அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

எட்டு நாட்கள்
4

ஆனால், ப்ரூனோ, இரு சாராருக்கும், ‘ஆகாதவன்’ ஏனெனில் அவன், உலகம் உருண்டை என்று கூறி, புனிதக் கருத்துகளை மறுக்கிறான்! மாபாவி! எனவே கொளுத்திக் கொல்க என்றனர்.
கோபர்னிகஸ், உலகு பற்றிய தன் கருத்தைக் கூறு முன்பே, மத ஏடுகளைக் கேலிப் பொருளாக்கும் சம்பவமொன்று நடந்தது. ஆசார்ய புருஷர்களும், அர்ச்சகர்களும், சன்னிதானங் களும், சாதாரணச் சாமியார்களும், நம்பிக்கையுடனும் ஆவேச மாகவும், உலகு மோட்சம், நரகம், என்பவை பற்றிக் கூறிவந்த உபதேச உரைக்கு வேட்டு வைத்தான், ஒரு சாதாரணக் கப்பலோட்டி!
மாகெல்லான் என்பவன், ஸ்பெயின் நாட்டில், செவில்லி எனும் கடலகத்திலிருந்து கிளம்பினான் கலத்தில் - மேற்குத் திசையாக! மேற்குத் திசையாகவே சென்றான்! திசைமாறவில்லை; திரும்பவில்லை; மேலால், மேலால் செல்கிறான் - உலகம் தட்டை என்றால், கடைசி பாகம் எது காண்பேன், என்று பிடிவாதம் பேசுகிறான் - “மகனே! மாபாவியாகாதே! அருளாளர்கள் அளித்த உண்மையைச் சந்தேகிக்காதே, உலகம் தட்டை தான் - நீ, கடைசிவரை சென்றால் - அதோகதிதான்,” என்று மதவாதிள் எச்சரித்தனர். அவனோ நான் உலகம் உருண்டை என்று நம்புகிறேன் - உலகின் நிழல், சந்திரன் மீது வீழ்கிறது என்பதை உணர்கிறேன் - எனக்கு அந்த நிழல் தரும் நம்பிக்கையை, உங்கள் நிகண்டுகள் தரவில்லை, எனவே நான் செல்வேன், செல்வேன்” என்று கூறுகிறான். வென்றான்! மேற்கு நோக்கியேதான் சென்றான், மாகெல்லான் திசை மாறவில்லை. 1519ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் பத்தாம் நாள் சொல்லிவிட்டுக் கிளம்பியவன், 1522ஆம் ஆண்டு, செப்டம்பர் 7ந் தேதி, செவில்லி வந்தடைந்தான் - ஒரே திசையில் பயணம் செய்து! உலகம் உருண்டைதானே! என்றான். ஆமாம் போலிருக்கிறதே, என்று சிலர் இழுத்தாற் போல் பேசினர்., மதவாதிகளின் மயக்கமொழி, மாகெல்லான் பெற்ற வெற்றியின் உண்மையை மாய்த்தது. உலகம் தட்டை தான் என்றனர் மக்கள். கோபர்னிகஸ், அறிவாளிகள் உள்ளத்திலேயே புயல் எழக்கூடிய வகையிலே ஏடு தீட்டினான். தேவாலயம் அதனைத் தீண்டாதீர் என்று உத்தரவிட்டது. 1616ஆம் அண்டு ப்ரூனோ இறந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, போப்பாண்டவரே முன்னின்று, கோபர்னிகசின் கொள்கையைக் கண்டிக்க வேண்டி நேரிட்டது! கொளுத்திவிட்டனர், ப்ரூனோவை. கொள்கையோ, மடியவில்லை, போப்பின் சாபம் வீசப்பட்டது - அப்போதும் சாகவில்லை - கொள்கை வளர்ந்தது புதுப்புது ஆராய்ச்சியாளர்கள் தோன்றலாயினர் - ப்ரூனோவின் சார்பிலே பேசப் பலர் முன்வந்தனர். 278 ஆண்டுகள் போரிட்டுப் பார்த்து, தேவாலயம்! உலகம் உருண்டை என்பதையும், சுற்றி வருகிறது என்பதையும் ஏற்க மறுத்தது. கடைசியில், களத்தை விட்டு, தேவாலயத்தாரே ஓடிவிட்டனர், ப்ரூனோக்கள் அல்ல! ஒரு ப்ரூனோவைக் கொளுத்திவிட்டால் வேறு ப்ரூனோக்கள் கிளம்பமாட்டார்கள் என்று எண்ணியவர்கள் ஏமாந்தனர், பல்கலைக் கழகங்களும், ஆராய்ச்சிக் கூடங்களும், வேக வேகமாகப் புத்தறிவின் சார்பிலே, படை திரட்டித் தந்தன! என்ன மர்மமோ? என்ன மாயமோ? என்று மக்கள் கேட்டுக்கிடந்த பல நிகழ்ச்சிகளுக்கும் பொருள்களுக்கும் விளக்கம் அளிக்க முன்வந்தனர் ஆராய்ச்சியாளர்கள் - பழமைப்படை புறமுதுகிட்டோடிற்று. கடைசியில், ப்ரூனோவிடம் மத உலகு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதுபோல, 1821-ஆம் ஆண்டு ஏழாம் பயன் எனும் போப்பாண்டவர், கோபர்னிகஸ் கொள்கைமீது இருந்த கண்டனத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார்! மதவாதிகளும், உருண்டை உலகில் வாழச் சம்மதித்தனர்!

இந்தப் பெரு வெற்றிக்காக, ப்ரூனோ, தீயிலே தள்ளப்பட நேரிட்டது. எட்டு நாட்களில், அவருடைய மனத்திலே ஒரு துளி மருட்சியோ, மயக்கமோ கிளம்பி இருந்தால், போதும், அவர் உயிர் தப்பியிருக்கும், ஆனால் புத்தறிவு பிணமாக்கப்பட்டிருக்கும். ப்ரூனோ, உண்மை தழைக்கட்டும், என் உடல் சாம்பலாகட்டும் என்றார். எட்டு நாட்களிலே, அவர் மனக்கண்முன் தோன்றித் தோன்றி மறைந்த காட்சிகள் எத்தனையோ! துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்தை எண்ணிக் கொண்டாரோ! மடலாயத்திலே துருவித் துருவிப் படித்த நாட்களை எண்ணிக்கொண்டாரோ! அன்பு பொழிந்த தாயையும், அக்கறை காட்டிய தந்தையையும் எண்ணியிருப்பார்! அவர் மனக்கண்முன் நடுக்கும் குரலுடன் பேசும் ஆன்ஸ்லம் பாதிரியாரும் திகைத்து நிற்கும் என்ரி மன்னனும், தேள் கொட்டினவர்போல அலறிய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், தெரிந்திருப்பர்! காட்டிக்கொடுத்தவனைக் கண்டிருப்பார் - பயத்துக்கு அடிமைப் பட்டவன், பரிதாபத்துக்குரியவன் என்று எண்ணியிருப்பார்.

எட்டு நாட்கள்தானே! விரைவிலே ஓடிவிடும் - என் கதையும் முடிந்துவிடும் என்று எண்ணி இருந்திருப்பார். அவர்தம் எண்ணத்தை வெளியிட வாய்ப்பில்லை. விஷம் தரப்பட்ட சாக்ரடீசுக்கு, கடைசிப் பொழுதில், நண்பர்கள் உடனிருந்தனர் - உலகு, அவருடைய எண்ணங்களை ஓரளவு அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. ப்ரூனோவுக்கு அஃதும் இல்லை!

ஆனால், சொல்ல வேண்டியதைப் ப்ரூனோ, நாடு பல சுற்றிச் சொல்லிவிட்டார்! ஒரு வாழ்நாளில் செய்ய வேண்டியதைச் செய்து விட்டார்! பல்கலைக் கழகங்கள் எல்லாம், உலகம் உருண்டையா? தட்டையா? என்று விவாதித்த வண்ணம் உள்ளன. தெளிவறியா மக்கள் மட்டுமே, புத்தறிவைக் கொள்ளப் பீதி அடைகின்றனர். வேலை முடிந்துவிட்டது போலத்தான் - அரியதோர் உண்மையை உலகு ஏற்றுக் கொள்வதற்காக, என் உயிர், காணிக்கையாகட்டும் என்று, எண்ணியிருப்பார்! அந்தத் தூய்மையாளன் உள்ளத்திலே, இத்தகு உயர் எண்ணங்களன்றி வேறென்ன மலர முடியும்.
எட்டு நாட்கள் ஓடின; மதவாதிகள் ஏமாந்தனர் - ப்ரூனோ வெற்றி பெற்றார்.

சதுக்கத்திலே, ஏராளமான கூட்டம் - வேடிக்கை பார்க்க, நாத்தீகனைக் கொளுத்தப் போகிறார்கள், ஆத்திகர்களுக்கு அந்த ‘வாண வேடிக்கை’யைக் காண்பது தவிர வேறு வேடிக்கை இருக்க முடியுமா! வேடிக்கை மட்டுமா அது - ‘பக்தரின் கடமையு மாயிற்றே!’

ப்ரூனோவுக்கு மஞ்சள் ஆடை அணிவித்தனர் - பாவிகளுக்கு, வேத நிந்தகருக்கு, மஞ்சள் நிற ஆடை தருவது வாடிக்கை.

அந்த உடையிலே, பேய் பூதம் பிசாசு, பெருநெருப்பு, போன்ற சித்திரங்கள் - இவன் நரகம் செல்கிறான் என்பதைக் காட்ட. இழுத்துச் செல்கிறார்கள் ப்ரூனோவை! ஏறு நடை! கலங்கா உள்ளம்! புன்னகைகூடத் தெரிகிறது.

இரு மருங்கிலும் கூடி நிற்கும் ஏது மறியாதவர்கள், தூற்று கிறார்கள் - ஏசுகிறார்கள்! ப்ரூனோ, அவர்களைக் கண்டு கோபம் கொள்ளவில்லை.

ஓடி வருகிறார் ஒரு சாமியார் - மரத்தாலான சிறு சிலுவையை ப்ரூனோவின் முகத்திற்கெதிரே காட்டுகிறார் - சாகுமுன் சிலுவைக்குப் பணியட்டும் என்று!

சிலுவை! இதன் பெயர் கூறிக்கொண்டு எவ்வளவு அக்கிரமத்தைச் செய்கிறீர்கள், அறிவிலிகளே! என்று கேட்பவர் போல, ப்ரூனோ முகத்தை வேறோர் பக்கம் திருப்பிக்கொள்கிறார்.

கம்பம் - அதிலே கட்டுகிறார்கள் - தீ வளருகிறது! எதிரே, காட்டுக் கூச்சல் - ப்ரூனோ அமைதியே உருவானவராக நிற்கிறார், புகை சூழ்ந்து கொள்கிறது, அதைக் கிழித்துக் கொண்டு நெருப்பு தெரிகிறது - உடல் கருகுகிறது - அதோ, அதோ: என்று காட்டுகிறார்கள் - முகம் தெரிகிறது, தீச்சுழலுக்கு இடையில் அமைதியான முகம் - தியாகியின் முகம்!

தீயோர் மூட்டிய தீ, தன் வேலையைச் செய்து முடித்து விட்டது - ப்ரூனோ சாம்பலாக்கப்பட்டார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்று கூறி அன்பு மார்க்கம் சமைத்துத் தந்தார் எமது தேவன் என்று கூறிக்கொண்டனர்; அவர்கள் ப்ரூனோவை நெருப்பிலிட்டனர்.

பல தெய்வ வணக்கத்தையும் காட்டுமிராண்டிச் சடங்கு களையும் எதிர்த்து அறப்போர் நடத்திய அண்ணலைச் சிலு வையில் அறைந்தார்கள் பாதகர்கள் என்று கூறிய விசுவாசிகள், அந்தச் சிலுவை தரும் நெறியையும் மறந்து, ப்ரூனோவைத் தீயிலிட்டனர்.

“அவர்களை மன்னித்துவிடுக, அண்ணலே, அவர்கள் அறியார்கள் என்ன செய்கிறோமென்று” என்று சிலுவையில் அறையப்படும்போது ஏசு கூறினாரென்றுரைத்து உருகும் கிருஸ்தவர்கள், ப்ரூனோவைக் கட்டி வைத்துக் கொளுத்தினர்.

ஆதிக்கத்திலிருந்த பல தெய்வ வழிபாட்டு முறையை எதிர்த்து அன்பு நெறி தந்த ஏசுவின் சொல்லைக் கேட்டும், செயலைக் கண்டும், அந்த நாள் மத ஆதிக்கக்காரர்கள், நாத்தீகன் என்று நிந்தித்தனர் - தெய்வத்தின் பெயர்கூறி வதைத்தனர். சிலுவை காட்சி தந்தது.

அக்கிரமக்காரர்கள் தந்த கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளும் உள்ள உரமும், கொள்கைப் பற்றும் இருந்தது என்பதை எடுத்துக் காட்டும் சின்னம், இந்தச் சிலுவை என்றனர் - அதைக் கண்டும், கருத்திலே தெளிவுபெற மறுத்தனர் - அதைக் காட்டியே, ப்ரூனோவைக் கொன்றனர்.

பாவிகளை இரட்சிக்க இரத்தம் சிந்தினார், என்று தொழுகையின்போது கூறுபவர்கள், ப்ரூனோவைக் கொன்றால், அன்புக்கும் அறத்துக்கும் இழுக்காகுமே என்று எண்ணவில்லை. எங்கே தங்கள் ஆதிக்கம் அழிந்து பட்டு விடுமோ என்ற அச்சத்துக்குத்தான் ஆட்பட்டனர். கோலாகலமாக ஆண்டு வந்த பழைய மார்க்க மன்னன் ஏசுவைக் கொன்றால்தான் தன் ஆதிக்கம் நிலைத்திருக்க முடியும் என்று எவ்விதம் கோபம் கக்கினானோ, அதற்குத் துளியும் குறைந்ததாக இல்லை, சிலுவை தொழுதோரின் சீற்றம்.

ஏசு மீண்டும் எழுந்து வந்தார் என்கிறார்கள், ப்ரூனோ தேவன் அருள் பெற்றவன்கூட அல்ல, எனினும் ஜியார்டானோ ப்ரூனோ சாகவில்லை - என்றும் நிலைத்து நிற்கும் உண்மை சாகாது.

ஜியார்டானோ ப்ரூனோவைக் கொள்வதற்காக மூட்டப் பட்ட நெருப்பிலிருந்தும், கிளம்பிய சிறு சிறு பொறிகள் பல்வேறு இடங்களிலும் பரவி, குருட்டறிவை அழிக்கும் பணியாற்றின.

அவரை அக்கிரமமாகக் கொன்றதற்குக் கழுவாய் தடுவதுபோல, பிற்காலத்தில், அவருடைய உருவச்சிலையை வைத்தனர். ஆனால் அவர் அடைந்த வெற்றி அது அவர் பகுத்தறிவு, பெருமிதம் கொள்ளச் செய்ததே, அவர் அடைந் வெற்றி. ப்ரூனோ, வாழ்கிறார், வெற்றி வீரராக.

(திராவிட நாடு - 1955)