகச் சொல்லிவிட்டார் இல்லை என்று. ஐந்து வருடத்தில் முடியுமா‘ என்றால் முடியாது என்றார். ‘7 வருடத்தில் முடியுமா?‘ என்றால், ‘நான் சொல்ல முடியாது‘ என்றார். 10 வருடத்தில் முடியுமா?‘ என்றால் ‘ நான் சொல்ல முடியாது‘ என்றார்.

இப்படி – ‘என்னாலே முடியாது( நான் வாக்குறுதி அளிக்க விரும்பவில்லை. தனிப்ட்டவர்களுக்குள் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறையும் என்று சொல்ல முடியாது‘ என்று சொல்லிவிட்டார்.

எனக்கும் நதி அமைச்சருக்கும் ஒப்புமை பார்க்கும் நேரத்தில் அவர் மேதை – நான் எதுவும் அறியாதவன்! ஆனால் மொரார்ஜி தேசாய்க்கும் – நம்முடைய நிதி அமைச்ச்ருக்கும் ஒப்புவமை பார்க்கும் நேரத்தில்,குறைந்தது இந்த அளவுக்காவது இவர்களுக்கு அறிவு இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

மொரார்ஜி தேசாய் வெளிப்படையாக ‘என்னால் முடியாது‘ ஏற்றத்தாழ்வுகள் குறையாது என்று சொன்ன பிறகு திட்டத்தின் இரண்டாவது நோக்கம் எங்கே ஈடேறிற்று?

போஸ்டாபீஸ் சோசலிசம்

அவர்களை விட்டுவிடுங்கள். ஓய்வு பெற்றிருக்கிற முன்னாள் நிதி அமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஓர் இடத்தில் தெளிவாகப் பேசியிருக்கிறார். ‘ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது. மக்களில் நூற்றுக்கு 90 பேர் வாழ்க்கையின் எல்லைக் கோட்டிலே ஏன், எல்லைக் கோட்டுக்கும் அப்பாலே கூட இருக்கிறார்கள் என்று மிகச் சிலரிடத்தில் பணம் குவிகிறது என்று நிதியமைச்சராக இருந்த திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரி சொல்லியிருக்கிறார். இன்னும் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிற கால்பிரெய்த், ‘நீங்கள் நடத்துகிற சமதர்மம் போஸ்ட் ஆபீசு சோஷலிசம்‘ என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள்.

‘தனியார் துறையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற தொழிலில் இலாபம் வருகிறது. ஆனால், பொதுத்துறையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற தொழில்களில் போட்டிருக்கிற பணத்துக்கு வருகிற வருமானம் மூலதனத்தின் வட்டிக்குக்கூட கட்டவில்லை‘ என்று குறிப்பேடுகள் குறிப்பிடுகின்றன. எங்கே நீங்கள் இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளீர்கள்?

ஏற்றத்தாழ்வு குறைந்ததா?

‘முதல் நோக்கமே பாழ்பட்டுவிட்டது. இரண்டாவது நோக்கம் நிறைவேற்றுவதற்கில்லை‘ என்று சொன்னபிறகு நிதியமைச்சர் அவர்கள், தனக்கே உரிய பாஷைப்படி முயற்சி எடுப்போம். எல்லோரும் ஒத்துழைத்தால் நடக்கும் என்று சொல்கிறார். இப்படிச் சொல்லிவிட பிப்ரவரி ஆனுதும் வேறு திக்கை நோக்கி ஓடப் போகிறார். இங்கே யாரை உட்கார வைக்கப் போகிறார்களோ தெரியாது. என்னையே இருக்கவிடப் போகிறார்களோ இல்லையோ அதுவே அவர் கையில்தான் இருக்கிறது.

இப்படி இவர்கள், தனிப்பட்டவர்க்ளுடைய வருவாயில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதாக உத்தரவாதம் தந்தார்களே, குறைத்துக்காட்டினார்களா?

ஆசியா கண்டத்திலே இருக்கக்கூடிய பல நாடுகளிலுள்ளவர்கள் பொருளாதார நிபுணர்கள் மாநாட்டில் ஒருவர் இந்தியாவிலேயே இரண்டு இந்தியக் குடுமப்ங்களிடத்தில் ரூ.500 கோடி மூலதனம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்று பேசியிருக்கிறார். இவருக்கும் இந்தப் பேச்சுக்கும் என்ன பொருத்தம் இருக்கிறது?

இதுதான் சமதர்மமா?

இதுதான் சமதர்மம் என்றால் சமதர்மத்தை எழுதியவன் நாம் அந்தக் காலத்தில் எப்படி இருந்தது என்பதற்காகக் கல்லறைகளைத் தோண்டிப் பார்ப்பதுபோல் கல்லறையிலிருநது எழுந்து வந்து, அந்தக் காலத்தில் நாம் எழுதிய சமதர்மம் நாட்டில் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுப் போலாம் என்று வந்தால், அவன் எழுதிய சமதர்மத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாததைத்தான் காண நேரிடும்.

இதுதான் சமதர்மமா? எந்த வகையில்லே இந்தச் சமதர்மத் திட்டத்தின் கீழ்த் தனியார் துறையில் இருக்கிற இலாபத்தை ஒழிக்கப் பார்த்தீர்கள்?

நம்முடைய நிதியமைச்சர் இந்த மன்றத்தில் சொன்ன இன்னோர் இலட்சியம் என்னவென்றால், தொழிலாளிகளைத் தொழிலில் பங்காளிகளாக ஆக்கிவிட வேண்டும் என்பது. இது சொல்லி ஒரு வருடத்திற்கு மேல் ஆயிற்று என்று நான் கருதுகிறேன். என்ன முயற்சி எடுத்தீர்கள்? மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட நகலில் இதற்கான வழி என்ன இருக்கிறது? முதலாளிகளுக்கு வரக்கூடிய இலாபத்தை அப்படியே விட்டுவிட்டால், அது தவறான வழியில் போகிறது. அதுவும் கள்ள மார்க்கெட்டில் வரும் இலாபத்தைத் திரும்பப் பிடித்து உறிஞ்சி இழுக்க வேண்டும். அதற்குத் தொழிலாளி களுக்கு அதிகமாகப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் பேசினாரே, அந்த முறையில் தொழிலாளிகளைத் தொழில் பங்காளிகளாகக்க இந்தத் திட்டத்தில் என்ன வழி இருக்கிறது? நேர்மாறாக நீங்கள், புதுப்புது முதலாளிகளையும், தொழிலதிபர்களையும் இந்த மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

நீங்கள் கொண்டு வந்தது என்ன?

‘சேது சமுத்திரம் உண்டா?‘ ‘சேர்க்கப்பட்டிருக்கிறது நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறோம்‘ என்று ஒருவரும் இன்னோர் இடத்தில் மத்திய சர்க்காரில் அமைச்சராக இருக்கக்கூடிய திரு.சுப்பராயன் அவர்கள், சேர்க்கப்பட்டிருக்கிறது, நிறைவேற்றப்படத்தான் போகிறது, ஆனால் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே அதைச் சேர்ப்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம் என்று ஆரூடம் பார்பபது போலவும் பேசியிருக்கிறார்கள்.

நேற்றுப் பேசும்போது கனம் அங்கத்தினர் சீனிவாச (அய்யர்) கீழக்குககரைக்க்குச் சாலை அமைக்க முடிந்தால் நல்லது என்று பேசியிருக்கிறார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலை வேண்டும். தொண்டித் துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும். கடலூர், பரங்கிப்பேட்டை துறைமுகங்களை விரிவுபடுத்த வேண்டும். சிறு துறைமுகங்களை அபிவிருத்தி செய்து அவைகளைத் தூர்வாரி விரிவுபடுத்த வேண்டும் இதற்கெல்லாம் என்ன வழி செய்திருக்கிறார்கள்? நினைத்த நேரத்தில் கண்டலாவைத் தோண்டினார்களே. மண் சரிகிறது இதை வாரிக் கொட்டிவிட்டு, தோண்டி, அதிலும் கட்டணம் இல்லாமல் வரலாம் என்று அந்தத் துறைமுகத்தை இன்றைய தினம் தகுந்த பரபரப்புள்ளதாக ஆக்குகிறார்களே.

உங்களால் செய்ய இயலவில்லை

உலக பாங்கி கடன் கடன் கொடுக்காமலிருந்தால் சென்னைத் துறைமுகம் கேட்பாரற்றுப் போயிருக்கும். தொழில்வளத்தைப் பெருக்கத் தவறிவிட்டீர்கள். ஆக, உண்மையிலேயே இந்தத் திட்டத்தின் மூலம்சமதர்மம் நிறைவேற்றப்பட்வில்லை. விலைவாசி குறைக்கப்படவில்லை, வேலையில்லாத் திண்டாட்டம் நீக்கப்பட வில்லை. கிராமப்புறத்திற்கும் நகர்ப்புறத்திற்கும் இருக்கக்கூடிய பேதங்கள் போக்கப்படவில்லை. பிரதேச வேற்றுமைகள் நீக்கப்படவில்லை – இவைகள் அத்தனையும் உங்களால் செய்ய முடியவில்லை.

நான் சொன்னவைகளையெல்லாம் நிறைவேற்ற, ஒவ்வொன்றுக்கும் ஆகக்கூடிய செலவுத் தொகையைப் போட்டுக் கூட்டிப் பார்த்துத்தான், நமது மாநிலத்திற்கு ரூ.1000 கோடி ஆகும் என்று குறிப்பிட்டேன். அதற்கு ஐயோ ஆயிரம் கோடியா? என்று கேட்பார்கள். அதே நேரத்தில் நிபுணர்கள் சொல்லியிருப்பது ரூ.600 கோடி. இப்போது இந்த மன்றத்திலே இருககின்ற உறுப்பினர்கள் சொன்னவற்றை கணக்கிட்டு, ரூ.600 கோடியோடு கூட்டிப் பார்த்தால் அலபமாகப் போட்டிருக்கலாம். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் ரூ.11,000 கோடி அளவு என்றால், ரூ.1000 கோடி இந்த மாநிலத்தில் தருவதில் என்ன தவறு இருக்கிறது?

குழந்தையாகி இருக்கிறேன்

இதிலும் நமது நிதியமைச்சர் அவர்கள், மூன்று விதமாக இது பிரிக்கப்படுகிறது என்று சொன்னார்கள். அதாவது சென்டர் செக்டார், ஸ்டேட் செக்டார், பிரைவேட் செக்டார் என்று சொல்லப்படுகிறது. இதை நான் பார்த்திருக்க மாட்டேனென்று நமது நிதியமைச்சர் அவர்கள் கருதியிருக்க மாட்டார்களென்றே நம்புகிறேன். அப்படி அவர்கள் கருதியிருந்தாலும் அவர்களுடைய அரசியல் அப்படி எண்ண வைத்திருக்கும்.

கனம் சி.சுப்பிரமணியம் நான் பேசுகிறபோது நீங்கள் இல்லை.

அண்ணா – எனக்கு 2, 3 நாட்களாக உடல்நலம் சரியில்லை. அதற்கு நான் ரொம்பவும் வருத்தப்படுகிறேன். இப்போது அதற்கப் பதிலாக நமது நிதியமைச்சர் அவர்கள் மீ்ண்டும் பேசும் போது அதைக் கேட்பதற்கான வாய்ப்பு கிடைக்கப்போவதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆகவே, இந்தத் திட்டம் போட்டிருக்கக் கூடிய முறை, அதன் குறிக்கோள் ஆகியவை நல்லமுறையில் நடத்தப்படவில்லை என்பதுதான் என் கருத்து. அதற்காகத்தான் நான் ஆயிரம் கோடி ரூபாய் கேட்டேன். எதற்காக ஆயிரம் கோடி ரூபாய்? அண்ணாத்துரை குழந்தையைப்போல் கேட்கிறாரே என்று சொன்னார்கள்.

கனம் சி. சுப்பிரமணியம் – நாங்கள் சொல்லவில்லை என்று சொன்னேன்.

இவரும சொன்னார் – அவரும் சொன்னார். ஆகவே, இருவரும் சொன்னதால்தான் நான் பன்மையில் பேசினேன்.

எனக்கு ஒரு மகிழ்ச்சி. முதலிலே நான் ரூ.1000 கோடி கேட்டபோது பண்டாரமாகக் காட்சியளித்தேன். இப்போது பண்டாரமில்லை குழந்தையாகி இருக்கிறேன். குழந்தையைச் சாதாரணமாகத் தாயானவள் இடையிலே தூக்கிக் கொள்வாள்.

என் கருத்தை ஏற்பாரா?

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், நமது நிதியமைச்சர் அவர்களுக்கு மத்திய சர்க்காரில் இட நெருக்கடி ஏற்படாமல் இருந்து அவர் சொல்லக்கூடிய குறைபாடுகளை யெல்லாம் ஏற்றுக்கொள்வதாக இருந்து அப்படி அங்கே போனபிறகு அவருக்கு இந்த இடத்தின் நினைவு இருந்து இந்த இடத்தைப் பற்றிச் சற்றுச் சிந்தித்து அதற்காக வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டுமென்று நினைவு வந்தால் அப்போது தாயானவள் குழந்தையை இடையிலே தூக்கிக் கொண்டு கொஞ்சுவதுபோல், என்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வார்கள். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சிஅடைவேன் என்பதைச் சொல்லிக்கொண்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

(நம்நாடு - 20, 21.11.61)