அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

இரும்பு முள்வேலி
2

பால் எடுத்துக்கொண்டுபோக பண்ணை வீட்டுக்கு வந்திடும் ஜெர்மானியரில் ஒருவன், உடல் மெலிந்து கிடந்தான். எப்போதும் இருமிக் கொண்டிருப்பான்; வெளுத்துப்போன முகம். சில வேளைகளில், அவனிடம் சிறுதளவு பச்சாதாப உணர்ச்சி தோன்றும், மோனாவின் உள்ளத்தில், ஆனால் அந்த உணர்ச்சியை ஒரு நொடியில் விரட்டி அடிக்கிறாள். ஐயோ பாவம் என்று எண்ணுவதா! பச்சாதாபம் காட்டுவதா! இவனுக்கா! இளைத்திருக்கிறான், இருமிக் கொண்டிருக்கிறான்; ஆனால் இவன் யார்? இவனும் ஜெர்மானியன்தானே! மனித குலத்தை நாசமாக்கத் திட்டமிட்டுப் போரினை மூட்டிவிட்ட ஜெர்மன் இனத்தான் தானே!! இவனிடமா பச்சாதாபம் காட்டுவது கூடாது! முடியாது!

மோனாவின் உள்ளத்திலுள்ள வெறுப்புணர்ச்சி வெற்றி பெறுகிறது.

ஜெர்மானியர் செய்திடும் அட்டூழியங்களைப் பற்றி இதழ்கள் செய்திகளைத் தந்தபடி உள்ளன. அவற்றினைப் படிக்க, படிக்க வெறுப்புணர்ச்சி மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது, எரிகிற நெருப்பிலே கொட்டப்படும் எண்ணெய் ஆகிறது அந்தச் செய்திகள்.

முதியவர் வழக்கம்போலப் பிரார்த்தனையின்போது, சமாதானத்தை வழங்கும்படி ‘பிதா’வை வேண்டிக்கொள்கிறார். சமாதானம் வழங்கும்படி பிதாவை வேண்டிக்கொள்வதுகூட மோனாவுக்குப் பிடிக்கவில்லை. பிதாவே! ஜெர்மானியரைப் பூண்டோடு அழித்தொழித்திடு, மனித குலத்தை ரட்சித்திடு! - என்பதுபோலப் பிரார்த்தனை இருந்திடின் மோனாவுக்குப் பிடித்தமாக இருக்கும். முதியவர் தமது பிரார்த்தனையில் ஜெர்மானியர் அழிக்கப்பட்டாகவேண்டும் என்பதனை வலியுறுத்தாமல் சமாதானம் வேண்டும் என்று மட்டும் கூறு கிறாரே, நியாயமா... நாட்டுப்பற்று உள்ளவர்கள் இப்போது சமாதானம் காணவா விரும்புவார்கள். போர்! போர்! பகைவர் அழிந்தொழியும் வரையில் போர்! இதனை அல்லவா விரும்புவர்! பகைவனை அழித்தொழிக்கும் வல்லமையை ஆண்டவனே! எமக்கு அளித்திடும் என்பதல்லவா நாட்டுப்பற்று மிக்கவன் செய்திடத்தக்க பிரார்த்தனை. மோனா இதுகுறித்து முதியவரிடம் கேட்டே விடுகிறாள்.

“அப்பா உண்மையிலேயே சமாதானம் வேண்டும் என விரும்புகிறீரா?”

“ஆமாம் மகளே? சமாதானம் நாடக்கூடாதா...”

“நான் சமாதானம் மலர்வதை விரும்பவில்லை. போர் வேண்டும்! மேலும் மேலும் போர் வேண்டும்! அந்தக் கொடிய மிருகங்கள் உலகிலிருந்தே விரட்டி அடிக்கப்படும் வரையில் போர்வேண்டும்”

முதியவர் தன் மகளின் நிலையை உணருகிறார்; ஆனால் அவள் போக்கை மாற்றமுடியாது என்று கண்டு கொள்கிறார் போலும், திருத்த முயலவில்லை; வாதிடக்கூட இல்லை.

நமது மகள் மட்டுமா, நாட்டிலே அனைவருமே இப்போது இவ்விதமான போக்குடன் உள்ளனர்; இது திருத்தப்படக் கூடியதாகத் தெரியவில்லை; ஓங்கி வளர்ந்து வளர்ந்து பேருருக் கொண்டு, பெரியதோர் அழிவை மூட்டிவிட்டு, பிறகே இந்த வெறி உணர்ச்சி மடியும், இடையிலே இந்த உணர்ச்சியின் வேகத்தைக் குறைத்திடுவதுகூட முடியாத காரியம் என்று முதியவர் எண்ணிக் கொண்டார்போலும்.

ராபி - மோனாவின் அண்ணன் கடிதம் எழுதுகிறான். களத்தின் நிலைபற்றி, உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் பெரியதோர் தாக்குதலை நடத்தப்போகிறோம்; முன்னணிப் படையினில் நான் இருக்கப் போகிறேன்; இந்தத் தாக்குதல் பகவைர்களை அழித்திடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக் கிறான். கேட்கக் கேட்க இனிப்பாக இருக்கிறது மோனாவுக்கு.

“அப்பா! மோனாவிடம் சொல்லு, அவள் எனக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை, அதிகாரிகள் சிலரிடம் படித்துக் காட்டினேன், அவர்கள் மிகவும் மெச்சுகிறார்கள்; உன் தங்கை போன்ற உணர்ச்சியும் எழுச்சியும்கொண்ட வீரர் ஆயிரவர் இருந்தால் போதும் இந்தப் போர் ஒரு திங்களில் வெற்றி தந்திடும் என்று கூறிப் பாராட்டுகின்றனர்.” ராபியின் கடிதத்திலிருந்து இந்தப் பகுதியைப் படித்திடக் கேட்டபோது மோனாவுக்குப் புல்லரித்தது; பூரித்துப் போனாள்.

பிரிட்டிஷ் படைகள் பலமாகத் தாக்குகின்றன.

ஜெர்மன் படைகள் மிரண்டோடுகின்றன.

ஜெர்மன் படைக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்படுகிறது.

இதழ்கள் தந்திடும் இந்தச் செய்தி தலைப்புகள் மோனாவுக்குச் செந்தேனாக இனிக்கிறது.

ராபி ஏன் இந்த வெற்றிச் செய்திகளைப் பற்றித் தெரிவிக்க வில்லை; கடிதம் காணோமே என்று எண்ணி கவலை கொள்கிறாள்.

ஒரு நாள் அஞ்சல் வருகிறது; அதை எடுத்துக்கொண்டு வருபவன் முகத்தில் ஈயாடவில்லை; குனிந்த தலையுடன் வருகிறான்; கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான்; நீளமான உறை; சர்க்கார் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. முதியவர் பிரித்துப் படிக்கிறார், சர்க்கார் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளும் சேதி என்னவென்றால், படை வீரன் ராவி, களத்தில்... முழுவதும் படிப்பானேன்; விஷயம் புரிந்து விட்டது, ராபி இறந்துவிட்டான். வீரமரணம் நாட்டைக் காத்திடும் முயற்சியில் உயிரை இழந்தான் - என்றெல்லாம் பாராட்டு இணைக்கப்பட்டிருக்கிறது கடிதத்தில்; ஆனால் தந்தையின் தத்தளிப்பை, வீரமரணம் என்று பாராட்டுதல் குறைத்திட முடியுமா...

மகளே! படி அம்மா! பாரம்மா!

மோனா படிக்கிறாள்! அண்ணன் இறந்துவிட்டான்! ராபி மறைந்துவிட்டான்! ராபியைக் கொன்றுவிட்டார்கள் - கொடியவர்கள் - ஜெர்மானியர்! அந்தக் கொடிய ஜெர்மானிய இனத்தவரிலே ஒரு பிரிவினர், கைதிகள் என்ற பெயருடன் இங்கே உள்ளனர்! என் அண்ணனைக் கொன்றுவிட்ட கொடியவர்கள், ஜெர்மானியர்! அவர்களிலே ஒரு பகுதியினர் இங்கே! அவர்கள் பருகிடப் பால் நமது பண்ணையிலிருந்து. என் அண்ணனின் குருதியைக் குடித்துவிட்டார்கள் அந்தக் கொடியவர்கள்; அந்த இனத்தார் இங்குப் பருகிட நாங்கள் பால் அளிக்கிறோம்!

இதுபோல என்னென்ன எண்ணிக் கொண்டிருந்திருப்பாள், பாவம், ஏற்கெனவே மூண்டு கிடந்த கொதிப்பு மேலும் எந்த அளவு கிளம்பிவிட்டிருக்கும்!

பிதாவிடம் பிரார்த்திக்கச் சொன்னாரே, அப்பா! இப்பொழுது என்ன சொல்லுவார்!

அப்பா! பால் கொடுத்து வருகிறோமே பாதகர்களுக்கு; அந்த ஜெர்மன் கொடியவர்கள் உன் மகனுடைய இரத்தத்தை, என் அண்ணன் உயிரைக் குடித்து விட்டார்களப்பா! அண்ணனைக் கொன்றுவிட்டார்களப்பா! அந்தக் கொடிய இனத்தவர், இங்கேயும் உள்ளனர்; நமது பண்ணையில் பால் வாங்கிப் பருகிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பச்சாதாபம் காட்டச் சொன்னீர்களே! அவர்கள் ஜெர்மானியராக இருந்தால் என்ன, அவர்களும் மனிதர்கள் என்று வாதாடினீர்களே! அந்த மிருகங்கள் என் மகனை - என் அண்ணனை நாட்டுப்பற்று மிக்கவனை, நியாயத்தை நிலை நாட்ட போரிட்ட மாவீரனைக் கொன்றுவிட்டார்களே அப்பா! இப்போது என்ன சொல்கிறீர்? பிரார்த்தனை செய்ய வேண்டுமா, பிதாவிடம் சமாதானம வழங்கும்படி! சமாதானமா அப்பா வேண்டும்!! அண்ணன் உயிரைக் குடித்த கொடியவர்கள் கொட்டமடித்துக் கொண்டிருப்பது, நாம் பிதாவிடம் சமாதானம் வேண்டி பூஜித்துக் கிடப்பதா? சொல்லுங்கள் அப்பா! சொல்லுங்கள்!! என்ன செய்யலாம் சொல்லுங்கள் - என்றெல்லாம் கேட்டிட அந்தக் கன்னி துடித்திருப்பாள்.

முதியவரின் நிலை? மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியை அறிந்ததும், அருவடைய மனத்திலே சிறிதளவு தலைதூக்கியபடி இருந்ததே மனிதத்தன்மைக்கே உரிய பண்பு, அன்பு காட்டுதல், பகைவருக்கும் இரங்குதல், அது மடிந்து விட்டது; அடியோடு மடிந்தே போய்விட்டது. இதயத்திலே ஒரு பயங்கரமான சம்மட்டி அடி விழுகிறது; முதியவர் கீழே சாய்கிறார், நினைவு இழந்து. மருத்துவர் வருகிறார், இதயத்திலே அடி! என்றாலும் இப்போதைக்கு ஆபத்து இல்லை. படுத்துறங் கட்டும்; முழு ஓய்வு வேண்டும் என்று கூறிச் செல்கிறார்.

முதியவர் படுத்துக்கிடக்கிறார்; மோனாவின் உள்ளக் கொதிப்பு மேலும் ஓங்கி வளருகிறது.

ஜெர்மானியர்களை ஆண்டவன் அழித்தொழிக்க வேண்டும்.

எல்லா ஜெர்மானியரையும் ஜெர்மன் அதிபர்கள் - ஜெர்மன் கெய்சர் என்போரை மட்டுமல்ல, எல்லா ஜெர்மானி யரையும் அழித்திட வேண்டும் - ஆண் - பெண் குழந்தை குட்டி அவ்வளவு பேரும் - ஒருவர் பாக்கியில்லாமல் ஒழிந்துபோக வேண்டும். ஆண்டவன் ஜெர்மன் மக்கள் அனைவரையும் அழித்தாகவேண்டும்; இல்லையென்றால் அவர் உண்மையான ஆண்டவன் அல்ல!!

மோனாவின் பிரார்த்தனை இதுபோல! வேதனை நிரம்பிய உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பும் பிரார்த்தனை.

முதியவர் நடத்தச் சொன்ன பிரார்த்தனை, பகைவனுக்கும் அருள் பாலிக்கும்படி, மோனா அதனை மறுத்தாள். கல்மனம் அம்மா உனக்கு என்று முதியவர் கூறினார். இப்போது?

ஆண்டவனே எழுந்தருளுவீர்! உமது பகைவர்கள் சிதறி ஓடிடட்டும். கடவுள் நெறி மறந்தோர் கொட்டமடித்திடவிடக் கூடாது. தேவதேவா! தழலென எரியும் கரித்துண்டுகள் அவர்கள் மீது பொழியட்டும். நெருப்பிலே தள்ளிடுவீர் அந்த நாசகாலர் களை! நரகப் படுகுழியில் தள்ளிடுவீர்! மீண்டும் அவர்கள் தலை தூக்கிடாதபடி படுகுழியில் அந்தப் பாவிகளைத் தள்ளிடுவீர்!

இது முதியவரின் பிரார்த்தனை. வேதப் புத்தகத்தில், பாவிகளை ஆண்டவன் அழித்தொழித்த படலத்தில் உள்ள பிரார்த்தனையைப் படிக்கிறார். பரிவு, பச்சாதாபம், பகைவனுக்கு இரங்கல் என்பவை இப்போது அவருடைய உள்ளத்தில் இடம்பெற மறுத்துவிடுகிறது. மகனைக் கொன்ற மாபாவிகள் என்று எண்ணும்போதே, ஜெர்மானியர் பூண்டோடு அழிந்து விடவேண்டும் என்ற கொதிப்பு எழுகிறது. மோனா சொன்னது தான் சரி; அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்கிறார் முதியவர். ஆண்டவனை அழைக்கிறார் சமாதானம் வழங்கச் சொல்லி அல்ல; ஜெர்மானியர்களை அடியோடு அழித்தொழிக்கும்படி.

ஜெர்மன் கைதிகள் அடைப்பட்டுக் கிடந்ததால், மிருக உணர்ச்சி மேலிட்ட நிலையினராகின்றனர்.
அடிக்கடி சச்சரவு, குழப்பம், அடிதடி, அமளி.

கலகம் செய்த கைதிகள் சிலர் காவற்காரர்களால் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.

நிலைமையை அறிந்துபோக வந்திருந்த மேலதிகாரி, இவர்களை நாய்களை அடைத்து வைப்பதுபோல அடைத்து வைத்தால், நாய்குணம் ஏற்பட்டுவிடத்தானே செய்யும். ஒரு வேலையுமின்றி அடைபட்டுக் கிடப்பதால் வெறிகொண்டு விடுகின்றனர். ஏதாவது வேலை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார்.

இரும்பு முள்வேலி போடப்பட்ட இடங்களிலேயே தொழில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன, கைதிகள் வேலை செய்ய.

மிருகங்களை மனிதர்களாக்க முயல்கிறார்கள் என்று கேலி பேசினாள் மோனா, இந்தப் புதிய திட்டத்தைப் பார்த்து.

வழக்கப்படி பால் வாங்கிக்கொண்டுபோக வரும் இருமல் காரனுக்குப் பதிலாக வேறோர் ஜெர்மானியன் வந்தான், ஓர் நாள்.

மோனா அதனைக் கவனிக்கக்கூட இல்லை; பால் பாத்திரத்தை அவன் பக்கம் வைத்தாள். இது நான் எடுத்துப்போக வேண்டிய பாத்திரமா? என்று புதியவன் கேட்டபோதுதான் திரும்பிப் பார்த்தாள். அவன் மருத்துவமனைக்குச் சென்று விட்டான்; அவனுக்குப் பதிலாக நான் வந்திருக்கிறேன் என்றான் புதியவன்; இளைஞன்; சாந்தமான முகத்தினன்.

குரலிலே கடுமை இல்லை, நடையிலே ஆணவம் காணோம், முகத்திலே வெறித்தனம் காணோம்; யார் இவன்? ஜெர்மானியனாக இருக்க முடியுமா என்ற ஐயம் மோனாவுக்கு.

உன் பெயர்?

ஆஸ்க்கார்

ஆஸ்க்கார்...?

ஆஸ்க்கார் ஹெயின்

மூன்றாம் நம்பர் சிறைக் கூடத்திலா இருக்கிறாய்?

ஆமாம்!

மோனா, எதுவும் பேசாமல் அவனை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு, “அதுதான் நீ எடுத்துச் செல்லவேண்டிய பாத்திரம்” என்று கூறுகிறாள்.

‘நன்றி!’ என்று கூறுகிறான் ஜெர்மானியன். பதிலுக்கு நன்றி கூற நினைத்தாள் மோனா, முடியவில்லை. அவன் போகிறான்; அவள் பார்க்கிறாள்; அவன் போன பக்கமே பார்த்துக் கொண்டிருக்கிறாள்; வாசற்படியில் நின்றுகொண்டு பார்க்கிறாள்; பிறகு பலகணி வழியாகவும் பார்க்கிறாள்;

அன்று முழுவதும் மோனா சிடுசிடுவென்று இருக்கிறாள்; ஏதோ குமுறல், மனத்தில்.

வழக்கப்படி பிரார்த்தனைக்கு அழைக்கிறார் முதியவர்.

இன்றிரவு வேண்டாமப்பா, தலைவலி என்று கூறி விடுகிறாள் மோனா, தலைவலியா!!

அன்றிலிருந்து ஒரு மனப்போராட்டம்; மோனா தன் உள்ளத்தில் இடம்பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டும் முயற்சியில் மும்முரமாகிறாள்; முடியவில்லை. முதியவருடன் அதிகநேரம் அளவளாவுகிறாள்; அவர் புதிதாகப் பெற்றுள்ள வெறுப்புணர்ச்சியைத் தனக்கு ஊட்டுவார், உள்ளத்தில் இடம்பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டிடுவார் என்ற நம்பிக்கையுடன்.

ஜெர்மானியர்களை அழித்தொழிக்கச் சொல்லி முதியவர் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார். மோனா? பிரார்த்தனையில் கலந்துகொள்கிறாள்; ஆனால் வேறு ஏதோ ஓர் உணர்ச்சி அவளை வேறு எங்கோ அழைக்கிறது; இழுத்துச் செல்லப் பார்க்கிறது. அந்த ஆஸ்க்கார் கூடவா, ஜெர்மானியன். அத்தனை பணிவாக இருக்கிறான்; கனிவாகப் பேசுகிறான்; முகத்தைப் பார்த்தால் கொடியவனாகத் தெரியவில்லை; ஜெர்மானியனா இவன்; ஆஸ்க்கார் போன்றவர்கள்கூட இருக்கிறார்களா ஜெர்மன் இனத்தில் - என்றெல்லாம் எண்ணுகிறாள் மோனா.

நரகப் படுகுழியில், பகைவர்களைத் தள்ளு - என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார் முதியவர்; மோனாவுக்குப் பிடித்தமான பிரார்த்தனை அது; முன்பு! இப்போது? அந்தப் பிரார்த்தனை அவளுக்கு என்னமோபோல இருக்கிறது. ஆண்டவனையா இவ்வளவு கொடுமைகளைச் செய்திடச் சொல்லிக் கேட்பது. ஆண்டவன் என்றால் தயாபரன் அல்லவா! அவரிடம் இப்படியா ஒரு பிரார்த்தனை செய்வது என்று கூடி எண்ணிச் சிறிதளவு அருவருப்பு அடைகிறாள். கன்னியின் இதயத்திலே புதிய கருத்து கருவளவாகிறது!

மோனா, சபலத்துக்கு இடமளிக்கக்கூடாது என்று உறுதியுடன் போரிடுகிறாள். ஜெர்மன் கைதிகளைக் கண்டால் கடுகடுப்பைக் காட்டுவது; அவர்களிடம் ஒரு பேச்சும் பேசாதிருப்பது; அவர்களிடம் தனக்கு உள்ள வெறுப்பை வெளிப்படையாகத் தெரியச் செய்வது என்ற முறையில் நடந்து கொள்கிறாள். ஆனால் அந்த ஆஸ்க்கார்!

லட்விக் இறந்து விட்டான்?

யாரவன் லட்விக்?

முன்பெல்லாம் வருவானே இருமிக்கொண்டு... அவன் தான் லட்விக். வயது 22! பரிதாபம். செத்துவிட்டான். கடிதம் எழுதவேண்டும் அவன் தாயாருக்கு.

மோனாவுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்கிறது. கண்களில் நீர் துளிர்க்கிறது; ஆனால் சமாளித்துக்கொண்டு கூறுகிறாள்.

மகனை இழந்த தாய் அவள் ஒருத்திதானா! போர் மூட்டிவிடுபவர்கள் அதனால் விளையும் பொல்லாங்குகளை அனுபவிக்கத்தானே வேண்டும்.

ஆஸ்க்கார் பதிலேதும் பேசவில்லை. திரும்பிச் செல்கிறான். சுடச்சுடப் பதில் கொடுத்துவிட்டோம் என்ற திருப்தியுடன் அல்லவா மோனா இருக்கவேண்டும்! இல்லையே! போகிறவனைப் பார்த்துக்கொண்டே நிற்கிறாள்; தவறாகப் பேசிவிட்டோம் என்றெண்ணி வருந்துபவள் போல! சிறிது தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான்! மோனாவின் உள்ளம்? தவறு செய்துவிட்டாய், தவறு செய்துவிட்டாய் என்று கூறுவது போலிருந்தது.

மற்றோர் நாள் அந்த ஆஸ்க்கார் ஒரு சிறு பெட்டியைக் கொண்டு வருகிறான். இது இறந்துபட்ட லட்விக்கின் தாயார் அனுப்பியது. அவன் கல்லறை மீது தூவும்படி கண்ணாடியாலான இந்த மலரினை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நான் கல்லறை இருக்கும் இடம் செல்ல முடியாது. அனதால், இதனைத் தாங்கள்...

ஆஸ்க்கார் கொஞ்சும் குரலில் பேசுகிறான்; மோனா கண்டிப்பாகச் சொல்லி விடுகிறாள், என்னால் முடியாது, இதனை எடுத்துக்கொண்டு போய்விடு என்று. அவன் போய் விடுகிறான்; ஆனால் பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு!!

கிடக்கட்டும் இங்கேயே எனக்கென்ன என்றுதான் மோனா எண்ணிக்கொள்கிறாள். அன்று பகலெல்லாம் அவள் எதிரே கிடக்கிறது அந்தப் பெட்டி! எடுத்து எறியவில்லை! முடியவில்லை! ஆஸ்க்காரின் முகம், அதிலே தெரிந்ததுபோலும்.

மாலையில் யாருமறியாமல் சென்சு லட்விக்கின் கல்லறை மீது அந்தக் கண்ணாடி மலரைத் தூவி விட்டு வந்துவிடுகிறாள்.

மோனா! ஜெர்மன் இனம் முழுவதும் அழிக்கப்பட வேண்டும். குழந்தை குட்டிகள் உட்பட என்று கொதித்துக் கூறிடும் கன்னி, ஒரு ஜெர்மானியன் கல்லறைமீது மலர் தூவுகிறாள்! எப்படி முடிந்தது! பகைவனிடம் பச்சாதாபம் காட்டுவதா! என்று கேட்ட மோனா செய்கிற காரியமா இது! எப்படி ஏற்பட்டது அந்த மாறுதல்? யார் புகுத்தியது அந்தப் புதிய உணர்ச்சியை? ஆஸ்க்கார்! அவன் பார்வை, அவளுடைய உள்ளத்தில் ஒரு புதிய உணர்வை எழுப்பிவிட்டது. எவ்வளவோ முயன்று பார்த்தும் அவளால் அந்தப் புதிய உணர்வை உதறித் தள்ளிவிட முடியவில்லை. இடம் பிடித்துக்கொண்டது!

ராபியின் வீரதீரத்தை மெச்சிப் பிரிட்டிஷ் துரைத்தனம் அனுப்பி வைத்த வீரப் பதக்கத்தை மோனா அணிந்து கொள்கிறாள் எழுச்சியுடன்.

வீரப்பதக்கம்! அண்ணன் பெற்றது? கொடியவர்களாம் ஜெர்மானியரைக் கொன்று குவித்ததற்காக! அந்த ஜெர்மானியரில் ஒருவன் இந்த ஆஸ்க்கார். அவன் இந்த வீரப்பதக்கம் பற்றி விவரம் கேட்கிறான். மோனா கூறுகிறாள். நமது இனத்தவர்களைச் சாகடித்ததை வீரம் என்று மெச்சித் தரப்பட்டது இந்தப் பதக்கம், என்பதனை அறிந்ததும் ஆஸ்காரின் முகம் கடுகடுப்பை அல்லவா காட்டவேண்டும்! இல்லை! அவன், ராபியைப் புகழ்ந்து பேசுகிறான்; பாராட்டுதலுக்குரிய வீரன் என்று!!

என்ன விந்தை இது! கப்பிக்கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி எங்கே போய்விட்டது.

தன் அண்ணனைக் கொன்ற பாவிகளாம் ஜெர்மானிய இனத்தவரில் ஒருவனாம் ஆஸ்க்காரிடம், மோனா வெறுப்பைக் காட்ட முடியவில்லை; எவ்வளவோ முயன்றும்.

தன் இனத்தவரைச் சுட்டுத் தள்ளியதற்காக வீரப்பதக்கம் பெற்ற ராபியைப் பாராட்டிப் பேசுகிறான் ஜெர்மானியன் ஆஸ்க்கார்!

கப்பிக் கொண்டிருக்கும் காரிருளைக் கிழித்தெறிந்து கொண்டு விண்மீன் கண் சிமிட்டுகிறதே!!

மோனாவிடம் ஏதோ ஒரு மாறுதல் தோன்றிவிட்டிருக்கிறது என்பது முதியவருக்குத் தெரிகிறது விவரம் புரியவில்லை.

பிரிட்டிஷ் கப்பலை ஒரு ஜெர்மன் நீர்முழ்கிக் கப்பல் தாக்கி அழித்ததுபற்றியும், அதனால் பலர் மாண்டது பற்றியும் கூறக் கேட்ட முதியவர், கொதித்துச் சபிக்கிறார், ஜெர்மானியர் நாசமாகப் போகட்டும்! ஆழ்நரகில் வீழட்டும்! என்று, ஏனப்பா இப்படி பகை உணர்ச்சி. நமது வேதம் இதனை அனுமதிக்காது. பகைவனிடமும் பச்சாதாபம் காட்டச் சொல்லுகிறது என்று முன்பு சொல்வீரே, நினைவில்லையா என்று கேட்டு விடுகிறாள் மோனா! முதியவர் திகைக்கிறார். மகளே! என்ன இது இவ்விதம் பேசுகிறாய்! உன் போக்கே மாறிவிட்டிருக்கிறதே! எப்படி? எதனால்? என்று கேட்கிறார்.

அவளுக்கே புரியவில்லை அந்தக் காரணம்! முதியவர் கேட்கிறார்; பதில் என்ன தருவாள்.

மோனா, முதியவர் மனத்தில் குடியேறி விட்டாளோ?

முதியவர், மோனா மனதிலே இடம்பெற்று விட்டாரோ!

முதியவரின் முன்னாள் மனப்பான்மை இந்நாள் மோனா வுக்கும், முன்னாளில் மோனா கொண்டிருந்த மனப்பான்மை இப்போது முதியவருக்கும் அமைந்துவிட்டதோ! விந்தை! ஆனால் காரணம்?

ஜெர்மானியரின் அட்டூழியம் பற்றிய செய்திகளைப் படிக்கிறார் முதியவர்; அவர் உள்ளத்திலே மூண்டு கிடந்த வெறுப்புணர்ச்சி மேலும் தடித்துக்கொண்டிருக்கிறது.