அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இதயம் இரும்பானால்
2

பாறையின் இடுக்கில், அடிபட்ட கருநாகம், ஊர்ந்து கிடக்கிறது.

கடலலை, பாறைமீது பாய்கிறது; திவலைகள், பதுங்கிக் கிடக்கும் பாம்பின்மீது விழுகின்றன.

எந்த நேரத்திலும், அலையின் அளவும் வேகமும் அதிகரிக்கக் கூடும்; பாம்பு, அடித்துக் கொண்டு போகப்படக் கூடும்.

இந்த நேரத்துக்கு, இந்த இடம் என்ற அளவிலே, பாம்பு பதுங்கி இருக்கிறது.

அடிபட்டதால் ஏற்பட்ட வலி, சீறிடக்கூட வலிவு இல்லை; மூச்சு சற்றுப் பலமாக இருக்கிறது.
அன்றைய நிலைமை அது போன்றதே! ஆனால் ஒரு வித்தியாசம். பாம்பு பதுங்கி இருக்கும் இடம் அலைக்குத் தெரிய முடியாது; ஆனால் மக்கள் நன்றாக அறிவார்கள், மன்னன் இருக்கும் இடம், நிலை இரண்டையும்!

‘பாரிஸ் பட்டினத்தோரே! அறிவிழந்த பாரிஸ் பட்டினத்தோரே! மன்னனையும் அவன் மகனையும் உங்கள் கோட்டைக் குள்ளேயே காவல் வையுங்கள் என்று சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்விட்டது. அரசு குடும்பம், தப்பித்துக் கொண்டோட திட்டமிட்டிருக்கிறது. மந்த மதியினரே! அதை அறியாமல் உறங்கிக் கிடக்கிறீர், திறமையாகக் காவலிருங்கள்! அந்த ஆஸ்ட்டிரியா நாட்டவளை, அவள் மைத்துனனை, மக்களை, குடும்பத்தை, அரண்மனையில் அடைத்துப் பூட்டி வையுங்கள். தவறினால், இலட்சக்கணக்கான பிரான்சுக் குடி மக்களுக்குக் கல்லறை தோண்டியவர்களாவீர்கள்! எச்சரிக்கிறேன்! ஏமாளித்தனத்தால், எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள்! மன்னன் தப்பி ஓட முயல்கிறான். திட்டம் தயாராகிவிட்டது!

“மக்கள் நண்பன்” என்ற இதழில், மாராட் எனும் மக்கட் தலைவன், இவ்விதம் எழுதினான்.

படித்தனர்; பதைத்தனர்; பயந்தனர். ஆமாம்! அரசன் தப்பிச் சென்றுவிட்டால் அழிவு அல்லவா நமக்கு! ஐரோப்பாவில் உள்ள பல அரசுகளும், அவன் கண்ணீர் கண்டு, படையுடன் வருவார்களே, இங்கு. எப்படி நாம் தடுத்து நிறுத்த முடியும் என்று எண்ணினார். அச்சம் மனத்தை வாட்டலாயிற்று.

“தப்பி ஓடவா! திட்டமா! யார்? மன்னனா? பைத்தியம், பைத்தியம்! விழித்த கண்மூடாமல் காவல் புரிகிறார்கள், தெரியுமா? இதற்கென்றே, ஒரு தேர்ச்சிபெற்ற படை இருக்கிறது. கீர்த்திமிக்க தலைவன் இருக்கிறான். அரச குடும்பத்தில் ஒவ்வொரு நடவடிக்கையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும், கூர்மையான கண்கள், பலப்பல நூறு! ஒருதுளி சந்தேகம் ஏற்பட்டாலும், மிகக் கூர்மையான வாட்களை உருவிக் கொண்டு தாக்கக் கிளம்பத் தயாராக உள்ளவர்கள் ஆயிரவருக்குமேல்! மன்னனாவது தப்பி ஓடுவதாவது! நடைபெறாது நண்பர்களே! ஒருநாளும் நடைபெறாது.” என்று சிலர் பேசினர்.

ஆனால், எச்சரிக்கையாக இருக்கும்படி எழுதியவர், மாராட்! மக்கள் எப்படிப் பொருட்படுத்தாமலிருப்பர்? மக்களின் நல்வாழ்வுக்காக எதையும் அழிக்கலாம் என்று துணிந்து பேசியும் எழுதியும் வந்த மாராட், தெளிவு அதிகம் பெறமுடியாத மக்கள் இடையிலே அளவற்ற செல்வாக்கு பெற்றிருந்தான். கொடியோரைக் கொன்று குவித்தால் என்ன தவறு? அவர்களைக் கொல்லாது விட்டாலோ, அவர்கள் ஏழை எளியோரைக் கொன்று குவிப்பார்கள்! - என்று பேசுவதும் எழுதுவதும், மாராட்டின் வாடிக்கை.

சுவிட்சர்லந்திலே, ஒரு மருத்துவருக்கு மகனாகப் பிறந்த மாராட், பிரான்சிலே, மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு மன்னரின் காவற்படையின் மருத்துவனாகப் பணியாற்றிப் புரட்சி இயக்கத் துக்காகத் தொழிலை விட்டுவிட்டுப் பொறி எனக் கிளம்பி, பெரு நெருப்பாக மாறிவிட்டவன். இரத்தத்தைக் கண்டு அஞ்சாதவர்களும் மாராட் பேசுவது இரத்த வெறி ஊட்டுகிறது என்று கூறி அருவருப்படைவார்கள்! ஆனால் ஏழைகளோ, எங்கள் சார்பாக, துளியும் தயக்கமின்றிப் பேச மாராட் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்று புகழ்ந்து கூறுவர். ஆதிக்கக்காரர்களை மட்டுமல்ல, அரசியல் விரோதிகளையும் அழித்தொழிப்பதிலே, மாராட் தயக்கம் காட்டியதில்லை. அதுபோன்றே ஆபத்துக்களில் சிக்கிக் கொண்டபோது சாகசம் பல செய்து தப்பித்துக் கொள்வதிலும் திறமைமிக்கவனாக இருந்தான்.

இத்தனைக்கும் நோய் அவனை வாட்டியபடி இருந்தது.

அவனே பிரான்சைப் பீடித்துக் கொண்டுள்ள ஒரு நோய் தானே! - என்று அவனை அருவருத்தோர் கூறினர். ஆனால் எதிரே அவனைக் கண்டால் அஞ்சுவர். காரணம் எண்ணற்ற மக்கள் அவனிடம் அளவற்ற பற்று வைத்திருந்தனர்.

எனவே, மன்னன் தப்பி ஓடத் திட்டமிட்டிருக்கிறான் என்று மாராட் எழுதியதும், அந்தச் செய்தி, காட்டுத் தீயெனப் பரவிற்று.

மற்ற யாரும் கண்டறியா முன்பு, மாராட், இதைக் கண்டறிந்து கூறியது, அவனுடைய திறமைக்கு ஒரு சான்றாகி விட்டது. மன்னன் நடத்தத் திட்டமிட்ட ‘சதி’ மாராட்டுக்குத் தெரிய நேரிடச் செய்ததும், ஒரு விசித்திரமான நிகழ்ச்சியினால்தான்.

மாராட் நடத்தி வந்த ‘மக்கள் நண்பன்’ என்ற இதழுக்கு, செய்திகள் திரட்டித் தருபவர்களில், ஜாவார்தின் என்பவனும் ஒருவன். புரட்சி இயக்க ஏட்டுக்குப் பணியாற்றிக் கொண்டிருந்ததோடு, இவன் ஒரு காதலியையும் பெற்றிருந்தான். மாளிகைக்காரர் பலரை வாடிக்கைக்காரராகப் பெற்றுத் துணி வெளுக்கும் தொழில் நடத்தி வந்தவள், இவன் காதலி.

மாளிகையிலே இருந்து அனுப்பப்பட்ட சட்டை ஒன்றில் நைந்த நிலையில் ஒரு கடிதம் இருந்திடக் கண்டு, படித்துப் பார்த்தாள் அந்தப் பெண். கடிதத்தில், ‘அனுமதிச் சீட்டுகள் தயாராகிவிட்டன. வண்டிகள் ஏற்பாடாகிவிட்டன’ என்று எழுதப்பட்டிருந்தது. ஜாவார்தீனிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்தாள்; மாராட்டிடம் அவன் தந்தான். தீப்பொறி பறக்க, மாராட் இதழில் எழுதினான்; மக்கள் பதைத்தெழுந்தனர். என்ன செய்கிறது காவற்படை? என்ன செய்கிறான் காவற்படைத் தலைவன் லாபாட்டி என்று முழக்கமிட்டனர். பாரிஸ் பட்டினம் முழுவதும் இதே பேச்சாகிவிட்டது.

வெறும் வதந்தியுமல்ல இது; உண்மையில் மன்னன் தப்பி ஓடத் திட்டமிட்டிருந்தான்.

மன்னன் இருந்துவந்த இடத்தை ஆறு நூறு வீரர்கள் கண்காணித்து நின்றனர். உள்ளே, எப்பக்கம் திரும்பினாலும், துப்பாக்கி ஏந்திய வீரர்கள்! மன்னன் அறைக்கும் இராணியின் அறைக்கும் இடையே உள்ள தாழ்வாரத்தில் கூடக் காவல்! அரச குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடப் பயந்தனர் - அவ்வளவு கண்டிப்பு, காவல்! ஆயினும், இவ்வளவுக்கும் இடையே, அரச குடும்பத்தார், தப்பித்துக் கொண்டு போய்விடத் திட்டம் தயாரித்திட முடிந்தது.

மன்னன் ஆட்சி இருந்தால் மட்டுமே, தமக்குச் ‘சுக போக’ வாழ்வு உண்டு என்பதால், பதுங்கிக் கிடந்த பிரபுக்களில் சிலரும், ஜெபமாலை காட்டி மக்களை மயக்கித் திரிந்த மதத் தலைவர் சிலரும், மன்னன் தப்பி ஓட வழிவகுத்துக் கொண்டிருந்தனர். மன்னன் வெளிநாடு சென்றால், படை திரட்டுவான்; படை வந்தால் புரட்சியை ஒழித்துக் கட்டலாம் - பிறகு... பிறகா! மது, மங்கை, மகிழ்ச்சி - என்று அவர்கட்கு எண்ணம்.

லூயி மன்னன் ஆட்சி நடத்த வேண்டுமா? அல்லது விலக்கப்படவேண்டுமா? மக்களின் நல்வாழ்வுக்கான முறையில் சட்டதிட்டம் தீட்டப்பட்டு அதற்கு அடங்கி மன்னன் நடந்து கொள்வதாக இசைவு தந்தால் ஆள அனுமதிக்கலாமா?

ஏன் மன்னராட்சி முறை இருக்க வேண்டும் - அதைக் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் ஓயாமல் மக்கள் கண் விழிப்பாக இருக்க வேண்டுமா? ஏன் இந்த வீண் தொல்லை? முறையையே மாற்றிவிட்டால் என்ன?

பலர் பல்வேறு கோணங்களிலிருந்து, பிரச்சினையை ஆராயத் தலைப்பட்டனர்; விவாதம் வலுவாகிக்கொண்டு வந்தது.

அரசியல் சட்டம், என்னென்ன உரிமைகளை மக்கள் பெறத்தக்கதாக அமைய வேண்டும் என்பது பற்றியும் பேச்சுப்புயல் வீசிக்கொண்டிருந்தது.

“ஆளப்பிறந்தவன்” என்ற விருதுகொண்டவன் அரண் மனையில் இருந்துவர அனுமதி அளித்த மக்கள், ஆட்சிமுறை எப்படி இருப்பது என்பதைப் பேசி வகுத்துக் கொள்ளலாம்; பிறகு, மன்னனைப் பற்றிய பிரச்சனை எளிதாகிவிடும் என்று எண்ணினர்.

பிரான்சு எப்படி ஆளப்பட வேண்டும் என்பது பற்றி மட்டுமல்ல, வெளிநாட்டவரின் பகையையும் தாக்குதலையும் எவ்விதம் எதிர்த்து நின்று வெற்றி காண்பது என்பது பற்றியும், மக்கள் தலைவர்கள், கவனிக்க வேண்டி வந்தது.

“நாம் அறிவிக்கிறோம்” என்று மன்னன் முறையில், மக்கள் தலைவர்கள், எவரும் பேச முடியாதல்லவா!

கருத்துக்கான காரணங்களை விளக்க வேண்டும், கேள்வி களுக்குப் பதிலளிக்க வேண்டும், ஐயப்பாடுகளைப் போக்க வேண்டும், மறுப்புக்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் பதிலளிக்க வேண்டும், ஏளனத்தைக் கேட்டு எரிச்சலடையக்கூடாது. எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது! - இப்படி எத்தனை எத்தனையோ உள்ளனவே முறைகள்! காலம் வேண்டும் அதற்கு! நெஞ்சில் உரமும் தெளிவும் வேண்டும்! நேசங்கள் முறிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்டதற் கெல்லாம் கடுமையான மொழியால், எதிர்ப்புக் கூறிக் கொண்டே இருப்போம், கேட்டுக் கேட்டு மனம் வெதும்பித் தானாக ஓடிவிடட்டும். பிறகு விரட்டிவிட்டோம் என்ற மனத்திருப்தி பெறுவோம் என்ற போக்கினர் இருப்பர்; நிலைமையை அறிந்து நடந்து கொள்ளவேண்டும். எது கவனிக்கப்பட வேண்டியது? மனதுக்குச் சரி என்று பட்ட திட்டமா? அல்லது மனத்தை நோகச் செய்யும் போக்குடையாருடன் கூடிக் காரியமாற்றல் இயலுமா, இயலாதா என்ற பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதா? எது முக்கியம் - என்பதைத் தீர்மானிக்கவேண்டும். இப்படி எத்தனையோ சிக்கல்கள், மக்கள் மன்றத்தில் அமர்ந்து, புதிய திட்டம் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு.

கவிழ்க்கப்படுவதற்கு முன்பு வரையில் மன்னனுக்கு எல்லா மக்களிலும் தான் மேம்பட்டவன் என்ற அழுத்தமான நம்பிக்கை இருக்கிறது; மக்களில் பெரும்பாலாருக்கும் அந்தப் பயம் இருக்கிறது. மக்கள் தலைவர்கள் விஷயம் அப்படி அல்ல! இவன் எப்படித் தலைவனானான்? எனக்குத் தெரியாதா! - என்று ஆணவம் கக்கி நிற்போரும், ‘இவனெல்லாம் தலைவனாம்! என்று ஏளனம் பேசுவோரும், ‘இவனை ஒழித்து விட்டு மறுவேலை பார்க்கிறேன்’ என்று சூளுரைப்போரும் மக்கள் மன்றங்களிலே இருப்பர்!

‘என்னால்தான் எல்லாம் ஆகும்! எனக்குத்தான் எதுவும் தெரியும்! என்னைத்தான் எவரும் நம்புவர்! எனக்கு மட்டுமே எல்லா ஆற்றலும் உண்டு’ - என்ற எண்ணத்தை நோயளவுக்கு முற்ற வைத்துக் கொண்டவர்கள் இருந்திடுவர்.

சமரச நோக்கம் சாகசமாகவும், கூடிப் பணியாற்ற வேண்டும் என்ற போக்கு ஒட்டிக் கொள்ளும் வித்தை என்றும் பொறுமை சொரணை கெட்ட தன்மை என்றும் திரித்துக் கூறப்படும்.

இங்கிருந்து அங்குச் செல்ல வேண்டும் - என்ற ஆசை எழக்கூடும்.

இடம் பிடிக்கும் இயல்பும், இன்னொருவருக்கு இடமளிக்க மனமில்லாத தன்மையும் ஏற்பட்டுவிடக் கூடும்.

இவருடன் கூடினால் இது கிடைக்கும், அவரை ஒழித்தால், இவருக்கு நம்மிடம் பற்று ஏற்படும் என்ற கணக்குகள் போட வேண்டும்.

அப்பப்பா! எத்தனை ‘ஆபாசங்கள்’ எழும், எத்துணை எண்ணங்கள் கிளம்பும், என்னென்ன வகையான எரிச்சல்கள் மூட்டப்படக்கூடும்! - மக்கட் தலைவர்கட்கிடையில்!

இவையாவும், எழுச்சி பெற்ற பிரான்சிலே, மக்கள் மன்றத்திலே, தலைவிரித்தாட ஆரம்பித்தன. இவை தவிர்க்க முடியாதவை என்றபோதிலும், பிரான்சிலே, மிக அதிகமான அளவு தோன்றி, நாட்டை அலைக் கழித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.

மன்னனின் கொட்டம் அடக்கப்பட்டதும், சீமான்களின் ஆணவம் தகர்க்கப்பட்டதும், மதப்போர்வைக்குள் இருந்து வந்த மதோன்மத்தர்களின் மமதை மட்டந்தட்டப்பட்டதும், என்னால் தான், என் முறையினால்தான் என்று பெருமை பேசி, உரிமை கொண்டாடிக் கட்சி கட்டினர் பலரும்.

‘என்னால்தான், எனது முறையினால்தான் என்ற பேச்சு வளர்ந்து வளர்ந்தது, இனியும் என் முறைப்படி நாடு நடத்தப் பட்டால் மட்டுமே நலன் கிடைக்கும்; மற்ற முறை அவ்வளவும் நாசமே ஏற்படுத்தும்’ என்று கூறிடவும், அந்தக் காரணம் காட்டி நாடாளும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள் என்று கேட்கும் போக்கும் கொக்கரித்தது.

மன்னன் மனம் மகிழும்படி நடந்துகொண்டு, பட்டமும் பதவியும் பெற்றனர், பலர் முன்பு.

மக்கள் மன்றத்திலும், இதே போன்றார் கிளம்பினர்! பொறிபறக்கப் பேசுவதாலும், தீவிர திட்டங்களைத் தீட்டு வதாலும், செல்வாக்குப் பெற முயன்றனர். அதற்காகப் பலர், சிறுசிறு முகாம் அமைத்துக் கொண்டனர். முகாமுக்கு முகாம் சண்டை! முகாமுக்குள்ளாகவே சண்டை!! வெட்டு, குத்து ஏராளம்! வீண்கலாம் அதிக அளவில்!

மந்தமதியும், எதையும் சாதிக்கத் தெரியாத போக்கும் கொண்டவனாக மன்னன் பதினாறாம் லூயி இருந்ததால், விபரீதம் ஏற்படவில்லை. தருணமறிந்து வேலை துவக்கக் கூடிய தந்திரக்காரன், மன்னனாக இருந்திருப்பின், மக்கட் தலைவர்களுக்குள்ளே கிளம்பிவிட்ட, வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும், தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஆதிக்கத்தைக் கைப்பற்றி இருந்திருப்பான். ஒரு கட்சி மீது மற்றோர் கட்சியை ஏவி விட்டும், கட்சிக்குள்ளயே,சிண்டு முடிந்துவிட்டும், தனக்கு வலிவு தேடிக் கொண்டிருப்பான். பதினாறாம் லூயி, அப்படிப்பட்ட மன்னனல்ல.

எப்படித் தப்பித்துக் கொண்டு ஓடிவிடலாம்? எந்தெந்த மன்னர்கள், உதவி செய்ய வருவர்? - என்ற இவைபற்றியே, எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். அரசியோ, “இந்த நாட்டு எல்லையைக் கடந்தால், எல்லாத் தொல்லையும் ஒழிந்துபோகும். பழிதீர்த்துக் கொள்ளமுடியும். படுகுழிவெட்டிப் புரட்சி செய்த புல்லர்களைப் போட்டுப் புதைத்திட முடியும். மன்னனை எதிர்க்கும் துணிவு, என்றென்றும் ஏற்படமுடியாதபடி, ‘பயங்கர ’ முறைகளைக் கையாண்டு, புரட்சியைப் பொசுக்கித் தள்ளிவிட முடியும். மன்னர்கள் பலர் உளர், பிரான்சுக்கு வெளியே! அவர்களை அணுகி, வந்த ஆபத்து எமக்கு மட்டுமல்ல, மன்னர் ஆட்சி முறைக்கே ஆபத்து - பிரான்சில் தானே, என்று வாளா இருந்தீரேல், நாளை உமது நாடும் இதே நிலைதான் கொள்ளும். உடனே கிளம்புங்கள் சீறிப் போரிடத் துணிந்துவிட்ட சிறுமதியாளரை ஒழித்துக் கட்டவேண்டும்” என்ன வேண்டும் ஏமாளிகளே! என்னவேண்டும்! இன்பச் சுதந்திரமா! இதோ பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி, குண்டு மாரி பொழிந்து, கூண்டோடு ஒழித்துவிட வேண்டும் அந்தக் கொடியவர்களை” - என்றுதான் எண்ணி எண்ணித் திட்டமிட்டபடி இருந்தாள்.

மன்னன், வெளிநாடு சென்று, படையுடன் வந்து, மக்களைத் தாக்கக்கூடும் என்று மக்கள்கூடத்தான் பயந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டிலே குழப்பமும், வெளிநாட்டுப் படையின் தாக்குதலும், ஒரேபோது ஏற்பட்டுவிடுமானால் ஆபத்தாகி விடக்கூடும் என்பதையும் மக்கள் உணர்ந்திருந்தனர்.

ஆனால், அரச குடும்பமே, கண்காணிப்பில் இருந்து வருகிறது. எனவே, அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று எண்ணி ஓரளவு நிம்மதியாக இருந்தனர்.

அந்தச் சமயமாகப் பார்த்துத்தான், ‘சதி’ தயாரிக்கப்பட்டது.

ஸ்வீடன் நாட்டுச் சீமான் மகனொருவன், இதற்குத் துணை நின்றான் - அவனுக்கு அறிமுகமான சீமாட்டி, தன் தோழிகளுடனும், பணியாட்களுடனும், குழந்தைகளுடனும் வெளிநாடு செல்ல அரசாங்க அனுமதிச் சீட்டுப் பெற்றிருந்தாள். அதைப் பயன்படுத்திக் கொண்டு, மன்னன், தன் குடும்பத்துடன், மாறுவேடமணிந்து கொண்டு, சென்றுவிடத் தீர்மானித்தான்.

ஸ்வீடன் நாட்டுச் சீமான் மகன், வண்டியோட்டியாக வடிவம் பூண்டான். மன்னனோ, பணியாள்! அரசி, தோழி! தோழி, சீமாட்டி வேடத்தில்! இப்படி ஏற்பாடுகள்!

அரச குடும்பத்தார் அந்தச் சமயத்திலும், தமது ‘அட்டகாச’ போக்கை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. வெளியே சென்றதும், அந்தஸ்துக்கு ஏற்ற உடை வேண்டுமே என்றாள், அரசி பணிப்பெண் சென்று, பல கடைகளிலே, விலையுயர்ந்த ஆடைகளாக வாங்கினாள், மிக அதிகமான அளவு. கடைக்காரருக்கே சந்தேகம். தப்பிப் பிழைத்தோடும் வேளையிலும், ‘தர்பார்முறை’ கெடக்கூடாதாம்! அதனால் பல ஏற்பாடுகளைச் செய்து முடிக்க வேண்டி வந்தது. நேரம் வீணாக்கப்பட்டது. கடைசியில், காவலர்கள் கவனிக்காமல் விட்டிருந்த பக்கமாக, வெளியேறினர். ஸ்வீடன் நாட்டுச் சீமான் மகனல்லவா, வண்டி ஓட்டுகிறான்! அவனுக்கு, பாரீஸ் பட்டினத்துப் பாதைகள் சரியாகத் தெரியவில்லை; சுற்றிச்சுற்றி வருகிறது வண்டி.

அரசகுடும்பம் அறியுமா, தலைநகரின் வீதிகளை.

இல்லை! தோழிகள்? அவர்கட்கு மட்டுமென்ன?

அரண்மனை தெரியும், அலங்காரக் கடை தெரியும், நாட்டிய அரங்கம் தெரியும், பூந்தோட்டம் தெரியும், மற்ற இடம் தெரியாதே! ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து வளரும் நேரம்! வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள், அரச குடும்பத்தார். கடைசியில், ஒரு காவலாளியைக் கேட்டு வழி தெரிந்து கொண்டனர். வண்டி கிளம்பிற்று. பாரிஸ் பட்டணத்தைக் கடந்தாயிற்று.

பொழுது புலர்ந்தது; விஷயம் வெளிவந்தது. தப்பி விட்டார்கள்! ஓடி விட்டார்கள்! காவலிருந்தோர் ஏமாந்தனர்! கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடிவிட்டனர். சூது சூழ்ச்சி செய்ய மாட்டேன், சதி ஏதும் புரியமாட்டேன் என்று ஆயிரம் சத்தியம் செய்தான், அரசப் பதவியில் உள்ள அந்த அற்பன்! ஓடிவிட்டானே இப்படி - என்று மக்கள் கூறிக் கொதித்தனர். தேடலாயினர். ஓடலாயினர்.

அரச குடும்பமோ, வேறோர் ஊர் போய்ச் சேர்ந்தது! பாரிஸ் அல்லோலகல்லோலப் படுகிறது! மாறு வேடமணிந்த மன்னன், தன் குடும்பத்துடன் வருகிறான், வேறு நகருக்குள். அந்த ஊர், அஞ்சல் நிலைய அலுவலரின் மகன், அரசனை அடையாளம் கண்டுகொண்டான்.

“யார் நீ! எடு, அனுமதிச் சீட்டு!” அவன் கேட்கிறான்.

அந்த நேரத்தில், அஞ்சா நெஞ்சம் காட்டவோ, ஆற்றலுடன் காரியமாற்றவோ, இயலவில்லை மன்னனால்! எந்த நேரத்தில்தான் முடிந்தது, பாவம்! இளித்தான்; விழித்தான்; குளறினான்!

“சரி! இனிப் பயன் இல்லை. நாங்கள்தான். எங்குப் போக வேண்டும், வழிகாட்டு” என்று மன்னன் கூறி விட்டான்.

பலநாள் பாடுபட்டுத் தீட்டிய திட்டம், நொடிப்பொழுதில் பொடிப் பொடியாகி விட்டது. அரசியின் உள்ளம் எப்படி இருந்திருக்கும்! மன்னன், அதிகமாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதிகாரியின் வீட்டு மாடிக்கு மன்னனை அழைத்துச் சென்றனர்; சென்றதும், மன்னன் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னான்! ரொட்டியும் வெண்ணெயும் தந்தான் அதிகாரி. பருக, பர்கண்டி திராட்சை ரசச்சாராயம் கொடுத்தான். மன்னன், அதைப் பருகி மகிழ்ந்து, ‘இவ்வளவு நல்ல, பர்கண்டி பானத்தை நான் இதற்கு முன்பருகினதில்லை!’ -என்று கூறிக் களித்தானாம்.

அரச குடும்பத்தின் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று, பாரிசில் மக்கள் கொக்கரிக்கிறார்கள்; இங்கு மன்னன் பர்கண்டி பானம் அருந்தி மகிழ்கிறான். தன்னைப் பற்றிய கவலை துளியும் அற்ற போக்கா, அது? அதுகூட அல்ல, நிலைமை நமது சக்திக்கு மீறிச் சென்றுவிட்டது. இனி அதைப் பற்றிச் சிந்தித்து என்ன பயன்? ஏன், சிந்தித்துச் சிரமப்பட வேண்டும் என்ற நினைப்பு. அவ்வளவு சுறுசுறுப்பான இயல்பு!

‘பிடிபட்டு விட்டான் மன்னன்!’ - என்ற செய்தி பாரிசுக்கு எட்டிற்று. மட்டற்ற மகிழ்ச்சி மக்களுக்கு. படைகள் கிளம்பின, அரச குடும்பத்தை, மீண்டும் பாரிஸ் பட்டணம் அழைத்துக் கொண்டுவர.

முன்பு நடந்த ஊர்வலத்தில், மன்னன் கைதியாக அல்ல, மன்னனாகவே அழைத்து வரப்பட்டான்.

இம்முறையோ, மன்னன் ‘கைதி’ ஆக்கப்பட்டு, கட்டுக் காவலுடன் அழைத்து வரப்பட்டான்.

மன்னன் அமர்ந்திருந்த வண்டியிலேயே, காவல் அதிகாரியும் ஆயுதத்துடன்.

அடக்க முடியாத துக்கம் கொண்ட நிலையில், அரசி.

சூழ மக்களும் படையும்! இப்புறம் அப்புறம் திரும்பிக் கூட வேடிக்கை பார்க்காமல், இமை கொட்டாது, அரசன் இருந்த வண்டியைப் பார்த்தபடி!

முழக்கமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. பயங்கரமான ஒலியற்ற சூழ்நிலை.

வழிநெடுக மக்கள் பார்க்கிறார்கள்! கண்களிலே நெருப்பு மில்லை; நீரும் இல்லை!

‘மன்னனை ஏசுவோர் தாக்கப்படுவர். மன்னனைப் புகழுவோர் கொல்லப்படுவர்!’ என்று எழுதப்பட்ட அட்டைகள் பாரிசில் எங்கும் காணப்பட்டன. எனவே, மக்கள் வாய்மூடிக் கண்திறந்து நின்றனர்! அரச குடும்பம், கண்களையும் மூடிக் கொண்டுதான் இருந்திருக்கும்.

கைது செய்யப்பட்ட அரச குடும்பம், பாரிஸ் வந்ததும் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர்.
பிரான்சுக்கு முன்பு மன்னன் இருந்தான்! அவனை என்ன செய்வது என்று மக்கள் மன்றத்தில் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். இப்போது பிரான்சுக்கு மன்னன் இல்லை; இருப்பது ‘கைதி’ - என்ன தண்டனை தருவது என்று மக்கள் பேசுகிறார்கள்.

தப்பிச் சென்று, வெளிநாட்டு உதவியுடன் நுழைந்து, மக்களை வெட்டி வீழ்த்தத் திட்டமிட்ட அரச குடும்பம் ‘இடுகாடு’ செல்லும் போதாகிலும் துக்ககீதம் பாடப்படும். அதுவுமின்றிப் பாழ்வெளியில் அமைதி போன்றதோர் நிலையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டனர்.