அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வெற்றி முரசு
1

அன்புள்ள தலைவர் அவர்களே!

தோழர்களே!! தாய்மார்களே!!!

இரண்டு நாட்களாக விருதுநகரில் நடைபெற்ற மாநாடுகளைக் கண்டு களித்தீர்கள்.

முதல் நாள் நடைபெற்ற பெண்கள் முன்னேற்ற மாநாட்டிற்கு நான் வர இயலாமற் போய்விட்டது-வருந்துகிறேன். தாய்மார்கள் பொறுத்திடக் கேட்டுக்கொள்கிறேன்.

நான் வராதது பற்றி ஒருவகையில் வருத்தப்பட்டாலும், மற்றொரு வகையில் மிகவும் பொருத்தமானதென்றும் கருதுகிறேன். ஆடவரின் கொடும் செயல்களைத் தங்கு தடையின்றி அலசி எடுத்துப் பேச நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டதென்றே கருதுகிறேன்.

பெண்கள் மாநாட்டிற்கு நான் வரவில்லையே தவிர, மாநாட்டு நிகழ்ச்சிகளை நன்கு விசாரித்தறிந்திருக்கிறேன். இங்கு மாநாடு நடந்த அதே நேரத்தில் சென்னையில், நம்நாடு பத்திரிக்கையில் வெளியிடுவதற்காக பெண்கள் மாநாட்டு தலைவி தோழியர் அருண்மொழி அவர்களின் தலமையுரையையும், வரவேற்புத் தலைவி தோழியர் உ.இராஜாம்பாள் அவர்களின் வரவேற்புரையை யும் படித்துக்கொண்டிருந்தேன்.

உரைகளைப் படித்துப் பார்த்தேன் மகிழ்ந்தேன். எவ்வளவு ஆர்வம் ததும்புகிறது, வீர உணர்ச்சி எழுகிறது, தாய்மார்களின் உள்ளங்களிலே என்பதை அந்த உரைகளிலே கிடைக்கப் பெற்று பெருமகிழ்ச்சி யடைந்தேன்.

தாய்மார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதுமே துணை நின்று பெரும் பணியாற்றி வந்திருக்கிறார்கள். பிரச்சாரப் பணி மட்டுமல்ல தி.மு.க எடுத்துக்கொண்ட எல்லா நேரடி நடவடிக்கைத் திட்டங்களிலும் ஈடுபட்டு, தீரமாகப் பாடுபட்டு வந்திருக்கிறார்கள். சர்க்காரின் அடக்குமுறைத் தாக்குதல்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், தடியடி தர்பார்களைத் தாங்கியிருக்கிறார்கள்!

வீரத் திராவிடத் தாய்க்குலம் வேறெப்படி இருக்க முடியும்! அவர்கள் உரம் ஊட்டி, இனத்தை வளர்ப்பவர்கள்! வாழ்கத் தாய்க்குலம்! வளர்க அவர் தம் வீரம்! என்று போற்றாதிருக்க முடியாது!
திராவிட நாடு தனியரசு ஆனால்தான் பெண்ணடிமை ஒழியும் என்ற உண்மையை எடுத்துக்காட்டி, வரவேற்புரையில் தோழியர் உ. இராஜாம்பாள் அவர்கள் திராவிடம் அமைந்திடத் தாய்மார்கள், தீவிரமாகப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆர்வம் எந்த வகையிலே மலர்கிறது என்பதும், அம்மையாரின் உரையிலே காணக்கிடக்கிறது.

பொதுத்தேர்தலிலே ஈடுபட்டு, மக்களிடம் ஓட்டுகளைப் பெருவாரியாகப் பெற்று, சட்ட சபைகளைக் கைப்பற்றி, திராவிடத் தனியரசு பிரகடனத்தை வெளியிட வேண்டும் என்று அம்மையார் கூறியிருக்கிறார்கள்.

எழுச்சியூட்டும் கருத்து இது! திராவிட முன்னேற்றக் கழகம், இதுபற்றி, முறைப்படி எண்ணிப் பார்த்து தக்கத் திட்டத்தைத் தீட்ட முன்வரும் என்று உறுதியாகக் கூறுவேன்.

அரும் பெரும் காரியங்களைப் பெண்கள் செய்ய இயலும் என்பதை எடுத்து விளக்க, தலைமையுரையிலே, அரிய வரலாற்று உண்மைகள் எடுத்து விளக்கப்பட்டுள்ளன!

இயக்கத் தோழர்களின் இல்லங்களிலே உள்ள தாய்மார்களை யெல்லாம், பெண்கள் மாநாட்டிற்கு வந்து கலந்து கொள்ளும்படி செய்யும் பொறுப்பையும், மாநாடு நடத்துபவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நேற்றைய தினம் தாய்மார்கள், ஆடவர்கள் தங்கள், குடும்பப் பெண்களை மாநாட்டிற்கு அனுப்பாதது பற்றியும், அழைத்து வராதது பற்றியும் ஆயாயசப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.


மனைவியை இயக்க காரியங்களிலே பங்கு கொள்ளும்படித் தூண்டும் செயலில் பெரும்பாலான கணவர்களால் வெற்றிபெற முடிவதில்லை.

நீங்கள் அலைவது போறாதோ, நானும் குழந்தைகளும் வேறு அலைய வேண்டுமா என்ற முறைகளிலே கேள்விகள் பிறக்கும்.

நாங்கள் சொல்லுவதற்குப் பதிலாக, மாநாட்டிலே கலந்து கொண்ட தோழியர்கள் சத்தியவாணிமுத்து போன்றவர்கள் அவர்களிடம் வந்து பேசி, தைரியம் சொல்லி விளக்கி, ராணி, புறப்படு, வா மாநாட்டிற்கு என்று அழைத்தால் காரியம் சுலபமாக முடியும்-ராணி, ராணி என்று நான் சொல்வது, ஊரை ஆளும் ராணியை அல்ல, என் உள்ளத்து ராணியை துணைவியைக் குறிப்பிடுகிறேன்.

இதுபோல அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன், வேண்டுகிறேன்.

பெண்கள் மாநாடு மூலம் கிடைத்துள்ள போரார்வம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பெரிதும் பயன்படும் சந்தேகமில்லை.

இரண்டாம் நாளான இன்றைய அரசியல் மாநாட்டிலே, காலை முதல் மாலை வரை, தலைவர், திறப்பாளர் சொற்பொழி வாளர்கள் உரைகளைக் கேட்டீர்கள். கருத்துக்கு விருந்தாக அமைந்திருந்தன. அறிவுச் சொற்பொழிவுகள்!

திறப்புரை ஆற்றிய நண்பரின் பல யோசனைக்கு சீரிய கருத்தமைந்தன-எனினும் அவர் கூறியபடி அவைகளில் பல, பொதுக்குழுவிலே நாம் கலந்து பேசப்படவேண்டியனவாகும்.
பொதுவாக, கழக கட்டுப்பாட்டிற்காக நான் சற்று கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நண்பர் வலியுறுத்தினார் கண்டிப்பாக இருப்பது என்றாலும் அந்த நண்பரின் பேச்சிலேயே பாதிக்குமேல் நாம் தடுத்திருக்க வேண்டும்.

எனினும், நான் ஜனநாயகத்திலேயும், தோழமையிலேயும் நம்பிக்கையுள்ளவனாகையால், தோழர்களிடம் கருத்தலைகள் கிளம்புவது கண்டு மகிழ்கிறேன்.

கட்டுப்பாடு, கண்டிப்பு என்ற பெயரால் இயக்கத்தின் கருத்து வளர்ச்சியிலே குந்தகம் ஏற்படச் செய்யக்கூடாது.

யாருடைய கருத்தலைகளாக இருப்பினும் கழகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக அதனை எடுத்தாள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

எனவேதான் எந்தப் பிரச்சினையிலும், கழகத்தோழர்களின் கருத்துக்களை அறிவதில் நான் மிகவும் ஆவல் கொண்டவனாக இருக்கிறேன்.

கருத்தலைகள் கிளம்பட்டும் எங்கும் பாயட்டும், இதனால் அறிவுப்பயிர் செழித்து வளரட்டும். இடையிலே களை தோன்றினால் எடுத்து விடலாம். ஆடு மாடுகள் பயிரை அழிக்க முயன்றால் தடுத்தி நிறுத்திவிடலாம், மேலியிடலாம் என்றுதான் கூறுகிறேன்.

சிலருக்குப் பயிரே களையாகத் தோன்றும், வேறு சிலருக்கு களையேகூட பயிராகத் தோன்றக்கூடும். எது எப்படி யிருப்பினும், களை எடுக்கிறேன் என்று கூறிக் கொண்டு, வளரும் பயிரையும் பாழ்படுத்தக் கூடாது-அதே நேரத்தில் பயிர் பாழாகும்படி களைவளரவும் விடக்கூடாது. களை தோன்றும்போது களை எது என்று அறிந்து களைந்து எடுத்துவிட வேண்டும்.
இந்த உழவு முறை, அரசியல் பண்ணைக்கும் பொருந்தும்.

கண்டிப்பு, கட்டுப்பாடு, தேவை, களை எடுத்தல் போல, அதே போது பயிர் அழியக்கூடாது கருத்துக்கு விலங்கிடக்கூடாது. கருத்து வளர்ச்சிக்கு தடை விதிக்கக்கூடாது. இதுதான் கையாளும் உழவு முறை, இயக்கத்திலே!

மக்கள் பெரும் அளவில் இங்கே கூடியிருக்கிறார்கள் தாய்மார்கள் ஏராளம். இங்கு ஏற்படும் பேச்சொலி, அமைதியைக் குலைக்கிறது என, என் நண்பர் யாவரும் கடிந்துரைத்தார்கள் மாநாடுகளில் எப்படியெப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்.

அந்த உபதேசக் காண்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது, நான் பொதுவாகவே, பெருங்கூட்டம் கூடும்போது, ஏன் அமைதிக் குறைவு காணப்படுகிறது என்பது பற்றி எண்ணிப் பார்த்துக் காண்டிருந்தேன்.

அந்த உபதேசக் காண்டம் நடை பெற்றுக்கொண்டிருந்த போது, நான் பொதுவாகவே, பெருங்கூட்டம் கூடும்போது, ஏன் அமைதிக் குறைவு காணப்படுகிறது என்பது பற்றி, எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மாநாடுகளில் கூடிடும், பெரும் கூட்டத்தில் ஒரு பகுதிதான் கழக உறுப்பினர்கள், மற்றோர் பகுதி கழக ஆதரவாளர்கள்.

மாநாடுகளிலே கூடிடும் கூட்டம், அத்தனையும் கழக உறுப்பினர்களல்ல அத்தனையும் கழக உறுப்பினர்களாகவே இருந்தால் அமைதி நிச்சயம் நிலவும், ஆர்வமும் கட்டுக்கடங்கியதாக இருக்கும். பொதுக்குழு கூட்டங்களில் உள்ளது போல.

மாநாடுகளில் வந்து கூடுவோரில், கழக உறுப்பினர் ஒருபகுதி போக, மற்ற பெரும்பகுதி கழக ஆதரவாளார்கள்.

இதிலே, சிலர் மாநாட்டில் என்னதான் பேசுகிறார்கள் கேட்டுப்போகலாம் என்ற அலட்சிய மனப்பான்மையோடு வந்தவர்களாக இருப்பர்.

வேறு சிலர் காங்கிரஸ்காரர்காக இருக்கலாம். மற்றும் சிலர் கம்யூனிஸ்டுகளாக இருக்கலாம். ஒரு சிலர் நம்மையும் நமது கட்சிக் கூட்டத்தையும் முதல் முறையாகக் காண்பவர்களாகவும், கேட்பவர்களாகவுங்கூட இருக்கக்கூடும். சுலபத்தில் அமைதியன்மை, சிறுசிறு சந்தடிகள் ஏற்படுகின்றனவேயன்றி வேறல்ல!

இங்கு கூடியுள்ள தாய்மார்கள், தமது செல்வக் குழந்தைகளுடன் வந்துள்ளனர். வள்ளுவர் சொன்னாரே குழலினிது, யாழினிது என்பர், மழலைகளின் மழலைமொழி கேளாதவர் என்று. அந்த மழலை மொழிகள் அதிகமாக கேட்கின்றன. அமைதியின்மைக்கு காரணம் இதுவும் ஒன்றாகும்.
வரவர தாய்மார்களும் தங்கள் மழலைமொழிக் குழந்தைகளைக் கொஞ்சி, சீராட்டி, பாராட்டி, கண்ணே, மணியே, கற்கண்டே, கொஞ்சியது போதும். இங்கே நடப்பது நமது மாநாடு, கொஞ்சம் சும்மா இரு. கேள் என்று கூறித் தமது குழந்தைகளை முத்தமிட்டுச் சாந“தப்படுத்தி விடுவர். குழந்தைகளும் பழகிக் கொள்ளும் காலப்போக்கில், சத்தமிடாதிருக்க!

நேற்றைய பெண்கள் மாநாட்டு வரவேற்புத் தலைவி தோழியர் உ.இராஜாம்பாள் அவர்கள் தமது வரவேற்பு உரையில், இம்மாநாட்டிற்கு வந்திருக்கும் தாய்மார்கள் அனைவருமே திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அல்ல என்று குறிப்பிட்டு, அனைவரையும் அங்கத்தினராகச் சேரவாரீர் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள்.

அதன்படி, இங்கு கூடியுள்ள பெருங்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கத்தினரல்லாத, ஆதரவாளர்கள் பார்வையாளர்கள் ஆகியோரை அணுகி கழக உறுப்பினராகும்படி கேட்டு கொள்ள வேண்டும். இந்தக் காட்சிதரும் பாடம் அதுதான்.

மாநாடுகளிலே, நாம் நமது கழகத்தின் திட்டங்களை விளக்கி, விவாதித்து நல்ல முடிவுகளைக் காண்கிறோம். மக்களிடையே நம்மைப்பற்றிய தெளிவான விளக்கத்தை எடுத்துக்காட்டி, நம்முடைய வேலை முறைகளை எடுத்துக்காட்டுகிறோம். நல்ல கருத்துரைகள் மாநாடுகளிலே கேட்க முடியும்.

இத்தகைய மாநாடுகள் நடப்பதன் மூலம் மாநாடு முடிந்ததும், அந்தந்த மாவட்டங்களிலே, நம்மை பற்றிய விளக்கங்கள் மக்களிடையே நடைபெற்றதன் விளைவாக மேலும் புதிதாக ஒரு ஆயிரம் உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும்.

அப்போதுதான் மாநாடு நடந்ததின் உண்மையான பலன் கிடைத்ததாக எண்ணிப் பூரிப்படைய முடியும். இத்தகைய ஆக்க வேலைகளில் மாநாடு கூட்டுவோர் முயன்று நல்லதொரு பயன்காண வேண்டுகிறேன்.

ஒருசிலர் பேசுகின்றனர்-இப்போது புதிதாக பெருங்கூட்டம் கூடிப் பயனில்லை. என்று!

பெருங்கூட்டம் கூடுவது, கூடிடும் ந‘லை சாமான்யமானதா? அல்ல, சாமான்யமல்ல!

பெருங்கூட்டம் கூடும் நிலை, ஒரு அரசியல் கட்சிக்கு வளர்ச்சிக்கு வழி, வெற்றிப் பாதையிலே ஒரு கூட்டம்.

ஆனால் பெருங்கூட்டம் கூட்டுவதையே ஒரு கட்சி, தன் இலட்சியப் பூர்த்தியாகக் கொள்வது தவறு.

பெருங்கூட்டம் கூடுவது, சேருவது, பயனற்றது, பொருளற்றது என்றோ, பிரமாதமல்ல என“பதோ சரியான பேச்சாகாது!

எனக்குத் தெரியும் எத்தனை யெத்தனை அரசியல் கட்சிகள், இந்தக் காட்சியைத் தத்தமது கட்சிக் கூட்டங்களிலே, மாநாடுகளிலே காணத் தவங்கிடக்கின்றன என்று.

எத்தனையோ கட்சிகள் இதுபோன்ற காட்சியைத் தங்களிடையே காணமுடியாத காரணத்தால், அங்கலாய்த்துக் கொள்கின்றன, கைபிசைந்து கண்ணீர் விடுகின்றன என்பதும் எனக்குத் தெரியும்.
எனவே, இங்கு நான் காணும் காட்சி கொட்டகை நிரம்பியுள்ள மக்கள் கூட்டம்-திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றிகளில் ஒன்று, மேலும் பெறவேண்டிய வெற்றிகளுக்கு வாய்ப்பளிக்க வல்லது.

ஒரு கட்சி வளர்ச்சியடைந்துள்ளது. வளர்ச்சியடைந்தது என்பதைக் காட்டுவதற்காகத்தான் மாநாடுகள் கூட்டப் படுகின்றன! அதிலே கூடும் மக்கள் தொகையைக் கண்டு தங்களது கொள்கையைக் கேட்க, கவனிக்கக்கூடும் மக்கள் தொகையைக் காண வேண்டும் என்பதும் மாநாட்டின் நோக்கங்களிலே ஒன்றாகும்.

கலியாண வீடுகளிலே நாதசுரம் போன்ற வாத்தியங்கள் வாசித்து கலியாண வீடு என்று தெரிவிப்பது போல, கட்சியின் வளர்ச்சியைக் குறிக்க, தெரிவிக்க நம் மாநாடுகள், அவற்றிலே கூடிடும் பெருங்கூட்டம் பயன்படுகிறது.

வேறு எப்படித்தான் கட்சியின் வளர்ச்சியைக் காண்பது, காண்பிப்பது? மாநாடுகளைக் கூட்டி வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து, இனி, அடுத்தக் கட்டம் என்ன என்று கேட்டு அதற்கான வழிவகைகளை ஆய்ந்து, அலசி மேற்கொண்டு முன்னேறிச் செல்வதுதான் நமது நோக்கமாகும்.
பொட்டல் வெளியிலும், வேகாத வெயிலிலும், சிறு கூட்டங்களுக்கிடையேயும் நாம் ஒரு காலத்தில் உதவி வந்ததை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

ஏன்? பதினைந்து, இருபது ஆண்டுகட்கு முன்னர், தென்னிந்திய நல உரிமைச் சங்க (ஜஸ்டிஸ் கட்சி) மாநாடுகள் எப்படி நடந்தன? எண்ணிப் பாருங்கள்.

ஐம்பது மோட்டார்கள், அலங்காரமாக வந்துநிற்க, அவைகளிலிருந்து ஐம்பது சீமான்களும், மோட்டார் ஓட்டிகளும் இறங்கி, மாநாடு நடக்கும் மண்டபத்திற்குள்ளோ, அல்லது ஓட்டலுக்குள்ளோ நுழைவர். மோட்டார் ஓட்டிகளே பேச்சைக் கேட்பர். கட்சி ஆர்வம் கொள்வர்.
அந்த நிலை மாறி, பெரியாரின் பெரும் பணியினால், ஐஸ்டிஸ் மாநாடுகளுக்குப் பெருங்கூட்டம் வரத் தொடங்கியது.

அதே முறையில்தான், இப்போது பொது மக்கள் ஏராளமாக, பெரும் அளவில் திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளுக்கு வருகிறார்கள், மலர்ந்த முகங்களோடு.

இது வெற்றியிலே ஒன்று என்பதை உணராது உணர மறுத்து பொறாமை பொச்சரிப்பின் காரணமாக, இதிலே என்ன பிரமாதம் இருக்கிறது-கூட்டம் கூடினால் போதுமா என்று கேட்பது, பேசுவது வீணுரை!

நமது நண்பர்கள், கட்சித் தோழர்களுடைய கவலை யெல்லாம், இத்தகைய பெருங்கூட்டம் கூடும் நிலை, வளர்ந்துள்ள நிலை, பயன்படவேண்டும், பயன்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆர்வங்காரணமாகத் துடிதுடிக்கின்றனர் என்பதையும் நான் நன்கு உணர்ந்துதான் இருக்கிறேன்.

நமது இயக்கம், இயக்கத்தின் வளர்ச்சி, சந்தனக் கட்டையைப் போன்று மணம் வீசுகிறது, நன்றாகத் தெரிகிறது. அதனை உடனே சிற்பமாகச் செதுக்க வேண்டும் என்கின்றனர். தோழர்கள் நான் பொறுங்கள், தக்க நேரத்தில், செதுக்குவோம், தப்பான சித்திரத்தை அவசரத்தில் செதுக்கிவிடக்கூடாது என்று நான் கூறுகிறேன்.

சவுக்குக்குட்டைக் கூட கிடைக்காது வாடியிருந்த காலமும் இருக்கத்தானே இருந்தது, நமக்கு? ஆனால் இன்று மணம் மிக்க சந்தனச் சோலையை கிடைத்திருக்கிறது. பொறுங்கள், புதுமணம் நுகருங்கள், புதிய உற்சாகம் பெறுங்கள், சந்தனக் கட்டையை, தக்க நேரத்தில், தக்க முறையில், தக்க உளி கொண்டு சிற்பமாகத் திராவிட நாட்டுச் சிற்பமாக செதுக்குவோம், சந்தன மணம் கமழும் சந்தோஷமான நாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம். அதற்கிடையே ஆக்க வேலைகளைக் கவனிப்போம்! நாடு முழுவதும் நல்ல பிரசாரப் பணி புரிந்து வருவோம்.

நாம் மாநாடு கூட்டுகிறோம். நமது மாநாடுகளிலே, இவ்வளவு ஏராளாமான மக்கள் கூடுகிறார்கள் என்றால் காரணமற்றா? கருத்தற்றா?

எதைக்கண்டு இத்தகைய பெருங்கூட்டம் கூடுகிறது? அருளாளர்களைத் தரிசிக்கக் கூடுகிறார்களா? அசகாய சூரர்களைக் காணக் கூடுகிறார்களா? சாமான்யர்களாகிய நாங்கள் தானே கூட்டுகிறோம் மாநாட்டை!

மாநாடுகளிலே நமது நண்பர்கள் தரும் அறிவு விளக்கம், வரலாற்று ஆதாரம், அச்சத்தைத் துடைத்திடும் வீரவுரைகள், சந்தேகத்தைப் போக்கிடும் தெளிவுரைகள், அசைக்க முடியாத புள்ளி விவரம், இவைகளைக் கேட்கத்தான் கூடுகின்றனர்.

மக்கள் இத்தகைய விளக்க உரைகளைக் கேட்டுத் தெளிவும் துணிவும் பெறுகின்றனர்-எனவேதான் நம்மிடையே கூட்டம் பெருகிடக் காண்கிறோம்-கழகம் வளர்ச்சி பெறுவதைப் பார்க்கிறோம்.
இந்த பேச்சு கச்சேரி வேறு எதற்கெல்லாம் வழி வகுத்துத் தந்திருக்கிறது என்பதையும் எண்ணிப் பாருங்கள்!

திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்ட போதே, போலீஸ் தடியடியும், சிறைவாசமும் கண்டோம். துப்பாக்கிகளைச் சந்தித்தோம்-அதைவிடக் கொடுமையான தூற்றல் நம்மைத் துளைத்தன! எப்படித் தாங்கிக் கொள்ள முடிந்தது, நம்மால் இவைகளை!

இதோ, இதுபோன்ற பேச்சு கச்சேரிகள் மூலம், நாமும் உரம் பெற்றோம்-நாடும் உரம் பெற்றது!

இதற்கு உள்ள சூட்சும பலத்தை அறிந்த சிலர், தமக்குச் சாதகமாக, இந்தப் பலம், பேச்சுக் கச்சேரிகள், அமையவில்லையே என்பதனால், பேசுவதே பாபம், பெருங்கூட்டத்தைச் சேர்ப்பது துரோகம், மாநாடுகள் நடத்துவது மகாபெரிய துரோகம் என்றெல்லாம் பேசுகிறார்கள், பரிதாபமாகத்தான் இருக்கிறது.

இதைப் போலவே, தி.மு.கழகம், சினிமா நாடகத் துறைகளிலே, மறுமலர்ச்சியை உண்டாக்கி வருகிறது-கலைத்துறையினர் பலர் நமது கழகத்திற்கு ஆதரவாக உள்ளனர். இதைக் கண்டு, சினிமாக் கட்சி என்று கேலி பேசுகிறார்கள், கேட்கிறோம்.

சினிமாத் துறையிலே ஈடுபட்வர்கள் ஒருசிலர், ஒரு கழகத்திலே கலந்து பணியாற்றுவது தவறா!
சினிமா அவர்களுக்கு ஒரு தொழில், அவ்வளவே! கொள்கைப் பற்றும், பொதுப்பணி புரிய வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களை இங்கே (தி.மு.கழகம்) அழைத்து வந்திருக்கிறது! இதிலே என்ன தவறு!

கள்ளுக்கடை வியாபாரிகள் சிலர் ஒரு கட்சியிலே ஈடுபட்டு இருந்தனரே, கட்சிக்கு கள்ளுக்கடை கட்சி என்று பெயரிட்டனரா, யாராவது, கற்பூரக் கடைக்காரர் யாராவது ஒரு கட்சியிலிருந்தால் அந்தக் கட்சிக்கு ஜோதி கட்சி என்று பெயரிடுவதா! என்ன அர்த்தமற்ற பேச்சு.

ஆனால், சினிமாக் கட்சி என்று ஏன் பேசுகிறார்களென்று புரியாமல் போகவில்லை. நன்றாக புரிகிறது.

இத்தகைய கேலி, கிண்டல் பேச்சுக்களை யார் பேசினாலும், அது பெரியார் அவர்களைத் தவிர, மற்றவர்களாகத்தான் இருக்கும், இருக்க முடியும்.

பெரியார் அவர்கள் இத்தகைய முறையிலே பேசமாட்டார்! ஏன்? கலைத்துறையினர், கட்சிப்பணியபுரிய வேண்டும் என்ற கருத்துடையவர் அவர் என்பதால் தான். அதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு!

ஆண்டு பல கடந்து விட்டன-சந்திரோதயம் நாடகம், சென்னை ஒற்றைவாடை கொட்டைகையிலே நடைபெற்றது. அதைக் காண இசையரசு தண்டபாணி தேசிகர், நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், மூவரும் வந்திருந்தனர். நாடக முடிவில் பெரியார் பேசும்போது ஒரு பிடி பிடித்தார்-இந்தக் கலைவாணர்கள், முருகா! முருகா! என்று மூன்று மணிநேரம் பாடிவிட்டு, ஆயிரம், இரண்டாயிரம் என்று பணத்தைப் பறித்துக் கொண்டு போகிறார்களே ஒழிய, இன அபிமானம், சுயமரியாதை இவைகளுக்காகப் பாடுபடும் நமது இயக்கத்திலே ஒரு பற்று, பாசம், தொடர்பு துளியாவது காட்டுகிறார்களா! என்று கோபமாகவே பேசினார்!

என்ன, வரவழைத்து உட்கார வைத்துக்கொண்டு இப்படி ஏசுகிறீர்களே, என்றனர் மூவரும். அவர்களுக்குச் சமாதானம் கூறினேன்.

பிறகு நான் பேசும்போது, பெரியார் கோபப்படும் காரணத்தை விளக்கி, கலாவாணர்கள் எல்லாம் கூடிய சீக்கிரம் நமது கழகத் தொண்டிலே ஈடுபடுவார்கள் என்றும், அவர்களை இந்த மறுமலர்ச்சிப் பாதைக்கு அழைத்து வரும் பொறுப்பு என்னுடையது என்றும் உறுதியளித்தேன்.

அதுபோலவே, அந்த உறுதியின்படியே, கலைத்துறை விற்பன்னர்கள் இன்று நம்மிடம் உள்ளனர்.

அன்று பெரியார் பேசியபடிதான், சொன்ன முறைப்படிதான், நான் கலைத்துறையினரை, நமது கழகப் பணிபுரிய அழைத்து வந்தேன்.

இப்படிப்பட்ட நிலையில், பெரியார் நம்மை சினிமாக் கட்சி என்று எப்படி கேலி பேசுவார், பேச முடியும்?

அது மட்டுமல்ல, பெரியாரே, ஒற்றைவாடை கொட்டகையிலே தாம் கொஞ்சம் காரசாரமாகத்தான் பேசிவிட்டேன்! என்று கூறி வருத்தப்பட்டு, அடுத்த திங்களில், ஈரோட்டில் கிந்தனார் காலட்சேபம் செய்த தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குத் தமது கையினாலேயே ஒரு தங்கச் செயினும், கிந்தனார் என்று பெயர் பொறிக்கப்பட்ட டாலரையும் பரிசளித்தார்கள்.

ஈரோட்டிலே, நடைபெற்ற, நான் தலைமை தாங்கிய தனி திராவிடர் கழக மாநாட்டில், காந்தியார் படத்திறப்பு விழா நடத்த தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களை வரவழைத்தார் பெரியார் தமது கையாலேயே கடிதம் எழுதி!

அப்போதெல்லாம் சினிமா கட்சி! அல்ல-இப்போது சினிமாக் கட்சி! என்று ஏசுவதாக நினைத்துக்கொண்டு சிலர் பேசுகிறார்கள்.

மேலே குறிப்பிட்ட அந்தப் பழைய சம்பவங்களை அறிந்திருக்கிற எனக்கு ஏன் கோபம் வரப்போகிறது!

அங்கு இல்லை, இந்தக் கலைவாணர்கள் அதனாலே ஒரு ஆத்திரம் அதைப் போக்கிக் கொள்ள எதையோ பேசுகிறார்கள்!

சினிமா கட்சி என்றால், கழக மேடைகளிலும், மாநாடுகளிலும், சினிமா சம்பந்தமான விஷயங்களே பேசப்பட்டு, கழகக் கொள்கைகளை, அரசியல் பிரச்சினைகளைப் பேசப்படாமல், மறைக்கப்பட்டுப் போய்விட்டால், ஓஹோ! இது சினிமாக் கட்சியாகிவிட்டது என்று சொல்லலாம்.
தோழர் கே.ஆர.இராமசாமி அவர்கள் கழக மேடையிலே பேசும்போது சினிமா பிடிக்க எவ்வளவு செலவு தெரியுமா? சினிமாவில் கல்யாணி ராகம் எப்படிப்பாட வேண்டும் தெரியுமா? நடிப்பது எப்படித் தெரியுமா, என்றா பேசுகிறார்? இல்லையே?

இதோ எனக்கு முன்பு தோழர் எம்.ஜி.இராமச்சந்திரன் பேசினார். எதைப்பற்றி! ஜெனோவா, படத்திலே எனக்கு எப்படி மேக்கப் செய்தார்கள் தெரியுமா? வலது கரத்தில் வாளை ஏந்தியதும், இடது கரம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? காமிரா அப்போது எங்கே இருக்கும் தெரியுமா? என்று இதையெல்லாமா பேசினார்? பேசினால் சினிமா கட்சிதான்.

அவர் பேசியது அது அல்லவே! அவருக்குத் தொழில், சினிமா! அதையுங்கூட பகுத்தறிவுத் துறைக்குப் பக்கபலமாக்குகிறார்.

இங்கு, மாநாட்டிலே அவர் பேசியது, சினிமா சம்பந்தமாகவா? இல்லையே!

திராவிடர், திராவிடநாடு பெறுவது எப்படி, திராவிடச் சமுதாயத்திலே விழிப்புணர்ச்சி ஏற்படுவது எங்ஙனம்? கழகத்திலே கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும், மாநாடுகளிலே எப்படி ஒழுங்குமுறை காணப்பட வேண்டும் என்ற இவைபற்றி அல்லவா, பேசினார்!

இதற்கா சினிமா கட்சி என்று பெயர்! என்ன தெளிவு! ஏன் இந்தப் பேச்சு!

அங்கே இல்லை, இங்கே உண்டு-அதுதானே காரணம்!

ஒரு நாடு விடுதலை பெற வேண்டுமானால் இனம் விழிப்படைய வேண்டும். இனம் விழிப்படைந்தால், எல்லாந் துறைகளிலேயும் மறுமலர்ச்சி ஏற்படும்-அதை இன்று காண்கிறோம் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், இன எழுச்சிக்கும் விடுதலைக்கும் பாடுபட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்க வேண்டும். அதன் விளைவுதான், தி.மு.கழகத்தில் ஏராளமான கலைத்துறையினர் ஈடுபடுவது!

கழக வெற்றியிலே இது ஒரு கட்டம்-எழில் உள்ளது-எனவே மாற்றார் உள்ளத்திலே எரிச்சலை ஊட்டுகிறது! என்ன செய்வது!

நான் பெரியாரிடம் கேட்ட பாடத்தைத் தானே கடைப்பிடிக்கிறேன்! அவர் தந்த பாடத்தை மறக்கவுமில்லை, மற்றெங்கும் அடகு øக்கவுமில்லை! பாடத்தை அப்படியே நிறைவேற்றி வருகிறேன்.

கலைத்துறையினர் இங்கு இருப்பதைக் கண்டு கேலி பேசுவதும், வீணுரை வழங்குவதும் ஏன் என்பதும் புரியாமல் போகவில்லை நன்றாகப் புரிகிறது என்று குறிப்பிட்டேன்.

ஏன் கேலி பேசுகிறார்கள்! குறை கூறுகிறார்கள்! நிலைமைக் கோளாறு தான் முக்கிய காரணம்!

அங்கே இல்லை-இங்கே உண்டு என்பது மட்டுமல்ல, அவர்களால் இயலவில்லை, முடியவில்லை! ஆனால் நம்மால் முடிகிறது என்ற பொறாமையின் காரணமாகப் பொச்சரிப்பின் காரணமாகத்தான் தூற்றுகிறார்கள்.

கலைவாணர்களைத் தம் கட்சிக்குள் அழைத்துக் கொள்ள சிலரால் முடியவில்லை குறை கூறுகிறார்கள் நம்மைப் பார்த்து சிலர் அழைத்தார்கள்-ஆனால் கலைத்துறையினர் இங்கேயே தான் இருக்கின்றனர் அவர்களால் இயலவில்லை. எனவே தூற்றுகிறார்கள் முன்பின் யோசியாது! அர்த்தமற்ற பேச்சு என்று ஏற்கனவே குறிப்பிட்டபடி இதனை நாம் கவனிக்கத்தேவையில்லை என்று மீண்டும் கூறுகிறேன்.

இயலாமை எங்கே இருக்கிறதோ அங்கே பொறாமை தானாக எழும். பொறாமையைத் தொடர்ந்து, பொச்சரிப்பு புகை, பகை என்று வளரும். நாம் அதனைக் கவனிக்கத் தேவையில்லை.

எனது 15-20 வருட அரசியல் அனுபவத்தைக் கொண்டு, யார், யார் ஏன் தூற்றுகிறார்கள், எதற்காக, எதுவரை தூற்றுவார்கள். எப்போது நிறுத்திக்கொள்வார்கள் என்பது பற்றிய கணக்கு வைத்திருக்கிறேன். தூற்றுபவர், தூற்றட்டும், வாய்சலிக்கும் வரை கவலைப் படவேண்டாம்.
மாற்றார்கள் மட்டரகமாகத் திட்டித் திரிகிறார்கள். மனம் பொறுக்கவில்லை என“று நண்பர்கள் பேசினார்கள்.

பிறர் தூற்றுதலைக் கண்டு ஆத்திரம் பிறக்கக் கூடாது. தூற்றுதலைத் தாங்கிக் கொள்ளும் மனஉறுதி வேண்டும்.

யார் யாரோ தூற்றினார்கள்-தூற்றிவருகிறார்கள்-மேலும் தூற்றுவார்கள், தூற்றுவதைக் கேட்டு துடித்தெழ வேண்டியதில்லை.

நாம் செய்யும் பணி-பகுத்தறிவுப் பணி சாமான்யமானதல்ல. பலருக்கு எரிச்சலை ஊட்டும். சிலருக்கு கோபத்தைக் கிளறிடும். சிலர் பாய்வர்-பலர் சீறி விழுவர். இது சர்வ சாதாரணமாக நாம் எதிர்ப்பார்ப்பவைதானே! எந“தப் பகுத்தறிவுக் கொள்கையையும் மக்கள் சுலபத்தில் உடனே எடுத்த எடுப்பிலேயே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதிர்ப்புகள்-தூற்றல்கள் ஏளனங்கள் கிளம்பித்தான் தீரும்.

நாம் என்ன சாதாரண விஷயங்களையா பேசுகிறோம். பலபேர் மனதார நம்பி-கடைபிடித்து வரும் கொள்கைகளைக் கண்டிக்கிறோம்-பழக்க வழக்கங்கள் பகுத்தறிவுக்கு ஏற்றவையல்ல பாழானவை தீங்கு பயப்பவை என்று வெளிப்படையாகப் பேசுகிறோம்.

கடவுளைக் கூட நாம் விடவில்லையே! கடவுள் எப்படிப் பட்டவர் என்பதைப் பற்றி யார் யாரோ, மூவர், தேவர், முற்றுந்துறந்த முனுபுங்கவர், அருளாளர்கள், அவதார புருடர்கள், ஆண்டவன் தூதர்கள் என்போர் கூறியுள்ளவயென்று கூறப்படும் கருத்துக்களை கொள்கைகளை கோட்பாடுகளைக் கண்டிக்கிறோம். கண்மூடித்தனம் என்று எடுத்துக்காட்டுகிறோம். இதை அவ்வளவு சுலபத்திலே, காலமெல்லாம் கண்மூடிக் கொள்கைகளிலே ஆழ்ந்து கிடக்கும் மக்கள் எதிர்ப்பின்றி ஏற்பாரா?

அவர்களுக்குக் கோபம் வரும். அதைவிட மக்களிடம் குடிகொண்டுள்ள அத்தகைய பழமைக் கொள்கைகளையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமது வாழ்க்கைக்கு வளமான பாதையென வகுத்துக் கொண்டிருக்கும் குருமார்கள்-போதகர்கள் மேல் ஜாதிக்காரர்கள் எனப்படுவோர் மிகவும் ஆத்திரப்படுவர்- மக்களிடம் ஏற்கனவே பெற்றுள்ள செல்வாக்கைக் கொண்டு மக்களை நம்மீது ஏவிவிடுவர்.

நாத்திகர் என்று ஏசுவர்-நாட்டிற்கே நாசகாலம் வரப்போகிறது என்று பயமுறுத்துவர். ஆகாத பேச்சு தகாதபோக்கு என்று மருட்டுவர்.

எவ்வளவோ காலமாக மக்களை ஏய்த்துப் பிழைத்து வந்த கூட்டம் சுலபத்தில் நம்முடைய கொள்கையைக் கேட்டு திருந்தி விடாது, அதைவிட எல்லாவித வழிகளிலும் நம்முடைய பணி பயன்படாது பாழாக்கும் வழிகளையே முழு மூச்சாகத் தொடர்ந்து செய்துவரும் என்பது மிகவும் உறுதி!

எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பு-சொல்வதற்கெல்லாம் மறுப்பு செய்வதற்கெல்லாம் ஏளனம் ஏசல் பூசல் எங்கிருந்தோ கிளம்பும் கிளம்பிற்று!

இதற்காக அஞ்சி யோடி ஒளித்தோமா, இது வரை! இல்லையே!

பிறர் தூற்றுவதைப் பற்றி அக்கறை காட்டி, ஆத்திரப்படக் கூடாது. கொள்கையிலே உறுதியும், செயல் முறையிலே கட்டுப்பாடும், தளராத தன்னம்பிக்கையும் கொண்டு நாம் நமது ஆக்க வேலைகளைக் கவனித்துச் செல்ல வேண்டும்.

வானம் கறுத்து, மேகம் திரண்டு தூற்றல் போட ஆரம்பித்தவுடன், மண்வெட்டியைத் தோளில் ஏந்தி, மடை கட்டுவதற்காக கழனியை நோக்கிச் செல்லும் உழவனைப் போல, நாமும் தூற்றல்களுக்கிடையே, துணிந்து நின்று, நமது கழகப் பணியைத் தொடர்ந்து செய்தாக வேண்டும்.