அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

சந்திரோதயம்
2

வாஞ்சிநாதர், வழக்கப்படி “சர்வேஸ்வரா! ஏனோடாப்பா இந்தச் சோதனை” என்று ஆயாசப்பட்டுக் கொண்டார்.

“என்ன பிரமாதமான பணமிருக்கு நம்மிடம், ஒவ்வொரு சீமான் வீட்டுச் செல்வத்தைப் பத்திக் கேள்விப் படும்போது, நம்மிடம் இது இருக்குன்னு சொல்லிக் கொள்ளவே வெட்கமாயி ருக்கய்யா! கோடாலிபுரம் கோவிந்த செட்டியாரைப் பற்றிக் கேள்வியுண்டா? தங்கத்தாலே கோடாலி இருக்கய்யா - நாலு தலைமுறையா இருக்கு - வருஷத்துக்கு ஒரு தடவை பூஜை போடுவாங்களாம் தங்கக் கோடாலிக்கு. எப்படி அந்த ஐஸ்வரியம் வந்ததுன்னு நினைக்கறிங்க. நாலு தலைமுறைக்கு முந்தி, கோவிந்த செட்டியோட குடும்பத் தலைவன், கோடாலி எடுத்துக்கிட்டு, காட்டுக்குப் போயி, கட்டை வெட்டி அதைக் கொண்டு தான் ஜீவனம் செய்றது; பணம் காசு சேர்ந்த பிறகுதான், செட்டிப் பட்டம். கோடாலியும் கையுமாக திரிந்தபோது, பட்டமும் இல்லை, ஜாதியும் கிடையாது - வேட ஜாதின்னு சொல்றாங்க சிலபேர்; இப்ப செட்டியார். கோடாலி மாடசாமின்னா, ஊருக்கே கிலியாம். அந்த மாடசாõமிக்குக் காட்டிலே ஒரு பெரிய புதையல் கிடைச்சுது - அந்த ஐஸ்வரியம்தான் இப்ப, கோவிந்த செட்டி யாரைக் கோடீஸ்வரனாக்கி இருக்கு. போனவாரம், கவர்னரோட வீட்டுக்குப் போயிருந்தாராம்; கவர்னர் கூட தங்கக் கோடாலியைப் பார்த்தாரா போட்டோகூட எடுத்தாங்களாம்” இப்படித் தமது பேராசையை அடிக்கடி சிங்காரவேலர் வெளியிடுவார்.

“பகவான் ஒரு குறையும் வைகல்லே. சகல சம்பத்தும் கொடுத்திருக்கார்; இருந்தாலும் மனஷனுக்குப் பாரேன் ஆசை, பேயாப் பிடிச்சின்டிருக்கு” என்று வாஞ்சிநாதர் எண்ணிக் கொள்வார்.

“பெரிய தப்பய்யா நீ செய்த காரியம்”

“எதைச் சொல்றேள் முதலியாரவாள்...”

“எதைச் சொல்லுவாங்க... நீர் ஏனய்யா இந்த வயதான காலத்திலே கலியாணம் செய்திண்டீர். அடெ, என்னமோ வீட்டுக்குக் காவலா, கை அமுக்க கால்பிடிக்க ஒண்ணு தேவையாச்சேன்னா, சுமாரனாதாகப் பார்த்துக் கல்யாணம் செய் திண்டிருக்கலாம். லலிதாவை...”

“என்ன செய்வது, கர்மம்”

ஊரே கேலிபேசுது, பாரும்.

“அழிஞ்சி போறா, இல்லாததும் பொல்லாததும் பேசறவா”

“சாபம் கொடுக்கிறீரோ! போமய்யா, போம்.”

“முதலியாரவாள்! நேக்கு மனசு ஒண்ணும் நிம்மதியா இல்லே. - வேறே பேச்சுப் பேசுங்கோ”

முதலியார் இரண்டு விஷயங்களைத்தான் பேசிக் கொண்டிருந்தார். ஒன்று வாஞ்சி நாதரின் குடும்பக் கோளாறு - மற்றொன்று தன்னை மிஞ்சும் நிலையிலுள்ள சீமான்களைப் பற்றிய சேதிகள். ஆகவே, லலிதா விஷயத்தை நிறுத்திவிட்டு, சீமான்கள் பற்றிப் பேசலானார். வலையில் விழ வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார் வாஞ்சிநாதர், மெல்ல ரசவாதம் பற்றிப் பேச்சைத் துவக்கினார். கட்டுக்கதை என்றார் முதலியார், அவர் மயங்குமளவு ஆதாரங்களைக் கொட்டிக் காட்டினார் வாஞ்சிநாதர் - ரசவாதத்துக்கான ஏற்பாடு, ஐயர்வசம் ஒப்படைக்கப்பட்டது.

‘ராம்ஜீ’ - ரசவாதம் செய்து வயிற்றைக் கழுவும் பேர்வழி. அவனுடன் கூடிச் சதிசெய்து, முதலியாருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, அவருடைய நகை, கோயில் நகை, சகலமும் மூட்டையாகக் கட்டிக் கொண்டுபோய் ஒளித்துவிட்டு, பழியை ராம்ஜீ மீது போட்டுப் பசப்பிவிட்டார் வாஞ்சிநாதர்.

புரண்டழுதார் சிங்காரவேலர். பாவிப் பிராமணா, உன் பேச்சைக் கேட்டேனே, கெட்டேனே! என்று கதறினார்.

“யார்டாப்பாவி அந்த ராம்ஜீ” என்று கேட்டார்.

“நேக்கென்ன தெரியும். இமாலம்னு சொன்னான் - நம்பினேன் - நம்ம ரெண்டுபேர் கண்ணிலேயும் மயக்கப் பொடி போட்டுட்டு, மூட்டையை அடிச்சிண்டே போய்ட்டான். என்ன செய்யறது. வாரும் போலீசிலே எழுதிவைப்போம்” என்று அழைத்தார் ஐயர்.

“போலீசுக்குப் போகப்படாதே! பறிபோன மூட்டையிலே கோவில் திருவாபரணமும் இருக்கே” என்று தத்தளித்தார் சிங்காரவேலர்.

“விஷயம் தெரிஞ்சா மானம் போகுமே!” என்று, எரிகிற நெருப்பில் எண்ணெய் கொட்டினார் வாஞ்சிநாதர்.

பேராசைக்குப் பலியான தந்தை தவிப்பது தெரியாமல், சந்திரா, நகரில் தன் அத்தை வீட்டில் இருந்து கொண்டு, அந்தப் பகுதிகளில் சாம்பசிவம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்யும்போது கட்டுக் களித்துக்கொண்டு, தன் கல்லூரி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

துரும்பாக இளைத்துவிட்டார் சிங்காரவேலர். அவருடைய முடுக்கு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு, எல்லாம் ஓடி ஒளிந்தன. ஐயர் தான் அவருக்குப் பொழுதுபோக்கு, பாதுகாப்பு, எல்லாம்.

அறுபதிருக்கு, ஆனால் ஐம்பதுக்குக் கொண்டுவந்தார் தமது வயதை, மேற்பூச்சுகளின் உதவியால், நல்லூர் ஜமீன்தார்.

அவருக்குச் சந்திரவைப் ‘பாணிக் கிரஹணம்’ செய்து வைத் தால், பறிபோன கோவில் திருவாபரணத்துக்குப் பதிலாக வேறு ‘செட்’ செய்யமுடியும், என்று தேன் தடவினார் வாஞ்சிநாதர். முதலிலே முதலியாருக்குக் குமட்டலாகத்தான் இருந்தது - ஆனால் நிலைமையை ஐயர் விளக்க விளக்க, அது தவிர, தான் மீள வேறு மார்க்கமில்லை என்பது புரிந்தது, சம்மதமளித்தார். சந்திராவை அழைத்துக்கொண்டு வந்தார் சாஸ்திரிகள்; “உமக்கேனய்யா இந்த வயதிலே கல்யாணம்!” என்று என்னைக் கேட்டான் கேலியாக, முட்டாள்! இதோ நல்லூர் ஜெமீன்தாரனுக்குச் சந்திரா!! என்று மனத்திலே எண்ணி மகிழந்தார், பூணூ<லை வெற்றிச் சிரிப்புடன் உருவி விட்டுக்கொண்டார்.

விஷயம் கூறப்பட்டதும், சந்திரா, புலியெனச் சீறினாள். ஐயரைச் சாடினாள்; பணத்தாசை கூடாது என்று முதலியாரைக் கடிந்துகொண்டாள்; “கோந்தைக்கு விஷயம் தெரியாது, கோபிக்கறா!” என்று துவக்கி, ரசவாதச் சம்பவத்தைக் கூறினார் ஐயர். சிங்காரவேலர் சித்திரவரைக்கு ஆளாக்கப் படுவது சந்திராவுக்குத் தெரிந்தது, தத்தளித்தனர்.

காலில் வீழ்கிறார், கண்ணீர் பொழிகிறார், தாயே! என்று அழைக்கிறார், மகளை.

“நிலைமை அறியாமல் ஏதேதோ பேசிவிட்டேன் தந்தையே. நான் உம்மைக் காப்பாற்றுவேன். நல்லூர் ஜெமீந்தாரணியாவேன்” என்று கூறினாள். திருமணம் நடந்தது, திருவாபரணத்துக்கு ஈடான தொகை கிடைத்தது - ஆனால்... அடுத்த மாதமே, சந்திரா விதவையானாள்.

“மலைபோல வந்த துன்பம் பனி போல நீங்கிவிட்டது, முதலியாரவாள்; எல்லாம் பகவத் அனுக்ரஹம். ஓர் ஆயிரம் ரூபாய் கொடுங்கோ” என்று கேட்டார் ஐயர்.

“ஆயிரமா? எதற்கு ஐயரே!” என்கிறார் முதலியார்.

“நல்லூர் சம்பந்தம் முடிந்ததானா, பகவானுக்கு ஆயிரம் ரூபாயிலே அபிஷேகம் செய்து வைக்கறதாக நான் பிரார்த்தனை செய்திண்டிருக்கேன். பகவானோட கிருபாகடாட்சத்தாலே, நல்லூர் சம்பந்தம் ஏற்பட்டு, கோவில் திருவாபரணம் செய்யும் சௌகரியம் ஏற்பட்டு, உமக்குவந்த ஆபத்து ஒழிந்து போச்சு பாருங்கோ - அதனாலே ஓர் ஆயிரம் கொடுத்தா அபிஷேகத்தை ஜாம் ஜாம்னு நடத்திடறேன்” என்று விளக்க மளிக்கிறார் வாஞ்சி.

அந்தச் சமயம்தான் தந்தி வருகிறது, நல்லூர் மாப்பிள்ளை இறந்து விட்டார் என்று.

விதவைக் கோலத்தில் சந்திரா உலவக் கண்ட சிங்காலவேலருக்கு, தாங்கொணா வேதனை ஏற்படட்து. தியாகவல்லி! என்னை ஊரார் பழிக்காதிருக்கவேண்டும் என்பதற்காகத்தான் வாழ்வையே பாழாக்கிக்கொள்ள முன்வந்த உத்தமி.
அவளுக்கு ஒரு குறையும் இல்லை என்று அளந்தான் இந்த ஐயர்.

எனக்குச் சொர்ணானுக்கிரஹம் இருக்கிறது, ஆகவோ ரசவாதம் செய்தால் பலிக்கும் என்று புளுகினான், என்னைப் பாழ்படுத்தினான்.

அவருக்கென்ன ஆயுசுக்குக் குறைவா! கல்லுப் பிள்ளையார்போல் இருப்பார்! நல்லயோக ஜாதகம்! என்று நல்லூர் மாப்பிள்ளை விஷயமாக அளந்து கொட்டினான்.

எல்லாமே பொய்த்துப் போய் விட்டது.

நான் என்ன செய்ய! எல்லாம் வினைப் பயன்படிதானே நடக்கும் என்று இப்போது வேறு பாஷையில் பேசுகிறான்.

நான் நடைப்பிணமானேன், அவனோ கொழுத்துத் திரிகிறான்.

கவலையால் என் மேனி அவனோ தங்க நிறமாகிக் கொண்டு வருகிறான்.

என் மகள், கோவெனக் கதறி அழுதாலாவது, நானும் கூடச் சேர்ந்து அழுது என் துக்கத்தை வெளியே கொட்டலாம் - என்னைச் சந்திரா பார்க்கும் பார்வை, “பாவீ! பார்த்தாயா! உன்னால் எனக்கு நேரிட்ட கதியை!” என்று கேட்பது போலிருக்கிறது. என்னால் இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை - என்றெல்லாம் எண்ணி எண்ணிக் கலங்கினார் சிங்காரவேலர்.

சந்திராவுக்கு நேரிட்ட கதியை அறிந்த சாம்பசிவம் துடிதுடித்தான்.

சிங்காரவேலரின் மகள் என்ற ஒரே காரணத்துக்காகத் தனக்கு அவள் ஏற்றவளல்ல என்று எண்ணினானே தவிர, சாம்பசிவம், சந்திராவை மறந்தவனல்ல.

காதல் மணம், மாதர் விடுதலை ஆண் பெண் சமத்துவம் என்பவை பற்றியெல்லாம் பேசும்போது, அவனுக்குச் சந்திராவின் நினைவுதான் வரும்.

நல்லூர் ஜெமீன்தாரனுக்குத் தாரமாகி ஒரே திங்களில் தாலி இழந்தாள் என்று கேள்விப்பட்டதும், சாம்பசிவம் சந்திராவைச் சந்தித்து ஆறுதல் கூறுவதுதான் அறிவுடைமை என்று எண்ணினான். தோட்டத்தில் சந்தித்தனர்.

கண்களிலே களிப்பு இல்லை, குரலிலே இனிமை இல்லை, இளமைகூட விலகிவிட்டதுபோன்ற கோலத்தில் இருந்தாள் சந்திரா.

ஆறுதல்கூற வந்தான் சாமபசிவம், அவனுக்கு ஆறுதல் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது சந்திராவுக்கு.

நல்லூர் சம்பந்தம் ஏற்பட வேண்டிய நிலைமையைச் சந்திரா விளக்கியபோது, சாம்பசிவம் உருகிவிட்டான். கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் இவ்வளவு அளவுக்குச் சந்திரா எப்படிப் பெற்றிருந்தாள் என்பது அவனுக்கு விளங்கவில்லை.

இனி...? என்று ஏதோ சொல்ல ஆரம்பித்து துணிவு பிறக்காததால் தத்தளித்தாள். சோகத்தைக் கீறிக் கொண்டு இலேசான ஓர் புன்னகை பிறந்தது - அதன் பொருள் புரிந்தது, சாம்பசிவத்துக்கு. மீண்டும் சந்திப்போம் என்று கூறிப் பிரிந்தன.
* * *

“தேடிப்போன மூலிகை காலிலே சிக்கிக் கொண்டது” என்று கூறி தூங்கிக் கொண்டிருந்த துரைராஜை தட்டி எழுப்பினார் கந்தபூபதி.

அழகூர் மடாதிபதியின் கையாள்கள், கந்தபூபதியும் முருகதாசரும்.

இருவரும், “பட்டத்துக்கு’ வரும் பாத்தியதை பெற்றவர்கள்.

மடாதிபதியோ மறைய மறுக்கிறார் இரு அடியார்களுக்கும் ஆசை அலையோ மோதுகிறது.

பீடத்தில் வீற்றிருப்பதால் அவர் அனுபவிக்கும் ‘சுகானுபவத்தை’க் காணக்காண, அடியார் இருவருக்கும் ஆவல் கட்டுக்கு அடங்க மறுக்கிறது.

மடாதிபதியைக் ‘கைலை’ அனுப்பி விடுவது என்று திட்ட மிட்டுவிட்டனர். அதே சிந்தனையுடன் மடாலயத்தருகே உள்ள வனத்தில் உலவுகிறார்கள், அங்கு உருமாறிப் போயிருந்த துரை ராஜ் உறங்கிக் கிடக்கிறான். அவன் ஏறத்தாழ, மடாதிபதியின் ஜாடையாக இருப்பது கண்டு ஆச்சரியம் கொண்டு, புதிதாகத் தந்திரமான திட்டம் தீட்டுகிறார்கள், திரு அருளை மக்கட்கு வழங்கும் தொண்டாற்றக் காவிகட்டிய கண்ணியர்கள்.

வெகுண்டெழுந்த துரைராஜிடம் பேசும்போது, மடாலயம், ஆண்டிகள், எனும் ஏற்பாடுகளையே வன்மையாகக் கண்டிப்பவன் என்பது தெரிகிறது. எனவே தைரியமாகத் தங்கள் திட்டத்தைக் கூறி, துணைக்கு இருக்கும்படி அழைக்கிறார்கள்.

தங்கச் சுரங்கத்துக்கு அல்லவா அழைப்பு வருகிறது என்று எண்ணிய துரைராஜ், பண்டாரங்கள் தீட்டிய முரட்டுத் தனமான திட்டத்துக்குப் பதிலாக, சாதுர்யமாக வேறோர் திட்டம் தயாரித்துத் தருகிறான்.

மடாதிபதி ‘சக்தி பூஜை’யிலே ஈடுபடுவது என்றும், அது போது துரைராஜ் மடாதிபதியின் கோலம் தங்கி ஒருநாள் ‘தர்பார்’ நடத்துவது என்பதும், அன்றே பழைய மடாதிபதியை ஒழித்துக் கட்ட பக்தர்களையே துரைராஜ் தூண்டுவது என்றும் ஏற்பாடு.

மடாதிபதிக்குச் ‘சக்தி பூஜை’க்கான ஏற்பாடு எளிதிலே முடிந்தது. அதுதான் லலிதாவின் தாய் வீடு இருந்த ஊர். ‘சிவத்தொண்டு’ செய்ய அந்தச் சிற்றிடையாள் முன்வந்தாள்.
காலை எல்லாம் சைவத்தைச் சுமந்து நொந்தேன். கட்டழகி! மடத்திலேயோ மன்னார்சாமிகள் வருவதும் போவதும் ஓயவில்லை! என்று கொஞ்சு மொழி பேசினார், லலித பூஜையில் ஈடுபட்டார் - தன்னை மறந்தார் - தர்பார் நாளை மறந்தார் - சோலையிலே வெட்டிவேர்ப் பந்தலிடப்பட்ட சித்திரகூடத்திலே, அவர் களியாட்டத்தில் மூழ்கிக் கிடந்தார்.

‘தர்பார்’ நடைபெற்றது, மடாதிபதி கோலத்தில் துரைராஜ் அமர்ந்தனர் - மடத்தின் பொருளை மக்களுக்கு வாரி வாரி வழங்கினான். “மதி பெற்றேன் மகேசன் அருளால்! புதிய பிறவியே எடுத்தேன். என் அஞ்ஞானம் என்னை விட்டோடி விட்டது; மீண்டும் வரக்கூடும், பக்தர்கள்; வந்தால் விரட்டும் தொண்டு செய்து, புண்ணியம் பெறுவீராக,” என்று உபதேசம் செய்தான். லலித பூஜையை முடித்துக்கொண்டு, ஓடோடி வந்தார் பழையவர், வேறோர் உருவம் அரசோச்சக் கண்டார், அலறினார், ஆர்ப்பரித்தார், ஐயகோ! என்றார், அரனை அழைத்தார், - ஆனால் அனைவரும் சேர்ந்துகொண்டு, “இதோ அஞ்ஞானம் வந்துவிட்டது” என்று கூவி, அடித்துத் தள்ளினர் கீழே. இந்த அமளியைச் சாக்காகக் கொண்டு துரைராஜ் விலையுயர்ந்த நவமணிகள் கொண்ட பேழையுடன், மடாலயத்தை விட்டு வெளியேறிவிட்டான்.

அடுத்த மடாதிபதி கந்தபூபதியா, முருகதாசரா என்பது பற்றிப் பக்தர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர். துரைராஜ், தாடியும் ஜடையும் கலைத்துவிட்டு, வேறோர் புதிய வேடம் அணிந்துகொண்டிருந்தான்.

மாயேந்திரன் ஊரையே ஒரு கலக்குக் கலக்குகிறான்.

பணத்தை அள்ளி அள்ளி வீசுகிறான் - ஆனால், தேர் திருவிழாவுக்கல்ல, தேர்தலுக்குமல்ல; அனாதை விடுதிகள், பள்ளிக்கூடங்கள், படிப்பகங்கள், இவற்றுக்கு.

ஆராதனை, அர்ச்சனை, அபிஷேகம் இற்றைக் கேலி செய்கிறான், அறிவு வளர்ச்சியைப் பாராட்டுகிறான்.

ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தமா, பாட்டாளிகளுக்குப் பரிந்து பேசுகிறான். பயல்கள் பத்து நாளைக்குக் கூவும், பிறகு கும்பி காயும், தானாக வேலைக்குத் திரும்பு என்று ஆலை முதலாளி சேட் எண்ணுகிறார் - ஆனால், மாயேந்திரன், ஆலைத் தொழிலாளருக்குப் பண உதவி தருகிறார்; அவர் களுடைய போராட்டத்தை ஆதரிக்கிறார். ஆலை முதலாளியே மாயேந்திரரிடம் வருகிறார்.

“இவர் பெயர் என்ன தெரியுமாடா வெள்ளே!” என்று கேட்கிறார், மாயேந்திரன் தன் வேலையாளிடம்.

“சேட்டு...” என்கிறான், அந்த அப்பாவி.

“பரமதயாள் சேட்! பாம்பிலே அதிக விஷமுள்ள பாம்புக்கு நல்ல பாம்பு என்று பெயர், இதோ இவனுக்குப் பரமதயாள் சேட்!” என்று கூறிக் கேலி செய்கிறார், மாயேந்திரன்.

“என்மீது என்ன கோபம் ஜீ! நான் தங்களுக்கு என்ன செய்தேன்” என்று கேட்கிறான், சேட்.

“எனக்கா? ஒன்றும் இல்லை. ஆனால் நீ ஏழைத் தொழிலாளருக்குச் செய்யும் கேடு தெரியாதா! அவர்களின் கண்ணீர், உனக்குப் பன்னீர்!! நான் ஏழைத் தொழிலாளருக்குத் தான் நண்பன் உன் போன்ற ஆள் விழுங்கிக்கல்ல, போ!” என்று விரட்டுகிறார்.

தொழிலாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

புத்துலகக் கழகம் புதுமை வீரரை வாழ்த்துகிறது.

வாஞ்சிநாதர், மாயேந்திரரைக் காண வருகிறார், ‘அம்பாள் பிரசாதத்துடன்.’

“அம்பாள் பிரசாதம் கிடக்கட்டும் அய்யர்... நமக்குத் தேவை, அம்பாள்...!” என்று ஜாடை காட்டுகிறார் மாயேந்திரன். “புரிகிறது! புரிகிறது! அதற்கென்ன ‘ஜெமீந்தாரவாள்! எதேஷ்டம்’ என்று கூறிக் குதூகலமூட்டுகிறார் வாஞ்சிநாதர்.

“இதெல்லாம் வேண்டாமய்யா... சிங்காரவேலர் மகள் சந்திரா மீது...” என்று தூபமிடுகிறார் மாயேந்திரன்.

“சிரமமான காரியம் - பெரிய இடத்து விவசாரம்...” என்று கூறித் தயக்கம் காட்டுகிறார் வாஞ்சி. பச்சை நோட்டுகளை நீட்டுகிறார் மாயேந்திரர், பல்லிளிக்கிறார் வாஞ்சிநாதர்.

வாஞ்சிநாதருடைய வஞ்சகத்தை வெளிப்படுத்தும் கட்டம் வருவதற்குச் சில காலம் பிடித்தது - கட்டம் உருவெடுத்துக் கொண்டு வந்தது.

ஒருநாள் சிங்காரவேலருக்கு ஆள் அனுப்பி வரவழைத்தார் மாயேந்திரர்.

“அழைத்ததாகக் கேள்விப்பட்டேன், ஓடோடி வந்தேன்” என்று அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார் சிங்காரவேலர்.

“ஆமாம், தங்களைப் பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருக் கிறேன். பெரிய பக்திமானாம்...” என்று துவக்கினார் மாயேந்திரர்.

“உண்மைதான். இந்த ஊர்க் கோவில் தர்மகர்த்தா...”

“தாங்கள் தானாம்! ஆனால் தங்கள் பக்தியும் பிராமண சேவையும் தங்களுக்கு ஒரு பயனும் தரக் காணோமே. தங்கள் மகள் சந்திரா, பாவம், தாலி அறுத்துவிட்டாள்”

“ஆமாம், தலைவிதி...”

“அந்தத் தலைவிதியைக்கூட உமது பக்தியும் பிராமண சேவையும் போக்க முடியவில்லை, பிறகு என்ன பிரயோஜனம்”

“இதைப் போலத்தான் பேசுவான் துரைராஜ்!”

“அவனைத்தான் அடித்துத் துரத்தியாச்சே”

“ஜெமீதாரவாளுக்கு அவனைத் தெரியுமோ?”

“ஏன் தெரியாது! துரைராஜ் இப்போது உம்மைப் பார்த்தால்...”

“காரி உமிழ்வான்...”

“துரைராஜ் அப்படிப்பட்டவனல்ல... உம்மிடம் பரிதாபம் காட்டுவான்...”

“துரைராஜ் பேசுவதுபோலவே இருக்கிறதே...”

“இருக்கட்டும், நானேதான் துரைராஜ்... என்று வைத்துக் கொள்ளுங்களேன்...”

இவ்விதம் உரையாடல் வளர்ந்தது; வாஞ்சிநாதரின் வஞ்சகத்தை விளக்கி, அவன் போன்றாரின் பேச்சுக்குக் கட்டுப்படுவது எவ்வளவு கண்மூடித்தனமானது என்பதை எடுத்துரைக்கிறார் மாயேந்திரர்.

அதே சமயம் வாஞ்சிநாதர் வருவதாக வேலையாள் கூறுகிறார். உடனே மாயேந்திரர், “வாஞ்சிநாதரின் வஞ்சனம் எந்த அளவுக்குச் செல்கிறது என்பதைக் காட்டுகிறேன். அதோ அந்தத் திரைக்குப் பின்புறம் சந்தடி செய்யாமல் இருந்து கொண்டு, நாங்கள் பேசுவதைக் கேளும் என்று கூறுகிறார். சிங்காரவேலர் கொள்கிறார். சிரித்தமுகத்துடன் வாஞ்சிநாதர் வருகிறார்.

“வாருமய்யா! வாஞ்சிநாதரே! வாரம் இரண்டாகிறது, இன்னமும் காரியம் முடியக் காணோம்.”

“எதைச் சொல்றேள் ஜெமீந்தாரவாள்!”

“சற்றுச் சிரமமாக இருக்கிறது”

“என்னய்யா இழுத்துப் பேசுகிறீர். இரண்டு கையையும் நீட்டி வாங்கியதை...”

“நான் மறப்பேனா...”

“என்னய்யா, என்னைவிட அந்தச் சிங்கார மொதலி மேலானவனா...”

“கிடக்கிறான் தள்ளுங்கோ. நேக்கு அவனோட தயவு எதுக்கு...”

“சிங்காரமுதலிதான் உம்ம பேச்சைத் தட்டி நடப்பதே கிடையாதாமே.”

“ஆமாம் - அப்படித்தான் இருந்தான். கோவில் கட்டடான்னா, கட்டினான்; கும்பாபிஷேகம் செய்டான்னேன், செய்தான்...”

“ரசவாதம் செய்ததுகூட, நீர் சொல்லித்தானாம்...”

“யார் சொன்னா அப்படி, இழுத்து வாரும் இப்படி; நான் ஜோட்டாலே அடிச்சுடுவேன். நான் தலைப்பாடா அடிச்சுண்டேன், வேண்டாம்டா, போதும் உனக்கிருக்கிற சொத்து, ரசவாதம் எதுக்குன்னா - என் பேச்சைக் கேட்டானோ! தன் சொத்து, கோவில் சொத்து பூராவும் பறி கொடுத்தான். நல்ல வேளையாக நல்லூர் சம்பந்தம் ஏற்பட்டுது, இல்லையானா, நாறிப் போயிருக்கும் அவனோட வாழ்வு.”

“அதுவும் தக்கவில்லையே பாபம். தாலி அறுத்து விட்டாளே சந்திரா”

“அறாமல் என்ன ஆகும். அவன் ஆயிரத்தெட்டு ரோகம் பிடிச்சவன்...”

“அப்படிப்பட்ட இடத்திலே சந்திராவைக் கொடுக்கச் சொன்னீரே...”

“நான் சொன்னா! இவன் புத்தி எங்கே போச்சின்னேன்!”

அவ்வளவுதான் பொறுக்கமுடிந்தது சிங்காரவேலரால்.

பாவி! படுமோசக்காரா! என்று இடி முழக்கமிட்டார். புலி யெனப் பாய்ந்தார். வாஞ்சிநாதனின் குரவளையைப் பிடித்துத் தன் பலம் கொண்ட மட்டும் அழுத்தி நெரிக்கலானார். எவ்வளவு அழுத்தி வாஞ்சிநாதர் சொல்லி வந்த தத்துவங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாரோ, அவ்வளவு அழுத்தமாக நெரிக்கலானார். மாயேந்திரனால் கூடத் தடுக்கமுடியவில்லை. வாஞ்சி நாதன் பிணமாகிக் கீழே விழுந்த பிறகுதான் பிடி தளர்ந்தது, கொலை செய்துவிட்டோம் என்ற உணர்வும் அப்போதுதான் வந்தது. மாயேந்திரன் காலில் வீழ்ந்து கதறலானார். அவரைத் தூக்கி நிறுத்தித் தைரியம் கூறிவிட்டு, “இது சம்பந்தமாகத் திகில் வேண்டாம், நான் கவனித்துக் கொள்கிறேன்.” என்று கூறிவிட்டு, சிங்காரவேலரை வாஞ்சிநாதர் வீட்டுக்கு அழைத்துச் சென்று, துரைராஜ் தூக்கிக்கொண்டு ஓடினதாகக் கூறப்பட்ட மாங்காய் மாலையையும், ரசவாதி ‘அடித்துக் கொண்டு’ போனதாகச் சொல்லப்பட்ட நகைகளையும் காட்டி, வாஞ்சிநாதனின் வஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டினார் மாயேந்திரர்.

திடுக்கிடத்தக்க சம்பவங்கள் உருண்டோடி வந்தன - இவை கண்டு, சிங்காரவேலர் தெளிவுபெற்று, “இனி நான் வஞ்சகத்துக்கு அடிமை ஆக மாட்டேன், வைதீகத்துக்கு இட மளிக்கமாட்டேன், பகுத்தறிவு பரப்புவேன், ஜாதிபேதம் ஒழியட்டும், மூடநம்பிக்கை ஒழியட்டும, புரட்டர்களின் கொட்டம் அழியட்டும்,” என்று ஆவேசத்துடன் கூறிட, அகமிக மகிழ்ந்த துரைராஜ், சந்திராவைச் சாம்பசிவத்துக்கு மறுமணம் செய்து தரும்படி கேட்டுச் சம்மதம் பெறுகிறார்.

மறுநாளே, மாயேந்திரர் தலைமையில் மறுமணம் நடந்தேறுகிறது.

அதேபோது துரைராஜ் மடாலயத்தில் செய்த கபட நாடகம் பற்றி லலிதா மூலம் கேள்விப்பட்டு, மாயேந்திரனின் போக்கையும் கவனித்துப் பார்த்து, துரைராஜே, மாயேந்திரனாக நடிக்கிறான் என்பதைக் கண்டறிந்து, துரைராஜை வந்து மிரட்டுகிறான் வரதன்.

உன்னால் ஆனதைச் செய் என்று கூறிவிட்டு, தானே துரைராஜ் என்பதையும், வாஞ்சி நாதரைக் கொன்றது தானே என்றும் கடிதம் எழுதி வைத்து விட்டுத் தனியாகச் சாம்பசிவத்தைச் சந்தித்து, தான் தான் துரைராஜ் என்பதைக் கூறி, தன்னிடம் உள்ள பணம் முழுவதையும் பகுத்தறிவுப் பிரசாரத்துக்கே பயன்படுத்தும்படி கூறிவிட்டு, அங்கேயே, நண்பனுடைய அணைப்பில் இருந்தபடியே, இரத்தம் கக்கிக் கீழே வீழ்ந்து இறந்து விடுகிறான், “விஷம் சாப்பிட்டு விட்டேன்! வேலை முடிந்தது!” என்று கூறியவண்ணம்.

அலறிப் புரண்டழுகிறான் சாம்பசிவம். திருந்தி விட்டேன் துரைராஜ், திருந்தி விட்டேன், என்பொருட்டு நீ இறப்பதா! உத்தமனே! என்று உள்ளம் உருகக் கூறிக் கதறுகிறார், வைதீகப் பிடியிலிருந்து விடுபட்ட சிங்காரவேலர்.

மக்களை வஞ்சகர்களிடம் சிக்க வைத்து, அவர்தம் மதியை மாய்த்து, சமூகத்தைச் சீரழிக்கும் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் பணியாற்றுவேன், நீ துவக்கி வைத்த வேலையைத் தொடர்ந்து செய்து வருவேன் - என்று கூறித் துரைராஜின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்கிறான், சாம்பசிவம்.

(திராவிட நாடு - 1955)