ஊர்வலம் புறப்பட்டுவிட்டது!
உலகம் அதுவரை கண்டறியாத அருமைமிகு ஊர்வலம்! இதைவிடத் திரளான
மக்கள் கொண்ட ஊர்வலம் நடைபெற்றதுண்டு. கோலாகலம் அதிகம்
இருந்ததுண்டு! மகிழ்ச்சி கொந்தளித்த ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.
முடிதரித்த மன்னனை, “ஆண்டவனின் பிரதிநிதி” என்ற முறையில்,
பயபக்தியுடன் வரவேற்று, வழிபட, மக்கள் இருமருங்கும் கூடிநிற்க,
அருளாளன் அளித்த அதிகாரம் நமக்கு அரணாக இருக்கிறது என்ற
எண்ணம், பார்வையில் தெரிய, அடிபணிந்து கிடக்க, ஆணைகளை
நிறைவேற்ற, கேட்டதைக் கொடுக்க, காத்துக் கிடக்கும் இந்தப்
பெருங்கூட்டத்துக்கு, நாமன்றோ கண்கண்ட கடவுள் என்று எண்ணி
இறும்பூதெய்திய நிலையில், மன்னர்கள் “பவனி” வந்ததுண்டு.
பிடிபட்ட நாட்டிலிருந்து காணிக்கையாகவும், சூறையாடி யும்
கொண்டு வந்த பொருட்குவியலைச் சுமந்து கொண்டு, அடிமை
நிலையைப் பெற்ற முன்னாள் வீரர்கள் அஞ்சி அஞ்சி நடந்துவர,
களத்திலே கடும் போரிட்டு வெற்றிக்கு உழைத்த வீரர் குழாம்,
மகிழ்ச்சி உமிழும் விழிகளுடனும், குருதி தோய்ந்த வாளுடனும்
கம்பீரமாக நடந்துவர, வாழ்க, வீரரே! வாழ்க! வெற்றி பெற்றளித்த
எமது தீரரே வாழ்க!’ என்று மக்கள் கூட்டம், வாழ்த்தொலி
முழங்கி, இருபுறமும் நின்றிட, அதற்கென்று அமைக்கப்பட்டதும்,
அடக்க விதான புரவிகள் பூட்டப்பட்டது மான, ‘தேரிலே’ அமர்ந்து,
புன்னகையை இங்கும் அங்கும் வீசியபடி, நமது வாள் வலிமையால்
வாழுகின்றனர் இந்த மக்கள்! நமது வீரம் தரும் வெற்றியால்
ஏற்றம் பெற்றுவிட்டனர் இந்த மக்கள்! மனைகளில் மகிழ்ச்சியும்,
தொழிலிலே வளர்ச்சியும், வயலிலே செழிப்பும், யாரால் ஏற்படுகிறது
என்பதை அறிந்துதான், இன்று வாழ்த்தி வரவேற்கிறார்கள்.
களத்திலே, நாம் கொட்டிய இரத்தம், இன்று இவர்களுக்கு வாழ்வு
தருகிறது; அங்குச் செந்நீர் கொட்டினோம்; இதோ களிப்புக்
கண்ணீரைச் சிந்துகிறார்கள்! நன்றி காட்டுகிறார்கள்! நல்ல
மக்கள்! நமது மக்கள்! நம் நாட்டவர்! என்று எண்ணிக் களிப்படையும்
வெற்றி விருது பெற்ற வீராதி வீரன், படை அணிவகுப்புடன்
ஊர்வலம் வந்ததுண்டு! கண்கொள்ளாக் காட்சிகள்! சிந்தைக்குச்
செந்தேனாய் அமைந்த இசை நிகழ்ச்சிகளுடன், ஊர்வலங்கள்! கண்களைப்
பறிக்கும் அணிமணியுடன் ‘அலங்காரவல்லிகள்” அன்னமோ, பேசும்
சொர்ணமோ, அல்லிக் கூட்டமோ, அழகு மயில் ஆட்டமோ என்று
கவி அறியாதாரும் களிப்பால் கவிஞர் நிலை பெற்றுக் கூறிக்
குதூகலிக்கும் விதமான காட்சிகளாக அமைந்த ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால் இதுபோன்ற ஊர்வலம் உலகிலே, இதற்கு முன்பும் நடைபெற்றதில்லை;
இனி என்றும் நடைபெறாது என்று கூறத்தக்கதாக அமைந்திருந்தது.
மன்னன் ஆள்கிறான்; மக்கள் மாள்கிறார்கள்! அரண்மனை இருக்கிறது;
அங்கிருந்து கிளம்பும் அழிவுப்புயல், வயலை அழிக்கிறது.
வனிதையரை அழிக்கிறது. தொழிலை நாசமாக்கு கிறது; தோழர்களைத்
துடிக்க வைக்கிறது! அரசன் தலைக்கு முடி கொடுத்தோம்.
அவன் நம் குரல் வளையை நெறிக்க ஆட்களை ஏவுகிறான்! - என்று
மனம் நொந்து, பேசிப் பேசி, அழுது அழுது, கண்ணீரும் வற்றிப்
போன பிறகு, கனல்கக்கி, எதிர்ப்பட்டதெல்லாம் இனிப் பிடிசாம்பலாகும்!
என்று எக்காளமிட்டுக் கொண்டுள்ளனர், ஏதுமறியாதவர்கள்!
எதற்கும் தலையாட்டக் கூடியவர்கள்! - என்று கருதப்பட்டுவந்த
மக்கள்!
அந்த மக்கள், வீறிட்டெழுந்திருக்கும் வேளையிலே, ஊர்வலம்!
மன்னன் வருகிறான் ஊர்வலமாக! இராணியுடன், பெற்றெடுத்த செல்வங்களுடன்!
கடும்புயல் வீசுகிறது; காகிதப்பூ என்ன ஆகும்? பிய்த் தெறியப்பட்டு,
காற்றோடு காற்றாகி, மண்ணோடு மண்ணாகி உருவம் தெரியாமல்
மறைந்து போகும்; அழிந்து போகும்! அதுவன்றோ இயற்கை.
கடும்புயல் வீசிடும்போது, ஆலும் வேலும் அடியற்று வீழுமே!
காகிதப்பூ கணப்பொழுதுதான் நிற்க இயலுமோ!
ஆனால், என்னென்பது அதிசயத்தை! கடும் புயலும் அடிக்கிறது,
காகிதப்பூவும் இருக்கிறது! அம்மட்டோ! காகிதப் பூவை, உடன்
அழைத்து வருகிறது கடும்புயல்! ஆத்திரம் கொண்ட மக்கள்,
அழைத்து வருகிறார்கள், ஆற்றலிழந்த அரசனை, ஊர்வலமாக!! அவன்
கண்டறியாக் காட்சி!
மன்னன் வருகிறான் ஊர்வலமாக! மக்கள் முழக்கமிடு கிறார்கள்,
‘வாழ்க! வாழ்க!’ என்று. ஆனால் யார் வாழ்க என்கிறார்கள்?
மக்கள் ‘வாழ்க!’ என்று முழக்கமிடுகிறார்கள்.
தாய்மார்கள், தமது குழந்தைகளுக்குக் காட்டுகிறார்கள்,
“அதோ, பார்! பார்! அவன்தான் மன்னன்! மிரள மிரள விழிக்கிறானே
அவன்தான்! மண்ணில் போட்டெடுத்த பொம்மைபோல இருக்கிறானே,
அவன்தான்!” என்று கூறிக் கெக்கலி செய்கிறார்கள்.
“என்ன கனிவு! எவ்வளவு குழைவு! கண்ணைப்பார் கண்ணை!” என்று
கோபத்தைக் கேலியில் குழைத்து, வழித் தெடுத்து வீசுகின்றனர்;
கூடை சுமந்து கூலி பெற்றுக் கும்பி நிரப்பும் பெண்டிர்
கூட்டம், இராணியைப் பார்த்து, இராணியாம், இராணி! அவளுக்கு
என்ன அப்படி ஒரு பட்டம். அரசன் மனைவி என்று சொல், அதுபோதும்
- அந்த அழிவு தேடிய ஆணவக்காரிக்கு” என்று பேசுகின்றனர்
சிலர்.
“எதற்கெடுத்தாலும் கோபம்தானா? எப்போதும் சச்சரவு செய்தபடி
இருக்கத்தான் வேண்டுமா? கஷ்டப்படுகிறோம், உண்மைதான்!
கண்ணீர் பொழிகிறோம்; கர்த்தன் அறிவார். அவருடைய அருட்கண்
திறந்தால், எல்லாத் தொல்லையும தொலைந்து போகும். அதை
விட்டுவிட்டு அரசனை எதிர்ப்பது, அவன் ஆட்களை எதிர்ப்பது
என்பதெல்லாம் முறை அல்லவே. ஏன் வீணாக ஆபத்தையும் பாபத்தையும்
தேடிக் கொள்ளுகிறீர்கள்?” என்று ஆடவர்களுக்கு அன்பு கலந்த
அறிவுரையை, அழுத கண்களைத் துடைத்துக் கொண்டு கூறிவந்தவர்கள்தான்,
ஆரணங்குகள்!
‘விதியே எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம்’ என்ற தத்துவத்தைத்
தேவாலயத்தார் மறந்தாலும், இந்தத் தையலர் மறப்பதில்லை!
“உழைப்பைத் திருடி உல்லாசமாக வாழுகிறார்கள், உலுத்தர்கள்”
என்று ஆடவர் பேசிடும்போதும், உள்ள கஷ்டம் போதாதென்று
இந்தப் பாபமும் வேறு வந்து சேருகிறதே” என்றெண்ணிக் கன்னத்தில்
கைவைத்துக் கொண்டு கவலைப் பட்டுக் கிடந்தவர்கள்தாம் அந்தப்
பெண்கள்.
ஆனால், அவர்களும் மாறிவிட்டார்கள், ஆடவரே கண்டு ஆச்சரியப்படத்தக்க
விதத்தில். ஏன் மாற மாட்டார்கள்!
கசையடியால் உடலெங்கும் இரத்தம் பீறிட்ட நிலையில், பண்ணைமேட்டிலே
வீழ்ந்து கிடந்த தகப்பனை, துடிக்கத் துடிக்க, அலற அலறத்
தாக்கி, சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட கணவனை, முளையிலேயே
இந்தப் போக்கிரித்தனமா என்று ஏசி முரட்டுப் பணியாட்கள்
தாக்க, ‘ஐயோ! அம்மா! கொல்லுகிறார்களே! ’ என்று கதறி
ஓடிவந்து காலடி வீழ்ந்த மகனைக்கண்டபிறகு, மாறாமல் எப்படி
இருப்பார்கள்? மாறிவிட்டார்கள்! எந்த அளவுக்கு என்றால்,
இந்த ஆடவர்கள், சந்துமுனை நின்று பேசுவார்கள், உருட்டுவிழி
காட்டினால் ஊராள்வோர் வழிக்குவந்துவிடுவார்கள் என்றெண்ணி
ஏமாந்து கிடப்பார்கள்; செயல்படத் தயங்குவர் என்று கேலி
பேசிவிட்டு, பெண்டிரெல்லாம், திரண்டு ஒன்றுகூடி, “இதென்ன
பேயாட்ட மாடுகிறார்களே” என்று அரண்மனையுள்ளோரும் மாளிகைக்
காரரும் மருண்டு கூறிடத் தக்க விதத்தில், கிடைத்ததைக்
கரத்தில் எடுத்துக் கொண்டு, ஆத்திரம் தீர ஏசிக்கொண்டு,
அரண்மனை நோக்கிப் படை எடுத்துச் சென்று, துப்பாக்கி காட்டியவரைத்
தூ! தூ! என்றேசிவிட்டு, உள்ளே நுழைந்து, கிடந்ததை எடுத்து
வீசி, நொறுக்கித் தூள் தூளாக்கி, அரண்மனையை அல்லோலகல்லோலப்
படுத்திடும் அளவுக்கு மாறிவிட்டார்கள்!
அந்த அளவு மாறிவிட்ட பெண்கள், அரசனும் அரசியும், முன்பு
அடங்கிக் கிடந்த மக்களால், அடக்கப்பட்ட நிலையில் ‘ஊர்வலம்’
வரக்கண்டால், ஏசாமலா இருப்பர்! கண்டபடி ஏசத்தான் செய்வர்.
வெற்றிக் களிப்புடன் கூச்சலிட்டனர்.
சீற்றம்! கேலி! மகிழ்ச்சி! - எல்லாம் கலந்த இரைச்சல்!
யாராருக்கு என்னென்ன தோன்றுகிறதோ, அவை எல்லாம் பேசுகிறார்கள்!
பேசுகிறார்களா? கூவுகிறார்கள்! வார்த்தைகள் மட்டுந்தானா,
கிளம்பின! பார்வைகள், வார்த்தை களைவிடக் கடுமையாக, வேகமாக!
தேக்கிவைக்கப் பட்டிருந்த பெருவெள்ளம், அணையைப் பல இடங்களிலே,
ஒரே நேரத்தில், பிளந்துவிட்டால், என்ன ஆகும்! அதுதான்
இது! மன்னனை ஊர்வலமாக, மக்கள் அழைத்து வந்த காட்சி! ‘அழைத்து
வந்த’ என்பதை நீக்கிவிடுங்கள். ‘இழுத்து வந்த’ என்று கொள்ளுங்கள்!
அரசனுடைய காவற்படை கூட வருகிறது! அரசனைக் காத்திடும் ஆற்றலுடன்
அல்ல, தமது தலை தப்பினால் போதும் என்ற அச்சத்துடன். மக்களின்
பாதுகாப்புப்படை, எண்ணிக்கையில், வலுவில், துணிவில், அதிக
அளவில் வந்து கொண்டிருக்கிறது. அந்தப் படை, ஏது? மக்கள்,
பன்னெடு நாட்கள் சிந்திய கண்ணீர்த்துளிகள், அந்த வடிவம்
கொண்டு விட்டன! கொடுமைகளைத் தாங்கித் தாங்கித் தவித்த
மக்கள் ஈன்றெடுத்த பயங்கரக் குழவி, அந்தப் படை!
போர்ப் பயிற்சியை முறைப்படி பெறவில்லை! உண்மை. ஆனால்
முறைப்படி போர்ப் பயிற்சிபெற்ற படைகளையும் சின்னாபின்னமாக்கும்
துணிவு இருக்கிறது, இந்த மக்கட் படைக்கு! ஏன்? இது, சாக
அஞ்சாத கூட்டம்!
‘கற்பழிக்கப்பட்ட தங்கையின் பிணத்தருகே அமர்ந்து, காதகன்
கணவனாக இருக்கிறானே, நான் என்ன செய்ய இயலும்’ என்று கதறிய
அண்ணன் இருக்கிறான் அந்தப் படையில்!
“சாகக் கிடக்கிறாளய்யா, என் தாய்! இந்தப் பழக்கொத்து
அவளுக்காக, ஐயா!” - என்று கெஞ்சியபோது, இடியெனச் சிரிப்பொலி
கிளப்பி, பழக்கொத்தைப் பறித்துக் கீழே வீசி, தன் குதிரையின்
குளம்பு, பழக்கொத்தை மிதித்து துவைத்திடக்கண்டு, “இதுதான்
உனக்கு! ஓடி, உயிர்பிழைத்துக் கொள்” என்று, ஆர்ப்பரித்து
அமுல் செய்தவனை எதிர்த்து நின்று, அவன் வாளுக்கு இரையான,
அண்ணனைக் கட்டிப் புரண்டு அழுத, தம்பி இருக்கிறான்!
வீடு வாசல் இழந்தவர்கள், வேலை இழந்து தவித்தவர்கள், களஞ்சியம்
கொளுத்தப் பட்டதைக் கண்டு பதைத்தவர்கள், காலில் வீழ்ந்த
போதும் கடுகளவு இரக்கமும் காட்டாதவர்களின் போக்கினால்,
நொந்தவர்கள் இருக்கிறார்கள், அந்தப் படையில். அவர்களுக்குப்
பயிற்சி ஏன்? பயிற்சி இல்லை என்றுதான் எப்படிக் கூறிட
முடியும்? நிரம்பப் பெற்றுவிட்டார்கள் பயிற்சி! கொடுமைகளைக்
கண்டு கண்டு, கொடுமையைக் கொன்றொழித்தாலன்றி, நாம் வாழ
முடியாது என்பதைக் கண்டு கொண்டார்கள்! இரத்தக் கறையைப்
போக்க இரத்தம் கொண்டுதான் கழுவவேண்டும் என்ற பாடம் தெரிந்து
கொண்டார்கள்! இரத்தம் தேடி அலைகிறார்கள்! உழைக்காமல்
அலுத்திடாமல் ஊர் சொத்தை உண்டுகொழுத்து, உல்லாசம் தேடி
அலைந்து, முத்துக் கலந்த பானமும், மோகனாங்கியின் அதரமும்
ஒரு சேரச் சுவைத்து, அனுபவித்தவர்களின் இரத்தம் தேடி அலை
கிறது, இந்தப்படை! உழைப்பாளியின் இரத்தம், மண்ணில் உறைந்து
கிடந்ததைப் பார்த்த கண்களால், உலுத்தர்களின் இரத்தம் எப்படி
இருக்கிறது என்று பார்க்கத் துடிக்கிறது. இந்தப் படை!
ஓநாய்களைத் துரத்திக் கொண்டு வரும் வேட்டைக்காரர்கள்
என்று சொல்வது முறை! இல்லை, இல்லை! வேட்டைக்காரர்களைத்
துரத்திக் கொண்டு வரும் ஓநாய்கள் என்று கூறவேண்டும் என்பர்,
அரசர் பெருமானின் அடிவருடிகள்! கூறட்டுமே! அதனால் என்ன!!
இப்போது வேண்டியது இரத்தம்! - என்ற கூச்சலிடுகிறது, பெருங்கூட்டம்.
அந்தப் பெருங்கூட்டம் புடை சூழத்தான், பவனி வருகிறான்,
மன்னன், குடும்பத்துடன்.
பீரங்கி வண்டிகளை இழுத்து வருகிறார்கள்; அதன் மீது நின்றுகொண்டு,
ஆர்ப்பரிக்கிறார்கள் - பெண்கள்!
துப்பாக்கி தூக்கிக்கொண்டு வருகிறார்கள்! அதன்முனையில்
ரொட்டித்துண்டு, செருகப்பட்டிருக்கிறது!
செடி கொடிகளைப் பறித்தெடுக்கிறார்கள்; பீரங்கி வாயிலே
திணிக்கிறார்கள்.
இரண்டு இலட்சம் இருக்கும் என்கிறார்கள், பெருந்திரள் கண்டு!
இவ்வளவு பேரும், நமக்கு விரோதிகள்! - என்று எண்ணி நடுங்குகிறாள்,
மன்னனை மணந்தவள்! “இவ்வளவு பேரும், என் குடிமக்களாக இருந்தவர்கள்!”
- என்று எண்ணி ஆயாசப் படுகிறான் மன்னன்.
“முன்பெல்லாம், இந்தக் கூட்டத்தவர் வந்தால், “அப்பாவின்
ஆட்கள்” அடித்துத் துரத்துவார்களே, இப்போது மட்டும் ஏன்,
இவர்கள் கூவுகிறார்கள், அப்பா தலை கவிழ்ந்தபடி இருக்கிறார்!”
என்று எண்ணித் திகைக்கிறான், அழிவை வரவழைத்துக் கொண்ட
அரசனின் மகன்!
“நள்ளிரவில் புகவேண்டும்; குடித்துக் கூத்தாடி, அலுத்துப்
படுத்துக் கிடப்பான், மரக்கட்டைபோல! கட்டாரியால் ஓங்கி,
மார்பில் குத்தவேண்டும்! உயிர் போகுமட்டும்!” - என்று
நண்பனிடம், அரசனைப்பற்றி ஆத்திரத்தோடு பேசியவன், இருந்திருக்கக்
கூடும், அந்த ஊர்வலத்தில்! “ஏ! முட்டாள்! நீ ஒரு யோசனை
சொன்னாயே, யாருமறியாமல் அரசனைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்று!
இதைப் பாரடா, ஏமாளி! இதைப் பார்! இது ஆகுமா அது!!” என்று
மற்றவன் கேட்டிருக்கக்கூடும். “ஆமாம்! ஒரே அடியாகச் சாகடித்து
என்ன பலன்! இதோ, மன்னன், விநாடிக்கு விநாடி கொல்லப்படுகிறான்;
மறுபடியும் உயிர் தரப்படுகிறது, மீண்டும் கொல்ல! மானமிழந்து,
மதிப்பிழந்து, மக்களால் இழுத்து வரப்படுகிறான், மன்னன்!
இது அல்லவோ, வெற்றி! மகத்தான வெற்றி! நான், மன்னனைக்
கொல்லப் பார்த்தேன்! இப்போது மக்கள், மன்னனுக்கு மரண
தண்டனை தருகிறார்கள்!! இதுதான் மாபெரும் வெற்றி!!” என்று
அவன் கூறிச் சிரித்திருக்கக் கூடும்.
மக்கள், என்னென்ன பேசுகிறார்கள் என்று மன்னனுக்குப் புரியவில்லை!
அவனுக்குத்தான் மக்களே, புரியவில்லையே! என்ன செய்வான்,
பாவம்!!
மகுடாபிஷேகத்தின்போதும் ஊர்வலம்; இப்போதும் ஊர்வலம்!
எல்லாவற்றுக்கும் நான்தான், கிடைத்தேன்! - என்று எண்ணிக்
கொண்டான், போலும்!
பாரிஸ் பட்டினத்தை நோக்கிச் செல்கிறது, ஊர்வலம்! பட்டத்தரசன்
தலைநகர் வரவேண்டும் என்று மக்கள் அழைத்தனர்; ‘தலைநகரா
அது? தலைபோகும் நகரம்!’ என்று கூறி, மன்னனை அங்குச் செல்லவிடாமல்
தடுத்தனர், கொலு மண்டபத்துக் கொடியோர்! மக்களின் கை
ஓங்கிற்று! அரசன் இருக்கும் இடம் நோக்கிப் பாய்ந்து மக்கள்
வெள்ளம்! அதிலே சிக்கினான் மன்னன், குடும்பத்துடன்! வெள்ளம்,
பாரிஸ் நோக்கிப் பாய்கிறது! அதிலே, மிதந்து வருகிறான்,
மன்னன், உல்லாச ஓடத்தில். அமர்ந்து பழக்கப்பட்டவன்!
பாரிஸ் பட்டினத்தை மேயர், மன்னனை வரவேற்கிறார். “மன்னரே!
தங்கள் வரவு நல்வரவாகுக!” என்று; அவருக்கும் தெரியும்;
அனைவரும் அறிவர் அதன் பொருள். “பிடிபட்ட பேயனே! இனி நீ
எங்கள் கைதி!” என்பதுதான் என்று. மன்னனும், உணர்ந்திருக்கிறான்,
“கைதியாக்கிவிட்டீர்கள். இனி, என் கதி, உங்கள் தீர்ப்பைப்
பொறுத்து இருக்கிறது” என்று.
ஆயினும், சம்பிரதாயத்துக்காக மன்னன் பேசுகிறான்.
“மகிழ்ச்சியுடன் வருகிறேன்; மக்களிடம் நம்பிக்கை வைத்து
வருகிறேன்” என்று அரசன் கூற, மேயர் அதை மக்களுக்கு அறிவிக்கிறான்.
அறிவிக்கும்போது, ‘மக்களிடம் நம்பிக்கை வைத்து’ என்ற
வார்த்தைகளையே, சொல்லாமல் விட்டுவிடுவது கண்ட, இராணி
நினைவுபடுத்துகிறாள், ‘நம்பிக் கையுடன்’ என்ற வார்த்தையைக்
கூறும்படி!
அரசனை எந்த அளவுக்கு அச்சம் பிடித்தாட்டிற்று என்பது இதிலிருந்து
நன்கு தெரிகிறதல்லவா.
“அழைத்தீர்களே என்று வந்திருக்கிறேன். முடியாது என்று
கூறிடும்; ஆற்றலை இழந்துவிட்டேன்; வந்திருக்கிறேன். இழுத்து
வந்தீர்கள் - இங்கு நிற்கிறேன். எனக்குக் கெடுதி எதுவும்
செய்யாதீர்கள். கெஞ்சுகிறேன். கெடுதி செய்யமாட்டீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன்.
திக்கற்றவன்! வலிவிழந்தவன்! உங்கள் மன்னன் உங்களிடம் தஞ்சம்
புகுந்து விட்டேன்!” என்றெல்லாம், விளக்கமாகப் பேச நேரமில்லை,
பேசிப் பழக்கமில்லை! எனவேதான், மன்னன், சுருக்கமாகக் கூறினான்-,
‘நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன்’ என்று.
அந்த மக்கள், எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள், மன்னனிடம்!
மகேசன் அருள் அவனை மன்னனாக்கிற்று! அவனுக்கு அடங்குவது
ஆண்டவனுக்கு அடங்குவதாகும்! மன்னன், நாடு வாழ நல்லாட்சி
செய்வான்; மக்கள் வாழ்வே என் மகிழ்ச்சி என்று எண்ணுவான்.
வெளிப்பகையும், உள்நாட்டிலே பசியும் பிணியும் தாக்காமல்
பாதுகாப்பு அளிப்பான்! - என்றெல்லாம் நம்பினர்!
மக்களின் நம்பிக்கையை நாசமாக்கிவிட்டான் மன்னன்! இப்போது
மக்களிடம் மன்றாடுகிறான், ‘உங்களிடம் நம்பிக்கை வைத்துத்தான்
வந்திருக்கிறேன்’ என்று.
“ரொட்டி கேட்டோம்; இவன் படை விரட்டி அடித்தது! கருணை
கேட்டோம், கசைஅடி கொடுத்தனர். இந்தப் பாவம் சும்மா விடாதய்யா
என்று பேசினர். பாஸ்ட்டிலி சிறையில் தள்ளினார், அதிகாரிகள்!
இப்போது, நம்மிடம் நம்பிக்கை வைத்து வந்திருக்கிறாராம்,
இந்த நல்லவர்! எப்படி இருக்கிறது, வேடிக்கை!! என்று அல்லவா,
மக்கள் கேலி பேசியிருப்பர்.
பஞ்சம் தாக்கிற்று மக்களை; பவனி நடத்துகிறார்கள்! அதிலே,
மன்னன் மட்டுமல்ல, அவன் இருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட,
‘ஐம்பது வண்டி தானியங்கள்’ உடன்கொண்டு வரப்பட்டன.
தங்கமும், தந்தமும், பரியும் கரியும், முத்தும் அங்கியும்
பவள மாலையும் - இப்படிப் பொருள்கள் கொண்டு வருவர்; வெற்றிபெற்ற
படையினர், வேற்று நாட்டிலிருந்து.
இங்கு, அரண்மனையை நோக்கிக் கிளம்பிய படை ஐம்பது வண்டி
தானிய உள்ளத்தினன் ஒருவன் எடுத்து விளக்கினான்.
‘நண்பர்களே! தைரியமாக இருங்கள்! ரொட்டி! ரொட்டி! என்று
ஏங்கித் தவிக்காதீர்கள்! இனி ரொட்டிக்குப் பஞ்சமில்லை!’
மக்களுக்கு மகிழ்ச்சி! அவர்கள், ஆட்சி முறை மாற வேண்டுமென்று
விரும்பக் காரணமேகூட அரசியல் முறைகளுக் கான தத்துவ ஆராய்ச்சி
அல்ல; அந்த ஆட்சிமுறையால், அவர்களைப் பட்டினி வாட்டியது!
அதுதான் காரணம்.
ஆகவே, இனி ‘ரொட்டிக்குப் பஞ்சம் இல்லை!’ என்று தமது நண்பனொருவன்
கூறக்கேட்டதும் மகிழ்ச்சி பிறந்தது. மறுகணம், கவலை குடைந்தது.
“ஐம்பது வண்டி கோதுமை, எத்தனை நாளைக்குக் காணும்! இவன்,
இனி ரொட்டிக்குப் பஞ்சம் இல்லை என்கிறானே! எப்படி?” என்று
எண்ணித் திகைத்தனர். அவர்களின் திகைப்பை அறிந்தவன்போல,
அவன் தொடர்ந்து பேசினான்.
“ரொட்டிக்கு இனிப் பஞ்சம் இல்லை. ஏனெனில், இதோ ரொட்டி
சுடுபவன், ரொட்டிக்காரன் மனைவி, ரொட்டிக்காரன் பிள்ளை,
இவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டோம்.”
எல்லா ஒலியையும் மீறி அல்லவா, கை ஒலி கிளம்பி இருக்கும்,
அவன் பேச்சு கேட்டு.
ஆணவம் கலந்த கேலிப்பேச்சா அது!
கேலி இருந்தது; ஆணவம் கூடத்தான்! ஆனால், அது மட்டுமல்ல,
அதன் ஊடே மறுக்கமுடியாத ஓர் அரசியல் தத்துவமும் இருந்தது.
அரசன் கடமை, மக்களுக்கு உணவளிக்க வேண்டியது; வாழ வைக்க
வேண்டியது; அதற்குத் தான் அரசன்! அதைச் செய்யத் தவறினால்,
கேட்க, தண்டிக்க, நீக்க, ஒழிக்க, மக்களுக்கு அதிகாரம்
உண்டு! - என்ற ரூசோ போன்ற அரசியல் அறிவாளிகளின் ஆழ்ந்த
கருத்துகள் அவ்வளவும், அந்தக் கேலிப்பேச்சிலே குழைந்து
இருந்தது.
1789ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள், ஆறாம் நாள், நடை பெற்றது,
அந்த அரிய ஊர்வலம். மன்னன் புதிய இடம் வந்தான்! மக்கள்
புதிய பலம் பெற்றனர்.
அன்று, இரவு பதினொரு மணி ஆகிவிட்டதாம், அரச குடும்பம்,
மாடி செல்ல!
வழிகாட்ட, தீப்பந்தம் பிடித்து நின்றனர், மக்கள் படையினர்!
தீப்பந்தம்! வழிகாட்டவும் உதவும்; கொளுத்தவும் பயன்படும்.
மன்னன் தலையில் சிவப்புத் தொப்பி! அந்தத் தொப்பியில்
மக்கள் தயாரித்த கொடிச் சின்னம்!
சொந்த உடையைப் பறித்துக் கொண்டு, சிறை உடை கொடுத்துக்
கைதிகளை உள்ளே தள்ளிப் பூட்டுகிறார்களல்லவா!
மன்னன், மாடி சென்றான்; மக்கள் களிநடம் புரிந்தனர்.
‘இது சிறைதானே!’ என்று எண்ணினான் மன்னன்; ‘இவன் நமது கைதிதானே’
என்று எக்காளமிட்டனர் மக்கள் ‘துலியர்ஸ் அரண்மனை’ என்ற
பெயருடைய, அந்தக் கட்டிடம் கற்களாலானவை! அவை என்ன பேசும்?
இனி வரப்போகும் பயங்கரத்தை அறிவிப்பதுபோல, அரச குடும்பம்,
நடந்தபோது, எழுந்த காலடிச் சத்தம் இருந்திருக்கும்.
வரலாற்றுச் சுவடியிலே, காலம் ஒரு புதிய வரியைச் சேர்த்தது,
‘மக்கள் கொதித்தெழுந்தால், மன்னன் சிறைப்படுவான்’ என்று.
அதுதானா, கடைசி வரி? இல்லை! மேலும் எழுதக் காலம் துடித்துக்
கொண்டிருந்தது. ‘இது எங்கள் காலம்!’ என்று எக்காளமிட்டபடி,
மக்கள் திரள் திரளாக, பாரிஸ் பட்டினத்தில் உலவி வந்தனர்.
இழந்ததை எண்ணிய திகைப்பு, அரச குடும்பத்துக்கு; தூக்கம்
வரவில்லை!
பெற்ற புதிய வெற்றியை எண்ணும்போது கட்டுக்கடங்காத களிப்பு
மக்களுக்கு; அவர்களுக்கும் தூக்கம் வரவில்லை!
வேதனையும் வெட்கமும் அதிகப்படும் என்ற பயத்தால், அரச குடும்பத்தினர்,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூசினர்.
ஒருவருக்கொருவர் பேசிப்பேசி, களிப்பைப் பன்மடங்கு பெருக்கி
மகிழ்ந்தனர், மக்கள்.