அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


தசாவதாரம்
8

“பதக்கத்தைக் கொடு” என்று மைக்கண்ணன் கேட்டதும், சூடாவின் திகில் அதிகரித்துவிட்டது. “பதக்கமா! ஏது? யார் நீ?” என்று கேட்டுக் கொண்டே, மிரள மிரள விழித்தாள். மைக்கண்ணன், “இதோ பார்! எனக்கு வேலை நிரம்ப இருக்கிறது. இங்கே நின்று கொண்டு வம்பளக்க நேரமில்லை. எடு பதக்கத்தை” என்று கூறினான். தராவிட்டால், மடியிலிருந்து தானே எடுத்துக் கொள்வான் என்று தோன்றிற்று.

அவன் குரலிலே அந்த உறுதி தொனித்தது. என்ன செய்ய முடியும், ஏற்கெனவே திகைப்பால் தாக்கப்பட்டுக் கிடந்த சூடாமணியால்! மேற்கொண்டு எதுவும் பேசாமல், பதக்கத்தை மைக்கண்ணனிடம் கொடுத்தாள். மைக்கண்ணன், வெற்றிச் சிரிப்புடன் நின்றான். “ஐயா! இந்தப் பதக்கத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று பயந்த குரலில் கேட்டாள் சூடா. “எவ்வளவு பைத்தியக்கரத்தனமான கேள்வி?” என்று சொல்லிச் சிரித்தான் மைக்கண்ணன்.

“நான் விவரிக்க முடியாத வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து கேலி பேசி என் மனதை மேலும் புண்ணாக்க வேண்டாம். என் நிலையிலே இருப்பவர் யாராக இருந்தாலும், வீராதி வீரனானாலும், உண்மையிலேயே பைத்தியம் பிடித்துத்தான்விடும். ஐயா! முரட்டுக் குணம் படைத்த உன்னையே கேட்கிறேன். திடீரென்று உன் வாழ்க்கையிலே, ஒரு பெரிய விபத்து நேரிட்டால், உன் மனம் குழம்பாதா? உன் கையிலே உள்ள பதக்கத்திலே புதைக்கப்பட்டுள்ள நவரத்தினத்தின் விலைமதிப்பைக் கண்டு பூரித்து, இதை விற்றுப் பெருந்தொகை பெற்றுப் பணக்காரனாகிச் சுகமாகக் காலந் தள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சமயத்தில், பதக்கம் இருக்கும் கையைப் பாம்பு கடித்தால் என்னவாகும்? நான் உம்மைச் சபிப்பதாக எண்ணிக் கோபிக்க வேண்டாம். உமக்கும் குடும்பம், தாய் தந்தை, அண்ணன் தங்கை இருக்குமே; எப்படிப்பட்ட கன்னெஞ்சனாக இருந்தாலும், என் கதியைக் கேட்டால் கண்ணீர் விடுவார்கள். பதக்கத்தைக் கொடுத்துவிட நேரிட்டதே என நான் ஓலமிடுகிறேன் என்று நினைக்காதீர். எனக்கு இந்தப் பதக்கம் மட்டுமல்ல, உள்ள நகைகள் அவ்வளவும் போனாலும் கவலை இல்லை.” என்று சூடா விம்மிக்கொண்டே கூறிடவே, மைக்கண்ணனுக்கும் கண்களிலே திவலை சேரத் தொடங்கிற்று. சமாளித்துக் கொண்டு, “சேச்சே! இது என்ன குழந்தை போலக் கதறுகிறாய்! நான் உன்னை ஒன்றும் கேலி செய்யமாட்டேன்.

சுகதுக்கம் என்பது மனிதருக்குச் சகஜமாக வருவதுதான். இந்த லோகத்திலே நீ மட்டுந்தானா கஷ்டம் அனுபவிக்கிறாய்”. மைக்கண்ணன் சூடாமணிக்கு ஆறுதல் கூறினான். “இவளை ஏய்த்துப் பதக்கத்தை அபகரித்துச் செல்கிறோம். பிறர் பொருளை களவாடுகிறோமே, பெண்ணை மிரட்டிப் பொருளைப் பறித்துக் கொள்கிறோமே! இது தர்மமா, நியாயமா? என்ற சிந்தனைக்குக் கட்டுப்படாத மைக்கண்ணன், சூடாவின் கண்ணீரைக் கண்டதும் கலங்கினான். அவள் தன் வாழ்க்கையிலே வேதனை சூழ்ந்திருப்பதைக் கூறினதும், உருகினான்! தர்மம், நியாயம் ஆகிய எண்ணங்கள் உள்ளே புகாதபடி கெட்டியாக்கப் பட்டிருந்த அவன் மனதிலே, இரக்கம் என்ற எண்ணம் மட்டும் இலேசாக உள்ளே புகுந்தது. இரக்கம், அவ்வளவு வலிமை பொருந்திய உணர்ச்சியா? அல்லது மைக்கண்ணன் மட்டும், இரக்க சுபாவக்காரனா!

‘ஐயோ பாவம்!’ என்ற சொல் பேசாத ஆட்கள் கிடையாது. மிக இயற்கையாகவே அந்த வார்த்தை புறப்படுகிறது. நகராத மாட்டை நாலு அடி கொடுத்து ஓட்டும் ஆளைக் கண்டால், வழியே போகிறவன்கூட, “ஐயோ பாவம்! ஏண்டாப்பா அந்த வாயில்லாத ஜீவனை இப்படி வதைக்கிறாய்?” என்று கேட்கிறான். துன்பப்படுபவனைக் கண்ட உடனே, அந்த இரக்கம் எவர் உள்ளத்திலேயும் இயற்கையாகவே கிளம்புகிறது. அந்த இயற்கை உணர்ச்சியான இரக்கத்தின்படி நடக்க முடிவதில்லை. நடக்க வேண்டுமென்ற நினைப்பு வராததால் அல்ல! நடக்க உண்மையிலேயே முடிவதில்லை - அவர்களுடைய வாழ்க்கை முறையின் அமைப்பு அதற்கு இடந்தருவதில்லை. பூந்தோட்டத்திடையே கட்டப்பட்ட அழகிய மாடி வீட்டிலே வாசம் செய்துகொண்டு, நேசத்துக்குரிய நாயகி வீணை மீட்டிக் கொண்டு பாட, அந்த இன்னிசையைக்கேட்டு ஆனந்தித்திருக்க வேண்டுமென்ற நினைப்புப் பலருக்கு. அத்தகைய மாடி வீட்டருகேகூடச் செல்ல முடியாத பலருக்கும் சுலபத்திலே அந்த எண்ணம் ஏற்பட்டுவிடும். ஆனால் அந்த நினைப்பை அடுத்த விநாடியே உதறித் தள்ளியாக வேண்டும், நடைமுறைக்கு ஏற்றதல்லவென்று!

தர்ம சிந்தனை எழ முடியும் எவருக்கும். ஆனால் அந்த நினைப்பின்படி நடக்க முடியாது பெரும்பாலோரால்! என்னிடம் மட்டும் ஏராளமான பணம் இருந்தால், என்னென்ன செய்வேன் தெரியுமா? பசி என்று நினைப்பதும், சொல்லிக் கொள்வதும் எளிது; செய்ய முடியுமா அதுபோல்!
பெரும்பாலானவர்களுக்குச் சிந்தனை உதிக்கும்; செல்வம் இராது. சிந்தனையுடன் செல்வமும் இருந்தால், செல்வத்தைச் சீரழித்துவிட்டால், நாளைக்கு என்ன செய்வது என்ற பயம் பிறக்கும். பயம் பிறந்ததும் கிடைத்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற திட்டம் போடுவான். அந்தத் திட்டத்திலே பசித்தவனுக்குச் சோறிடுவது என்ற பழைய எண்ணத்துக்கு இடம் இராது! மனிதன், இயற்கையாக அவன் உள்ளத்திலே எழக்கூடிய எண்ணங்களின்படி நடக்க முடியாதவாறு அவனுடைய வாழ்க்கையின் அமைப்பு, அவனாலும் சூழ்நிலையாலும் ஏற்பட்டுவிடுகிறது.

“என் குழந்தையைச் சீமைக்கு அனுப்பிப் படிக்க வைக்கப் போகிறேன்” என்று கூறிக் கொஞ்சாத தாய்மார்கள் உண்டா? ஆனால், சீமைக்குப் போய்ப் படித்துவிட்டு வரவேண்டிய குழந்தை, கடைசியில் செட்டியார் கடையிலேயல்லவா கணக்கெழுதுகிறான்! இரதிபோல ஒரு பெண்ணை என் மகனுக்குக் கட்டி இந்தக் கண்ணால் கண்டு ஆனந்திக்க வேண்டும் என்று கூறுகிற தாய்க்கு, நிறமும் கருப்பு, முகமும் கோணல், குணமும் கோணல் என்று ஊரார் வர்ணிக்கும் மருமகள் கிடைக்கிறாள்! நினைப்பு, எதற்கு உதவிற்று? கலெக்டர் ஆபீசிலே குமாஸ்தாவாகக் காலடி வைக்கும் யார்தான், கடைசி வரை அந்த வேலையிலேதான் இருக்கப் போவதாக எண்ணுவார்கள்! எண்ணம், அடிக்கடி குமாஸ்தாவை, மின்சார விசிறிக்கு அடியே உள்ள மெத்தை போட்ட ஆசனத்துக்கு அழைத்துச் செல்கிறது.

வாழ்க்கையோ, அவனைக் குமாஸ்தா ஸ்தானத்திலேயே அழுத்தி விடுகிறது. கள்ளன், பிறர் பொருளைக் கவரும் முதல் சம்பவத்துக்கு முன்பு, ஏதேதோ எண்ணங்களைக் கொண்டிருப்பான். களவாடியே பிழைக்க வேண்டும் என்றல்ல! கௌரவம், நாணயம், உழைத்துப் பிழைத்தல், ஊர் மெச்ச நடத்தல், எவரிடமும் அன்பு காட்டுதல் முதலின பல எண்ணங்களை அவன் கொண்டிருந்தவன்தான். ஒவ்வொன்றாக விட்டுவிட நேரிடுகிறது. பணம் வைத்திருந்தால்தானே கௌரவம்! ஆளின் குணத்தை யார் கவனிக்கிறார்கள்? ஆளின் அரண்மனை, ஆடம்பரம் இவைகளைப் பார்த்துத்தானே கௌரவம் தரப்படுகிறது! பணத்துக்குள்ள கௌரவம் வேறு எதற்கும் கிடையாது! என்ற பாடத்தை அவன் அனுபவப் பள்ளியிலே பெறுகிறான். பெற்றதும், கௌரவமாக வாழ வேண்டும் என்ற நினைப்புத் தானாக நசித்துப் போகிறது. எப்படியாவது பணம் தேட வேண்டும் என்று திட்டம் தயாரித்து விடுகிறான். அந்தத் திட்டம் அவனை வேறொருவனுடைய இரும்புப் பெட்டிக்கு இழுத்துச் செல்லலாம்; சிறைச்சாலைக்குள்ளே தள்ளிவிடக்கூடும். இல்லையானால் சீமானாகவும் செய்துவிடக்கூடும். எனவே, மனிதனிடம் உள்ள குறை, நல்ல எண்ணங்கள் அவனிடம் உதிப்பதில்லை என்பதல்ல; உதிக்கும் நல்ல எண்ணங்களின்படி நடந்துவர, அவனுடைய வாழ்க்கையின் அமைப்பு முறையின் கூட்டாக விளங்கும் சமுதாய ஒழுங்கு முறையும், அதற்கு இடந்தருவதில்லை! இதனாலேதான் கள்ளனும், காமுகனும், வஞ்சகனும், கொலைகாரனும் புரட்டனும், மிரட்டுவோனும் பூசாரியும் உண்டாகின்றனரேயொழிய, நல்ல எண்ணங்களே உண்டாகாத காரணத்தால் அல்ல!

அதிலும், மற்ற எண்ணங்களின்படி நடந்து கொள்ள முடிந்தாலும் முடியக்கூடும். இரக்கம் என்ற எண்ணத்தின்படி நடந்து கொள்வது, மிக மிகக் கஷ்ட சாத்யமாகி விடுகிறது. இதிலே உள்ள வேடிக்கையும் அதிகம்! மற்ற எண்ணங்கள் எழுதுவதற்காவது, கொஞ்சம் பண்பு, சுற்றுச்சார்பு, கல்வி முதலியன தேவை. இரக்கம் என்ற எண்ணம் உண்டாக, இவை தேவையில்லை. மிகச் சாதாரணமாக உண்டாகிவிடும். பிறர் தூண்டாமலே உண்டாகும். அடிக்கடி உண்டாகும்! அனைவருக்கும் உண்டாகும். நல்ல வெயில் வேளை. பாரமான வண்டியை, மாடென இழுத்துச் செல்கிறான் பாட்டாளி. பாதையிலே நிற்கிறான் பரமசிவன்; அவனிடம் வண்டி இழுப்பவன், “அப்பா, பரமசிவம்! என்னைப் பார்! நானும் உன்னைப் போல ஒரு மனிதன்தான். மாடல்ல! ஆனால் மாடுகூட இழுக்க முடியாத இந்த வண்டியை நான் இழுக்கிறேன்” என்று கூறுவதில்லை.

பரமசிவன் பார்க்கிறான். (இரண்டு கண்ணுள்ளவன்) பார்த்ததும், பெருமூச்சுடன் மெள்ளச் சொல்கிறான், ‘ஐயோ பாவம்!’ என்று. அழையாமல் நுழைகிறது, இரக்கம் எனும் எண்ணம். அவன் மனம் குழைகிறது. ஆனால் பரமசிவம், என்ன செய்ய முடியும்? “பார வண்டியை இழுத்துக் கஷ்டப்படாதே. வா, என் வீட்டுக்கு. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்” என்று கூறிவிட முடியுமா? பரமசிவமே, பாதி வாழ்வுக்காரன். உண்கிறான் இஷ்டப்படியல்ல. உயிரும் உடலும் பிரியாதிருக்கும் அளவுக்குத்தான்! அவன் கஷ்டாளி! ஐயோ பாவம் என்று அவனைப் பார்த்தே பல பேர் கூறுகிறார்கள். “வீட்டிலே என் சம்சாரத்துக்குக் காய்ச்சல் ஜாஸ்திங்க. கையை வைத்தா நெருப்பு மேல் வைப்பது போல இருக்குதுங்க! டாக்டரிடம் அழைச்சிக்கிட்டுப் போகணுங்க.” என்று ஒரு நாள் பரமசிவம், தன் எஜமானிடம் சொன்னான். “ஐயோ பாவம்!” என்று அவர் சொன்னார். “ஒரு பத்து ரூபாய் பணம் வேணுமுங்க” என்று கேட்டான், எஜமானர் என்ன செய்தார்? தந்தாரா? அதுதான் இல்லை. ஐயோ பாவத்தை மட்டுந்தான் தந்தார். பரமசிவம் பார வண்டிக்காரனுக்கும் அதே ஐயோ பாவத்தைத்தான் தர முடிந்தது! இரக்கம் எழுவது எளிது, அதன்படி நடக்க முடியாது முக்காலே மூன்று வீசம் பேரால்! வாழ்க்கை முறையின் போக்கு இயற்கையான எண்ணத்தின்படி மக்கள் நடக்க முடியாதபடி தடுக்கிறது.

மைக்கண்ணனுக்குச் சூடாவிடம் இரக்கம் பிறக்கத்தான் செய்தது. பிறந்து பயன்? பதக்கம் வேண்டாம், எடுத்துக் கொள் என்று கூறிவிட்டானா? பதக்கத்தைக் கண்டதும், பழைய கடனைத் தீர்த்து விடலாம். புதுத் துணி வாங்கலாம், ஆறு மாதம் முழுகாதிருக்கும் மனைவி கேட்ட சேலையை வாங்கிவிடலாம். முடியுமானாலும் குந்தக் குடிசையும் வாங்கலாம் என்று திட்டம் உதித்துவிட்டது. இரக்கம், இடையிலே தலை தூக்கிற்று. மறு விநாடி செத்தது! சூடா மறுபடியும் அதைப் பிழைக்க வைத்தாள்.

“ஐயோ! பதக்கத்தை நான் தங்களிடம் தரப் பயந்தேன் தெரியுமா? என் கணவர், ஒரு கொள்ளைக் கேஸ் விஷயமாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு ஆள், என்னை வழியிலே கண்டு, கோயிலிலே கொள்ளை அடித்த பதக்கம் உன் வீட்டிலே இருக்கிறது. அதை ஒளித்துவிடு; இல்லையானால், உன் கணவருக்கு ஆபத்து நேரிடும் என்று சொன்னான். நான் நம்பவில்லை! இந்தப் பதக்கமோ இதற்கு முன்பு நான் கண்டதில்லை; வீட்டிலே இன்று பெட்டிகளைப் புரட்டிப் பார்த்தேன். இந்தப் பாழும் பதக்கம் இருந்தது. இது வெளியே தெரிந்தால், என் புருஷனுக்கு ஆபத்துவரும். ஆகவே இதை எங்காவது கிணற்றிலே, குட்டையிலே வீசிவிடலாம் என்று எண்ணினேன். நீங்கள் யாரோ தெரியவில்லை. உங்களை நான் என் குலதெய்வமாகக் கும்பிடுவேன். எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். இந்தப் பதக்கத்தைக் கொடுத்துவிடும். நான் இதற்குப் பதிலாக ஈடாக என்ன வேண்டுமானாலும் தருகிறேன்” என்று கூறினாள். மறுபடியும் அந்த இரக்கம் புகுந்து குடையத் தொடங்கிற்று மைக்கண்ணனை.

“இதோ பார்! நீலிவேஷம் போட்டு என்னை ஏய்க்க முடியாது. இந்தப் பதக்கத்தைப் போலீசுக்குத் தந்து, உன் புருஷனைச் சிக்கச் செய்யக் கூடாது. அவ்வளவுதானே நீ சொல்வது? சரி! அப்படி நேரிடாதபடி பார்த்துக் கொள்கிறேன், போதுமா?” என்று கேட்டான் மைக்கண்ணன்.

“அது எப்படியப்பா முடியும்? நீ இந்தப் பதக்கத்தை விற்கப் போவாய். கடைக்காரன் சந்தேகிப்பான். போலீசுக்குத் தெரிந்துவிடும்; பிறகு என் புருஷருக்கு ஆபத்துவரும்” என்றாள் சூடா.

“என்னடா இது! பெரிய தொல்லையாகி விட்டது. இந்தப் பதக்கத்தை நான் விற்கப் போவதில்லை. தெரிகிறதா?” என்று மைக்கண்ணன் கோபமாகப் பேசினான். அந்தக் கோபம், சூடாவினால் உண்டானதல்ல. அவன் மனதிலே குடைந்து கொண்டிருந்த இரக்கத்தினால் பிறந்தது. “விற்கப் போவதில்லையானால், இதை எடுத்துப் போவானேன்?” என்று சூடா கேட்டாள்.

“உன்னிடம் வாயாடிக் கொண்டிருக்க முடியாது என்னால். இந்தப் பதக்கத்தால் உன் புருஷனுக்கு ஆபத்து வராது என்று மட்டுந்தான் சொல்லுவேன். நீ நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி; வீணாகக் கூவினால், நாலு பேர் வருவார்கள். வந்தால் ஆபத்து எனக்கில்லை. உனக்குத்தான். அதைத் தெரிந்து கொண்டு நட” என்று கூறிவிட்டு மைக்கண்ணன் போய்விட்டான்.