அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இதயம் இரும்பானால்
4

அகப்பட்டவை வாளுக்கு இரையாக்கினர். ‘ஏன் ஐயா!’ என்றால், ‘வாளின் கூர்மை எப்படி இருக்கிறது என்று பார்த்தோம்’ என்றனர். இது பிரபுக்கள், அரச குடும்பத்தினர் காட்டிய பண்பு! மறுக்க இயலுமா?

“என்ன செய்தான் உன்னை.”

“எப்படிப் பிரபுவே! அதைச் சொல்வேன்.”

“சொல்லடி கள்ளி! என்ன செய்தான்?”

“என்னைக் கெடுத்தான்.”

“பத்தினித் தங்கம் இவள்! போக்கிரிப் பெண்ணே! நீ என்ன பரிசுத்தமானவனோ? கெடுத்தானாம், கெடுத்து... இளித்துக் கொண்டு எதிரே வந்திருப்பாய், என்னமோ போலிருந்திருக்கும். சரி! சரி! எங்கே நடந்தது...?”

“எது...?”

“உம்! உற்சவம்...”

“மாதா கோவிலில்...”
“பாதகி! மாதா கோயிலிலா? எப்படி உனக்கு அந்த இடத்தைப் பாழ்படுத்த மனம் துணிந்தது?”

‘ஐயையோ! நான் உண்மையாகவே உற்சவத்தைப் பற்றித்தானே கேட்கிறீர்கள் என்று நினைத்து கொண்டேன். கர்த்தரே! மன்னித்துவிடு. என்னை அவர் குதிரைக் கொட்டிலில்...”

“குதிரை என்ன செய்து கொண்டிருந்தது...”

‘கொல்’ என்ற சிரிப்பொலியல்லவா கிளம்பி நாசமாக்கப் பட்டு நங்கைக்கு வேதனையைத் தந்தது இவ்விதமான வழக்கு விசாரணையின்போது.

அரசியைப் போய் துளியும் பண்பில்லாமல் ஊர் என்ன, பெயர் என்ன என்றா கேட்பது, மக்கள் அமைத்த விசாரணைக் கூடத்தில் என்று கேட்பர், கேட்கிறார்கள்; ஆனால் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நாட்களிலே, பிரபுக்கள் நடத்திய விசாரணைக் கூடங்களிலே நடந்தன பற்றிக் கேட்டனரா? இல்லை! பண்பு யாரால் எப்போது எந்த விதத்தில் அழிக்கப் பட்டது. மக்களா அழித்தனர்?

சீமானின் தூக்கத்தைத் தவளைகள் சத்தமிட்டுக் கெடுக்குமாம். இரவெல்லாம் கண்விழித்து ஏழைகள் தவளைகளைப் பிடித்து அடிக்க வேண்டுமாமே! எத்தனை நேர்த்தியான பண்பு!

“சீமானின் வயலிலே எலிகள் அழிவு உண்டாக்கும். அந்த எலிகள் உன் வயலிலே உள்ள வளைகளிலே இருந்துதான் வருகின்றன. ஆகவே, நஷ்டத்துக்கு நீதான் பொறுப்பு” என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய அநியாயக்காரர்களை யார் அடக்க முன்வந்தார்கள்? ‘இரத்தம் வேண்டும்!’ என்று கேட்ட பிறகுதான் புழுவும் போரிடும் என்று புரிந்தது.

குடித்துவிட்டுக் கூத்தாடுவது, அதற்குப் பெயர் கலை!

ஆலயச் சொத்துக்களை அபகரித்துக் கொள்வது - அதற்குப் பெயர், அருளைப் பெற்று அளிக்கும் புனிதப்பணி.

சூறையாடுவது - அதற்கு வீர விளையாட்டு என்று பெயரிடுவது.

எச்சிற் பண்டங்களைப் பசிக் கொடுமையால் தாக்குண்டவர் எதிரே வீசுவது; அவர்கள் பாய்ந்தோடிச் சென்று எடுத்துத் தின்னப்போகும்போது வேட்டை நாய்களை அவிழ்த்து விட்டுக் கடிக்க வைத்து கைகொட்டிச் சிரிப்பது! சீமானே! உனக்கு இது பொழுதுபோக்காக இருந்ததே! இப்போது தத்துவப் பேராசிரியனாகி பண்பு பாழாகலாமா என்றா கேட்கிறாய் - என்று கேட்பான் புரட்சிவீரன். எதிரே வர, சீமானுக்குத்தான் நடுக்கம்.

பதினாறாம் லூயி, கொடுமைக்காரனல்ல; ஆனால் கொடுமைக்காரர்களை அடக்கும் திறனற்ற மன்னன். செயல் புரியச் சங்கடம்! சிந்திக்க அதைவிடச் சங்கடம்! மக்கள் மனம் எரிமலையாகி இருந்த வேளையில் அரசனானான்; நிலைமையை அறிந்து கொள்ள முடியவில்லை. மன்னன் செய்ய வேண்டிய வேலை முடிதாங்கிக் கொள்வது, அடி வருடிகளை ஆனந்தப் படுத்துவது, ஆட்சி நடத்த அமைச்சர்களை நியமிப்பது, அவர்கள் ‘கைவிரித்தால்’ வேறு ஆட்களை அமர்த்துவது - இவ்வளவுதான் என்று எண்ணிக் கிடந்தான்.

அவனை மணக்க வந்த மங்கைக்கோ, ஆடம்பரம் என்றால் கொள்ளை ஆசை! நேரம் இடம் கூடப் பார்க்கத் தேவையில்லை என்ற அளவுக்கு ஆடலிலும் பாடலிலும் விருப்பம். விருந்துகள் நடத்துவர். பணம் விரயமாவது பற்றிய கவலையற்று விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவாள். தேவைக்காக அல்ல; பிறர் பார்த்து ஆச்சரியப்பட! சூதாட்டச் சாலைகளிலே அரசியைப் பார்க்கலாம்! வெறியாட்டங்களிலே அவள் நடுநாயகமாவாள்.

இவ்வளவு வீண் செலவுக்கும் பணம் தரும் பாட்டாளிகள் பஞ்சைகளாகிப் பராரிகளாகிக் கிடக்கின்றனர் என்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை; நேரமும் இல்லை; நினைவும் எழவில்லை.

“ரொட்டி கிடைக்காவிட்டால் என்னவாம்! ‘கேக்’ சாப்பிடட்டுமே!” என்று சொன்ன காலமல்லவா அது!

‘பசித்தால், புல் தின்னட்டுமே! வலிவு கிடைக்கும், மாடுகளுக்குக் கிடைப்பது போல!’ என்று கொக்கரித்த அமுல் நிரம்பிய நாட்களல்லவா. பண்பு வளர்க்கும் பல்கலைக் கழகங்களா அமைத்தனர்? பஞ்சமாபாதகம் நெளியும் படுகுழிகளைப் பளிங்குமாடங்களில் அமைத்துக் கொண்டனர்.

காற்றில் சிக்கிய மலரின் இதழும், கனவான் விருந்திலே கலந்து கொண்ட காரிகையரின் இதழும், பட்டபாடு கொஞ்சமா - அதற்குப் பெயர்தான் பண்பா?

உழைத்து அலுத்த மக்கள் உணவின்றி வாட, உலுத்தர் கூட்டம் எத்துணை அளவு பணத்தைப் பாழாக்குவது? கோடி கோடியாக! பரிவாரங்களின் செலவு கொஞ்சமா! பாழாக்கப்படும் பண்டங்கள் எத்துணை. நந்திப் பிழைப்போர் கொத்தித் தின்று ஏப்பம் விட்டபடி இருந்தனர் பெரும்பொருளை, காமவல்லிகள் கண்காட்டுவர்; கட்டித் தங்கத்தை அவர்கள் காலடியில் கொட்டுவர்! இடையொன்று அசையும்; சில இலட்சங்கள் அவள் இரும்புப் பெட்டியில் போய்ச் சேரும்.

“உன் கண்ணொளி, வைரத்துக்கு ஏது?” என்பான் அரச குடும்பத்து இளைஞன்!

“கொடுத்துப் பார்த்தால்தானே தெரியும்” என்பாள் கைகாரி!

வைரமாலை அவள் கழுத்துக்குப் போய்ச் சேரும்.

அவள் யார்? என்ற கேள்வி கிளம்பியதும் இவ்வளவு பணம், இந்த இடம், இந்த நேரம், என்று பதிலளிக்க ஆட்கள் அரண்மனையில் உண்டு.

சேடிக்குப் பணம் கொடுத்துச் சீமாட்டியின் துணை கொண்டு அரண்மனைக்குள் நுழைவது! அங்குச் சென்றதும், அழகும் அப்பாவித்தனமும் ஒருங்கே கொண்ட அரச குடும்பத் தவளைத் தேடிப்பிடிப்பது, தேனொழுகப் பேசுவது, தேவலோகம் போக வேண்டும் என்றோர் ஆசை, உன்னைக் காணும்வரை இருந்தது என்று கூறுவது; அவள் “போதுமே கேலி” என்பாள். “அதோ அந்த மலர்ப்புதர்” என்பான் இவன்; ஐயையோ! அது அந்தச் சீமாட்டியின் சொந்தமாயிற்றே” என்பாள் இவள். பிறகு இடத்துக்கா பஞ்சம்! இப்படிப்பட்ட கோலகலத்தில் மூழ்கி, நாட்டுச் செல்வத்தை ஒரு சிறுகூட்டம் பாழாக்கிக் கொண்டிருந்தது. பார்த்துப் பார்த்துப் பதைத்த மக்கள், பண்பு ஆராய்ச்சியா நடத்திக் கொண்டிருப்பர்.

ஏழையின் கண்ணீரைக் கண்டு, பெருமூச்சைக் கேட்டு, காய்ந்த வயலைப் பார்த்து, தேய்ந்து கிடக்கும் உடலைப் பார்த்து, கண்களிலே, “கடுமை” குடி ஏறுவது பார்த்து, ஆட்சி நடத்தினோர் பாடம் பெற்றிருந்தால், திருத்தம் ஏற்பட்டிருக்கும்; தீ பரவாதிருந்திருக்கும்.

ஒரு சமயம், பதினைந்தாம் லூயி அலங்கார வண்டியில் போய்க் கொண்டிருக்கிறான். உடன் வந்த சீமானை மன்னன் ‘இந்த வண்டி என்ன விலை போகும்? சொல்லு பார்ப்போம்’ என்று கேட்டான்? சீமான், ‘8000 லிவரி (பிரான்சு நாணயம்) இருக்கும்’ என்றான். மன்னன் சிரித்துவிட்டு, ‘இதற்கு 30,000 லிவரி கொடுக்கப்பட்டது. கொள்ளையே அடிக்கிறார்கள், என்னைச் சூழ இருப்பவர்கள்” என்றான்.

வழக்கு மன்றத்திலே, கோழி திருடியதாகக் கூண்டிலேற்றப் பட்ட ஏழைக்கு, நியாயம், தர்மம் இரண்டையும் மதிக்காத கயவனுக்கு எட்டாண்டு தரப்பட்டது என்று நீதிபதி கூறுகிறார்! மன்னனைச் சுற்றிக் கொள்ளைக்காரர்கள், பட்டுச்சட்டை போட்டுக் கொண்டு நிற்கிறார்கள்!

பிரபுக்களின் கோலாகல வாழ்வைக் கண்டிக்கும் துணிவு, மதத்தலைவர்களுக்கு இல்லை - ஏன்? அவர்களே பிரபு குடும்பத்தினர்! உடையிலே மாறுபாடு இருந்தது; நடவடிக்கையில் அல்ல!

ஜெபமாலை, கூர்வாள், செங்கோல் - மூன்றுமே ஏழைக்கு வாழ்வு அளிக்கவில்லை. எனவே அவனுக்கு எதிலும் நம்பிக்கை நசிந்துவிட்டது.

மாண்டவர் போக மீதமிருந்தவர்களின் மனப்போக்கு மாறிக்கொண்டு வந்தது. பணிவு குறைந்தது; துணிவு துளிர்த்தது! கண்ணீர்விட்டுக் கிடந்த மக்கள், சீமான்களைக் கண்டால், காரித் துப்பலாயினர். கசையடியால் மாண்டிருப்பான் தகப்பன், அவன் மகனோ, கல்லெடுத்து வீசுவான் சீமான் மீது. எரிச்சல், எதிர்ப்பு உணர்ச்சியை ஊட்டிற்று. இந்தக் குறியைக் கண்டுகொள்ள வில்லை, ஆட்சி நடத்தினோர்! “இதுகள்” எப்போதும் இதுபோலத்தான் கிடக்கும் என்று எண்ணினர்; ஏமாந்தனர்! ‘பசியைத் தாங்கிக் கொள்வார்கள்; பாபம் புரியமாட்டார்கள் பாமரர்’ என்றார் மதகுரு. ‘அந்தப் பைத்தியக்கார எண்ணம் எங்களை விட்டுப் போயே விட்டது’ என்றான், கொடுமைக்கு ஆளான ஏழை. கடல் கொந்தளிக்கத் தொடங்கிற்று. கலத்திலிருந்தோர் அந்த ஒலியை அறியவில்லை; வெறிக்கூச்சல் செவியில் சங்கீதமாக வீழ்ந்து கொண்டிருந்ததால்.

மேரி அன்டாயினட், பிரான்சு நாட்டுக்கு அரசியாவதையே அந்த நாட்டு மக்கள் வெறுத்தனர் - அவள் ஆஸ்ட்டிரிய நாடு என்பதால்.

வந்த மேரியும், மக்கள் மனத்தைக் கவர முயலவில்லை; வசீகரத்தைக் கண்டு புகழும் சீமாட்டிகளைத்தான் தேடிக் கொண்டாள்.

மன்னன் அத்துணை அட்டகாசம் ஆடம்பரம் தேடுவதில்லை; அரசிக்கு அஃதன்றி மகிழ்ச்சி தரும் வேறு பொழுது போக்கு இல்லை. தரம் கெட்ட கொட்டகை செல்வாள்! தாறுமாறாக நடனமாடி மகிழ்வாள்! கோமாளி வேடம் பூண்டு நாடகமாடுவாள்! மக்கள் அருவருப்புக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ, அவ்வளவையும் சிரமப்பட்டுப் பொருள் செலவிட்டுச் செய்துவந்தாள்.

அரசி மேரியின் அணிமணிகள் உடை வகைகள் புதிது புதிதாக வடிவம், வண்ணம், மாறும். உடனே உல்லாச உலகு அந்த ‘தரத்தை’ப் பின்பற்றும்.

தலையணியில் இறகுகளைச் செருகிக் கொள்ளும் வழக்கத்தை அரசி புகுத்தி இறகுகளின் விலையே ஏறிவிட்டதாம்.

இந்த அழகைத் தன் தாய் காணவேண்டுமென்று, படம் தயாரித்து அனுப்பினாளாம் அரசி. அவள் தாய் மெரயா, தெரிசா படத்தைத் திருப்பி அனுப்பிவிட்டு “நான் பிரான்சு நாட்டு அரசியின் படத்தை எதிர்ப்பார்த்தேன். இந்தக் கடைசித் தரமான நாடகக் காரியின் படத்தை எதிர்பார்ப்பதே; இந்தக் கடைசித் தரமான நாடகக்காரியின் படத்தையல்ல” என்று கடிதமே அனுப்பினார்களாம்.

பிரான்சு நாட்டுச் செல்வவான்களுடன் லியான்சு நகரப் பட்டிலே ஆடைகள் தயாரித்து அணிவது வாடிக்கை. பெரும் பொருள் போட்டுப் பலர் அந்தத் தொழிலை நடத்தி வந்தனர். பல ஆயிரக்கணக்கான நெசவாளர் பிழைத்து வந்தனர்; திடீ
ரென்று அரசி, லயான்சு பட்டாடையை விட்டு விட்டு, பிரசல்ஸ் நகரில் தயாரிக்கப்பட்ட வெள்ளை வண்ணத் துணியில் ஆடைகள் தயாரித்து அணியலானாள். அரசி அணியவே அனைவரும் அதனையே தேடினர். லயான்சு நகரில் தொழில் கெட்டது. பிழைப்பு கெட்டது. அரசி ஏன் இப்படி எம்மைக் கெடுக்கிறாள் என்று கேட்டனர் தொழிலாளர். இது தெரியாதா? பிரசல்ஸ் நகர வெள்ளை ஆடை தயாரிக்கும் தொழிலால் இலாபம் தேடத்தான் நமது வயிற்றில் மண் போடுகிறாள்” என்றனர் வெகுண்ட மக்கள்! அவர்கள் கூறியதில் உண்மை இல்லாமற் போகவில்லை.

வெறுப்பு நிரம்ப ஏற்பட்டுவிட்ட நிலை. மக்களின் நிலையை எடுத்துக்கூறிடப் பலர் முன்வந்தனர்.
பகுத்தறிவு வால்டேர் மூலம் பரவிற்று; ரூசா அரசியல் தெளிவு அளித்து விட்டார்; உரிமைக்காக அஞ்சாது போரிட்டால், எத்தகைய ஆதிக்க அரசையும் வீழ்த்தலாம் என்பதை அமெரிக்கா நடத்திக் காட்டிய ‘விடுதலைப் போர்’ எடுத்துக் காட்டிவிட்டது. அமெரிக்கா சென்று திரும்பியவர்கள், ‘கதை, கதை’யாகக் கண்டவற்றைக் கூறினர். முச்சந்திகளிலும், உணவுக் கடைகளிலும், வயலோரத்திலும், தொழிலிடங்களிலும், இதே பேச்சு!

“ஆமாம், அமெரிக்கரின் வீரம் அப்படிப்பட்டது. நம்மைப் போலவோ, குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பார்கள். அவர்கள் மனிதர்கள்! நாம் நடைப்பிணங்கள்!” என்று கூறுவான் ஒருவன் ‘இரு, இரு; பொறு, பொறு’ என்பான் இன்னொருவன். “எது வரையில்? நமது எலும்புகளை எடுத்து இசைக் கருவி அமைத்து நரம்புகளை அறுத்தெடுத்து அதிலே குளிரச் செய்யும் வரையில் பொறுத்திருக்க வேண்டுமா?” என்று குத்திக் கேட்பான் இன்னொருவன். ‘என்னதான் செய்வது’ என்பான் வேறொருவன். ‘சாகுமன் கொடுமையை எதிர்ப்பது’ என்பான் அமெரிக்கா சென்று வந்தவன். ‘வலிவு?’ என்று கேட்பான் இளைத்தவன். அவன் இதயத்தைக் காட்டி ‘இங்கு இருந்தால் போதும்’ என்பான் அமெரிக்கக் காட்சி கண்டவன். அமெரிக்க விதைப் பண்ணையிலிருந்து புரட்சிக்கான தரமான வித்து கிடைத்தது.

இதற்கிடையில் கவலையற்ற மன்னனையும் கலங்கச் செய்யும் விதமாகப் பொருளாதார நெருக்கடிகள் கிளம்பின. அமைச்சர்கள் மாறி மாறி அமர்த்தப்பட்டனர். நெக்கர் போன்றவர்கள் தமது நிபுணத்தனம் நாட்டைக் காத்திடும் என்று நம்பி உழைத்தனர். ஆனால் மூண்டு கிடந்தவற்றைக் களைந்திட முடியவில்லை. அமைச்சர்கள் மாறினர், அவதிகள் வளர்ந்தன; மக்களின் ஆர்ப்பரிப்புக் கிளம்பிற்று. தீர்க்க முடியாத சிக்கலும், அடக்கிட முடியாத தொல்லையும், போக்கிட முடியாத நெருக்கடியும் ஏற்படும்போது மட்டுமே, ஸ்ட்டேட்ஸ் ஜெனரல் எனும் கூட்டு மன்றத்தைக் கூட்டுவது வழக்கம். பிரான்சு மன்னர்கள் இதைக் கூட்டுவது என்றால் தயங்குவர்.

கூட்டு மன்றம் என்பது, மக்களின் பிரதிநிதிகள், மதத்துறை உறுப்பினர், பிரபுக்கள் எனும் மூன்று பிரிவினரும் ஒன்றாகக் கூடி, நாட்டுக்கு வந்துற்ற கேடு போக்க வழிகாண ஏற்பட்ட அமைப்பு.

படை பலமும், சட்டத்தின் துணையும் போதுமானதாக இல்லை; மக்களின் கூட்டுச் சக்தி திரட்டப்பட்டாலன்றி நெருக்கடி தீராது என்பதை அறிவிக்கும் சம்பவம், கூட்டு மன்றம் கூட்டுவது.
கூட்டு மன்றம் கூடினால் மன்னரின் ஆட்சி முறையைத் தகர்த்திடும் ஆற்றல் கிளம்பிவிடும் என்பது மன்னர்களுக்கு இருந்து வந்த அச்சம்.

அச்சப்பட்டுப் பயன் இல்லை. எனவே பதினாறாம் லூயி, கூட்டு மன்றம் கூட்டச் செய்தான். கூட்டு மன்றம் 1789ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் கூடிற்று.

மக்கள் உழைத்துப் பொருள் தருவர். பிரபுக்கள் வீரத்தால் நாட்டுக்குப் பாதுகாப்புத் தருவர்; மதத் தலைவர்கள் ஜெபம் செய்து மக்கள் உய்வுக்கான அருள் தேடித் தருவர் என்பது தத்துவம்.

நடைமுறை அடியோடு மாறிவிட்டது. மக்கள் தமது ‘பங்கினை’ தேவைக்கு அதிகமாகவே செலுத்திக் கொண்டு வந்தனர்; பிரபுக்களும் பூஜாரிகளும், பெயர் கண்டு திருப்திப்படச் சொன்னார்கள். செயலோ சீர்கேடானவை.

கூட்டுமன்றம் கூடுவதென்பது, பிரான்சு நாட்டிலே புனிதமான நிகழ்ச்சி.

மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏற்கெனவே ஏற்பட்டு விட்டிருந்த விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் பன்மடங்கு வளர்ந்தது.

பிரான்சு நாட்டிலே, உரிமை வேட்கையையும் ஊராளும் முறை பற்றிய தெளிவையும் ஊட்டப் பல கழகங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அவற்றில் மிக அதிகமான செல்வாக்குடன் விளங்கியது ஜாகபின்ஸ் என்பவர்களின் சங்கம். இந்தச் சங்கம் புரட்சிக் காலத்தில், மிகத் தீவிரமாகப் பணியாற்றிற்று. இதிலே பயிற்சி பெற்றவர் பலர் மக்கள் மன்றத்தில் இடம் பெற்றனர்; ஆட்சிக் குழுவிலும் பணியாற்றினர். பேதமும் உட்பூசலும் ஏற்பட்டுப் பிறகு கலகலத்துப் போய்விட்டது என்றாலும், ‘ஜாகபின் சங்கம்’ மக்களிடையே உரிமைக் கனலை மூட்டி வெற்றி கண்டது.

வர்சேல்ஸ் நகரில் மே 2-ம் நாள் கூட்டுமன்ற உறுப்பினர்களை மன்னருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

நாலாம் நாள் கூட்டு மன்றத்தினர் ‘அருளைப் பெற’ மாதாகோயில் சென்றனர். சாமான்யர்களே தேவாலம் செல்லும் ஊர்வலத்தின் முன்வரிசையில் செல்ல வேண்டும் என்பது முறை. அதன்படி மக்களின் பிரதிநிதிகள் முன்னால்நடந்தனர். இரண்டாவது வரிசையில் ஆடம்பர உடையுடுத்திய பிரபுக்கள்; பிறகு மத அமைப்புக்களிலிருந்து - வந்தவர்கள்; கடைசியில் மன்னன்!

மக்கள் ஊர்வலத்தின் முன்வரிசையில் வந்த, தமது ‘பிரதிநிதி’களைக் கண்டதும் களிப்புடன் ஆரவாரம் செய்தனர்; பிரபுக்களை ஏற இறங்கப் பார்த்தனர். வரவேற்கவில்லை; மதத்தலைவர்களை வெறுப்புடன் பார்த்தனர்; மன்னனை அருவருப்புடன் பார்த்தனர்.

வரலாறு எவ்வாறு அமையப் போகிறது என்பதற்கான அறிகுறி அன்றே தெரிந்துவிட்டது.

பணம் பெற வழிகூறும் கூட்டு மன்றம் என்று மன்னனும் அவன் பரிவாரமும் எண்ணினர்; ஆட்சி முறை எப்படி இருக்கவேண்டும்? மக்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கான திட்டம் வகுத்துக்கொள்ள இதுதான் நல்ல வாய்ப்பு என்று விடுதலை விரும்பிகள் தீர்மானித்தனர்.

அரியணையில் அரசன் அமர்ந்தான்; குடும்பத்தினர் படிகளில் அமர்ந்தனர்; வலப்புறம் மதத் தலைவர்கள், இடது புறம் பிரப்புகள், கோடியில், சற்றுத் தாழவாக இருந்த இருக்கையில், மக்களின் சார்பிலே உறுப்பினரானோர் உட்கார்ந்தனர்; அன்றைய அரசியல் அமைப்பு அது; அதனை மாற்றத் துணிவும் வலிவும் கொண்டோர், ‘முன்னிடம்’ பிடிக்கவில்லை. பிடித்துக்கொள்ளப் போகிறார்கள் என்பது பார்வையால், பேச்சால் தெரியவந்தது.

மத அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை 290. பிரபுக்கள் சார்பில் இடம் பெற்றோர் 266. மக்கள் சார்பில் வந்திருந்தோரின் எண்ணிக்கை 584! சமூகத்தின் படப்பிடிப்பு போல் இருந்தது, அந்தக் கணக்கு. அந்த 584 பேர்களில் 121 பேர் வழக்கறிஞர்கள், 16 மருத்துவர், 162 பேர் வணிகர்கள் அல்லது சிறு பண்ணைகளின் சொந்தக்காரர்கள்.

மன்னர், கூட்டு மன்றத்தின் கடமை குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அலுவலைக் கவனிக்க சொல்லி விட்டுச் சென்றனர்.

அலுவலைக் கவனிக்க, மக்களின் உறுப்பினர் துடிக்கின்றனர். பிரபுக்களும் மதச்சார்பினரும் ஒத்துழைப்புத் தரவில்லை; முன்னவர் மறுக்கின்றனர். பின்னவர் தயங்குகின்றனர்.

“நாமே அலுவலைக் கவனிப்போம்’ என்று மக்களின் பிரதிநிதிகள் தீர்மானித்தனர்; மதச் சார்பினரும் ஒத்துழைக்கத் தயாராயினர். இதை நாடு வரவேற்று மகிழ்ந்தது.’

பால்தரும் கொழுத்த பசுவைக் கொண்டுவந்து கட்டி யிருக்கிறோம்; தொழுவத்தில் என்று ஆட்சி நடத்தியோர் எண்ணிக் கொண்டனர்; நாட்கள் செல்லச் செல்ல, புலி உறுமுவது கேட்டது!

தமது பிரதிநிதிகளை மன்றத்திலும் வெளியிலும் கூடி மக்கள் உற்சாகமூட்டினர்.

“எமது அரசு ஏற்படப் போகிறது, எத்தர்களே! அறிமின்! தீர்த்துக் கட்டுமுன் திருந்துமின்!” என்று மக்கள் கூட்டம் மமதையாளரை நோக்கி முழக்கமிட்ட வண்ணமிருந்தது. எங்கும் எழுச்சி! உரிமைப் பேச்சு! எதிர்த்து நிற்கும் போக்கு! எவரும் எமக்கு நிகர் இல்லை என்ற நோக்கம்! புயல் கிளம்புகிறது என்பது புரியலாயிற்று.

நெக்கர், மன்னன் தன் ஆட்சி முறையைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்திப் பார்த்தான். மற்றவர்கள் மன்னனை உசுப்பிவிட்டனர். கூட்டு மன்றத்தை மன்னன் மீண்டும் சந்திப்பது என்று ஏற்பாடு செய்யப்பட்டது. சூன் மாதம் 22ஆம் நாள் அதற்காகக் குறிக்கப்பட்டடது! ஆனால் 20ஆம் நாளே, ‘அரசனின் ஏவலர்கள் மன்றம் நுழைந்து அரசன் வருகைக்கான அமைப்புச் செய்யவேண்டும்; அனைவரும் வெளியேறுக!’ என்று உத்தரவிட்டனர்.
இதுபோன்ற அட்டகாசத்தை அழித்தொழிக்கத்தான் மக்களின் உறுப்பினர் கூடினர்; அவர்களிடமே ஆட்சியாளரின் அம்புகள் வம்புக்கு நின்றன.

எதிர்ப்பு எழுந்தது. இடையில் பந்தாட்ட அரங்கிலே கூடலாம் என்ற யோசனை கூறப்பட்டது. அங்குச் சென்று, கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தலாயினர்.

கூட்டு மன்றத்தைக் கூட்டிவிட்டுக் கேவலப்படுத்துவது எத்தகைய அறிவீனம் என்பதை அரசன் உணரவில்லை. அரசனை அண்டிப்பிழைத்துவந்த ஆள் விழுங்கிகள், அரசனுக்குத் தவறான பாதையைக் காட்டினர். 23ஆம் நாள், மன்னன் மன்றம் வந்தான். மக்களின் உறுப்பினர்களை, பக்கவாட்டத்தில் உள்ள கதவருகே நிறுத்திவைத்தனர், பிரபுக்கள் முன்வாயிற்படி வழியாகச் சென்று அமரும் வரையில்! பிறகு மக்கள் பிரதிநிதிகள் உள்ளே விடப்பட்டனர்! அவர்கள் உட்கார இடமே இல்லை. பிரபுக்களும் மதத்தலைவர்களும் இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர் தம்மைக் கேவலப்படுத்து கிறார்கள் என்று அறிந்து, வேதனைப்பட்டனர்; இருப்பினும் பொறுத்துக் கொண்டனர்.

மன்னன், அறிவுரை கூறலானான்; “ஆகாத வழி செல்லாதீர்; அரசாள நானறிவேன்; உரிமை தேடி அலையாதீர்! வரம்பு அறிந்து வாழுங்கள். மக்களின் நல்வாழ்வை நான் கவனித்துக் கொள்வேன். இனி, மூன்று பிரிவினரும் தனித்தனியாக இருந்து, அலுவலைக் கவனியுங்கள்.” என்ற கருத்துப்பட மன்னன் பேசினான். மக்கள் உறுப்பினருக்குப் பெருத்த ஆச்சரியம். இத்துணை கண்டிப்பு மன்னனுக்கு எங்கிருந்து வந்தது என்ற ஆச்சரியம். மன்னனைப் பிரபுக்கள் ஏவிவிட்டிருக் கிறார்கள் என்பது புரிந்துவிட்டது.

மன்னன் புறப்பட்டான் அரண்மனைக்கு - பிரபுக்கள் புடைசூழ! மதத்தலைவர்களில் சிலர் சென்றனர்; சிலர் மக்களோடு கூடிக் கொண்டனர். மன்றத்தைத் தொடர்ந்து நடத்தலாயினர். மன்னனின் ஆணை பெற்ற அதிகாரி, “அரசன் உம்மைக் கலைந்து போகச் சொல்லி உத்தரவிட்டதைக் கேட்டீர் களல்லவா?” என்று கேட்டான். “மன்னன் கருத்தைக் கூறினார். நாங்கள் மக்கள் கட்டளையை நிறைவேற்றக் கூடினோம். அந்த வேலையை வெற்றிகரமாக முடித்திடாமல் கலையமாட்டோம், என்பதைப் போய் உன் எஜமானனுக்குச் சொல்” என்று முழக்கமிட்டான், மிராபோ! விடுதலைப் போரின், முதல்முரசு ஒலித்துவிட்டது.!!

அரண்மனையிலிருந்து உத்தரவுகள் கிளம்பின. மக்கள் மன்றம் அவற்றை ஏற்க மறுத்தது. ஆதிக்கம், ஆள்அடிமை கொள்ளும் முறை யாவும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்ற திட்டம் பற்றி மன்றம் பேசிற்று. நாடு மன்றத்தை வாழ்த்திற்று; மக்களின் போர்க்கோலம் கண்டு, பிரபுக்கள் பதுங்கினர், அரண்மனைக்குள் அச்சம் படை எடுத்தது. அணி அணியாக மக்கள் கிளம்புவர், எதிர்ப்படும் ஆதிக்கக்காரரை அடித்து நொறுக்குவர். விடுதலைக்குப் பாடுபடுவோரின் வேண்டுகோளின்படி, பாதுகாப்புப் படை திரண்டது. பாஸ்ட்டிலி சிறைச்சாலை தூளாக்கப்பட்டது ஜூலை 14இல்! மக்கள் அதனை விழாவாக்கி மகிழ்ந்தனர்.

(திராவிட நாடு - 1960)