அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாம்
4

ஆகவே இதிலிருந்து என்ன தெரிகிறது. மக்கள் எதைச் சொன்னாலும் காரணமில்லாமல் நம்ப மாட்டார்கள். மக்கள் நாம் சொல்லுவதை நம்புகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம் என்று சர்க்காரும் காங்கிரஸ் தலைவர்களும் யோசிக்க வேண்டும். நாம் மக்கள் உள்ளத்தில் ஊடுறுவும் எண்ணங்களைச் சொல்கிறோம். உணவுப் பஞ்சத்திற்குக் காரணம் என்ன என்கிறார்கள். நாம் காரணம் சொல்கிறோம். மக்கள் உடையில்லையே என்று உருகுகிறார்கள். நாம் உடைபெற வழி இதோ என்ற சொல்கிறோம். இந்த மாகாணத்தில் உற்பத்தியாகும் நூல் இங்குள்ள நெசவாளிக்குப் போகாதா என்று கேட்கிறார்கள். நாம் அதை வடநாட்டுக்கு அனுப்பாமல் இந்த மாகாணத்திலுள்ள நெசவாளிகளுக்கு விநியோகித்தால் போதும் என்கிறோம். ஆட்சி சரியாயில்லையே என்று திகைக்கிறார்கள். நாம் ஆட்சி அலங்கோலமாகிவிட்டதைக் காட்டுகிறோம். அவர்கள் எதிர்பார்ப்பதைச் சொல்கிறோம். அவர்கள் ஏக்கம் குறைகிறது. இதுதான் நாம் சொல்வதை அவர்கள் கேட்பதற்குக் காரணமானதை தவிர வேறொன்றுமில்லை. இல்லையென்றால் 1 வருட காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 600 கிளைக் கழகங்கள் ஏற்பட முடியுமா? கட்சி இவ்வளவு தூரம் வளரவும் பலமடையவும் முடியுமா?

சீமான்கள் தயவு இந்தக் கழகத்திற்கு இருக்கிறதா? 1000, 2000 தருகிறார், ஆகவே அவர் நெற்றியிலே விபூதி இருந்தால் பரவாயில்லை என்று சொல்கிறோமா? 1000,2000 கொடுத்துவிட்டு அடுத்த நாள் பூசாரி ஆகுபவர்களை விட நெற்றியிலே நீறு பூசிக்கொள்ளாதவர்களைத்தானே நாம் நமது தோழர் என்று மதிக்கிறோம். கொள்ளை லாபம் அடிப்பவர்கள், கள்ளமார்க்கெட், கொட்டியளப்பவர்கள், மிட்டா மிராசுகள் இவர்களில் யாராவது அண்டவிடுகிறோமா? அப்படியிருந்தும் எங்கள் கழகம் வளர்கிறது என்றால் அதிலே உள்ள ஜீவசக்திதான் அதற்கு காரணம்.

மக்கள் நம் மயக்க மொழியில் விழுந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்ளும், மந்திரிகளும் கூறுகிறார்களே, மக்களை மயக்க நாம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரா? அல்லது ஆண்டவன் முதலடி எடுத்துக்கொடுக்க இரண்டாவது அடிபாடும் அளவுக்கு ஆண்டவனின் அருளைப் பெற்றாரா? எல்லோரையும் போல சாதாரணமானவர்கள் சாமானியமானவர்கள்!
நாம் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள், நாம் எழுதுவதை மக்கள் போற்றுகிறார்கள், நாம் பேசுவதை கேட்டு மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும். வீட்டிலே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை திடீரென வீட்டை விட்டு வெளியே வந்து வழி தவறி வீதியின் நடுவே போகும் போது அதை ஒரு கார் அரைக்க வந்த நேரத்தில் வழியில் போன ஒருவர் அந்த குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றி அதை தூக்கிக்கொண்டு போய் குழந“தையின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்து உங்கள் குழந்தை வழி தவறி சென்ற நேரத்தில் ஒரு காரில் அரை பட இருந்தது. நல்லவேளையாக நான் காப்பாற்றினேன். இல்லையென்றால் இந்நேரம் குழந்தை இறந்து போயிருக்கும் என்று சொன்னவுடன் குழந்தையின் சொந்தக்காரர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள் அல்லவா? அதே போல், நான் உங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வழி தவறி போய்விட்ட ‘திராவிடம்’ என்னும் குழந்தை வீட்டிலிருந்த திடீரென வெளியே வந்த குழந்தை வீதியிலே போகும் காரிலே சிக்கி அரைபட இருந்தது போல், ஆரிய மாயை என்னும் பயங்கரயந்திரத்தில் அகப்பட்டு மாள இருந்த நேரத்தில் நான் அதை தப்புவித்து அதைக்கொண்டு வந்த “திராவிடத்தைக்” காணாமல் தவிக்கும் பெற்றோர்களாகிய மக்களிடம் கொடுத்து “பார்த்தீர்களா” உங்கள் குழந்தையை உங்கள் குழந்தையை உங்கள் அருமை குழந்தை ஆரிய மாயை என்னும் பெரிய இயந்திரத்தில் அகப்பட்டு மாள இருந்தது என்று சொல்ல நல்லவேளையாக நீங்கள் காப்பாற்றினீர்கள். இல்லாவிட்டால் இந்நேரம் இறந்து போய் இருக்கும் என்று கூறி மகிழ்ச்சி அடைகிறார்கள். பிள்ளையை ஆபத்திலிருந்து தப்புவித்து திரும்பி அவர்களிடமே பிள்ளையை ஒப்படைத்தவரிடம் எப்படி மகிழச்சியடைவார்களோ, அப்படித்தான் நான் ஆரிய மாயையில் சிக்கி மாள வேண்டியிருந்த திராவிடத்தைக் காப்பாற்றி மீண்டும் கொண்டு வந்து மக்களிடம் காட்டும்போது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று சொல்ல முடியுமே தவிர வேறு என்ன சொல்ல முடியும். வேறு என்ன காரணம் இருக்கிறது சொல்ல?

இதற்கு முன்பு பஞ்சம் வந்திருந்தால் நாட்டை வெள்ளைக்காரன் ஆள்கிறான். வெளி நாட்டான் ஆள்கிறான், அன்னிய நாட்டுக்கொடி பறக்கிறது. ஆட்சி நடக்கிறது-அதனால் தான் பஞ்சம் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். இப்பொழுது நடக்கிறது நமது ஆட்சி, யூனியன் ஜாக் பறந்த இடத்தில் நமது மூவர்ணக்கொடி பறக்கிறது. இப்பொழுது அயல்நாட்டானும் ஆளவில்லை, அந்நியன் கொடியும் நமது கோட்டை மதிற்சுவர்ளில் பறக்கவில்லை. அப்படியிருந்தும் ஏன் இன்று பஞ்சம்? பஞ்சம் இந்தியாவில் இல்லை என்று எந்த காங்கிரஸ்காரராவது விரலை மடக்க முடியுமா? பட்டினியால் மக்கள் சாகிறார்கள் இன்றும் என்பதை இல்லையென்று எந்த மந்திரியாவது கூற முடியுமா?

வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இவ்வளவு பஞ்சமில்லையே. ஏதாவது வெள்ளைக்காரர்கள் காலத்தில் செலுத்தின வரிகளை இப்பொழுது இவர்கள் ஆட்சியில் செலுத்தாமல் இருக்கிறோமா? அவன் காலத்தில் செலுத்தி வந்த அத்தனை வரிகளையும் அதற்கு மேலும் இப்பொழுதும் செலுத்திக் கொண்டுதான் வருகிறோம். நிலம் இருந்தால் நிலத்திற்கு வரி, வீடு இருந்தால் வீட்டுக்கு வரி, தொழில் இருந்தால் தொழில் வரி, வருமானத்துக்கு வரி, விற்பனைக்கு வரி, உபயோகிக்கும் தேயிலைக்கு வரி, குடிக்கும் காப்பிக்கு வரி, உபயோகிக்கும் ரப்பருக்கு வரி, போடும் புகையிலைக்கு வரி முன்பிருந்த அவ்வளவு வரிகளையும் ஒன்று விடாமல் செலுத்துகிறோம். சர்க்காரும் வசூலிக்காமல் விடுவதில்லை. இருந்தும் அழுகிறோம் அரிசியில்லாமல், ஆடையில்லாமல், அதுதான் ஆச்சரியம் ஏன்? இந்தக் கேள்வியை மக்கள் சர்க்காரைப் பார்த்து கேட்க வேண்டும். பதில் கூற வேண்டியது நாமல்ல, சர்க்கார்!

வெள்ளையன் கொள்ளைக்காரன், வெள்ளையன் அந்நியன் மேலும் அவனது ஆட்சியில் பயங்கர உலகப்போர் நடந்தது. அப்படியிருந்தும் அந்த சூழ்நிலையில் அவனுக்கு மாத்திரம் எப்படி பஞ்சத்தைப் போக்க முடிந்தது? துணி வேண்டிய அளவுக்கு கொடுக்கத்தானே எப்படி முடிந்தது?

சென்ற யுத்தம் நடந்த காலத்தில் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழ்ந்து விடும், பட்டணம் பகைவர் வசமாகிவிடும் என்ற பயங்கர பீதி நாட்டிலே இருந்தது. ஆனால் பஞ்சமில்லை. அந்த நேரத்திலும் அந்நியர்களால் முடிந்தது. இவர்களால் இப்போது ஏன் முடியவில்லை? இதற்கு பதில் கூற வழியில்லை! திராவிட முன்னேற்றக்கழகத்தார் விஷயத்தைத் திரித்து கூறுகிறார்கள். இருக்கும் நிலைமைக்கு தப்பான விளக்கம் தருகிறார்கள். அவர்கள் மயக்க மொழியில் மக்கள் விழுந்து விடக்கூடாது என்று மாத்திரம் சொல்ல முடிகிறது!

காங்கிரஸ் சர்க்காரால் உணவுப் பஞ்சத்தைப் போக்க முடியவில்லை. 16 அவுன்ஸ் அரிசி கொடுக்க முடியாது என்கிறார்கள் என்று சொன்னால் நீ கொடுப்பாயா 16 அவுன்ஸ் என்று கேட்டால் அது அக்ரமமானது! நாம் ரோட்டில் போகிறோம் நம்மீது உராய்வது போல் ஒருவன் கார் ஓட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோம். நாம் கார் ஓட்டுகிறவனைப் பார்த்து “கொஞ்சம் பார்த்து ஓட்டப்பா” என்றால் நல்லவனாயிருப்பவன் “சரி ஆகட்டும்” என்பான். அவசரமாக போகிறவனாயிருந்தால் பேசாமலே வேகமாகப் போய் விடுவான். கோணல் புத்தியுள்ளவன் தான் மோட்டாரை நிறுத்திக் காரை விட்டு இறங்கி நம்மை ஏற இறங்கப் பார்த்து “நீ ஓட்டு காரை” என்பான். அது மாதிரி சர்க்காரைப் பார்த்து “நீங்கள் சரியாக ஆளவில்லை, கொஞ்சம் அறிவுடன் நடந்து கொண்டிருந்தால் இந்த அரிசிப் பஞ்சம் இருக்குமா? என்று கேட்டால் “நீ தருகிறாயா, ஆளுக்கு ஒரு மூட்டை” என்று நம்மை கேட்கிறார்களே நாம் அரிசி கிடங்கு வைத்திருக்கிறோமா அல்லது நாம் நந்தனார் பரம்பரையா? தில்லை நடராசப் பெருமான் அருளால் ஒரே இரவில் 40 காணி நிலத்தையும் உழாமல் விதைக்காமல் அறுத்து அந்தணர் வீட்டில் கொண்டு போய் சேர்த்து விட்டு ‘ஐயோ! மெத்த கடினம்’ என்று பாடியது போல் பாட அல்லது நம் வீட்டைச் சுற்றியா அரிசி கேட்கும் ஜனங்கள் நிற்கின்றார்கள்? நம்மிடமா அரிசிக்கடை சாவியிருக்கிறது? நமக்கா வரி செலுத்துகிறார்கள். நம் கட்சியா ஆளுகிறது?

கச்சேரி நடக்கிறது. பாடகர் பாடுகிறார். ரசிகர்கள் சுருதி சரியாயில்லை. தாளத்துக்கு ஒத்துவரவில்லை என்றால் நல்ல வித்துவான் “அப்படியா! ரசிகர்கள் பார்த்து ரசிக்கிற அளவுக்கு என் பாட்டு அவ்வளவு மட்டமாகவா போய்விட்டது.” என்று சுருதியைச் சரிப்படுத்திக் கொள்வார். “தம்பூரா இந்தா, நீ பாடு” என்று சொல்ல மாட்டார். வாழத் தெரியாத வித்துவான் தான் “என் சுருதி சரியாயில்லை, தாளத்துக்கு ஒத்துவரவில்லை என்று சொன்னாயே இந்தா நீயே பாடு” என்று தம்பூராவை நம்மிடம் தருவார். இதைத்தான் இந்த சர்க்காரும், காங்கிரஸ் தலைவர்களும் செய்கிறார்கள், அரிசி 16 அவுன்ஸ் தரமுடியவில்லையே என்றால் “நீ தருகிறாயா 16 அவுன்ஸ் அரிசி” என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

நம்மை “16 அவுன்ஸ் அரிசி தருகிறாயா, இந்த உணவுப் பஞ்சத்தை போக்க முடியுமா நூல் நெருக்கடியைத் தீர்க்க முடியுமா?” என்று கேட்கிறார்களே, மக்களிடம் “சுயராஜ்யம் வந்த”வுடன் நாட்டிலே தேனும் பாலும் ஓடும். தினைப்புனம் தெரியும், தினைப்புனத்திலே ஆலோலம்பாடும் வள்ளியின் குரல் கேட்கும். வேலன் வருவான், நமது வேதனை தீரும், வறுமை ஒழியும், வரிகுறையும் என்று நாமா கூறினோம்?

இன்னும் சில காஞ்சிரஸ்காரர்கள் வெள்ளைக்காரர் களிடமிருந்து காங்கிரஸ்காரர்களல்லவா நாட்டை மீட்டார்கள். அவர்களல்லவா நாட்டை ஆள தகுதியுடையவர்கள், இவர்கள் யார் நாட்டைப்பற்றி பேச என்று கேட்கிறார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைக்கட்டச்சொல்லி அதன் பொறுப்பை ஒரு கொத்தனாரிடம் கொடுத்தோம். நாம் சொன்னவாறே கொத்தனார் உண்மையுடன் திறமையாக, வகுப்பு அறைகள், விஞ்ஞான அறைகள், ஹாஸ்டல்கள், இசை மண்டபம், துணைவேந்தர் பங்களா, ஆசிரியர்கள் வசிக்குமிடம் எல்லாம் கட்டிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம், நாம் அவருக்கு என்ன செய்வோம்? பல்கலைக்கழகம், ஆரம்பிப்பதற்கு முன் கொத்தனாரைக் கூப்பிடுவோம், மாலை மரியாதை செய்வோம், தாம்பூலம் தருவோம், விருந்து வைபவம் நடத்துவோம்.

இதுதான் அவர்களுக்குச் செய்யவேண்டிய மரியாதை, முறை இதை நாம் அவருக்கு செய்தால், கொத்தனார் இதெல்லாம் எனக்கு வேண்டாம் எனக்கு துணைவேந்தர் பதவி வேண்டும் நான் கட்டிய பல்கலைக் கழகத்திற்கு நான் தான் “வைஸ்சான்சலராக” இருக்க வேண்டும் என்றால் யார் ஒத்துக் கொள்வார்கள்? கொத்தனாரின் போக்கை மக்கள் என்னவென்று எண்ணுவார்கள். கட்டிடம் கட்டியவன் தான் அதை ஆளும் கர்த்தாவுமாக வேண்டும்” என்று சட்டமில்லை. அதைப்போலவே நாட்டை மீட்டவர்கள்தான் அதை ஆளவும் வேண்டும் என்ற விதியில்லை.

சர்ச்சில் துரை சண்டைக்காலத்தில் இங்கிலாந்தை ஆபத்திலிருந்து காப்பாற்றினார். ஆனால் இப்பொழுது ஆளவில்லையே, அட்லி துரையல்லவா ஆள்கிறார் யுத்த காலத்தில் சர்ச்சில்தானே நமது நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றினார். ஆகவே அவரேதான் இப்பொழுதும் ஆள வேண்டும் என்று அந்த நாட்டு மக்கள் கூறவில்லை. யுத்த காலத்தில் யுத்தத்தையும் ஆபத்தையும் தடுக்க சர்ச்சில் சாதாரண காலத்தில் சமாதானத்தையும் சமதர்மத்தையும் பரப்ப அட்லி-கட்டடம் கட்ட கொத்தனார் அதை ஆள அதற்கு தகுதியான இன்னொருவர். தோட்ட வேலைக்கு தோட்டக்காரன் வீட்டு வேலைக்கு வீட்டுக்காரி அந்தந்த வேலையோடு அவரவர்கள் நின்று விட வேண்டும்.

நாட்டை மீட்டிட நாங்கள் உதை பட்டோம். உடைமையை இழந்தோம். உயிரைக் கொடுத்தோம். உண்மை! ஆனால் இவர்கள் யாரைக்காட்டி யாருக்காக நாட்டை மீட்டார்கள்? இந்தியாவிலுள்ள முப்பத்து முக்கோடி ஜனங்களில் நம்மை சேர்த்து அல்லவோ! இவர்கள் சுதந்திரம் கேட்கும் பொழுது நம்மைத் தள்ளிவிட்டு தனியாகவா சுதந்திரம் கேட்டார்கள்? கேட்டிருக்க முடியாது. பிறகு ஏன் நமக்கு சுதந்திரத்தைத் தர, சுகத்தைத் தர மறுக்கிறார்கள்?

“நாங்கள் தான் சுதந்திரம் வாங்கினோம், நாங்கள் தான் சுதந்திரம் வாங்கினோம்” என்று காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி கூறுகிறார்களே இவர்கள் தானா உலகத்திலேயே சுதந்திரம் பெற்றார்கள்? இவர்கள் பெற்ற இதே சுதந்திரத்தை பக்கத்திலுள்ள பர்மா பெறவில்லையா? பர்மாவும் பெற்றது ஆனால் பர்மாவில் காந்தியாரில்லை, கை ராட்டை இல்லை. சத்தியாகிரகம் நடக்கவில்லை, தண்டி யாத்திரையில்லை, சத்தியசோதனை யில்லை. சிலோன் சுதந்திரம் பெற்றது அங்கே சத்தியாகிரகம் நடக்கவில்லை, இந்தோனேஷியா சுதந்திரம் பெற்றது அங்கே சத்தியாகிரகம் நடக்கவில்லை. பிலிப்பைன் சுதந்திரம் பெற்றது, அங்கே சத்தியாகிரகம் நடக்கவில்லை. இந்தியாவைப்போலவே சுதந்திரம் பெற்ற இந்த நான்கு நாடுகளிலும் காந்தியார் இல்லை, சத்தியாகிரகம் நடக்க வில்லை. இருந்தும் அந்த நாடுகள் சுதந்திரம் பெற்றிருக்கின்றன. ஏன் இவர்கள் வாங்கிய அதே சுதந்திரத்தை ஜின்னா வாங்கவில்லையா? ஒருநாள் ‘லாக் அப்பில்’ இல்லாமல், ஆடை மெருகு குறையாமல், எகிப்து நாட்டு சிகரெட்டைத் துறக்காமல் ரோல்ஸ் ராய்ஸ் கார் சாவியை விடாமல் ராஜதந்திரம் என்னும் ஒரே ஆயுதத்தைக் கொண்டே தனி நாடு பெறவில்லையா? ஆகவே நாட்டை அந்நியனிடமிருந்து வாங்குவது ஒரு பெரியகாரியம் அல்ல. அதிலுள்ள மக்களுக்கு வாழ வழி வகுப்பதுதான் சிரமம். இனி இவர்கள் “நாங்கள்தான் சுதந்திரம் வாங்கினோம், ஆகவே நாங்கள் தான் ஆள்வோம்” என்று தம்பட்டம் அடிப்பதை நிறுத்திவிட்டு சுய ஆட்சியின் பலனை, சுதந்திரத்தின் பலனை, குடியரசின் பலனை, ஜனநாயகத்தின் பலனை மக்கள் அனுபவிக்க காங்கிரஸ் சர்க்கார் பாடுபட வேண்டும்.