அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாம்
1

திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 1 ஆண்டாக நாட்டிலே பணி புரிந்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு உங்கள் பலருக்குத் தெரியும். வரலாற்றுத் தொடர்பில்லாத இன்று நேற்று முளைத்த புதுக்கட்சி அல்ல அது. சென்ற 25 ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைக் கழகம் என்னும் அறிவியக்கம் சமுதாயத்தில் படர்ந்திருக்கும் மூட நம்பிக்கைகளை முறியடிக்கவும், பழங் கொள்ளைகளைப் போக்கவும், பகுத்தறிவைப் பரப்பவும் உண்டாக்கப்பட்டது. அது அப்பொழுதிருந்த ஜஸ்டிஸ் கட்சியையே சுயமரியாதைக் கழகம் எடுத்து நடத்த ஆரம்பித்தது. ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் பெரும் பணக்காரர்கள், பதவி வேட்டையாடுபவர்கள், பட்டமோகம் பிடித்தவர்கள் படாடோபக்காரர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் துணை போகுவார்கள். இலட்சியப்பற்று இல்லாதவர்கள் இவர்களுடன் சேர்ந்து ஏழைகளுக்கு சேவை செய்வது முடியாத காரியம் என்று நாங்கள் சொன்னோம். சொன்னதற்காக எங்களையெல்லாம் அன்னக்காவடிகள், அரசியல் தெரியாதவர்கள், சுயமரியாதைச் சூறாவளிகள் என்று கூறி இவர்களை ஒழித்துவிட வேண்டும் என்று ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சல்லடம் கட்டினர்.

அவர்கள் சல்லடத்தை 1944 ல் சேலத்தில் நாங்கள் கூடி முறியடித்து அந்தப் பழம் புள்ளிகளை ‘கிழப்புலிகளை’ பெரும் தலைவர்கள் எனப்பட்டோரை கட்சியிலிருந்து விரட்டிவிட்டு சுயமரியாதைக் கழகத்தை திராவிடர் கழகமாக்கினோம். அதன்பிறகு ஒரு ஆண்டுக்கு முன் தலைவருக்கும் எங்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் தனியாகப் பிரிந்தோம். தனிக்கழகம் அமைத்தோம். அதன் பெயர்தான் திராவிட முன்னேற்றக் கழகம்!

திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 1 ஆண்டுகளாக 20, 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் எந்த சமுதாய சேவையைச் செய்து வந்ததோ அதே சேவையைத் தான் இப்பொழுதும் செய்து வருகிறது. ஆனால் நாங்கள் இப்படி தேவை ஏற்பட்டபோது இலட்சியம் நிறைவேற வேண்டி கழகத்தை திருத்தியும், மாற்றியும் வேறு பெயர் இட்டும் கழகத்தை திருத்தியும், மாற்றியும் வேறு பெயர் இட்டும் கழகத்தை வளர்த்திருக்கும் விதத்தை காங்கிரஸ் தலைவர்கள் ஊர் ஊராய் போகுமிடமெல்லாம் “இவர்கள் அடிக்கடி உருமாறுபவர்கள், கட்சி மாறுபவர்கள்” என்று திரித்துக் கூறுகிறார்கள். இதை நாங்கள் எப்படி கருதுகிறோம் என்றால் முதலில் ஓட்டு வீட்டில் இருந்தோம், பிறகு மாடி வீடு கட்டினோம், பிறகு மறுமாடி வைத்தோம். இப்பொழுது மூன்றாவது மாடி கட்டி அந்த மேல் மாடியிலே உலவுகிறோம். அதிலே எங்களுக்கு அளவு கடந்த மனத்திருப்தி. காரணம் கட்சி அவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்றால் 1 ஆண்டில் நமது கட்சியை அழித்தால் தான் ஆட்சி செய்ய முடியும் என்று காங்கிரஸ்காரர்களும், சர்க்காரும் யோசிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

அவ்வளவு வளர்ச்சியும், பணபலமில்லாமல், பத்திரிகைகள் உதவியில்லாமல் பெரிய மனிதர்கள் தயவில்லாமல், சாதாரண மக்களின் ஆதரவைக் கொண்டு, வாலிபர்களின் துணைக்கொண்டு கல்லூரிக் காளைகள், பள்ளி ஆசிரியர்கள், நடுத்தர வகுப்பினர் இவர்கள் காட்டும் ஆர்வத்தைக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்திருக்கிறது. கழகம் ஆரம்பித்த 1 ஆண்டிற்குள் தோழர்களின் முயற்சியாலும், நண்பர்களின் ஆதரவின் பயனாலும் இதுவரை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சுமார் 600 கிளைக் கழகங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கின்றன. கோவை போன்ற பெரிய நகரங்களில் மாத்திரமல்ல, ஆனைமலை போன்ற மலைப் பிரதேசங்களில், திருவாங்கூர்-கொச்சி போன்ற கடற்கரையோரப் பிரதேசங்களில், சித்தூர், பல்லாரி போன்ற வடமாவட்ட பிரதேசங்களில் மலேயா, சிங்கப்பூர், இலங்கை போன்ற கடல் கடந்த பிரதேசங்களில் நமது கழகங்கள் இருக்கின்றன. வாடையனென்றும் கோடையென்றும் பாராமல் இடைவிடாமல் நாள்தோறும் நமது தோழர்கள் செய்து வந்த பிரச்சாரத்தின் பலனாய் பட்டி தொட்டிகளிலும் இன்று பகுத்தறிவு மணம் வீசுகிறது.

நம்மிடையே நாலு, ஐந்து வாரத் தாள்கள் இருக்கின்றன. ஏதோ நம்மிடமும் ஒரு தினசரி இருக்கிறது என்று சொல்லிக்கொள்கிற அளவிலேதான் இருக்கிறது. அவ்வளவுதான் நம்மிடம் வள்ளல்கள் இல்லை. அடிக்கடி பணம் கொடுத்துதவ! பின்னே எப்படி தேவைக்கு பணம் கிடைக்கிறது என்று கேட்கலாம். நாங்கள் நாடகம் போட்டு நாட்டு மக்கள் காட்டும் ஆர்வத்தின் பயனாக வரும் காசுகளைக் கொண்டு காரியம் ஆற்றுகிறோம். சென்னையில் கழக அலுவல்களைக் கவனிக்கத் தலைமை காரியாலயம் ஒன்று கட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து நாடகங்களை நடத்தியதில் 25000 ரூபாய் கிடைத்தது. சென்னை நகரத்திற்கு நமக்கென்று ஒரு ஒலிபெருக்கி வேண்டும் என்று ஒரு நாடகம் போட்டோம் 3000 ரூபாய் கிடைத்தது. ஒரு பெரிய ‘மைக்’ வாங்கி வைத்திருக்கிறோம். நமது வழக்குகளை நடத்த வக்கீலுக்கு பணம் வேண்டும் என்று ஒரு நாடகம் போட்டோம் ரூ.1500 கிடைத்தது. குன்றத்தூர் வழக்கை நடத்த வக்கீல்கள் அமர்த்தப்பட்டிருக் கிறார்கள். இந்தக் கணக்கை எல்லாம் சொல்லுவதேனென்றால், சாதாரண மக்களின் துணைகொண்டே கட்சியை நன்றாய் வளர்க்க முடியும் என்பதை வாலிபர்கள் உணர வேண்டும். ‘அன்னக்காவடிகள்’ தரும் ஆதரவு பணக்காரர்கள் தரும் ‘செக்கை’ விட ஜமீன்தாரர்கள் தரும் பணமுடிப்புகளை விட விலையுயர்ந்தவை. வலுவுடையவை என்பதை வாலிபர்கள் உணர வேண்டும் என்பதற்காக!

திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் கண்டு மாற்று கட்சிக்காரர்கள் மருட்சியடைகிறார்கள். ஊர் ஊராய் சுற்றுகிறார்களே, மாநாடு கூட்டுகிறார்களே! திரள் திரளாய் மக்களும் கூடுகிறார்களே, தீர்மானம் போடுகிறார்களே, மக்கள் மனம் மாறி விடுவார்கள் போலிருக்கிறதே என்று காங்கிரஸ்காரர்கள் ஆயாசப்படுகிறார்கள். சர்க்காரைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள் இவர்கள். புது தேர்தல் திட்டம் தீட்டுகிறார்கள் இவர்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். சர்க்கார் நாம் போகுமிடமெல்லாம் ஒற்றர்களை கூடவே அனுப்பி குற்றம் கண்டுபிடிக்கச் சொல்லுகிறது.

சர்க்கார் மாற்றுக் கட்சியை வரவேற்க வேண்டிய இந்த நேரத்தில் மாற்றுக் கட்சியைக் கண்டு மருட்சி அடைகிறது. இந்த நாட்டு மக்கள் இப்பொழுது சுதந்திர பூமியில் வாழ்கிறார்கள்! இது மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் காலம் அரச பரம்பரையினர் ஆளும் காலம் மாறி சாதாரண மக்கள் ஆளும் காலம் பணக்காரர்கள் மட்டும் ஆளும் காலம் அல்ல பாட்டாளிகளும் பாராளும் காலம் மதோன்மத்தர்கள் ஆளும் காலத்தில் அல்ல. மக்கள் ஆளும் காலத்தில் நாம் இருக்கிறோம். வெளி நாட்டான் நம்மை ஆளவில்லை. நம் நாட்டாரே நம்மை ஆள்கிறார்கள். இப்பொழுது நடப்பது வெள்ளைக்காரன் சர்க்கார் அல்ல-நம்முடைய சர்க்கார்! சுருக்கமாகச் சொன்னால் நம்மை நாமே ஆள்கிறோம். இதை அரசியல் இலக்கணத்தில் ஜனநாயகம் அல்லது குடி அரசு என்பார்கள்.

நாம் அடிமை ஆட்சி அழிந்துபோய் குடியரசு ஆட்சி நடக்கும் உன்னத சகாப்தத்தில் வாழ்கிறோம். அதாவது இந்திய உபகண்டத்திலிருந்து வெள்ளைக்காரர்கள் விரட்டப்பட்டு யூனியன் ஜாக் பறந்த இடத்தில் ‘நமது கொடி பறக்கிறது-நமது நாட்டு தூதுவர்கள் உலகத்தின் பல பாகங்களிலும் உலாவுகிறார்கள். பாரிசில் நமது தூதுவர்கள் உண்டு-அமெரிக்காவில் நியூயார்க்கிலே நமது தூதுவர்கள் வலம் வருகிறார்கள். ஜெர்மனியிலே இருக்கிறார்கள் இத்தாலியிலே காண்கிறோம்- மாஸ்கோவிலே பார்க்கிறோம், சீனாவிலே இந்தோனேஷியாவிலே உலாவுகிறார்கள்! அகில உலகிலும் பரிபாலனம் செய்யப்படும் நாடுகளின் பெருநகரங்களிலெல்லாம் நமது தூதுவர்கள் உலவுகிறார்கள். இது மிக மிக உயர்ந்த நிலை. நாம் ஒரு நாட்டு மக்கள் இருக்க வேண்டிய பொற்காலத்தில் இருக்கிறோம் என்று பொருள்.

ஜனநாயக ஆட்சி நடக்கும் இந்த நேரத்தில்தான், ஆட்சி சரியாக நடக்கிறதா, தப்பாக நடக்கிறதா என்று பார்க்கும் பொறுப்பும், தப்பாக நடந்தால் தவறை எடுத்துக்காட்டும் கடமையும் மக்களுக்கு அதிகமாகிறது. மாற்றுக்கட்சி இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

மோட்டார் நன்றாக ஓட அதை ஓட்ட விசை இருந்தால் மாத்திரம் போதாது-அது தவறான வழியில் சென்றால் தடுக்க ‘பிரேக்கும்’ வேண்டும். நாடு செழிக்க நல்ல ஆறு இருந்தால் மட்டும் போதாது-அதிலிருந்து வெள்ளம் புரண்டு ஊரை அழித்து விடாமல் இருக்க கரை வேண்டும்! நல்ல காளையை ஓட்ட சிறு சவுக்கு இருந்தால் மாத்திரம் போதாது-அதை கிழிக்கேயும் மேற்கேயும் திருப்ப மூக்கணாங்கயிறும் வேண்டும்! வீட்டிற்கு வாயிற்படி இருந்தால் மாத்திரம் போதாது-வாயிற்படிக்கு கதவு வேண்டும், கதவுக்கு தாழ்ப்பாளும் வேண்டும்! அதுபோலவே ஜனநாயக காலத்தில்-குடியரசு வந்தபிறகு நாட்டில் நல்லாட்சி நடக்க வேண்டுமானால் ஆளும் கட்சி ஒன்று இருந்தால் மாத்திரம் போதாது, மாற்றுக் கட்சியும் இருக்க வேண்டும். மாற்றுக்கட்சி இல்லாத ஜனநாயக சர்க்கார், பிரேக் இல்லாத கார், கரை இல்லாத ஆறு, மூக்கணாங்கயிறு இல்லாது மாடு! ஆகவே, ஆளும் கட்சிக்கு அது அடக்குவாரற்று அக்கிரமம் செய்யும் கட்சியாக மாறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள ஒரு மாற்றுக் கட்சி தேவை. ஜனநாயக காலத்தில் ஆளும் கட்சி மாத்திரம் இருந்தால் அது ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் தனது கட்சித் தோழர்களைப் பாராட்டவும், அத்தோழர்கள் ஆட்சியில் குறை ஏற்பட்டால் அக்குறையை மறைக்கவும் பயன்படுமே தவிர மக்களின் குறையை சர்க்காருக்கு எடுத்துக்கூறி அதைப் போக்கப் பயன்படாது. மாற்றுக்கட்சி இருந்தால்தான் அது, ஆட்சியும் ஆட்சியும் செய்யும் கட்சியும், அநீதி இழைக்கும்பொழுது அதை கண்டிக்கவும், அப்படிக் கண்டிக்க மக்கள் அச்சத்தாலோ, அறிவின்மையாலோ மறந்திருந்தாலும் அவர்களை கண்டிக்கும்படி தூண்டவும் பயன்படும். இப்படி ஜனநாயக காலத்தில் சர்க்காரின் காரியங்களை கவனிப்பது மக்களுக்கு இருக்கும் மகத்தான பொறுப்பாகும்! குறைகள் இருந்தால் கண்டிக்கவும் தேவையிருந்தால் சர்க்காரையே மாற்றியமைக்கவும் உரிமை உண்டு மக்களுக்கு, என்பதை உணர்த்தும் மாற்றுக் கட்சி செய்ய வேண்டிய மகத்தான பணியை திராவிட முன்னேற்றக்கழகம் செய்து வருகிறது.

நாட்டை ஆள்பவர்கள் தேசியவாதிகளல்லவா? உண்மை கதர்கட்டுபவர்களல்லவா? மறுக்கவில்லை ராட்டை சுற்றியவர்களல்லவா? சந்தேகிக்கவில்லை! தடியடிபட்டவர்கள் வருத்தப்படுகிறோம்! சிறை சென்றவர்கள் பாராட்டுகிறோம் அதற்காக, சிலர்கள் நீங்கள் தீயதே செய்ய மாட்டீர்கள் என்று நாங்கள் நம்ப வேண்டுமா? எப்படி நம்புவது? ஏன் நம்ப வேண்டும்?
நல்லது செய்தீர்கள் பாராட்டுகிறோம். கெட்டது செய்தீர்கள் வருத்தப்பட்டோம்; திருத்த முயற்சித்தோம். கதர் கட்டியவர்கள் இவர்கள்; செய்வதெல்லாம் நல்லவையாகவே இருக்கும் என்று சொன்னால் நம்பமாட்டோம். காவி உடுத்தியவர்களையே நம்பாதவர்கள் நாங்கள். ஏன்? காவியுடுத்தியவர்கள் காமுகரானதைக் கண்டிருக்கிறோம். கமண்டலம் ஏந்தியவர்கள் காதகராகிவிட்டதைப் பார்த்திருக்கிறோம். மடாலயங்களிலே மடாதிபதிகள் சுத்தஞானத்தைத் தேடுவதற்குப் பதிலாக “ஞானம்” என்ற பெயருடைய பெண்ணைத் தேடி அலைவதைப் பார்த்திருக்கிறோம். இப்படி காவியுடுத்தியவர்களையே சந்தேகிக்கிறவர்கள் நாங்கள் கதர் கட்டியவர்களை சந்தேகிக்காமலா விடுவோம்! ஆலயங்களிலே உள்ள காவியணிந்தவர்களைக் கண்டிக்கும்பொழுது ஆட்சியிலே உள்ள கதருடுத்திய காங்கிரஸ்காரர்களைக் கண்டிக்கக் கட்டாயம் எங்களுக்கு உரிமையுண்டு. சர்க்காரர்களைச் சந்தேதிக்கவும், கண்டிக்கவும் மக்களுக்கு உரிமை இருக்கிறது. இதை மக்கள் உணர வேண்டும். நாம் காவியுடத்தியவர்கள் போக்கை நன்றாக கவனிக்க வேண்டும். காவியுடுத்திருப்பீர்கள்-மார்பிலே உருத்திராட்ச மாலையிருக்கும். மடியிலே விபூதி பையிருக்கும். நாவிலே தேவாரம் இருக்கும். இவ்வளவு இருந்தும் இவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை! ஆகவே அவர்கள் நல்லவர்களாய் இருப்பார்கள் என்று நம்பிவிடக்கூடாது. காவியுடுத்தியவர்களின் நாணயத்தை மாலை 5 மணி முடிய மட்டும் பார்த்தால் போதாது. மாலை மயங்கிய பின், அந்தி சந்திகளில் அவர்களைக் கவனிக்க வேண்டும். எந்தப்பக்கம் மறைகிறார்கள், மாலை திருவாசகத்தை வைத்துக்கொண்டு எந்த தெருவில் நுழைகிறார்கள், ருத்திராஷக் காயை தடவிக்கொடுத்துக் கொண்டு எந்த வீட்டில் புகுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்! கோவிலுக்குப் போகிறார்களா, கோமளவல்லி வீட்டிற்கு போகிறார்களா என்று கவனிக்கவேண்டும்! வேலனை வணங்குகிறார்களா, வேல்விழியானை வணங்குகிறார்களா என்று பார்க்க வேண்டும்! அதைப்போலவே மக்கள் நாட்டை ஆள்பவர்கள் காங்கிரஸ்காரர்களாயிருந்தாலும், கதர் கட்டியவர்களாயிருந்தாலும் தியாகிகளாயிருந்தாலும், தேசீயவாதிகளாயிருந்தாலும், எவராயிருந்தாலும் நன்றாய் ஆள்கிறார்களா மனிதர் உரிமைகளை மதிக்கிறார்களா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும். கவனிப்பது அவர்கள் கடமை.

இந்த காளைக்கு நான் தான் புல் போட்டேன். வைக்கோல் தந்தேன், இதன் முகத்தை தடவிக் கொடுத்தேன், இதன் கொம்பை என் கையாலேயே சீவினேன் நானே அதற்கு வர்ணமும் தந்தேன் என்று சொல்லப்பட்ட காளை அவனையே முட்ட வந்தால் அதன் கொம்பு அவனை குத்தாமலா விடும்? அல்லது கூரிய கொம்பு நான் சீவிய கொம்பு என்னை அது குத்தாது என்று எந்த புத்திசாலியாவது நம்புவானா? நம்ப மாட்டான்.