அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வெற்றி முரசு
2

பிறர் தூற்றுதல் வெறும் குப்பை-அது எருவுமாகும் நமது கழனிக்கு. தூற்றலை அம்மோனியம் சல்பேட்டாக உபயோகிப் போம். தூற்றலின் தன்மையைப் புரிந்து கொள்ளும் மக்கள் நம் பக்கம்தானே சேர்வர். எனவே தூற்றுதலால் நமது கழகப் பயிர் செழிக்கும்-வளரும் என்பது உறுதி.

தூற்றலாலம் என்ன கெடுதி ஏற்பட்டு விட முடியும் என்று கருதுகிறீர்கள்? பிறர் தூற்றலால் நசித்துவிடக் கூடியதா நமது கழகம் நமது பணி-நமது உறுதி என்று கேட்கிறேன்.

நாங்கள் என்ன தூற்றப்படவே கூடாத உயர்ந்த நிலையை அடைந்துவிட்டவர்களா? ஏன் பதைக்கிறீர்கள், எங்களை யாரேனும் தூற்றினால்!

ஏதோ, சம்பத்-கருணாநிதி-நெடுஞ்செழியன் ஆகியோரையும், என்னையும் யாரோ சிலர், ஏதோ தாறுமாறாகப் பேசினால், பேசிவிட்டுப் போகட்டும் அங்க அடையாளங்களைக் கூடக்குறை சொல்லுமளவுக்கு மாற்றார் மட்டரகமாகத்தான் போகிறார்கள்.

போகட்டும் இன்னும் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும், கீழ்த்தரமாக வேண்டுமானாலும் சொல்லட்டும். சொல்லிச் சொல்லி அலுக்க வேண்டும். அலுத்து அலுத்து அடங்கும் வரை சொல்லட்டும்.

அவர்களை எதிர்த்து நாமும் திரும்பத் திரும்ப தூற்றுவதா வேண்டாம், கூடவேகூடாது.

இத்தகைய சாமான்யர்கள், இவ்வளவு பெரிய இயக்கத்தைக் கட்டிக்காக்கிறார்களே என்ற பொறாமையும், பொச்சரிப்பும்தான், எப்படியெல்லாமோ நம்மை மாற்றார் தூற்றும்படி செய்கிறது. தூற்றட்டும் தாங்கிக் கொள்வோம். வேறென்ன செய்ய முடியும். அவர்களால்?

கொலைகாரன், அடுத்துக் கெடுப்பவன், அகப்பட்டதைச் சுருட்டுபவன் என்றெல்லாம் என் அரசியல் தந்தை பெரியார் அவர்களே தாக்கினார்-தாங்கிக் கொண்டேனே! அவரே அவ்விதம் தூற்றியான பிறகு, மற்றவர்கள் தூற்றுவது தூற்றலாகவா தெரியும். எனக்கு!

பெரியார் அவர்கள் என்னைத் தூற்றியதைக் கூட எனக்கு அவர் தந்த கடைசி பாடமாக தூற்றலைத் தாங்கிக் கொள்ள என்னை பயன்படுத்தியதாகத்தான் ஏற்றுக் கொண்டேன்.

அரசியலில் யார் யாரோ எப்படி எப்படியெல்லாமோ தூற்றுவார்கள் அதைத் தாங்க மனவலிமையும் தாங்கம் திறனும் பொறுமையும் வேண்டும். முதலில் நானே தூற்றுகிறேன் தாங்கிக்கொள். பிறகு எவர் தூற்றினாலும் உன்னால் தாங்க முடியும் என்ற எண்ணத்தினால்தான் எனக்குத் தரும் கடைசி பாடமாக என்னைத் தூற்றினார் பெரியார் என்றுதான் ஏற்றுக் கொண்டேன்.
தூற்றலைத் தாங்கிக் கொள்வது எப்படி என்ற கடைசி பாடத்தை பெரியாரிடமிருந்து பெற்றுள்ள எனக்கு, பிறர் தூற்றல் எம்மாத்திரம்! எனவே தூற்றல் கேட்டு ஆத்திரம் கொள்ளாதீர்கள்!

தூற்றலைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பெற்றவர்கள் நிச்சயம் நல்ல காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதை மனதில் நிறுத்த வேண்டுகிறேன்.

தூற்றலைக் கேட்டு ஆத்திரப்பட்டு, மறுப்புரை வழங்குவது பெரிய கடினமான காரியமல்ல. நமக்கு அந்த வேலை தேவையில்லை.

நாம் நமது கழக வேலைகளைக் கருத்தோடு கவனித்துச் செல்வோம். நமது சொல்லும் செயலும், தூற்றுபவரின் மனதையும் மாற்றவல்லதாக அமைய வேண்டும்.

இத்தகைய முறையிலே நாம் நமது கடமையைச் செய்துவர வேண்டுகிறேன்.

நம்முன்னர் எத்தனையோ முக்கியமான பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் விட, நாம் வடநாட்டுப் பிடியிலிருந்து விடுபட்டாகப் பெரும் போர் புரிந்தாக வேண்டும்.

அத்தகைய இறுதிப் போராட்டத்தை எதிர்நோக்கியுள்ள நாம் மிகமிகப் பெரும் பொறுப்பு வாய்ந்தவர்களாகவும், கட்டுப் பாடுடையவர்ளாகவும், காரியமாற்றும் கருத்துமிக்கவர்களாகவும் விளங்க வேண்டியது மிக முக்கியமே தவிர, பிறர் தூற்றல் கேட்டு துடிதுடிப்பதும், துடுக்குத்தனமான பேச்சுகளுக்கு மறுப்புரை வழங்கிக் காலத்தை வீணாக்குவதும் அல்ல. அல்ல என்பதை மீ“ண்டும் வலியுறுத்துகிறேன்.

பிறர் தூற்றல்களைத் தாங்கியாக வேண்டும். ஆட்சியாளரின் கொடுமையான அடக்குமுறைகளைத் தாங்கவேண்டும் அதோடு நமது பணியை விடாது தொடர்ந்து செய்தாக வேண்டும். அப்போதுதான் நமது திராவிடத் தனியரசுக்கான இறுதிப்போர் துவக்கப்படும்.

நம்மிடையே கட்டுப்பாடு மிகவும் பலமாக அமைய வேண்டும். அப்போதுதான் இறுதிப் போராட்டம் துவங்க நாம் லாயக்குள்ளவர்களாக முடியும்.

நான் இந்த மேடையிலிருந்துகொண்டு, ஒரு கோடியிலோ, அல்லது ஒரு மூலையிலோ உள்ள குறிப்பிட்ட நபரைக் காட்டி, அவரை மட்டும் எழுந்து நிற்கும்படி கூறினால் அவர் மட்டுந்தான் எழுந்து நிற்க வேண்டும். மற்றவர் அதுபற்றிய அசைவோ, சலசலப்போ சிறிதும் ஏற்படுத்தக்கூடாது.

அத்தகைய கட்டுப்பாடு, பொறுப்பு, செயல்முறை, நம்மிடம் எப்போது வருகிறதோ, காணப்படுகிறதோ அப்போதுதான் நமது இன விடுதலைப்போர் துவக்கப்படும் என்பதை நினைவில் நிறுத்தி அதற்காக நம்மை நாம் பக்குவப்படுத்தித் தயார் செய்து கொள்ள வேண்டும்.

போராட்டம் வேண்டும், போராட்டம் வேண்டும் என்று நண்பர்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.

போராட்டத் திட்டம், ஏதாவது ஒரு போராட்டம் தேவை. தேவை என்ற அரிப்பின் காரணமாக ஏற்படக்கூடாது-அதை செய்வோமா-இதைச்செய்வோமா என்று ஒரு அரசியல் கட்சி மனதை அலையவிடக்கூடாது. அதேபோது, போராட்டத்துக்குரிய பிரச்சினை எழுந்தால், விடக்கூடாது இதுதான் நான் சொன்னது லால்குடியில் சொல்வது இப்போதும்.

இதை எங்கே கற்றேன்-இது யாரிடம் கேட்ட பாடம் தெரியுமா? இது பெரியாரிடம் கற்ற பாடந்தான். கேட்ட புத்திமதிதான் என்பதைப் பெருமையோடு கூறிக்கொள்ளத் தயங்கவில்லை.

கட்டுப்பாடற்று, கண்ட கண்ட போராட்டங்களிலே தலையிட்டு, பின்னர் கண்ணைக் கசக்கிக் கொள்ளும் கருத்தற்ற தளபதியாக இருக்க மாட்டேன் கவனத்தில் வையுங்கள்.

அரசியல் கட்சிகள் ஆள்பலம், ஆதரவு இல்லாத காலத்தில் போராட்டங்களைத் தேடித்திரியும். போராட்டங்களைத் துரத்திப் பிடிக்கும்.

நாமென்ன ஆள்பலம் அற்றவர்களா, அல்லது படை பலந்தான் நம்மிடம் குறைவாக உள்ளதா? நாம் ஏன் போராட்டங்களைத் தேடித்திரிய வேண்டும் வீணாக.

ஒரு சிலரிடம் படைபலமில்லை. ஆனால் தளபதிகள் ஏராளமாக இருக்கிறார்கள். அங்கே வேண்டுமானால் போராட்டங்களைத் தேடித்திரியட்டும். நமக்கேன் வீண் போராட்டங்கள்? நம்மிடம் படைகள் ஏராளம், தளபதிகளும் ஏராளம். நாம் ஏன் போராட்டம் இல்லையே என்று தேடியலைய வேண்டும்.

வீணான போராட்டங்களை வலிய இழுத்து மேலே போட்டுக் கொள்ளக்கூடாது. ஆனால் வந்த போராட்டங்களையும் இலேசில் விடக்கூடாது.

தலையிலே மூட்டை சுமந்து வீதி வீதியாக விற்கும் நடுத்தெரு வியாபாரிகளுக்கும், கடைவீதியிலே நல்ல நாணயமான கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கும் வித்தியாசமே கிடையாதா? அதுபோல பண்பு, பக்குவம், படைபலம் அத்தனையும் உள்ள நாம் போராட்டங்களைத் தேடியாத் திரிய வேண்டும்.

நாணயமும், நல்ல சாமான்களும் உள்ள கடைக்குச் சென்று மக்கள் தாமாகவே சாமான்கள் வாங்குவதுப் போல, நம்மிடம் போராட்டப் பிரச்சினைகள் எழும்போது நாம் போரிடத் தயங்கமாட்டோம்.

போராடவே முடியாதவர்களல்ல, தி.மு.கழகத்தினர். தழும்புகள் பல பெற்றவர்கள், போராட்டங்களிலே!

இந்த இயக்கம் ஒரு ஜனநாயக ஸ்தாபனம். இங்கே ஒரு கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. அதற்கேற்றபடி கட்டுப்பாட்டுடன் கூடிய, பொறுப்பான, முறையிலே தான்-போராட்டங்களில் இறங்க முடியும், இறங்க வேண்டும். அதுதான் ஒழுங்கு முறை!

அதனாலேதான் போராட்டத்தில் இறங்க வேண்டுமானால் தக்க ஆலோசனை செய்ய வேண்டும். தேடித் திரிந்து எதையாவது செய்யக்கூடாது என்று குறிப்பிடுகிறேன்.

போராட்டம், போராட்டத் திட்டம் திடீர் திடீரென்று அமைக்க முடியாதா, நம்மால்? ஏன் முடியாது? முடியும்!
சர்க்கார் அரிசி கடைகளிலே நல்ல அரிசி கிடைக்கவில்லை. விலையும் அதிகம் என்று விலைமறுப்பு போராட்டம் என்ற பெயரில் ஒரு போராட்டம் துவங்க முடியாதா? சரியல்ல என்று கூறிவிட முடியுமா?

அதுபோலவே, கரும்பு, புகையிலை பயிரிடும் நிலங்களில் சாகுபடி செய்யும் போது சென்று தடுத்து, இங்கே நெல்தான் விளைவிக்க வேண்டும் என்று அறப்போர் தொடுக்கலாம். உணவுப் பொருள் பாதுகாப்புப் போராட்டம், என்ற பெயரிலே! இப்படிப் பலப்பல போராட்டங்களைத் தினந்திம் உற்பத்தி செய்து, நாமே வலிய போராட்டக் களத்திலே குதிப்பது முறையன்று, ஆனால் போராட்டச் சூழ்நிலை உருவாகும்போது நிச்சயம் குதிக்கத் தவறவே கூடாது.

முன்னர், கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாம் இறுதி எழுத்து அழிக்கும் அறப்போரில் பெரியாருடன் கலந்து தொண்டாற்றினோம். அதற்குக் கிடைத்த பரிசு என்ன?

பரிசு தராவிட்டால் போகட்டும்! இவர்கள் ஏற்கனவே கோவில்பட்டியில் போட்ட தீர்மானந்தான் இது என்று பாராட்டாவிட்டால் பரவாயில்லை, சீராட்டாவிட்டால் போகட்டும், இப்போதுதான் புத்தி வந்தது என்றாவது சொல்லக் கூடாதா? எதுவும் இல்லை.

வலிய வந்து கலந்து கொண்டனர் என்பது தானே நாம் பெற்ற பரிசு. நமக்குக் கிடைத்த பேச்சு, அதற்காக நாம் கவலைப் பட்டோமா? இல்லை.

நமது போக்கைக் கண்டு, பலர் பலவிதமாகப் பேசக்கூடும். சிலர் எப்படிப் போனாலும் எதையாவது நேர்மாறாகப் பேசிக் கொண்டுதான் இருப்பர்.

இதையெல்லாம் கவனித்து, காது கொடுத்துக் கொண்டிருந்தால், நமது வேலை, வீணே தடைபடும் என்பது தவிர வேறு உருவான பலன் காணமாட்டோம்.

ஒரு சோலையிலே ஒரு குருவி இருந்ததாம். அதனிடம் ஒரு காசு இருந்ததாம். அந்த வழியே ஒரு அரசன் போனானாம்.

குருவி அரசனைப் பார்த்து ராஜாவே, ராஜாவே, என்னிடம் கால் காசு இருக்கிறது வேணுமா? வேணுமா? என்று கேட்டதாம்.

ராஜா இதைக் கேட்டு, நமக்கு ஏன் குருவியோடு வீண் பேச்சு என்று தன் வழியே போனானாம்.

குருவி விடவில்லை. மீண்டும் ஐய்யய்ய இந்த ராஜா பதில் சொல்லாமல் சும்மா போறாரே என்றதாம்.

இதைக் கேட்ட ராஜா கால்காசு எனக்கு வேண்டாம் என்று மேலே போகத் தொடங்கினார்.

மீண்டும் குருவி, இந்த ராஜா பிகுவுக்காக கால்காசு வேண்டாம் என்கிறார் என்று கூவியதாம்.

குருவியின் தொல்லை ஒழியட்டுமே என்று ராஜா சரி, கால்காசு கொடு குருவியே என்று கேட்டாராம்.

குருவி கால் காசைக் கொடுத்து விட்டது ராஜா புறப்பட்டார். குருவி சும்மா இருந்ததா? இல்லை.
கால்காசு கூட இல்லாத ராஜா இந்த ராஜா, என்று கேலி செய்ததாம், குருவி.

இதைக்கேட்ட ராஜா, உன் கால் காசும் வேண்டாம், இந்தப் பேச்சை நான் கேட்கவும் வேண்டாம். என்று காசை வீசியெறிந்து விட்டாராம். அப்போதும் குருவி சும்மாயில்லை.

பைத்தியக்கார ராஜா வீம்புக்காக காசை வீசி விட்டாராம், என்று வேறு கத்திக் கேலி செய்ததாம்.

ஏதோ கதை இது. ஆனால் எப்படிப் போனாலும் எதை சொன்னாலும் குதர்க்கம் செய்து கேலி பேசிடும் அந்தக் குருவி புத்தி படைத்த மனிதர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதை நாம் நன்குணர்ந்து, பிறர் என்ன சொல்லுகிறார்கள், பிறர் மெச்ச வேண்டும் என்பதையெல்லாம் கவனியாது நமது குறிக்கோள் வழியே கடந்து செல்வதுதான் நமக்கு அழகு நல்லதுங்கூட

இப்போது தோழர் கருணாநிதியிடம் ஒரு போராட்டம் டால்மியாபுரம் போராட்டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சூழ்நிலை அருமையாக உருவாகி இருக்கிறது. ஜூலை 15-ல் போர்த்துவக்கம். தோழர் கருணாநிதியிடம் கலந்து பேசி, முறையும் வகுத்தாகி விட்டது.

இந்த நிலையில் இது ஒரு பிரமாதமான போரா? என்கிறார்களாம், கம்யூனிஸ்டுகள்? அவர்களுக்கு இதெல்லாம் சப்பையான அற்பமான போராட்டங்களாகத்தான் தோன்றக்கூடும்.

கென்யாவுக்கு ஒரு படையும், சிலோனுக்கு மற்றோர் படையும், ஆப்ரிக்காவுக்கு ஒரு படையும் இப்படி களம் எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் படைகளை அனுப்பிவிட்டு சேதியை எதிர்பார்த்திருப்பவர்ள் போல டால்மியாபுரம் போராட்டம் பெரிதா பிரமாதமா? தேவைதானா? என்று பேசுகிறார்கள்.

சூரர்கள், அசகாய சூரர்கள், வீராதி வீரர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் அவர்கள் தான் நல்ல போராட்டம் நடத்தட்டுமே, நாம் என்ன வேண்டாமென்றா தடுத்து நிறுத்துகிறோம்! வேண்டாம், வேண்டாம் என்றா வேண்டுகோள் விடுகிறோம்! இல்லையே!

தாங்கள் செய்வதுதான் சரியென்று நம்பினால் செய்து கொண்டு போகட்டும். அதற்காக மற்றவர்கள் போராட்டத்தைக் கேலி செய்வதா? நல்லதல்ல, அரசியல் நாகரிகத்திற்குப் புறம்பான செயலுமாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றவனுடைய மனைவியின் வாய்கோணல், மூக்கு நீளம், காது குட்டை, கண் சரிவு, முகம் மூளி என்று கொண்ட கணவனிடமே வர்ணிப்பது எவ்வளவு அநாகரிகமான செயலோ, அவ்வளவு அநாகிரமானதுதானே அரசியல் வாழ்வில், ஒரு கட்சி, வேறொரு கட்சியின் திட்டத்தைப் பற்றிப் பேசுவதும், அர்த்தமற்றக் குற்றங்குறைகள் கூறுவதும்!

இந“த அரசியல் அநாகரிகப் போக்கை அவர்கள் கைவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

அவர்களது மொழி கேட்டு, திட்டப்படி நடக்க வேண்டுமென்று நமது ஆசிரியர்கள் என்ற நினைப்பில் நமது திட்டங்களைப் பற்றிய தேவையற்ற பரிசீலனையில் இறங்குகின்றனர், அவர்கள்.
குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், நான் அவர்களைக் கம்யூனிசத்தின் மாணவர்களாகத்தான் கருதுகிறேன்-அப்படிப் பட்டவர்களை எப்படி, ஆசிரியர்களாகக் கொள்ள முடியும் என்று கேட்கிறேன்!

கம்யூனிஸ்டுகள் கூறுவது பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்று மறுபடியும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

நாம் கவனிக்க வேண்டியது, இவர்கள் பேச்சையுமல்ல போக்கையுமல்ல. போராட்டத்திற்குரிய பிரச்சினைதானா இது நாம் எடுக்கும் முடிவு நமக்குச் சரிதானா-திருப்திதானா? தேவைதானா என்று நமக்குள் பேசி முடிவு கட்ட வேண்டும்.

தீட்டிய திட்டம், நாம் கலந்து பேசியதன் விளைவாக என்பது தெரிய வேண்டும். அதுதான் நமக்கு முக்கியமேத் தவிர, நமது மனைவி நமது கண்ணுக்கும் கருத்திற்கும் பிடித்தவளாக இருக்க வேண்டுமே தவிர எதிர்வீட்டுக்காரன் தீர்ப்பா நமக்கு முக்கியம்?

எனவே அந்த ஏளனத்தை நான் சிறிதும் பொருட்படுத்த வில்லை நாம் பொருட்படுத்தக் கூடாது. அவைகளை ஒதுக்கிவிட்டு நாம் ஒதுங்கிச் சென்று நம் வேலைகளைக் கவனிக்க வேண்டும்.

நமக்குள்ளே கூட்டுப் பொறுப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டேன். அதை எப்பொழுதும் மறந்து விடக்கூடாது.

கூட்டுப் பொறுப்பை யெண்ணி, கூடிக் கலந்து பேசி, விவாதித்துத் தெரிந்து, தீர்மானித்த பிறகே எத்தகைய திட்டங்களும் குறிப்பாக போராட்ட திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

சில கட்சிகளில் தனி மனிதர் போராட்டத்தைத் தொடங்குவார். கட்சிக்காரர்கள் கலந்து கொள்வர், தோல்வி கிடைத்தால் அறிக்கை பிடிக்கும் பரவாயில்லை. தோல்வியே வெற்றி யென்று, கட்சிக்காரரும் திருப்தி யடைவர். இங்கே அப்படி முடியாது கூடவுங் கூடாது.

மலைமீது ஏற வேண்டுமென்றால், முன்னர் யோசிக்க வேண்டும். ஏன் ஏற வேண்டும்? அவசியம்தானா? பலன் தரும் வேலையா? ஏறித்தான் ஆகவேண்டுமா? என்று முன்கூட்டி அலசிப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்ல! ஏறுவது என்றால் எந்தப் பக்கம் ஏறுவது? எந்தப் பக்கம் போவது? வழுக்குமா? சறுக்குமா? கல்முள் தடுக்குமா. கால்களிலே வலிவு உண்டா? தொடர்ந்து வர ஆட்கள் உண்டா? தடைகளைத் தகர்த்தெறியத் திறமை உண்டா? என்றெல்லாம் கவனிக்க வேண்டும் பின்னர் ஏறி, வெற்றிமுரசு கொட்ட வேண்டும். அதுமுறை! அதைவிட்டு கண்டபடி ஏறிவழுக்கியோ, தடுக்கியோ கீழே விழுந்து கைகால்களை உடைத்துக் கொள்வது முறையல்ல! முட்டாள்தனமுமாகும்.

நான் இவ்விதம் கூறுவது பற்றி யாரும் ஆயாசப்படத் தேவையில்லை. எவரையும் குறை கூறவோ, புண்படுத்தவோ கூறவில்லை. உண்மை நிலையைக் கண்ட பிறகுதானே, போர் தொடங்க வேண்டும்? கண்டபடி எதையாவது செய்துவிட்டு, எந்தப் போர்க்களத்திலாவது குதித்துவிட்டுத் தோல்வி கிடைத்தால் என் நிலை என்ன ஆகும்?

கூட்டுப் பொறுப்பு மிக்க, இயக்கத்தவரின் கேள்விகட்கு மிகவும் கடமைப்பட்டவனாகவே என்னைக் கருதுகிறேன். எனவேதான் போராட்டத்தைத் துரத்திக் கொண்டு ஓடக்கூடாது. வந்த போராட்டத்தையும் விடக்கூடாது என்று கூறுகிறேன்.

இதனால் நாம் போராட்டத்திற்கு லாயக்கற்றவர்கள் என்று கூறிவிடவில்லை கூறவும் மாட்டேன்.
இப்போது நம் முன் பல போராட்டங்கள் வந்து விட்டிருக்கின்றன. அவைகளில் கலந்து வெற்றி முரசு கொட்டப் போகிறோம் என்பது உறுதி!

சித்தூர் மாவட்டத்தை தமிழகத்துடன் சேர்ப்பதற்கான, திருத்தணி போராட்டம் நடைபெறுகிறது. அதிலே நமது கழக வீரர்கள் பங்கு கொண்டு தமது காணிக்கையைச் செலுத்தி வருகின்றனர். பலர் சிறை புகுந்திருக்கிறார்கள்-மேலும் சிறை புகத்தோழர்கள் தயாராக உள்ளனர்.

லால்குடி மாநாட்டில் நாம் தீர்மானித்தபடி, டால்மியாபுரம் போராட்டம் பற்றிய சூழ்நிலை வளர்ந்து விட்டது.

தோழர் கருணாநிதி அவர்கள் அந்த வட்டத்திலே தமது சுற்றுப் பிரயாணத்தை மிகவும் வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்.

ஆட்சியாளர் நமது வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, வடநாட்டு முதலாளியின் பெயரால் அமைந்த டால்மியாபுரம் என்ற அவமானச் சின்னத்தை கல்லக்குடி என்று தாங்களாகவே மாற்றிட்டால், நமக்கு வேலையின்றியே வெற்றி கிட்டும். இன்றேல் நாம் அரக்கோணம் பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி ஜூலை 15-ல் டால்மியாபுரம் போராட்டத்தைத் துவக்கப் போகிறோம்.

அதிலே தலைமை தாங்கி, நடத்த, அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டத்தைத் தாங்க, தம்பி கருணாநிதி தயாராக இருக்கிறார். ஆர்வமிக்க தோழர்கள் அதிலே கலந்து பணிபுரிய நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இம்முறை டால்மியாபுரம் என்ற எழுத்துக்களை, நாம் இந்தி எழுத்துக்களை அழித்தது போன்று அழிக்கப் போவதில்லை.

அதற்குப் பதிலாக, கல்லக்குடி என்று அச்சடித்த தாள்களை டால்மியாபுரம் என்ற அவமானச் சின்னத்தை மறைத்து, அதன் மீது ஒட்டப்போகிறோம்.

ஆம், ஒட்டுப்போர் நடைபெறும், ஜூலையிலிருந்து.

ஒட்டுவோம், கல்லக்குடி என்று டால்மியாபுரம் மீது தடுத்தால், சிறைபுகுவோம், அடித்தால் பெற்றுக்கொண்டு தாங்குவோம் ஆனால்...? போராட்டம் நிற்காது தொடரும்.

தோழர்கள் ஒட்டிக் கொண்டே இருப்பர்-கைதாக கைதாக மேலும் தொண்டர் படை வந்து கொண்டே இருக்கும்.

ஒட்டிய தாள்களைக் கிழிக்கலாம், ஆட்சியாளர்கள் கிழித்தால், மீண்டும் ஒட்டுவோம் மீண்டும் கிழிக்கட்டும், மீண்டும் ஒட்டுவோம், ஒட்ட ஒட்ட கிழிக்கட்டும், கிழிக்கக் கிழிக்க ஒட்டுவோம், ஒட்டிக்கொண்டே இருப்போம்.

இம்முறையிலே டால்மியாபுரம் போராட்டம் ஆரம்பமாக இருக்கிறது. அதில் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

அது போலவே, கோலை ஏந்தியிருக்கும் ஆச்சாரியாரின் புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்து நாடெங்கும் ஜூன் 21-ல் கண்டனக் கூட்டங்கள் கூட்டி எதிர்ப்பை தெரிவித்தோம்.

அடுத்து ஜூலை 8-ல் ஊர்வலங்கள் கூட்டி, நம் கழக ஆதரவு பெற்று வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களைச் சந்தித்து, அவர்களைச் சட்டசபையில் இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கும்படி வேண்டுகோள் ஓலையைத் தருவோம்.

கடைசியாக, இதற்கான நேரடிப் போராட்டங்களைத் தொடங்கவும் நாம் தயாராக வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டோம்.

ஆச்சாரியாரின் ஆபத்தான, வர்ணாஸ்ரமக் கல்வி திட்டத்தை ஒழிப்பதற்கான கிளர்ச்சி ஜூலையில் சட்டசபை ஆரம்பமாகும் நாளன்று துவக்கப்படும். அது வெற்றிகரமாக நடத்தித்தரும் பொறுப்பை தம்பி சம்பத்திடம் ஒப்படைக்க இருக்கிறேன்.

சட்டசபை ஆரம்பமாகும் நாளன்று, காலையில் நாற்பது ஐம்பது தொண்டர் கழகத்தின் முன்னணி வீரர் ஒருவரின் தலைமையில் ஆச்சாரியாரின் வீட்டு வாயிலில் உட்கார்ந்தோ, படுத்தோ இருப்பர்.
சட்டசபைக்கு போகும் ஆச்சாரியார் இரக்கமற்ற நெஞ்சினராக இருப்பின் அதை அறப்போர் வீரர்களின் மார்பின் மீது தமது காலடிகளைப் பதித்து நடந்து போகட்டும் கவலையில்லை. கொடுமைக்காரராக இருப்பின், போலிசை விட்டு அடித்துத் துரத்தட்டும் அஞ்சமாட்டோம். பச்சாதாபமுள்ள வரானால், மக்கள் மனமறிந்து நடக்கும் மதி படைத்தவரானால் தமது பிடிவாதத்தைக் கைவிட்டு விடட்டும்.

ஆச்சாரியார் எதிலும் லேசில் சிக்க மாட்டார். பச்சைப் பாம்பைப் போல பிடிக்கும் அகப்படாது நழுவி நழுவி செல்லுவதிலே அதிசமர்த்தர்.

இதுவரை எதிலும் சிக்காத ஆச்சாரியார், இதிலே இக்கல்வித்திட்ட எதிர்ப்பிலே ஒருவேளை சிக்கக்கூடும். சிக்கத்தான் போகிறார்.

ஆச்சாரியார் மிகவும் விடாப்பிடியாக இந்த வர்ணாஸ்ரம, குலதர்மக் கல்வித்திட்டத்தைப் புகுத்தியே தீருவேன். நான் நினைப்பதே சட்டம் அதனை நிறைவேற்றுகிறேன் பார் என்று வீராப்பு பேசுகிறார்.

இப்படித்தான் ஆச்சாரியார், அவரது முன்னாள் மந்திரிசபைக் காலத்திலே, கட்டாய இந்தியைத் திணித்தபோதும் கூறினார்.

ஒரு ஈரோட்டு இராமசாமி எதிர்ப்பதற்காக இந்தியை விட்டுவிடுவேனா என்று கொக்கரித்தார்!

என்ன ஆயிற்று நிலைமை பின்னர்! தமிழ் மொழிக்கு வந்த கேட்டைக் காக்க, கட்டாய இந்தியை எதிர்க்க, தமிழகமே திரண்டு வந்தது.

பெரியார் தலைமையிலே ஆயிரக்கணக்கானவர் இந்தியை எதிர்த்துச் சிறைபுகுந்தார்கள். தாய்மார்களும் தியாகத் தீயில் குதித்து தங்கள் குழந்தைகளுடன் சிறை புகுந்தனர்.

சிறை புகுந்த தாய்மார்களைப் பார்த்து வீட்டிலே குழந்தைக்குப் பாலின்றி வந்தார்கள் என்று கேலிப் பேசினார்.

சிறைப்பட்டு, பின்னர் செத்த தாளமுத்து நடராசன் ஆகியோர் கல்வியறிவற்றவர், ஏழைகள் என்று ஏளனம் செய்தார்.

தள்ளாத வயதடைந்த தந்தை பெரியாரை வேகாத வெயில் காயும் பெல்லாரி சிறைக்கு அனுப்பினார். கேட்டதற்கு, அந்த இடம்தான் உடம்புக்கு மிகவும் நல்லது என்று கிண்டலாகப் பதிலளித்தார்.

இத்தனைக்குப் பிறகும் இந்திப் போர்க்களத்தில் குதித்த தமிழர் பெரும் படையைக் கண்டு மருண்ட ஆச்சாரியார், ஏதோ நாலு எழுத்து படிக்கச் சொன்னால் அதற்கு இத்தனை எதிர்ப்பா? புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல எதிர்ப்பு கிளம்புகிறதே இப்படி வரும் என்று தெரிந்திருந்தால் இந்தியை நுழைத்திருக்கவே மாட்டேன் என்று கூறிக்குறைபட்டுக் கொள்ளும் நிலைமை உண்டானதை அதற்குள் மறந்திருக்கமாட்டார்-மீண்டும் நினைவு மூட்டுகிறேன்.
புற்றீசல் என்றதும் எனக்கு ஒரு பழைய சுவையான சம்பவம் நினைவிற்கு வருகிறது.

கடந்த முதன்முறை நடந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் பெரியார் அவர்கள், இந்தியை எதிர்த்து மக்கள் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல்களைப் போல தொடர்ந்து கிளம்பி எதிர்க்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

அப்போது நான் சென்னை பிராட்வே வழியாகப் போய்க்கொண்டிருந்தேன். எதிரே, நண்பர் ஜீவானந்தம் வந்து கொண்டிருந்தார். அவர் என் கையைப் பிடித்து இழுத்து ந‘றுத்தி, என்னப்பா பெரியார் இப்படி எழுதியிருக்கிறார் புற்றீசல் போலவா மக்கள் கிளம்பி எதிர்ப்பா? என்று கேட்டுச் சென்றார்.

சில நாட்களுக்குப் பின்னர், இந்தி எதிர்ப்பு மிகவும் பெரிதாக வளர்ந்து, ஆச்சாரியாரே, புற்றீசல் போலவன்றோ மக்கள் கிளம்பி எதிர்க்கிறார்கள் என்று சலித்துக்கொண்ட பின்னர் ஒருநாள் அதே பிராட்வே வழியாக நான் போய்க்கொண்டிருந்தேன். நண்பர் ஜீவானந்தம் எதிரில் வருவதைக் கண்டு, அவரை நானே பிடித்து நிறுத்தி, என்ன, அன்று புற்றீசல் போலவா மக்கள் கிளம்புவர், என்று கேட்டீர்களே! ஆச்சாரியார் கூறுவதைக் கேட்டீர்களா? என“று கேட்க அவர் ஆமாம் என்று கூறிச்சென்ற காட்சி சம்பவம் நினைவிற்கு வருகிறது.

அதுபோல இன்னும் மக்கள் தங்களது வருங்கால சமுதாயத்தின் நல்வாழ்வைப் பறிக்கும், நாசம் விளைவிக்கும், புதிய வர்ணாஸ்ரமக் கல்வித் திட்டத்தை எதிர்க்கத் திரண்டெழுவர் என்பது திண்ணம்.

போர், போர் என்று கேட்ட நண்பர்கள்! போருக்குமேல் போர் மூளுகிறது. வேலைக்குமேல் வேலை வளருகிறது. பொறுப்பு மிகமிக அதிகமாகிறது. உங்கள் கடமையைப் பொறுப்போடு, கட்டுப்பாட்டுடன் செய்ய வாரீர் என்று அழைக்கிறேன்.

களம்கண்டு பயப்படுபவர்களல்ல. நாம்! களம்பல கண்டவர்கள்தான் போர் முனை அறியாதவர்களுமல்ல. பட்டாளமில்லாதவர்களுமல்ல. ஆனால் நாம் களத்திலே கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் அறப்போர் செய்தல் வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டாமலிருக்க முடியவில்லை.

ஆகவே, களம்புக வேண்டிய அவசியம் நேரிடும்போது தி.மு.க. முன் நிற்கும்- அதுபோலவே கழக வளர்ச்சிக்கான ஆக்க வேலைகளையும் தளராது செய்து வரும்.

நம்முடைய பிரச்சாரம் மிகவும் அதிகம் என்றும், நல்ல பலன் அளித்துவிட்டது என்றும், அதைக் கண்டு மாற்றார் பேச்சுக்கச்சேரி என்று பொறாமையால் பொச்சரிப்பால் கேலி பேசும் அளவுக்கு வளர்ந்து விட்டது என்றும் தோழர்கள் குறிப்பிட்டார்கள். மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் நாம் செய்யாத வேலைகள், புகாத இடங்கள் ஏராளம் என்பதையும் நினைவூட்டுகிறேன்.

நம்மில் தனி மனிதர்களை எடுத்துக் கொண்டால், மிக அதிகமான, அளவுக்கு அதிகமான பிரச்சாரப் பணி புரிந்திருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மைதான். பேரிய கூட்டங்கள், கேட்ட மக்கள் அடைந்த பலன்-பயன் அதிகம்தான். ஆனால் நாம் புகாத-போகாத இடங்கள் இன்னும் எவ்வளவு என்பதையெண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

நாம் ஆழ உழுதிருக்கிறோம் பரவலாக உழவில்லை. நாம் உழாத போகாத-பேசாத-நமது இயக்கம் பரவாத இடங்கள் அநேகம்- ஏராளமாக உள்ளன. அங்கெங்கெல்லாம் இனிச்சென்று பிரச்சாரம் செய்தாக வேண்டும்-பரவலாக உழவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

நான், நாளை தினம் பாகநேரி என்னும் ஊர் செல்கிறேன் இந்தப் பதினைந்து ஆண்டுகளாக அந்தப்பக்கம் போனதே இல்லை நமது கழகப்பிரச்சாரமும் பரவாத இடம் பாகநேரி.

இப்படிப்பட்ட பாகநேரிகளிலெல்லாம் நமது பிரச்சாரம் பரவச் செய்ய வேண்டும் பட்டி, தொட்டி எங்கும் சுற்றிவந்து நமது கழகக்கொள்கைகளை மக்களிடையே பரப்ப வேண்டும்.

நமது கழகத் தோழர்களிடையே இதற்கான திறமை மிகவும் இருக்கிறது என்பதை நன்றாக அறிவேன்.