அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

எட்டு நாட்கள்
1

‘எட்டு நாட்கள்! மரணத்துக்கும் அவனுக்கும் இடையே எட்டே நாட்கள் உள்ளன. தண்டனை தந்தாகியிட்டது. அவனைச் சுட்டெரிக்க, மாற்ற முடியாத தண்டனை - வேறு வழக்காடி நீதி கேட்கும் இடமும் கிடையாது - இன்று 1600-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் ஒன்பதாம் நாள் - எட்டு நாட்கள் உள்ளன, தண்டனை நிறைவேற்றப்பட! அவன் விரும்பினால், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். “ஐயனே! அடிபணிகிறேன், அஞ்ஞானத்தால் நான் உளறிவந்தேன் இதுநாள்வரையில். மெய்ஞ்ஞான போதகரே! என் பிழை பொறுத்திடுக! ‘என் பிழை பொறுத்திடுக!’ என்று சொன்னால் போதும், தண்டனை இல்லை, சாவு இல்லை, வாழலாம், சிறப்புறக்கூட வாழலாம்! வரவேற்புகளும் பதவிகளும் வழங்கப்படும்! திருவிழாக் கோலத்துடன் உலவலாம்! பட்டத்தரசர்கள் கட்டித் தழுவிக்கொள்வர் - பாதகாணிக்கைபெறும் குருமார்கள் அன்புமுத்தம் அளிப்பர் - மாளிகைகள் விருந்தளிக்கும்.

எட்டே நாட்கள் உள்ளன அவன் ஒரு முடிவுக்கு வர.

வாழ்வா? சாவா? என்ற முடிவு - அவனே இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அவன் கொல்லப்பட வேண்டியவன்தான் என்று, ஆச்சாரியாரும் கூறிவிட்டார், அரச மன்றமும் தீர்ப்பளித்துவிட்டது. எட்டு நாட்கள் தவணை தருகிறோம், என்று தீர்ப்பளித்தோர் கூறிவிட்டனர்.

ஆண்டு அனுவித்துவிட்டு, இனி ஆட அனுபவிக்க, இயலாத நிலையில் உள்ள படுகிழமல்ல - உலகம் மாயை, வாழ்வே அநித்யம், இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமில்லை என்று குளறும், காட்டு வேதாந்தியுமல்ல; வாழ்வா? ஏன்? வாழ்ந்து நான் சாதிக்கவேண்டியது என்ன இருக்கிறது என்று வேகம் குழப்ப நிலையுடையோனுமல்ல, நடுத்தர வயதுடையவன் - உலகுக்கு உண்மையை அளித்தாகவேண்டும் என்ற ஆர்வம் கொழுந்து விட்டெரியும் உள்ளம் படைத்தான் - அவனைக் கட்டிவைத்துக் கொளுத்திச் சாகடிக்க உத்தரவு பிறப்பித்தனர் - அற மன்றத்தினர் - ஆம்! அறமற்ற செயல் புரியினும், அறமன்றமென்றே அது அழைக்கப்பட்டது. அறம் மட்டுமல்ல, அன்பு எனும் சீரிய பண்பினைத் தன் அகத்தே கொண்டது என்றும், அந்த மன்றம் கருதப்பட்டு வந்தது.

அறம் எது? அன்பு எது? என்று மக்களிடம் எடுத்துரைக்கும் உத்தமன் அவன் - அவனுக்குத்தான் மரண தண்டனை - எட்டே நாட்கள் தரப்பட்டுள்ளன, முடிவுக்கு வர.

எட்டு ஆண்டுகள் சிறையிலே சித்திரவதைக்கு ஆளாகி, வேதனையால் கொட்டப்பட்டு, தலைமயிர் வெளுத்துப்போய், கண்ணொளி மங்கி, கைகால் சோர்வுற்று, உடலெங்கும் வெதும்பிக்கிடந்தான், - ப்ருனோ - இத்தாலி தந்த அறிவாளி!

ரோம் நகரச் சிறைக்கூடத்தில் தள்ளப்பட்டுக் கிடக்கும் அவன் முன், ஒரே பிரச்சனை நிற்கிறது, வாழ்வா, சாவா, என்று! அவன் வாழ்வது என்று முடிவுசெய்துவிட்டான் - எனவே அவனை எட்டாம் நாள் சுட்டெரித்து விட்டனர்!!

வாழ்வு! என்ன பொருள் அதற்கு? உண்டு உலவி, உறங்கி எழுந்து, மீண்டும் உண்டு உலவிடும் வேலையை ஒழுங்காகச் செய்யும் யந்திரமா, மனிதன்? ஆதிக்கக்காரன் அடிபணிந்து, ஆர்ப்பரிப்போன் பாதம்பற்றி, குற்றேவல் செய்து கும்பியை நிரப்பிக்கொண்டு, கொத்தடிமையாகிக் குடும்பம் சமைத்துக் கொண்டிருப்பதா வாழ்வு? எத்தனிடம் சித்தத்தை ஒப்படைத்துவிட்டு, ஏமாளியாகிக் கிடப்பதா வாழ்வு! அவன் அப்படி எண்ணவில்லை!! வாழ்வு, ஒருபெரும் பொறுப்பு, ஓர் அரும் வாய்ப்பு, உண்மையை அறிய, அறிந்ததன்வண்ணம் ஒழுக, பிறருக்கும் அந்த ஒழுக்கும் சழக்கருடன் போரிட்டு, அறமல்
லாததை, விரட்டி ஓட்டி அறத்தை நிலைநாட்டப் பாடுபடல் வேண்டும். வாழ்வு, அதற்கான ஒரு வாய்ப்பு! இந்தக் குறிக்கோளற்று இருப்பது, வாழ்வு அல்ல, என்று அவன் கருதினான். அவன்போல் ஒரு சிலரே எண்ணினர் - ஒரு சிலருக்கே அந்தச் சீரிய கருத்து இருக்க முடியும் - அந்த ஒரு சிலராலேயே உலகு, மெல்ல மெல்ல மாண்பினைப் பெறுகிறது.

அவன் அறிந்து போற்றிய ‘வாழ்வு’ அவனுக்குக் கிடைத்து விட்டது, கொடியோரால் அவன் சுட்டுக்கொளுத்தப்பட்டான் - இன்று வாழ்கிறான் - என்றும் வாழ்வான்! அவன், அப்படிப் பட்ட ‘வாழ்வு’ தேவை, என்று தீர்மானித்தான், எனவேதான், சாகச் சம்மதித்தான்.

“எட்டே நாட்கள்!” என்றனர்! உயிரை இழக்க எப்படி மனம் துணியும். ஒன்று, இரண்டு, மூன்று என்று நாள் ஓட ஓட, அவன் நெஞ்சம் நெருப்பிலிட்டது போலாகும், அஞ்சுவான், கெஞ்சுவான், அலறுவான், அடிபணிவான், என்று தீர்ப்பளித்தோர் எண்ணிக்கொண்டனர்! அவர்கள், சிறையிலே தள்ளப்பட்டுக் கிடந்தவனின் உள்ளத்தின் மேன்மையை உணர முடியாத உலுத்தர்கள்.

“அரசை இழந்துவிடச் சம்மதித்தால், உயிரோடு இருக்கலாம்” என்றால், அரசு இழக்கலாம், உயிர், இருக்கட்டும், உயிர் இருந்தால் புது அரசு கிடைத்தாலும் கிடைக்கும், இல்லை எனினும் பரவாயில்லை, குடும்பத்தாருடன் இனிது வாழலாம் என்றே, அரசாள்பவன் கூறுவான். அங்ஙனம் உயிர்தப்பினால் போதும் என்று மணிமுடியைக் கீழே வீசிவிட்டு ஓடின மன்னர்களின் கதையை அவன் அறிவான். அவனை அவர்கள் இழக்கச் சொன்னது.

“அறிவை!”

இயலாது, என்றான்; அறிவுவேண்டி நின்ற ஒரே குற்றத்துக்காக, அவனைச் சுட்டுக்கொல்வது என்று தீர்ப்பளித்தனர்.

அறிவு வேண்டுகிறேன் - என்பதை எப்படிக் குற்றச்சாட்டு ஆக்க முடியும்? எனவே, ப்ரூனோ ஒரு நாத்தீகன் என்று குற்றம் சாட்டப்பட்டான்.

நாத்தீகன்! இந்த ஒரு சொல்லைக் காட்டி, எத்துணைக் கொடுமைகளைச் செய்துள்ளனர்! எவரெவர்மீது அந்தச் சொல்லம்பு வீசப்பட்டது!

எது ஆத்தீகம்? எது நாத்தீகம்?

விளக்கம் தந்தனரா? இல்லை! எங்கு யார் ஆதிக்கத்தில் உள்ளனரோ அவர்கள் கொண்டுள்ள வழிபாட்டு முறையை ஏற்க மறுப்பவன், நாத்தீகன் என்று குற்றம் சாட்டப்பட்டான். வழிபாட்டு முறையை மட்டுமல்ல, ஆதிக்கத்திலிருக்கும், எந்தக் கருத்தை ஏற்க மறுப்பவனும், மாறுதலான கருத்தைக்கொள்பவனும் விள்பவனும் நாத்தீகர் எனப்பட்டனர்.

போப்பாண்டவரின் ‘ஸ்ரீமுக’த்தைத் தீயிலிட்டபோது மார்டின்லூதர், நாத்தீகனென்று, கத்தோலிக்க உலகினால் குற்றம் சாட்டப்பட்டார். அதேபோல, இங்கிலாந்தில் பிராடெஸ்டென்ட் மார்க்கம் அரச மார்க்கமான பிறகு, கத்தோலிக்கர்களை அங்கு ‘நாத்தீகர்’ என்று கூறினர்.

மார்க்க சம்பந்தமான பிரச்சனைகளில் மட்டுமல்ல, அன்று ஆதிக்கத்திலிருந்த மத ஏடுகளிலும் அவற்றைத் துணையாகக் கொண்டு தீட்டப்பட்ட மற்றத் துறைகள் பற்றிய ஏடுகளிலும் காணப்பட்ட கருத்துக்களுக்கு முரணான கருத்துகளைக் கொள்பவரை எல்லாம், நாத்தீகர் என்றே குற்றம் சாட்டினர் - கடும் தண்டனை தந்தனர் - சித்திரவதை செய்தனர்.

அரசு முறை, அதன் தொடர்பான அறமுறை, வரி வசூலிக்கும் முறை, சமுதாய அமைப்பு முறை நடை நொடி பாவனைகள், எனும் எதிலும் அரச மார்க்கத்தின் மத ஏடுகளில் உள்ளபடியே சொல்லும் செயலும் அமைந்திருக்கவேண்டும் என்றனர்.

மனிதன் மனிதனை அடிமையாகப் பிடித்து வைத்து, வேலை வாங்குவதும், சந்தைச் சதுக்கத்தில் ஆடுமாடுகள் போல் விற்பதும், கொடுமையானது, அநாகரிகமானது, அஃது அறமாகாது, என்று கருணையும் நேர்மையும் கொண்டவர்கள் வலியுறுத்திய போதுகூட, அந்த முறையீடு, நாத்தீகம் என்றே கூறப்பட்டது.

எனவே, ப்ரூனோ மீது நாத்தீகக் குற்றத்தை வீசியது, அன்றைய மனப்போக்கிலே, திடுக்கிடக்கூடிய, தனிச் சம்பவமல்ல.

ஜியார்டானோ ப்ரூனோ, அன்று ஆதிக்கத்திலிருந்தவர்கள் எந்த அடிப்படையின் மீதமர்ந்து அரசோச்சி வந்தார்களோ, அந்த அடிப்படைக்கு ஆட்டம் கொடுக்கக் கூடிய, அறிவுப் பணியில் ஈடுபட்டிருந்தான். அவன் இருந்தால் தங்கள் ஆதிக்கம் அழிந்து படும் என்று அஞ்சினவர்கள், அவனுடைய அறிவுப் பணியைத் தடுத்திடவோ, தகர்த்திடவோ முடியாத மூட மதியினர், அவனைக் கொன்றால்தான், தாங்கள் வாழ முடியும், என்று எண்ணினர் - அவனும் சாகச் சம்மதித்தான்.

எட்டு நாட்கள் தவணை தந்தனர். ஏன்? நெஞ்சு உரமிக்கவன்தான் ப்ரூனோ, கொண்ட கொள்கைக்காகவே, ஆண்டு பல ஆபத்தால் வேட்டையாடப்பட்டு அலைந்து கொண்டிந்தவன் தான், அச்சம் அவனை அடக்கியதில்லை, ஆசை அவனைக் கட்டுப்படுத்தியதில்லை, அரண்மனை கண்டு அவன் சொக்கின தில்லை, மாளிகை கண்டு மதுரவாழ்வு வேண்டி நின்றவனல்ல, நிந்தனையை நிலாச்சோறு எனக்கொண்டான், வேதனையை வேண்டுமளவு உண்டான், எதற்கும் சளைக்கவில்லை, எதனாலும் மனம் இளைக்கவில்லை; எனினும், மரணம் தன் குரூரக்குரல் கொடுத்து நிற்பதைக் காணும்போது, நாட்கணக்கிலே உயிர் ஒட்டிக்கொண்டிருந்ததை உணரும்போது, ஒருவேளை, உயிரைக் காப்பாற்றிக்
கொள்ளலாம் என்று நெஞ்சிலே ஒரு சிறு ஆசைப் பொறிகிளம்புமோ, என்று எண்ணினர்; ஆவல்கொண்டனர்.

அவனைத் தண்டித்தவர்கள், வாழ்வின் சுவையைப் பருகிக்கொண்டிருந்தவர்கள், செல்வத்தைப் பெறுவதிலே ஓர் இன்பம் கண்டனர், செல்வாக்கைப் பெருக்கிக்கொள்வதிலே வேட்டையாடும் மிருகமாக இருந்தனர் - வாழ்வு எவ்வளவு சுவை தருகிறது, மாளிகையில் வாழும்போது, மலர்த்தோட்டங்களிலே வீசும் மணத்தை உட்கொள்ளும்போது, மலரணிகொண்டைச் செருக்கிலே அவர் மையல் தரும் கண்ணின் மினுக்கிலே, உள்ள இன்பம் கொஞ்சமா, கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள் ஓடிவந்து கட்டளைக்குக் காத்துக்கொண்டிருக்கும்போது ஏற்படும் பெருமிதம் சாமான்யமா - பேழையிலே விதவிதமான அணி மணிகள் மின்னும்போது கண்களிலே களிப்பு ஒளிவிடு கிறதே, பெரும்பதவிகள் கிட்டிடும்போது, மார்பு நிமிர்கிறது, நடையிலே ஒரு புது முறுக்கு ஏறுகிறது, பேச்சே புதிய பொலிவு பெறுகிறதே - இவை எல்லாம் இன்பத்தேன் அல்லவா! இவ்விதமான வாழ்வைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள் - ப்ரூனோவைத் தண்டித்தவர்கள். எனவே, அவர்கள், எதையும் ஏற்க நெஞ்சம் இடம்தரும் சாகமட்டும், துணிவு இராது. நாள் செல்லச் செல்ல, நெஞ்சு நெகிழும், ஆசை அரும்பும் உறுதி குலையும், ப்ரூனோ, உயிருக்கு மன்றாடுவான் என்று எண்ணினர். பெருமழை பெய்கிறது, மண்மேடு கரைகிறது, பாறை எப்போதும் போலத்தானே இருக்கிறது! ஏடு பல படித்த அந்த ஏமாளிகள், இந்தச் சிறு உண்மையை உணரவில்லை - ப்ரூனோ, வாழ்வு என்பதற்குக் கொண்டிருந்த ‘தத்துவம்’ தூய்மை நிரம்பியது, வீர உள்ளத்தில் மட்டுமே தோன்றவல்லது. சுயநலமிகளும் சுகபோகிகளும் சூது மதியினரும், அதனை உணர்தல் இயலாது.

எட்டு நாட்களா! என்னைக் கொல்லும் துணிவு இவர்களுக்கு உண்டாக, எட்டு நாட்கள் தேவைப்படுகிறதா! பயங் கொள்ளிகள்!! - என்றுதான் ஜியார்டானோ ப்ரூனோ, எண்ணிக் கொண்டிருப்பானே தவிர, ஐயோ எட்டு நாளிலே உயிர் இழக்க வேண்டுமா, என்று அஞ்சி இருக்கமுடியாது.

“நாத்திகனான உன்னைத் தீயிலிட்டுக் கொளுத்திச் சாகடிப்பது என்று தீர்ப்பளிக்கிறோம்” என்று அவர்கள் கூரியபோது, ப்ரூனோ பெருஞ்சிரிப்புடன் “இந்தத் தண்டனையைக் கேட்கும் எனக்கு அச்சம் இல்லை; இதைக் கூறும் உங்களுக்கு அச்சம் ஏன் இவ்வளவு இருக்கிறது!” என்று கேட்டான்.
அந்த நெஞ்சு உரத்தைக் குலைக்க, எட்டு நாட்களா! பேதைமை!!
* * *

என்றைய தினம், ப்ரூனோ உண்மையை உரைத்திடுவதே தன் பணி எனக் கொண்டானோ, அன்றே அவன் அறிவான், தன்மீது குறிவிழுந்துவிட்டது என்பதை. எவ்வளவு காலத்துக்கு அவர்களிடமிருந்து தப்பித்திருக்க முடிகிறதோ அதுவரையில் தான் கண்ட உண்மையை உலகுக்குக் கூறி வருவது, என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான். அந்தத் திண்மையை, கொடுமைகள் தகர்க்க முடியவில்லை! அவன் நாடு பல சுற்றி, பல அவைகளிலே நின்று, தன் கொள்கையைக் கூறினான் - போதுமான அளவுக்கு - இனிச் சாக அஞ்சுவானேன் - இறந்தால், கொள்கை பன்மடங்கு புதுவலிவும் பொலிவும் பெறும் - வளரும், பரவும், வெல்லும்! ப்ரூனோ, அந்த எட்டுநாட்டுகளும், இதையன்றி வேறெதனை எண்ணிடப் போகிறான். குவித்து வைத்த பொன்னை யார் அனுபவிப்பார்களோ, குலவிவந்த கிளியை எந்தக் கூண்டிலே கொண்டுபோய் அடைப்பார்களோ, மனைவி மக்கள் என்னவென்று கூறிக் கதறுவார்களோ, என்றா எண்ணி ஏங்கப் போகிறான். ப்ரூனோ, துறவி! தூர்த்தர்கள் பலர் அதனை வேலையாகக் கொண்டு, ‘துறவி’ எனும் சொல்லையே மாசு படுத்திவிட்டனர் - எனவே ப்ரூனோவைத் ‘துறவி’ என்று கூறுவது, அவருக்கு உள்ள மாண்பினை பாதிக்குமோ என்று கூட அஞ்சவேண்டி இருக்கிறது. ப்ரூனோ, கொள்கைக்காகப் போரிடும் அஞ்சா நெஞ்சினன் - வாழ்க்கையில் இதற்காகவன்றி வேறு எதற்கும், அவருக்கு நேரமும், நினைப்பும் கிடையாது. எனவே, எத்தனை நாள் தவணை தரப்பட்டாலும், தடுமாறாது! அந்த நெஞ்சம்! அவ்வளவு உறுதிப்பட்டுவிட்டிருக் கிறது. நச்ச நினைப்பினர் அதனை அறியார்.

ஏன், அவர்கள், ஜியார்டானோ ப்ரூனோ, மடிவதைவிட மனம் மாறிவிடுவது நல்லது என்று எண்ணினர்? நாத்தீகன் ஒழியத்தானே வேண்டும்? ஏன் பிழைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றனர் - புனித மார்க்கத்தை ஏற்றுக்கொள், பூஜ்யர்களை வணங்கு, உயிர் பிழைக்கலாம் என்று ஏன் கூறினர். நேர்மையும் ஈரமும் கொண்டனரா? இல்லை! சிங்கத்தைக் காலடியிலே விழச் செய்தால், காண்போர், எவ்வளவு பெருமை தருவர்! சிறு நாய்கள் நத்திப் பிழைக்கின்றன - பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது நரிகள் பதுங்கிக்கொள்கின்றன - தேடுவதே கஷ்டமாகி விடுகிறது. இதோ சிங்கம் - வீரமுழக்கத்தை எழுப்பிய வண்ணம் இருக்கிறது! வலையில் வீழ்வதில்லை: கணைக்குத் தப்பிவிடுகிறது - காடு ஒன்றிலே வேட்டையைத் துவக்கினால், வேறோர் காடு சென்றுவிடுகிறது - எங்குச் சென்றாலும் முழக்கம்!! இந்தச் சிங்கத்தை, இந்த ப்ரூனோவை, இந்த அஞ்சா நெஞ்சினினை, ‘மனமாறிவிட்டவானாக்கினால்’ சில தலைமுறைகள் வரையிலே, அறிவுத்துறையிலே ஈடுபடவும் ஆட்கள் முன்வருவரா? “அப்படிப்பட்ட அசகாய சூரன்! ஆண்டு பலவாக, மார்க்கத்தை மதிக்க மறுத்து மனம் போன போக்கிலே புதுமை புதுமை என்று பொல்லாக் கருத்துக்களைப் பேசித் திரிந்தவன், என்ன ஆனான், கடைசியில், கண்ணீர் பொழிந்தவன், காலடி வீழ்ந்தான், கண்டு கொண்டேன் உண்மையை, என்று இறைஞ்சினான்! - என்று கூறிக்கொள்ளலாம் அல்லவா. பகுத்தறிவு கருவில் இருக்கும் போதே கருக்கிவிட இதைவிட வாய்ப்பு வேறு கிடைக்குமா! எனவேதான், ஜியார்டானோப்ரூனோவுக்கு மரண பயத்தைக் காட்டி, பணியவைக்கலாம என்று ஆவல் கொண்டனர்.

எட்டு நாள் தவணை! ஒரு தனி மனிதனுடைய, ஒரு மாவீரனுடைய உயிர் இருப்பதா பறிக்கப்படுவதா என்பதல்ல, முழுப் பிரச்சனை, உண்மையான பிரச்சனை, பகுத்தறிவுக்கு, இனியும் இடம் உண்டா, அல்லது இந்த எட்டே நாட்களிலே, அது சுட்டுச் சாம்பலாக்கப்படுவதா என்பதுதான். ப்ரூனோ இதை நன்கறிந்தே, என்னைச் சுட்டுச் சாம்பலாக்கட்டும் - அறிவு கொழுந்துவிட்டு எரிந்த வண்ணம் இருக்கட்டும் என்று கூறினான் - செயலால்!!

ப்ரூனோ, எப்போதும் தனக்காக அஞ்சினதில்லை - ஆண்டு பல கஷ்டப்பட்டதால் உள்ளத்தில் உரம் மெருகாகி விட்ட இந்த நிலையில் மட்டுமல்ல - சிறுவனாக இருந்தபோதே.

பதினைந்து வயதுச் சிறுவன் ப்ரூனோ, டாமினிக்கன் மடாலயத்திலே சேர்ந்தபோது; ஆர்வமும் நம்பிக்கையும் அதிகமாக இருந்தது மடாலயத்திலே சேரும்போது, அங்குதான் அறிவுத்தாகம் தீரும் என்று எண்ணிச் சென்றான்.

புது நெறிகள் புரட்சிபோலக் கிளம்பி, கத்தோலிக்க மார்க்கத்தைக் குலைத்தபோது, வெடிப்புகளை மூடவும் வெதும்பியதைக் களையவும், பூச்சுகளைப் புதுப்பிக்கவும், எடுத்துக்கொள்ளப்பட்ட பல முயற்சிகளிலே, டாமினிக் தேவாலய இயக்கம் ஒன்று. தூயநெறி நிற்பது, தூய்மையைப் பரப்புவது, வழி தவறியவர்களை மீண்டும் நன்னெறி கொண்டு வந்து சேர்ப்பது, என்ற நோக்கத்துடன், கற்றறிவாளர்கள், கர்த்தரின் சுவிசேஷம் உணர்ந்த வித்தகர்கள், துவக்கியது, டாமினிக், மடாலயம்.

நாத்தீகத்தை நசுக்குவதற்கான நல்லதோர் ஏற்பாடு என்றனர் இதனை - அது உலகு வியக்கும் அறிவுத் திலகம் ப்ரூனோவை, அளிக்குமென்று, எவ்வளவோ ‘ஜெபதபம்’ செய்தும், டாமினிக் துறவிகளுக்குத் தெரியவில்லை. அறிவுக் கூர்மையுள்ள வாலிபர்களை, அவர்களைப் பாசம் பற்றிக் கொள்ளா முன்னம், ஆலயக் கல்லூரியில் கொண்டு சேர்த்து, ஐயன் பெருமைகளைக்கூறி, நல்ல ‘சாமியார்’ ஆக்கிடும் வேலையில், டாமினிக் மடாலயக் கல்லூரியில் சேர்த்து, அன்பும் அக்கறையும் காட்டிய ஆன்ஸ்லம் பாதிரியருக்கு ப்ரூனோ, புன்னகை பூத்த முகம் படைத்த வாலிபனாகத் தெரிந்தபோதிலும் அவன் உள்ளம், இத்தாலி நாட்டு வெசுவயஸ் எரிமலை போன்றது என்பது புரிந்துவிட்டது; அஞ்சினார். மடாலயத்திலே இருக்கும்போதே ப்ரூனோ ஒரு சிறு ஏடு தீட்டினான்- வெசுவயஸ் கொஞ்சம் நெருப்பைக் காட்டிற்று! பொறிகளைக் கண்ட ஆன்ஸ்லம் பாதிரியார், “மகனே! வேகமாக ஆபத்தை நோக்கிச் செல்கிறாய்” என்று எச்சரித்தனர். ப்ரூனோ பதறவில்லை - புன்னகை பூத்த முகத்துடன் நின்றனன்.

மடாலயச் சாமியார்களின் மந்த மதியையும் கோலா கல வாழ்வையும் கேலி செய்து, ப்ரூனோ அந்த ஏட்டிலே தீட்டியிருந்தான், அவனுடைய நெஞ்சிலே, நாத்தீக அரவம் குடிபுகுந்துவிட்டது, என்று சந்தேகித்த, பாதிரிகள், ‘விசாரணை’ நடத்தத் திட்டமிட்டனர் - மதவிசாரணை அதிகாரியும் அழைக்கப் பட்டிருந்தார். இதை அறிந்ததும் ஆன்ஸ்லம் பாதிரியார் அலறிப் போனார். ப்ரூனோ சிறுவன், நாட்டிலே நடைபெறுவது, அதிலும் மக்களின் ‘பூஜை’யைப் பெற்றுக்கொள்ளும் மடாலயத்திலே நடைபெறும் முறை அவனுக்கு என்ன தெரியும் - ஆன்ஸ்லம் அறிவார்! விசாரணை என்றால் என்ன? கொடுமைக்கு வேறோர் பெயர் தானே! கனல்கக்கும் கண்படைத்த கொடியவர்கள், ஈவு இரக்கமற்ற நெஞ்சினர்கள், உருட்டிமிரட்டும் கண்ணினர், உட்காருவர்; எதிரே நிறுத்தப்படுபவனைக் கேள்விகள் கேட்பர்; அந்தக் கேள்விகள் எதன் பொருட்டுக் கேட்கப்படுகிறது என்று அறியாமல், பதில் கூறுவான்; அந்தப் பதிலிலே பொதிந்து கிடக்கும் பொருளைத் துருவிப் பார்த்து. இவன் நாத்தீகன்தான் என்பர்! - தீர்ந்தது. கடும் தண்டனை! சிறை கிடைக்கலாம், அவர்கள் சீற்றம் அதிகம் கொள்ளாதிருந்தால். சித்திரவதை செய்வது, வழக்கமான சாதாரண தண்டனை!

இந்த ‘விசாரணை’ ஏற்பட இருக்கிறது, ஜியார்டானோவுக்கு, அந்தத் துணிவுள்ள வாலிபன், வானத்தின் வண்ணத்தைக் கண்டு களிக்கிறான் - அலையின் ஒலி கேட்டு மகிழ்கிறான் - கொத்துக் கொத்தாகக் காய்த்துக் குலுங்கும் திராட்சைகள் நிரம்பிய கொல்லையைக் காண்கிறான், எங்கும் தெரியும் இயற்கை எழிலை ரசித்துக்கொண்டிருக்கிறான்.

“மகனே! மகனே வர இருக்கும் ஆபத்து அறியாமல் கிடக்கிறாயே” என்று கூறியவண்ணம் வந்த ஆன்ஸ்லம் பாதிரியார், மடாலய ஏற்பாட்டைக் கூறினார் - நடுக்கும் குரலில்.

“நான் அறிவேன்! நான் அறிவேன்! விசாரணை என்றால் என்ன என்பதை நான் அறிவேனடா ஜியார்டானோ” என்று வேதனை ததும்பும் குரலில் அவர் கூறியபோது, ப்ரூனோ, “அஞ்சாதீர் ஐயனே! அஞ்சாதீர்! என் பொருட்டு அஞ்சாதீர்! ஏனெனில் என் பொருட்டு நானே அஞ்சவில்லை!” என்ற கூறினான்!