அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

எட்டு நாட்கள்
2

அந்தப் ப்ரூனோ இப்போது தணலில் போட்டு எடுக்கப் பட்ட தங்கமாகிவிட்டிருக்கிறான். ஆபத்தெனும் அகழிகளைத் தாண்டியிருக்கிறான், கொடுமையூர்களைக் கடந்திருக்கிறான், வெறுப்பு வெப்பத்திலே மூழ்கி எழுந்திருந்து இருக்கிறான் - இப்போதா அஞ்சப்போகிறான்! மானைக் கொல்லக் குதித்த சிங்கக் குட்டி, பெரும் பிடரிபடைத்த காட்டரசனான பிறகு, மத்தகத்தை அல்லவா பிளக்கும் – முயற்கூட்டம் கண்டா ஓடி ஒளியும்! நீலநிற வானத்தையும் பச்சைப் பசேலென்ற தோட்டத்தையும் கண்டதும் பரவசப்படும் வாலிபன், “என்னைப் பற்றி நான் அஞ்சவில்லை” என்று சொன்னான் என்றால், இப்போது, அந்த நெஞ்சு உரம், எதிரியின் உறுதியை முறியடிக்கும் வகையினதாகத்தானே ஆகிவிட்டிருக்கும். இடைக்காலத்திலே அவன் சுகத்துக்கும் சுயநலத்துக்கும் பலியாகிவிட்டிருந்தால், அன்று மடாலயத்திலிருந்து தப்பி ஓடிவந்த ப்ரூனோ தன் அறப்போரை நிறுத்தியபாடில்லை – பயணத்தை முடித்துக்கொண்டானில்லை!

நெஞ்சும் உரம், ப்ரூனோவுக்குச் சிறுவயது முதல் இருந்து வந்த, பெருந்துணை, அதை எட்டாண்டு சிறை கெடுக்கவில்லை. இன்னும் இருப்பது எட்டே நாட்கள்! நெஞ்சும் உரம் குலைக்கப்படும் என்று எண்ணியவர்கள், ப்ருனோவின் குணம் அறியாதவர்கள்!

கோழைகளை அவர்கள் மிரட்டிப் பணிய வைத்திருக்கிறார்கள்.

கொடுமைகளை ஓரளவுக்குமேல் அனுபவிக்க முடியாத வலுவற்றவர்களை அவர்கள் அடிபணிய வைத்திருக்கின்றனர்.

ஆசைக்கு ஆட்படுபவர்களை அவர்கள் பாசவலையில் வீழச் செய்திருக்கிறார்கள்.

ப்ருனோ, இந்தக் கயவர் வலையிலே, சிக்க மறுக்கும் வீரன்!

சரண்புகுந்தால், ப்ரூனோ போன்ற கற்றறிவாளனுக்கு, வைதீகபுரியில், எந்தக் காணிக்கையும் பெறத்தக்க குருபீடம் கிடைத்திருக்கும். காரணம் கேளாது, பொருள் அறிய முயற்சிக்காது, ஆபாசம் என்று தோன்றினாலும் அதற்கு ஏதேனும் உட்பொருள் இருக்கும் என்று நம்பிக் கொண்டு, மத ஏடுகளை, மனப்பாடம் செய்து, அவ்வப்போது சிறிது சிறிது கக்கிவிட்டு, அதனை அருள்வாக்கு என்று எண்ணும் ஏமாளிகளிடம், பொன்னும் புகழும், பூஜையும் தொழுகையும் பெற்றுக்கொண்டு, முடியுடை மன்னரையும் தன் பிடியிலே வைத்துக்கொண்டு, தம்பிரானாக – சன்னிதானமாக, வாழ்ந்து வந்தனர் பலர் – அறிவுத் தெளிவிலே, ப்ரூனோவிடம் நெருங்கவே முடியாத குறை மதியினர்! ப்ரூனோ, கற்றறிவாளன்; அவன் சொற்பொழிவு, கரும்பென இனிக்கும் தரத்தது; எத்தகைய கடினமான பொருளையும் அவன் எளிதாக்கிடும் வண்ணம் பாடம் கூறவல்ல பேராசிரியன்; சலிப்பளிக்கும் தத்துவத்தையும், தேனாக்கித் தரும் தெளிவுரை கூறவல்லான் பாரிசிலும், இலண்டனிலும், பதுவாவிலும், வட்டன்பர்க்கிலும், அவனிடம் பாடம் கேட்க வந்த வாலிபர்கள், சொக்கி நின்றனர்; எந்தப் பேராசிரியனுக்கும் கிடைக்காத பெரும்புகழ் அவனைத் தேடிவந்தது! அத்தகைய ப்ரூனோ, ஒருகணம், சபலத்துக்கு ஆட்பட்டு, ஆசைக்கு அடிமைப்பட்டு, ரோம் நகரில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் போப்பாண்டவருக்குச் சரணம், என்று கூறிவிட்டிருந்தால் போதும், தேவாலயக் கதவுகள் திறந்து இருக்கும், அருளாளயங்களிலே குவிந்து கிடந்த செல்வத்திலே புரளலாம், அரசர்கள் அஞ்சலி செய்வர்! நடவடிக்கையைப் பற்றிக்கூடக் கவலைப்பட வேண்டியதில்லை; பக்தர்கள், பாதிரிகளின் உபதேசத்தின் சுவையைத்தான் தரம் பார்ப்பார்களே தவிர, நடவடிக்கையைப் பற்றித் துளியும் கவலை கொள்ளமாட்டார்கள்; நாற்றம் வெளியே தெரியாமலிருக்கும் பக்குவம் அறிந்திருந்தால் போதும். உபதேசம் செய்வதிலே, உருக்கம் இருந்தால்போதும், நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதுகூட வேண்டப்படுவதில்லை. ஒரு பெரிய மத அதிபர், “ஏசுநாதர் பற்றிக் கட்டிவிடப்பட்டுள்ள சுவையான கதை, எவ்வளவு சுகபோகத்தையும் செல்வத்தையும் நமக்கு அளிக்கிறது!” என்று கூறிப் பூரித்தாராம்! அப்படிப்பட்ட காலம் அது, ஜியார்டோனோ ப்ரூனோ இசைத்திருந்தால் போதும், குருபீடம் கிடைத்திருக்கும்.

ஆனால், சொந்த இலாபம், சுகபோகம், என்பனவற்றில் துளியும் பற்றுக்கொள்ளாத துறவி அவர்!
* * *

“பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி உமக்கு அளிக்கப்பட இருக்கிறது, ஜியார்டானோ!” என்று கூறினார், அரசர்!

“இறையே! எனக்கா? இதற்குள்ளவா? நான் அத்தகுதி பெற்றவனா?” என்று கேட்கிறார் ப்ரூனோ.

“பகட்டுடை அணிந்து, பசப்புகளிலே மனத்தைப் பறிகொடுத்துவிடும், பாரிஸ் பட்டிண வாலிபர்களையே, உமது பேருரைகளால் திருத்தவும், திரட்டவும் முடிகிறதே! உம்மையன்றி வேறு யார், அந்தப் பதவிக்கு ஏற்றவர். பேராசிரியரே!” என்று கேட்கிறார் மன்னர்.

மடாலயத்தில், விசாரணைக் கொடுமையிலே சிக்கிக் கொள்ளாதிருக்க, ஆன்ஸ்லம் பாதிரியார் யோசனைப்படி ப்ரூனோ, இரவில், பலகணி வழியாகக் கயிற்றின் துணைகொண்டு இறங்கி, ஓடினார் – ஊரைவிட்டு – இத்தாலியை விட்டு, சுவிட்சர்லாந்து நாடு கடந்து, இடையே பல இடங்களில் தங்கி, கடைசியாகப் பாரிஸ் வந்து சேர்ந்தார்.

பிரான்சிலே அரசோச்சி வந்த மூன்றாவது என்ரி என்பவர், பாரிஸ் பட்டிணத்தில் தத்துவத் துறைச் சொற்பொழிவாளராகக் கீர்த்திபெற்ற, ப்ரூனோவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை ஆதரித்தார்; அரண்மனையில் இடம் தந்தார். அங்குதான் அவர் ப்ரூனோவுக்குச் செய்தி தருகிறார். பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் வேலைக்கு, அழைப்புக் கிடைத்திருப்பதாக.

ப்ரூனோவுக்கு, பல்கலைக்கழகத்தைப் பாசறைகளாக்கி, மாணவர்களை அறிவுத்துறை வீரர்களாக்கிக் குருட்டறிவை விரட்டும் போரிடவேண்டும் என்பதுதான், குறிக்கோள். இத்தாலியில், குருட்டறிவு, அரச மார்க்கமாகிவிட்டிந்தது; இருட்டறையில் தள்ளி இம்சிக்கும், அருளாளர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது; எனவேதான், ப்ரூனோ ஓடிவந்துவிட்டார். பாரிஸ் பல்கலைக் கழகம், பிரான்சு நாட்டிலே புதிய புகழ்பெற்று வருகிறது! புதுமைக் கருத்துகளை வரவேற்கும் கூடமாக அது விளங்கிற்று. பழமைக்குப் பாசறையாக, சோர்போன் பல்கலைக் கழகமும், புதுமைக்குப் புகலிடமாக பாரிஸ் பல்கலைக் கழகமும் விளங்கின. ப்ரூனோவுக்கு, உண்மையிலேயே பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியாற்றுவதிலே, பெருமகிழ்ச்சி – எதிர்பார்த்த இன்பம் கிடைக்கிறது என்றுதான் பொருள்.

மன்னன், மகிழ்வூட்டும் செய்தியைக் கூறியதும், ப்ரூனோ, விரும்பிய வாய்ப்புக் கிடைத்தது என்று எண்ணிக் களித்தார். ஆனால், பேரிடி உடனே வந்தது.

பல்கலைக் கழகத்தில் பணியாற்றுவதற்கு ஒரு நிபந்தனை உண்டு; மன்னர் அதனைக் கூறினார். கூறுமுன் கேட்டார், “ப்ரூனோ! ஏன், தேவாலயத் தொழுகைகளிலே நீர் கலந்து கொள்வதே இல்லை!” என்று, கேட்டுவிட்டுச் சொன்னார், “பல்கலைக் கழக ஆசிரியர் என்ற முறையில், நீர், கத்தோலிக்க முறைப்படி உள்ள தொழுகை நடத்த வேண்டும் தேவாலயத்தில்”

“என்ன சொல்கிறீர், மன்னா! தொழுகையா? பேராசிரியர் வேலைக்கு அது நிபந்தனையா?” என்று கேட்கிறார்கள், ப்ரூனோ அச்சம் தலைகாட்டுகிறது.

“ஆமாம்! ஆசிரியரைப் பார்த்துத்தானே மாணவர்கள் நடந்து கொள்வர்; தொழுகை முக்கியம்” என்றார் மன்னர், இதில் என்ன இடையூறு என்று எண்ணிய வண்ணம்.

மகிழ்ச்சி கருகலாயிற்று, விசாரம் கொண்டார், ப்ரூனோ.

“தத்துவம், நரன் போதிக்கப்போவது; மதமல்ல; தொழுகைக்கு நான் சென்றாக வேண்டுமென்று நிபந்தனை ஏன், மன்னா!” என்று கேட்கிறார்.

“வீணான குழப்பம்! தொகை சடுதியில் முடிந்து விடும், ப்ரூனோ! காலம் வீணாகுமே என்று கவலையோ” என்று மன்னர் வேடிக்கையாகவே பேசுகிறார்.

“முடியாது, வேந்தே!”

“முடியாதா? தொழுகையா?”

“ஆமாம். அரசே! நான் தொழுகை செய்து நீண்ட காலமாகிவிட்டது”

“தொழுகை, கத்தோலிக்கரின் நீங்காக் கடமை, ப்ரூனோ! தவிர்க்கக்கூடாத கடமை”

“நான் கத்தோலிக்கனல்ல, காவலா! கத்தோலிக்கனல்ல!”

“மெல்லப் பேசு, ப்ரூனோ, மெல்லப் பேசு. கத்தோலிக்க மதமல்லவா, நீ! எவ்வளவு வேதனை! அப்படியானால், லூதர் கூட்டத்தவனோ?”

“இல்லை, அரசே!”

“கால்வின் கூட்டமோ?”

“அதுவுமல்ல! அரசே! நான் கத்தோலிக்கனுமல்ல, லூதர், கால்வின் ஆகியோர் முறையினுமல்ல; நான் ஒரு தத்துவாசிரியன்; நெடுநாட்களுக்கு முன்பு நான் டாமினிகன் பாதிரியாக இருந்தேன் – மடாலயத்திலே பயின்றேன்;’ அங்கு நான் அறிந்து கொண்ட உண்மைகள், என்னை எம்மதத்திலும் இருக்கவிட
வில்லை”

“மதமற்றவனா! அப்படியானால்......ப்ரூனோ!... நீ, நாத்திகள்... அல்லவா... எவ்வளவு வேதனை... என் ப்ரூனோவா இப்படி...”

“அரசே! நான் ஒரு தத்துவ ஆசிரியன்; அவ்வளவுதான்”

பாரிஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் வேலையை உதறித் தள்ளிவிட்டார் ப்ரூனோ.

தன்னிடம் அன்பு காட்டிய மன்னன் கூறியும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசமறுத்த ‘உத்தமன்’ ப்ரூனோ! துளியாவது அச்சம் மனத்திலிருந்தால், அரசனிடம் இவ்விதம் பேசுவதா என்று எண்ணத் தோன்றியிருக்கும். சிறிதளவாவது, ஆசைக்குக் கட்டுப்படும் சுயநலம் இருந்திருந்
தால், தொழுகைதானே! என்று கூறிவிட்டு, பேராசிரியராகி இருக்கமுடியும்! ஆனால், ப்ரூனோவின் இயல்பு அவ்வளவு உயர்தரமானது! ஆசைக்கு ஆட்பட்டு, பொய்யொழுக்கம் கொள்ள மறுக்கும் தூய்மையாளர் அவர்.

அவருக்கா சிறையிலே, ஆசை பிறக்கும்? எட்டு நாட்களா? இதுபோல, ஆசையூட்டும் சம்பவங்களை அவர், பல கண்டிருக்கிறார். எல்லாவற்றையும் வென்றிருக்கிறார். எனவே, எட்டு நாட்களை வீணாக்குகிறார்கள்! எட்டு நாட்கள், ப்ரூனோவை, அவருடைய கொள்கையை எடுத்துரைக்கவும், வாதிடவும் பயன்படுத்தச் சொல்லியிருந்தால், வாய்ப்பு என்று கூறி, ஏற்றுக்கொண்டிருப்பார். இப்போதோ சாகத்துணிந்த அவரைச் சாகடிக்க எட்டு நாட்கள் கழியவேண்டி இருக்கிறது!

தான் உரைக்கும் கொள்கையை மறுத்திட, வாதிட, ஊர் முன்வந்தாலும், ப்ரூனோ மகிழ்ச்சியுடன் வரவேற்பார். அந்த வாதிடும் திறமை பாராட்டுதலை மட்டுமல்ல; பகையைப் பெற்றுத் தந்தது. எனினும், பகை வளருகிறது. ஆபத்து ஏற்படுகிறது என்பதற்காகக் கொள்கையை விட்டுக் கொடுப்பவரல்ல ப்ரூனோ. நாம் கொண்டுள்ள கொள்கையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மக்கள், அறிவாளிகள்,வீணாகப் பாடுபடவேண்டும் – எதைப் பேசினாலும் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அதைக் கூறிப் புகழ்பெறலாம். அல்லது எந்த அளவுக்குக் கூறினால், மக்கள் உள்ளம் அன்று இருந்த நிலையில் தாங்கிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்குக் கூறிக்கொண்டிருப்போம், என்று திருப்தி கொள்பவரும் அல்ல. மிகமிகத் தெளிவானது – அப்பழுக்கற்ற ஆதாரமுள்ளது நான் கொண்டுள்ள கொள்கை – இதனை மறுப்போரோ, மணலில் கோட்டை கட்டிவைத்துக் கொண்டிருப்
பவர்கள், அவர்களுடைய கொள்கைகளில் தெய்வீகம் இருப்பதாகக் கூறுகிறார்கள். தெளிவு இல்லை, காட்டவும் இயலவில்லை; அருள்வாக்கு என்கிறார்கள். அக்கிரமத்தைக் கூசாமல் புரிகிறார்கள், பற்று அறுபடச் செய்யும் பாசுரம் பாடுகிறார்கள், பாபச்செயலை அஞ்சாது செய்கிறார்கள்; இவர்களுக்கு அஞ்சி, நான் என் அசைக்கொணாத கொள்கையைக் குடத்திலிட்ட விளக்காக்குவதா! குந்தட்டும், வெட்டட்டும், உயிர் இருக்கு மட்டும், போராடுவேன், வாதாடுவேன், குன்றின் மேலிட்ட விளக்காக்குவேன் என் கொள்கையை; அதனை எடுத்துக் கூறிட வாய்ப்பு. எப்படிப்பட்ட சூழ்நிலையில் கிடைத்தாலும், பயன்படுத்திக் கொள்வேன், என்ற கருத்துடன் அவர் பணிபுரிந்து வந்தவர். எந்த வாய்ப்பையும் அவர் நழுவவிட்ட தில்லை; அதன் பலனாக என்ன விளைவு நேரிட்டாலும், தாங்கிக் கொள்ளத் தயங்கினதுமில்லை.

பிரெஞ்சு மன்னன், ப்ரூனோவின் மனப்போக்கைக் கேட்டுக் கோபித்துக் கொண்டான்; வருந்தினான், வெறுத்துவிடவில்லை. எப்படி வெறுக்க முடியும்! மன்னன், புன்னகைப் புலிகளையும் நயவஞ்சக நரிகளையும் காண்கிறான்! காவி அணிந்து திரியும் காமாந்தகாரர்களையும் அருட்கவி பாடி அக்கிரமம் புரிவோரையும், பிறர் பொருள் கவரும் பேயரின் பூஜா மாடங்களையும் கண்டிருக்கிறான். மன்னன் கூறினாலும், என் மனத்திலுள்ளதை மாற்றிக் கொள்ள மாட்டேன். என்று தூய்மையான உள்ளத்துடன் இருந்த ப்ரூனோவிடம், வெறுப்பு அடைய முடியா! அவர் சொல்லும் கொள்கை, மன்னனுக்கு உடன்பாடானது அல்லதான் – சரியா தவறா என்று ஆராய்வது கூடத் தேவையில்லை என்று கருதினான்; ஆனால் மன்னனும், மண்டலமும் சீறும் என்று அறிந்தும், உண்மையைக் கூறி விட்ட நேர்மையைப் பாராட்டாதிருக்க முடியுமா? ப்ரூனோ தன்னிடம் சொன்ன உண்மையை ஊர் அறிந்தால் ஆபத்து என்பது மன்னனுக்குத் தெரியும். மத அதிபர்களின் கோபத்தை எந்த மன்னனும் தாங்கிக்கொள்ள முடியாதல்லவா; மண்டலமே சீறும்; மாதா கோவில்களெல்லாம் சாபமிடும். ப்ரூனோவின் கொள்கை தெரிந்துவிட்டால், மதி அதிபர்களும், அவர்களின் கோட்டை என விளங்கிய சோர்போன் பல்கலைக் கழகமும், பகை கொள்ளும்; அதுபோது, தன்னால்கூட, ப்ரூனோவைக் காப்பாற்ற முடியாது என்றறிந்த மன்னன் இங்கிலாந்து நாட்டிலே இருந்த பிரெஞ்சுத் தூதுவருக்கு ஒரு கடிதம் கொடுத்து அந்த நாடு சென்று வதியுமாறு, ப்ரூனோவுக்குக் கூறினான். ப்ரூனோ, இங்கிலாந்து வந்த சமயம், அங்கு, கலையும் காவியமும், வீரமும் காதலும், செல்வமும் சீரும், கொஞ்சி விளையாடிய, எலிசபெத் இராணியின் ஆட்சிக்காலம்.

இங்கு, ரோம்நகர மத அதிபர்களின் ஆதிக்கம் இல்லை; மத விசாரணைகூடக் கொடுமைகள் இல்லை; புத்தம் புதிய போக்கு வரவேற்கப்பட்டது, பொற்காலம் என்று புகழ்ந்தனர். இங்கு ப்ரூனோவின் புகழ் வளர வழி இருந்தது – கொள்கையை எடுத்துக் கூறும் வாய்ப்பு ஏற்பட்டதும், மீண்டும் ஆபத்து ப்ரூனோவைத் துரத்தலாயிற்று.

என்ன கொள்கை அது? மத ஏகாதிபத்தியத்தை முறியடித்து, ரோமாபுரியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து நின்று, லூதரின் புரட்சி இயக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்த இங்கிலாந்திலும், பகையை மூட்டிய, அந்தக் கொள்கை என்ன? இங்கிலாந்தில் மட்டுமல்ல, கால்வின் சித்தரித்த சீர்திருத்தத்தைச் செம்மையாக்கி வாழ்ந்த, சுவிட்சர்லாந்திலும், ப்ரூனோவின் கொள்கைமீது சீறிப் பாய்ந்தனர். கத்தோலிக்க நாடுகள் மட்டுமல்ல, பிராடெஸ்ட்டென்டு நாடுகளும், பாபம்! மோசம்! அக்கிரமம்! அனுமதியோம்! என்று கூவின; அப்படிப்படட கொள்கையை ப்ரூனோ கூறிவந்தார்.

கொலை கொள்ளை எனும் தீயசெயல் புரிகிறவனை மகா சன்னிதானம் என்று போற்றுகிறார்களே, இந்த மடைமை ஆகுமா? என்று கேட்டார். மார்டியன் லூதர் – கால்வின், ஜிவிங்லி, போன்றாரும் இதையே கூறினர் – மக்கள் முதலில் மருண்டனர், பிறகு “ஆமாம், இந்த மடமை ஆகாது. நமக்கு மோட்ச வழிகாட்டியாக நாம் ஒரு தூய்மையாளரைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினர்; லூதர் சொன்னார்.

“பாவத்துக்குப் பரிகாரம், மனத்தால் கழுவாய் தேடுவதுதானே – காணிக்கை கொடுத்தால் பாவம் மறையுமோ! மறையும் என்று வாணிபம் செய்கிறார் மதஅதிபர்! ஏற்றுக்கொள்கிறீர்களே, ஆராய்ந்து பாராமல். காணிக்கை கொடுத்துப் பாவத்தைக் கழுவிக்கொள்ள முடியுமானால், பணக்காரர், கொலை, கொள்ளை, கற்பழித்தல், எனும் எந்தப் பாவமும் புரியலாம், தப்பித்துக்கொள்ளலாம் அல்லவா? இதுவா அறம்? இதுவா மார்க்கம்? இதுவா கர்த்தரின் கட்டளை? இதுவா சுவிசேஷம்?” என்று கேட்டனர். பிராடெஸ்ன்ட் இயக்கத்தினர் – மக்கள் தெளிவு பெற்றவர் – துணிந்து போப்பாண்டவரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டர்.
இந்த அளவுக்குத்தான் மக்கள் தயாராயினர்.

கயமையைக் கண்டிக்கவும் தூய்மையைப் போற்றவும் முன்வந்தனர்.

மத அதிபர்கள், மாசு மருவற்றவர்களாக இருத்தல்வேண்டும் – ஒழுக்கசீலர்களாக விளங்க வேண்டும் என்று கோரத் தலைப்பட்டனர்.

ப்ரூனோ, மத அதிபர்கள், எப்படி இருக்கவேண்டும், கயமை நிரம்பியவர்கள் கூடாதல்லவா, தூய்மை உள்ளவர்கள்தானே தொழுகை நடாத்தும் தகுதியுடையார், என்ற பிரச்சனை அல்ல, எடுத்துரைத்தது. அவர், இப்படிச் சில அதிபர்களே தேவைதானா; அவர்கள் நடாத்தி வைக்கும் தொழுகைகள், சடங்குள், ஆகியவற்றால் மக்களின் ஒழுக்கம் மேம்படவும், மனம் தூய்மை பெறவும், செயல் சீர்படவும், மார்க்கமுண்டா என்ற அடிப்படையை அலச ஆரம்பித்தார்.

மற்றவர்கள், கட்டிடத்துக்கு என்ன வண்ணச் சுண்ணம் பூசினால், கவர்ச்சியாக இருக்கும் என்ற ஆய்வுரையில் களித்தனர். ப்ரூனோ, அந்தக் கட்டிடம் உனக்கும், உள்ளத்துக்கும், சிறைக்கூடம் ஆகிவிடக் கூடாதே, என்று எச்சரிக்கை கூறினார்.

மத ஏடுகளிலே காணப்படும் மாண்புகளின்படி, மத அதிபர்கள் நடந்துகொள்கிறார்களா என்பதை லூதர், கால்வின், போன்றார், ஆராய்ந்தனர்; ப்ரூனோ மத ஏடுகளிலே மாண்புகள் என்று கருதப்படுவன, உண்மையிலேயே மாண்புகள்தானா என்று ஆராய்ந்தார்; அந்த மட்டோடு நிற்கவில்லை, புத்தறிவு தரும் புது உண்மைகளுக்கும், மத ஏடுகளில் காணப்படும் கருத்துகளுக்கும் உள்ள முரண்பாட்டை, எடுத்துக்காட்டினார்.
ஆன்ஸ்லம் பாதிரியார், ப்ரூனோவை, மடாலயத்தில் இருந்தபோதே இதற்காகத்தான் எச்சரிக்கை செய்து வைத்தார். அவர், மடாலயக் கெள்கையில் ஊறிப் போனவர், எனினும், புத்திக்கூர்மையும் நற்பண்பும் உள்ள ப்ரூனோவிடம் மட்டற்ற ஆசைகொண்டவர்; எனவேதான், எச்சரித்தார்.

ஐரோப்பா முழுவதும் அந்த நாட்களிலே அரிஸ்டாடில் தந்த கொள்கைகள் ஆட்சிபுரிந்து வந்தன – ஊர்த் துறைகளிலும் – சிறப்பாக மார்க்கத் துறையில்.

கிரேக்க நாடு தந்த அந்த அறிவுக் கருவூலம், அவர் பயத்தில் அவருக்கு இந்த வசதிகளுக்கு ஏற்ற வகையில், அவர் காலத்துச் சுற்றுச்சார்பின்படி ஆராய்ந்து, அறிந்த உண்மைகளை வெளியிட்டார் - அவை உலகு உள்ளளவும் மாற்றப்பட முடியாதன, என்று அல்ல!

ஆனால், அந்தக் கொள்கைகளை ஏற்று, அவற்றின் அரசியல், பொருளியல், மத இயல் அமைப்புகளை, ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டனர் - பழக்கத்தில் வந்துவிட்டது - அதனால், அது இறுகியும் விட்டது.

மனிதனுடைய சிந்தனாசக்தியை, அரிஸ்டாடிலின் தத்துவங் களுடன் பிணைத்துவிட்டனர்; அதற்கு மேலால் செல்வதோ, முரணாகச் சொல்வதோ, கேடு பயக்கும், என்றனர்; செல்பவர் தண்டனைக்கு உள்ளாவர் என்றும் சில இடங்களில் சட்டம் இயற்றினர்.

விண்ணிலே சிறகடித்துச் செல்லும் பறவை, எங்கும் சென்று, இன்புறும்.

கட்டிவிடப்பட்ட ‘பட்டம்’, நூலும் அதைத் செலுத்துவோரின் தீரமும் அனுமதிக்கும் அளவுதான் செல்லும்.

அரிஸ்ட்டாடில் தந்த கருத்துத்தான், முடிந்த முடிவு, என்று ஐரோப்பா கூறிற்று.

அவர், விண், மண், கடல், என்பவை குறித்துக் கூறிவைத்த கருத்துக்களை ஆராய்வதும் ஆபத்தானது என்று கருதப்பட்டது.

சூரியன் சுற்றித்திரியும் கோளம்; பூமி நிலைத்து நிற்பது; என்பது அரிஸ்டாடில் அளித்த கொள்கை.
இதன்படியே, ஏடுகள், குறிப்பாக மத ஏடுகள், நீட்டப்பட்டு விட்டன.

விண்ணுலகம், ஆங்கே விசாரணைக்கூடம்; நரகம், அங்கு வேதனைக்கூடம்; எனும் மதக்கருத்து, அசையாதிருக்கும் பூமி, அன்றாடம் சுற்றிவரும் சூரியன், என்ற அடிப்படையின்மீது கட்டப்பட்டது.
இந்த அடிப்படையைச் சந்தேகிப்பது பாவம், என்று கூறுவதில் மதவாதிகள் முனைந்தனர்; ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் இந்த அடிப்படையை அலசத் தொடங்கினர்.

ப்ருனோ சிறுவனாக இருந்தபோதே, வெடிகுண்டு வீசப்பட்டுவிட்டது.

வேதநிந்தகன் கிளம்பிவிட்டான்!

கோபர்னிகஸ் எனும் ஆராய்ச்சியாளன், பூமி உருண்டை வடிவுடன் இருக்கிறது, அது சுற்றித் திரிகிறது, சூரியன் நிலைத்து நிற்கும் கோளம், என்று ஏடு தீட்டிவிட்டான். மதவாதிகள் பாய்வர் என்று அச்சத்தால், கோபர்னிகஸ், அந்த ஏடு, தீட்டியும் வெளியே காட்டாது வைத்திருந்து, மரணப் படுக்கையில் இருக்கும்போதுதான் அந்த ஏட்டை வெளியிட ஏற்பாடுசெய்தான். கோபர்னிகஸ் கொள்கை கேட்டு, வைதீக உலகு சீறிக் கிளம்பிற்று; இது பொய்க் கொள்கை, பேய்க்கொள்கை; பூமியாவது சுற்றுவதாவது; மேலே விண்; இங்கே மண்; இதனடியில் நரகம்; புண்ணியம், பாவம் இரண்டிலே எதைச்செய்யவும் மண்; புண்ணியம் செய்தால் விண்ணுலகு செல்லலாம்; பாவம் புரிவோர் நரகம் சேர்வர்; என்று முழக்கினர்.

பூமி உருண்டையாய் இருந்தால் என்ன, தட்டையாக இருந்தால் என்ன, சுற்றி வந்தாலென்ன சும்மா கிடந்தாலென்ன, என்று மத அதிபர்கள் எண்ணிக்கிடப்பதற்கில்லை; ஏனெனில், கோபர்னிகசின் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொண்டால், புனித ஏடுகளின் அடிப்படையே தகர்ந்துவிடுகிறது - பிறகு, அந்த ஏடுகளின் துணை கொண்டு கட்டப்பட்ட அமைப்பு என்ன கதியாவது - அந்த அமைப்பின் பயனாகக் கிடைத்துள்ள கோலாகல வாழ்வு என்ன ஆவது - இது அவர்கள் கவலை, பயம்! எனவே, தங்கள் ஆதிக்கத்தை ஏவி, கோபர்னிகசின் கொள்கையை அழித்தொழிக்க முனைந்தனர். ப்ரூனோ, கோபர்னிகசின் கொள்கையைச் சரியானது என்று கற்றறிந்தார், சிந்தித்துத் தெளிவும் உறுதியும் பெற்றார். இந்த அடிப்படை மாற்றம் அவருக்கு ஏற்பட்டான பிறகு, எந்தமத அமைப்புத்தான் அவரை ஆட்கொள்ள முடியும்!

கோபர்னிகஸ், ஆராய்ந்து அறிந்து புது உண்மை கூட, முழுவதும் புதிதல்ல, கிரேக்க நாட்டுப் பேரறிஞர் பிதாகோரஸ் என்பவர், இதனை முன்பே கூறி இருந்தார்; ஆனால் அரிஸ்டாடில் கொள்கை, அதனை இருட்டடிப்பில் வைத்துவிட்டது.