அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வெற்றி அல்லது வீரமரணம்
2

இன்று நம்மீது வீசுகின்ற காற்று, திராவிடத்துக் காற்று( நாம் சுவாசிப்பது திராவிடக் காற்று. நாம் உண்ணும் உணவு, உட்கொள்ளும் தண்ணீர் திராவிடத்துக்குச் சொந்தம்.

இந்த வடநாட்டு ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்கு நம்மிடத்திலே வழியில்லை என்று நினைத்தாலும், நமக்கிருக்கின்ற எலும்புகளில் ஒன்றையாவது வீறி எறிந்தோம் என்றால் இன்று என் எலும்பு போயிற்று நானை என் தம்பி ‘விடுதலை‘யைக் கண்டான்‘ என்கிற பெருமையாவது நமக்குக் கிடைக்கும்.

இதை விட்டுவிட்டுப் பேரம் பேசுவது லட்சியவாதியின் பிணத்தைக் காட்டி, காரியவாதி இலாபம் பெறுவதாகும்.

அப்படிப்பட்ட காரியத்தைச் செய்தால், அடுத்த தலைமுறையினர், ‘இப்படிப்பட்டவர்களும் பிறந்தார்களே‘ என்று வேதனைப்படுவார்கள்.

நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள கழகம், இருக்கின்ற இடம் வெறும் அரசியல் இலாப வேட்டைக்காட்டல்ல!

உரிமைகளைப் பங்கு போட அல்ல

விடுதலை பெற்ற திராவிடத்தில் நாம் மண்ணோடு மண்ணாக இருக்கலாம். ஆனால் இந்த மண்ணில் நமது காணிக்கையாக இரத்தத்தைச் சிந்தியிருக்கிறோம். உயிர்த்தியாகம் செய்திருக்கிறோம் என்று வரலாறு இருக்க வேண்டும். அதற்காகத் தான் உங்கள் அனைவரையும் கழகம் அழைக்கிறது. உரிமைகளைப் பங்கு போட்டுக் கொள்ள அல்ல.

இங்கே கூடியுள்ள இத்தனைப் பேரையும் காணுகின்ற நேரத்தில், ‘நான் நடத்திச் செல்லுகின்ற இந்தக் கழகமா இப்படி வளர்ந்திருக்கிறது?‘ என்று எண்ணிப் பூரிக்கிறேன். எனது தலைமையில் நடக்கும் மாநாட்டில் இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருப்பதை நன்றாகப் பார்க்க அந்த அளவுக்கு நான் உயரமாக இல்லையே எனக் கவலைப்படுகிறேன்.

அடிப்படையில் வித்தியாசம்

காங்கிரசு நடத்திய விடுதலைப் போராட்டத்துக்கும் – அது பெற்ற சுயராஜ்யத்துக்கும், நாம் நடத்தும் போராட்டத்துக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது.

நண்பர்களே, தோழர்களே! காங்கிரசு ஆரம்பிக்கப்பட்டவுடன், காங்கிரசு வேறு – நாம் வேறு என்ற நிலை இல்லை, வெள்ளைக்காரண் வேறு – நாம் வேறு என்ற நிலைதான் இருந்தது.

இந்த நாட்டை ஆள்வதற்கு என்று ஆண்டவனே வெள்ளைக்காரனை அனுப்பி வைத்திருக்கிறான் என்று அப்போது சிலர் நம்பினாலும் வெள்ளையன் அந்நியன் என்பதை மக்களிடம் எளிதாக எடுத்துச் சொல்ல முடிந்தது. அதனாலே, விடுதலை உணர்ச்சியைச் சுலபத்தில் ஊட்ட முடிந்தது.

பாம்புகளிலே பலவிதம்

பாம்புகளிலே பலவிதம் உண்டு, நல்ல பாம்பு வேறு – மலைப்பாம்பு வேறு – பச்சைப் பாம்பு வேறு. நல்ல பாம்பைப் பார்த்தால் எளிதில் புரிந்த கொள்ளலாம். பச்சைப் பாம்பு இருப்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியாது.

நான் பத்து வயதுப் பையனாக இருந்த காலத்தில் ஒருநாள் பூ பறிப்பதற்காகத் தோட்டத்தில் நுழைந்தபோது, தோட்டக்காரன் என்னைப் பார்த்து, அங்கே போகாதே, போகாதே என்று கூறித் தடுத்தான். ஏன் என்று கேட்டேன். அங்கே பாம்பு இருக்கிறது என்றான். ஆனால்என் எண்ணுக்கு அங்கே பாம்பு இருந்தது தெரியவில்லை.

அதன் பிறகு, தோட்டக்காரன் பாம்பைச் சுட்டிக் காட்டி, அதோ பார் என்றான். அதன் பிறகுதான் நான் நன்றாக உற்றுப்பார்த்து தெரிந்த கொண்டேன். அந்தப் பாம்பு கொடியோடு கொடியாகச் சுற்றிக் கொண்டு பார்ப்பதற்குப் பச்சைக் கொடி போலவே இருந்தது. தோட்டக்காரன் தடுத்திராவிட்டால்,அந்தப் பாம்பு எனக்குத் தெரிந்திருக்காது. பச்சைப் பாம்பு பச்சைக் கொடியைப் போலவே இருக்கும் என்பது அன்றுதான் எனக்குத் தெரிந்தது.

அதைப்போல இன்று இந்தியர் யார் – வடவர் யார் – தென்னாட்டவர் யார் என்பதைக் கண்டுகொள்ள முடியாத நிலையில் இந்தியப் பேரரசு கொடி போல சுற்றிக் கொண்டிருக்கிறது.

வெள்ளையனுக்கும் – இந்தியனுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொன்னால் புரிந்து கொள்ள முடிந்ததைப் போல், நமக்கும்-வடவருக்கும் உள்ள வேறுபாட்டை விளங்க வைப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

இதை நாம் எடுத்துச் சொன்னால், ‘மக்களே கொடியை அறுக்காதீர்கள்‘ என்கிறார் காமராசர். வெள்ளைக்காரன் இருந்த காலத்தில் மக்களே அதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் திராவிடம் என்பது மறந்து போய்விட்டது. இப்போது அதைக் கல்லி உள்ளத்திலிருந்து வெளியே எடுக்கச் சொல்ல வேண்டியிருக்கிறது.

போலித்தத்துவத்தைக் களைந்தெறிய காலம் பிடித்தது

பழைய பாத்திரத்தில் கலாய் போய்விட்டதென்றால், முதலில் அந்தப் பாத்திரத்தில் உள்ள களிம்பை அகற்றிவிட்டு, மீண்டும் ஈயம் பூசினால்தான் அது பயன்படும். அதைப்போல, இந்தியா, இந்தியர் என்ற போலித் தத்துவத்தைக் களைந்து விட்டு மனப்பாத்திரத்தைச் சுத்தப்படுத்தித் திராவிடர் என்ற உணர்வை ஏற்படுத்த நமக்கு இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது. இன்று இநத முயற்சியிலே மகத்தான வெற்றி பெற்றிருக்கிறோம்.

இன்று ஒரு சிற்றூரிலே போய்ப் பார்த்தாலும், ஒருவர் இன்று நாட்டிலுள்ள கஷ்டங்களையெல்லாம் சொல்லி, ‘இவை அத்தனைக்கும் காரணம் வடநாட்டுச் சர்க்கார் தான்‘ என்று கூறுவதைக் கேட்கலாம். சில தாய்மார்கள் கூடக் கடை வீதியிலே சாமான் வாங்கும்போது இப்படிச் சொல்வதைக் கேட்கலாம். அந்த அளவுக்கு இந்தியத் தேசிய உணர்வு போய், திராவிடத் தேசிய உணர்வு ஏற்பட்டு வருகிறது.

“திராவிட நாடு லட்சியத்தை யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், இந்த இலட்சியத்திற்குப் பாடுபட என்னைப் போல் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இதுதான் எங்களுடைய ஒரே லட்சியம். எங்களை காடு, மலைக்கு விரட்டினாலும் கண்காணாச் சீமைக்கு அனுப்பினாலும், நாகர்நாட்டுத் தலைவன்போல் நாடு கடந்து இங்கிலாந்து நாட்டுக்குப் போக வசதியில்லை என்றாலும், பாலைவனத்துக்குப் போக நேரிட்டாலும், எங்கள் கரங்கள் திராவிட விடுதலைக் கொடியை ஏற்றக் காத்துக்கொண்டிருக்கும் எங்கள் எண்ணமெல்லாம் விடுதலை லட்சியத்திலேயே இருக்கும்.

“எதில் எந்த அளவுக்கு எங்களிடம் திறமை இருந்தாலும், அத்தனையும் இதற்குத்தான் பயன்படும். இங்கே கூடியுள்ள உங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பும் இதற்குத்தான். பரமக்குடியிலிரருக்கும் பக்கிரிசாமிக்கும், பாளையங்கோட்டையிலி ருக்கும் கந்தசாமிக்கும், திருச்சியிலிருக்கும் ராபிக்கும், காங்சிபுரத்தில் உள்ள எனக்கும் வேறு என்ன உறவு? இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ராபி, என்னை ‘அண்ணா‘ என்று ஏன் அழைக்க வேண்டும்?

“இந்த லட்சியம் இல்லையென்னறால் நீங்கள் யாரோ – நான் யாரோ. நாமெல்லாம் எங்கெங்குச் சிதறிக் கிடப்போமோ“.

“நம்மையெல்லாம் அரசியல் பிணைக்கவில்லை, சட்டசபை பிணைக்கவில்லை, தாய்த்திருநாட்டை விடுவிக்க வேண்டும்என்ற லட்சியம்தான் பிணைத்து வைத்திருக்கிறது“ என்று திருப்பரங்குன்றம் பொது மாநாட்டின் முன்னுரையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

வரலாற்றைத் தொகுத்தளிக்க வேண்டும்

நான் கல்லூரியிலே படிக்கும்போது, டி.ஆர்.சேஷய்யங்கார் எழுதிய ‘திராவிட இந்தியா‘ என்ற புத்தகத்தை எனக்குப் பாடமாக வைத்திருந்தார்கள். அந்த புத்தகத்தைப் பரிட்சைக்கு மட்டும் என்றுதான் எண்ணிப் படித்தேன். அது விடுதலை ஆர்வத்தை உண்டாக்கும் என்ற எண்ணத்தில் அன்று அதைப் படிக்கவில்லை. அந்த புத்தகத்தில் அவர், “திராவிடர் தனி இனத்தவர், திராவிடர்களுக்குத் தனிப்பண்பாடு உண்டு, அந்தப் பண்பாடு உலகத்துக்குத் தேவையான சிறந்த பண்பாடு ஆகும்“ என்று எழுதியிருக்கிறார்கள். அதைப் படிக்கும்போது, அது உத்தியோகத்துக்குத்தான் பயன்படும் என்று கருதிப் படித்தேன். மதுரை மாநாட்டுக்குப் பயன்படும் என்று எண்ணிப் படிக்கவில்லை. பார்த்த அத்தனை வரலாற்றையும் எடுத்துத் தொகுத்து அளிக்க வேண்டும் என்று திராவிட விடுதலையில் அக்கறையுள்ள வரலாற்று ஆசிரியர்களை நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

திராவிடர் என்பவர்கள் யார்? அவர்கள் கேரளத்தில் இருக்கிறார்களா, கன்னடத்தில் இருக்கிறார்களா? அவர்களெல்லாம் விடுதலை கேட்கிறார்களா? என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள். அவர்கள் இன்று கேட்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் கேட்பார்கள்.

இன்று விலைவாசி குறைய வேண்டும் என்று பேசும் அமைச்சர்களெல்லாம், நேரில் கண்டுவிட்டா பேசுகிறார்கள்? மக்கள் பேசுவதைப் பார்த்துப் பேசுகிறார்கள். கேரளத்திலும், கர்நாடகத்திலும் விடுதலை எண்ணம் இயற்கையாகவே இருக்கிறது. அதைவெளிப்படுத்த வேண்டும்.

கேட்பதுதானே அவரிடம்!

நம்முடைய அ.பொ.அரசு மேயராக இருந்த காலத்தில் அப்போது ஆந்திர முதலமைச்சராக இருந்த திரு.சஞ்சீவி (ரெட்டி)யார், சென்னை மாநகராட்சி மன்ற விழாவொன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் விழாவுக்குத் தலைமை வகிக்கும்போது அருகிலிருந்த மேயர் அரசு அவர்களை உற்றுப் பார்த்தார். அரசு, தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர் என்பது அவருக்கு நினைவு வந்தது. எனவே, அவரும் அதே எண்ணத்தில் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டு பேசினார். ஆந்திரம், கேரளம், கன்னடம், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலத்தவரும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டி, “நாம் நால்வரும சேர்ந்த டில்லியுடன் வாதாடிப் போராடி நமக்குத் தேவையானதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்“ என்று வற்புறுத்திப் பேசினார்.

கேட்பதுதானே, அவரைப் பார்த்து – எங்களிடம் கேள்வி கேட்கும் வீரர்கள்( அப்படிப் பேசாமலிருக்கும்படி அவரைத் தடுப்பதுதானே( அதை விடுத்து எங்களிடம் தகராறு புரிவானேன்?

இது மட்டுமல்ல, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.வி.இராசமன்னார் அவர்கள், திராவிட கலாச்சாரம் பற்றியும் திராவிடச் சங்கீதத்தின் பெருமையைக் குறித்தும் அடிக்கடி பேசவில்லையா?

ஓடுவார்களே தவிர, நின்றா பதில் சொல்லுவர்?
இன்றுள்ள தமிழ்நாட்டக் காங்கிரசுக்காரர்களிலேயே மிகக் கெட்டிக்காரர் என்றம், வாதாடுவதிலே பெரிய புலி என்றும் பாராடடப்படுகிற கொங்கு நாட்டுச் சிங்கம் திரு.சி.சுப்பிரமணியம் அண்மையில் சட்டமன்றத்தில் என்ன சொன்னார் தெரியுமா? நான் நம்முடைய தமிழ் நாட்டுக்காக டில்லியிலே வாதாடுகிற நேரத்தில் கன்னட நாட்டாரை ஏவி விட்டும், ஆந்திரரை ஏவி விட்டும், என்னை ஏமாற்றினார்கள். அப்படி அவர்கள் செய்தவற்கு இடம் கொடுக்காத வகையில் வாதாடினேன். ‘தென் மாநிலங்கள் நான்கிற்கும் ஒதுக்கும் நிதியை மொத்தமாக ஒதக்கிவிடுங்கள், பிறகு நாங்கள் எங்களுக்குள் அதைப் பிரித்துக் கொள்கிறோம்‘ என்று கூறினேன். இதுபோதுமா? என்று என்னைப்பார்த்துத்தானே அவர் கேட்டார்?

கிண்டியிலே ஒரு பொறியியல் கல்லூரி ஏற்படுத்த இருப்பது குறித்து அதே நிதியமைச்சர் சுப்பிரமணியம் சட்டமன்ற அறிக்கையில், ‘இந்த கல்லூரி தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல. திராவிடத்திற்காகவே ஏற்படுத்தப்படுகிறது. என்று என்னைப் பார்த்துச் சொன்னார்.

சட்டமன்றத்தில் நாங்கள் 15 பேர் இருக்கும் நேரத்திலேயே அவருக்கு இந்தப் பணிவு என்றால் 100 பேராக நாம் சட்டமன்றத்திற்குப் போனால் சுவரை உடைத்துக் கொண்டு ஓடும் வெள்ளம் போல் காங்கிரசுக்காரர்கள் ஓடுவார்கள் தவிர நின்று பதில் சொல்வார்களா?

யோசனை கேட்பவர்களும் கேலி செய்வானேன்?

இப்போது சட்டமன்றத்தில் நமது அன்பழகன் கூறும் புள்ளி விவரத்தைத் தவறு என்று ஒரு காங்கிரசு உறுப்பினர் எழுந்து சொன்னால், உடனே 150 காங்கிரசு உறுப்பினர்களும் கைதட்டுவார்கள், அதுதான் எங்கள் காதுக்கு இசையாக இருந்து வருகிறது. வெளியிலே மற்ற இடங்களில் எங்களை அ்ணுகி யோசனை கேட்கும் காங்கிரசுக்காரர்கள் கூடச் சட்டமன்றத்திற்குள் எங்களைக் கேலி செய்கிறார்களே – எதனால்?

‘அண்ணா( நீங்கள்தான் தலைவர் என்று என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்கள், எனக்குப் பின்னால் இருப்பது 15 பேர். அதிலும் சிலர் விடுபட்டுப் போய்விட்டார்கள். இருந்தாலும் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிடச் சொன்ன அவர்களின் ‘வீரம்‘ நல்ல வேலையாக சுப்பிரமணியத்துக்கு வரவில்லை. ஒத்தி வைக்கச் சொல்லும் யூகம்தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டுக்கு வேண்டியதை யெல்லாம் கேட்டு வாதாடிப் பார்த்து 10 ஆண்டுக்குப் பிறகும் அதிலே நாம் வெற்றி பெற முடியாவிட்டால், நானும் சேர்ந்து உங்களுடன் திராவிட நாட்டுக்குப் போராடுகிறேன். அதுவரை திராவிட நாட்டுக் கோரிக்கையை ஒத்தி வையுங்கள் என்று சுப்பிரமணியம்தான் சொன்னார். நாம் சட்டமன்றத்திற்குப் போகாமல் வெட்ட வெளியில் நின்றே பேசிக் கொண்டிருந்திருந்தால் சுப்பிரமணியம் சட்டமனற்த்தில் இப்படிச் சொல்லியிருப்பாரா? இப்படி அவர் பேசியது சட்டமனற்க் குறிப்பேட்டில் ஏறியிருக்குமா?

ஆபத்தான மனிதர் சுப்பிரமணியம்

சுப்பிரமணியம் அவர்கள் இப்படிப் பேசியது கண்டு, ‘பாம்பே ஸ்டாண்டர்டு‘ என்ற பத்திரிகை கண்டித்துப் தலையங்கம் எழுதியது. சுப்பிரமணியம் ஆபத்தான மனிதர், அண்ணாதுரைகூடப் பராவாயில்லை, வடநாட்டினால் கிடைக்கும் பலனைப் பெற்றுக் கொண்டு நாட்டை பிரிக்க எண்ணுகிறார் சுப்பிரமணியம் என்று அந்தப் பத்திரிகை எழுதிற்று.

நாம் போகும் பாதையைப் பற்றி எனக்கு நிச்சயமாக நம்பிக்கை இருக்கிறது. எனக்கு மட்டும் ஒரு அல்ப ஆசை ஏற்பட்டு, காங்கிரஸ் நடத்திய ஆகஸ்டுக் கலவரம் போல் நடத்த வேண்டும் என்று தோன்றினால், என்ன நடக்கும் என்பதை யூகித்துப் பாருங்கள் திட்ட வட்டமாகச் சொல்கிறேன் – ஒரு தண்டவாளம் மிச்சமிருக்குமா? ஒரு அலுவலகத்திலாவது வேலை நடைபெறுமா?

எனக்கிருக்கும் கவலையெல்லாம் இப்படி எதுவும் நடைபெற்று விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும்சக்தி நம் கைவிட்டுப் போய்விடுமே என்பதுதான். என்னிடம் கிளர்ச்சி மனப்பான்மையா இல்லை? அரை மணி நேரத்தில் 60 போராட்டம் நடத்தலாமே – சகஸ்ர நாம அர்ச்சனை போகலாமே! வெண்ணாறும் வெட்டாறும் உடைத்துக் கொண்டால் தடுக்கலாம், இந்த வெள்ளம் (தி.மு.க.) உடைந்தால் தடுக்கவே முடியாது. நான்தான் ஏரிக்கரைக்குக் காவலன் என்னையும் மீறி கரை உடைத்துக் கொண்டால் அப்பொழுது வந்த என்னைத் தேடினால் நான் அடியிலே இருப்பேன்.

அதைக் கேட்க இவர் யார்?

நாங்கள் நாகர்களைப் போல வெடிகுண்டுகளைக் கையில் வைத்தக் கொண்டு வீசாமல் இருக்கலாம், பஞ்சாபில் நடப்பது போல நாளுக்கொரு கிளர்ச்சியை இங்கே செய்யாமல் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கெல்லாம் இருப்பதைவிட நியாயமான கோரிக்கை எங்களிடம் இருக்கிறது.

‘திராவிடம் பிரிந்தால் வாழுமா?‘ என்று சிலர் கேட்கிறார்கள். ஜனாப் ஜின்னா பாகிஸ்தான் கேட்ட நேரத்தில், நிக்லஸ்க என்பவர், ‘பாகிஸ்தான் தனித்து வாழக்கூடிய பொருளாதார வசதி பெற்றிருக்கிறதா?‘ என்று கேட்டார். உடனே ஜின்னா, ‘இதை கேட்க வேண்டியவர் நீர் அல்ல, பொருளாதாரப் புள்ளி விவரம் பார்க்க வேண்டியவன் நான்‘ என்றார். ‘பாகிஸ்தான் தனி அரசு ஆக்கப்பட்டால் பொருளாதார வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது‘ என்பதை எடுத்துக் காட்டினார்.

அண்மையில், டில்லியில் கூடிய முதலமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட, இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளுக்கும் தேவநாகரி வரி வடிவத்தை ஏற்படுததுவது பற்றிய எண்ணம் பொதுவாகத் தென்னத்திலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் நியாயமாகவும் இயல்பாகவும் எழக் கூடிய பெருந்திகிலுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்தி ஏகாதிபத்தியத்தின் மிரட்டல் இன்னும் ஒழிந்து தீர்ந்தபாடில்லாமல், பதுங்கி ஒளிந்து வாழ்ந்து, எவ்வெப்பொழுது வாய்ப்பு நேருகிறதோ அவ்வப்பொழுதெல்லாம் பேருருக்காட்டித் தென்னக மொழியையும், கலாச்சாரத்தையும் அச்சுறுத்தி நசுக்கிக் கொண்டு வருகிறது என்று நீண்ட காலமாக இங்கு நிலவி வரும் கருத்தைத்தான், திட்டமிட்டுச் செய்யப்படும் இந்த முயற்சி உறுதிப்படுத்துகிறது.

தென்னகம் – குறிப்பாகத் தமிழ்நாடு பல்லாண்டுகளாக இதை எதிர்த்துப் போராடி வருவதுடன், தெனன்த்தின் தேசியச் சுயமரியாதையை அழிக்கும் நோக்குடன் செய்யப்படும் எந்த ஆதிகக் முயற்சியையும் எதிர்த்து இறுதிவரை போராடவும் முடிவு செய்துள்ளது.

கொல்லைப்புற வழியா?

இந்தி, ஆட்சிமொழியாகத் திணிக்கிப்பட மாட்டாது என்றும், அது சம்பந்தப்பட்ட அரசியல் சட்ட விதி செயலாக்கப்படுவதில் காலந்தாழ்த்தப்படும் என்றும் தலைமை அமைச்சரிடமிருந்து உறுதிமொழி பெற்றிருந்தும், தேவ நாகரி வரி வடிவத்தை ஏற்படுத்துவது பற்றிய எண்ணம் இந்தி வெறியர்களால் உண்டாக்கப்படும் கொல்லைப்புற வழியா இருக்குமோ என அஞ்சுகின்றோம்.

நமது மாநிலக் கல்வியமைச்சர் அவர்கள், தேவநாகரி எழுத்து முறை திணிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழி கூறுபதின் மூலம் பொதுமக்களின் அச்சத்தைப் போக்க முன் வந்தபோதிலும், அமைச்சரின் உறுதிமொழியில் நாம் அவ்வளவாக நம்பிக்கை கொள்ள முடியாது. ஏனெனில் அவர்களுடைய (அமைச்சர்களுடைய) கடந்தகாலச் செயல்கள் சில அப்படிப்பட்டனவாக இருந்திருக்கின்றன.

எனினும், இத்தகைய தீங்கு பயக்கும் முயற்சி குறித்துப் பொது மக்கள் கொண்டிருந்த கருத்தை உரிய நேரத்தில் கணித்தறிந்து கொண்ட கல்வியமைச்சருக்கு நன்றி செலுத்துகிறோம். அதேபோது இநதி வெறியர்களின் மிரட்டலுக்கு தலைமையமைசசர் அவர்கள் பெரும் அளவில் பலியாயிருப்பதைக் காண அதிர்ச்சியுறுகிறோம்.

தலைமை அமைச்சருக்குஎச்சரிக்கை!

இத்தகைய ஒரு முயற்சிக்கு, தென்னாடு முழுவதும் எதிராக இருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை திராவிட இன்த்தின் தொன்மையான வளமிக்க மொழிகளாகும். திராவிட மக்களின் கலாச்சாரச் சுதந்திரத்தைக் காப்பாற்றத் தென்னகும் உறுதி பூண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களால் ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டுள்ள கண்டனங்களையும் கவனத்தில் கொண்டு, முதல் அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட யோசனை உருவாக்கியுள்ள ஐயத்தையும் அச்சத்தையும் உடனடியாக அகற்ற முன்வர வேண்டும் என்றும் தலைமையமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியையும், அச்சத்தையும் உடனடியாகத் தலைமையமைச்சருக்குத் தெரிவித்து, இத்தகைய எந்த முயற்சியும் நடைபெறாமல் தடுத்து நிறுத்துமாறு தென்னாட்டின் தனித் தன்மையையும் சுயமரியாதையையும் காப்பாற்றுவதில் மிக அக்கறை கொண்டுள்ள அனைவரையும் தி.மு.கழகம் கேட்டுக்கொள்கிறது.

கழகக் கொடியின்கீழ் அணிவகுப்பீர்!
அழைப்புக் கிடைக்கும்போது, இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடி ஒழிப்பதற்கு, கழகக் கொடியின் கீழ் அணி வகுத்து நிற்க ஆயத்தமாகுமாறு திராவிட முன்னேற்றக் கழகம் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.

“கடந்த 14 ஆண்டுக் காங்கிரஸ் ஆட்சி, லஞ்ச லாவண்யத்திற்கு இடம் தந்திருக்கிறது. சர்வாதிகாரம் புகுத்தப்பட்டிருக்கிறது. விலைவாசிகள் தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

“ஆளும் பொறுப்பில் இருந்து கொண்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தேர்தல் நிதி வசூலிக்கும் காங்கிரசுக் கட்சியினரை முறியடித்து,ஆட்சியைப் பறிக்காவிட்டால் இன்னும் ஒரு பத்தாண்டுக்குச் சர்வாதிகாரம் தலைதூக்கி நிற்கும், விலைவாசி உயர்வு பற்றி எதிர்த்துக் கேட்க முடியாது, ‘இம்‘ என்றால் சிறைவாசம், ‘ஏன்‘ என்றால் வனவாசம் என்ற நிலைதான் இருக்கும். எனவே வருகிற 1962இல் இந்த ஆட்சியை முறியடித்துக் காட்ட வேண்டும்.

“இப்போது கூட காங்கிரசு வெற்றி பெற்றுத்தான் ஆட்சியில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அது உண்மையில் வெற்றி பெறவில்லை. காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகள் மற்றக் கட்சிகளுக்கெல்லாம் கிடைத்த வாக்குகளைவிடக் குறைவுதான். குறைந்த வாக்குகளைப் பெற்றும் அதிக இடம் பெறக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்குக் காரணம், நம் நாட்டுத் தேர்தல் முறை அப்படி அமைந்திருப்பதுதான். எனவே இதை மாற்றி ஒரு கட்சி பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு இடம் ஒதுக்கும் முறையை (அதாவது ப்ரோபோஷனல் ரெப்ரெஸ்சன்டேஷன்) ஏற்படுத்த நமது நாட்டில் தொடர்ந்து பலத்த பிரச்சாரம் செய்ய வேண்டும்.

துணை நிற்க வாரீர்!

கேரளத்திலும், ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் நமக்குக் கிளைக் கழகங்கள் போதிய அளவில் அமையாமல் இருக்கலாம். ஆனால், இனி அமையப் போகும் கிளைகள், அவர்களுக்கெல்லாம் நம்முடைய லட்சியத்தின் சக்தியை எடுத்துக் காட்டும் நம்முடைய வேலை இத்துடன் முடிந்து விடவில்லை இன்றோடு நாம் முற்றுப்புள்ளி வைத்து விடவில்லை.

வைகையாற்றங்கரையில் கூடியிருக்கும் இந்த நேரத்தில் நான் கூறும் முக்கியச் சேதி என்னவென்றால், திராவிட நாடு நிச்சயம் பெற முடியும்என்பதுதான். ஆந்திரமும், நம்மை ஆதரிக்கும், கேரளமும் கேட்கும், கார்நாடகமும் கவனிக்கும். இந்த லட்சியத்திற்காக வாதாடவும், போராடவும் நீங்களெல்லாம் துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகப் பணியாற்றினோம்

பொதுத் தேர்தல் பற்றித் தி.மு.கழகத்தின் நிலையை அறிந்து கொள்ள பலர் ஆவலாக இருக்கிறார்கள். மற்றும் சிலர் ஆரூடம் கூறுகின்றனர். இன்னும் சிலர் ஏதேதோ பிரச்சாரம் செய்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு விடுதலை இயக்கம் கழகத்தின் இரண்டாவது பொது மாநாடு திருச்சியில் கூடியபோது, ‘சட்டமன்றத்திற்குத் தி.மு.க. சென்றால் நல்ல எதிர்கட்சியாகப் பணியாற்ற முடியும்‘ என்று முடிவெடுத்தபடி நாம் கடந்த பொதுத் தேர்தலிலே ஈடுபட்டு, நல்ல முறையிலே எதிர்கட்சியாகப் பணியாற்றி வந்திருக்கிறோம்.

எவ்வளவு கெடுமதி கொண்டவரானாலும், மாற்றுக் கட்சினரானாலும அவர்கள், நமது பணிகளைக் குறைத்துச் சொல்லக் கூடுமே தவிர, மாற்றிச் சொல்லமாட்டார்கள் சொல்ல முடியாது.

தி.மு.கழகம் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகப் பணியாற்றியிருக்கிறது. எதிர்க்க வேண்டிய காரியங்களை எதிர்த்தும் ஆதரிக்க வேண்டியவைகளை ஆதரித்தும் வந்திருக்கிறது.

தி.மு.க நினைத்திருந்தால் சட்டமன்றத்தில், மற்ற மாநிலங்களில் நடப்பதைப் போன்ற அமளிகளை உண்டாக்கியிருக்க முடியும். ஆனால் உண்டாக்கவில்லை.

நாங்கள் எப்போதும் எதிர்க்கட்சியாகவேதான் இருப்போம் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை, ஆளும் கட்சியாகவும் மாறக்கூடும். என்வேதான், நாங்கள் மிகக் பொறுப்போடும், அக்கறையோடும் பணியாற்றி வருகிறோம்.

கொள்கையைப் பறித்துவிட எண்ணினால்....
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்தக் கட்சியும் தன் அடிப்படைக் கொள்கையை வி்ட்டுக் கொடுக்கக்கூடாது.

கொள்கை இல்லாத கட்சி ஓடு இல்லாத வீடு போன்றதாகு்.

திராவிட நாடு லட்சியத்தை விட்டுவிட்டு யாரிடத்திலும் கூட்டு சேர திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விருப்பமும் இல்லை, அப்படிப்பட்ட திட்டமும் இல்லை.

குழந்தையினிடத்தில் இனிப்புப் பண்டத்தைக் காட்டி, நகையைப் பறித்துச் செல்லும் கள்வனைப் போல், நம்மிடத்தில் தேர்தலைக் காட்டி நமது கொள்கையைப் பறித்துவிட யாராவது எண்ணினால் அது நடவாது.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் – குறிப்பாகக் கம்யூனிஸ்டுக் கட்சியினர் ஏதோ நாங்கள் கூட்டுச் சேர அவர்களிடத்தில் மனுப் போட்டது போல, ‘திராவிட நாட்டுப் பிரச்சனையை விட்டு விட்டு வந்தால்தான் நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டுச் சேருவோம்‘ என்று பேசி வருகிறார்கள். நாங்கள் இப்போது கூட்டுச் சேர்ந்து விட்டதாகச் சில அவசரப்பட்ட தலைவர்கள் – யூகம் குறைந்த தலைவர்கள் பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறன் – கூட்டு இல்லாமலே காங்கிரசை வீழ்த்த முடியும்.

பொருள் புரியவில்லையா?

அந்தந்தத் தொகுதியைப் பொறுத்த ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது என்ற நிலை – அதாவது கான்ஸ்டியுயென்சி அட்ஜஸ்மென்ட் ஏற்படக்கூடும் என்று நான் சொன்னதை வைத்துக் கொண்டு நிதியமைச்சர் சுப்பிரமணியம், நாங்கள் கூட்டுச் சேரப் போவதாகச் சொன்னார். நான் அதை மறுத்து, ‘கூட்டு அல்ல – அட்ஜஸ்ட்மென்ட்தான்‘ – அண்ணாதுரை இப்படி ஆங்கிலத்தில் சொல்கிறார் என்று சட்டமன்றத்தில் பேசினார். அவர் இப்படி சொன்னதைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.

அகராதியில், ‘அட்ஜஸ்மென்ட்‘ என்பதற்கு, ‘கூட்டு‘ என்றுதான் பொருள் கூறப்பட்டிருக்கிறதா என்பதை மற்றவர்கள் படித்துப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இவரிடத்தில் கல்வி இலாகா ஒப்படைக்கப்பட்டிருக்கிறதே என்றுதான் வருத்தப்படுகிறேன்.

‘விருந்துக்கு வா‘ என்று அழைப்பதும், ‘சாப்பிட்டுப் போகலாம் வா‘ என்பதும், ‘தின்று தொலை‘ என்பதும் ‘சாப்பிடலாம் வா‘ என்பதும் சாப்பிட அழைப்பதற்கான சொற்கள்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரே விதமான பொருள் கொள்ள முடியுமா?

கூட்டு என்பதுதான் ‘அட்ஜஸ்ட்மென்ட்‘ என்று எப்படித் திட்டவட்டமாகச் சொன்னாரோ தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் நமது கல்வி அமைச்சர், தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்வதைவிட அதிகமாக வெளிநாட்டில் சுற்றுவதால் தமிழை மறந்து விட்டார் போலும்(

அச்சம் தெளிந்து நிம்மதி பெறட்டும்!
தேர்தல் நிலவரம் குறித்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்தல் ஆய்வுக்குழு சென்று வந்த பிறகு ஆட்சி மன்றக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும். அது சுற்றி, ஆராய்ந்தது வந்து முழுவிவரம் அறிவித்த பின்னர்தான் மற்றக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச வாய்ப்பு ஏற்படும். அதுவரை எந்தக் கட்சியுடனும் பேசப் போனதில்லை, இதுவரை பேசியதுமில்லை.

யார் யாரோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறார்களோ, யார் யாரோடு சேருவார்களோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் காங்கிரசுக் கட்சியினர் – அச்சம் தெளிந்த நிம்மதி பெறுவார்கள் என்பதற்காகவே இதை நான் சொல்கிறேன்.

இந்நாட்டுத் தேர்தல் இயந்திர முறை மாற்றப்பட வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறவும், திராவிட நாடு இலட்சியத்தின் மிது அழியாத நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை உலகுக்கு அறிவிக்கவும், எனத இந்த உரை பயன்படும் என்று கருதுகிறேன்.“

(நம்நாடு - 16, 17, 19, 23, 24.8.61)