அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரும்பு முள்வேலி
1

தமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது; இதயத்துக்குப் போடப்பட்டுவிடும் முள்வேலி பற்றியது; கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம். ‘மனிதத்தன்மை’யின் புனிதத்தை விளக்கிடும் தூய்மைமிக்க கருத்தோவியம்.

கருமேகங்கள் திரண்டுள்ள காட்சியைத் தீட்டிட திறமை மிக்க எந்த ஓவியனாலும் முடியும்.

பால் நிலவு அழகொளி தந்திடும் காட்சியினைத் தீட்டிடவும், கைத்திறன் மிக்க ஓர் ஓவியனால் முடியும்.

ஆனால், கருமேகங்கள் திரண்டிருப்பதால் காரிருள் கப்பிக் கொண்டிக்கும் காட்சியுடன் ஓர் புத்தொளி மெல்ல மெல்லக் கிளம்புகிறது என்பதனையும் இணைத்தளித்திட கைத்திறன் மட்டும் போதாது, கருத்துத் திறனும் இருந்திடவேண்டும், ஓவியனுக்கு.

கெட்டவனைக் காட்டிடுவது எளிதான காரியம், ஓரளவு திறமைபெற்ற எழுத்தாளனுக்கு.

நல்லவனைக் காட்டிடும் எழுத்தோவியம் தந்திடுவதும் எளிதுதான் தரமான எழுத்தாளனுக்கு.

ஆனால் ‘கெட்டவன்’ நல்லதும் எண்ணுகிறான். செய்கிறான் என்று காட்டிடவும், நல்லவனிடம், புற்றுக்குள் அரவுபோல் கெடு நினைப்போ செயலோ இருந்திடுவதைக் காட்டிடவும், எழுத்தாளனாக மட்டும் இருந்தால் போதாது, எண்ணங்களை ஆள்பவனாகவும் இருந்திட வேண்டும்.

எளிதான காரியம் அல்ல என்பதுடன், ஒரு துளி தவறினால், அத்தகைய முயற்சி, ஆபத்தையே கூட மூட்டி விடக்கூடும், படிப்போரின் உள்ளத்தில்.

இந்தச் சூழ்நிலையில், இவன் இப்படித்தான் எண்ணியிருப்பான் இவ்விதம்தான் செய்திருப்பான், என்று யூகித்து எழுதுவதிலேயே தவறுகள் நேரிட்டு விடுகின்றன.

சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுவிடும் எண்ணத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு, முற்றிலும் வேறான, ஆனால் தூய்மையான எண்ணத்தை ஒருவன் கொண்டிருந்தான் என்பதை எடுத்துக் காட்டும் எழுத்தோவியம் தீட்டித் தருவதனை எல்லா எழுத்தாளர்களும் மேற்கொள்வதில்லை; ஆபத்தான முயற்சி என்ற காரணத்தால்.

ஆனால் சிற்சிலர், தனித்திறமை பெற்றோர், இத்தகைய எழுத்தோவியம் தருகின்றனர்; இறவாப் புகழுக்கு உரியராகின்றனர்.

பகைவனிடம் கோபமும், கொதிப்பும், வெறுப்பும் எழுவதும் வஞ்சந்தீர்த்தாகவேண்டும் என்ற எண்ணம் வெறி அளவு ஓங்குவதும் இயல்பு.

ஆனால் பகைவனிடமும் பிரிவு எழுகிறது - எழ முடியும் - என்று எடுத்துக்காட்ட மிகச் சிலருக்கு மட்டுமே முடியும் - அது பொது இயல்புக்கு மாறானது; உலகில் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டுள்ள முறைக்கு முரணானது. எனவேதான், அதனை எடுத்துக் கூறுவதற்குத் தனியானதோர் திறமை தேவைப்படுகிறது.

நம் நாட்டினை வேறோர் நாட்டினர் தாக்கிடும்போது - போர் மூண்டிடும்போது, நாட்டுப்பற்று எனும் உணர்ச்சிதான், மற்ற எந்த உணர்ச்சியையும்விட, மேலோங்கி நிற்கிறது.

நம் நாடு தாக்கப்படுகிறது! நமது தன்மானம் தாக்கப் படுகிறது!! என்ற எண்ணம், உள்ளத்தை எரிமலையாக்குகிறது. வெடித்துக்கொண்டு கிளம்புகிறது, கோபம், கொதிப்பு, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம், பகைவனை அழித்தொழித்தாக வேண்டும் என்ற துடிப்பு.

போர் மூண்டிடாதபோது எவையெவை ‘வெறி’ என்று கருதப்படுமோ அவை யாவும் தேவைப்படுவனவாக, வரவேற்கப் படுவனவாக, போற்றப்படுவனவாக ஆகிவிடுகின்றன.

“இப்படியா இரக்கமின்றி அடிப்பது. அவனும், பாவம், மனிதன்தானே” என்று மனம் உருகிப் பேசிடும் நல்லோர்கூட, மெல்லியலார் கூட, “சுட்டுத் தள்ள வேண்டும்! வெட்டி வீழ்த்த வேண்டும்! பூண்டோடு அழிக்க வேண்டும்!” என்று பேசு கின்றனர் - போர் மூட்டிவிடும் வெறி உணர்ச்சி காரணமாக! அந்த உணர்ச்சியை வெறி என்றுகூடக் கூறிடத் துணிந்திடார்! கவிதைகள் இயற்றப்படுகின்றன, அந்த ‘எழுச்சி’பற்றி.

நாடு வாழ்ந்திட எதனையும் செய்திடுவேன்! - என்ற பேச்சுக்குப் பெரியதோர் மதிப்புக் கிடைக்கிறது. எதனையும் செய்திடுவேன்! படுகொலைகள்கூட! பச்சிளங் குழந்தைகளைக் கொன்றிடும் பாதகம்கூட! போர்க்களத்தில் “கொல்லு! இல்லையேல் கொல்லப்படுவாய்!” என்பதுதான் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் - போரிடும் இரு நாடுகளிலும்!

ஒரு நாடு மற்ற நாட்டின்மீதே எல்லாப் பழிகளையும், எல்லாக் கெடு நினைப்பினையும் ஏற்றி வைக்கும்; காட்டு மிராண்டிகள்! கொலைப் பாதகர்கள்! வெறியர்கள்! மனித மாண்பு அறியாதவர்கள்! - என்று கண்டனக் கணைகள் கிளம்பிடும், இருபுறமுமிருந்து.

போர் ஓய்ந்து, ஓர் புது உறவு ஏற்பட்ட பிறகுதான், உண்மை வெளியே தலைகாட்டும், தைரியமாக! போர் துவங்கியதும், உண்மை ஓடி ஒளிந்து கொள்கிறது.

வெறி பிடித்தலையும் சிலரால் மூண்டது இந்தப் போர் என்று, போர் ஓய்ந்த பிறகுதான் பேசப்படும் - போர் நடக்கும் போது அந்த நாட்டு மக்கள் அனைவரையுமே வெறியர்கள், காட்டுமிராண்டிகள், இரத்தம் குடிப்பவர், பிணம் தின்பவர், கற்பழிப்பவர், கயவர் என்றுதான் பேசுவர் - ஒருவர் தவறாமல்.

யாரேனும் ஒருவர் இவ்விதம் பொதுப்படையாக ஒரு நாட்டு மக்கள் எல்லோரையும் மொத்தமாகக் கண்டிப்பது முறை அல்ல என்று கூறிடின், அவனுடைய நாட்டுப்பற்று பற்றிய பலமான ஐயப்பாடு எழும்; அருவருப்பு கிளம்பும்; அவன் ‘தேசத் துரோகி’ ஆக்கப்பட்டு விடுவான்.
தேசத்துரோகி - நாட்டைக் காட்டிக் கொடுப்பவன் - எதிரிக்கு உளவாளி - எதிரியைவிடக் கொடியவன் - இழிமகன் - என்றெல்லாம் அவன் கண்டிக்கப்படுவான்; தனது நிலைமையை விளக்கிட அவன் முனைந்தாலோ, மக்களின் ஆத்திரம் மேலும் வளரும்; அவனை வெட்டி வீழ்த்திடக் கிளம்புவர்.

இந்தக் கரத்தால் - இந்த வாள் கொண்டு - பகைவர் இருபதின்மரைக் கொன்றேன்.

துரத்தினேன்! அவன் ஏற்கெனவே அடிபட்டவன், ஆகவே வேகமாக ஓடிட முடியவில்லை, களத்திலே இருள் கப்பிக் கொண்டிருந்தது, படை கிளப்பிய தூசியால்! எதிரில் யானை மிரண்டடோடி வருவது அவன் கண்களில் படவில்லை - சிக்கிக் கொண்டான்; காலின் கீழ் போட்டு... ஆ! என்றான் ஒரு முறை ... ஒரே ஒருமுறை... பிறகு... கூழ்! கூழாகிப் போனான்!

இப்படிப் பல நிகழ்ச்சிகளைத் தன் வீரத்திற்குச் சான்றுகளாகக் கூறுவான், களம் சென்று திரும்பிவயன், கேட்போர் மகிழ்வர், அவனை நாட்டைக் காத்த நாயகன் என்று பாராட்டுவர்.

பகை உணர்ச்சி கிளம்பிவிட்டால் அது தடுப்பாரற்று வேகமாக வளரும்; வளர்த்திடுவதும் போரின்போது மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகிவிடுகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் அந்தப் பகை உணர்ச்சியைக் கொண்டுவிடுகின்றனர்; பொறி ஏதோ ஓர் இடத்தில்தான் விழுகிறது; தீயோ எங்கும் பரவி, எல்லாவற்றையும் பிடித்துக்கொள்கிறது அல்லவா.

இன்முகம் காட்டுதல், நன்மொழி பேசுதல், அன்பு வழங்குதல், அறநெறி கூறுதல், இரக்கம் கொள்ளுதல் ஆகிய பண்புகள் அவ்வளவும் போர்ச் சூழ்நிலையில் அடியோடு மறைந்துபோய், தாக்கு! அழி! வெட்டு! குத்து! - என்ற உணர்ச்சியை அனைவரும் பெற்றுவிடுகின்றனரே; அப்படியானால் அந்தப் பண்புகள் - மனிதத்தன்மை - அடியோடு மடிந்து போகின்
றனவா? மடிந்து விடுகின்றன என்றும் கூறுவதற்கில்லை, ஏனெனில் போர் முடிந்து வேறோர் புதியநிலை ஏற்பட்டதும், மீண்டும் மெல்ல மெல்ல அந்தப் பண்புகள் மலருகின்றன; சமுதாயத்துக்கு மணம் அளிக்கின்றன.

மடிவதில்லை, ஆனால் அந்தப் பண்புகள் மங்கி விடுகின்றன, மறைந்து விடுகின்றன.

பகைவனிடம் மூண்டுவிடும் வெறுப்புணர்ச்சி, அந்தப் பண்புகளை மூலைக்குத் துரத்தி விடுகின்றன! கண் சிமிட்டிக் களிப்பூட்டும் விண்மீன்களைக் கருமேகம் மறைத்து விடுவது போன்ற நிலை!

கப்பிக்கொண்டிருக்கும் காரிருளுக்குப் பின்னே, விண்மீன் உளது என்பதனையும், அதன் ஒளி காரிருளைக்கூடக் கிழித்தெறிந்துகொண்டு வெளிக் கிளம்பக்கூடும் என்பதனையும் எடுத்துக் காட்டுகிறார் ஹால் கெயின் எனும் பேரறிவாளர், ‘இரும்பு முள்வேலி’ எனும் தமது நூலில்.

இங்கிலாந்துடன் ஜெர்மனி போரிடும் நாட்கள்; உலகையே தன் காலடியில் விழச் செய்திடத் துணிந்து கெய்சர், போர் நடத்திய நாட்கள்; முதலாவது உலகப்போர்.

ஜெர்மனியில், கெய்சர் போர் வெறி மூட்டுகிறார் என்று துவங்கிய பேச்சு, ஜெர்மானியர் போர் வெறியர்கள் என்ற கட்டத்தை அடைந்துவிட்டது. ஒரு நாட்டு மக்களுடைய நாட்டுப் பற்றையும், ‘ராஜபக்தி’யையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அந்த நாட்டு அதிபன் அவர்களைப் பலிக்கிடாக்களாக்கி, இரத்த வெள்ளம் புரண்டோடச் செய்தான்.

கெய்சர் மீதுதான் முதலில் கண்டனம், வெறுப்பு, கொதிப்பு, பிறகு ஜெர்மன் மக்கள் மீதே அந்த வெறுப்புணர்ச்சி பாய்ந்தது.

குழந்தைகளை வெட்டித் தின்கிறார்கள் ஜெர்மன் வெறியர்கள் என்று இங்கிலாந்து நாட்டு முதியவர்கள் - குறிப்பாகத் தாய்மார்கள் பேசினர்.

ஜெர்மன் மொழி, ஜெர்மன் தொழில் திறமை, ஜெர்மன் கலை என்று எல்லாவற்றின்மீதும் அந்த வெறுப்புணர்ச்சி பாய்ந்தது.

போர் மூளுவதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் வேலை பார்த்துவந்த ஜெர்மானியர்கள் விரட்டப் பட்டனர் அல்லது சிறை வைக்கப்பட்டனர்.

ஜெர்மனியுடன் எந்தவிதமான தொடர்பும் கூடாது என்பது தேசியக் கட்டளையாகிவிட்டது, எல்லாத் தொடர்பு

களும் அறுத்தெறியப்பட்டது.

இங்கிலாந்து நாட்டு அரச குடும்பம் ஜெர்மன் கெய்சர் குடும்பத்துக்கு நெருங்கிய உறவு. அதனை வெளியே சொல்லக் கூடக் கூசினர். பகை உணர்ச்சி அந்த அளவு கப்பிக்கொண் டிருந்தது. அந்தச் சூழ்நிலையில் நடைபெறும் நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது. ‘இரும்பு முள்வேலி.’ போர் கிளப்பிவிடும் பகை உணர்ச்சிக்கும் இதயத்தின் அடியிலே மறைந்திருக்கும் அன்பு உணர்ச்சிக்கும் இடையே நடைபெறும் போர் பற்றி விளக்கம்.

மான் தீவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே ஒரு பகுதி. அங்கு ஒரு விவசாயக் குடும்பம். மிராசுதாரனிடம் ஒரு பண்ணையைக் குத்தகைக்கு எடுத்துப் பாடுபட்டு வாழ்க்கையை நடத்திச் செல்லும் ஒரு குடும்பம். முதியவர் - அவர் மகன் - அவர் மகள் - கொண்ட குடும்பம்.

ஜெர்மனியை அழித்தொழித்தாலொழிய, இங்கிலாந்து மட்டுமல்ல, மனிதகுலமே அழிந்து போகும் என்ற உணர்ச்சி எங்கும் பரவி இருந்ததுபோலவே, அந்தச் சின்னஞ்சிறு தீவிலும் பரவி இருந்தது.
முதியவரின் மகன், பிரிட்டிஷ் படையில் சேர்ந்தான்; முதியவர் மகிழ்ந்தார்.

என் அண்ணன் போர் வீரன்! பொல்லாத ஜெர்மானியரை அழிக்கும் புனிதப் போரிலே ஈடுபட்டிருக்கிறான் என்ற எண்ணம் கொண்ட அந்த எழில் மங்கை, தன் குடும்பத்துக்கே அண்ணன் பெருமை தேடிக் கொடுக்கிறான் என்ற பெருமித உணர்ச்சியில் திளைத்திருக்கிறாள்.

எங்கும் பரவி, எல்லோர் உள்ளத்திலும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது போலவே மோனா மனத்திலும் ஜெர்மானியர் மீது வெறுப்புணர்ச்சி ததும்பிக் கிடந்தது. ஒரு துளியும் ஈவு இரக்கம் காட்டக்கூடாது; கொன்று குவிக்கவேண்டும் அந்தக் கொடியவர்களை; பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்று கருதினாள்.

ஜெர்மானியர்களின் காட்டுமிராண்டித்தனம் - கொலை பாதகத்தன்மை பற்றிய தகவல்கள் நிரம்பக் கிளம்பியபடி இருந்தன. ஒன்றுக்குப் பத்தாக இவை வளர்ந்தன. வெறுப்புணர்ச்சி மூண்டுவிட்டிருந்தது. முதியவர்கூட அவ்வளவு கொதித்துப் பேசுவதில்லை. அவருடைய மனத்திலே சிறிதளவு பழைய பண்புகள் உலவிட இடம் இருந்தது. அந்த மங்கைக்கோ உள்ளம் முழுவதும் அந்த ஒரே ஓர் உணர்ச்சிதான்; ஜெர்மானியர் மீது வெறுப்பு; அளவு கடந்த அகற்றப்பட முடியாத வெறுப்பு. அதிலும் போர்க்களம் சென்றுள்ள தன் அண்ணனைப் பற்றிய எண்ணம், அந்த வெறுப்புணர்ச்சியை வெந்தழல் ஆக்கி விட்டிருந்தது.

ஜெர்மனி வெற்றிகளை ஈட்டிக்கொண்டு, ஆணவத்தைக் கக்கிக்கொண்டிருந்த கட்டம் முடிந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது; பல இடங்களிலே தோல்வி கண்டு திணறிக்கொண்டிருந்தது; ஜெர்மானியர் பலர் கைதாயினர்.

அந்தக் கைதிகளை, இந்தத் தீவிலே கொண்டு வந்து சிறை வைக்க ஏற்பாடாகிறது.

காட்டுமிராண்டிகள் வருகிறார்கள். இங்கு நாம் இருக்கக் கூடாது என்று எண்ணி அந்தத் தீவிலிருந்து பல குடும்பங்கள், வெளியேறி விட்டன. சில குடும்பத்தினர் தீவிலே தங்கினர் என்றாலும் பெண்களை மட்டும் வேறு இடத்துக்கு அனுப்பி விட்டனர்.

இங்கு ஏன் அந்த இழி மக்களைக்கொண்டு வருகின்றனர். கேவலம், இது மிகக் கேவலம். அந்தக் கொடியவர்களின் நிழல் பட்டாலே இழிவாயிற்றே. அவர்களுக்கா நமது தீவிலே இடம்! அந்த வெறியர்கள் இங்கு இருக்கப்போகிறார்கள் என்றால், அதே இடத்தில் நாம் இருப்பதா! கேவலம்! மிகக் கேவலம் அது! அப்பா! நாம் இந்தத் தீவைவிட்டு வேறிடம் போய்விடலாம். அந்தக் கொடியவர்களைக் காண்பது கூடப் பெரும்பாவம்! இங்கு இருக்கலாகாது என்று பெண் வற்புறுத்துகிறாள். அவள் உள்ளத்தில் வெறுப்புணர்ச்சி அவ்வளவு கப்பிக்கொண்டிருக் கிறது. முதியவர் புன்னகை செய்கிறார், அடே அப்பா! எவ்வளவு கொதிப்புடன் பேசுகிறாள் மகள் என்பதை எண்ணி.

மகளே! மற்றவர்கள் தீவை விட்டுச் சென்றுவிட்டாலும், நாம் செல்வதற்கு இல்லை மிராசுதாரர், நாம் இங்கேயே இருந்தாகவேண்டும்; பண்ணையைப் பார்த்துக்கொள்ள வேண்டும், கவனிப்பு இல்லாவிட்டால் பண்ணை பாழாகிவிடும் என்கிறார். மேலும் இங்குச் சிறை வைக்கப்பட இருப்பவர்களுக்கு, நாம்தான் பால் தரவேண்டி இருக்கிறது வேறு வழியில்லை... என்கிறார்.

பால் தருவதா! அந்தப் பாவிகளுக்கா! எந்தப் பாதகர்களை ஒழித்திடும் புனிதப்போரிலே அண்ணன் ஈடுபட்டிருக்கிறாரோ, அந்தப் பாதகர்களுக்கு நாம் பால் தருவதா! அக்கிரமம்! அநியாயம்! இழிசெயல்! நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். அந்தப் பாவிகளை வெட்டி வெட்டிப் போடவேண்டும், கழுகுக்கும் நரிகளுக்கும்; அவர்களுக்கு நமது தீவிலே இடம்! நமது பண்ணையிலிருந்து பால்! இது என்ன அநியாயமப்பா!! - என்றெல்லாம் அவள் எண்ணிக் கொதிப்படைகிறாள். முதியவர் புன்னகை புரிகிறார்.

அதனால் என்னம்மா! அவர்களும் மனிதர்கள்தானே! ஜெர்மானியர்களாகப் பிறந்ததனாலேயே அவர்கள் மனித குலம் அல்ல என்று கூறிவிட முடியுமா! போர் மூண்டுவிட்டது நம் நாட்டுக்கும் ஜெர்மனிக்கும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோம். அதனால், ஜெர்மானியர் மனிதர்களே அல்ல என்று கூறிவிட முடியுமா! - என்று கனிவாகப் பேசுகிறார் முதியவர்; கன்னி கடுங்கோபம் கொள்கிறாள்.

போரின்போது, இரு தரப்பினருந்தான் அழிவு வேலையில் ஈடுபடுகின்றனர். எந்தச் சமயத்தில், எந்த இடத்தில், எவருடைய கரம் ஓங்கி இருக்கிறதோ அவர்கள் அதிக அளவுக்கு வெட்டி வீழ்த்துவார்கள்! இரு தரப்பினரும் ஒரேவிதமான வேலையில் - கொல்லும் வேலையில் - ஈடுபட்டுள்ளனர். இதிலே ஒரு தரப்பினர் மட்டுமே காட்டுமிராண்டிகள் - கொலைப் பாதகர்கள் - இரத்தவெறி பிடித்தலைவோர் - என்று கூறிவிட முடியுமா? போர், காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டு விடுகிறது. ஒரு தரப்பினர் குண்டுகளால் தாக்குகின்றனர், மற்றோர் தரப்பினர் மலர் கொண்டு அர்ச்சிக்கின்றனர் என்பதா போர்! கொலை நடக்கிறது, பெரிய அளவில் - சட்டத்தின் அனுமதியுடன் - சமூகத்தின் ஒப்புதலுடன்! இதிலே அதிகமான அளவு அழிவைச் செய்பவன் வெற்றி வீரனாகிறான். அவனுடைய கரம் இரத்தக்கறை படிந்தது. ஆனால் அது நாட்டைக் காத்த கரம் - வெற்றி ஈட்டிய கரம் - புகழ் தேடித் தந்த கரம் என்பதால் பாராட்டப்படுகிறது.

முதியவர் இதுபோன்ற கருத்தினைக் கொண்டவராக இருந்திக்க வேண்டும்; அவருடைய உள்ளம் ஒரேயடியாக வெறுப்பு நிரம்பியதாக இல்லை; நியாய உணர்ச்சியும் சிறிதளவு உலவிட இடமிருந்தது.

இப்படி ஒரு மனமா! ஜெர்மானியர் வந்து தங்கினால் என்ன!! அவர்களுக்குப் பருகிடப் பால் தந்தால் என்ன என்று பேசுவதா! நமது நாட்டு மக்களின் இரத்தத்தைக் குடிக்க கிளம்பி யுள்ள கொடியவர்கள் இந்த ஜெர்மானியர், இவர்களுக்குப் பருகப் பால்! நாம் கொடுப்பதாம்! என்ன நியாயம் இது! அப்பா ஏன் இப்படிக் கெட்டுக்கிடக்கிறார் - பால் தருவதாமே பகைவர்களுக்கு!! கொடுத்தால் என்னம்மா என்று வாதாடுகிறார்! அவர்களும் மனிதர்தான் என்று! நியாயம் பேசுகிறார்! அவர்கள் மனிதர்களா!! பதைக்கப் பதைக்கக் கொன்றார்கள் நம்மவர்களை! பச்சிளங் குழந்தைகளைக்கூடக் கொன்றனர் அக்கொடியவர்கள்! அவர்களும் மனிதர்கள்தான் என்கிறார் அப்பா! ஏன் இவருக்கு இப்படிப் புத்திகெட்டுப் போய்விட்டது. அங்கே அண்ணன் துரத்துகிறான் ஜெர்மன் கொடியவர்களை - இங்கே அப்பா பால் தரச் சொல்கிறார், அண்ணன் என்ன எண்ணிக்கொள்வார் இதனை அறிந்திடின். செச்சே! அப்பா சுத்த மோசம்!

ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்க, சிறைக்கூடம் கட்டப்படுகிறது. கைதிகள் தப்பித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, அங்கு இரும்பு முள்வேலி போடப்படுகிறது. மிருகங்களை அடைத்து வைப்பதுபோல ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்கிறார்கள். வெளியே பிரிட்டிஷ் போர் வீரர்கள் காவல் புரிகின்றனர், தப்பியோட முயற்சித்தால் சுட்டுத்தள்.

கைதிகளான எல்லா ஜெர்மானியருமே, போர் வீரர்கள் அல்ல; பலர் தொழிலில், வாணிபத்தில்; பல்வேறு அலுவலகங் களில் ஈடுபட்டிருந்தவர்கள்; சிலர் செல்வம் படைத்தவர்கள்கூட!

எல்லாம் ஜெர்மானியர்தானே! வெறியர்கள் - கொடியவர் கள் தானே! இவர்களை இப்படித்தான் அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மோனாவுக்கு முதியவருக்கோ ஒரு பச்சாதாப உணர்ச்சி, ஜெர்மானியர்கள் தமக்கு அளிக்கப்படும் உணவு மோசமாக இருப்பதாகக் குறைபட்டுக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார். இதுகளுக்கு அப்படிப்பட்ட உணவுதான் தர வேண்டும் என்கிறாள் மோனா. அவள் இதயத்தில் வெறுப்புணர்ச்சி நிரம்பி இருப்பதால். வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு இழுத்து வரப்பட்டிருக்கிறார்கள்; அது போதாதா; மேலும் வாட்ட வேண்டுமா அவர்களை என்று முணுமுணுக்கிறார் முதியவர். ஜெர்மன் கொடியவர்களுக்காகப் பரிவு காட்டுவது மோனாவுக்குத் துளியும் பிடிக்கவில்லை. நம்முடைய மக்கள் களத்திலே பூப்பந்தாட்டமா ஆடிக் கொண்டிருக்கிறார்கள்! விருந்தும் இசையும் நடன விழாவுமா நடக்கிறது அவர்களுக்கு. என்னென்ன இன்னலோ, ஆபத்தோ நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ! அதைப்பற்றி நினைத்துக்கொண்டால் நெஞ்சிலே நெருப்பு விழுவது போலிருக்கிறது. இவர் என்னடா என்றால், இந்தக் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இடம் மோசம், போடப்படும் சாப்பாடு மட்டம் என்று உருகுகிறார். அந்தப் பாவிகளுக்காக! அந்தப் பாதகர்களுக்காக! - என்று மோனா கூறுகிறாள். முதியவர், கல்மனம் மகளே! உனக்குக் கல்மனம்! - என்று மெல்லக் கூறுகிறார்.

மேலும் மேலும் ஜெர்மானியர் கொண்டு வரப்படுகின்றனர். இரும்பு முள்வேலி போட்ட சிறைக்குள்ளே தள்ளப் படுகிறார்கள்.

மோனாவின் மனம் இளகவில்லை! படட்டும், படட்டும்! அனுபவிக்கட்டும், அனுபவிக்கட்டும்!! என்றே கூறுகிறாள். என்ன செய்தார்கள் அவர்கள்? என்ன செய்யவேண்டும்? அவர்கள் ஜெர்மானியர்கள்; அது போதாதா அவர்களிடம் வெறுப்புக் கொள்ள!

அத்தனை வெறுப்புக் கொண்டிருக்கும் மோனா, அந்த ஜெர்மானியர்களை நாளைக்கு இரண்டு வேளையாவது பார்த்துத் தொலைக்க வேண்டி வருகிறது. பால் வாங்கிக் கொண்டுபோக, ஜெர்மன் கைதிகளில் சிலர் வருகிறார்கள். பிரிட்டிஷ் போர் வீரர்கள் உடன் வருகின்றனர், கைதிகள் தப்பி ஓடிடாதபடி பார்த்துக்கொள்ள. ஜெர்மானியரைப் பார்க்கும் போதே எள்ளும் - கொள்ளும்! வெடிக்கிறது மோனாவின் முகத்தில். சுட்டுவிடுவதுபோன்ற பார்வை! காலில் ஒட்டிக் கொள்ளும் மலத்தைக் கழுவினயா பிறகும் ஒருவிதமான அருவருப்பு இருந்தபடி இருக்குமல்லவா, அதுபோல, அவர்களைக் கண்டாலே மோனாவுக்கு ஓர் அருவருப்பு.

அந்தக் கைதிகள் அவளிடம் ஏதாவது பேச முயன்றார்கள், மோனா வாய்திறக்க மறுக்கிறாள். இதுகளுடன் பேசுவேனா!! என்று நினைக்கிறாள்.

மகளே! இவ்வளவு குரூரமாக இருக்கிறாயே! நமது வேதம் என்ன சொல்லுகிறது. பகைவனுக்கும் அருள் பாலிக்கும்படி அல்லவா கூறுகிறது. பரமண்டலத்துள்ள பிதாவை நோக்கி நாம் பூஜிக்கும் பாடல் நினைவிற்கு வரவில்லையா என்று கேட்கிறார். அவர்களுக்கு அந்த நினைவெல்லாம் இல்லை; ஒரே ஓர் எண்ணம்தான் அவள் உள்ளத்தில் இடம் பிடித்துக்கொண்டிருக் கிறது, வெறுப்பு! ஜெர்மானியர்கள் என்ற உடன் ஒரு கொதிப்பு! அவர்கள் அழிந்துவிடவேண்டும் என்ற ஆத்திரம் உணர்ச்சி. பகைவனுக்காகக்கூடப் பகவானிடம் பிரார்த்திக்கலாம், ஆனால் அந்தப் பகைவன், மனிதனாக இருக்க வேண்டுமே! ஜெர்மானியரைத்தான் மோனா, மனிதர் என்றே ஏற்றுக்கொள்ள மறுக்கிறாளே; மனித வடிவிலே உலவும் மிருகங்கள்; பிரிட்டிஷ் இரத்தத்ததைக் குடிக்கக் கிளம்பிடும் கொடிய விலங்குகள் என்றல்லவா திடமாக நம்புகிறாள். அவர்களிடம் பச்சாதாபமா...! முடியுமா!!