அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வெற்றி அல்லது வீரமரணம்
1

“காங்கிரஸ்காரர்களில் எத்தனைத் தியாகிகள், சுயராஜ்யத்திற்காக இரத்தம் சிந்தியிருப்பார்கள்? அவர்களெல்லாம் சுயராஜ்யத்தைப் பாரக்க முடிந்ததா? பாளையங்கோட்டையில் வாழ்ந்த சிதம்பரனால் சிறையிலே செக்கிழுத்தார். அவர் சுதந்தரத்தைக் காண முடியவில்லை. பாஞ்சாலத்திலே பிறந்த தூக்கு மேடையில் உயிரைப் பறிகொடுத்த பகத்சிங், கொடிக்காக வீரமரணம் எய்திய திருப்பூர் குமரன் ஆகியோரெல்லாம் சுதந்திரத்தைக் காண முடிந்ததா? சுதந்திர இந்தியச் சேனை அமைத்துப் பார்க்க முடிந்ததா? துப்பாக்கியயிலுள்ள சனியன் மார்பைத் துளைத்தாலும் சரி என்று அஞ்சாமல் எதிர்த்துப் போராடிய லாலா லஜபதிராய், வழக்கறிஞராகப் பெரும்புகழ் பெற்ற மோதிலால் நேரு போன்ற பெரும் தலைவர்களெல்லாம் சுதந்தரத்துக்காகக் கொட்டிய இரத்தம் எவ்வளவு? இதையெல்லாம் கொஞ்சம் மனத்தில் கொண்டு வந்த பாருங்கள், அவர்களெல்லாம் பாடுபட்டதற்கான பலனைப் பார்க்க முடிந்ததா? அவர்க்ளுக்குப் பின்னாலே வந்தவர்கள்தான் சுதந்தரத்தை அனுபவிக்கிறார்கள்.

நமது மரபாக வேண்டும்

“அதேபோல நானும் நெடுஞ்செழியனும், கருணாநிதியும், அன்பழகனும், தருமலிங்கமும், சண்முகமும், இன்றுள்ள மற்றவர்களும் மறைந்தாலும், உயில் போலச் சொல்லிவிட்டுப் போகிறோம். ‘தமிழ் மண்ணில் கோழைகளுக்கு இடம் இருத்தல் கூடாது, வெற்றி அல்லது வீர மரணம் என்பதுதான் நம்முடைய மரபாக இருக்க வேண்டும்‘.

“வெறும் புத்தகங்களைப் படித்து விடுவதனாலே மேதையெனத் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாமல் இருக்கலாம், நகைப்புக்குரியதாகக்கூட இருக்கலாம், வெற்றி அல்லது வீர மரணம்- என்பதுதான் நமது இலட்சியம். இந்த இலட்சியத்திலிருந்து நழுவி ஓடுபவர்கள் எவரும் இங்கு இருக்க முடியாது“ என்ற மதுரைத் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நமது கழக மூன்றாவது பொது மாநாட்டுக்குத் தலைமை ஏற்ற அறிஞர் அண்ணா அவர்கள் நமது முன்னுரையில் குறிப்பிட்டார்கள்.

அண்ணா அவர்களின் சொற்பொழிவு முழு விவரம்) வருமாறு:
நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்றாவது பொது மாநாட்டிற்கு நான் தலைமை வகிக்க வேண்டும் என்று மெத்த அன்போடும் உரிமையோடும் கேட்டு இந்த ஏற்பாட்டுக்கு என்னை உள்ளாக்கி விட்டிருக்கிறீர்கள். என்னுடைய தம்பிமார்கள் இங்கு என்னைப் பற்றிப் பேசிய நேரத்தில், பல அரிய பண்புகள் என்னிடத்தில் இருப்பதாகச் சொன்னாலும், என்னிடம் இருக்க வேண்டிய அரும் பண்புகளைக் கூறி என்னை வெட்கத்தில் ஆழ்த்தி விட்டார்கள்.

நம்மிடையே சனநாயகப் பண்பு வெற்றி பெற்றிருக்குமேயனால், நான் இன்று தலைவனாகியிருக்க முடியாது. நமது கழகம் ஒரு நல்ல சனநாயகப் பரிட்சையை நடத்தி வருவதால் அதன் காரணமாகவே நான் இங்குத் தலைவராக வர நேர்ந்துவிட்டது.

நெருக்கடிக் கட்டமும் அன்புக் கட்டளையும்

திருச்சியில் நடத்த நமது இரண்டாவது பொது மாநாட்டில், நம்முடைய நாவலரை, ‘தம்பி வா, தலைமை ஏற்க வா...‘ என்று தழுதழுத்த குரலில் அழைத்தபோது இந்த மாநாட்டிலும் ஒரு தம்பியைத் தலைமை தாங்க அழைக்கலாம் என்றிருந்தேன். ஆனால், சனநாயக வளர்ச்சியில் நெருக்கடிக் கட்டம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்ன நேரத்தில் தம்பிகளின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் நான் பொறுப்பேற்க நேர்ந்தது.

எனக்கு விருப்பமான காரியம் இதுவல்ல. வேறு ஒரு தலைமை வகிக்கவும், நான் உங்களில் ஒருவனாக இருந்து உங்களோடு அளவளாவவும், புதிய கருத்துரைகளைக் கேட்டு உற்சாகம் பெறவும் தான் நான் விரும்பினேன்.

வெள்ளமும் வேதனையும்

வெள்ளப் பெருக்கால் மக்கள் மெத்த அல்லலுக்கு ஆளாகியுள்ள நேரத்தில் இங்கே கூடியிருக்கிறோம் நாம். கர்நாடக, கேரளப் பகுதியிலும், கோவை, சேலம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், திருச்சியிலும், தஞ்சையிலும் மற்றும் தென்னாற்காடு மாவட்டத்திலும் வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி நம்மையெல்லாம் கலங்க வைக்கிறது. குறிப்பாகத் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நான் இத்தனைக் காலமாக அடிக்கடி கண்ட முகங்களை – எனக்கு உற்சாகம் தரும் முகங்களை இங்கே காணமுடியவில்லை. நம்முடைய தோழர்களில் ஆறிலே ஒரு பங்கினர் இன்று இங்கே வரவில்லை. அவர்களெல்லாம் அங்கே அரும்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கேள்வியுறும்போது நமக்கெல்லாம் வேதனையாக இருக்கிறது. வெள்ளத்தால் துன்பப்படும் அவர்களுக்கு இந்த மாநாட்டின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் ஆறுதலையும், நம்மால் இயன்ற உதவியையும் செய்வோம் என்ற உறுதிமொழியை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளைய தினம், மாநாட்டு நிகழ்ச்சி துவங்குமுன், நம் அரும்பெரும் தலைவர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் உங்களிடம் உண்டியல் ஏந்தி வரும் நேரத்தில் உங்களால் இயன்ற வரை பொருளுதவி தந்து உறுதுணை அளிக்க வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

நம்மால் முடிந்த இழப்பீடு

நான் இன்றைய தினம் மெத்த வாதாடி, அழுத்தமான நமது பொருளாளரிடமிருந்து இரண்டாயிரம் ரூபாய் கேட்டுப் பெற்றுக் கொண்டு இன்று இரவே தஞ்சைக்குச் செல்கிறேன். அங்குச் சென்று பார்வையிட்டு அவர்களுக்கெல்லாம் ஆறுதல் கூறிவிட்டு, தஞ்சைக் கலெக்டரிடம் பணத்தை ஒப்படைத்து விட்டு நாளை பிற்பகல் வந்து மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

நமக்கிருக்கின்ற இரத்த பாசத்தினால், திராவிட மக்கள் எங்கிருந்தாலும் அவர்கள் படும் அல்லலை கேள்வியுற்றதும் நமது தசை ஆடுகிறது. என் அன்பின் அறிகுறியாக, தஞ்சைக்கு மட்டுமே ரூ.2000 கொடுக்க எண்ணியுள்ளோம். மற்றப் பகுதிகளுக்கும் ஒரு ஐயாயிர ரூபாய் அளவில் நமது பொருளாளர் மூலம் கொடுத்துதவிவர ஏற்பாடு செய்திருக்கிறோம்.

அக்கறையேது அவர்களுக்கு?

திராவிடத்தில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் எத்தனை கொடுமைகள் நடந்தாலும் வட அரசு கவலையற்றிருப்பதைக் காணுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையிலும், இராமநாதபுரத்திலும் புயல்-வெள்ளம் ஏற்பட்டபோது பண்டித நேரு தக்க அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது அவர் ரூ.25000 அனுப்பியிருப்பது நியாயமாகக் காட்டக்கூடிய நல்லெண்ணத்தைக் கூடக் காட்ட மறுக்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

என்னுடைய இந்த தலைமையுரையையே நேருவுக்கு விடுக்கும் வேண்டுகோளாகவும், எச்சரிக்கையாகவும் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன். பண்டித நேரு உடனடியாகத் தக்க பொருளுதவியும் செய்ய வேண்டும் என்று உங்களுடைய நல்லெண்ணத்தினை ஒட்டியும், அனுமதியின் பேரிலும் நேரு அரசாங்கத்திற்க எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோளை விடுக்கிறேன்.

அழிவு சாதாரணமானதா?

ஏற்பட்டுள்ள வெள்ளக் கொடுமை சாதாரணமானதல்ல, வழக்கமான அளவை மீறி, தண்ணீர் மேட்டூர் அணையில் வழிந்து ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் பாய்ந்தும், தடுக்க முடியாமற்போய், சிற்றூர்கள் பல சின்னா பின்னாமாக அடைந்துள்ளன. சீழ்காழி – கும்பகோணம் பாதையிலும் பல கிராமங்களில் வெள்ளம் புகுந்து, மக்களெல்லாம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். நீந்தத் தெரிந்தத ஆடு, மாடுகளெல்லாம் பிழைத்தன, மற்றவை செத்து மிதக்கின்றன. குடிசைகளெல்லாம் அடித்துத் செல்லப்பட்டிருக்கின்றன. இருந்த இடத்தை விட்டு வந்த மக்கள் கரையோரத்தில் கையே தலையணையாகவும், வானமே கூரையாகவும், கவலையே உற்ற தோழனாகவும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பரிதாபக் காட்சிகளை நமது தஞ்சை மாவட்டச் செயலாளர் மன்னை நாராயண சாமி என்னிடத்தில் வந்த சொன்ன நேரத்தில், உடனே அங்குச் செல்ல நினைத்தேன். ஆனால் ஊர்வல ஏற்பாட்டைக் கைவிட்டுவிட்டால் இலட்சணக்கான மக்கள் ஏமாற நேரிடும் என்று எடுத்துக்காட்டி வற்புறுத்தப்பட்டதால்தான் நான் இங்குத் தங்க நேரிட்டது.

இங்குள்ள சிற்றாறுகளின் கரைகள் ஒரு சின்ன வெள்ளம் வந்தால்கூடத் தாங்க முடியாத நிலையில் இருக்கின்றன நம்முடைய துரைத்தனத்தால் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.4800 கோடியும் செலவிட்டிருக்கிறார்கள். இவ்வளவு கோடிக் கணக்கில் ரூபாய்களைச் செலவிட்டும் வெள்ளத்தைத் தாங்கக் கூடிய வலிமை ஆற்றங்கரைகளுக்கு இல்லை. எஞ்சினீரியங் இலாகாவுக்கும் ஆற்றல் இல்லை, எதிர்பார்த்துத் திட்டமிட்டுச் செயலாற்றும் திறமை மாநில அரசுக்கு இல்லை.

நம்முடைய முன்னோர்கள் முன்னெச்சரிக்கை

இன்று உடைப்பு ஏற்பட்டிருக்கும் கல்லணை இராச ராச சோழன் காலத்தில் கட்டப்பட்டது. எஞ்சீனியரிங் முறைகள் இல்லாத பிற விஞ்ஞானத் துறைச் சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்தில் இராசேந்திர சோழனால் மனிதர்களின் ஆற்றலைக் கண்டு கல்லையும் சுண்ணாம்புச் சாந்தையும் வைத்துக் கட்டப்பட்ட அந்த அணை இப்போது உடைபட்டிருக்கிறது.

நமது முன்னோர்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடனும், முன் யோசனையோடும் நீர்ப்பாசன முறைகளைக் கற்றறிந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் நேரத்தில் நமக்கெல்லாம் வியப்பாக இருக்கிறது.

என் நாட்டை நானே ஆளவேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறபோது, சிலர் வழி தவறியிருக்கிறார்கள் என்ற செய்தி வேதனை தருகிறது. அப்படிப்பட்டவர்களையும் நல்வழிப்படுத்துகிற முறையில் நீங்களெல்லாம் ஏற்படுத்தித் தந்திருக்கும் உற்சாகமும், நீங்கள் ஊர்வலத்தில் காட்டிய எழுச்சியும் உணர்ச்சியும், வழி தவறியவர்கள்கூட மீண்டும் இங்கு வந்து சேர வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

போன குழந்தை வராதா?

நான் இதைச் சொல்கிற நேரத்தில், ‘போனவர்களை நீ ஏன் அழைக்கிறாய்? எனக் கேட்காதீர்கள். எட்டு குழந்தை உள்ள ஒரு தாய் திருவிழாக் கூட்டத்தில் ஒரு குழந்தையைத் தவற விட்டுவிட்டால், ‘போனால் போகட்டும்‘ என்று இருந்து விட மாட்டாள். மற்ற ஏழு குழந்தைகளையுங்ம அழைத்து ‘தவறிப்போன அந்தப் பிள்ளைக்குச் ‘சாக்லெட்‘ பிடிக்கும் யாரோ அவனிடம் சாக்லெட் கொடுத்து அழைத்துச் சென்று விட்டார்கள்‘ என்று சொல்லி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பக்கம் அனுப்பித்தேடி அழைத்து வரச் சொல்லுவாள்.

அந்தத் தாயைப்போல, நான் ஒரு பைத்தியக்காரன் அதனால்தான் இந்தப் பேதை நெஞ்சம் மீண்டும், ‘போன குழந்தை வராதா? குடும்பத்தில் கலகலப்பு ஏற்படாதா?‘ என ஏங்குகிறது.

திருவிழாக் கூட்டத்தில் குழந்தைகளிடத்திலே சாக்லெட்டைக் காட்டி, நாக்கிலே தேனைத் தடவித் திருடர்கள் ‘மோதிரைத்தைக் கழற்றிக் கொடு‘ என்று கேட்டுப் பறித்துக் கொண்டு செல்வதைப்போல் இல்லாமல், என் தம்பி கொள்கையைக் கழற்றிக் கொடுக்காமல் அதை என்னிடத்தில் ஒப்படைத்தார். நாளை பல்வேறு நிகழ்ச்சிகளைக் குறித்து பெறுகின்ற மன எழுச்சி, வழி தவறியவர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அந்த அளவுக்கு நம் நிலைமை உயர வேண்டும் என்று நீங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஏமாற்றத்திற்கோ, இடுக்கண்களுக்கோ ஆட்பட்டு அல்லல் பட்டாலும், அது தனது கொள்கையிலிருந்து திரும்பிவிடப் போவதில்லை.

பிணக்குவியலின் மத்தியில் பயங்கரப் போராட்டம்

நேற்று நடைபெற்ற ஊர்வலக் காட்சி அல்ஜீரிய மக்கள் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்தும் விடுதலைப் போராட்டத்தை நினைவுறுத்தியது. இந்த ஊர்வலத்தில் அணிவகுத்துச் சென்று வீரர்களைப்போலவே-அல்ஜீயி வீரர்கள் காக்கி உடைதரித்து, இங்கே காரிலே சென்றவர்களைப்போல அங்கு டாங்கிகளிலேயும், இங்கே கரங்களில் கொடியேந்திச் சென்றதைப் போல – அங்கே துப்பாக்கி ஏந்தியும் செல்கிறார்கள். நீங்கள் இங்கே மூட்டை முடிச்சுகளுடன் ஊருக்குள் நுழைந்ததைப் போலவே அவர்கள் அங்கு கோட்டைகளைக் கைப்பற்றி உள்ளே நுழைகிறார்கள். உங்கள் மார்பிலே வியர்வை வழிந்ததைப் போலவே அவர்கள் மார்பில் இரத்தம் வழிகிறது. நீங்கள் மீட்க வேண்டும்எ ன்ற எண்ணத்தில் பவனி வந்தீர்கள், அவர்களும் நாட்டை மீட்பதற்காகவே பிணக் குவியலின் மத்தியிலே பயங்கரப் போராட்டம் நடத்துகிறார்கள்.

அந்தக் காட்சியைச் சற்று எண்ணிப் பார்த்தேன், அல்ஜீரியவில் மூன்று சங்கங்கள் இருந்ததில்லை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட குறல் இல்லை, அகமும் புறமும் படைத்தவர்கள் அங்கு இல்லை, ஆனால் அவர்கள், ‘எங்கள் நாடு எங்களுக்கு வேண்டும்‘ என்ற அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்கள். இங்கே, அரசியல் அரிச்சுவடியே அறியாதவர்கள் நாம் என்று சிலர் நம்மைப் பார்த்துக் கேலி செய்கிறார்கள்.

திறமை மிக்கவர்களைத் தலைமையில் அமர்த்துவேன்

என்னைவிட ஆற்றல் படைத்த தலைவர்கள், திறமை மிக்கவர்கள் கிடைக்கிற காலம் வரைதான் நான் தலைவர். அதன் பிறகு நானே அப்படிப்பட்டவரை அழைத்து வந்து தலைமை ஏற்கச் சொல்லி அவர் பக்கத்திலே இருந்து பணியாற்றுவேன். சிறு வயது முதலே அப்படிப் பழக்கப்பட்டவன் நான்.

நான்தான் உங்களில் சற்று மூத்தவன் என்று சொல்லக்கூடிய நிலையில் 52 வயது எனக்கு ஆகிறது. எனக்கே டாங்கி,துப்பாக்கி முதலியவை மீது மனம் பாய்ந்தது என்றால், இளைஞர்களாக உள்ள உங்களிடத்திலும், நிமிர்ந்த நெஞ்சுள்ள நெடுஞ்செழியனிடமும் கட்டுக்குலையாத உடலும் உறுதியான உள்ளமும் படைத்த மதியழகனிடமும் உருகாதவர்களையும் சேர்ந்தால் உருக வைக்கும் கருணாநிதியிடமும் என்னென்ன எண்ணங்கள் தோன்றக் கூடும்.

ஈ அதிகமாகப் பறந்தால் அந்த இடத்தில் பலாப்பழம் இருக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். அதைப் போல, ஏராளமானவர்கள் ஏன் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பரிந்து கொள்ளாதவர்கள் அரசியலுக்கே லாயக்கற்றவர்கள் ஆவார்கள்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாம் எங்கிருந்து புறப்பட்டோம், இன்னும்நம் பயணம் எப்படி இருந்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உங்கள் ஆற்றல் ‘ஒத்திகையாக‘ அமையட்டும்

நேற்று நான் ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த நேரத்தில், இங்குள்ள மலை மீது நின்று சிலர் நமது கழகக் கொடியைக் காட்டி வரவேற்றார்கள். தூரத்தில் வரும்போது யாரோ சில பக்தர்கள் முருகன் சன்னதிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணினேன். கிட்டே நெருங்க நெருங்க அவர்கள் மலை மீது அணிவகுத்து நின்றார்கள் அதன் பிறகு கொடி அசைந்தது, அது நமது கழகக் கொடியாக இருந்ததைக் கண்டு வியந்தேன்.

தோழர்களே( நீங்கள் பிடிக்க வேண்டிய கோட்டைகள், கடக்க வேண்டிய குன்றுகள், நடத்த வேண்டிய அணி வகுப்புகள் ஏராளம் இருக்கின்றன. அதற்கு இவையெல்லாம் ஒத்திகைகளாக அமையட்டும். விடுதலைப் போராட்டத்தில் சின்னஞ்சிறு காயம் பட்டு அஞ்சி ஓடுபவர்கள்அரசியலுக்கே லாயக்கற்றவர்கள்.

அந்த நிலை இன்று இல்லை

ஆச்சாரியார் கவர்னர் ஜெனரலாகச் சென்னைக்கு வந்தபோது, நாம் கறுப்புக் கொடி காட்டுவதற்காகக் கூடி நின்ற நேரத்தில் – ஒரு பக்கத்திலே ரயில் நிலையம், மற்றொரு பக்கத்தில் முள் வேலி, இன்னொரு பக்கம் மலபார் போலீஸ் நடுவிலே கையிலே கொடியுடன் நின்று கொண்டிருந்தவர்களை அடித்து ஓட ஓட விரட்டினார்கள். கூட்டத்தின் நடுவிலிருந்த நமது அப்பாத்துரையாரை அடித்து மிதித்து போட்டு விட்டுச் சென்றார்கள். அப்போது அது பற்றி ஏனென்று கேட்க எனக்கு வக்கில்லை. இரத்தம் சொட்ட சொட்ட அடிபட்ட தோழர்களெல்லாம் ஓடி வந்தார்கள். அப்போது தங்கசாலைத் தெருவிலிருந்து நமது கழக கட்டிடத்தில் நாங்களெல்லாம், இருந்தோம். அடிபட்டவர்களுக்கு மருந்து போட்டுக் கட்டு கட்டுவதற்கு எந்த டாக்டரை அழைத்தாலும் வர மறுத்து விட்டார்கள். கடைசியாக ஒரே ஒரு டாக்டர் அவர் எனக்கு மிகவும் வேண்டியவர் ஆகையால் என் வேண்டுகோளை ஏற்று வந்து கட்டுக்கட்டிவிட்டுச் சென்றார். அவரிடம் முதலில் விஷயத்தைச் சொல்லாமல், எனக்குச் சிகிச்சை செய்வதற்காக என்று அழைத்தேன். வந்த பிறகு தான் விஷயம் அவருக்குப் புரிந்தது. பிறகு மறுக்க முடியாமல் எல்லாருக்கும் கட்டுக் கட்டினார்.

ஆனால், இப்போது அந்த நிலை மாறி, இடறி விழுந்தால் டாக்டர்கள் மீதும் வக்கீல்கள் மீதும் விழக்கூடிய அளவுக்கு நமது கழகத்திலே டாக்டர்களும், வக்கீல்களும் பெருகியிருக்கிறார்கள். இதோ இங்கே மேடையிலே இருப்பவர்களில்கூட நாலைந்து டாக்டர்களும், நாலைந்து வக்கீல்களும் இருக்கிறார்கள்.

கூறுகெட்ட காரிகை போலத்தான்...

அண்ணாதுரைக்கு அரசியல் தெரியவில்லை என்று சிலர் சொல்கிறார்கள், ஆம், தெரியவில்லைதான். எனக்கு அரசியல் தெரியாத காலத்திலேயே இந்த வளர்ச்சி என்றால், அரசியல் நன்றாகத் தெரிந்திருந்தால் எப்படி இருக்கும் என்று அவர்கள் யூகித்துக் கொள்ள வேண்டும்.

எனக்குத் தெரியாத அரசியலை, தெரிந்தவர்கள் எனக்குத் திரட்டித் தரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

காம வெறிபிடித்த ஒரு கணவன் தன் மனைவியைப் பார்த்து, ‘உனக்கு அழகு இல்லை‘ என்று கூறி வெளியிலே தள்ளினால் ‘நீ மெத்த இளைத்து விட்டாய்‘ என்று கணவனைப் பார்த்துக் கூறிவிட்டு ஓடும் கூறுகெட்ட காரிகை போலத்தான் கட்சியை விட்டுப் போகிறேன் என்பதும். நான் இப்படிச் சொல்வதால் யாரும் மனத்தாங்கல் அடையமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

வளர்ச்சியைக் காணீர்!

கோயில்பட்டி வள்ளிமுத்துவை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நாமெல்லாம் திராவிடக் கழகத்தில் இருந்த போது அவர் ஒருவர்தான் மேஜர் பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்தார். மேஜர் பஞ்சாயத்து போர்டு தலைவரான அவரை, நாங்களெல்லாம் ‘நகராட்சித் தலைவர்‘ என்றுதான் சொல்வது வழக்கம். அவ்வளவு பஞ்ச நிலை அப்போது( ஆனால் இன்று நாம், சென்னை மாநகராட்சியில் மூன்றாவது மேயரைப் பெற்றிருக்கிறோம்.

உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் – நான் 1939இல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டுத்தோற்றவன். ஆனால் அதே மாநகராட்சியில், இன்று நமது தோழர் முனுசாமி மேயராக வீற்றிருக்கிறார். இது வளர்ச்சி இல்லையா?

முன்பெல்லாம் சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் காணவேண்டும் என்றால் நாங்களெல்லாம் நம்முடைய நண்பர்களான திருவொற்றியூர் சண்முகம் அவர்களிடமும், ஏ.கோவிந்தசாமி அவர்களிடமும் போய், அனுமதிச் சீட்டு கேட்போம். இப்போது நாங்களெல்லாம் சட்டமன்றத்திலேயே இடம் பெற்றிருக்கிறோம். இப்போதெல்லாம் சட்டமன்றமே கலகலப்பாக இருக்கிறது என்று மாற்றுக் கட்சியினரெல்லாம் பாராட்டும் அளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம்.

இது வளர்ச்சயில்லையா?

முன்பெல்லாம் பெரியார் அவர்கள் பேசுவதைப் படம் எடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்வதற்கு இரோட்டிலிருந்து சேலத்துக்குச் செல்வோம். பெரியார் அவர்களின் பேச்சை ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு பெரிய ஆசை இருந்தது. அதற்காக நான் சென்னையிலுள்ள கிராம போன் கம்பெனியான சரஸ்வதி ஸ்டோருக்குச் சென்று அங்குள்ளவர்களிடம், பெரியாரின் பேச்சைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டேன். ‘எந்தப் பெரியார்?‘ என்று கேட்டார்கள். ‘ஈரோட்டுப் பெரியார்‘ என்றேன். அதற்கு அவர்கள் ‘ஓகோ, ஈரோட்டு இராமசாமி நாயகரா?‘ என்று கேட்டார்கள். ஆம் என்றேன். ‘பெரியாரின் பேச்சை பிளேட் எடுக்கவேண்டுமென்றால், ஆயிரம் பிளேட்டுகளை நீங்களே வாங்கிக் கொள்ள வேண்டும்‘ என்று நபிந்தனை விதித்தார்கள். அது நம்மால் இயலாது என்று உணர்ந்து திரும்பி விட்டேன். ஆனால், அதே கம்பெனியார், இப்போது என்னுடைய பேச்சைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், நமது நாகூர் அனீபா அவர்கள் மூலமாக நானும், ‘ஆகட்டும்’ என்ற இழுத்துக் கொண்டிருக்கிறேன் இது வளர்சச்யில்லையா?

‘இது எங்களுடைய வளர்ச்சி‘ என்கிறேன். ‘இது ஒனரு மகா வளர்ச்சியா?‘ என்று யாரேனும் கேட்டால் நீ மகா பெரியவனாக இருந்தால் இதைவிடப் பெரிய வளர்ச்சியைப் காட்டி சபாஷ் பட்டம் பெற வேண்டுமே தவிர, இது வளர்ச்சியில்லை என்று சொல்ல முடியாது.

“சுரங்கத்துக்குள்ளிருக்கும் தங்கத்தைக் கல்லி எடுத்தால் தான் அது கிடைக்கும். கடல் முந்தும், மூழ்கி எடுத்தால்தான் கிட்டும். அதைப்போல, ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகத்திலும் உள்ளவர்களிடையேயுள்ள விடுதலை எண்ணத்தைக் கல்லி எடுக்க வாய்ப்பு வேண்டும். குறை அவர்களுடையதல்ல, தமிழ்நாட்டில் பேசிப் பேசித் தமிழ் மக்கள் அனைவரும் இதை ஏற்றுக் கொண்டார் என்றால், இங்கே சட்டமன்றத்திலே 100 பேர் நம்மவர் அமர்கிறார்கள் என்றால், விஜயவாடாவுக்குச் சென்றால் என் வார்த்தை ஆந்திரர் காதில் விழாதா?

“நாளுக்கு நாள் தமிழ் நாட்டில் விடுதலை ஆர்வம் பெருகி வருகிறது. மறற் மாநிலங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. நான் மற்ற மாநிலங்களுக்குப் போகும் நிலை பிறந்துவிட்டால் பிறகு இங்குள்ளவர்களுக்கு நான் கிடைக்கமாட்டேன். அங்குள்ளவர்களெல்லாம் என் பேச்சைக் கேட்டு விட்ட பிறகு, அலுத்துவிட்ட சங்கீத வித்வான்போல் இங்கு நான் வந்தால்தான் என் பேச்சை நீங்கள் கேட்க முடியும்.

வேறு இடத்திலா வேலை செய்வது?

இங்கே இராமநாதபுர மாவட்டத்தில் மட்டுமே செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது என்றால், அதை விட்டுவிட்டு வேறு இடத்திலா வேலை செய்வது?

ஒரு பெரிய காங்கிரசுத் தலைவர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கையில், முதுகுளத்தூர்ப் பகுதியையே செலவுக் கணக்கில் எழுதிவிட்டோம் என்றார். அப்பொழுது என்னுடன் நம்முடைய மதியழகனும் இருந்தார். அந்தக் காங்கிரசுக்காரர் இதை இல்லை என்று மறுப்பாரானால், அவருடைய பெயருடன் மறுப்பை வெளியிடட்டும். நான் அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அநத்க் காங்கிரசுத் தலைவர், ஒரு தாலுகாவே வேண்டாம் என்பது போல நாம் இருந்துவிட முடியாது“ என்று திருப்பரங்குன்றத்தில் நடந்த தி.மு.க. மூன்றாவது பொது மாநாட்டுத் தலைவர் அண்ணா அவர்கள் தமது முன்னுரையில் குறிப்பிட்டார்கள்.

வீரர்கள் நிறைந்த நாடு இது

தாய்த் திருநாட்டை மீட்கும் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காணுவதிலேதான் நான் மகிழ்ச்சியடைவேன் பலர் 400, 500 பக்கங்கள் கொண்ட புத்தகங்களைப் படிக்காதவர்களாக இருக்கலாம், வெளி நாடுகளுக்குச் செல்லாதவர்களாக இருக்கலாம், ஆனால் வீரர்கள் நிறைந்த நாடு இது.

மதுரை, தஞ்சை மாவட்டங்களில் பார்த்தால் ஊர்களின் பெயர்கள் கோட்டை, கோட்டை என்று முடிவடையும். கந்தவர்க்கோட், தனிக் கோட்டை என்ற பெயர்களில் அந்த இடங்களிலெல்லாம் கோட்டை கொத்தளங்கள் இருந்திருக்கின்றன.

அதேபோல், போர் வீரர்கள் தங்கிய இடம் ‘பாளையம் என்று பெயர் பெற்றது. பாண்டி மண்டலத்தில், பாளையம் என்ற பெயர் உள்ள ஊர்கள் பல உண்டு. ஊமையன் கோட்டை, பாஞ்சாலங்குறிச்சி போன்ற இடங்கள் வீரத்திற்குச் சின்னமாக உள்ளன. பாண்டியன் அரசாண்டதற்குச் சான்றுகளாகப் பல திகழ்கின்றன. நாயக்க மன்னர்கள் இதே மதுரையில்தான் புகழுடன் ஆண்டு அழியாச் சின்னத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

வீரச் செயலுக்குரியவர்களாகவும், அரிய பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இந்த நாட்டிலே வாழ்ந்தவர்கள் திகழ்ந்திருக்கிறார்கள். முத்தும் தந்தமும், சந்தனமும் அதிலும் இங்கிருந்து எடுத்துச் சென்று வெளிநாட்டில் வாணிபம் நடத்தியிருக்கிறார்கள்.

ஆழ்கடலில் மரக்கலம் விட்டு, கத்தும் கடலை அடக்கியவர்கள் தமிழர்கள். கடல் கடந்து கடாரத்தையும், சாவகத்தையும் வென்றார்கள் தமிழ் மன்னர்கள்.

‘சென்றான்‘ என்றிருக்கும்... ‘வந்தான்‘ என்றிருக்காது

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் இருந்து வரும் வித்தியாசத்தை நம்முடைய பண்டை வரலாற்றுப் பெருமைகளை இங்கே அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியிலே கூட நீங்கள் காணலாம்.

உங்கள் விட்டுப் பிள்ளைகள் பள்ளியிலே பாடமாகப் படிக்கின்ற இந்து தேசச் சரித்திரம் இருந்தால் அதை வாங்கிப் பாருங்கள். வட நாட்டை நோக்கி அலெக்சாண்டர் படையெடுத்து வந்தான்-செங்கிஸ்கான் வந்தான் – தைமூர் வந்தான் – பாபர் வந்தான் – ஹூமாயூன் வந்தான் என்று இருக்கும். தென்னாட்டு வரலாற்றைப் பார்த்தால், ‘வடநாட்டுக்குச் சென்றான்‘ என்று இருக்குமே தவிர, வடநாட்டிலிருந்து வந்தான் என்று இருக்காது.

இங்கிருந்து நெடுஞ்சேரலாதன் இமயம்வரை சென்று வந்து, ‘இமயம்வரம்பன்‘ என்ற பெயரைப் பெற்றான்.

சேரன் செங்குட்டுவன் இமயம் வரை சென்று, கனக விசயரை வென்று, கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்தான்.

பாண்டியன் நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த செய்திகை வரலாற்றில் காணலாம்(
இராசராச சோழன் கங்கை வரை சென்று, ‘கங்கை கொண்டான்‘ என்ற பெயரைப் பெற்றான், இராசேந்திரன் கடாரத்தை வென்றான்.

கரிகாற்பெருவளத்தான் சிங்களத்துக்குச் சென்று, வென்று, அங்கிருந்தவர்களை அடிமைப்படுத்தி, இங்குக் கொண்டு வந்த காவிரிக்குக் கரையெடுத்த வரலாறு உண்டு.

நாம் ‘வென்றான்‘ வரலாற்றைப் பெற்றிருப்பவர்கள், வடநாட்டினர் வந்தான் வரலாற்றுக்குரியவர்கள். அந்த ‘வந்தான்‘ பரம்பரைக்கு இந்த ‘வென்றான்‘ பரம்பரை அடிமைப்பட்டுக் கிடப்பதா?

வரலாற்றை உணருவோம்...

நாம் அடிமைப்பட்டிருப்பதும் வெற்றி வீரர்களிடத்திலே அல்ல. நாமும் தோற்ற இனத்தைச் சாந்தவர்களல்லர்.

இந்த வீர வரலாற்றை உணர்ந்தால்், மீண்டும் பழைய நிலைமை நிச்சயமாக ஏற்படும்.