அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இதயம் இரும்பானால்
3

தப்பி ஓடியது திங்கட்கிழமை! பிடித்து மீண்டும் பூட்டி விட்டனர், சனி அன்று! ஒரு கிழமை! அரசன் என்ற அந்தஸ்து அடியோடு அழிந்துவிட்டது. அரசன் கைதியானான். மக்கள் கூடுகின்றனர் தீர்ப்பளிக்க! அந்தத் தீர்ப்பு நிறைவேற்றப்படும் நாளிலும் ஊர்வலம் உண்டு! விதவிதமான ஊர்வலம், இந்த விந்தை வேந்தனுக்கு!

“அரசர்கள் மடியவேண்டும் அல்லது பிரான்சு மக்கள் மாள வேண்டும். இரக்கம் காட்டுவது மிருகத்தனம்! பகைவர் அனைவரும் வாளுக்கு இரையாகவேண்டும் - சட்டம் சமைத்தளிக்கும் வாளுக்கு!”

ராபஸ்பயரி பேசிவிட்டான் - மன்னனுக்கு மரண தண்டனை தந்துவிட்டான். மன்றம் கூடி, அதே தீர்ப்பை எழுதப் போகிறது பிறகு, முன் கூட்டியே, ராபஸ்பயரி முழக்கமெழுப்பி விட்டான். அவன் பேச்சு, சட்டமாகும் காலம் அது.

மன்னனை என்ன செய்வது? பிரச்சனை, பல விளைவு களை, மனக் குழப்பங்களை ஏற்படுத்தியபடி இருந்தது. ‘மன்னித்து, மக்களின் பெருங்குணத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவோம்’ என்று கூறினர் சிலர். ‘முடிபறித்துக் கொண்டு, விரட்டிவிடுவோம். எங்கோ சென்று ஏதோ செய்து விழைக் கட்டும்’ என்றனர் ஒரு சிலர். ‘மக்களே அதிகாரத்தின் பிறப்பிடம்; முதலிடம். மன்னன் அவர்களின் குறிப்பறிந்து நடந்து கொள்ளட்டும்’ என்று பேசினர் மற்றும் சிலர். ராபஸ்பயரி நெளிவு ஏன் குழைவு ஏன், உள்ளதை உரைப்பேன் என்று கூறி, ‘மன்னன் அல்லது மக்கள்!’ என்றான். அந்த விநாடியே, பதினாறாம் லூயி இறந்துபட்டான் என்று பொருள். பிணமாக்கிப் புதைக்க வேண்டிய, சடங்கு மட்டும், பாக்கியாக இருக்கிறது. அது பிறகு, விரைவில். அதற்கு முன்பே பிரான்சு நாட்டின் ஆத்திரம், தீர்ப்பளித்துவிட்டது, ராபஸ்பயரியின் மூலமாக மன்னன் மடியவேண்டும் என்று!

மன்னனிடம்,பாபம், எது இருந்தது மடியாமல்! அரசு இழந்து, நிலைகுலைந்து, ஆதரவு மறைந்து ஆண்டியும் படாத பாடுபட்டு, அடைபட்டுக் கிடக்கிறான்; மன்னன் சிறையில் இருக்கிறான்! ஒரு நாளைக்கு அவனைக் கொல்லப் போகிறோம்! என்று எவனெவனோ கூறுவதைக் கேட்டுக்கொண்டு! மடியாமலா இருக்கிறான் மன்னன்!

மன்னன் பிழைத்துப் போகட்டும் என்று மனிதாபி மானத்துடன் பேசுபவர், நாட்டுக்குத் துரோகிகள் என்று ஏசப்படுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது பார்க்க - என்று கூறுவோர், மக்களின் பகைவர் ஆகிவிடுகின்றனர். மன்னனிடம் பரிவு காட்டியதால் கட்சிகளே கலைகின்றன; வீரர்களுக்குக் கோழைப் பட்டம் சூட்டப்படுகிறது; நாட்டுக்குழைத்தவர் விரட்டப்படுகிறார். அந்த நிலையில், மன்னன் மடிய வேண்டும் என்று ராபஸ்பயரி சொன்னான்! மடிந்துவிட்டான் மன்னன் - பழைய நினைவுகள் குடைவதால் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் மட்டுமே இருக்கிறான்.

“மன்னனைப் பாருங்கள், அவனிடம் சமரசம் பேசி வருகிறீர்களே, எவ்வளவு அறிவற்ற தன்மை! அரசன் எவ்வழியோ, அவ்வழியேதான், பிரபுக்கள் கூட்டம். அவர்கள், நம்மை என்றும் மன்னிக்கமாட்டார்கள்! நாம் செய்ததை மறக்கவும் மாட்டார்கள். அவர்கள் உள்ளவரை, புரட்சிக்குப் பகை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அடைத்து வைத்துவிடலாம் என்கிறீர்களா! எவ்வளவு பேரை? எங்கே? அவர்களிடம் மயங்கித் துரோகம் செய்யாதே காவலாளிகளை எங்கே கண்டுபிடித்து அமர்த்தப் போகிறீர்கள்? நான் கூறட்டுமா, பாதுகாப்பான சிறைச்சாலை! மக்களின் பகைவர்கள் அனைவரையும் அடைத்து வைக்கக் கூடிய, பெரிய பாதுகாப்பான சிறைச்சாலை, சொல்லட்டுமா! சுடுகாடு. ஆம்! அதுதான் அவர்களுக்கு ஏற்ற சிறைச்சாலை! அங்குச் சென்றால்தான், தப்பி வந்து நமது உயிர் குடிக்காமலிருப்பார்கள். அவர்களை ஓடிவிடாமல் தடுக்கக் கூடிய ஒரே காவலாளி சாவு! கொல்ல வேண்டும்! கொல்ல வேண்டும்! அதுதான் உண்மையில் பலனளிக்கும் கொள்கை. படைதிரட்டுவீர்; பயன் இல்லை! பகை அழியாது!! குத்தீட்டியுடன் இருநூறு வீரரைத் தாருங்கள்; கொன்று குவிக்கிறேன், பகைவர்களை! புரட்சி வெற்றிபெறச் செய்கிறேன்.”

மாராட் பேசுகிறான் அவ்வளவு இரத்தவெறியுடன். மறுப்பார் இல்லை! மறுக்கக்கூடிய சிலர் மாண்டனர்; பலர் தலைமறைவு ஆகிவிட்டனர். இப்போது குத்தீட்டி, கொடுவாள், வெட்டுப்பாறை - இவை தானிருக்கின்றன.

கொலையைத் தொழிலாக்கிக் கொண்டவர்கள், குதூகலப் படுகிறார்கள், தங்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது என்று அறிந்து; போர் முரசு ஒலிக்கக் கேட்டதும் பிணத்தைப் பிய்த்துத் தின்னலாம் என்று பெருங்கழுகுகள் வட்டமிடுமாம்! வெட்டிக் குவிப்போம் என்று மாராட் பேசிவிட்டது கேட்டுச் சொல்லக் கூசாத கொடுமை செய்வதைத் தொழிலாகக் கொண்ட கும்பல் குதூகலப்பட்டது. ‘இது அல்லவா அரசு! நமது அருமை அறிந்த அரசு’ என்று.

நாட்டை ஆபத்து சூழ்ந்து கொள்ளும்போது ஆர அமர யோசித்துக்கொண்டு, அறிவுரைகள் பேசிக்கொண்டு, அருளாளர் கூறுவதைக் கேட்டுக் கொண்டு, காலங்கடத்த முடியுமா என்று எக்காளமிட்டனர், இதயத்தை இரும்பாக்கிக் கொண்டவர்கள்.

அதற்கு ஏற்றாற்போல வெளிநாட்டவர், வேகமாகப் பிரான்சைத் தாக்கிடத் தொடங்கினர். கடும் போர் மூண்டு விட்டது. மன்னர் பலர் கூடினர், பிரான்சு நாட்டைத் தாக்கிட - புரட்சியைப் பொசுக்கிட - மன்னனை மீட்க.

‘அடைபட்டுக் கிடக்கும்போதே, அவனால் வந்திடும் ஆபத்தைப் பார்த்தீர்களா? ஆதிக்க வெறி பிடித்தலையும் இனம், அவனுக்காகக் கிளம்புகிறது காணீர்! இனியுமா உங்கட்குத் தயக்கம்? மன்னன் அல்லது மக்கள்!’ என்று பேசினர் மாராட்டுகள், ராபஸ் பயரிகள்!

மக்களின் உரிமைகளைக் காக்கவும், மக்களிடையே ஒருவனோ, ஒரு கூட்டமோ கிளம்பி பொது உரிமையை, நலனை அழித்திடாதபடி பாதுகாக்கவுமான ‘புனித’க் காரியத்துக்காகவே மன்னன் இருக்கிறான். அந்தக் கடமையை மறந்து அரசபீடம் கிடைத்தது தனக்காக, சுகபோகத்துக்காக என்று எண்ணிடும் கணமே புனிதம் போய் விடுகிறது; மன்னன் மக்களின் பகைவனாகி விடுகிறான். பகைவரை வீழ்த்த வேண்டியவனே பகைவனாகிவிட்டால், அவனை ஒழிப்பதுதான் முறை. ஒழித்தாகவேண்டும் என்றெல்லாம் ‘தத்துவம்’ பேசியும், செயலில் காட்டியும் வந்த இங்கிலாந்திலேயே, செல்வாக்குள்ள ஒரு கூட்டம் கிளம்பி, ‘பிரான்சு நாட்டிலே நடப்பது அரசியல் மாறுதல் அல்ல, பயங்கரமான படுகொல, குத்திக் குடலறுப்போன், வெட்டிவீழ்த்துவோன், பச்சிளங் குழந்தைகளைக்கூடக் கழுத்தைத் திருகிக் கொன்றிட அஞ்சாத பாவிகள் கூடிக் கொண்டு படுகொலை செய்து கொண்டு வருகிறார்கள். அங்கு எல்லாம் அழிந்துபடுகிறது. அறம் அழிகிறது! அன்பு அழிகிறது! பண்பு அடியோடு அழிந்து விட்டது! பக்தி பூண்டோடு களைந்தெறியப்படுகிறது. இதை அனுமதிப்பது கூடாது. இதனால் பிரான் மட்டுமல்ல, உலகே கெடும்; மனிதகுலமே நாசமாகும். கற்றறிந்த வித்தகரும், காலத்தை வென்ற பேரறிவாளரும், நமக்களித்த, போற்றற்கரிய பொன்னான கருத்துக்களும், முறைகளும் பாழாக்கப்படுகின்றன. அவை பாருக்கு உள்ள பொதுச்சொத்து. மனிதரை மிருகத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஆன்றோரும் சான்றோரும், அருளாளரும், நமக்களித்த நெறி; அது பாழாக்கப்படுகிறது. அறமறிந்தோரே! ஆண்டவனை மறவாதோரே! பண்பினை இழக்காதிருப்போரே! பாபத்தைக் கண்டு அஞ்சிடும் நல்லோரே! பிரான்சிலே தலைதூக்கி ஆடும் ‘பாபத்தை’ ஒழித்துக் கட்டிட முனைவீர், முன் வருவீர்! ஆபத்தில் சிக்கி இருப்பது அரசப் பதவி அல்ல; அறம்! அறம் தாக்கப்படுகிறது! அறம் அழைக்கிறது, அன்பர்களை! அஞ்சா நெஞ்சுடையோரை! அறத்தின் குரலைக் கேளீர்! அதனைக் காத்திட வாரீர்’ - என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்தது.

பல்வேறு நாடுகளிலேயும், பகைக்கும் கும்பல், பாயத் தயாராக இருந்தன.

யாரேனும், ‘துணிந்த பேர்வழி’ ஒருவன், முனைந்திருந்தால், பிரான்சிலே முளைத்த புரட்சியை அழித்திட, பணமும் படையும் ஏராளம் திரட்டிவிட முடியும். அத்தகைய சூழ்நிலை, லூயி மன்னன் முயற்சி ஏதும் முறைப்படி செய்யாமலேயே, உருவாகிக் கொண்டு வந்தது.

இனி இங்கு இருந்தால் சுட்டுச் சாம்பலாக்குவர் என்ற அச்சம் கொண்ட, பிரபுக்களில் சிலர், பிரான்சிலிருந்து தப்பித்துக் கொண்டு, இங்கிலாந்து முதலிய நாடுகளுக்கு ஓடிவிட்டனர். அங்கு அவர்கள், ‘கதை கதை’யாகக் கூறினர், பிரான்சிலே நடக்கும் பயங்கரம் பற்றி.

“வெறி பிடித்த மக்கள் இரத்தத்தைத்தான் குடிக்கிறார்கள், மனித இரத்தத்தை” என்பான் ஒரு பிரபு.
அவன் மனைவி, “குழந்தையின் இரத்தத்தை!” என்று கூறி அழுவாள். கேட்போர் துடிப்பர். துணிவுள்ளோர், ‘என்ன நேரிடினும் சரி; இந்தப் புரட்சியை எதிர்த்தாக வேண்டும்’ என்று பேசுவர்.
அமெரிக்க சுதந்திரத்தை ஆதரித்து ‘நேர்மையாளன் - பாங்காளன்’, என்று பெயரெடுத்த பர்க் எனும் ஆங்கில அறிஞனே, பிரான்சிலே நடக்கும் புரட்சி மனித குலத்துக்கு மாபெரும் நாசம் விளைவிப்பதாகும் என்று எழுதினான்.

டாம்பெயின் போன்ற உரிமை உணர்ச்சியை மதித்திடும் ஒரு சிலர் மட்டும், தடுத்து நிறுத்தி இராவிட்டால், புரட்சிக்கு எதிர்ப்பு, வேகமாகவும் வலிவுள்ளதாகவும் உருவாகிவிட்டிருந்திருக்கும்.

“தக்க சமயம் இது! தலைவெட்டத்தானே தெரியும் இதுகளுக்கு! படை எடுத்துச் சென்றால், தடுத்திடும் ஆற்றல் ஏது? முறை என்ன தெரியும்! கூனும் குருடும், மொண்டியும் நொண்டியும் கூடிக்கொண்டு கொக்கரிக்கின்றன! வீரமும் போர் முறையும் கருவியும் நிரம்ப நம்மிடம் இருக்கின்றன. நாம் படை எடுத்துச் சென்றால், பயந்தோடிப் போவர் பத்து நொண்டிகள் கூடி எதிர்த்தாலும், ஒரு வீரனிடம், என்ன நடக்கும்? பார்ப்போம்!” என்று எண்ணினர்.

படை திரட்டினர், பாய்ந்தனர் அன்னியப் படைகளைத் தாக்க; பாயுமுன், உள்நாட்டிலே துரோகிகளையும், சதிகாரர்களையும், அரசனிடம் கைக்கூலி பெற்று மக்களைக் காட்டிக் கொடுக்கக் கூசாத கயவர்களையும் விட்டு விட்டா நாம் களம் செல்வது! நாம் அங்கு இருக்கும்போது இந்தக் கும்பல் பின்புறமிருந்து தாக்கினால் நமது கதி என்ன ஆகும்? என்று கேட்டனர் சிலர். “ஆமாம்! முக்கியமான பிரச்சனை” என்றனர் பலர். ‘இதிலென்ன சிக்கல்! சீவுங்கள் தலைகளை!’ என்றனர் மாராட்டுகள். கொன்றனர், கொன்றனர்! எங்கும் குருதி! அதைக் கண்ட பிறகே, மனதுக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது; களம் சென்றனர்.

களத்திலே கடும்போர்! அங்குத் தோற்றால், எல்லாம் அழிந்துவிடும் - என்ற எண்ணம் அவர்களைப் புலியாக்கி விட்டது. வெற்றி பல பெற்றனர். அடியோடு எதிரிகள் அழிக்கப் படவில்லை என்றாலும், பலம் முறியடிக்கப்பட்டுவிட்டது.

வெளிப்பகை ஒருவிதமாக அடக்கப்பட்டு விட்டது. இனி மன்னனைக் கவனிப்போம் என்று கூறினர். மீண்டும் விவாதம்! “குற்றத்தை விசாரிக்கலாம்; தீர்ப்பளிக்கும்படி மக்களைக் கேட்கலாம்.” - என்று சிலர் வாதாடினர். ‘சிறையில் இருந்தாலும், மன்னன் எவ்வளவு பேரைத் தன் வலையில் விழச் செய்கிறான் பார்த்தீர்களா!’ என்றனர், அரச பரம்பரை பூண்டோடு அழிக்கப்படவேண்டும் என்ற கொள்கை கொண்டோர்.

அரச குடும்பமோ, அரண்மனையில்கூட அல்ல, வாட்டம் தரும் ஒரு கோட்டத்தில் அடைக்கப்பட்டு, வசதிகள் பலவும் குறைக்கப்பட்டுக் கிடந்தது.

அரசி, பலகணிவழியாக எட்டிப் பார்ப்பாள், சிலவேளைகளில்! வெட்டப்பட்ட தலையை ஈட்டியில் செருகித் தூக்கிக் காட்டிக் கூச்சலிடுவான், புரட்சியில் ஈடுபட்டவன்.

“இது நடக்கிறது வெளியே! உள்ளே இருக்கிறீர்கள் நீங்கள். உம்! எத்தனை நாளைக்கு?” என்று கேட்கிறது அவன் பார்வை. அரசியின் கண்களில் நீர் ததும்புகிறது. “அழுகிறாளப்பா அரசி! மக்களை அழ வைத்த அம்மணிக்கு இப்போது கண்ணீர் எப்படி இருக்கும் என்பது புரியுமல்லவா?” என்கிறான் அவதி பல கண்டவன்.

மன்னன், மக்கள் மன்றத்திலே நிறுத்தப்பட்டான்; குற்றப்பத்திரிகை படித்தனர். வாதாட யாராவது தேவையா என்று கேட்டனர்; ‘ஆம்’ என்றான் அரசன். இருவர்முன் வந்தனர், மன்னன் சார்பில் வாதாட; அவர்களைச் சுட்டுத் தள்ளுவது போலப் பார்த்தனர் மக்கள் மன்றத்தினர். இரக்கம் காட்டச் சொல்லித்தான் அவர்கள் கேட்டனர்! சட்டம் பேசவில்லை. கருணை காட்டும்படி கூறினர்; காவலன் மீது குற்றம் ஏதும் இல்லை என்று பேசவில்லை. மன்னனுக்காக வாதாடவில்லை; மனிதனுக்காக வாதாடினர்! மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை; அவ்வளவு கல் செஞ்சமா என்றே எவருக்கும் கேட்கத் தேன்றும்! ஆனால் ஆண்டு பல, பிரான்சு மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டபோது, சட்டம் பேசி அவர்களைச் சாகடித்தபோது, குற்றமற்றவர்களைக் கொன்றபோது, வழக்கறிஞர்களே கிடைக்கவில்லையே, மக்களுக்காக வாதாட! ஓரிருவர் வாதாடியபோதும், சட்டத்தின் புனிதத் தன்மையும் மதத்தின் மாண்பும், மன்னராட்சியின் மேம்பாடும் நிலைத்திட வேண்டுமானால், கண்ணீர் கண்டு கடமையினின்று தவறக்கூடாது. இரக்கம் பேசிச் சட்டத்தைக் குலைக்கக் கூடாது. கர்த்தர் இருக்கிறார் இரட்சிக்க ! சட்டம் இருக்கிறது தண்டிக்க!” என்று எத்தனை நீதிபதிகள் பேசினர் - பிறகு பிரபுக்கள் கெக்கலி செய்தனர்.

மன்னன் மக்களுக்கு எதிராகச் சதிபுரிந்தான் என்று குற்றம் சாட்டி, மரண தண்டனை விதிக்கப்பட்டது மக்கள் மன்றத்தால். 721 பேர் உறுப்பினர் இருந்தனர்! 361 பேர் மரணதண்டனை. விதித்தனர். நிபந்தனையின்றி மரணதண்டனை. மேலும் சிலர், சில நிபந்தனையுடன், மரண தண்டனை தரலாம் என்றனர்.

மொத்தத்தில், மன்னனுக்கு மரணதண்டனை தரவேண்டும் என்று 387 உறுப்பினர்களும், மற்ற 334 உறுப்பினர்கள் போர் முடியுமட்டும் சிறையில் வைத்திருந்து விட்டுப் பிறகு நாட்டை விட்டு ஓட்டிவிடுவது என்றும் கூறினர்.

மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, மன்னனுக்கு அறிவிக்கப்பட்டது. பதறாமல் கேட்டுக் கொண்டு, சாக மூன்று நாள் அவகாசம் கேட்டான் மன்னன்.

அவ்வளவு மனஉறுதி கொண்டவனா இந்த மன்னன்! சாகப்போகும் போதுதானா, இந்த நெஞ்சு உரம் வரவேண்டும்! ஆண்டு கொண்டிருந்தபோது, காட்டாத உறுதி இப்போது தெரிகிறதே! அணையுமுன் ஒளிவிடுமாமே விளக்கு. அதுபோலப்போலும் என்று கருதினர் மன்னனைக் காவல் காத்து நின்றவர்கள்.

1793 ஜனவரி 21ஆம் நாள்! வெட்டுப் பாறைக்கு அழைத்துச் செல்கிறார்கள் மன்னனை. அடைபட்டுக் கிடந்த தோட்டத்திலிருந்து, அரண்மனைக்கு எதிரே அமைக்கப்பட்ட ‘கில்லட்டின்’ எனும் வெட்டுப் பாறைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

தளபதிகள் வந்திருக்கிறார்கள், பணிவு காட்ட அல்ல; பயணத்துக்கு ஏற்பாடு செய்ய! போர் வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள், மரியாதை காட்ட அல்ல; தப்பி ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ள.

பாரிஸ் பட்டணத்திலே ஒரே அமைதி! தெருக்களிலே நடமாட்டம் இல்லை. போர் வீரர்கள் தவிர, மக்கள் இல்லை. பலகணிகள் திறக்கபடவில்லை. கதவுகள் தாழிடப்பட்டுக் கிடந்தன. வெட்டுப்பாறை அருகே நின்று, போர் வீரர்கள் முரசு கொட்டியபடி இருந்தனர். இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. மன்னன் அழைத்துச் செல்லப்பட்டான், புரட்சி அரசு அனுப்பி வைத்த வண்டியில்.

ஆடலையும் பாடலையும், அணிவகுப்புகளையும், வெற்றி ஊர்வலங்களையும் வெறியாட்டத்தையும் பலமுறை காட்டிய பாரிஸ்பட்டணம் அன்று ஒரு புதி பயங்கரத் தோற்றத்தைக் காட்டி நின்றது. மன்னனைத் தூக்கிலிட மக்கள் கட்டளையிட்டு விட்டார்கள். மக்கள் ஆணையை நிறைவேற்ற வீரர், அழைத்து வருகிறார்கள் மன்னனை. மன்னன் காணும் மூன்றாவது ஊர்வலம் - கடைசி ஊர்வலம்! வெட்டுப் பாறை! வண்டி நின்றது. மன்னன் அமைதி குலையாமல், ‘சாக’த் தயாரானான். மக்களிடம் ‘நான் குற்றமற்றவன்’ என்று கூறத் தொடங்கினான்! ‘முரசுகள் ஆர்ப்பரிக்கட்டும்’ என்று உத்தரவிட்டான் அதிகாரி. மன்னன் பேசியது நின்றது; வெட்டரிவாள் கழுத்தில் விழுந்தது. துண்டிக்கப்பட்ட தலையை ஒரு போர் வீரன் தூக்கிக் காட்டினான், அங்கு இருந்தோருக்கு, ‘வாழ்க குடி அரசு!’ என்று கூறினர்; மக்கள் கலைந்தனர்; மன்னன் கதை முடிந்தது.

“உன் பெயர்.”

“ஆஸ்ட்ரிய அரச குடும்பத்தைச் சார்ந்த மேரி அன்டான்னய்ட் என்று என்னை அழைப்பார்கள்.

“இப்போது உன் நிலைமை?”

“முன்பு பிரான்சு மன்னராக இருந்த லூயியுடைய நான்.”

“வயது?”

“முப்பத்து ஏழு!”

1793 அக்டோபர் திங்கள், பதினாலாம் நாள், மக்கள் மன்றம் அமைத்த வழக்கரங்கில் நடைபெறுகிறது இந்த உரையாடல். அரசியை மக்கள், ஊர் பெயர் கேட்கிறார்கள்; உற்ற வயது என்ன என்று கேட்கிறார்கள்; அருகே நெருங்கவே முடியாதே, அரசியை - சீமானாகவோ, சீமாட்டியாகவோ இருந்தலொழிய! சாமான்யர்கள் புரட்சி அரசு அமைத்தனர்; அவர்கள் கேட்கிறார்கள், குற்றவாளியைக் கேட்கும் முறைப்படி “உன் பெயர் என்ன?” என்று.

குற்றங்களை மெய்ப்பிக்கச் சாட்சிகள் பேசினர்; அரசியின் மறுப்புரை கேட்டனர்; கடைசியில் மணர தண்டனை தரப்பட்டது.

அரசனிடம் இருந்ததைவிட அரசியிடம் மக்களுக்கு ஆத்திரம் அதிகம். எனவே, வெட்டுப்பாறைக்கு அழைத்துச் சென்றபோது, கைகளைப் பின்புறமாகக் கட்டி, அனைவரையும் ஏற்றிச் செல்லும் வண்டியில்தான் அழைத்துச் சென்றனர். வழி நெடுக மக்கள் - குறிப்பாகப் பெண்கள் நின்று கேலி செய்தனர். - கேவலப்படுத்தினர். அக்டோபர்15! அரசியும் வெட்டுப் பாறையில் வீழ்ந்துபட்டாள். ‘வாழ்க, குடியரசு’ என்று மக்கள் முழக்கமிட்டனர்.

இரத்தவெறி பிடித்தல்லவா அலைந்திருக்கிறார்கள்! துளியும் ஈவு இரக்கம், மனிதாபிமானமற்றல்லவா, படு கொலைகள் புரிந்திருக்கிறார்கள். சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்றெல்லாம், சுவை தரும் பேச்சு பேசினரே தவிர, அவர்களின் கரங்களை இரத்தத்திலல்லவா தோய்த்து எடுத்தனர் - என்றுதான் எவருக்கும் கேட்கத் தோன்றும்.

புனிதமான கொள்கைகளுக்காக என்று கூறினாலும், படுகொலை படுகொலைதான்! முறையைத் தள்ளுங்கள், முடிவைக் கவனியுங்கள் என்று கூறுவது சமாதானமே தவிர, சன்மார்க்கத்துக்கும் சரி, அறிவுடைக்கும் சரி, சான்றாகாது.

புரட்சியின் பயங்கரம், அளவில் அதிகம்; மறுப்பதற்கில்லை. கொடுமைகள்- கேட்கக் கூசக்கூடியவை; இல்லை என்று வாதிடுவது வீண்.

ஆனால் எண்ணிப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான வேறோர் பிரச்சினை இருக்கிறது.

அன்பு, அறம், ஈவு, இரக்கம், பற்று, பாசம், பயம், பக்தி, தயவு, தாட்சண்யம் - இவைபோன்ற குணங்கள் கொண்டவர்கள், எப்படி இரத்த வெறிபிடித்து அலையும் நிலை அடைந்தனர்? ஆட்டுக்குட்டிகள் போலக் கிடந்தார்களே, இவர்கள் எப்படி ஓநாய்களாக மாறினர்? அந்த மாறுதலுக்கு காரணம் என்ன?

பார்க்கப் பச்சைப் பசேலென்று இருக்கிறது, மலரும் கனியும் குலுங்குகிறது, சுவையும் பயனும் அளிக்கிறது, மரம். அதைக் காயவிட்டு, விறகு ஆக்கிவிட்டால், கவர்ச்சி அடியோடு போய்விடுகிறது. பிறகு நெருப்பெரிக்க மட்டுமே பயன்படுகிறது! நெருப்பில் விறகைப் போடும் வரையில் பயம் இல்லை. விறகு நெருப்பாகிவிட்டாலோ, தொடக்கூட அச்சம்; பட்டால் தொல்லை; சுட்டால் புண் ஏற்பட்டுவிடுகிறது.

பச்கையாகத்தான் இருந்தது. ஒடித்து நாசமாக்கி, உலரவிட்டு விறகாக்கிப் பிறகு நெருப்பாக்கி விட்டு, தீ சுடுகிறதே,பெரு நெருப்புச் சூழ்ந்து கொண்டதே என்று கூறுவதில் என்ன பயன்?

பிரான்சு மக்கள் இதயம், எல்லாப் பண்புகளும் பூத்துக் குலுங்கும் இடமாகத்தான் இருந்தது - அக்கிரம அரசுகள் அமைத்துக் கொண்டவர்கள், அந்த இதயத்திலிருந்த பண்புகள் வற்றிப் போகும் அளவுக்கு, கொடுமை புரிந்தனர். விறகாகி விட்டது, பச்சைக் கொடி! இரும்பாகிவிட்டது, மக்கள் இதயம். மலர் குலுங்கிற்று கொடியாகக் கிளையாக இருந்தபோது; நெருப்பாகிவிட்டது, விறகு ஆக்கப்பட்டதால் ‘ராஜ பக்தி’ - ‘தெய்வபக்தி’ எல்லாம் ததும்பும் மனம்தான் இருந்தது. கொடுமைப்
படுத்திக் கொடுமைப்படுத்திப் பழிதீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சி தவிர வேறு எதுவும் இருக்க முடியாத நிலைக்கு மாற்றிவிட்டனர் மக்கள் இதயத்தை, மன்னர்களாக வந்த மமதையாளர்கள்.

இதயம் கொதித்தபோது, ஏளனம் செய்தனர். வேதனையை வெளியிட்டபோது கேலி பேசினர். இரத்தம் கேட்ட போதுதான் ஆதிக்கக் கூட்டம் அச்சப்பட்டது. பிறகு கேட்கலாயிற்று, “ஈவு இரக்கம் துளியும் இல்லையா?” என்று.

“சீமானே! உன் தந்தை வயதிருக்கும் எனக்கு! உங்கள் குடும்பத்துக்காகவே உழைத்து உழைத்து, சருகு ஆகிப்போனேன்! என்னைச் செருப்புக் காலால் உதைத்தாய், என் மனைவி எதிரில்! நினைவிருக்கிறதா? அப்போது பண்பு இருந்ததா உனக்கு? அதைக் கண்டு சிரித்தாள் உன் சிங்கார மகள்! பண்பா அது? இப்போது எம்மிடம் பண்பு இல்லையே என்று கேட்கிறாய், உமது இல்லந்தோறும் பண்புப் பயிர் வளர்த்து வைத்தவர்போல! என்று கேட்பான், புரட்சியால் “பொல்லாதவன்” ஆகிவிட்டவன். ஆனால் சீமான் இல்லை எதிரில்! பலர் இறந்தனர்; மற்றும் பலர் மறைந்தனர்! கேட்க முடியவில்லை.

உழைப்பவனைச் சுரண்டினர்; அதற்குப் பெயர் வரிவிதிக்கும் முறை என்றனர். வயல்களை அழிக்கிறோம் என்றனர்; காரணம் கேட்டால் வேட்டைக் கலை வளர்க்கிறோம் என்றனர்.