அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

எட்டு நாட்கள்
3

கோபர்னிகசின் கொள்கை, இதைப் புதுப்பித்தது; புயல் என்றனர் மதவாதிகள் - மத அடிப்படையில் கற்றவர் அனைவரும், இது கவைக்குதவாத கொள்கை என்றனர். ஆனால் கோபர்னிகஸ் வெற்றி பெற்ற வண்ணமிருந்தார். ப்ரூனோ, மடாலயத்தில் பயிலும்போதே இந்தக் கொள்கையை ஐயந்திரிபற உணர்ந்தார். ஆன்ஸ்லம் பாதிரியார் “மகனே! ஏன் இந்த கோபர்னிகசைக் கட்டி அழுகிறாய், அறிய வேண்டியதை அரிஸ்டாடில் அளித்துவிட்டார். அதுபோதும் ஐயன் பெருமைகளைப் படி” என்று கூறிவந்தார். இளம் உள்ளம், கோபர்னிகசின்பால் லயித்து விட்டது. பன்முறை கண்டித்திருக் கிறார் ஆன்ஸ்லம்.

“உலகம் உருண்டை என்கிறாயே, மகனே! அப்படியானால், நரகம் எங்கே இருக்கிறது? புனித ஏடு படித்திருக்கிறாயே கூறு, நரகம், உன் உருண்டை உலகிலே எங்கேயடா இருக்கும்” என்று கேட்பார் ஆன்ஸ்லம். ப்ரூனோ சிரித்துக்கொண்டே, “எங்கே இருக்கும்? நீங்களல்லவா கூறவேண்டும்” என்று மடக்குவான். அவர் காதைப் பொத்திக் கொள்வார்! அவரும் அவர் போன்றாரும், விண்ணகத்திலே, ஒளிவிடும் சிம்மாசனத்தில் ஐயன் வீற்றிருக்கிறார், அங்கு விசாரணை நடைபெறும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ப்ரூனோவின் கவலை விசாரணை எப்படி இருக்கும், எப்போது நடைபெறும் என்பதுகூட அல்ல, சுற்றாத சூரியனைச் சுற்றுவதாகவும், சுற்றும் பூமியைப் பாய்போல் கிடப்பதாகவும், ஆராய்ச்சிக்கு ஒவ்வாத முறையிலே நம்புகிறார்களே, இது ஏன் என்பதாகும். இதிலிருந்து துவங்கிய அறிவு விசாரணை, ப்ரூனோவை நெடுந்தூரத்துக்கு அழைத்துச் சென்றது.

மனிதன் பாவத்தோடு பிறக்கிறான் - அவனைப் பாவம் புரியும்படித் தீயதேவன் சதா தூண்டுகிறான் - அவனுடைய தூண்டுதலிலிருந்து மீளவும், கர்த்தரின் கிருபையைப் பெறவும் தொழுகை நடத்தவேண்டும் - முறை நாங்கள் கூறுகிறோம் - இடம் நாங்கள் காட்டுகிறோம் - நேரம் நாங்கள் குறிக்கிறோம் - காணிக்கை எமக்குத் தாருங்கள் என்றனர் மத அதிபர்கள் - கேட்கும் முறை, பெறும் காணிக்கை, வகுத்திருக்கும் சடங்கு இவை பற்றி, லூதரும் பிறரும் ஆராய்ந்தனர் - ப்ரூனோ, இவைபற்றி அல்ல, மனிதன், ஈடேற, தூய்மைபெற, அவனாலேயே முடியும், தக்கபடி முயன்றால், என்பதுபற்றி ஆராய்ந்தார்.

கோளங்கள் பற்றியும், ஒழுக்கமுறை பற்றியும், ப்ரூனோ தீட்டிய மூன்று அரிய ஏடுகள், பழைய கோட்பாட்டைத் தகர்த் தெரிவனவாக அமைந்தன.

கலத்தில் இருப்போன்தான் அலையையும் சுழலையும் சமாளித்துக் கலத்தைச் செலுத்தவேண்டுமே தவிர, இக்கரையிலோ அக்கரையிலோ இருந்துகொண்டு ஒருவன் கலத்தைச் செலுத்துவான் என்று எங்ஙனம் கூறமுடியும் - மனிதனும் அதுபோன்றே, தன் சிந்தனையையும் செயலையும் அவனேதான் செலுத்திச் செல்லவேண்டும், அதற்காக வேறு ஒருவரை நியமித்துக்கொள்வது பொருளற்றது, எனவே பயனற்றது என்று ப்ரூனோ வாதிட்டார்.

தூய்மையான சிந்தனை, செம்மையான செயலைச் செய்யும் முயற்சி - இவை மனிதனை ஈடேறச் செய்யும் என்று ப்ரூனோ கூறினார்.

மதவாதிகள், மனிதனுக்குப் ‘போலீஸ்’ வேலை செய்தனர் - ப்ரூனோ ‘தோழமை’ பேசினான். மனிதன் இயல்பால் கெட்ட வனுமல்ல, பாபியுமல்ல, அவனிடம் ‘தெய்வீகம்’ இருக்கத்தான் செய்கிறது; அதனை அறிந்திட, தன்னைத்தான் உணர்தல் வேண்டும்; தன்னை அறிந்து இன்புற்று, தக்கன தகாதன என்ற பாகுபாடு பெற்று, பாடு அறிந்து ஒழுகுதல் வேண்டும் - மனிதன், கயமை, தூய்மை எனும் இரு கடல்களுக்கிடையே தவிக்கும் கலம், நாங்களே மீகான்கள் என்று கூறும் மதவாதிகள் போலன்றி, ப்ரூனோ, மனிதன் மேம்பாடடைய முடியும், சுய முயற்சியால், என்று நம்பினான். இதனை எப்படி, தொழுகை ஸ்தலங்களை நம்பி வாழ்வோர், பொறுத்துக்கொள்ளமுடியும். பகை மூண்டது. ப்ரூனோ அஞ்சவில்லை.

சுவிட்சர்லந்து விரட்டினால், பிரான்சு, அங்கு எதிர்ப்பு வெப்பமானால், இங்கிலாந்து, அங்கும் பகைமூண்டால், ஜெர்மனி, இவ்வண்ணம், ஓடியவண்ணம் இருந்தார் - எந்த இடம் தங்குமிடம் ஆனபோதிலும், கோபர்னிகஸ் கொள்கையை வலியுறுத்துவார்.

இங்கிலாந்து நாட்டிலே ப்ரூனோ தங்கி இருந்தபோது, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், அறிவு வளர்ச்சி விழா நடைபெற்றது; பல்வேறு நாட்டு அறிஞர்கள் கலந்துகொண்டனர்; ப்ரூனோ, அங்கு, கோபர்னிகஸ் கொள்கையை வாதாடினார், குதூகலம் கொதிப்பாக மாறிவிட்டது. - சுட்டிக் காட்டிச் சுடுசொல் கூறலாயினர் மக்கள்.

“போகிறான் பார் நாத்திகன்!”

“உலகம் சுற்றுகிறது என்கிறான் இந்த உலுத்தன்”

“சூரியன் சுற்றாதாம் - மேதாவி கூறுகிறான்” என்று ஏளனம் செய்வர் - மிரட்டுவர்.

இங்கிலாந்திலும வெப்பம் அதிகமாகிவிட்டது.

ஜெர்மெனியிலிருந்த விர்ட்டன்பர்க் பல்கலைக் கழகத்தில், ப்ரூனோவுக்கு, நிம்மதி அளிக்கும் வாழ்வு கிடைத்தது; தத்துவப் பேராசிரியாகப் பணியாற்றினார் - அவருடைய கொள்கைக்காக வெறுத்து விரட்டவில்லை; அவர் கண்ட ஆராய்ச்சி உண்மையை அவர் எடுத்துரைக்கட்டும், அது அவர் உரிமை, என்று பெருந்தன்மையுடனும், தாராளத் தன்மையுடனும் விர்ட்டன்பர்க் பல்கலைக் கழகத்தினர் நடந்துகொண்டனர்.

நிம்மதி, ப்ரூனோவுக்குச் சில காலமே பிடித்து; பிறகோ அவருக்குப் போரிடவேண்டும், என்ற எண்ணம் துளைத்தது. கொள்கையை, மறுப்போரிருக்கும் இடத்திலெல்லாம் சென்று பரப்புதல்வேண்டும்; அறிவுப் போர் வாழ்வின் குறிக்கோள், என்று கருதினார். போர்வீரன், மனம் களம் காணாது, கழனியில் கதிரின் அழகுகண்டு காலந்தள்ளுவதற்கு ஒருப்படுமோ! திறம்வந்த நாள் முதல் போரிட்டே பழக்கமாகிவிட்டது.

ப்ரூனோ, மடாலயத்தில் சேருவதற்கு முன்பு, தாயும், சிறப்பாகவும், ப்ரூனோவை, போர் வீரனாக்கவே விரும்பினார்கள். ப்ரூனோவேதான், அறிவுபெற மடலாயம் செல்வேன், என்று கூறினான். மக்களை மக்கள் காரணமற்றுக் கொன்று குவிக்கும் போர் முறையை, சிறுவன் ப்ரூனோ, தாயிடம் கண்டித்து, வெறுத்துப் பேசினான். “எவனோ சோம்பேறிச் சீமான் சண்டையிடச் சொல்வான், அவனுக்காக, என்போன்ற ஏழையைக் கொல்ல நான் செல்ல வேண்டுமா,” என்று கேட்டான்; தாயின் உள்ளம் மகனுடைய நேர்மையும் ஈரமும் கொண்ட உள்ளத்தைக் கண்டு பூரித்துப்போயிருக்கும்! அவள் என்ன கண்டாள், பாபம், ப்ரூனோ, வேறோர் பயங்கரப் போருக்குச் செல்வான் என்பதை.

போர் உள்ளம் கொண்ட ப்ரூனோ, நிம்மதி தந்த விர்ட்டன் பர்க்கைவிட்டு, பிராங்பர்ட், துவா, போன்ற இடங்கள் சென்றான்.

யார் செய்த சூழ்ச்சியோ, இதுநாள் வரை, ரோம் நகர மத அதிபர் பிடியில் சிக்காது இருந்து வந்த ப்ரூனோவை, ஆபத்தில் கொண்டுவந்து சேர்த்தது.

ப்ரூனோவுக்கு எப்போதும், சிறுவயது முதலே தாயகத்தினிடம் அளவற்ற பற்று எந்த நாட்டிலே உலவினாலும், இத்தாலியைப் பற்றிய எண்ணம் மனத்தில் கனிந்து நிற்கும். நீலநிற வானமுள்ள என் இத்தாலி எங்கே! என்று ஏங்கிக் கூறிக்
கொள்வான். மடாலயத்திலிருந்து, தப்பி ஓடியபோது, சுவிட்சர் லாந்து நாட்டு எல்லையருகே நின்று, இத்தாலியைவிட்டு பிரிகிறோம். மீண்டும் இங்கு வருவோமா, எனக்குத் தொட்டில் தந்த இத்தாலி, கல்லறைதான் தர இருக்கிறதா, இங்கு நான் வாழ இடமில்லையா, தாயகமே! பேயகமாக மாற்றப்பட்டு விட்டாயே என்றெல்லாம் எண்ணிக் கசிந்துருகினான் ப்ருனோ. போர் உள்ளமும், தாயகப் பற்றும், ப்ருனோவை, சதிகாரனிடம் சிக்க வைத்தது.

ரோம்நாட்டு மத அதிபர்கள், தமது எதிரிகளை கண்ணி வைத்துப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். லூதருக்கும் அவர்கள் வலை வைத்தனர் - ஆனால் அவருக்குத் துணையாக சிலரும் மக்கள் திரண்டு நின்றதாலும், அன்றைய அரசியல் நிலை மாற்றங்கள் அவருக்குச் சாதகமளித்தாலும், அவர் தப்பித்துக் கொண்டார். ரோம் மத அதிபரின் ஆதிக்கத்தை அழிக்கும் பிராடெஸ்டென்டு புயல் கிளம்பிய நாள் தொட்டு மோப்பம் பிடித்துச் செல்லும் வேட்டை நாய்கள் போன்ற ஒற்றர்கள் பல்வேறு நாடுகளிலும் சுற்றிய வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு, ப்ரூனோவின் நடவடிக்கைகள் யாவும் நன்கு தெரியும். இத்தாலிய மண்ணிலே, ப்ரூனோ கால் வைத்ததும் கவ்விக்கொள்ளக் காத்துக் கிடந்தனர். பகைமூண்ட இடங்களிலேயே ப்ரூனோ, நீண்ட காலம், தங்கி இந்திருந்தாலும் அவனை ஒழிக்க வழிகண்டிருப்பர் – ஆனால் அந்தப் புயல் ஓரிடத்தில் தங்கவில்லை, ஒரு நாட்டிலும் ஓய்ந்து இருக்கவில்லை.

இத்தாலி நாட்டுச் சீமான் ஒருவன் மோஷினிகோ – எனும் பெருடையான், ப்ரூனோவுக்கு ஓர் அழைப்புக் கடிதம் அனுப்பினான். என் மாளிகையில் வந்து தங்கி இருந்து, என் மகனுக்குத் தத்துவம் கற்றுத் தருக! உமக்கு இங்கு எந்த ஆபத்தும் நேரிடா வண்ணம் நான் பாதுகாப்பளிக்கிறேன், என்று எழுதியிருந்தான். ப்ரூனோ களிப்படைந்தார். என் இத்தாலி அழைக்கிறது! பசுமை நிரம்பிய தோட்டங்கள் என் கண்களுக்கு மண்டும் விருந்தளிக்கும். என் தாயகத்தில் மீண்டும் உலவலாம். என் உள்ளத்தில் உள்ளதை என் நாட்டவருக்கு உரைத்திடலாம். நல்ல வாய்ப்பு ஈடில்லா இன்பம்! என்றெல்லாம் எண்ணிக் களித்தார். ப்ரூனோவுக்குச் சதிகாரர்களின் இயல்பு தெரியாது. அவர் பண்பு அறிவார், படித்தவர்களின் பழக்க வழக்கமறிவார், சூது பேசும் சதிகாரர்களின் போக்கினை அறியார்.

இத்தாலி யில், இனிமைதரும் திராட்சை மட்டுமா இருக்கிறது – எரிமலையுமல்லவா இருக்கிறது! வெசு வயஸ் மட்டுமல்ல; மத அதிபர் இருக்கிறார், எந்த நேரத்திலும் அவர் சாபம் எரிமலை கக்கும் நெருப்பைவிடக் கொடுமையாக் கிளம்பக் கூடும் நாம் அங்குச் செல்வது ஆபத்தாக முடியும், என்று எண்ணத்தான் செய்தார். ஆனால் அந்தச் சூதுக்காரன் அனுப்பி வைத்த கடிதம், அவரை ஏமாற்றி விட்டது. இத்தாலியை நாட்டுச் சீமான் – அவனால் மத அதிபரின் பகையைக்கூட எதிர்த்து நிற்க இயலும் – அந்த மாளிகையைத் தாக்க துணிவு பிறக்காது, மத ஆதிக்கக்காரருக்கு, என்று எண்ணினான்.

ஒரு வேளை பகை பட்டுவிட்டது போலும் – ஒருவேளை நமது கொள்கையை ஆதரிப்போரின் தொகை இத்தாலியில் வளர்ந்துள்ளதுபோலும் – இல்லை என்றால் தன் மகனுக்குத் தத்துவ ஆசிரியராக இருக்கும்படி, ஏன் அந்தச் சீமான் அழைக்கப் போகிறார், என்று எண்ணினாரோ என்னவோ, ஏமாந்துவிட்டார். புற்றருகே அமர இசைந்து விட்டார்.

வெனிஸ் நகர்! கடலலை தழுவும் கோட்டைச்சுவர் உள்ள அழகிய மாளிகை! ப்ரூனோ அங்குத் தங்கி, தமது அருந்திறனை அள்ளி அளித்து வந்தார், சீமான் மகனுக்கு. வெள்ளியை உருக்கி வார்க்கும் நிலவுபோல, அவர் அறிவு புகட்டி வந்தார் வாலிபச் சீமானுக்கு – ஆனால், அவன் மனத்திலே அறிவு புகவா செய்தது – அவன் முற் ஏற்பாட்டின்படி, ப்ரூனோ சொன்னதை எல்லாம், மதவிசாரணைக் குழு அலுவலரிடம் ஒவ்வொரு நாளும் ஒப்புவித்துக் கொண்டிருந்தான் – குற்றப்பத்திரிகை தயாராகிக் கொண்டிருக்கிறது ப்ரூனோ மீது.

“அகண்ட வெளியின் அழகினைக் காண் இளைஞனே! இயற்கையின் எழிலைப் பாரப்பா! என்ன கவர்ச்சி! எவ்வளவு நேர்த்தி! வீசும் காற்று, கீதமாக இல்லையா வாலிபனே, உற்றுக்கேள்! கடலலையைக் கண்டால், எத்துணை மாட்சிமை தெரிகிறது. இந்த இயற்கை அழகைக் கெடுக்க அழகும் கற்பனைகளை, கட்டுக் கதைகளைக் கட்டி வைத்திருக்கிறார்களே கபடர்கள்” என்றெல்லாம், பாகு மொழியில் பகுத்தறிவைக் கூறி வந்தார் ப்ரூனோ. எப்போதுமே, ப்ரூனோவுக்கு இயற்கை அழகைக் கண்டு களிப்பதிலே அளவற்ற இன்பம். ஆண்டு பலவாக அவர், மாளிகைகளிலே சிற்சில காலம் தங்கிக் கிடந்தாலும், பெரும் பகுதி, நாடு விட்டு நாடு சுற்றித் திரியும் நிலையிலே இருந்ததால், இயற்கையுடன் நெருங்கிய தோழமை பூண்டிட முடிந்தது. சாலைகளிலே நடப்பார், சோலைகளில் உலவுவார், குன்றின் மீது ஏறி நின்று, சுற்றிலும் தெரியும் கோலம் கண்டு களிப்பார்! வெனிஸ் மாளிகையின் அமைப்பும், இயற்கை அழகை அவருக்கு அள்ளித் தருவதாக அமைந்திருந்தது, கடலோரம் மாளிகையில்!

ஓரிரவு! அற்புதமான நிலவு! அலங்காரப் படகு ஏறி, மாணவனுடன் சென்று, கடற்காட்சி கண்டுவிட்டு, ப்ரூனோ திரும்புகிறார். மாணவனுக்குப் பாடம் கற்றுத் தருகிறார் - அவரே பாடம் பெறுகிறார், இயற்கையைக் கண்டு களிக்கிறார், இதற்கு இணையான இன்பம் வேறு எது என்று கேட்கிறார். பால்வண்ண நிலவைக் கருநிறமேகம் கவ்விக் கொள்வதுண்டு - ஆனால் நிலவு அதனைக் கிழித்தெறிந்துவிட்டு வெற்றி ஒளி வீசும்! ப்ரூனோவைக் கவ்விக்கொள்ள, கருமேகமல்ல, கருநாகம், மனித உருவில் வந்தது, மத விசாரணைக் குழுவினர், சீமானிடம் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி, முகமூடி அணிந்துகொண்டு மாளிகை நோக்கி வருகின்றனர். கடற்பயணம், நிலவொளி, அறிவுதரும் இன்பம் இவற்றில் திளைத்திருக்கிறார் ஜியார்டானோ - அக்கிரமக்காரர்கள் அவர் அறியாவண்ணம், மெல்ல மெல்ல நடந்து வருகிறார்கள் அவரை நோக்கி. இயற்கையின் இனிமை பற்றி அவர் வண்ணச் சிந்து பாடுவதுபோலப் பேசி மகிழ்கிறார், வன்னெஞ்சர்கள், அவரருகே வந்துவிட்டனர், பின்புறமாக! எல்லையற்ற இன்பமே! இயற்கை அழகே! என்று அவர் மன எழுச்சியுடன் கூறுகிறார், கறுப்புப் போர்வையைச் சரேலென அவர்மீது வீசி அவரைச் சிறைபிடிக்கின்றனர், கயவர்கள்! ஒருகணம்! எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. திடுக்கிட்டார்! சிங்கம் பிடிபட்டுவிட்டது; சிலர் சிறைப்படுத்தப்பட்டார். நிலவின் அழகு கண்டு மகிழ்ந்திருந்தார், அவரைப் பாதாளச் சிறைக்கு இழுத்துச் சென்று அடைத்தனர் பாதகர்கள்.

மாளிகையிலே இருந்தது பாதாளச் சிறை! ஆறு ஆண்டுகள் அதிலே அவரை அடைத்து வைத்தனர். ஒளி கண்களில் படுவதில்லை! பறவைகளின் இன்னிசையை அவர் செவி கேட்க வில்லை! இருட்டறை! தனி அறை! ஆடை களையப்பட்டு, அலங்கோலமான நிலை! இரும்புச் சங்கிலிகள்! இந்தக் கொடுமை, ஆறு ஆண்டுகள், வெனிஸ் நகர மாளிகைச் சிறையில்.

நம்பிக்கையற்றவனை நல்வழிப்படுத்த, மதவாதிகள் கையாண்ட முறை என்ன? அவன் உணரும் வண்ணம் உண்மையை அவன் முன் எடுத்து வீசினரா? இல்லை! இரத்தம் பீறிட்டுக்கொண்டு வருமளவுக்குச் சவுக்காலடித்தனர்! மார்க்க ஏடுகளை அவன் முன் கொட்டி “மதியிலி! இதைப்படி, அறிவுபெறு” என்றனரா, இல்லை, கட்டி வைத்து அடித்தனர், இரும்பு வளையங்களிட்டு இம்சித்தனர், இரும்புப் பலகைமீது சாயவைத்து, இரும்பு முள்வளையங்களுள்ள உருளைகளை அவன் மீது உருட்டுவர்; ஆழப்பதிந்து எலும்புவரை உள்ள சதையைப் பிய்த்து வெளியே கொண்டுவரும் சிலர் மாண்டுவிடுவதுண்டு, பெரும்பாலானவர்கள், குற்றுயிராகிவிடுவர், இரத்தம் கசியக் கசிய அவன் வேதனைப்படும்போது, “வேதத்தை ஏற்றுக்கொள்கிறாயா, என்று கேட்பர்; அவன் தேகம், சல்லடைக் கண்போலத் துளைக்கப்பட்டுக்கிடக்கும்போது, “தேவனை பூஜிக்கிறாயா?” என்று கேட்பர். அவன் குற்றுயிராகக் கிடக்கும்போது “குருவுக்குக் கீழ்படிகிறாயா?” என்று கேட்பர். பழத்தைச் சாறு பிழிந்து பருகி இன்பம் பெறுவர் மக்கள், இந்த மகானுபாவர்
கள் பகுத்தறிவு கொள்ளத் துணிபவரின் இரத்தத்தைப் பிழிந்து எடுத்து, அவனுக்குக் காட்டி, இன்பம் பெற்றனர்.

ஜியார்டனோ ப்ரூனோ, ஆறு ஆண்டுகள் இந்தக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டான்! உடலில் இன்னும் கொஞ்சம் வலுவிருக்கிறது, பிடிவாதம் குறையவில்லை, இன்னும் சில நாட்களில் பயல் பணிந்துவிடுவான் என்று எண்ணிக் கொண்டனர் - அந்த அக்கிரமக்காரர்கள் அதுபோலப் பலரைப் பணிய வைத்த
வர்கள்! ஆனால் ப்ரூனோவை அவர்கள் அடிக்கடி காண முடியுமா!
அவர் அவர்களுடைய முறை கண்டு, மனம் உடைய வில்லை. தகுந்த விலை கொடுக்கிறோம், என்றே எண்ணிக் கொண்டார்.

“இந்த மகா பாபி, என்னவெல்லாம் சொன்னான், சொல்லு தம்பீ,” என்று வாலிபச் சீமானை, ப்ரூனோ எதிரே கொண்டு வந்து நிறுத்தி வைத்துக் கேட்டனராம் ஒருநாள் - அவன் குளறினான், “ஐயன்மீர்! ஏன், அந்த அறியாச் சிறுவனை இம்சிக்கிறீர்கள். நானே கூறுகிறேன் கேளும்” என்று கேலியாகப் பேசினாராம் ப்ரூனோ.

இவ்வளவு இம்சைக்குப் பிறகும் இவனிடம் பிடிவாதம் இருக்கிறதே என்று திகைத்த அந்தத் தீயர்கள், ப்ரூனோவைத் திருத்தலத்துக்கே அனுப்பிவிடத்தான் வேண்டும் என்று தீர்மானித்தனர் - ப்ரூனோ, ரோம் நகர் கொண்டுசெல்லப் பட்டான். மோட்சலோகத் திறவுகோல் உள்ள திருத்தலமல்லவா, ரோம்! இரண்டாண்டுகள் அங்கே சிறை! அவ்வப்போது, மத நூல் வல்லுநர்கள் ப்ரூனோவை விசாரிப்பர்’ - ஒவ்வோர் முறையும், ப்ரூனோவின் அறிவுத் தெளிவு அவர்களைத் திகைக்கச் செய்தது, இறுதியில், ‘இவன் திருத்தப்படமுடியாத நாத்தீகன்’ என்று திருச்சபையினர் தீர்ப்பளித்து, இந்தப் பாவியின் இரத்தம் மண்ணில் விழாதபடி இவனைக் கொல்க! என்று கட்டளை
யிட்டு, அதனை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை அறமன்றத் துக்கு அறித்தனராம்.
இரத்தம் கீழே சிந்தலாகாது என்றனராம்! ஆறு ஆண்டுகள் அந்த வெனிஸ் நகரச் சிறையிலே இரத்தமும் சதையும் கலந்து கலந்து வெளிவந்தது - இப்போது இரத்தம் கீழே சிந்தலாகாது என்றனராம்! என்ன பொருள் அதற்கு? உயிரோடு கட்டிவைத்துக் கொளுத்து என்பதாகும்.

ஆண்டு பலவாக அவர்கள் படித்த மத ஏடுகள் ஏரளாம் - ஐயன் அருளும் உடையார் என்று கூறப்பட்டது - அவர்களால் ஒரு ‘நாத்திக’னுடன் வாதிட்டு, அவன் கொள்கையை முறியடிக்க இயலவில்லை - உயிரோடு கொளுத்திவிடு என்றுதான் கூறமுடிந்தது, என்செய்வார்கள் அவர்கள்! அவனுடைய அறிவு கிளப்பும் புரட்சித் தீ, மடாலயத்திலே குன்றெனக் குவித்து வைத்துள்ள மத ஏடுகளைச் சுட்டுப் பொசுக்குகிறதே! தப்ப வழியில்லை, எனவே அவனைத் தீயிலே தள்ளு என்றனர்.

“நாத்திகன் - எனவே நாதன் இவனைத் தண்டிப்பார், நிச்சயமாக” என்று கூறிடக் கூட இவர்களுக்கு, நம்பிக்கை இல்லை! ஒருவேளை, அவர்கள் ஆண்டவனின் தீர்ப்புக்கு இந்த வழக்கை விடலாகாது, ப்ரூனோ பக்கம் தீர்ப்புக் கிடைத்தாலும் கிடைத்துவிடும், என்று அஞ்சினர் போலும்! ஆத்திகத்தைக் காத்திட அரண்மனைகளும் மாளிகைகளும் மட்டுமல்ல, சிறு குடில்கள் இலட்ச இலட்சமாக உள்ளன - இதனை ஒரு ப்ரூனோவின் கொள்கை என்ன செய்துவிடமுடியும், கத்தித் திரியட்டும், நமது பக்தர்களின் தொழுகையின் சத்தத்தின் முன்பு இவனுடைய புரட்சிக் குரல் நிற்குமா, என்று எண்ணும் துணிவு இல்லை! ஒருவேளை, ப்ரூனோ வென்றுவிட்டால், தங்கள் ஆதிக்கம் என்ன கதி ஆவது என்ற அச்சமே அவர்களைப் பிடித் தாட்டிற்று.

பிராடெஸ்டன்டுகளைக் கூடச் சகித்துக்கொள்ளலாம் - அவர்கள் அடிப்படையை மறுக்கவில்லை, நமது ஆதிக்கத்தில் இருக்க மறுக்கிறார்கள், எனினும், ஜெபமாலை, தொழுகை, இவை உள்ளன; இவன் போன்றார், அனுமதிக்கப்பட்டால், பிறகு, நமக்கு மிச்சம் என்ன இருக்கும்? இவன்தான், விண்ணிலே சுவர்க்கம் இல்லை, மண்ணுக்கு அடியில் நரகம் இல்லை, என்று பேசுகிறானே, இந்த இரண்டும் இல்லை என்று மக்கள் தீர்மானித்துவிட்டால், நாம் ஏது, நமக்குள்ள இந்தச் சுவைமிக்க வாழ்வு ஏது, என்று எண்ணினர் - குலை நடுக்கமெடுத்துவிட்டது - கொளுத்துங்கள் இவனை, என்று கொக்கரித்தனர்.

பழிபாவத்துக்கு அஞ்சாத பாவியாக இருக்கலாம் ஒருவன் - தாங்கிக்கொள்ளலாம், பாவத்தைத் துடைத்திடும் பரிகார முறை தரலாம், திருத்தலாம்; கொள்ளைக்காரனைக் கூட, புண்ணியவானாகும்படி புத்திகூறி, கோவில் கட்டச் சொல்லலாம்; கசிந்து உருகு காரிகையே! கற்பு இழந்த என்னைக் காப்பாற்று என்று நெஞ்சுருக இறைஞ்ச! நோன்பு இரு! திருத்தலங்களைத் தொழுது அடியார்களை வழிபடு, பாவக்கறை கழுவப்படும் என்று கூறி வழுக்கி விழுந்த வனிதையை, மீண்டும் பரிசுத்தமாக்கிவிடலாம் - ஆனால் ப்ரூனோ! இவன் பாபம் செய்தால் பரவாயில்லையே - பாபம் என்று கூறுகிறீர்களே, எதை? என்றல்லவா, கேட்கிறான். மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவனிடமே இருக்கிறது, என்றுகூறி, நம்முடைய வேலையைப் பறிக்கிறானே! விட்டுவைத்தால் விபத்து நிச்சயம், எனவே தீயிலே தள்ளுங்கள் என்றனர்.

“கோவிலை இடிப்பதும் கொளுத்துவதும், பாபம்தானே?”

“நிச்சயமாக, பாபம்தான்”

“இவன் கத்தோலிக்கத் தேவாலயத்தைக் கொளுத்திய மகாபாவி”

“ஏன் கொளுத்தினான் தேவாலயத்தை?”

“பிராடெஸ்டண்டு மார்க்கமாம் - எனவே, கத்தோலிக்க மடலாயத்தைக் கொளுத்துவது, புண்ணிய காரியம் என்று கருதிக் கொண்டானாம்.”

பிராடெஸ்டெண்டு நீதியாளர்களின், நெரித்த புருவம் மாறிவிடுகிறது - மன்னிப்புக் கிடைக்கிறது. அதுபோன்றே, கத்தோலிக்கர்கள், பிராடெஸ்டான்டை இம்சை செய்வது, பாவமாகாது என்று கருதி வந்தனர். எனவே பாபம், என்பதற்கே, இரு வகையினரும், ஒன்றுக்கொன்று நேர்மாறான விளக்க உரை தரலாயினர்.